Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
பிப்ரவரி 2007
தமிழ்க் கவிதைகளை முன்வைத்து

பிரதி - அர்த்தப்படுத்துதல் - வாசிப்பு
மு. சேக் அப்துல்லா

ஏதேனும் ஒரு வகையில் சமூகத்தில் படைக்கப்பெற்ற அல்லது கட்டமைக்கப்பட்ட, எந்த ஓர் பொருளினையும், நிகழ்வினையும் அல்லது வாசிப்பிற்கு உட்படுத்தப்படுகின்றவைகளை நாம் பிரதியாக கவனப்படுத்தலாம்.
இன்றுள்ள திறனாய்வு முறைகளில் பிரதி என்ற சொல் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் எந்த ஒன்றினையும் நாம் வாசிப்பிற்கு உட்படுத்தலாம் என்ற கருத்தியல் நவீன திறனாய்வுச் சிந்தனை மரபில் முன்னிறுத்தப்படுகிறது. இவற்றினை அடிப்படையாக்கி எது பிரதி / பிரதிக்கான வரையறை / படைப்பாளன் பிரதி / வாசக பிரதி / பிரதியை தேர்வு செய்யும் முறைமை / அதன் இயங்கியல் / வாசிப்பு / அர்த்தப்படுத்துதல் என்பது போன்ற சில கேள்விகளை முன் வைத்து பார்க்கலாம்.

பிரதி என்பது வரிசை கிரமமாக அச்சில் கோர்க்கப்பட்ட இலக்கிய படைப்பை மட்டுமல்லாது ஏனைய படைப்புகளாகிய ஓவியம், சிற்பம், திரைப்படம், நாடகம் அல்லது ஒரு பொது கட்டமைப்பினை கொண்டு உருவாக்கப்பட்டவைகளை குறித்து நிற்கிறது. ஒரு நபரை நாம் பிரதியாக கொண்டால் அவர் ஒவ்வொரு நிலையிலும் வேறுபட்ட தன்மையினை (Multi Dimension) கொண்டு விளங்குகிறார். ஒரு வயப்பட்ட தன்மையோடு இருப்பதில்லை. மையம் X விளிம்பு என மாறி மாறி அமைகிறார். (இதே அளவுகோல் இன்றைய பிரதிகளுக்குப் பொருத்திப் பார்க்கப்படுகிறது.) அவர் ஆண் அல்லது பெண் பிரதியாக/அவர் சார்ந்த சமூகப் பிரதியாக /குடும்பத்தின் பிரதியாக வெளிப்படுகிறார். மேற்கூறிய ஒவ்வொரு தளத்திலும் பல்வேறுபட்ட அபிப்ராயம் மற்றும் குறிப்பிட்ட தன்மைகள் உடையவராக, உட்கொண்டவராக விளங்குகிறார். நிச்சயமாக ஒவ்வொரு தளத்திலும் மாறுபட்ட புரிதல்களை வெளிக்காட்டுவார்.

எடுத்துக்காட்டாக பாரதியின் பிரதிகளை (பாடல்) நாம் சற்று விரிவாக இங்கு வாசித்துப் பார்க்கலாம். பாரதியின் பிரதி பல்வேறு வாசிப்புகளுக்கு இடம் தரக்கூடியது. இன்றுள்ள நவீன கோட்பாடுகளான தலித்தியம், பெண்ணியம் பற்றிய கருத்துக்களை பறையருக்கும்/ புலையருக்கும் விடுதலை/ பறவரோடு குறவருக்கும்/ மறவருக்கும் விடுதலை என்றும்

கற்பு என்றால் இருகட்சிக்கும் பொதுவில் வைப்போம்/ ஆணும்/ பெண்ணும் நிகரென கொள்வதால் / அறிவில் / ஓங்கி / வையகம் / தழைக்குமாம் / என பெண்ணியம் குறித்தும் பேசியுள்ளார். மேலும் குழந்தைகள் பற்றிய விளிம்பு நிலைப் பதிவும்/ ஓடிவிளையாடு பாப்பா/ எனவும் ஆண் உரு கொண்ட பெண்களும்/ அலிகளும்/ வீணில்/ இங்கிருந்தென்னை வெறுத்திடல் / என்பேன் என அலிகளை பற்றி பதிவு செய்துள்ளார். இதே போன்றும் சுதந்திரம் ஆடுவோமே / பள்ளு/ பாடுவோமே என்றும் சமத்துவம் வேதியராயினும்/ ஒன்றே அன்றி வேறு குலத்தவர்/ ஆயினும்/ ஒன்றே என்கிறார்.

பிரதியின் தன்மை இலகுவானது அல்ல. அது ஒற்றை தன்மையினையோ, ஒரு வித தோற்றச் சாயலையோ கொண்டு இருப்பதில்லை. மேலும் படைக்கப்பட்ட தன்மையோடு அதே நேர்கோட்டில் பயணித்து வாசகனிடம் போய்ச் சேர்வதில்லை. ஒவ்வொரு பிரதிக்கும் தனித் தன்மையும், பல்வேறுபட்ட உட்கூறுகளும் உண்டு. இது சொல்லாடல் சார்ந்தது. ஏனெனில் சொல் குறிகளால் ஆனது. குறிகளின் இயங்கு தன்மை பொறுத்து வாசகனுக்கும் படைப்புக்கும் இடையே நடைபெறும் போராட்டம் தான் அர்த்தப்படுத்தல் என்ற சசூரின் சிந்தனை கவனிக்கத்தக்கதும், குறிப்பிடத் தகுந்ததும் கூட. வாசகனுக்கும் படைப்புக்கும் உள்ள குறுக்கீடு மிக மையமானது. எடுத்துக்காட்டாக “வாய்மையே வெல்லும்” என்பதை சற்று மாற்றி “வாய் மெய்யை வெல்லும்” என்றும் அர்த்தப்படுத்தலாம். இவ்விரு தொடர்களுக்கும் உள்ள அர்த்தத் தளம் சற்றும் சம்பந்தமில்லாதது. பிரதி எந்த அளவிற்கு அர்த்தங்களை உற்பத்தி செய்யுமோ அதே அளவிற்கு தன்னில் அர்த்தங்களை கொண்டு இருக்கும்.
மொழியின் அடிப்படை கட்டுமானம் குறிகளால் ஆனது. கட்டமைக்கப்பட்டது.

வரலாறு/ தத்துவம்/ பொருளாதாரம்/ அரசியல்/ சமூகம்/ மானுடவியல்/ உளவியல் ஆகியவை குறிகளால் ஆனவை என்பதை வி.எஸ்பியர்ஸ் முன்வைத்தார். இவ்விரு சிந்தனைகளும் மொழி பற்றிய மதிப்பீடுகளையும் நவீன இலக்கிய பார்வைகளையும் முற்றிலுமாக மாற்றி அமைத்தன. குறிகளின் இயங்குதளம் படைப்பில் வெவ்வேறு வகையில் விரவிக் கிடக்கின்றது. இது வாசகன் பிரதியை அணுகும் முறைமை/ அவனது கால/ அனுபவ சூழல்களை பொறுத்தது. அர்த்தங்கள் நிர்ணயம் சிக்கலானது. இதற்கு மொழிக்கிடங்கு அதிகரித்தல் அவசியம். நவீன வாசிப்பு முறையில் உள் வாங்குதல், புரிந்து கொள்ளல் மிகக் கடுமையான செயலை முன் வைத்து செய்யப்படுவதாகும். படைப்பின் இயங்கியல் தன்மை வாசக இயங்கியலோடு சற்று ஏறத்தாழ ஒட்டி நெருக்கமான முறையில் செல்ல இலக்கிய சொல் கிடங்கு திறன், மொழி ஆளுமை, பரந்துபட்ட வாசிப்புத் திறன் மிக அவசியம். அதனால் சங்க இலக்கியப் பிரதிகளை நாம் உரை இல்லாமல் அணுகுவது மிகக் கடினமாகிறது.

பிரதியினை நாம் தேர்வு செய்யும் தன்மையினை பொறுத்து அதன் வெளிப்பாட்டுத் தன்மை அமையும். வாசிப்பில் பிரதியை தேர்ந்தெடுத்தல் மிக முக்கிய நிகழ்வாகிறது. ஒரு சிறுவன் பிரதியை தேர்ந்தெடுப்பதற்கும், தேர்ந்தெடுக்கும் முறைமைக்கும், மெத்த படித்த ஒருவர் தேர்ந்தெடுக்கும் முறைமைக்கும் வேறுபாடு உண்டு. ஏனெனில் இருவரும் ஒரே வகையான வாசிப்பு முறையை பின்பற்றுவதில்லை.

வாசிப்பு என்பது ஆழமாக கூர்ந்து உற்று நோக்கலின் மூலம் தொடர்பு செயல்பாட்டின் அடிப்படையில் அமைவதாகும். சி.மணியின் “அறைவெளி” எனும் பிரதியை வாசித்தால் மேலெழுந்தவாரியாக, எளிமையாக தெரியும். இப்பிரதி ஆழமான வாசிப்பின் மூலமாக வேறு பரிணாமம் கொடுக்கும். மேற்கே நடந்தேன்/ இடித்தது/ ஒருசுவர்/ கிழக்கே/ நடந்தேன்/ இடித்தது/ ஒருசுவர்/ வடக்கே நடந்தேன்/ இடித்தது/ ஒருசுவர் தெற்கே / நடந்தேன்/ இடித்தது/ ஒருசுவர்/ எம்பி குதித்தேன் இடித்தது/ ஒரு சுவர். இது என் வாசிப்பின் படி, நாம் நித்தம் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் அதன் சாத்தியப்பாடுகளையும், மனிதன் அவற்றிலிருந்து விடுபட்டு வேறு ஒன்றில் சிக்கிக் கொள்வதையும் பேசுகிறது. இதே பிரதி வேறு ஒரு வாசகன் பார்வையில் முற்றிலுமாக மாறுபடலாம்.

வாசிப்பு அகவயம் சார்ந்ததாகவும் அதன் வெளிப்பாட்டுத் தன்மை புறவயம் அல்லது சமூக சூழல்களிலிருந்து தோற்றம் பெறுவதாகவும் அமையலாம். ஒரே மாதிரியான அர்த்தப்படுத்தல் என்பது நிறுவனமயப்பட்ட அல்லது - அதிகாரச் சூழலினை நம் (வாசகன்) கீழ் கொண்டு வரச் செய்யும் முயற்சியாகும். சில சமயம் வாசிப்பு நிறுவனமயப்பட்ட செயலாகிப் போகும். காரணம் வாசிப்பவரின் நிறுவன அமைப்பு / மதிப்பீடுகள் / அழகியல் கூட்டமைப்பு / ஒழுக்க முறை விதிகள் சார்ந்தது. வாசிப்பு மறைத்தல்/ மௌனம்/ அழித்து எழுதுதல்/ போன்றவற்றை அடிப்படையாக கொண்டது. இது அறுதியிட்ட முடிவினை நமக்கு தராது.

பிரதிக்கு ஊடான இடைவெளிகளை கனகச்சிதமாக இட்டு நிரப்ப முடியாது. நிரப்புதலும், புரிதலும் சரியானதாகவோ, அல்லது தவறானதாகவோ இருக்கலாம். இதனை அறுதி புள்ளியிட்டு நிறுத்த முடியாது. மேலும் துல்லியமானதாகவோ அல்லது தீர்க்கமான முடிவினை உடையதாகவோ அமையாது. ஒவ்வொரு வாசிப்பும் முந்திய நிலையிலிருந்து மறுவடிவம்/ தோற்றம் பெறுகிறது. பிரதியின் கட்டமைப்பு பெறுத்து சற்று உளைச்சல் மிகுந்ததாகவோ, சிரமப்படுத்துவதாகவோ இருக்கும். (எ.கா- பிரமிள், அபி, நகுலன் படைப்புகள்) சராசரி தமிழ் வாசகமனம் சிக்கலுக்குரிய பிரதியை தேர்ந்தெடுப்பதில்லை. தமிழ் சமூக சூழலின் அமைப்பிற்கு ஒத்துழைக்கக் கூடிய, ஆமோதிக்கக் கூடிய ஒழுங்குபடுத்தப்பட்ட கருத்துத் தொகுப்பை ஆதரிக்கும். குறிகளின் தன்மையினை பொறுத்து படைப்பின் அர்த்தம் மாறுபடும். ஏனெனில் படைப்பு நேரடியாக வெளிப்படுத்துவதில்லை.

கருப்பு/ வளையல்காரி/ குனிந்து/ வளைந்து/ பெருக்கினாள்/ வாசல் சுத்தமாச்சு/ மனசு குப்பையாச்சு – கல்யாண்ஜி

பொட்டுடனே/ வீட்டோடு/ வந்த/ தங்கை/ பூக்காத/ செம்பருத்தியின்/ வெறும்/ கிளையின்/ மொய்த்து/ ஏமாறும்/ வண்ணத்து/ பூச்சி/ கண்டு/ அழுவாள் – கலாப்பிரியா

பழத்தின்/ அழகை பாராட்டுவர்/ உள்ளிலிருந்து/ குடையும் வண்டின்/ குடைச்சலை/ யாரறிவார் –அபி

முதல் பிரதி ஒரு விதவையைக் குறியீடாக / அடுத்தது வாழாவெட்டி என்பதன் குறியீடாக / மூன்றாவது பொதுவான பெண்களை குறியீடாக கொண்டுள்ளது எனலாம்.

இலக்கியம் வாசகன் ஒருவன் படிக்கும் போது தான் வாழ்வு பெறுகிறது என்கிறார் ‘ஸ்டான்லிபிள்’. வாசிப்பில் தான் பிரதி பற்றிய கருத்துக்கள் வெளிப்படுகின்றன. இங்கு மொழி பற்றிய கருத்துக்களும் சற்று குறிப்பிடத்தக்கது. மொழியை அமைப்பியல் அமைப்பாக பார்க்கிறது. பின் அமைப்பியல் மொழியை மீறிய ஆற்றலாக பார்க்கிறது பின் நவீனத்துவம் குறிகளின் விளையாட்டாக பார்க்கிறது. பின் அமைப்பியலின் சில கூறுகள் பின்நவீனத்துவத்திற்கும் பொருந்தி வருகின்றன. இது போன்ற கருத்துகள் இன்றும் சிக்கலுக்கும், விவாதத்திற்கும் உரியவை. மொழியும் குறிபற்றிய சிந்தனைகளும் மிகப்பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தின. இது வரைப்பட்ட திறனாய்வு முறைமை (மரபு வழிப்பட்ட) ஆசிரியனை மையப் பொருளாக்கி அவனுக்கு அதீசு முக்கியத்துவம் அளித்தது. ஆனால் நவீன திறனாய்வு முறை காத்திரமாக படைப்பாளியின் சுதந்திரத்தை வாசகனுக்கு மாற்றியது. படைப்பின் இயங்கு தளம் பற்றிய பல்வேறு கருத்துகள் வெளியிடப்பட்டன. “ஆசிரியன் இறந்து விட்டான்” என்ற கருத்தை ரோலண்ட் பார்த் வைத்தார். ஒரு குறிப்பிட்ட படைப்பாளியின் படைப்பு சார்ந்தது என்கிற நிலை மாறி படைப்பின் தன்மை முன்னெடுத்து செல்லப்பட்டது.

வாசிப்பின் இயங்கியல் தொடர்புபடுத்திப் புரிதல் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். இது கோட்பாட்டின் அடிப்படையில் பனுவல் இடை உறவு (Intertexuality) எனப்படுகிறது. ஒரு பிரதிக்கும் இன்னொரு பிரதிக்கும் இடையிலான உறவு பனுவலிமை உறவு எனப்படும். (எ.கா- அகலிகை பற்றிய பல்வேறு படைப்புகள் குறிப்பாக சாபவிமோசனம்)

படைப்பு மனச் செயல்பாடு என்பது மிகவும் மிகவும் சிக்கலுக்குரிய ஒன்றாகும். வெளிப்பாடு எளிமையான முறையில் அமையாது. ஏனெனில் படைப்பாளி மனம் புறவய சூழலினை பிரதிபலித்து அமையும். எளிமை என்ற பொதுக் கருத்தினை கொள்வது, வெறும் கருத்து தொகுப்பினை அங்கீகரிப்பதாகும். எந்த படைப்பும் பொதுமைபடுத்தப்பட்ட கூறு அல்லது கட்டமைப்பினை கொண்டு இருக்கும். இதே போன்ற இன்னொரு வேறுபட்ட இணை தொடர்பில் உள்ள தொடர்புகளை வேறுபடுத்தி புரிதலை வாசிப்பு என மேம்போக்காக வரையறை செய்யலாம்.

பெரும்பாலும் இது போன்ற மேற்கூறிய அடிப்படைகளை சராசரி தமிழ் வாசக மனம் ஏற்றுக் கொள்ள / புரிந்து கொள்ள மறுக்கிறது. நிறுவனமயப்பட்ட சந்தித்தலும், மரபின் ஊடாட்டமும் வாசக இயங்குதலின் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சிக்கலுக்குரியவைகள், குழப்பமானவைகளை தள்ளிப் போடுகின்றது. மேற்கண்ட அடிப்படையில் விஷயங்களைச் சந்திக்காவிடில் நவீன புரிதல்களை சந்திப்பதற்கும், எதிர் கொள்வதற்கும் சராசரி தமிழ் வாசகமனம் தடுமாற்றம் கொள்ளும் என்பது காத்திரமான உண்மை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com