Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
நவம்பர் 2005
அயல் மகரந்தச் சேர்க்கை

தன்மார்பில் பால் குடிக்கும் தாயுண்டா?
பேரா. அப்துல் காதர்

பழுத்திருக்கும் மரத்தில் பழங்களைத் தேடாமல், அதில் புழுத்திருக்கும் மரப்பட்டை இடுக்கில் புழுக்களைத் தேடும் மரங்கொத்தி மனிதர்கள் உண்டு. ஒட்டகங்களுக்குப் பூக்கள் பார்வையில் படுவதில்லை. முள்ளைத்தான் பார்க்கின்றன. இழிவுகளிலும், கழிவுகளிலும் வாழ்வை அமைத்துச் சுயபலியிட்டுக் கொள்வோர் பலர். மீன், கருவாடு விற்கும் கடையில் பணி செய்யும் ஏழைப்பெண் ஒருத்தி, வீடு திரும்பும் வழியில் கடும் மழை பிடித்துக் கொள்ள, இரவு நேரம் ஒரு பூக்கடையில் ஒதுங்குகிறாள். இரவு முழுக்க இருவிழியும் மூடாமல், தூங்காமல் அவதிப்படுகிறாள். பூக்கடையின் மணம் அவளுக்கு ஒவ்வவில்லை. பாரசீகக் கவிஞர் சாஅதியின் குலிஸ்தானில் (பூந்தோட்டம்) இப்படி ஒரு காட்சி. பழக்கம் வழக்கம் ஆகி மோசச் சூழலே புழக்கமாகி விடுகிறது.

எதனிலும் குறை, யாரிடத்தும் குற்றம் காணும், மரங்கொத்தி மனிதர்களைப் பற்றி ஜார்ஜ் பெர்னார்ட்ஷா அற்புதமாகக் குறிப்பிடுகின்றார். அதி தீவிரத் தூய்மைவாதிகள் தாங்களே என்னும் சில பாதிரியார்களிடம் அத்தகைய குணம் இருப்பதைச் சாடுகிறார். வெளி நாடுகளில் நடைபெறும் காளைச் சண்டை அத்தகைய பாதிரியார்கட்குப் பிடிப்பதில்லையாம். அந்தச் சண்டை பெரிய மைதானத்தில் நிகழும். சுற்றிலும் அடுக்கிருப்புக்களாம் காலரிகளில் அமர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் இரசித்து மகிழ்வார்கள். மைதானத்தில் எமதருமனின் இடைவாள் போலக் கூர்சீவப் பெற்ற கொம்புகளுடன், திமிலெடுத்துத் திமிறி காளை வரும். ஒரு கையில் கூர் ஈட்டியும், மறுகையில் சிவப்புத் துணியும் பிடித்தொரு மனிதன் எதிர் கொள்வான். சிவப்பு கண்டு மிரண்டு சீறும் முதலாளிகளைப் போல காளையும் கொம்பினால் குத்த அவன் மீது பாயும். சரேலென விலகி, ஈட்டியால் காளையை அவன் குத்துவான். காயம்பட்ட காளை மீண்டும், மீண்டும் சீறித் தாக்க முயலும். மனிதன் தப்பும் தருணங்களில் எல்லாம் காளை காயம்படத் தப்புவதில்லை.

கையில் பிடித்துள்ள சிவப்புத் துணி போலவே, காளையின் உடம்பெல்லாம் மாற, மாற, மக்கள் களிப்பின் உச்சத்தை எட்டுவார்கள். இறுதியில் காயம்பட்ட காளை மடிந்து விழ, ஆட்டம் முடிந்து விடும். ஒவ்வொரு காயத்திலிருந்தும் இரத்தம் வெளியேறுகிறது. நிராயுதபாணியாக இருக்கும் தன்னை ஈட்டியால் தாக்குவதோடு, பார்வைக் கணைகளால் துளைத்தெடுக்கும் மக்கள் கூட்டத்தைப் பார்த்துக் காளை, காயவாயால் காரி உமிழ்கிறது. இரத்தம் தெறிக்கிறது. இந்தக் கொடிய ஆட்டம் பாதிரிகளுக்குப் பிடிப்பதில்லை. ஏன்? காரணம் சொல்கிறார் ஷா.

“The priests hate bull-baiting
not because it
gives pain to the animal but
because it gives
pleasure to the audience”

(அந்தப் பாதிரிகளுக்குக் காளைச் சண்டை பிடிக்காமல் போனதற்குக் காரணம்; ஈவிரக்கமற்ற வகையில் காளை காயப்படுகிறதே என்ற கசிவினால் அல்ல; பார்வையாளர்கட்கு அது மகிழ்ச்சியூட்டுகிறதே என்ற எரிச்சலால்)

விலங்கியல் கற்பிக்கப்படும் சோதனைக் கூடத்தில் பாடத்திற்காக வேண்டி பாடஞ் செய்யப்பட்ட மீன் வகைகளை பாமலின் திரவத்தினுள் பார்க்கும் மாமிச பட்சிணிகளுக்கு நாவில் நீர்ஊறும். மாறாக மகாத்மா, வள்ளலார் போன்றோர் பார்த்தால் கண்ணில் நீர் ஊறும். கண் இருக்குமிடம் எல்லோர்க்கும் ஒன்று என்றாலும் ‘கண்ணோட்டம்’ வேறுவேறுதான்.

உள்ளூர் என்ற பெயர் மலையாள மக்களின் உதடுகளில் தொட்டில் கட்டிக் கொண்ட ஒன்று. மகத்துவமிக்க கவிதைகளால் அல்ல மருத்துவமிக்க கவிதைகளால் ரணப்படும் மனித இனத்திற்குக் குணப்படும் மார்க்கம் கண்டவர். மலையாள இலக்கிய வரலாற்றை மகா காவியமாகப் பாடியவர் உள்ளூர் பரமேசுவர அய்யர். அவரின் “பிரேம சங்கீதம்” என்னும் பிரபலமான கவிதையின் வரிகள் இத்தகைய கண்ணோட்டத்தின் வெள்ளோட்டமாக வெளிப்பட்டுள்ளன.

“விளக்குக் கைவசம் உள்ளவனுக்கு
      உலகம் வெளிச்சமயம்
வெள்ளை மனது கொண்டவனுக்கு
      எல்லாம் அமுதமயம்
காண்பவன் இல்லை என்றால்
      உலகில் காணப்பொருளே இல்லை
ஆண்டவன் படைப்பில் ஒன்றுக்கொன்று
      அணையா உயிரும் இல்லை
இயற்கைப் பொருள்கள் எல்லாவற்றிலும்
      ஈர்ப்பே குணமாகும்
எல்லா உயிர்க்கும் அடிப்படையானது
      அன்பின் மணமாகும்
குனிபவன் உயர்வான், நட்டவன் தின்பான்
      கொடுப்பவன் பெற்றிடுவான்
இனிய சொர்க்கம் புனைவதும் நாமே
      நரகமும் அவ்வாறே”

நகச்சுடர் ஒளிர, அஞ்சுவிரல் திரியாக, கையே விளக்காகி விட்டவனுக்கு வாழ்வில் இருள் என்பதே இல்லை. அப்படிப்பட்டவன் விடிய விழிப்பவன் இல்லை. விழித்தே விடிய வைப்பவன். இரவல் நெருப்பின்றிச் சுயாக்கினியால் சுடர்வதால் அவனுக்குத் தினமெல்லாம் தீபாவளிதான்.

உள்ளாவி தன்னில், தனக்குத்தான் வெள்ளாவி வைத்து மனதைச் சலவை செய்து கொண்டவனுக்கு மகிழ்ச்சி வாழ்க்கைப்பட்டு விடும். மரணங் கூட அவனிடம் சரணம் அடைந்து விடும். வாழ்க்கை வாக்கியத்திற்கு முற்றுப்புள்ளி விழலாமே தவிர, அர்த்தத்திற்கு அந்தமில்லை. ‘நஞ்சை’ அமுதாக்கும் தஞ்சை விவசாயி போல, எத்தகைய நஞ்சினையும் அமுதாக மாற்றும் இரசவாதியாக அவன் மாறி விடுகிறான். பிறகென்ன அவனுக்கு எல்லாம் அமுதமயம்தான்.

வண்டுகள் இல்லா ஊரில் பூஞ்சோலைகள் பூப்படைந்து என்ன பயன்? காண்பவன் கண் அவன். அவன் இல்லையென்றால் காணப்பட வேண்டிய பொருள் எல்லாம் கைம்மையில் இருக்க வேண்டியதுதான். பொருள் பொருளற்றதாகி விடுகிறது. கண்களும், வாயும் உள்ள புல்லாங்குழல் காதுகள் முளைக்கச் செய்யும் அபூர்வமாக இசை அமைய வேண்டும். ஆனால் செவிட்டு பூமியில் சிந்து பைரவி பாடி என்ன பயன்? பார்ப்பவனும் சரியாகப் பார்க்க வேண்டும். இருண்ட பக்கத்தையும் பார்க்க வேண்டும். அதனால்தான் இருட்டை அடையாளப்படுத்தும் கரிய விழிப்பாவையையும், வெளிச்சத்தை அடையாளப்படுத்தும் வெள்ளை விழிப்படலத்தையும் கண்ணில் ஒன்றாக வைத்துக் கடவுள் படைத்திருக்கிறான். அப்படிப்பட்ட பார்வையில்லாதவர்கள் உலகத்தில் பார்க்கப்படும் பொருளே இல்லை. பார்க்கப்படுவதிலும் பொருள் இல்லை.

புவி ஈர்ப்பு இல்லா இடத்தில் மனித இயக்கம் சாத்தியமில்லை. ஈர்ப்பின்றி இவ்வுலகில் எதுவுமில்லை. காந்தத்தில் ஒத்த முனைகள் நெருங்கினால் ஈர்ப்பின்றி விலகிப் போகும். எதிர்முனைகள் ஈர்ப்பினால் நெருங்கிச் சேரும். தனக்குத் தான் ஈர்ப்பென்ற தன்னல வாழ்வு சாத்தியமில்லை. தனக்கு எதிரே இருப்பவரை நோக்கியே ஈர்ப்பு நிகழும். வாழ்வின் இயக்கம் சாத்தியப்படும். தன் மார்பில் பால் குடித்த தாய் உண்டா உலகில்? இந்த உயிர் ஈர்ப்பு விசைதான் அன்பு. கேட்டது எல்லாம் கிடைக்கும் இடம் சொர்க்கம் என்கிறார்கள். காபூல் திராட்சை வேண்டுமா கணத்தில் கிட்டும். திருப்பதி லட்டு வேண்டுமா, நொடியில் பெறலாம். கேட்டது கிடைக்கும் சொர்க்கத்தில் உனக்குப் பசியிருக்காது. கிளியோபாத்ரா கிட்டத்தில் வேண்டும் என்றால், கண்ணிமைக்கும் நேரத்தில் என் கையருகே இருப்பாள். ஆனால் உனக்கு ஆசையிருக்காது. அது சொர்க்கமா என்றால் இல்லை அது தான் நரகம். நரகத்தில் கேட்டது கிடைக்காது. உனக்குப் பசிக்கும். நரகில் நீ விரும்பும் பெண் கிடைக்க மாட்டாள். ஆனால் உனக்கு ஆசையிருக்கும். மனிதன் சொல்கிறான் பரவாயில்லை அந்த நினைப்பே போதும். தேடலை அது தூண்டும். முயற்சியை உருவாக்கும். எனவே நரகமே நன்று என்கிறான். ஆக சொர்க்கம் நரகம் வேறெங்கோ வெளியில் இல்லை. அது நம்மிடம்தான். நம் மனத்தில்தான் அன்பினால் ஆன சொர்க்கத்தில் என்ன நிகழும்?

குனிபவன் உயர்வான். பள்ளத்தில் இருக்கும் மனிதன் எதிரே இருக்கும் உயர்ந்த மலையை நிமிர்ந்து பார்க்கிறான். மலைஉச்சிக்குச் சென்றவுடனே தலைகுனிந்து கீழே பார்க்கிறான். ஆமாம் தாழ்வில் நிமிர்வும், உயர்வில் பணிவும் தேவை என்பதைத்தானே உணர்த்துகிறது. சரியான கண்ணோட்டம் உள்ளவன் சொர்க்கத்தில் குனிபவன் உயர வேண்டும். நட்டவன் தின்ன வேண்டும். கொடுப்பவன் பெற்றிட வேண்டும் ஒரு முத்தத்தைப் போல. கொடுக்கிற போதே வசூலாகிற ஒரே கடன் முத்தம் தானே. சொர்க்கமும் நரகமும் உன் கண்ணோட்டத்தில்தான் தீர்மானம் ஆகிறது. மரத்தை விறகாகப் பார்க்கும் வெட்டியான் மனப்பான்மை விலகட்டும். அன்பினால் ஆகட்டும் அவரவர் சொர்க்கம்.

உள்ளூர் மீட்டும் பிரேம சங்கீதம் நம் ஆன்மாவுக்குள் அலைகளை எழுப்பிய வண்ணம் இருக்கிறது. இசைப்பவன், ரசிப்பவன் என்ற இரட்டை நிலை மாற்றி அத்துவிதமாக்கி விடுகிறது. ஆமாம் கலைமகளின் வீணை நரம்பெல்லாம் கவிதை வரிகள் தானே.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com