Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜனவரி 2006
நூல் மதிப்புரை

நீ நான் காதல்
- முனைவர். பா. ஆனந்தகுமார்

“எந்தக் கவிஞனும் தனிநிலையில் முழுப்பொருள் கொண்டவனல்லன். அவனது சிறப்பும் பெருமையும் அவன் கடந்த காலக் கவிஞர்களிடத்துக் கொண்டிருக்கிற உறவில் இருக்கின்றது. ஒரு கவிஞனைத் தனியே மதிப்பிட முடியாது. அவனை மறைந்த கவிஞர்களோடு ஒப்பிட்டும் உறழ்ந்துமே மதிப்பிட முடியும்”
              -டி.எஸ். எலியட்

தமிழ்நாட்டின் பண்பாட்டுத் தலைநகரமாம் தமிழ் வளர்த்த மாமதுரையில் இருந்து வந்திருக்கும் இரண்டு இளம் படைப்பாளிகளின் காதற்கவிதைகளின் தொகுப்புத் தான் ‘நீ நான் காதல்...’ பின்னிடைக் காலத்தில் தமிழகத்தின் பல இடங்களுக்குச் சென்று கவிபாடி கச்சிக் கலம்பகம், திருவாயிடத்தூர் கலம்பகம் ஆகிய சிறந்த கலம்பக இலக்கிய நூல்களை இயற்றி ‘கலம்பத்திற்கு இரட்டையர்’ எனப் புகழ்பெற்றனர் முடவரும் அந்தணருமாகிய இரட்டைப் புலவர்கள் இளஞ்சூரியர், முதுசூரியர். அதுபோல் ‘காதலுக்கு இரட்டையர்’ என 21-ம் நூற்றாண்டில் அழைக்கத்தக்க வகையில் தமிழ்ப்பிரியனும் ராஜசேகரனும் இணைந்து செயல்பட்டு அழகிய புகைப்படங்களுடன் இக்கவிதைத் தொகுப்பை வெளிக் கொணர்ந்துள்ளனர். எதிரும் புதிருமாக இருவரது கவிதைகளும் எதிரெதிர் பக்கங்களில் ஒரே தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன.

“உன்னை எழுதி எழுதி
என் பக்கங்கள்
அழகாகத்தான் இருக்கிறது
நான் தான்?” - என்ற தமிழ்ப்பிரியனின் முதற்பக்கக் கவிதையோடு தொடங்கும் நூல்,

“இத்தோடு
முடித்துக் கொள்கிறேன்
காதலை அல்ல...” - என்ற அவரது கவிதையோடு நிறைவு பெறுகின்றது.

தமிழ் மரபில் ‘காதல்’ ஒரு செழுமையான பாடுபொருள். சங்க இலக்கியத்தில் பெரும்பகுதி காதற்கவிதைகளே. தமிழ் காதலோடு சேர்த்தே அடையாளப் படுத்தப்பட்டிருக்கிறது. குறிஞ்சிப் பாட்டினைக் கபிலர் ஆரிய அரசன் பிரகத்தனுக்கு ‘தமிழ்’ அறிவித்தற் பொருட்டு பாடினார் என்பது வரலாறு. இங்கு ‘தமிழ்’ என்று சுட்டப்படுவது தமிழ்க் காதல் வாழ்வியலையே. இவ்வாறு தமிழ் இலக்கிய மரபில் வலுவான அடித்தளத்தைப் பெற்றுள்ள காதற் பொருள் ஒன்றாம் நூற்றாண்டுப் பழமையோடும் 21-ம் நூற்றாண்டுப் புதுமையோடும் இணைந்து இக்கவிதை நூலில் காட்சி தருகின்றது.

“இப்பொழுது நான்
வாகனத்தை விரைவாக
ஓட்டுவதில்லை
என்னைக் காப்பாற்றிக் கொள்ள அல்ல
என்னில் வாழும் உன்னை” - என்ற தமிழ்ப்பிரியனின் கவிதையிலுள்ள தலைவன் கூற்று,

என் நெஞ்சுக்குள் காதலன் இருக்கிறான்; அவன் வெந்து விடுவான். எனவே சூடானவற்றை உண்பதற்கு அஞ்சுகிறேன்.

“நெஞ்சத்தார் காதலவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக்கு அறிந்து” - குறள்
என்ற வள்ளுவனின் தலைவி கூற்றை நினைவு படுத்துகிறது.

“வாசனைத் திரவியங்களும்
தோற்றுப் போகின்றன
உன் கூந்தலில் தவறிய
பூக்களின் முன்பு...” -

என்ற தமிழ்ப்பிரியனின் கவிதையை வாசிக்கிறபோது நக்கீரன் முன்னர் பொருள் கூறி, வாதிட்டதாகச் சொல்லப்படுகிற இறையனாரின் ‘கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி. . நீயறியும் பூவே’ எனும் குறுந்தொகைக் கவிதை ஞாபகத்திற்கு வருகிறது.

ராஜசேகரனிடமும் சங்கக் காதல் மரபை புதுமையாக்கம் செய்த கவிதைகள் சில உள்ளன. ‘இதுகாதல் காலம்’ என்ற தலைப்பிலமைந்த அவரது கவிதையில் வரும் தலைவன், மார்கழி மாத அடைமழையோடு தன்னை விட்டுச் சென்ற காதலியை நினைத்துப் பார்க்கிறான். முல்லைக் காலத்தின் முகிழ்ப்பில் தலைவன் வராமையை எண்ணி வருந்தும் சங்கத் தலைவியின் ஏக்கம் இக்கவிதையில் தொனிக்கிறது.
ராஜசேகரன் கவிதைகளில் காதல் புதிய காட்சிப் படிமங்களோடு மலர்ந்து நிற்கிறது. அவ்வகையில் கீழ்வரும் கவிதைகள் குறிப்பிடத் தக்கன.

“பஸ்ஸின் ஜன்னலோரக் காட்சிகளாய்
ஓடித்தொலைக்கிறது எனது பருவம்
ஒருவரும் என்னைக் காதலிக்காமல்...”
“தனிமையில்
அவளைக் குறிப்பெடுத்தேன்
எண்ணங்களை நீளவிட்டு... ”

இருவரது கவிதைகளிலும் பேருந்து, பேருந்துநிறுத்தம் என புதிய 21-ம் நூற்றாண்டு குறியிடங்களில் காதல் துளிர்த்திருப்பதைக் கவனிக்க முடிகின்றது.

கவிதையைப் படிக்கும் வாசகனின் மனம் கற்பனை உலகில் பறந்து செல்லும்போது, அதனைக் கடிவாளம் போட்டு நிறுத்துவதாக நூலிலுள்ள புகைப்படங்கள் உள்ளன. அவற்றில் பல நம் மரபிற்கும் பண்பாட்டிற்கும் அந்நியமானவை. அவற்றைக் கவிஞர்கள் தவிர்த்திருக்கலாம். அதே போன்று கவிதைக்கான தலைப்புக்களும் கவிதையை நெய்த பிறகு கவிஞர்கள் தேடிக் கண்டுபிடித்துச் சூட்டியவையாக உள்ளன. வார்த்தைகளும் மௌனங்களும் சேர்ந்து தான் கவிதையாக்கத்தையும் கவிதை வாசிப்பையும் சாத்தியப்படுத்துகின்றன. ஆனால் இவர்களது கவிதைகளில மௌனங்களும் மௌனத்தை உறைய வைக்கும் உள்ளுறைவுகளும் மிகக் குறைவே. அவை வருங்காலத்தில் இவர்களுக்கு வசப்படும். சாதி, மத, நிறுவனங்களுக்கு எதிராக எப்போதும் கலகம் செய்வது காதல்தான். அதனை முழுமையான அடிக்கருத்தாக்கிய இக்கவிதை நூல் வரவேற்கத் தக்கது.

*கட்டுரையாளர் : தமிழ் இணைப்பேராசிரியர், காந்தி கிரமாம் கிராமியப் பல்கலைக்கழகம்

நூல் : நீ நான் காதல்... (கவிதைகள்)
ஆசிரியர் : தமிழ்ப்பிரியன் : ராஜசேகரன்
வெளியீடு : ஷிஃபா மீடியா,
142 வடக்கு வெளிவீதி,
யானைக்கல், மதுரை -625001.
பக். 99, விலை ரூ.25/-


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com