Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
பிப்ரவரி 2007
ஆழிசூல் உலகும் இனக்குழு விலங்கியலும்
க.வேம்பையா

தமிழிலக்கியம் மிகப்பரந்து பட்ட கால அளவினையும் வகைப்பாடுகளையும் உடையது. கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக ஐரோப்பியர் தொடர்பால் தமிழிலக்கிய ஆய்வுகளில் பல வகையான கோட்பாடுகளும் அணுகுமுறைகளும் கைக் கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வகையில் இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தமிழாய்வுலகில் மொழியியல், உளவியல், மானிடவியல், சமூகவியல், நாட்டார் வழக்காற்றியல் ஆகிய புலங்கள் சார்ந்த அறிவு பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. அண்மைக் காலத்தில் தமிழாய்வுலகில் கவனிப்புக்குரிய இடத்தினைப் பெறுவது இலக்கிய மானிடவியல் அணுகுமுறையாகும். இதன் அடிப்படையில் மானிடவியல் புலம் சார்ந்த இனக்குழு உயிரியலின் ஒரு பிரிவான இனக்குழு விலங்கியல் ஆய்வு தமிழாய்வுக்கு புது வரவாகும்.

sea இதனை அறிமுகம் செய்து, இதனடிப்படையில் மீனவர்களின் மரபுவழி அறிவை நாவல் இலக்கியத்தின் மூலம் மீட்டுருவாக்கம் செய்ய இக்கட்டுரை முயல்கிறது.

இனக்குழு விலங்கியல்:

‘Ethnozoology’ என்ற ஆங்கிலச் சொல்லிற்கு இணையாகத் தமிழில் இனக்குழு விலங்கியல் என்னும் கலைச்சொல் பயன்படுத்தப்படுகிறது. இந்தச் சொல் ‘Ethno’, ‘Zoology’ என்னும் இரு சொற்களின் கூட்டால் உருவாக்கப்பட்டதாகும்.

‘Ethno’ என்பதற்கு இனம், மக்கள், பண்பாட்டுக்குழு என்பது பொருள். Ethno என்ற சொல் ஆய்வுலகின் அண்மைக்கால அறிமுகம். இது ஒரு குறிப்பிட்ட இனத்தை அல்லது பண் பாட்டுக் குழுவை குறிக்கும் மானிடவியல் புலம் சார்ந்த கலைச்சொல் ஆகும். மானிடவியலின் அடிப்படையில் பண்பாட்டில் உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என்ற வகைப்பாட்டிற்கே இடமில்லை. அதனால் இதற்கு மாற்று கலைச்சொல் தேவைப்பட்டது. எனவே மக்கள் திரள்களை வேறுபாடின்றிக் குறிப்பிடுவதற்காகக் கையாளப்பட்ட கலைச் சொல்லே ‘Ethno’ ஆகும்.

‘Zoology’ என்னும் ஆங்கிலச் சொல்லிற்கு இணையான தமிழ்ச் சொல் ‘விலங்கியல்’ என்பதாகும். விலங்குகளைப் பற்றிய ஆராய்ச்சி விலங்கியலாகும். விலங்குகள் எனும்போது பாலூட்டிகள், பறவைகள் மட்டும் குறிக்கப்படுவதில்லை. மீன்கள், பூச்சிகள், தேள், புழு, நத்தை ஓரணுப் பிராணிகள் ஆகிய எல்லாவற்றையும் குறிக்கும். சுருங்கச் சொல்லின் தாவரமல்லாத எல்லா உயிருடைய பொருளும் விலங்கு ஆகும்.
ஒரு குறிப்பிட்ட மக்கள் திரள் அல்லது பண்பாட்டுக்குழு தம் சுற்றுச் சூழலில் உள்ள விலங்கினங்களை வகைப்படுத்தி வைத்துள்ளனர். இந்த விலங்கினங்களின் பால் அவர்கள் கொண்டிருக்கும் அறிவியல் அறிவு சாராத மரபுவழி அறிவை அறியும் அறிவியல் இனக்குழு விலங்கியல் ஆகும்.

“இனக்குழு உயிரியல் மனித சமுதாயத்திற்கும் தாவரங்கள், விலங்குகள் முதலிய உயிரினங்களுக்கும், இடையிலான தொடர்பினைக் குறித்து ஆராயும் பொருட்டு இனக்குழு தாவரவியல், இனக்குழு விலங்கியல் ஆகிய உட்பிரிவுகளைக் கொண்டிருக்கிறது”1 என்கிறது வாழ்வியல் களஞ்சியம். 1950-60-ஆம் ஆண்டுகளில் பல்வேறு மக்கள் திரள்களில் விலங்குகள், தாவரங்கள் ஆகியவற்றின் பெயர்கள் தொடர்பான இனக்குழு தாவரவியல், இனக்குழு விலங்கியல் ஆராய்ச்சிகள் தொடங்கின. எனவே மனிதத் திரள்கள் மிகப் பழங்காலத்திலிருந்து விலங்குகளோடு கொள்கின்ற உறவின் அடிப்படையில் அவை பற்றிய மரபுவழியான அறிவைத் தனக்குள் ஏராளமாக சேமித்து வைத்துள்ளான். அவன் வாழும் சூழலில் தன்னோடு வாழும் விலங்கினங்கள் தன்னுடைய வாழ்வுக்கு எவ்வகையில் எல்லாம் பயன்படும் என்பதை அவன் நன்கு அறிந்து வைத்துள்ளான். அந்த அறிவுக் களஞ்சியத்தையே இனக்குழு விலங்கியல் புரிந்து கொள்ள முயல்கிறது. இதுவே ‘இனக்குழு விலங்கியலின்’ அடிப்படையாகும்.

தமிழில் மீனவர் நாவல்கள்:

ஐவகையாக பகுக்கப்பட்ட தமிழ் நிலத்தில் நெய்தல் நில மக்களாக மீனவர்களைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. தொல்பழங்குடி இனக்குழுவினரான மீனவர்கள் தமிழகத்தின் கடற்கரையோரப் பகுதிகளில் வாழ்ந்து வருகிறார்கள். அன்றாடம் இயற்கையோடு போராடி வாழ்க்கை நடத்தும் மீனவர்கள் உழைப்பு என்னும் செயலினால் உணவைப் பெறுகின்றனர். இம்மீனவர்கள் முழுக்க முழுக்க கடலை நம்பியே வாழும் வாழ்க்கை உடையவர்கள். தம் உடல் வலிமை, அஞ்சாமை, இவற்றின் துணையோடு கட்டுமரம், தூண்டில் வலை போன்ற உழைப்புக் கருவிகளும் உற்பத்திக் கருவிகளும் பெரும் பங்கு வகிக்கின்றன. இவர்களுடைய வாழ்க்கையில் வெளியுலகத் தொடர்பு மிகவும் குறைவு. கடலும் குடும்பமுமே இவர்களுக்குத் தெரிந்த உலகங்கள். இத்தகைய வாழ்க்கை முறையினால் இவர்களுக்கென உருவான தனித்த பழக்க வழக்கங்கள், பண்பாட்டுக் கூறுகளை மையமாகக் கொண்டே கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் எனப் பல்வேறு இலக்கிய வடிவங்கள் உலகில் பல மொழிகளில் தோன்றியுள்ளன. இவற்றில் மீனவர் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டெழுந்துள்ள தமிழ் நாவல்களைப் பின்வருமாறு குறிப்பிடலாம்.

வலம்புரிஜான் (1960) - நீர்க்காகங்கள்
வண்ணநிலவன் (1977)- கடல்புரத்தில்
இராஜம் கிருஷ்ணன் - அலைவாய்க் கரையில்
தாமரைச் செந்தூர் பாண்டியன் (1980) - அலைகள் ஓய்வதில்லை
பொன்னீலன் (1985) - தேடல்
ஜெகதா (1985) - சமுத்திரகுமாரர்கள்
பானுமதி பாஸ்கோ (1992) - நீலநிறப் பறவைள்
ஸ்ரீதர கணேசன் (2001) - வாங்கல்
வலம்புரிஜான் (2002) - கடலின் மக்கள்
ஜோசப் டி குரூஸ் (2004) - ஆழி சூழ் உலகு

மொழி அடிப்படையில் ஈழத்து மீனவர்களின் வாழ்வை அடியொற்றி எழுதப்பட்ட நாவல்களும் உண்டு. அவை,

கயிலாசநாதன் - கடற்காற்று
செங்கை ஆழியான் - வாடைக்காற்று
டேனியல்.கே.- போராளிகள் காத்திருக்கின்றனர்
யோகநாதன்.சே. - தோழமை என்றொரு சொல்

இவற்றோடு மொழி பெயர்ப்பு நாவல்கள் சில உண்டு. அவை,

தகழி சிவசங்கரன்பிள்ளை - செம்மீன்
இண்ணா தெகிகர்ஸ் - மீனவர் எழுச்சி
எர்னெஸ்ட் ஹெமிங்வே - கிழவனும் கடலும்

இவ்வாறாக மீனவர் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட நாவல்கள் அவர்களின் மரபுவழி அறிவு, சமூக மாற்றங்கள், உழைப்புக் கருவிகளில் ஏற்பட்ட மாற்றங்கள் அதனால் அவர்களிடையே தோன்றி வளர்ந்த பொருளாதார வேறுபாடுகள் போன்றவற்றைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. இவர்களைப் பற்றி ஏராளமான ஆய்வுகள் வெளிவந்துள்ளன. ஆனால் அவர்களின் பாரம்பரிய விலங்கியல் போன்றவை அறிதல்சார் மானிடவியல் நோக்கில் இலக்கியத்தில் ஆராயப்பட வேண்டியது அவசியம். இங்கு மீனவர் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டெழுந்த ‘ஆழி சூழ் உலகு’ என்னும் நாவல் ஆராயப்படுகிறது.

ஆழி சூழ் உலகு:

‘ஆழி சூழ் உலகு’ நாவல் வாசிக்கும் முன்னரே கவனம் பெற்ற ஒன்று. அது நிகழ்கின்ற களம் தமிழ் எழுத்துக்களில் முயற்சி செயப்படாத களம். இதனை எழுதியவர் ஜோசப் டி குரூஸ் அந்தக் களத்தின் மைந்தன். 1933-இல் துவங்கி 1985 வரையிலான கால கட்டத்தில் ஆமந்துறை (உவரி) என்கிற ஒரு கடலோர கிராமத்தின் தொன்மையான இனமான பரதவ இன மக்களின் வாழ்வை உப்புக் காற்றின் மணத்தோடு மிக அற்புதமாக எழுதி இருக்கிறார். இது இவரின் முதல் எழுத்து முயற்சி.

கடலின் காட்சிகளும் மீன்களின் குறும்புகளும் கட்டுமரங்களின் பாய்ச்சலும் கூடுதலாகப் பதிவாகி வாசகனை கடலுக்குள் பயணிக்க வைக்கும் தன்மை இந்நாவலுக்கு இருக்கிறது. நாவலின் துவக்கம் ‘சுறாப்பாறு’ பயணத்தை நாவலின் முக்கியமான பாத்திரங்களான தொம்மந்திரை, கோத்ராப்பிள்ளை, போஸ்கோ மேற்கொள்கிறார்கள். இந்நாவல் இரண்டு விசயங்களை குறிப்பிடும்படியாகப் பேசுகிறது. ஒன்று மரணம், மற்றொன்று காமம். மரணமும், காமமும் இந்நாவலின் பல்வேறு பாத்திரங்களின் வழியாக வெவ்வேறு விதமாக வெளிப்படுகிறது. காமம் - வசந்தா X ஜஸ்டின், சூசை X சுந்தரி டீச்சர் இவர்களைத் தவிர, விக்டர் X ரோஸம்மா, வருவேல் X ரோஸம்மா, கில்பர்ட் - அவனது தம்பி மனைவி என முறை மீறிய உறவுகளும் பேசப்பட்டுள்ளது.

காமத்தைவிட பன்மடங்கு வீரியம் கொண்டதாக இந்நாவல் முழுதும் வரும் மரணம் - காகு சாமி, ஜஸ்டின், சூசை, தொம்மந்திரை, சுயம்பு, இருட்டியார், தோக்களத்தா, வியாகுலப்பிள்ளை, சாரா ஊமையன் என்று பல மரணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாகப் பேசப்பட்டுள்ளன. மேலும் காகு சாமியாரின் அர்ப்பணிப்பு, மற்ற சாமியார்களின் போலித்தன்மை இவற்றோடு 1961 இனக்கலவரம், 1964 தனுஷ்கோடி புயல், 1973 நாகப்பட்டினம் புயல் என வரலாற்று நிகழ்ச்சிகளோடு மீனவர்களின் வாழ்வியலை இயைபுப்படுத்தி பேசியுள்ளார். மீனவர்களின் மூர்க்கம், வெகுளித் தன்மை, கடலுக்கும் கரைக்குமான இடையிறாத பயணம், துயரம், சாகசம், நிச்சயமற்ற வாழ்க்கை என மீனவர்களின் மூன்று தலைமுறைகளின் வாழ்வியலை மிக அற்புதமாக நம்முன் விரிந்து விவரிக்கிறது இந்நாவல்.

நாவலும் இனக்குழு விலங்கியலும்:

மீனவர்களின் வாழ்க்கையில் கடல் வாழ் விலங்கினங்கள் மிக முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. எனவே மீனவர்களுக்கும் கடல் வாழ் விலங்கினங்களுக்கும் இடையேயான தொடர்பினைக் குறித்தும், விலங்கினங்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக வகைப்படுத்தி அவ் விலங்கினங்களின் நிறம் மற்றும் தோற்றத்தின் மூலம் அடையாளப்படுத்தி அவை வாழும் இடம், எக் காலங்களில், எவ்விடங்களில் வாழ்கின்றன, எவ்வகை உணவுகளை உண்ணுகின்றன, எம்முறையில், எக்காலங்களில் இனப்பெருக்கம் செய்கின்றன என்பனவற்றைத் தங்களது பாரம்பரிய அறிவினாலும் அனுபவத்தினாலும் பல்வேறு செய்திகளை அறிந்து வைத்துள்ளனர். இதனையே மீனவர்களின் இனக்குழு விலங்கியல் ஆராய்கிறது.

இனக்குழு விலங்கியல் குறித்த தரவுகளைப் பெரும்பாலும் நாட்டார் மரபுகளில் இருந்தே பெற முடியும். ஏனென்றால் அவை வாய்மொழி மரபு சார்ந்தவை. கதைகள், நம்பிக்கைகள், பழமொழிகள், விடுகதைகள் எனப் பல்வேறு வடிவங்களில் அவை வழக்கில் உள்ளன. மிகச் சில கூறுகள் எழுத்திலக்கியத்திலும் பதிவு செய்யப்பட்டு வந்துள்ளன. விலங்கினங்கள் மனிதனோடு பல தளங்களில் நெருக்கமான உறவுடையன, என்பதாலும் அவை பற்றிய மரபுவழி அறிவியல் வியக்கத்தக்கது என்பதாலும் இலக்கியப் படைப்பாளிகளும் விலங்கினங்களைப் பற்றித் தன்னுணர்வோடும், தன்னுணர்வின்றியும் தங்களது படைப்புக்களில் பல செய்திகளைப் பதிவு செய்யத் தவறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று ‘ஆழி சூழ் உலகு’ நாவலில் விலங்கினங்களைப் பற்றிய மரபுவழியான பதிவுகளைக் காணலாம்.

மீன்கள் பற்றிய மரபுவழி அறிவு:

“கன்னியாகுமரிக்கு நேர் வெலங்கே சுமார் பதினைந்து கி.மீ. தொலைவில் இருக்கிறது சுறாப் பாறை... சுறாப்பாறு தொழில் என்பது பரதவர்களுக்கு ஒரு சிம்ம சொப்பனந்தான். ஆடிமாதக் கடலடியிலும் பூண்டு தொழில் செய்வோர்கள் கூட இந்த சுறாப்பாறு என்ற பெயரைக் கேட்டதுமே அஞ்சி நடுங்குகின்றார்கள். காற்றையும் கடலையும் எதிர்த்துப் போரிடுவது இவர்களின் அன்றாட வாழ்வாக இருந்தாலும் இந்த சுறா மீன் வேட்டையில் கரணம் தப்பினால் மரணம் நிச்சயம். சுறாப்பாறுக்கு குறி வைத்துப் போவது சுறாமீன் வேட்டைக்காகத்தான். வேளா, இழுப்பா, கொம்பன்சுறா, வரிப்புலியன், உழுவ போன்ற சுறா மீன்களுக்காகத்தான்.

“ஆயிரங்கல் தூண்டில் கயிறைக் கடலில் இறக்குவதற்கு முன்னால் வழியில் போகும் போதே பிடித்த சீலா மீன்களை இரண்டு மூன்று துண்டுகளாக நறுக்கித் தூண்டில்களில் இரையாகக் கொளுவியிருப்பார்கள்2”

மேற்குறித்த நாவல் வரிகளில் உள்ள செய்தி ஆடி மாதத்தில் கடல் அலை அதிகமாக இருக்கும் என்பதையும், ஒரு குறிப்பிட்ட பார்பகுதியில் சுறா மீன்கள் அதிகமாகக் கிடைப்பதால் அந்தப் பகுதிக்கு ‘சுறாப்பாறு’ என்றும், சுறா மீன் வேட்டை ஆபத்தானது என்பதையும் பல்வேறு வகையான சுறா மீன்கள் இருப்பதையும், சுறா மீன்களைப் பிடிக்க ஆயிரங்கல் தூண்டிலில் சீலா மீன்களை உணவாகப் பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் மீனவர்கள் அவர்களின் அனுபவ அறிவைப் பயன்படுத்துவதை தெரிந்து கொள்ள முடிகிறது.

“கோத்ரான்னா கீழ பாத்தியளா... ரண்டு கறுப்பு அசையிது” என்று பரபரபத்தான் போஸ்கோ.

நீர்ப்பரப்பைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்த தொம்மந்திரை, “கோத்ரா கீழ நிக்கிற ரண்டும் கொம்பஞ் சிறான்னு நினைக்கிறம்.”

“அப்ப நல்ல வேட்டையின்னு சொல்லுங்க” என்றான் கோத்ரா.

“எய்யா போஸ்கோ, கொம்பஞ் சிறாக்க நல்ல மூள உள்ளதுவ இரைய பக்குவமா கடிச்சித் தின்னுட்டு தூண்டிய வுட்டுட்டு போயிடும்3.”

மேற்குறித்த செய்தி ‘...இரண்டு கறுப்பு அசையிது’ என்று போஸ்கோ கூறியவுடன் அதனை உற்றுப் பார்த்த தொம்மாந்திரை. அது கொம்பஞ்சிற என்றும், இவை புத்திசாலியானவை என்பதையும் தன் அனுபவ அறிவால் அறிந்து வைத்துள்ளதை அறிய முடிகிறது.

சுறா மீன்கள் துணை வகையுள்ளவைகளாகும். இவற்றை பஞ்சுச், கொம்பஞ், கலக்குச் கொண்டையன், வேடச், கல்லுச், வேல்ச் சிறாவ் என ஏழு வகையாக வகைப்படுத்தியுள்ளனர். கொம்பஞ் சிறாவ் - இரண்டு கொம்புகளை உடைய சுறாவை கொம்பஞ் சிறாவ் என்கின்றனர். மேற்பகுதி அரக்கு நிறத்திலும், கீழ்ப்பகுதி வெள்ளை நிறத்திலும் காணப்படும். சேறு, பாசி உள்ள இடங்களில் மேற்பகுதியில் வாழும். பொடி மீன்களை உணவாக உட்கொள்கின்றன என்கின்றனர்.

மேற்குறித்த கருத்துக்களின் அடிப்படையில் மீனவர்கள் கடல் வாழ் விலங்கினங்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக வகைப்படுத்தி அவ்விலங்கினங்களின் நிறம் மற்றும் தோற்றத்தின் மூலம் அடையாளப்படுத்தி அவை எவ்விடத்தில் வாழ்கின்றன. எவ்வகை உணவுகள் உண்ணுகின்றன என்பதை தங்களது பாரம்பரிய அறிவினாலும், அனுபவத்தினாலும் பல்வேறு செய்திகளை அறிந்து வைத்துள்ளனர் என்பதை உணரலாம். இவ்வாறாக மீன்கள் மற்றும் நீரோட்டம், காற்று, வெள்ளி பற்றியான மரபுவழி செய்திகள் இந்நாவல் முழுவதும் விரவிக் கிடப்பதை அறியலாம்.

மானிடவியல் புலம் சார்ந்த இனக்குழு விலங்கியல் என்னும் அறிவுப் புலத்தை அறிமுகம் செய்து, தெளிவுபடுத்துகிறது. இதனடிப்படையில் மீனவ நாவல் இலக்கியத்தை ஆராயும் போது அவர்களின் மரபு வழி அறிவு எந்த அளவிற்கு நாவலில் அதன் ஆசிரியர் பதிவு செய்துள்ளார் என்பதை அறிய முடிகிறது. இதன் மூலம் மீனவர்களின் பாரம்பரிய அறிவு சமகால இலக்கியமான (மீனவ) நாவல்களில் முழுமையாகப் பதிவு செய்யவில்லை என்பதையும், தலைமுறை தலைமுறையாக அறிந்து வைத்திருக்கும் மரபுவழி அறிவு தொழில் நுட்ப முன்னேற்றத்தால் நடைமுறையில் அறுகி வருவதை உணர முடிகிறது.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com