Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜனவரி 2006
விளையாட்டென்றால் விளையாட்டா?

கிரிக்கெட் நீரோக்கள்
- சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்

‘வித்தகக் கவிஞர்’ விஜய்யின் ‘உடைந்த நிலாக்கள்’ கவிதைத் தொகுதியின் ஒலிப்பதிவில் நீரோ மன்னன் பாத்திரம் எனக்கு. எனக்கு அப்போது ஒன்று தெரிய வந்தது. ரோம் நகர் தானாகப் பற்றி எரியவில்லை. பற்ற வைத்ததே நீரோதான் என்பது! தீயைப் பாட விரும்பிய அவன் அதை நேரிடையாக உணர வேண்டும் என்கிற வக்கிர மனம் படைத்திருந்தான். விளைவு ரோம் பற்றியெரிந்தது. அவன் பிடில் வாசித்தான்.

சென்னை கிரிக்கெட்டை மழை பாதித்தது ஏமாற்றவில்லை. மழை பாதிக்கும் என்று தெரிந்திருந்தும் ஏமாற்றினார்கள் அதுதான் உண்மை. மழை வருமா வராதா என்பது தெரியாத நிலையில் முன்கூட்டியே நுழைவுச் சீட்டை விற்றதை வேண்டுமானால் அறியாமை என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் மழை வரும் என்று தெரிந்திருந்தும் விற்றது கொடுமையிலும் கொடுமை. அது மட்டுமல்ல, காப்பீடு என்கிற வகையிலும் சுளையாக ஒரு தொகையைப் பெற்றிருக்கிறார்கள். காப்பீடை எப்படி ஏற்றார்கள் பிறகு எப்படி இழப்பீடு தர சம்மதித்தார்கள் என்பது ஒரு விளங்காத-விளக்கமளிக்கப்படாத புதிர்.

‘வாலிபனுக்கு வாழ்க்கைப்பட்டு வாழ்விழந்த பெண்ணை கிழவனுக்குக் கட்டிக்கொடுத்த கதையாக’ ஒருநாள் போட்டி ஆட்டமே ஒன்றுமில்லாமல் போய்விட்ட நிலையில் அடுத்த சில நாட்களிலேயே டெஸ்ட் ஆட்டத்துக்கு ஏற்பாடு செய்தது என்ன நியாயம்? வருடக் கணக்கில் சென்னையை காயப் போட்ட காலம் உண்டு. அப்படி இருக்க, இந்த அடைமழை காலத்தில் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளை ஏற்பாடு செய்து அடம் பிடித்து சென்னையின் தலையில் அடித்து ஏற்பித்தது ஏன்?

இரண்டாவது ஆட்டத்துக்கு காப்பீடு வழங்க எந்த நிறுவனமும் முன்வராத நிலையில் முதல் ஆட்டத்திற்கே ‘நடந்தது தவறு இந்தா பிடியுங்கள் நீங்கள் செலுத்திய காப்பீடு கட்டணம் இழப்பீடு தர முடியாது’ என்று அவர்கள் மறுத்திருக்க வேண்டும். மறுத்திருந்தால், அதிலுள்ள நியாயத்தை எதிர்த்து எதுவும் செய்திருக்க முடியுமா என்பது சந்தேகமே. ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை. ‘சலம்பாமல்’ இழப்பீடை வழங்கி விட்டார்கள். அதுபோல் ரசிகர்கள் செலுத்திய நுழைவுக் கட்டணத்தையும் இழப்பீடாகக் கிடைத்த தொகையையும் தாங்களுக்கு ஏற்பட்ட செலவுகளுக்கும் இழப்புகளுக்கும் காப்பாக வைத்துக் கொண்டு திருப்பி கொடுத்திருக்க வேண்டும்.

Sachin அதில் பல நடைமுறை சிக்கல்கள் இருப்பது உண்மை. எனவே தார்மீக ரீதியாக இந்தத் தெகையை அப்படியே டாக்டர் ராமதாஸ் சொல்வது போல் வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கி விடுவதுதான் நியாயமாக இருக்கும். இது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு பெருமை சேர்க்கும். அது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கும் பெருமை சேர்க்கும். ரசிகர்களுக்கும் ஏதோ ஒரு நல்ல காரியத்துக்கு உதவினோம் என்கிற ஆறுதலையும் தரும். செய்வார்களா? நல்ல மனிதர்கள் செய்வார்கள். நீரோக்கள் செய்ய மாட்டார்கள்.

தமிழகமே தண்ணீரில் தத்தளித்த போது அந்த அவலத்தின் மத்தியிலும் ‘மூன்று நாட்கள் ஆட்டமில்லையே’ என்று புலம்பி தீர்த்து நான்காம் நாள் மதியத்துக்கு மேல் விடாப்பிடியாக ஆட்டத்தைத் துவக்கி, இந்த ‘நீரோக்கள்’ எதை சாதித்துக் கிழித்தார்கள்? அதைவிட ஆட்டத்தையே ரத்து செய்திருந்தால் எவ்வளவு கௌரவமாக இருந்திருக்கும்?

கிரிக்கெட் வாரியத்தின் தலைமைப் பீடத்துக்கான சென்ற தேர்தலில் ‘ஜெகஜ்ஜால கில்லாடி’ ஜெகன்மோகன் டால்மியா வங்காளம் சார்பாகவும் வாக்களித்தார். பிறகு சமம் என்கிற நிலை வந்தபோது தன்னுடைய நிர்ணாயக வாக்கையும் (casting vote) செலுத்தினார். ஆனால் இம்முறை ‘ஒருவர் ஒரு வாக்கு மட்டுமே அளிக்கலாம், தலைவர் தேவைப்பட்டால் மட்டுமே தன்னுடைய நிர்ணாயக வாக்கை அளிக்க முடியும்’ என்று கிருஷ்ண மூர்த்தி வைத்தார் பாருங்கள் ஒரு ஆப்பு. டால்மியாவால் ஆடவும் முடியவில்லை. அசையவும் முடியவில்லை. இத்தனை களோபரங்களுக்கு மத்தியில் சரத்பவார் ‘தொட்டுக்கோ தொடைச்சிக்கோ’ என்கிற அளவில்தான் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது போக, முப்பதில் இருபது வாக்குகள் பெற்று அவர் பெற்ற வெற்றி டால்மியாவின் எதேச்சதிகாரப் போக்கில் எவ்வளவு பேர் கடுப்புடன் இருந்தார்கள் என்பதைத் தெளிவாக்கியது.

சரி ஆட்சி மாற்றம் வந்தாயிற்று. எல்லாம் சரியாய் விடுமென்று நம்புகிறீர்களா? நடக்காது! கங்கு கரையற்று பணம் கரைபுரண்டு ஓடும் ஒரு ஸ்தாபனத்தில் பொறுப்புக்கு வருபவர்கள் கரையில் நின்று கை, கால், முகம் மட்டுமே கழுவிக் கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. முங்கிக் குளிக்கவே ஆசைப்படுவார்கள். அது தவிர்க்க முடியாது. போனது போக இருப்பது லாபம் என்பதுதான் இனி எந்தக் காலத்திலும் கிரிக்கெட் வாரியத்தின் தலைவிதியாக இருக்கப் போகிறது.

எழுபதுகளில் ஆரம்பிக்கப்பட்டு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த தமிழ் நேர்முக வர்ணனை 2004 அக்டோபரிலேயே நிறுத்தப்பட்டு விட்டது. தனியாக அலைவரிசை இல்லையென்பது சரியான காரணமாக இருக்க முடியாது. ஏனெனில் அது, ‘கடந்த 25 வருடங்களாக இருந்தது இப்போது காணாமல் போயிற்று?’ என்கிற கேள்வியை எழுப்பும். இதன் வர்த்தக சாத்தியக் கூறுகள் பற்றி சரியாக எடுத்துச் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்ல வேண்டியவர்கள் சொல்லாமல் விட்டு விட்டார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.

தொலைக்காட்சி இந்தளவுக்கு வீச்சு பெறாத காலத்தில் தமிழ் வர்ணனைதான் கிரிக்கெட்டை தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் எடுத்து சென்றது என்பது ஒரு நிர்வாண உண்மை. கிரிக்கெட் மட்டுமல்ல ஏனைய எல்லா விளையாட்டுக்களும் கிராம மக்களைச் சென்றடைய தமிழ் வர்ணனை அவசியம். சென்னையில் நடந்த சர்வதேச ஹாக்கி போட்டி, டென்னிஸ் போட்டி ஆகியவற்றுக்குக் கூட தமிழ் வர்ணனை இல்லையென்பது ஒரு பெரிய சோகம். விளையாட்டில் தமிழ் ஒலிபரப்புக்காக ஒரு தனி அலைவரிசையே துவங்கப்பட்டாலும் அதன் நீண்ட கால நன்மைகள் தற்கால நட்டங்களை பெரிய அளவில் ஈடு செய்யும் என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.

‘அப்படிப்பட்ட ஒலிபரப்பை யார் கேட்பது?’ என்று அதிகாரத்திலிருக்கும் நண்பர் ஒருவர் இளக்காரமாகக் கேட்டார். ‘பண்பலை ஒலிபரப்பில் கூட 90க்கும் அதிகப்பட்ட சதவிகிதத்தை ‘சூரியனு’க்கும், ‘மிர்ச்சி’க்கும் தாரை வார்த்து விட்ட நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்கக் கூடாது’ என்று பதிலளித்தேன். தமிழ் தலைவர்கள் சிலரை கண்டு முறையிடலாமென்று நினைத்தபோது கூட வர வேண்டிய நண்பர், ‘மாலைக்கும் சால்வைக்கும் என்னிடம் காசு இருக்கிறது. ஆனால் நடையாய் நடப்பதற்கும் சென்று காத்துக்கிடப்பதற்கும் என்னிடம் நேரமில்லை’ என்றார்.

சச்சின் சாதனைக்கா(ர)ர் என்பதில் சந்தேகமில்லை. கவாஸ்கரின் 34 சதங்கள் என்கிற உலக சாதனையை முறியடித்து 35 சதங்கள் என்கிற சாதனையை அடைந்துள்ளார். இருவரும் எடுத்துக் கொண்ட தூரம் 125 போட்டிகள். ஒருநாள் போட்டி ஆட்டத்தில் அதிகமானப் போட்டிகளில் கலந்து கொண்டது, அதிமான ரன்களை (13909) குவித்தது, அதிகமான சதங்கள் (38), அதிகமான அரை சதங்கள் (71) என்கிற அத்தனை சாதனைகளுக்கும் சொந்தக்காரர் டெண்டுல்கர்.

டெஸ்ட் போட்டி ஆட்டங்களில் 10,000 என்கிற இலக்கை முதலில் கடந்தவர் கவாஸ்கர். பிறகு ஆலன் பார்டர் அந்த எல்லையைக் கடந்தார் சச்சின் தொடர்ந்தார். இப்போது அந்த சாதனை மேற்கிந்தியத் தீவுகளின் பிரையன் லாராவின் கையில். அதையும் சச்சின் எட்டுவார்-கடப்பார் என்பது உறுதி.

1989-ல் 16 வயதில் டெஸ்ட் ஆடத் துவங்கிய உலகிலேயே மிக இள ஆட்டக்காரர் 17வது வயதில் இங்கிலாந்துக் கெதிராக இங்கிலாந்திலேயே கன்னிச்சதம். சச்சின் தன் கிரிக்கெட் வாழ்க்கையில் 50 சதங்களை பூர்த்தி செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 34க்கும் 35க்கும் இடையிலான இடைவெளி ஏறக்குறைய ஒரு வருடம் என்பதை வைத்துப் பார்க்கும் போது 40 சதங்கள் வரை சாதிப்பார் என்பதை நம்பலாம். என்றாலும் அதை அடையும் அளவில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாருமில்லை என்பது டெண்டுல்கரின் சாதனைக்கு மேலும் மகிமை சேர்க்கிறது. அவர் 10,000 ரன்களைப் பூர்த்தி செய்தபோது ஒரு கட்டுரையில் டென்(தவுசண்ட்)டுல்கர் என்று குறிப்பிட்டிருந்தேன். இப்போது ‘நூறாண்டு வாழ்க! நூறு சதத்தையும் எட்டுக!!’ என்று வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறேன்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com