Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
பிப்ரவரி 2007
தமிழகத்தில் உள்ஒதுக்கீடு கோரிக்கையின் வரலாறும் போக்குகளும்
ம.மதிவண்ணன்

மெல்ல மேலெழுந்து வரும் அலையாய் அருந்ததியர் எழுச்சி சற்று வேகமெடுத்திருக்கும் இத் தருணத்தில், அருந்ததியர்களின் முக்கிய கோரிக்கையாய்த் திகழும் உள்ஒதுக்கீடு குறித்து, ஆந்திர அனுபவங்களின் வெளிச்சத்தில் பரிசீலிப்பது மிகவும் தேவையானதும் உடனடி கவனத்தைக் கோருகிற ஒன்றாகவும் இருக்கிறது. ஆந்திரத்தில் ஹக்ஷஊனு என்ற நான்கு குழுக்களாய் வகைப்படுத்தி உள்ஒதுக்கீடு வழங்கிட கோரும் கோரிக்கை 1982-இல் அருந்ததிய பந்து சேவா மண்டலி வெளியிட்ட “அருந்ததியர்களின் நிலை” என்ற பிரசுரத்தின் வாயிலாக முதன் முதலில் வெளிப்பட்டது என்று பேராசிரியர் முத்தையா குறிப்பிடுகிறார்.

Modern art தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் 1920-இல் எல்.சி.குருசாமி தோற்றுவித்த அருந்ததிய மகாசபையிலிருந்து தொடங்கி, 1942-இல் தோன்றிய தமிழ்நாடு அருந்ததியர் ஊழியர் சங்கம், சமத்துவ சமாஜம், 1958-இல் தோன்றிய தமிழ்நாடு அருந்ததியர் முன்னேற்ற சங்கம் என்று ஒரு தொடர்ச்சியான அருந்ததியர்களின் இயக்கம் இங்கு செயல்பட்டுக் கொண்டிருந்தது. 1959-இல் “அருந்ததிய மக்களுக்கு அரசியல் உரிமைகள் யாவும் விகிதாச்சாரப்படி கிடைக்கவில்லை. இதனை பலநூறு கூட்டங்கள், மாநாடுகள், மகஜர்கள் மூலமாகக் கேட்டும் இம்மியும் பலன் கிடைக்கவில்லை” என்று சீற்றத்துடன் அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் லீக்கிற்கு வருகை தந்த அமைச்சர் கக்கனுக்குக் கருப்புக்கொடி காட்டி கைதாகுமளவுக்கு அருந்ததியர் இயக்கங்கள் வீச்சோடு நடைபெற்ற வரலாறு இருந்தாலும் தனி ஒதுக்கீடு கோரிக்கை அப்போதெல்லாம் எழவில்லை.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் திண்டுக்கல் பெருமாளின் தலைமையில் 1976-இல் தோன்றிய இளைஞர் வழிகாட்டும் பணி அமைப்பின் புத்தாண்டு நிறைவையொட்டி 1986-இல் கோவையில் கூடிய பொதுக் குழுவில் அருந்ததியருக்குத் தனி ஒதுக்கீடு கேட்டு நிறைவேற்றிய தீர்மானத்தை உள்ஒதுக்கீடு எனும் நோக்கில் எடுத்து வைக்கப்பட்ட முதல் அடி என்றுச் சொல்லலாம். பின்னர் மேச்சேரி பெருமாள்ராஜை தலைவராகக் கொண்டு இயங்கிய தமிழ்நாடு அனைத்து அருந்ததியர் சங்கங்களின் கூட்டமைப்பு என்னும் அமைப்பின் சார்பில் 1991 டிசம்பர் 15இல் ஈரோட்டில் நடத்திய அதியமான் தலைமையிலான அருந்ததியர் எழுச்சி மற்றும் சமூகநீதி மாநில மாநாட்டில் வெளியிடப்பட்ட நியாயம்தானா? என்ற தலைப்பிலான சிறுநூல் இடஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள், புறக்கணிப்புகள் குறித்த விரிவான புள்ளி விபரங்களுடன் வெளியானது. அதை அருந்ததியர் உள்ஒதுக்கீட்டு கோரிக்கையை ஒட்டிய முக்கிய நிகழ்வாகச் சொல்லலாம்.

1994-இல் தோழர் அதியமான் நிறுவனத் தலைவராய் இருந்து தோற்றுவித்த ஆதித்தமிழர் பேரவை துவக்கம் பெற்றபின் அருந்ததியரின் உள்ஒதுக்கீடு கோரிக்கை வலுப்பெறத் தொடங்கியது என்று சொல்லலாம். அவ்வமைப்பினரால் 1998-இல் வெளியிடப்பட்ட தோழர் எழில்.இளங்கோவன் எழுதிய அடுக்குமுறை இடஒதுக்கீட்டில் அருந்ததியருக்குச் சமூகநீதி என்ற சிறுநூலும், 1996-இல் ஈரோட்டில் நடைபெற்ற வஞ்சிக்கப்பட்டோர் வாழ்வுரிமை மாநாடும் இந்நோக்கில் குறிப்பிடத்தகுந்தவை. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர். ராமதாஸ், எஸ்.டி.கல்யாணசுந்தரம், கோவை.கு.ராமகிருஷ்ணன் (தி.க.) ஆகியோர் பங்கேற்ற அம்மாநாட்டில் தனி இடஒதுக்கீடு கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. அண்மையில் (டிசம்பர் 18, 2006-இல்) மதுரையில் கூடிய அருந்ததியர் ஒருங்கிணைப்புக் குழுவின் மாநாட்டிலும் உள்ஒதுக்கீடு கோரிக்கை வலியுறுத்திப் பேசப்பட்டதாக நண்பர்கள் தெரிவிக்கிறார்கள்.

தொடர்ச்சியான இத்தகைய முயற்சிகளால் இதர அரசியல் கட்சிகளிடையேயும் உள்ஒதுக்கீடு கோரிக்கைக்கு குறிப்பிடத்தக்க அளவுக்கு ஆதரவு கிடைத்திருப்பதைக் காண முடிகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையின் 21-ஆம் பக்கத்தில் அருந்ததியர் நலன் என்னும் தலைப்பிலான வாக்குறுதிகள் இவை

“தாழ்த்தப்பட்ட மக்களில் அருந்ததியர் மக்கள்தொகை கணிசமாக இருப்பதால் ஆந்திராவில் உள்ளது போல இம்மக்களுக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் தனி இடஒதுக்கீடு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்படும். அருந்ததியர் நலனைக் காப்பாற்ற அருந்ததியர் நலவாரியம் ஒன்று ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்”.

அவ்வாறே விடுதலைச் சிறுத்தைகளின் தேர்தல் அறிக்கையிலும் 18ஆம் பக்கத்திலுள்ள தாழ்த்தப்பட்டோரில் சாதிவாரி இடஒதுக்கீடு என்னும் தலைப்பிலான வாக்குறுதி இது.

“தாழ்த்தப்பட்ட வகுப்பினரில் பறையர், பள்ளர், அருந்ததியர் என்னும் மூன்று பெரும்பிரிவினர் தமிழகத்தில் உள்ளனர். இவர்களில் அருந்ததியர் கல்வி, தொழில் மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றில் மக்கள் தொகைக்கேற்ற அளவில் உரிய பங்கினைப் பெற முடியாத நிலையில் உள்ளனர். இந்நிலையை மாற்றிட தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் தனித்தனியான மக்கள் தொகை அடிப்படையில், இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதே ஏற்ற வழியாகும். அப்போது தான் அருந்ததியர் வகுப்பினரும் சமூகநீதியைப் பெற முடியும். எனவே தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை சாதிவாரி அடிப்படையில் நடைமுறைப்படுத்த விடுதலைச் சிறுத்தைகள் பாடாற்றும்”.

இவை தவிரவும், டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சியும், அரங்க குணசேகரன் போன்றவர்களும் உள் ஒதுக்கீட்டின் தேவையை வலியுறுத்துகின்றனர். ஆந்திராவைப் போலன்றி உள்ஒதுக்கீடு கோரிக்கைக்கு தலித்துகளிடம் பெருவாரியான ஆதரவு இருக்கிறது. ஆந்திரத்தின் மாலா மகாநாடு அமைப்பினரைப் போன்று வலுவான வெளிப்படையான எதிர்ப்பைத் தெரிவிக்கும் அளவுக்கு எந்த தலித் அமைப்புமே இல்லை என்கின்ற சூழ்நிலை தான் இங்கு நிலவுகிறது. செ.கு.தமிழரசன் போன்றவர்கள் மிகச் சிறுபான்மையான விதிவிலக்குகள். ஆனால், தி.மு.க., அ.தி.மு.க. போன்ற திராவிட கட்சிகளிடமும் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் போன்ற தேசிய கட்சிகளிடமும் இக்கோரிக்கை குறித்து எவ்விதமான எதிர்வினையும் இல்லை என்பதையும் இங்கு மனங்கொள்ள வேண்டும். சமூகநீதியை வலியுறுத்துகிற சனநாயக சக்திகள் இவ்விஷயத்தில் அழுத்தம் தருவதன் மூலம் ஆக்கப்பூர்வமான மாற்றம் நிகழ வேண்டும்.

2

தலித் முரசு அக்.2004 இதழில் வெளியான கட்டுரையில் கவுதம சன்னா “சென்னை மாவட்ட சக்கிலியர்கள், தோட்டிகள், பறையர்கள் மற்றும் பல பிரிவுகள் ஆதிதிராவிடர் என்ற பிரிவுக்குள் சேர்ந்துள்ளன. அதேபோல சக்கிலியர் தோட்டிகள் ஆகியோர் அருந்ததியர், ஆதி ஆந்திரர், ஆதி கர்நாடகர் ஆகிய பிரிவுகளில் ஐக்கியமாகி உள்ளன” என்று குறிப்பிடுவதன்படி அருந்ததியர்களின் மக்கள் தொகை ஆதி திராவிடர், ஆதி ஆந்திரா, ஆதி கர்நாடகா என்ற பிரிவுகளிலும் சிதறிக் கிடப்பதை அறியலாம். மேலும் ஆதிதிராவிடர் என்ற பொதுப் பெயரிலேயே 51 சதவீத தலித்துகள் வந்துவிடுவதால் தெளிவான ஒரு கணக்கீடு சாத்தியமில்லாததாய் இருக்கிறது. எனவே ஆந்திராவில் நீதிபதி ராமச்சந்திர ராஜு தலைமையில் அமைக்கப்பட்டதைப் போன்ற ஒரு கமிஷனை இங்கும் அமைத்து, ஒவ்வொரு குறிப்பிட்ட தலித் சாதியின் மக்கள் தொகையும் தனித் தனியே கண்டறியப்பட வேண்டும். அதன் தொடர்ச்சியாக குழுக்களாக வகைப்படுத்தி உள்ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஆந்திராவைப் பொறுத்த வரையில் மாதிகா, மாலா ஆகிய இரு பெரும்பான்மையான எண்ணிக்கையுள்ள சாதிகளும் இதர சிறுபான்மை எண்ணிக்கையுள்ள சாதிகளும் இருக்கின்றன. இவற்றுள் மிகவும் பின்தங்கிய ரெல்லி முதலான சாதிகள் A குழுவாக வரையறுக்கப்பட்டு 1 சதவீத இடஒதுக்கீட்டுக்கு உரியவை ஆகின்றன. ஆந்திர மாநில தலித் சாதிகளுக்குள்ளே முன்னேறிய தலித் சாதியாகக் கருதப்படும் ஆதி ஆந்திரா முதலிய சாதிகள் D குழுவாக வரையறுக்கப்பட்டு அவையும் 1 சதவீத ஒதுக்கீட்டுக்கு உரியவையாக அறிவிக்கப்பட்டன.

இந்த முறைப்படியே தமிழகத்திலும் தலித் சாதிகளிலும் மிகவும் பின்தங்கிய சாதிகளுக்கு முதல் முக்கியத்துவமும், ஒப்பீட்டளவில் முன்னேறிய சாதிகளுக்கு அவற்றின் முன்னேற்றத்துக்குத் தகுந்த நிலையில் முக்கியத்துவமும் வழங்கப் பெற வேண்டும். அதன் முதற்படியாக தமிழகத்திலுள்ள தலித் சாதிகளுள் ஒப்பீட்டளவில் முன்னேறிய சாதிகளும், மிகவும் பின்தங்கிய சாதிகளும் கண்டறியப்பட்டு அவற்றின் மக்கள் தொகையையும் கண்டறியப்பட வேண்டும். அதனடிப்படையில் மிகவும் பின்தங்கியுள்ள சாதிகள் சார்ந்த குழுக்களுக்கு முதல் முக்கியத்துவமும் அளிக்கப்படுவதன் மூலம் சமூகநீதி புதிய பரிணாமங்களில் நிலைநாட்டப்பட வேண்டும்.

3

உள்ஒதுக்கீடு கோரிக்கையை ஆதரிப்பவர்களிடமும் ஒரு தெளிவற்ற போக்கு இருப்பதைக் கவனிக்க முடியும். அருந்ததியருக்கு 10 சதவீத ஒதுக்கீடு கேட்க வேண்டும் என்று ஒரு சாரார் முன்மொழிகின்றனர். அவர்களின் கருத்துப்படி முதலில் தாழ்த்தப்பட்டோர் ஒதுக்கீட்டை அதிகரித்து, அதன் பின்னர் அருந்ததியருக்கு 10 சதவீத ஒதுக்கீடு வழங்கலாம் என்று கருத்து தெரிவிக்கின்றனர். இக்கருத்தில் இரண்டு சிக்கல்கள் உள்ளன. தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்கச் செய்வது என்பது மிக நீண்ட கால அவகாசத்தையும், பெரும் போராட்டத்தையும் கோருகின்ற ஒன்று. அதனால் உள்ஒதுக்கீடு கோரிக்கை தள்ளிப் போடப்பட்டுக் கொண்டே போகும் அபாயம் இருக்கிறது என்பது முதல் சிக்கல். அது போலவே 10 சதவீத இடஒதுக்கீடு கேட்பது என்பது எண்ணிக்கையில் குறைவான குறவர், புதிரை, வண்ணார் போன்ற சிறுபான்மையான தாழ்த்தப்பட்ட சாதிகளுக்குரிய ஒதுக்கீட்டுப் பங்கை மறுக்கும் சூழலை உருவாக்கும் அபாயத்தைக் கொண்டிருக்கிறது என்பது இரண்டாவது சிக்கல்.

நாம் இங்கு முன்வைக்க வேண்டிய கோரிக்கை ஆந்திரத்தைப் போன்று குழுக்களாக வகைப்படுத்தி அந்தந்த சாதி குழுக்களின் எண்ணிக்கைக்கு உகந்த வகையில் இடஒதுக்கீட்டைக் கோருவதே நியாயமானதாகவும் காரிய சாத்தியமுள்ள ஒன்றாகவும் இருக்கும். அதேபோன்று உள் ஒதுக்கீடு கோரிக்கை குறித்து இன்னொரு அவநம்பிக்கையும் தலித் தோழர்களிடம் நிலவுகிறது. புதிய பொருளாதாரக் கொள்கை மற்றும் தாராளமயமாக்கலின் விளைவாய் வேலை வாய்ப்புகள் அருகிவிட்ட இன்றைய சூழ்நிலையில் இடஒதுக்கீடு என்பதே பொருள் இழந்து விட்ட நிலையில் உள்ஒதுக்கீடு கோரிக்கை எழுவதில் என்ன பொருத்தப்பாடு இருக்கிறது என்னும் கேள்வி எழுப்பப்படுகிறது.

அரசுத் துறைகளில் வேலை வாய்ப்புகள் குறைந்து கொண்டே வருவது உண்மைதான். அதே நேரத்தில் இருக்கும் வாய்ப்புகளை பகிர்ந்து கொள்வது என்பது மிகவும் நியாயமான ஒன்றாக இருக்கும். மேலும் இடஒதுக்கீட்டுக் கொள்கை இன்னும் தேவையுள்ள, பொருத்தப்பாடுள்ள நடைமுறையாகவே இருக்கும் என்பதில் அய்யமில்லை. தனியார் துறையில் ஒதுக்கீடு என்ற கோரிக்கை நிறைவேறும் பட்சத்தில் புதிய வாய்ப்புகளையும், சாத்தியங்களையும் வழங்குவதாக உள்ஒதுக்கீடு கோரிக்கை விளங்கும். மேலும் இடஒதுக்கீடு என்பது வேலைவாய்ப்பில் மட்டும் கடை பிடிக்கப்படுவதில்லை. கல்வி, அரசியல், பதவி என்று வேறு புலங்களிலும் அது நடைமுறைப்படுத்தப்படுவது என்பதைப் புரிந்து கொண்டால் உள்ஒதுக்கீடு கோரிக்கையின் நியாயம் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.

4

வகைப்படுத்தி உள்ஒதுக்கீடு வழங்கும் நடைமுறை 1.04.2000 முதல் 5.11.2004 வரை நான்காண்டுகள் ஆந்திராவில் நடைமுறையில் இருந்தது. அந்த நாட்களில் அனைத்து தலித் சாதிகளும் தங்களுக்கு உரிய பங்கினை சமமான விகிதத்தில் அனுபவித்தன. அதையே ஆந்திர தலித் ஒற்றுமையின் பொற்காலம் என்று சொல்ல முடியும் என்று குறிப்பிடுகிறார் பேராசிரியர் முத்தையா

5.

மாலா மஹாநாடு அமைப்பின் பின்புலத்தில் மாலாக்கள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வகைப்படுத்தி உள்ஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்று தீர்ப்பளித்ததின் விளைவாக உள்ஒதுக்கீடு வழங்கும் முறை தடை செய்யப்பட்டு விட்டது.
உச்சநீதிமன்ற தீர்ப்பைப் பரிசீலித்த சட்ட வல்லுநர்களின் கருத்துப்படி வகைப்படுத்தி உள்ஒதுக்கீடு வழங்கும் முறையை மீண்டும் கொண்டு வர மாற்று வழிமுறை பரிந்துரைக்கின்றனர். அவை 1) இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 341வது பிரிவுடன் குடியரசுத் தலைவர் அறிவித்த அட்டவணைச் சாதிகளின் பட்டியலை மீள்வகைப்படுத்த மாநில அரசிற்கு அதிகாரம் அளித்து 3வது ஷரத்தை இணைப்பது 2) 1950 ஆம் வருடத்திய அரசியலமைப்புச் சட்ட உத்தரவைத் (அட்டவணைச் சாதிகள்) திருத்தி இந்திய பாராளுமன்றத்தில் ஒரு சட்டத்தை நிறைவேற்றுவதின் மூலம் மாநிலங்களின் தற்போதைய அட்டவணைச் சாதிகளின் பட்டியலுக்கு பதிலாக அட்டவணைச் சாதிகளை வகைப்படுத்திய பட்டியலை அந்தந்த மாநிலம் தொடர்பான உத்தரவின் பகுதி 1-ல் சேர்ப்பது. இவற்றுள் முதலில் சொன்ன வழிமுறையே மிகவும் உசிதமானது என்று வல்லுநர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

மொத்தத்தில் உள்ஒதுக்கீடு என்ற நடைமுறை ஆந்திர எல்லையை கடந்து ஒரு தேசிய பிரச்சனை என்கிற நிலையை அடைந்து விட்டது. இன்று தமிழகத்தில் மட்டுமல்லாது ஆந்திரம், கர்நாடகம் என்று அண்டையில் உள்ள பிற தென்இந்திய மாநிலங்களிலும் உள்ஒதுக்கீட்டை வலியுறுத்தி தலித் இயக்கங்கள் வலுவாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வட இந்தியாவிலும் வால்மீகி சாதி சார்ந்த இயக்கங்கள் பஞ்சாபில், ஹரியானாவில் மற்றும் காஷ்மீரத்தின் சில பகுதிகளில் உள்ஒதுக்கீடு கேட்டு வலுவான போராட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றன. ஏனெனில் பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் 1975-இல் இருந்து உச்சநீதி தீர்ப்பு வந்த 2004 ஆம் வருடம் வரை வகைப்படுத்தி உள்ஒதுக்கீடு வழங்கும் நடைமுறை அமலில் இருந்து வந்திருக்கிறது. ஆந்திராவில் தோன்றிய மாதிகா இயக்கத்திற்கு முன்னோடியாய் திகழ்ந்தது வால்மீகி பஞ்சாயத்து என்ற இயக்கமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

அதே நேரத்தில் உள்ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் காரணமாக எழுந்துள்ள சிக்கல்களை சரி செய்ய பாராளுமன்றம் தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது. பாராளுமன்றம் தலையிட வேண்டுமெனில் அரசியல் கட்சிகளுக்கு அரசியல் நிர்ப்பந்தம் ஏற்பட்டாலொழிய பாராளுமன்றம் அசைந்து கொடுக்கப் போவதில்லை. அந்த அரசியல் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துவதில் உள்ஒதுக்கீட்டுக்காகப் போராடும் தலித் இயக்கங்கள் மட்டுமல்லாமல் சமூக நீதிக்காகப் போராடுகிற ஏனைய சனநாயக சக்திகளும் குரல் கொடுக்க வேண்டியது அவசியம்.




நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com