Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
பிப்ரவரி 2007
அடுத்த ஞாயிற்றுக்கிழமை: ஆர்.கே.நாராயண்
தமிழாக்கம்: ஆர்.அபிலாஷ்

ஒவ்வொருவரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கும் நாள் ஞாயிற்றுக் கிழமை. நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதை உணரும் முன்னே திடீரென ஆவியாகி விடும் நாள் அது. எதிர்பார்ப்பின் உவகைகளுடன் கூடிய சனிக்கிழமை மாலையின் உணர்வையும், திங்கள் பற்றிய எண்ணங்களால் கறைபட்ட ஞாயிறு மாலை உணர்வையும் எல்லோரும் அறிவோம். என்ன ஆகிறது அந்நாளுக்கு? பற்பல விஷயங்கள் திணிக்கப்படுகிற நாள் அது - வெளியே அழைத்துச் செல்வதாய் குழந்தைகளுக்கு கொடுத்த வாக்குறுதிகள், சாமான் வாங்க சிறிது நேரம் கடைக்கு அழைத்துச் செல்வதாய் சொன்ன வாக்குறுதி, இது போன்ற மென்மேலும் வாக்குறுதிகள், வாக்குறுதிகள். இருபத்தி நாலு மணிநேரத்தை நாற்பத்தி எட்டாய் நீட்டுவதை விட வேறு வழியில்லை. இதை ஒருவர் கண்டுணரும் முன் முற்பகல் முடிந்து விடும்.

Modern காலையில் கொஞ்சம் தாமதமாய் படுக்கையிலிருந்து எழலாம் என்று முடிவு செய்வோம். ஆனால் ஞாயிற்றுக் கிழமை ஆகையால் சற்று முன்னதாகவே ஆரம்பித்துவிடும் கூச்சல் நம்மை சிரமத்துடன் தானாக எழுந்து விடச் செய்யும். ஒரு மணிநேரம் முன்னதாகவே வானொலிப் பெட்டியை இயக்க அந்நாளுக்காகவே காத்திருந்த அண்டை வீட்டு வானொலி ஆர்வலர், இயந்திர பாகங்கள் விண்டு தெறிப்பது போல் அலறும் கார், பள்ளிக்கூடம் விடுப்பு என்பதால் ஆனந்த கூச்சலிடும் குழந்தைகள், ஞாயிறு பக்தன் ஒருவன் ஒரு மணி நேரம் அதிகமாய் படுக்கையில் செலவிட திட்டமிடும் போது இவை அனைத்தும் அரங்கேறும் சற்றே எரிச்சலுற்ற மனநிலையில் எழுந்திருப்போம். ஒரு நாளை ஆரம்பிக்க இதுவல்ல நல்ல வழி. இருப்பின் வசீகரத்தை துவக்கத்தில் இருந்தே இது ஒழித்துக் கட்டி விடும். இத்தகைய மனநிலையில் எழுந்த பின் நல்ல வாழ்க்கையை எதிர்பார்ப்பதில் பயனில்லை. அதை அப்படியே ஏற்றுக் கொள்வதே நலம்; அதாவது நல்லவொரு ஞாயிற்றுக் கிழமை ஏறத்தாழ நாசமாய் போய்விட்டது.

அடுத்து சில விஷயங்களை கவனிக்கத் தொடங்குவோம். மற்ற நாட்களில் இது போன்ற நுண்ணாய் களுக்கும், விசாரணைகளுக்கும் நமக்கு நேரமே வாய்ப்பதில்லை. எல்லா வேலை நாட்களிலும் மிக மென்மையானவராகவும், ஞாயிற்றுக் கிழமை மட்டும் அப்படியே ஒரு பல்டி அடித்து விடும் ஒரு நபரை எனக்குத் தெரியும். அவர் கொடியவராகவும், சமாளிக்க முடியாதபடியும் மாறுவார். வீட்டில் அனைத்துமே கோளாறாய் இருப்பதைப் பார்ப்பார். இவர் பொருட்களை தன் கையாலே பழுது பார்க்கும் விருப்ப வேலை கொண்டவர். ஞாயிற்றுக் கிழமை வேலைகளுக்காக மிதமிஞ்சிய நிகழ்ச்சி நிரல் ஒன்றை அவர் தயாரிப்பார். படம் ஒன்றை மாட்டுவது, ஒழுகும் குழாயை பழுது செய்வது, வானொலியின் கிறீச் ஒலியை நிறுத்துவது அல்லது கை கடிகாரம் அல்லது மிதிவண்டிக்கு எண்ணையிடுவது ஆகியவை ஞாயிற்றுக் கிழமைக்கான வேலைகள்.

வாரம் முழுக்க ஞாயிற்றுக் கிழமைக்கான வேலைகள் பற்றி மானசீகமாய் குறிப்பெடுத்தவாறு இருப்பார். அவர் போக்கிலே சென்றாரானால், அவர் நள்ளிரவு வரை மட்டுமல்ல திங்கள் காலையின் ஒரு பகுதியும் உழைக்க வேண்டி இருக்கும். ஆனால் இந்த கடினமான செயல்முறைத் திட்டத்தை ஒரு போதும் முழுமையாய் அவரால் நிறைவேற்ற முடிந்ததில்லை. அன்றைய முதல் வேலையாய் அவர் ஒரு வானொலிப் பெட்டியையோ அல்லது கைகடிகாரத்தையோ திறந்து, கடவுள் தன் பட்டறையில் அமர்வது போல் குத்திட்டு அமர்வார் என்பதில் சந்தேகமே இல்லை.

“இந்த பிரபஞ்சமே அவனது களிப்புகளின் பேழை” என்றார் ஃபிரான்ஸிஸ் தாம்ஸன், ஷெல்லியைப் பற்றி. இந்த மனிதர் தன் பொம்மைகளுடன் அமர்ந்திருக்கையில் நமக்கு இந்த சித்திரம்தான் நினைவுக்கு வரும்; ஆனால் ஒரு வித்தியாசத்துடன்; ஷெல்லி படைப்பின் ஆனந்தத்தில் தன்னை இழந்து விட்டதாய் கருதப்படுகையில், பல பொருட்கள் காணாமல் போய்விட்டதால் இவராலோ ஏதும் செய்ய இயலவில்லை. அவர் நேசித்துப் பேணிய ஓர் ஆணி, எதிர்காலத் தேவைக்காய் ஒதுக்கி வைத்திருந்த சிறு கயிறு அல்லது கம்பித் துண்டு, விலை மதிப்பற்ற திருகு மரையோ அல்லது செருகு குண்டூசியோ, மேலும் ஒன்று அல்லது மற்றொன்று என்று ஏதேனும் ஒன்று எப்போதும் தொலைந்தவாறு இருக்கும்; இது அவருக்கு பெருங்கோபம் மூட்டும்.

அவரது குழந்தைகளின் எண்ணிக்கையும் தொலைந்து போகும் பொருட்களின் எண்ணிக்கையும் சரிசமமான விகிதத்தில் உள்ளது. இந்த சிடுமூஞ்சிக்கு இவ்விஷயத்தை தற்செயலாய் எடுத்துக் கொள்ளத் தெரியாது. வாரம் முழுக்க குழந்தைகள் பல்வேறு பொருட்களை கையாள்கிறார்கள். பென்சிலை செதுக்க ஒரு பிளேடோ, எதையாவது கட்ட ஒரு கம்பியோ, எதற்காகவோ எதுவோ ஒன்று, மற்றும் பார்க்க அழகாய் இருப்பதால் ஒரு திருகு மரையும், செருகு குண்டூசியும். அவருக்கு கட்டுப்படுத்த முடியாத கோபம் வருகிறது. எல்லாரையும் அழைத்து, வரிசையாய் நிற்க வைத்து விசாரணையை ஆரம்பிக்கிறார். விசாரணையின் முடிவு பயனுள்ளதாகவோ அல்லாமலோ போகலாம். அது கடவுளின் கையில்தான் உள்ளது.

அப்பாவின் பாங்கால் கவரப்படும் குழந்தையொன்று தன் கொள்ளைப் பொருளை ஒருவேளை திருப்பித் தந்து விடும்; மற்றொரு குழந்தை நல்ல பெயர் வாங்க அப்படிச் செய்யலாம். அல்லது அவை தங்கள் பொக்கிஷங்களை விட்டுத் தராமல் முரண்டு பிடிக்கலாம். பெட்டியில் தன் பொம்மைகளுடன் இருக்கும் அம் மனிதர் நிச்சயம் எரிச்சல் உற்றுள்ளார். அவரது சந்தேகம் உசுப்பப்பட்டு, தனது அனைத்து இழப்புகளையும் கணக்கிட ஆரம்பிக்கிறார். அவசரமாய் எழுந்து நிலையடுக்குகளைத் திறக்கிறார். தற்போது “அது எங்கோ” அல்லது “அதற்கு என்னாயிற்று?” போன்ற கேள்விகள் வேறுபடும் அளவுகளிலான எரிச்சலுடன் வீடெங்கும் முழங்கும். ஆனால் ஜெஸ்டின் பைலட்டினுடையது போல் இக் கேள்விகளுக்கும் பதிலற்று அழிவதே விதி. நம்மால் முடியுமெனில் இவற்றுக்கு பதிலிறுக்கலாம். வேறு யாரும் எப்போதும் பாத்திராத அந்த சுத்தியல் எங்கே போயிற்று என்று அவரை விட அதிகமாய் பிறருக்குத் தெரியாது.

எதற்கும் உதவாத ஒரு உலகில் வாழ்கிறோம் என்று அவருக்குப் புரிய வருகிறது. தன் கேள்வியை பொதுப்படையாய் கேட்டாலும், வீட்டின் உட்பகுதியில் பரபரப்பாய் வேலை செய்யும் மனைவியையும், தங்கள் தந்தையின் வெறியெழுச்சியை களிப்புடன் வேடிக்கை பார்த்து, தப்பியோடும் வாய்ப்புக்காக மட்டுமே காத்து நிற்கும், குழந்தைகளையும் நோக்கியே அவற்றை ஏவுகிறார். ஏழு வயதான, தப்பியோடும் இயலுணர்வு உடைய, குழந்தை ஒன்று வெளிப்படையான மாசின்மையுடன் இந்த இந்த பொருள் இன்ன இன்ன இடங்களில் இருக்கலாம் என்றும், அவற்றை அவர் சென்று தேடிப் பார்க்கலாமே என்றும் யோசனை சொல்கிறது. இந்த சாதுர்யத்திற்கு பெருங்கோபம் மிக்க அந்த மனிதர் பலியாகிறார். எந்த தாவீதும் கோலியத்தை இவ்வளவு எளிதாய் தோற்கடித்ததில்லை. தனக்கு என்ன நேர்ந்ததென்று அவர் உணரும் முன்பே, அந்த குட்டிப்பையன் மறைந்து விடுகிறான்; மேலும் வரிசை ஒருமுறை உடைக்கப்பட்டு விட்டால் அது நிரந்தரமாய் உடைந்து விட்டதாய் பொருள்.

அதே குழந்தைகள் கவலையற்று அடுத்த வீட்டில் விளையாடுவதை அவர் காணும் வரை வேறெதிலாவது, ஒருவேளை மேஜை மீதுள்ள ஒரு புத்தகத்திலோ, இதழிலோ மூழ்கிப் போய் எல்லாவற்றையும் சற்று நேரம் மறந்து விடுகிறார். அசிங்கமாய் ஜன்னல் வழி கத்தி அவர்களை வீட்டுக்குத் திரும்ப அழைக்கிறார். அவர்கள் அணி வகுத்து திரும்புகிறார்கள்; அந்த மனிதர் தன் தாக்குதலை அவர்களது புத்தகங்கள் மற்றும் பள்ளி வேலை பற்றி விசாரித்து ஆரம்பிக்கிறார்; இது நிச்சயமாக ஒரு கொடுமை விருப்ப நோக்கமே. இது அவர்களது கல்வி முன்னேற்றம் மற்றும் போக்கு பற்றிய விசாரணை நோக்கி இட்டுச் செல்லும். தன் குழந்தைகள் சரியான முறையில் வளர்ச்சி அடையவில்லை என்பதை அவர் கண்டுபிடிப்பார்; இதுவரை அவர்கள் இத்தனை மோசமாய் வளர்ந்து வருவதை அவர் கவனித்திருக்கவில்லை - இது வீட்டின் உட்பகுதியிலிருந்து ஆவேசமாய் மறுக்கப்படும் ஒரு மறைமுக குறிப்பீடு. குழந்தைகளை சற்று நேரம் கொடுமைப்படுத்தி விட்டு, சீக்கிரமே அவர் சோர்ந்து விடுகிறார். அப்போது பாதி ஞாயிறை மீட்க முடியாவண்ணம் இழந்து விட்டதை கண்டறிகிறார். இன்னும் சில மணி நேரங்கள் மட்டுமே பகலொளி எஞ்சி உள்ளது.

மதிய உணவு அருந்தி, இனிமையான மனநிலையில் அவருக்குத் தான் முன்பு செய்த அந்நாளுக்கான பல வாக்குறுதிகள் ஞாபகம் வருகின்றன. ஒரு பூனைத் தூக்கத்திற்கு பிறகு தன் கடமைப் பொறுப்புகளை நிறைவேற்றுவதாய் உறுதி மேற்கொள்கிறார். ஓய்வுக்குப் பின் எழுந்த போது, தன் குடும்பத்தை அன்று வெளியே அழைத்துச் செல்ல முடியாது என்பதை உணர்கிறார். பெரிதும் சிதைக்கப்பட்டு விட்ட தன் ஞாயிற்றுக் கிழமையின் மிச்சத்தை பேருந்து நிறுத்தங்களில் அவர் நிச்சயம் செலவழிக்க மாட்டார். முன்னொரு முறை, குழந்தைகள் பசியில் அலற இரண்டு மணி நேரங்கள் பேருந்து நிறுத்தமொன்றில் செலவழிக்க நேர்ந்ததும், இரவில் வீட்டுக்கு தளர்நடையிட்டு வந்து சேர்ந்ததும் அவருக்கு ஞாபகம் வருகிறது. அந்த நினைவில் நடுக்கம் கொண்டு, திடீரென கத்துகிறார், “தயவு செஞ்சு, இன்னிக்கு நாம் வீட்டிலேயே இருப்போம். உங்களை எல்லாம் அடுத்த ஞாயிற்றுக் கிழமை வெளியே கூட்டிக்கிட்டு போறேன்”.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com