Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
பிப்ரவரி 2007
சுபுஹான மௌலீது
இரா.முகம்மது ரபீக்

அத்தாவுக்கும் எனக்கும் எப்போது அந்த இடைவெளி உண்டானதென்று சரியாய் ஞாபகமில்லை. நா ஒம்பதாப்பு படிக்கறப்பத்தான் அது நடந்தது. ஒரு வேள அது கூட ஆரம்பமா இருக்கலாம்.

ஒரு நா மாலை நேரத் தொழுகைக்கு அழைத்தபோது செல்லத்தா கடைல நாங்க செட்டோட நிக்கிறோம்.

‘லே, நா நாளைக்கிருந்து இத தொட மாட்டேன்” அஜீஸ் தான் ஆரம்பித்தான்.

‘நல்லவனாகுறீகளோ?’ - யாஸீர்

‘இல்ல... மல்லிகாக்குப் பிடிக்காதாம்’ - அஜீஸ் சிகரெட்டைக் கீழே தேய்த்தான். எல்லோர் முகத்திலும் கவலை ரேகைகள். ஆளுக்கொரு மல்லிகா இருக்கிறாள். நாமளும் சொல்ல வேண்டி வருமோ?’ அப்போது மட்டும் எதிர்காலத்தை நினைத்தார்கள்.

‘முட்டாப்பசங்களா, பொண்ணுங்க சைக்காலஜி தெரியாம உளறாதீங்கடா. ஒன் ஆளு கூட பேசப் போறியா. தம்ம பத்த வச்சு பின்னாடி ஒளிச்சுக்க. வாயில கொஞ்சம் புகைய அதக்கிக்கிட்டு அவகிட்ட போகணும். முத்தம் தர வர்றான்னு கண்ண மூடிக்கிடுவாளுஹ. புகைய மூஞ்சில ஊது. ஆச்சர்யமும் வெறுப்புமா முகத்த திருப்புவா. அப்ப பக்கவாட்டு உதட்டுல சிகரெட் ஸ்மெலோட ஒரு இச்... அப்புறம் பாரு நீயும் வேணும். ஒன் சிகரெட்டும் வேணும்பா...’ நான் செய்முறை விளக்கத்தோடு கூறிக் கொண்டிருக்கும் போது அத்தா என்னைக் கடந்து போனார்.

காட்சியைப் பார்த்தது உறுதி. வசனத்தைக் கேட்டாரா என்ற சந்தேகம் இன்றுவரை இருக்கிறது. அன்றிலிருந்து அத்தா என்னிடம் பேசுவதில்லை. ‘தலைல எண்ணை வச்சிட்டுப் போடா’ என்று என்னை புறக்கணித்து விட்டு, அண்ணனிடம் மட்டும் கூறும் போதும், என்னைத் தாண்டி தங்கச்சியுடன் சாப்பிட அமரும்போதும் எனக்குள் எந்த உறுத்தலும் ஏற்பட்டதேயில்லை.

‘என்ன செஞ்சடா நீ. அத்தா ஒன் கூட ஏ பேசமாட்டேங்குறாஹ’ அம்மாவின் கேள்வி முணுமுணுப்புடன் கூடிய என் செருப்பு மாட்டல்களில் தேய்ந்து போனது. நானும் அத்தாவும் பேசாமலிருப்பது அரபி வருஷத்துக்கு எப்படித் தெரியும்?

அத்தாவுக்கு சின்ன வயதிலிருந்து மௌலீது ஓதுவதில் அபார பிரேமை. தமிழில்தான் ஓதுவாரென்றாலும் நல்ல குரல் வளம். தான் ஓதுவதை எல்லோரும் மெச்ச வேண்டுமென்ற ஆசை வேறு. ஆனா, புதுமெட்டுல ஓதத் தெரியாது. அதனால வெளியாள் யார் கூடவும் உக்காந்து ஓதமாட்டார். எங்கள் வீட்டில் எனக்கு மட்டும் தான் மௌலீது ஓதத்தெரியும். அம்மாவோடு அண்ணனும் தங்கச்சியும் கையை திரித்து பக்தியோடு அமர்ந்திருப்பார்கள்.

நம்மோட பேசவே செய்யாதவரு கூடச் சேந்து மவ்லீது ஓதவா போறாரு? என்றெண்ணிக் கொண்டே செருப்பில் கால்களை நுழைந்தேன். ‘மவ்லீது ஓதாம வெளில போற எவனுக்கும் இந்த வூட்ல சோறு கிடையாது’ அத்தாவின் பிரகடனம் என்னை ஒளுச்செம்பை நோக்கி ஓடச்செய்தது.

அத்தாவும், நானும் அருகருகே அமர்ந்திருப்பதை அம்மா பூரிப்போடு பார்த்துக் கொண்டிருந்தாள். ‘யாமுஸ்தபா யா முர்தலா யா ஸனதி’ என்ற இடம் வரும் போது அத்தா தொண்டை கட்டியது போல் நடித்தார். முன்பெல்லாம் மௌலீது ஓதும் போது, முஸ்தபா என்பது என் பெயராகையால் அந்த இடம் வரும் போது நான் ஓதினால் பெருமிதம் பொங்க லேசாய் சிரித்துக் கொள்வேன். அத்தா ஓதினால் ஓரக் கண்ணால் என்னை பார்ப்பார்.

நிலபைத்தில் எழுந்து நிற்கும் போது அவரைவிட உயரம் குறைவாயிருந்த என்னிடம் கிதாபைக் காட்டாமல் தன்னுடைய கண்ணின் மட்டத்திலேயே வைத்து ஓதினார். சரியாய் மனனமில்லாத வரிகளை தப்பா ஓதினால் மீண்டும் ஓதினார். எனக்கு உள்ளுக்குள் எரிச்சல் மூண்டது. நிலபைத் முடிந்து அமரும் போது அத்தாவின் மொளியோடு என்மொள் உரசியது. நான் சற்று விலகி அமர்ந்து கொண்டேன்.

‘சந்தனம் கரைக்கவா?’ அம்மா சூழ்நிலையைச் சீராக்க முயன்றாள்.

அதற்கடுத்த நான்கு ஆண்டுகளிலும் அதையொத்த சம்பவங்கள் மவ்லீது முறையில் நிகழ்ந்தன. திருச்சி கல்லூரியில் நான் முதலாண்டு படிக்கையில் விடுமுறைக்கு வந்த போது மவ்லீது பிறையும் வந்தது. அம்மாவும், தங்கையும் எங்கோ வெளியில் போயிருந்தனர். அண்ணன், ‘கடையில் வேலையிருக்கிறது மௌலீதுக்கு வரமுடியாது’ என்று காலையிலேயே சொல்லிவிட்டான்.

நானும் அத்தாவும் மட்டும் தான் வீட்டிலிருந்தோம் பண்டங்களையெல்லாம் மௌனமாக எடுத்து வைத்து ஓத ஆரம்பித்தோம். இடையில் அத்தா லேசாக இருமினார். அவசரமாய் சமையலறைக்குள் சென்று மிளகும், நீரும் எடுத்து வைத்து, விட்ட இடத்தில் தொடர்ந்தேன். ‘மாமுஸ்தபா யா’ வரும் போது அத்தா லேசாகச் செருமினாலும் முந்தைய வருடங்களைப் போலல்லாமல் அழுத்தமாய் ஓதினார். அடுத்த வரியை ஓதும்போது அவரைப் பார்த்தேன். கண்களில் லேசாய் நீர்திரண்டிருந்தது. நான் பார்த்தவுடன் அவசரமாக மிளகை வாயில்போட்டு தண்ணீரைக் குடித்தார்.

நிலபைத் ஒதும்போது கிதாபை என் கையிலேயே கொடுத்துவிட்டு மனனமாகவே ஓதினார். அமரும் போது உரசிய அத்தாவின் மொளியிலிருந்து என் மொளியை நகர்த்திக் கொள்ளவில்லை. மௌலீது முடிந்ததும் கவிந்த மௌனம் உயிரைக் கொல்வதாய் இருந்தது. ஒரு பிடி மல்லிதாவை வாயில் போட்டுக் கொண்டு வெளியே கிளம்பினேன். அத்தா பாயிலேயே உட்கார்ந்திருந்தார்.

அதுதான் நா ஓதுன கடைசி மௌலீது. மௌலீது ஓதுவது ஏகத்துவத்திற்கு முரண் என்று நம்பத் துவங்கிய காலங்களில் அத்தா ஓதும் போது நான் வாசலில் நின்றிருந்தாலும் ‘யா முஸ்தபா’ ஓதும் போது தண்ணீர் குடிக்கும் சாக்கில் உள்ளே வந்து விடுவேன். கண்கள் இயல்பாய் அத்தாவின் முகம் பார்க்கும். அவர் எவ்விதச் சலனமும் இல்லாமல் ஓதிக் கொண்டிருப்பார்.

நான் காலேஜ் முடிச்ச வருஷம்னு நினைக்கிறேன். மௌலீது பிறைக்கு முத நா ‘மௌலீது ஓதலாமா?’ என்ற தலைப்பில் பேச இயக்கப் பேச்சாளரை அழைத்திருந்தோம். சினிமா பாட்டு ராகத்தில் மௌலீது ஓதப்படுவதைக் கண்டிக்கும் சாக்கில் பல ஆபாசமான சினிமா பாட்டு மெட்டில் மௌலீதை ஓதி கிண்டலாகப் பேசினார். கூட்டம் மெய்மறந்து கைதட்டியது. தாங்களே எதிர்பார்க்காத வகையில் எல்லோரும் வந்திருந்தனர். அத்தா கூட கொஞ்ச நேரம் நின்னிருந்ததாக ஷேக் சொன்னான்.

மறுநா காலை பதர்மாமி தலைமையில் எங்கள் தெருப் பெண்கள் அத்தாவைத் தேடி வந்தனர். ‘மாமு, மௌலீது ஓதறது ஹராமாமே7 மௌலீது பண்டமெல்லாம் நம்ம வீட்ல இருந்து போகக் கூடாதுன்னு கண்டிஷனா சொல்லிட்டாஹ’... பதர்மாமி இழுத்தாள். எல்லா பெண்களும் அதையே ஆமோதித்தனர். அத்தா மௌனமாக நின்றிருந்தார். சாயங்காலம் ஜமாத் தலைவர் என்னைப் பற்றி அத்தாவிடம் சத்தம் போட்டதற்கும் அத்தா பதில் கூறவில்லை.

யாரிடமிருந்தும் பண்டம் வரவில்லை. கையேந்தி அமர்ந்திருந்த அண்ணனும் சிலபைத்துகளில் கையைப் பிடித்துக் கொண்டான். ‘மாமு ஓதனா இன்னிக்கெல்லாம் கேட்டுட்டே இருக்கலாம்’ என்று சர்டிபிகேட் வழங்கும் அத்தாவின் பனிரெண்டு நாள் ரசிகைகள் யாரும் வரவில்லை.

‘அத்தா மௌலீது ஹராமா?’ தங்கச்சியின் அப்பாவித்தனமான கேள்விதான். அத்தாவின் அன்றைய மௌனத்தைக் கலைத்தது. அத்தா வெறிபிடித்தது போல் கத்தினார். எங்கள் இயக்கத் தோழரை திட்டியதும், அம்மாவை அசிங்கப்படுத்தியதும் வாசலில் வந்து சேர்ந்த கூட்டமும்தான் என்னை அந்தத் திடீர் முடிவை எடுக்க வைத்திருக்க வேண்டும்.

அஞ்சு வருஷ கான்ட்ராக்ட்ல துபாய் வந்த பிறகும் கடந்த நாலு வருஷமா அத்தாவின் கோபம் தீரவில்லை. தங்கச்சிதான் லெட்டர் போடுவாள். அம்மாவிடம் எப்போதாவது அத்தா இல்லாதப்ப போன்ல பேசுவேன். தங்கச்சி காலேஜ் அட்ரசுக்கு ஒரு தடவ பணம் அனுப்பினேன். அத்தாவுக்கு விஷயம் தெரிந்து விட்டதாம். திருப்பி அனுப்பப்பட்ட டிராப்டோடு உடன் வந்த கடிதத்தில் இந்த வாசகங்களைப் பார்த்து அழுதுவிட்டேன்.

டெலிபோன் ஒலிக்கிறது. ‘அண்ணனா?. . நா பஷீர் பேசுறேன். பெரித்தா இறந்துட்டார். பெத்தம்மா ஒன்ன நினைச்சு ஒரே அழுகை. நீ இடையில வரமுடியாதாமே. வச்சிரட்டா. துவா செய்’

அறையில் யாருமில்லை. கண்களில் திரண்ட நீருடன் இனம் புரியாத வெறுமை நெஞ்சை அடைத்தது. அத்தாவின் புகைப்படம் கூட என் வசமில்லை. முகத்தை ஞாபகப்படுத்த முயன்றேன். எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. வாழ்வின் மீது முதன்முதலாய் எரிச்சல் வந்தது. படுக்கையில் சாய்ந்து கண்களை மூடி யோசித்தேன். ம்ஹும் வரணுமே. கண்ணீர் மட்டும் வழிந்து கொண்டேயிருந்தது.

அரைமணி நேரம் கழிந்திருக்கும். எழுந்து உட்கார்ந்த போதுதான் அதைப் பார்த்தேன். தமிழ்நாட்டு பத்திரிகை ஒன்றுக்கு ‘சுபுஹான மவ்லீதில் ஏகத்துவ முரண்பாடுகள்’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதச் சொல்லி போனவாரம் சேக் அனுப்பி வைத்த ‘விளக்கத்துடன் சுபுஹான மவ்லீது’ மேஜை மீது பிரிக்கப்படாமல் கிடந்தது. ஏதோ இனம் புரியாத உணர்வில் உந்தப்பட்டவனாக கையிலெடுத்து பக்கங்களைப் புரட்டினேன். கண்ணீரின் ஊடே மௌலீது பைத்திலிருந்த ‘யா முஸ்தபா யா’ சற்றுமங்கலாகத் தெரிந்தது. கண்கள் இருண்டன.

‘முதன்முதலாய் மௌலீது ஓதிய போது ‘யா முஸ்தபா யா’ வரும் இடத்தில் நான் சிரித்ததும் அத்தா செல்லமாய் என் தொடையில் கிள்ளியதும்’ மங்கலான படமாய் என்னுள் விரிந்து அறையை ஆட்கொண்டது. அந்தக் காட்சி கண்களிலிருந்தா அல்லது நான் விரித்து வைத்திருந்த பக்கத்திலிருந்தா என்று யோசிக்காமல் காட்சியின் லயிப்பில் ஆழ்ந்திருந்தேன்.

அன்று முழுவதும் ஓதப்படாமலேயே சுபுஹான மவ்லீது என் கையில் இருந்தது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com