Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
பிப்ரவரி 2007
“எல்லோரது நிகழ்ச்சி நிரலிலும் இருக்கும் இந்தியா”: நிக்கோலஸ் பி.டிர்க்ஸ்
தமிழில்: நதி ஆச்சரியா

டாக்டர் அம்பேத்கர் தன் முனைவர் பட்டப்படிப்பை செவ்வனே முடிக்கக் களம் அமைத்துக் கொடுத்தது கொலம்பியா பல்கலைக் கழகம். அம்பேத்கரை முன்னாள் மாணவர் என்று சொல்லிப் பெருமைப்படும் அப்பல்கலைக்கழகத்தில் மானிடவியல் மற்றும் வரலாற்றியல் பேராசிரியராகப் பணியாற்றும் நிக்கோலஸ் பி.டிர்க்ஸ் தென்னிந்தியா பற்றி குறிப்பிடத்தக்க ஆய்வுகள் நடத்தி உள்ளார். அவருடன் கல்பனா சர்மா ‘தி ஹிந்து’ பத்திரிகைக்கு வேண்டி நிகழ்த்திய உரையாடல் நன்றியுடன் தமிழ்ப்படுத்தப்பட்டுள்ளது.

Nicholas கேள்வி: இந்தியாவில் சாதி பற்றிய தங்களது படைப்புகள், குறிப்பாக ‘உள்ளத்தின் சாதிகள்: காலனியமும் நவீன இந்தியாவின் உருவாக்கமும்’ (Casts of Mind: Colonialism and the making of modern India) நூல் இன்றைக்கு இந்தியாவில் நிலவும் சூழலுக்கும் பொருத்தமாக உள்ளது. உங்களது கவனத்தை இப்பிரச்சனையின் பால் ஈர்க்க காரணமாக அமைந்தது என்ன?

என்னுடைய முந்தைய நூல் ‘பொக்கை மகுடம்: ஓர் இந்திய வேந்தனின் இன வரலாறு’ (The Hollow Crown: Ethnohistory of an indian kingdom) என்பதாகும். அது தமிழ் நாட்டில் உள்ள புதுக்கோட்டை சிற்றரசைப் பற்றியது. தமிழ்நாட்டில் ‘அரசாளுமை’ என்ற நிறுவனம் எப்படி செயல்பட்டது என்பது குறித்தும், அரசியல் அமைப்புக்கும் சாதிக்கும் இடையே நிலவிய உறவு குறித்தும் நான் அறிந்து கொள்ள விரும்பினேன். புதுக்கோட்டையில் அரச குடும்பம் கள்ளர் சமூகத்திலிருந்து உருவானது. பிரிட்டிஷ் ஆளுகையின் கீழ் பெரும்பாலும் கள்ளர் சமூகத்தினர் குற்றப்பரம் பரையினராகவே கருதப்பட்டனர். ஆனால் புதுக்கோட்டையில் அவர்கள் குற்றப் பரம்பரையினர் அல்ல; மாறாக ஆட்சி செய்யும் சமூகமாக, அனைத்து வித மரியாதைகளும் பெறுபவர்களாகவே இருந்துள்ளனர். அதோடு கூட, விஜய நகரப் பேரரசின் எச்சங்கள், மதுரை மற்றும் திருச்சியை ஆண்ட நாயக்கர்கள், ஆற்காடு நவாப், கடைசியாக பிரிட்டிஷ் ஆகியோரோடு முக்கியமான அரசியல் பரிமாற்றங்கள் வைத்திருந்தனர். 18-ம் நூற்றாண்டின் இறுதியில் பிரிட்டிஷ்காரர்களுக்கு போக்குவரத்து உதவியும், இராணுவ உதவியும் அளித்ததன் காரணமாகவே புதுக்கோட்டை ஒரு சிற்றரசாக மாற முடிந்தது. ஆதாரங்கள் பலமாக உள்ளன என்பதனால், நவீன காலத்துக்கு முன்பு சாதி அமைப்பு எப்படி இயங்கியது என்றும், அரசியல் மற்றும் சமூக அமைப்புகள் தம்மிடையே நடந்த உறவாடல்கள் பற்றியும் என்னால் பார்க்க முடிந்தது.

பிரிட்டிஷ் ஆளுகையின் போதும், அதற்குப் பிறகும் எழுதப்பட்டக் குறிப்புகளில், “சாதி என்பது சடங்குகளாலும் சமயத்தாலும் வரையறுக்கப்படுகிற சமூக அமைப்பு” என்று சொல்லப்படுவது என்னைச் சிந்திக்க வைத்தது. ஆதாரபூர்வமாக வலுமிக்க அரசியல் மரபுகள் நிலவியிருந்தது பற்றியும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது என்னுடைய வாதம்.

காலின் மெக்கின்சி என்ற ஸ்காட் நாட்டவர் தொகுத்து வைத்துள்ள, 18-ம் நூற்றாண்டிலிருந்து பதிவு செய்யப்பட்ட உள்ளூர் வரலாற்றுக் குறிப்புகளையும் பயன்படுத்தி உள்ளேன். அந்தக் குறிப்புகளின் பெரும்பகுதி தற்போதும் சென்னைப் பல்கலைக் கழகம் நூலகத்தில் உள்ளது. பிரிட்டிஷ்காரர்கள் உள்ளூர் நூலகங்களே கிடையாது என்றும், வரலாறு எழுதும் மரபே கிடையாது என்றும் சொல்வார்கள். நான் தமிழ்ப்புலமை மிக்கவர்களோடுச் சேர்ந்து பணியாற்றியதால், கடின முயற்சி செய்து ஓலைச் சுவடிகளை வாசித்தறிய கற்றுக் கொண்டேன். என்னால் விரிவான முறையில் வரலாற்றுக் குறிப்புகளைப் பயன்படுத்த முடிந்ததற்கு அது ஒரு காரணம்.

‘பொக்கை மகுடம்’ எழுதிய பிறகு, பிரிட்டிஷ் காலனிய ஆட்சியினால் சாதி அமைப்பில் பெரும் மாறுதல் ஏற்பட்டு விட்டது என்ற முடிவுக்கு வந்தேன். எனவே ‘உள்ளத்தின் சாதிகள்’ என்பது 1800 முதல் 1947 வரை என்ன நடந்தது என்பது பற்றித் தான்; என்றாலும் இடஒதுக்கீடு குறித்தப் பிரச்சினைகளைப் பற்றிக் கொண்டு அது 1991 வரை நீண்டு விட்டது. என்னுடைய முதன்மை ஆர்வம், மக்கள் தொகை கணக்கு, காலனிய அரசு வெளியீடுகள், காலனியக் குறிப்பேடுகள், சாதியின் காலனிய (கால) சமூகவியல் என்பது பற்றியும், அவை 20-ம் நூற்றாண்டில் எப்படி பிரிட்டிஷ்காரர்கள் ஒரு பக்கத்திலும்; அம்பேத்கர், பெரியார், காந்தி முதலானோர் வேறு பக்கங்களிலும் நின்று பொழிப்புரை கூறத் தோதுவாக அமைந்தன என்பது பற்றியும்தான்.

கேள்வி: ‘கைர்லாஞ்சிப் படுகொலைகள்’ போன்ற நிகழ்வுகளால் சாதிப்பிரச்சினை மீண்டும் முன்பந்திக்கு வந்து விட்டது. பல்லாண்டு காலமாக மனவோட்டத்தை மாற்றியமைக்க முயற்சிகள் மேற்கொண்ட பின்னரும், சாதிச் சார்பு நிலை அதிகப்படியான வன்மத்தோடு வெளிப்படுகிறதே என்பதுதான் பலரையும் கவலைப்பட வைப்பதாக உள்ளது. இல்லையா?

என்னுடைய எழுத்தில் நான் சொல்ல விழைவது என்னவென்றால், காலனிய ஆளுகையின் போது சாதிச் சார்பு மிக மோசமான கதியை எட்டி விட்டது என்பதுதான். ஏன் சொல்கிறேன் என்றால், வரலாற்று ஆதாரங்களைப் பார்த்தால், சில சாதிக் தகராறுகள் 19-ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆளுகையின் கீழ் சாவு மணிகளாக ஒலித்தன. இவ்வகையில் பட்ட சார்புநிலைகள் தழைத்தோங்கி வாழ்வது என்பது இடத்துக்கு இடம் வேறுபடலாம். ஆனால் இந்தியாவின் தற்கால அரசியல் பார்வையாளராக யார் இருந்தாலும் அவர்களுக்கு, எவ்வளவுதான் தாராள மயமாக்கல் வந்தாலும் இந்த நிலைமை மாறிவிடப்போவதில்லை என்பது தெளிவாகத் தெரிந்து விடும். ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் எதையும் மாற்றிவிடும் என்று தோன்றவில்லை. எப்போது பொருளாதாரத்தில் பெரும் வளர்ச்சி ஏற்படுகிறதோ அப்போது மக்களின் கவனம் அதன் மேல் குவிகிறது என்று நினைக்கிறேன். வேளாண்துறை வளர்ச்சி அடையவில்லை என்பது நமக்குத் தெரியும்; இப்போதும் நகரத்தில் வசிக்கும் மக்கள் மலிவான கூலித் தொழிலாளர்களை நம்பித்தான் வாழ முடிகிறது என்பதும் நமக்குத் தெரியும். எனவே ‘இந்தியாப் பொருளாதாரத்தின் உலகளாவிய வெற்றி’ என்பதன் பின்னணியில் சாதியின் சமூக உறவுகள் மறைந்து கிடக்கின்றன என்பது நாம் அறிந்ததே.

கேள்வி: தங்களுடைய புதிய நூல் பிரிட்டிஷ் பேரரசை மையப்படுத்தி இருந்தாலும் தற்காலத்தின் அதிர்வலைகளையும் கேட்க முடிகிறது. நீங்கள் ஊழல் என்பது பேரரசின் அமைப்பியலின் இயல்பு என்கிறீர்கள். அது உலகின் ‘புதிய பேரரசுகளுக்கும்’ பொருந்துவது போல் உள்ளது. எடுத்துக்காட்டாக என்ரானைப் (நுசூசுடீசூ) பாருங்கள்....?

ஆம்; அதோடு கூட ஹாலி பர்ட்டன் (இன்னொரு ஏமாற்று நிறுவனம்). என்னுடைய புதிய நூலான ‘பேரரசின் ஊழல்: இந்தியாவும், ஏகாதிபத்திய பிரிட்டனின் உருவாக்கமும்’ (The Scandal of empire: India and the creation of Imperial Britain) என்பது 18-ம் நூற்றாண்டில் பிரிட்டீஷ் இந்தியாவை வெற்றி கொண்டதையும், வாரன் ஹேஸ்டிங்கின் வழக்கு விசாரணையையும் பற்றியது. அது ஆற்காடு நாவாபின் மரணம் பற்றியும் சொல்கிறது. கிழக்கிந்தியக் கம்பெனியின் பிரிட்டிஷ் பணியாளர்கள் பலர், கடன் வழங்குவதன் மூலமாகவே தென்இந்தியாவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். நவாபுக்கு கடும் வட்டிக்கு கடன் வழங்கி, அவர் அதை ஒருபோதும் திரும்பச் செலுத்த முடியாத நிலையை ஏற்படுத்தினர். இதன் காரணமாக அவர்களுக்கு நவாபின் நீதிமன்றத்தை எளிதாக அணுகவும், அவருடைய நிலங்களுக்கு உரிமை கொண்டாடவும், நவாபுக்குப் பதிலாக வரி வசூலில் இறங்கவும், போர்களில் ஈடுபட நவாபை சட்டரீதியாகத் தூண்டவும் முடிந்தது. நவாப் நடத்திய அரசியல் போர்கள் எல்லாம் அவருக்கு கடன் வழங்கியவர்களுக்குப் பணம் திரட்டிக் கொடுப்பதற்கென்றே நடத்தப்பட்டன. அவருக்கு கடன் வழங்கியோரில் பலரும் பிரிட்டீஷ் குடிமைப் பணியாளர்கள். அவர்கள் இந்தியாவுக்கு வந்து நான்கு - ஐந்து வருடங்களில் பெரும்பணம் சம்பாதித்த பின்னர் லண்டனுக்குத் திரும்பிப் போயினர். அங்கே பெரிய தோட்டங்களை வாங்கினார்கள்; சில வேளைகளில் நாடாளுமன்ற ‘இடங்களையும்’ வாங்கினார்கள்.

நான் அந்த நூலுக்கானப் பணியில் ஈடுபட்டிருக்கும் போது எட்மண்ட் பர்க் என்பவரது நெருங்கிய உறவினர் தான் வில்லியம் பர்க் என்பது தெரியாது. வில்லியம் பர்க் 1760களில் தஞ்சாவூர் மன்னருக்கு முகவராய் பணியாற்றி உள்ளார். 1760களிலும் 1770களிலும் ஆற்காடு நவாபுக்கும் தஞ்சாவூர் மன்னருக்கும் இடையே நிலவிய பூசல்களின் போது, தஞ்சாவூர் மன்னரின் முகவராகச் செயல்பட்டதனால் அவர் சம்பாதித்த பணம் அளவிட முடியாது. வில்லியம் பர்க் தன்னுடைய பணத்தையும், உறவினர் எட்மண்டின் பணத்தையும் 1760களில் கிழக்கிந்தியக் கம்பெனியின் பங்குகளில் முதலீடு செய்தார். 1769-ல் இந்தியாவில் ஏற்பட்ட நெருக்கடிகளினால் பங்குச் சந்தை தகர்ந்தது. அந்த வருடத்தில்தான் பெரும் பஞ்சம் வங்காளத்தில் ஏற்பட்டது. (பிறகு 1943-ல் பஞ்சம் ஏற்பட்டது). மூன்றில் ஒருபங்கு மக்கள் மடிந்தனர். சந்தை தகர்ந்த போது வில்லியமும் எட்மண்டும் தங்கள் பணம் அனைத்தையும் இழந்தனர். பிறகு எட்மண்ட் தீவிரமாகக் கம்பெனியை விமர்சிக்கத் துவங்கினார். இதெல்லாம் ஆய்வு மேற்கொள்ளும் வரை எனக்குத் தெரியாமலே இருந்தது. இப்போது உள்ளது போலவே, பங்குச் சந்தை/முதலீடு/போர்/ஏகாதிபத்தியம் ஆகியவற்றுக்கு இடையிலான உறவு முறை அப்போதும் செயல்பட்டு வந்துள்ளது.

கேள்வி: நீங்கள் இந்தியாவில் புதிய ஆராய்ச்சி மேற்கொள்ள வந்திருக்கிறீர்களா?

தற்போது நாங்கள் இந்தியா வந்திருப்பது என்னுடைய ஆராய்ச்சிக்கு அல்ல. நாங்கள் இரண்டு வருடங்களாகத் தொடர்ந்து வருகிறோம். நான் 2004ல் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் கலை மற்றும் அறிவியல் புலத்தின் தலைவர் ஆனேன். நாங்கள் ஏற்கனவே தெற்காசியப் படிப்புகள் பற்றி நல்ல திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். மேலும் இந்தியாவுக்கும் கொலம்பியாவுக்கும் இடையே உள்ள உறவை விரிவுபடுத்த விழைந்துள்ளோம். அந்த உறவு அம்பேத்கர் தம்முடைய பி.ஹெச்.டி பட்டம் பெற்ற காலத்திலிருந்தே உள்ளது. நாங்கள் கொலம்பியாவை இன்னும் தெளிவாகக் காட்ட விரும்புகிறோம். அதற்காக இங்கே உள்ள முன்னாள் மாணவர்களின் துணையை நாடி உள்ளோம். நாங்கள் பலதரப்பட்ட வருமானப் பின்னணி உள்ள மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கி படிக்க வைப்பது பற்றி யோசிக்கிறோம்.

எங்களது பேராசிரியர்களைப் பொறுத்தமட்டில், இந்தியாவில் தற்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது பற்றி விளக்கமாகச் சொல்லித் தர தெரிந்தவர்கள் அதிகம் பேர் இல்லை. இங்கே நிலவும் பொருளாதாரம் ஒவ்வொரு மாதமும் மாற்றங்கள் காட்டுகிறது. சிரமப்பட வைக்கும் அரசியல் கேள்விகள் நிறைய முளைக்கின்றன. எப்படித்தான் இந்த அரசியல் அமைப்பு தன்னுடைய ஆரோக்கியத்தைத் தக்க வைத்துக் கொள்கிறது? வணிகச் சந்தையில் நாட்டம் அதிகமாவதற்கும், சமத்துவம் இல்லாமை அதிகரிப்பதற்கும் இடையே உள்ள உறவு என்ன? நாங்கள் இந்திய நிறுவனங்களோடு கூட்டு சேர்ந்து செயலாற்றவும் விரும்புகிறோம். தற்போது இந்தியா எல்லோரது நிகழ்ச்சி நிரலிலும் இருக்கிறது. அதற்கு வணிகம் கற்பிக்கும் நிறுவனங்களும் செயல் தலைவர்களுக்கான எம்.பி.ஏ படிப்புகளும் உந்து சக்தியாக உள்ளன. நாங்கள் நெருக்கமான உறுதி மிக்க உறவை தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறோம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com