Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
பிப்ரவரி 2007
நிதி வழங்கப்பட்டுள்ளது, ஆனால் நீதி..?
ராஜசேகரன்

நீண்ட, நெடிய காலத்திற்குப் பின் தமிழ்நாடு - கர்நாடக சிறப்பு அதிரடிப்படையினரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டிருக்கிறது. ‘வீரப்பனைத் தேடுகிறோம்’ எனும் போர்வையில் மலைவாழ் பழங்குடியினரை பாலியல் ரீதியாகவும் மனரீதியாகவும் சித்ரவதைக்கு உள்ளாக்கிய அதிரடிப் படையினரை சென்ற அதிமுக அரசு பரிசு மழையில் நனைய வைத்தது. ஒர்க்ஷாப் எனும் இடத்தில் வைத்து அப்பகுதி மக்களை சித்ரவதைக்குள்ளாக்கியது நாம் நாகரிக சமுதாயத்தில் தான் வாழ்கிறோமா என்றொரு கேள்வியை எழுப்பி நின்றது.

இத்தகையதொரு கொடூரமான நிகழ்வுகளை எதிர்த்து பல்வேறு மனித உரிமை அமைப்புகள், பழங்குடியினர் சங்கங்கள், பாதிக்கப்பட்ட மக்கள் இணைந்து தொடர்ந்து போராடியதன் விளைவாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் இழப்பீட்டுத் தொகையை அறிவித்துள்ளது. நேரடியாகக் களஆய்வு செய்த நீதிபதி சதாசிவம் கமிட்டியின் அறிக்கையும் தேசிய மனித உரிமை ஆணையத்தின் தற்போதைய இழப்பீடு அறிவிப்பும் பாதிக்கப்பட்ட மக்களை பொருளாதார ரீதியாக வேண்டுமானால் மீட்டுக் கொண்டு வரலாம். ஆனால் மனதில் படிந்திருக்கும் ரணங்களை எப்படி குணப்படுத்தும். அதிரடிப்படையினரால் 1000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருக்க வெறும் 89 பேருக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டிருக்கிறது. வரும் காலங்களில் மீதமுள்ளவர்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும் எனும் அறிவிப்பு மட்டுமே நமக்கு ஆறுதலாய் இருக்கிறது. இந்த ஆறுதல் வரிகளுடன் தேசிய மனித உரிமை ஆணையத்தின் இழப்பீட்டுத் தொகை அறிவிப்பு இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.

Tribes செயல்முறை ஆணைகள்:

1. சந்தனக் கடத்தல் வீரப்பனை பிடிப்பதற்காக கர்நாடகா மற்றும் தமிழ்நாடு அரசுகள் இணைந்து கூட்டு சிறப்பு அதிரடிப்படையை உருவாக்கினர். தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம், சோக்கோ அறக் கட்டளை மற்றும் பாமக.வின் டாக்டர் எஸ். ராமதாஸ் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி. டாக்டர். டி.எம். சந்திரசேகர், கோவிந்தம்மா, பொன்னுசாமி போன்ற தனியார்களிடமிருந்து இரு மாநிலஅரசுகளின் எல்லையிலுள்ள பழங்குடி மற்றும் கிராம மக்களை கூட்டு சிறப்பு அதிரடிப் படையினர் பெருமளவில் கொடுமைபடுத்தியதாக மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்படுவதாகவும் புகார்கள் வந்தன.

2. அந்தப் புகார்களை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட ஆணையம், ஆணையத்தின் விசாரணைப் பிரிவுத் தலைவர் அளித்த அறிக்கையின்பேரிலும் ஒரு முழுமையான விசாரணை தேவை என்று கருதியது. 18.06.1999ஆம் தேதி தனது செயல் முறைகளில், “நீதித் துறையிலிருந்தும் காவல் துறையின் உயர் பொறுப்பில் இருந்த ஒருவரையும் கொண்டு ஒரு குழு அமைத்து புகார்களில் கூறப்பட்டுள்ள விசயங்களைக் குறித்தும் அதன் பல்வேறு அம்சங்கள் குறித்தும் விசாரிக்க வேண்டும். மேலும், கூறப்பட்டுள்ள புகார்கள் உண்மையெனில் அதனை சரிசெய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அந்தக் குழு ஆணையத்திற்குப் பரிந்துரைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டனர்.

3. 1999 ஜூன் 20ம் தேதி கர்நாடக உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான ஏ.ஜே. சதாசிவா தலைவராகவும் மத்தியப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் இயக்குர் சி.வி. நரசிம்மனை உறுப்பினராகவும் கொண்ட இருவர் குழுவை அமைத்து இப்பொருள் குறித்து விசாரித்து ஆணையத்திற்கு பரிந்துரைகளை வழங்குமாறு பணித்தனர். அக்குழு 15-07-1999ஆம் தேதி பெங்களூரில் தனது முதல் கூட்டத்தை நடத்தி விசாரணைக்கான வழிமுறைகளைத் தீர்மானித்தது. தமிழ்நாட்டில் கோபிச் செட்டிப்பாளையம், குளத்தூர் ஆகிய ஊர்களிலும், கர்நாடகாவில் சாம்ராஜ நகர், மைசூர், பெங்களூர் மற்றும் மாதேஸ்வரம் ஆகிய ஊர்களிலும் விசாரணை நடத்தியது. பாதிக்கப்பட்ட 193 பேர்களை உள்ளடக்கி மொத்தம் 243 பேர்களை விசாரித்தனர். சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் இருக்க அவர்களின் வாக்குமூலங்கள் பதியப்பட்டன. சம்பந்தப்பட்டவர்களுக்கு சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்யும் வாய்ப்பும் தரப்பட்டது.

4. கூட்டு அதிரடிப்படையினரின் அத்துமீறல்களால் பாதிக்கப்பட்டதாகச் சொல்கின்ற பலர் குழுவின் முன் சாட்சியமளிக்க அனுமதி கோரினர். கர்நாடக மற்றும் தமிழகத்தின் காவல்துறைத் தலைவர்கள் இக்குழுவின் முன் நடக்கின்ற விசாரணையின் வரம்புகள் குறித்து ஆட்சேபம் தெரிவித்தனர். இது குறித்து, ஆராய்ந்த ஆணையம் 13-03-2000 அன்று வழங்கிய உத்தரவில் கீழ்க்கண்டவாறு கூறியது: “நீதிபதி. சதாசிவா தலைமையிலான குழுவின் முன்பு விசாரணையின் வரம்பு குறித்து முரண்பட்ட நிலைப்பாடுகள் தோன்றியுள்ள நிலையில், இக்குழு தன்முன் வருகின்ற எந்த சாட்சியத்தையும் நிராகரிக்காமல் ஒருவேளை விசாரணையின் வரம்புகளுக்கே முழுமையாக சம்பந்தப்படாத பிரச்சனையாக இருந்தாலன்றி அனைத்தையும் பதிவு செய்து கொள்ள வேண்டும். எதிர்தரப்பு கருத்துக்களையும் பதிவுசெய்து கொள்ள வேண்டும். சுருக்கமாக சொல்வதானால், சிவில் நீதிமன்றம் சாட்சியத்தை பதிவு செய்வதற்காக ஆணையம் அமைக்கின்றபொழுது அதனுடைய ஏற்புத் தன்மை குறித்து எழுகின்ற ஆட்சேபங்களையும் குறித்துக் கொண்டு பின் அதன் ஏற்புத் தன்மை குறித்து இருதரப்பினரையும் விசாரித்து நீதிமன்றம் தீர்மானிப்பது போல ஒத்த நடைமுறையையே மேற்கண்ட விசாரணைக் குழுவும் கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறு அக்குழுவின் முன் எழுப்பிய ஆட்சேபங்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கதா என்பதை நீதிபதி சதாசிவா குழு அறிக்கையும், அது பதிவு செய்த வாக்குமூலங்களையும் பெற்றபின்பு தேசிய ஆணையம் முடிவு செய்யும்” என்று கூறியிருந்தனர்.

5. நீதிபதி சதாசிவா குழு தனது விசாரணையை தேசிய மனித உரிமை ஆணையத்தின் முன்பு வந்த வழக்குகளோடு சுருக்கிக் கொள்ளவில்லை. மாறாக, மனித உரிமைகள் மீறப்பட்ட அனைத்து நபர்களது பிரச்சனைகளையும் எடுத்துக் கொண்டது.

6. நீதிபதி சதாசிவா குழு அளித்த அறிக்கையை பரிசீலித்த ஆணையம் இந்த அறிக்கையை ஏற்றுக் கொள்வதென முடிவு செய்தது. தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு அனுப்பப்பட்ட வழக்குகளை மட்டுமே தனது விசாரணை வரம்பிற்குள் அக்குழு எடுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற இருமாநில அரசுகளின் வாதத்தை ஆணையம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. குடிமக்களின் அரிதான மனித உரிமைகளை பாதுகாப்பதே ஆணையத்தின் முக்கிய நோக்கமாகும். ஆணையத்தை அணுகாத மற்ற சிலரின் மனித உரிமைகள் மீறப்பட்டிருக்கிறது என ஏற்றுக் கொள்ளத்தக்க சாட்சிகளின் மூலம் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியை தலைவராகக் கொண்ட குழு கண்டுணர்ந்து கூறும்பொழுது அம்மீறல்கள் குறித்து ஆணையம் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் இருக்க எந்தக் காரணங்களும் இல்லை. விசாரணையானது 15 முதல் 20 பேர்களுக்குள் சுருங்கிவிடுமானால் அது மிகப் பெரிய நீதிமறுப்பாகும். சிறப்பு கூட்டு அதிரடிப்படையால் வீரப்பனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்ட பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் மற்றும் பழங்குடியினரது மனித உரிமைகளை மறுப்பதுமாகும்.

7. 23.02.2004ஆம் தேதி ஆணையத்தின் உத்தரவுப்படி நீதிபதி சதாசிவா குழுவின் அறிக்கை கர்நாடகா மற்றும் தமிழ்நாடு அரசுகளின் விமர்சனங்களைப் பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆணையத்தின் பரிந்துரைகளின்படி பாதிக்கப்பட்டவர்கள் இறந்து போயிருந்தார்கள் எனில் அவர்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கும் கொடுப்பதற்கென்றே தங்களது மாநில அரசுகள் முறையே 5 கோடி ரூபாய் ஒதுக்கி வைத்திருப்பதாக இரு மாநில அரசுகளும் தெரிவித்தன. தமிழ்நாடு தலைமைச் செயலாளர் பாதிக்கப்பட்டவர்களில் ஆணையம் பரிந்துரைத்த 38 பேர்களில் 12 பேருக்கு ஏற்கனவே ரூ. 20 லட்சம் கொடுத்துவிட்டதாக தெரிவித்தார். தமிழக தலைமைச் செயலாளர். எல்.கே. திரிபாதியின் கர்நாடக கூடுதல் தலைமைச் செயலாளர். ஏ.கே. அகர்வாலும் ஆணையத்தின் முன்பு தங்களது இரு மாநில அரசுகளும் இடைக்கால இழப்பீடு குறித்து ஆணையத்தின் முடிவுகள் மற்றும் பரிந்துரைகளை நிறைவேற்ற தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.

8. பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் இறந்தவர்களின் உறவினர்களுக்கு உடனடி இடைக்கால இழப்பீட்டை பரிந்துரைப்பதில் ஆணையம் நியாயமான வழிமுறைகளை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் கூட்டு சிறப்பு அதிரடிப்படை செயல்பட வேண்டியுள்ளது, நடைமுறை எதார்த்தங்கள், வாழ்க்கைச் செலவு, கால இடைவெளி, பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதிப்பினை விளைவித்த கால அவகாசம் மற்றும் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரும் அனுபவித்த பின் விளைவுகள் எல்லாவற்றையுமே கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

9. மிகக் கடினமான சூழ்நிலைகளில் தைரியத்துடனும் அர்ப்பணிப்புடனும் கூட்டு சிறப்பு அதிரடிப் படையினர் செயல்பட வேண்டியிருந்தது என்பதில் ஐயம் இல்லை. அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த பணி நிச்சயமாக மிகப்பெரிய பொறுப்புதான் ஆனால், குடிமக்களின் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும். எந்த வகையிலும், கூட்டு சிறப்பு அதிரடிப்படையின் செயல்பாடுகளுக்கு தொடர்பு இல்லாத வன்கொடுமைகளை நியாயப்படுத்த முடியாது. கூட்டு சிறப்பு அதிரடிப் படையினர் திறம்பட செயல்பட்டிருக்க வேண்டும், கொடூரமாக அல்ல. மோதல்களில் 66 நபர்கள் கொல்லப்பட்டனர் என்பது பதிவு செய்யப்பட்ட உண்மை. சந்தேகத்திற்கிடமான மோதல்களில் 36 நபர்கள் உயிரிழந்தனர் என்று நீதியரசர் சதாசிவா குழு கண்டறிந்துள்ளது. மனித உயிர் விலை மதிப்பற்றது, சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறையில் அல்லாது ஒரு நபருக்கும் அதனை எடுப்பதற்கு சட்டத்தின் கீழ் அனுமதி கிடையாது. சந்தேகத்திற்கிடமான மோதல்களில் கொல்லப்பட்டோர் அனைவரும் பழங்குடியினர் அல்லது ஏழைத் தொழிலாளிகள். அவர்கள் சாவுகள் அவர்களது குடும்பங்களை பட்டினியின் விளிம்பிற்கு கொண்டு வந்திருக்கும். ஒருவரின் சாவு அவரை நம்பியிருந்த பலருக்கு துன்பத்தையும் துயரத்தையும் கொடுத்திருக்கும். ஆதலால், நீதியரசர் சதாசிவா குழு அறிக்கையின் இணைப்பு ஐஏ இல் வரிசை எண் 54 முதல் 89 வரை காணப்படும் சந்தேகத்திற்கிடமான மோதல்களில் கொல்லப்பட்ட நபர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் இடைக்கால நிவாரணமாக அளிப்பது சரியாக இருக்கும் என்று ஆணையம் பரிந்துரை செய்கிறது.

10. விசாரணை குழுவால் முக்கிய சாட்சி 155 ஆக விசாரிக்கப்பட்டு, விசாரணைக் குழு அறிக்கையில் ராஜப்பன் என்பவர் மாதேஸ்வரன் மலையில் காவலில் வைக்கப்பட்டது மட்டுமின்றி, அடையாளம் தெரியாத தமிழ்நாடு கூட்டு சிறப்பு அதிரடிப் படையினரின் வன்கொடுமைகளின் காரணமாக தனது மனைவியையும் இழந்துள்ளார். அவருக்கு ஏற்பட்ட இழப்பிற்காகவும் அவரது மனைவியின் இழப்பிற்காகவும் இடைக்கால இழப்பீடாக ரூ. 5 லட்சம் கிடைக்க வேண்டும்.

11. வன்புணர்ச்சி சமூகத்திற்கு எதிரான கொடும் குற்றமாகும். இது பாதிக்கப்படுபவரின் உடல், உள்ளம் மற்றும் ஆன்மாவின் தூய்மையை பாதித்து அவரது வாழ்க்கையில் அழிக்க முடியாத காயத்தை விட்டுச் செல்கிறது. அவரது உற்றார் உறவினராலேயே அப்பெண் பரிகசிக்கப்படுகிறார். சில சமயங்களில் சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்படுகிறாள். வேறுவிதமாகச் சொன்னால், வன்புணர்ச்சி பாதிக்கப்படுபவரின் சமூக வாழ்வின் சாவில் முடிகிறது. ஆதலால், சந்தேகத்திற்கிடமான மோதல்களில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு கொடுக்கப்படும் இடைக்கால இழப்பீட்டிற்கு ஈடான தொகை பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டவர்களுக்கும் கிடைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர் வெவ்வேறு இடங்களுக்கு கூட்டிச் செல்லப்பட்டு காவல்துறை அதிகாரியால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டார் என்று இங்கு விசாரணை குழு கண்டறிந்துள்ளது. ஆதலால் இவர் மீது நிகழ்த்தப்பட்ட பாதிப்பு நீண்ட நேரம் தொடர்ந்திருக்க கூடும் என்பதனை உறுதியாகவே கருத முடியும்.

12. விசாரணை அறிக்கையின் முருகன் என்பவர் சிறப்பு அதிரடிப் படையினரால் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அதற்குப் பின் அவர் வீடு திரும்பவில்லை என்று நீதிபதி சதாசிவா விசாரணைக் குழு கண்டறிந்துள்ளது. அவர் இறந்திருப்பார் என்று சட்டரீதியாக கருதப்பட்டாலும் அவர் திரும்பக் கூடும் என்ற நம்பிக்கை இன்றும் எஞ்சியிருக்கக் கூடும். ஆதலால், அவரது குடும்பத்தினருக்கு இடைக்கால இழப்பீடாக ரூ.3.25 லட்சம் வழங்குமாறு பரிந்துரை செய்வது சரியாக இருக்கும் என்று ஆணையம் கருதுகிறது.

13. நீதியரசர் சதாசிவா விசாரணைக் குழுவின் கண்டுபிடிப்புகளின்படி மூன்று பெண்கள், 15 நாட்கள் காவலில் வைக்கப்பட்டு, நிர்வாணமாக்கப்பட்டு, தாக்கப்பட்டு, அவர்களின் உடலின் மீது மின்சாரம் பாய்ச்சப்பட்டது. நிர்வாணப்படுத்துவது வன்புணர்ச்சியை விடக் குறைவான குற்றமாக இருக்கலாம். ஆனால் அது அப்பெண்ணுக்கு நிச்சயமாக சொல்லவொண்ணா துயரையும் அவமானத்தையும் தருகிறது. ஆதலால், இந்த மூன்று பெண்களுக்கு தலா ரூ. 2 இலட்சம் இடைக்கால இழப்பீடு கிடைக்க வேண்டும்.

14. வீரப்பன் இருக்கும் இடம் குறித்து தகவல் சேகரிப்பதற்காக பல நபர்களை கூட்டு சிறப்பு அதிரடிப் படையினர் விசாரணை செய்ய வேண்டியிருந்தது என்பதில் ஐயமில்லை. நிலவிய சூழலுக்கு ஏற்ப நீட்டிக்கப்பட்ட விசாரணையின் போது நபர்களை நடமாடத் தடை செய்து காவலில் வைத்தது புரிந்து கொள்ளக்கூடியதே என்றாலும், விசாரணையின் போது மனித உரிமைகளை அப்பட்டமாக மீறிக் கொண்டு சிறப்பு அதிரடிப்படையினர் நிகழ்த்திய அத்துமீறல்களை நியாயப்படுத்த முடியாது. ஆதலால், சிறப்பு அதிரடிப் படையினரால் சட்ட விரோதமாக காவலில் வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட நபர்களுக்கு, அவர்கள் காவலில் வைக்கப்பட்ட காலம் மற்றும் அவர்கள் உட்படுத்தப்பட்ட சித்திரவதை அவர்களுக்கு ஏற்பட்ட ஊனம் ஆகியவற்றின் அடிப்படையில், ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ. 2.5 லட்சம் வரை இடைக்கால இழப்பீடு அளிக்கப்பட வேண்டும்.

15. தடா வழக்குகளில் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் பல பேர் தங்களுடைய கைதுக்கு முன்பு கூட்டு சிறப்பு அதிரடிப்படையினரால் முறையற்ற காவலில் வைக்கப்பட்டு இருந்தனர் என்று நீதிபதி சதாசிவா விசாரணைக் குழு கண்டறிந்துள்ளது. பலபேர் ஒரு மாதத்திற்கு மேலாக நிர்வாணமாக்கப்பட்டு வரைமுறையின்றி தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டு மின் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர். சிலர் 30 நாட்களாக அடைத்து வைக்கப்பட்டு தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் வரை சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். ஆணையத்தின் கருத்துப்படி காவலில் 10 நாள் வரை இருந்தவர்களுக்கு ரூ. 1 லட்சமும் 11 நாள் முதல் 20 நாள் வரை இருந்தவர்களுக்கு ரூ. 1.25 லட்சமும், 20 முதல் 30 நாட்கள் வரை இருந்தவர்களுக்கு ரூ. 1.5 லட்சமும் வழங்க வேண்டும்.

16. சீராய்வுக் குழுவால் பரிசீலிக்கப்படாததால் பல வருடங்களாக தடா சட்டத்தின்கீழ் சிறையிலிருந்து பின்னர் விடுவிக்கப்பட்டவர்களும் இடைக்கால நிவாரணம் பெற தகுதி உடையவர்களாவர். ஏனெனில் விசாரணைக்குழு கூறுவது போல அவர்கள் மீது வழக்குத் தொடுப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அப்படிப்பட்டவர்களுக்கு ரூபாய் 2 லட்சம் இடைக்கால இழப்பீடாக தர இந்த ஆணையம் பரிந்துரைக்கிறது.

17. இறந்து போனவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு அவர்களது பெயர்களுக்கெதிராக குறிப்பிட்டுள்ள தொகையை உடனடி இடைக்கால நிவாரணமாக வழங்க இவ்வாணையம் பரிந்துரைக்கின்றது.

18. 07-12-2006இல் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர், ஆணையத்தில் கூறும்போது, வீரப்பனின் உறவினரின் கூட்டாளியான காமராசுக்கு இழப்பீடு தரவியலாது என்றார். சதாசிவா குழு அறிக்கையின் 5வது இணைப்பில் அவரது பெயர் காணப்படுகிறது. காமராசு சந்தேகத்திற்கிடமான எதிர்தாக்குதலில் இருபுறமும் இருந்து சுடப்பட்டிருக்கிறார் என கருத்துக் கூறியுள்ளனர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 21வது பிரிவு வலியுறுத்துகின்ற, சட்டவழி முறைகளின்படியல்லாமல் வேறு எந்த வகையிலும் அவ்வுரிமை (உயிர் வாழும் உரிமை) பறிக்கப்படுதல் கூடாது. மனிதாபிமான அடிப்படையில் இப்பிரச்சினைகளை அணுக வேண்டுமென இவ்வாணையம் கருதுகிறது. பொய்யான எதிர் தாக்குதலில் அவ்வுரிமை பறிக்கப்பட்டிருக்குமானால், காமராசின் நெருங்கிய உறவில் உள்ளவர், அவரைப் போல் பாதிக்கப்பட்டோருக்கு கிடைக்கும் உடனடி இடைக்கால நிவாரணம் பெற உறுதியாக உரிமையுடைவர்களாவர்.

NHRC 19. தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் 7.12.2006 அன்று ஆணையத்தின் முன்பு கூறுகையில் ஏற்கனவே பாதிக்கப்பட்டோர் / இறந்தவர்களின் உறவினர்கள் என 12 பேருக்கு இருபது லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார். தமிழ்நாடு அரசால் ஏற்கனவே கொடுக்கப்பட்ட தொகை, இவ்வாணையம் பரிந்துரைத்துள்ள இடைக்கால இழப்பீட்டுத் தொகையில் சரிசெய்து (கழித்துக்) கொள்ளப்பட வேண்டும்.

20. கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களில் இருந்து எடுக்கப்பட்டவர்கள்தான் கூட்டு அதிரடிப்படையில் பணிபுரிந்தனர். கூட்டு அதிரடிப்படை ஒரே அமைப்பு என்பதால் அதனுடைய பணியாளர்கள் புரிந்த அத்துமீறல்களுக்கு முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும். எனினும், இதிலுள்ள நடைமுறை தாமதங்கள், சிக்கல்களையும் ஆணையம் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் விட்டுவிட முடியாது. எனவே இடைக்கால இழப்பீட்டுக்கான தொகையை இரு மாநிலங்களும் பகிர்ந்து ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதே சரியாக இருக்கும். அதுபோல இடைக்கால இழப்பீட்டைப் பெற பாதிக்கப்பட்டவர்களை வேறு மாநிலத்திற்குப் போகும்படி சொல்வதும் சரியாக இருக்காது. எனவே, பாதிக்கப்பட்டவர்கள் எங்கு வசிக்கின்றார்களோ அந்த மாநில அரசிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். வேறு வகையில் கூறுவதானால் தமிழ்நாட்டில் வசிக்கக்கூடிய பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு அரசும், கர்நாடகாவில் வசிப்பவர்களுக்கு கர்நாடக அரசும் இடைக்கால இழப்பீடு வழங்கும்.

21. இவ்வழக்கின் வித்தியாசமான பொருண்மை மற்றும் சூழ்நிலைகளே, இவ்வாணையம் இடைக்கால இழப்பீடு வழங்கக் காரணங்களாகும்.

22. முடிக்கும் தருவாயில், இது போன்ற செயல்களில் காவல் துறையினரை ஈடுபடுத்தும்போது அவர்களுடைய செயல்பாடுகளில் குறிப்பாக பொதுமக்களோடு தொடர்பு கொள்ளுமிடத்து கடுமையான கட்டுப்பாட்டை உறுதிசெய்ய வேண்டிய தேவையை இவ்வாணையம் வலியுறுத்திக் கூற விரும்புகிறது.

23. தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரும், கர்நாடக அரசின் கூடுதலை தலைமைச் செயலாளரும் ஆணையத்தின் முன்பு 7-12-2006இல் கூறும்போது வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடைக்கால இழப்பீடு வழங்குவதில் ஆணையத்தின் முடிவுகள் / பரிந்துரைகளை மதித்து செயல்படுத்தத் தயாராக இருப்பதாகத் தங்கள் அரசுகளின் கருத்தினை தெரிவித்தனர். ஆணையத்தின் முன்பு 7.12.2006 இல் அவர்கள் கூறியுள்ளபடி மேலே பரிந்துரைக்கப்பட்டுள்ள இடைக்கால இழப்பீட்டை பாதிக்கப்பட்டவர்களுக்கு / பாதிப்பில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு நான்கு வாரங்களுக்குள் செலுத்திட வேண்டும். அவ்வாறு பணம் கொடுக்கப்பட்டதற்கான சான்றுகளை ஆறு வாரத்தில் ஆணையத்திற்கு கொடுக்க வேண்டும்.

24. பாதிப்புக்குள்ளான பழங்குடி மக்கள் பகுதி மற்றும் எல்லைப்புறங்களில் சாலை அமைத்தல், பள்ளிகள், மருத்துவமனைகளை நிறுவுதல் போன்ற வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்துவது குறித்து, இரு மாநில அரசுகளும் அவர்கள் விரும்புகின்ற வகையில் பரிசீலனை செய்யலாகும்.

இறுதியாக...

வழங்கப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகை பாதிக்கப்பட்ட நபர்களைப் பொறுத்தவரை 10%க்கும் குறைவே. எனவே, இது குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் ஆழ்ந்து யோசிக்க வேண்டும். சித்ரவதையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வாழ்வாதாரமான நிதி ஒரு வகையில் பயன்பட்டாலும் அவர்களது மனங்களில் ஆழமாய் படிந்து போயுள்ள மன உளைச்சலைத் தீர்க்க சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் உடனடி மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுதான் அவர்களை மீண்டும் யதார்த்தமான வாழ்க்கை முறைக்குக் கொண்டு செல்லும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com