Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
பிப்ரவரி 2007
‘வெயில்’ திரைப்படத்தை முன்வைத்து

வெயிலில் கரைந்திடாத வெளிகள்
ஜீவன்பென்னி

வாழ்நிலை நிலப்பரப்புகளின் மையப்புள்ளிகளை அழகியலின் நுண்தன்மைகளால் இயங்குநிலை காட்சிகளாக மாற்றப்பட்ட திரைக்கதைகளே பார்வையாளர்களை முற்றிலும் பரபரப்பான சூழ்நிலைக்கு கொண்டு செல்கின்றன. அவ்வப்போது தமிழில் வெளிவரும் இவ்வகைத் திரைப்படங்கள் பெரும் வரவேற்பைப் பெறுகின்றன. ஆனால் இவை மாற்று சினிமா அல்ல, மாற்று சினிமாவிற்கான எந்தவொரு முயற்சியும் தமிழ் திரைப்படங்களின் பரப்பில் இல்லவேயில்லை. இது போன்ற திரைப்படங்கள், தொடர்ந்து வெளிவரும் திரைப்படங்களின் ஒப்பீட்டளவில் சிறப்பானது அவ்வளவே. வெயில் திரைப்படம் தற்போதைய உதாரணம்.

Bharath and Pasupathi ‘வெயிலி’ன் திரைப்பரப்பில் நேர்கோட்டில் செல்லாத முன் பின்னான திரைக்கதை உத்தியே பார்வையாளனின் எதிர்நோக்கு சம்மந்தப்படுத்திய காட்சிகளைத் தொடர்ந்து வரைகின்றன. தமிழ் சினிமாவிற்கே உரிய விதி விலக்கு, அமீரின் ‘ராம்’, எடுத்துச் சொல்லப்படும் திரைக்கதையில் கதாபாத்திரங்கள் அவரவருக்கு உரிய காட்சிகளை மட்டும் சொல்லுதலடிப்படையிலான காட்சி அமைப்புகள் - மையப் பார்வையற்ற பொதுப் பார்வையின் அடிப்படையில் நகரும் திரைக்கதையே இங்கும் சொல்லப்படுகிறது - எடுத்துச் சொல்லப்படும் திரைக்கதையில் இதுவொரு பெரிய முரண்-இயக்குநரின் சுதந்திரத்திற்கேற்ப யுத்திகளின் அடிப்படையிலேயே திரைக்கதை அமைந்திருக்கிறது. சினிமா யதார்த்தமே உருவாக்கப்படுகின்ற யதார்த்தம், அதை எவ்வளவு வெளிநோக்கில் சூழ்நிலைகளின் கருத்தியலில், சதவீதங்களினடிப்படையில் திரையில் வெட்டப்பட்ட காட்சிகளினூடே பரப்புதலே சினிமாவின் படைப்பமைப்பாக விரிகிறது.

சிறுநகரங்களில் அலையும் மனிதர்களைப் பற்றிய படங்களும், அல்லது பெருநகரங்களில் அலையும் சிறுநகரவாசிகளின் வாழ்க்கைப் பற்றிய படங்களுமே சமுதாயத்தின் இதயங்களில் வடுக்களை ஏற்படுத்துகின்றன. ‘வெயில்’ சிறுநகர மனிதனொருவனின் வயது சார்ந்த நிகழ்வுகளையும், வெற்றிகளையும், தோல்விகளையும், ஏக்கங்களின் தவிப்புகளையும் சினிமாவிற்குரிய அனைத்து செயல்பாடுகளினூடும், உறவுகளினூடும் திரைக்கதையின் மெல்லிய மற்றும் இறுகிய காட்சிகளினூடாகவும் சொல்லிச் செல்கிறது. எல்லாவற்றின் அழகியலும் உணர்ச்சிகளின் அடிப்படையில் மிக எளிதாக ரசிக்கப்படக் கூடிய வாய்ப்புகளிருக்கின்றன. எந்தவொரு ஒப்பீடுமற்ற, செயற்கை வெளிச்சங்களலையாத காட்சிப்படுத்தல்கள் எளிய உறவுகளின் இறுக்கமான ரணங்களை மெலிதாக வரையவே செய்கின்றன.

மேலும் அவை பார்வையாளனால் நினைவினடிப்படையில் உடனடியாக மீளுருவாக்கம் செய்யவும்படுகின்றன -குறிப்பாக சிறு வயது விளையாட்டுகள், கோபங்கள், எதிர்பால் ஈர்ப்புகள் - வெயிலின் பின்னணியான காட்சியமைப்புகளினூடான காமிராக் கோணங்களும் அவற்றின் நகர்வுகளும் முக்கியமாக பசுபதியின் தனிமையான குறியீட்டு காட்சி ளும், பசுபதியின் தந்தையின் கோபமுக பாவனைகளும் வெற்றிகரமான செயல்முறை வடிவம் பெற்றுள்ளன. பரத்தின் கோபக்கார வார்த்தைகளும், பாவனாவின் மெல்லிய அசைவுகளும் இதழோரத்தில் புன்னகை தொற்றச் செய்து கொள்ளும் மௌனங்களற்ற காட்சிகளாகும்.

பின்னணியில் இணைகின்ற இசை காலை மாலை - வெயிலின் இதத்துடனும் மதிய வெயிலின் உக்கிரத்துடனும் வெறுமையுடனும் மிகச்சில இடங்களில் இரைச்சலாகவும் பரவி நிறைந்திருக்கின்றன. வெற்றுத் திரையரங்கில் பசுபதி நிற்கும் குறியீட்டு காட்சியே, நுணுக்கமான தனிமைப்படுத்தப்பட்ட மனிதனுடைய வெறுமையிலான நிலப்பரப்பின் ஆழங்களை உருவாக்குகின்றன. உறவுகள் நிறைந்த வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட பசுபதியின் வெளி ஸ்ரேயாரெட்டியாலும், அவளது குழந்தையாலும் நிரப்பப்படும் காட்சி அமைப்பு சிறு நீரோடையொன்றின் வழியென விரிந்து குளிரச் செய்கிறது. எல்லாக் கதாபாத்திரங்களும் ஏதாவதொரு வகையில் தன்னிடமுள்ள ஒன்றை இழப்பதற்காகவும், தன்னிடமில்லாத ஒன்றை அடைவதற்குமான நெருக்கமான வாழ்வின் நுண்ணமைப்புகளைக் கொண்டுள்ளன. அதுவே திரைக்கதைக்கான அனைத்து நிலைகளிலும் காட்சிகளினூடே பரவலாக்கப்பட்டிருக்கின்றன. சீரான இடைவெளிகளில் தொடரும் பாடல்கள் அதற்கு முன்பான காட்சிகளின் அகபுற எல்லைகளை மாற்றியமைக்கின்றன.

பசுபதியின் நுணுக்கமான முக அசைவுகளும், உடலசைவுகளும், வசன உச்சரிப்பிற்கான வெளியீட்டு நேர இடைவெளி வேறுபாடும் திரைக்கதையின் மையமாக சுழன்று விரிகின்றன. மிக தேர்ந்த நடிப்பென்பதும் காட்சியமைப்பென்பதும் இயக்குநரின் இறுதி சொல்லிலே நிறைவேற்றப்படுகின்றன என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். உள்ளூர் வியாபாரப் போட்டிகளும் அவை சார்ந்து உருவாக்கப்பட்ட தொடர் காட்சியமைப்பும், பன்றிகளினூடாக அலையும் வினாடிகளும் திரைக்கதை நகர்தலுக்கான சிறு உதவிகளை செய்கின்றன. நாடகத் தன்மையான நீண்ட பாடல் காட்சிகளில் குலதெய்வ வழிபாடும், விளம்பர யுத்திகளும், இலவச தொலைக்காட்சி அரசியல் குறியீட்டு காட்சிகளும் பின்பாதியில் பார்வையாளனை மிகவும் நெருக்குகின்றன, அடுத்தடுத்த காட்சிகளில் தொடக்க காட்சிக்கான முடிச்சுகள் திறமையான பார்வையாளனிடம் தொடர்ந்து அவிழ்கின்றன.

மேலும் உணர்ச்சிக் கோர்வைகளின் காட்சிகளாக மட்டுமே படம் நகர்ந்து முடிவடைகின்றது. அரங்க அமைப்புகளற்ற வெளியும், வண்ணங்கள் பூசிக்கொள்ளாத கதாபாத்திர முகங்களும், துளியும் நிலப்பரப்பு காட்சிகளிலிருந்து வேறுபடாத தன்மையுமே ‘வெயிலி’ன் திரைப்பரப்பை மேலும் அழகானதாக அமைத்திருக்கின்றன. எளிய மனிதர்களால் உருவாகும் எளிய உறவுகளின் ரணங்கள் எளிமையாக இருப்பதில்லை. வெயிலின் உக்கிரங்கள் எப்பொழுதும் பாராட்டும்படியாக இருந்ததேயில்லை. ஆனால் ‘வெயிலி’ல் கரைந்திடாத வெளிகளமைந்த நிலங்களின் காட்சியமைப்பும் பதிவுகளும், கதாபாத்திரங்களும், உருவாக்கக் குழுவும், தயாரிப்பாளரும் தாராளமான பாராட்டுக்குரியவர்கள்.

திரைப்படங்களின் வருகைகளை திருவிழாவாகக் கொண்டாடும் தமிழ் ரசிகர்களின் ஆவல்களும் ரசனைகளும் திரையரங்கம் சார்ந்த பசுபதியின் காட்சிகளில் மிகத் தெளிவாகக் காட்டப்படுகிறது. பசுபதி-தங்கம் காதல் காட்சிகளில் சுற்றிலும் ஒட்டியிருக்கும் சுவரொட்டிகள் கூட மிகக் கவனமாக ஒட்டப்பட்டுள்ளன. அவை நேர்த்தியான பல காட்சிகளின் சூழ்நிலை பின்னணிகளுடன் ஒப்பிடக் கூடியவை. பார்வையாளனைக் கலைக்கும் உக்கிரத்துடனான எளிமையே வெயில் திரைப்படம் பற்றிய பேச்சை விரிவாக்கிக் கொண்டிருக்கும் நெடு நாளைக்கு.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com