Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
பிப்ரவரி 2007
தொங்கும் தோட்டத்தில் நரபட்சிணிகள்
எம்.அசோகன்

எங்கேனும் ஓரிடத்தில் அநீதி நடந்தால் அது எங்கெங்கும் நீதிக்கு ஆபத்தாகும் - மார்டின் லூதர் கிங்

Saddam சதாம் உசேன் அமரராகிவிட்டார். மரணத்தின் தருவாயிலும் அவர் தன் நாட்டு மக்களை ஒற்றுமையாக இருக்கும்படி வலியுறுத்தினார். அதற்குக் காரணம் இல்லாமலில்லை. ஏகாதிபத்திய அமெரிக்கா தன்னை ஒரு ஜனநாயக நாடு என்று கூறிக் கொள்வது மட்டுமின்றி எல்லா வகையான பிரிவினைவாதத்திற்கும் எதிரி போல் காட்டிக்கொள்ளும். ஆனால் உலகமெங்கும் உள்ள பல்வேறு நாடுகளின் பிரிவினைவாத சக்திகளுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரவளிப்பது, பிரிவினைவாதத்தைத் தூண்டுவது அதன் அன்றாடப் பணிகளில் ஒன்று.

சீனாவில் திபெத் பிரிவினை வாதம், இந்தியாவில் காஷ்மீர் பிரச்சனையில் அது மூக்கை நுழைக்க எடுக்கும் இடைவிடாத முயற்சி, யுகோஸ்லாவியாவைத் துண்டாடியது என்று பல உதாரணங்களைக் கூறலாம். மேலும், முன்னாள் சோவியத் யூனியனில் கம்யூனிஸ்ட் ஆட்சியை சதி செய்து கவிழ்த்ததோடு அது நின்றுவிட வில்லை. அது ஒரே நாடாக இருந்தால் தனது நலன்களுக்கு என்றும் ஆபத்து என்பதாலேயே அதை இருபத்தி இரண்டு துண்டாக ஆக்குவதற்கு தன்னால் இயன்ற அனைத்தையும் செய்தது. அதில் வெற்றியும் பெற்றது. அப்படி துண்டாடிவிட்டு ரஷ்யாவைச் சுற்றியிருக்கும் சின்னச் சின்ன நாடுகளிலெல்லாம் தன்னுடைய ஆதரவாளர்களை ஆட்சியில் அமர்த்தவும், தனக்கு ஆகாதவர்களை வீழ்த்தவும் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருக்கிறது.

ஏன் அப்படிச் செய்ய வேண்டும் என்ற கேள்விக்கான பதில் எளிமையானது. உலகம் முழுவதையும் தன்னுடைய காலனியாக மாற்றி விடத் திட்டமிடும் அமெரிக்க ஏகாதிபத்தியம் எந்த ஒரு நாடும் பலம் பொருந்தியதாக இருக்கக் கூடாது என்று நினைக்கிறது. பலமான நாடுகளை ஆக்கிரமிப்பது அவ்வளவு சுலபமில்லை. ஒரு வேளை முடியாமல் கூடப் போகலாம். எனவே பிரித்தாளு அல்லது துண்டாடு என்பதே அதன் வியூகம்.

இப்போது ஈராக்கிலும் அதைத் தான் செய்யத் திட்டமிட்டிருக்கிறது. ஈராக்கை சன்னி பிரிவு நாடு, ஷியா பிரிவு நாடு, குர்திஸ்தான் என்று மூன்றாக வெட்டிக் கூறு போட நினைக்கிறது. இன்று நேற்று போடப்பட்ட திட்டமல்ல. நீண்ட காலத்திற்கு முன்பே வகுக்கப்பட்ட திட்டம். ஈராக்கின் எண்ணை வளம் இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

“புஷ்சின் சிந்தனைகளையும் செயல்களையும் தீர்மானிக்கும் புதிய பிற்போக்குவாதிகள் என்றழைக்கப்படும் அதிதீவிர வலதுசாரிகள் ஏகாதிபத்திய நோக்கங்களை அடைய விரிவானதொரு திட்டம் வகுத்துள்ளார்கள். அதில் மேற்காசியப் பகுதிக்கென அவர்கள் தீட்டியுள்ள திட்டம் இதுதான். அந்தப் பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர நீண்ட நாள் கூட்டாளியான இஸ்ரேலுடன் பரஸ்பர உதவி மற்றும் ஒற்றுமையுடன் செயல்படுவது, அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு நாடும் வேறுவிதமாக மாற்றி அமைக்கப்பட வேண்டும். சொல்லிச் சம்மதிக்க வைத்தோ, நிர்ப்பந்தப்படுத்தியோ, ராணுவ ஆக்கிரமிப்பின் மூலமோ ஆட்சிகளை மாற்றியமைப்பது, அந்தந்த நாட்டு மக்களை மதவெறிமயமாக்கியும், இனவெறி மயமாக்கியும், உள்நாட்டு யுத்தத்தைத் தூண்டுவது, தேவைப்படும் இடங்களில் அந்நாடுகளை உடைப்பது, மத, இன, பிரதேச அடையாளங்களின் அடிப்படையிலான குட்டி குட்டி நாடுகளாகவோ அல்லது பெரும் குடியிருப்புகளாகவோ ஆக்குவது, தங்களின் சக்தியையும், செல்வாதாரங்களையும் அழித்துக் கொள்கின்ற வகையில் பன்முக மோதல்களில் நிரந்தரமாக அவற்றை மூழ்கடிப்பது.

“இந்த திட்டத்தின் முதல் நடவடிக்கையாக (1975-1990களில் லெபனானில் செய்தது போல்) ஈராக்கை மதவெறிமயாக்கி உள் நாட்டு யுத்தத்தில் மூழ்கடிப்பதற்காக அந்நாடு ஆக்கிரமிக்கப்பட்டது”. (அஸ்ஜாஸ் அகமது, பிரண்ட் லைன், மார்ச் 11.2006)

இந்த எண்ணத்தோடு ஈராக்கை ஆக்கிரமிக்கும் முன்பே அதற்கு ஏற்ற சூழலை அங்கு மற்ற சில நாடுகளின் துணையோடு உருவாக்கிவிட்டது. சதாம் பிறப்பால் சன்னி பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் ஷியாக்களையும், குர்துகளையும் அவரது ஆட்சிக்கு எதிராகத் தூண்டிவிட்டது. அமெரிக்காவைப் பொருத்த வரையில் 1991 வளைகுடா யுத்தத்திற்குப் பின் அதில் தீவிரமாக இருந்தது. ஈரானுக்கும் இதில் பங்கு உண்டு. 1979ல் சதாம் அதிகாரத்திற்கு வந்தார். இது நடந்த சில மாதங்களிலேயே பக்கத்து நாடான ஈரானில் அமெரிக்காவின் எடுபிடியான மன்னர் ஷாவின் ஆட்சி இஸ்லாமிய மதவாதிகளால் தூக்கி எறியப்பட்டது. ஈரானின் புதிய ஆட்சியாளர்கள் சும்மா இருக்கவில்லை. மதச்சார்பற் சதாமின் ஆட்சிக்கு எதிராக ஈராக் ஷியா பிரிவு மக்களைத் தூண்டிவிட்டுக் கொண்டே இருந்தனர். பாக்தாதில் இருக்கும் கடவுளற்ற அரசாங்கத்தைத் தூக்கி எறியுங்கள் என்று வெறியேற்றிக் கொண்டே இருந்தனர். தன்னுடைய ஆளை ஓட ஓட விரட்டிய அயத்துல்லா கொமெனியின் ஈரானிற்கு எதிராக யுத்தம் தொடுக்குமாறு அமெரிக்கா சதாமிற்கு உசுப்பேற்றியது.

ஈராக் மக்களின் ஒற்றுமையைக் குலைக்க ஈரான் முயற்சித்துக் கொண்டிருந்ததால் சதாம் அமெரிக்கா விரித்த வலையில் வீழ்ந்தார். யுத்தம் தொடுத்தார். மேற்கத்திய நாடுகள் மற்றும் சன்னி பிரிவினரின் ஆதிக்கத்திலிருந்த பெரும்பாலான அரபு நாடுகள் இந்த யுத்தத்திற்கு முழு ஆதரவு கொடுத்தன. விளைவு தன்னுடைய நாட்டிலிருந்த ஷியா பிரிவு மக்களின் வெறுப்பிற்கு ஆளானார். அமெரிக்கா அந்த வெறுப்பை ஊதி ஊதி ஊட்டி வளர்த்தது. நண்பர்களின் ஆட்சியானாலும் அதைப் பலகீனப்படுத்திக் கொண்டே இருக்கும். “முதல் வளைகுடா யுத்தத்தில் ஈராக் குவைத்திலிருந்து பின் வாங்கிய பின் நாட்டின் தெற்கு பகுதியிலிருந்த ஷியாக்களை சதாமிற்கு எதிராகக் கலகம் செய்யுமாறு மேற்கு நாடுகள் தூண்டின. அவர்களும் கலகம் செய்தனர். ஆனால் அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் அவர்களைக் கைவிட்டனர். ஈராக் ராணுவம் கலகத்தை ஒடுக்கியதில் பல நூற்றுக்கணக்கான ஷியாக்கள் கொல்லப்பட்டனர்”. (ஜான் செரியன். பிரண்ட் லைன், ஜனவரி 12.2007)

அமெரிக்கா கைவிட்டது என்றால் எப்படி? ஈராக் குவைத்தை ஆக்கிரமித்தால் 30 நாடுகளைச் சேர்த்துக் கொண்டு ஈராக் ராணுவத்தை குவைத்திலிருந்து ஈராக்கிற்குள் வெகு தூரம் விரட்டியடித்து, பல்லாயிரக்கணக்கான ஈராக் வீரர்களைக் கொன்றழித்த அமெரிக்கா நினைத்திருந்தால் ஷியாக்கள் படுகொலை செய்யப்பட்டதையும் தடுத்திருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. சதாமின் மீது ஷியாக்களின் வெறுப்பு நீடித்து வளரட்டும். அது பின்னாளில் பயன்படக்கூடும் என்று கணக்கு போட்டிருக்கக்கூடும். அந்த கணக்கு சரியாகவும் இருந்தது. 2003ல் அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்த போது ஷியாக்கள் அதை வரவேற்றனர். ஆதரித்தனர். இன்று ஈராக்கில் உள்ள பொம்மை அரசாங்கத்தில் அவர்களின் ஆதிக்கமே அதிகம். சதாம் தூக்கிலிடப்பட்டதை ஈராக் ஷியாக்கள் கொண்டாடினர்.

அது போலவே குர்து இன மக்களையும் தனி நாடு கேட்டுப் போராடத் தூண்டியதும் சாட்சாத் அங்கிள் சாம்தான். இன்று நேற்றல்ல. நீண்ட நாட்களாக குர்து பிரிவினைவாதிகளுக்கு அது தனக்குத் தேவைப்படும் நேரங்களிலெல்லாம் உதவி வருகிறது.

1958ல் அப்துல் கரீம் காசிம் என்கிற ராணுவ ஜெனரல் அப்போது ஈராக்கில் அதிகாரத்திலிருந்த மேற்கு நாடுகளின் ஆதரவு பெற்ற மன்னராட்சியைத் தூக்கி எறிந்துவிட்டு அதிகாரத்தைக் கைப்பற்றினார். மன்னராட்சியை ஒழித்துக் கட்டிய அந்த ராணுவப் புரட்சியில் ஈராக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு முக்கியப் பங்குண்டு. கம்யூனிஸ்ட்கள் அந்த ஆட்சியில் பங்கெடுக்கவில்லை. எனினும் காசிம் அவர்களோடு நெருக்கமான தொடர்வு வைத்திருந்தார். இது அமெரிக்காவிற்குப் பிடிக்குமா என்ன? தன்னுடைய எடுபிடியை விரட்டியதும் அல்லாமல் கம்யூனிஸ்டுகளோடு கைகோர்த்த காசிமைக் கவிழ்ப்பதற்கு எல்லா சதியிலும் இறங்கியது.

“கெய்ரோ, டமாஸ்கஸ், டெஹ்ரான், பாக்தாத் என்று பல இடங்களிலும் சிஐஏ ஒற்றர்கள் காசிமின் எதிரிகளை ஒன்று திரட்டினார்கள். குவைத்தில் அமெரிக்கா ஒரு தளம் அமைத்தது. ஈராக்கின் தகவல் பரிமாற்றங்களை எல்லாம் ஒட்டுக் கேட்டது. குர்துகள் உள்ளிட்ட கலகக்காரர்களுக்கு உத்தரவுகள் அனுப்பியது. குர்துகளுக்கு ஆயுதங்கள் கொடுத்தது”.

குர்துகள் அப்போதே பிரிவினைக் கலகத்தில் ஈடுபட்டிருந்தனர். இத்தோடு முடியவில்லை விஷயம். 1963ல் காசிம் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அவசர அவசரமாக ஒரு விசாரணை நடத்தப்பட்டு காசிம் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்க ஆதரவுடன் அமைந்த பாத் கட்சி ஆட்சியிடம் சிஐஏ ஒரு பட்டியலைக் கொடுத்தது. கம்யூனிஸ்டுகள் மற்றும் இதர இடதுசாரிகள் பட்டியல், டாக்டர்கள், இன்ஜினியர்கள், ஆசிரியர்கள், வழக்குரைஞர்கள் மற்றிதர தொழில் நிபுணர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் என நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். சதாம் இந்தப் படுகொலைகளில் நேரடியாக பங்கெடுத்தார். அப்படிப்பட்ட ஒருவரை இன்று ஏன் கம்யூனிஸ்டுகள் ஆதரிக்கிறார்கள். அவருக்காக் குரல் கொடுக்கிறார்கள். அவரது படுகொலையைக் கண்டித்து ஏன் ஆர்ப்பாட்டங்கள் நடத்துகிறார்கள் என்ற கேள்வி எழும். அதைப் பின்னர் பார்ப்போம்.

“அமெரிக்கா புதிய ஆட்சிக்கு ஆயுதங்களையும் கொடுத்தது. அந்த ஆயுதங்கள் குர்துகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது. அதாவது காசிமிற்கு எதிராகக் கலகம் செய்ய எந்த குர்துகளை ஆதரித்ததோ அதே குர்துகளை ஒடுக்க ஆயுதங்கள், குர்துகளைப் பயன்படுத்திவிட்டு வேலை முடிந்ததும் கைவிட்டு விட்டது”. (ரோஜர் மோரிஸ் பிரண்ட் லைன், ஏப்ரல் 2003).

1991ல் ஷியாக்களுக்கு நேர்ந்த அதே கதி. எனினும் அமெரிக்கா தொடர்ந்து ஈராக்கிலுள்ள பிரிவினைவாத சக்திகளுக்கு மறைமுகமாக உதவிகளைச் செய்து கொண்டுதான் இருந்தது. குறிப்பாக, 1991 யுத்தத்திற்குப் பின்னால்,

“அமெரிக்கா உளவு நிறுவனங்கள் ஈராக் அதிருப்தியாளர்களை ஆதரித்து வளர்த்தன. அவர்களுக்கு நிதியுதவி செய்தன. ஈராக்கிற்கு வெளியே வாழ்ந்து கொண்டிருந்த சதாம் ஆட்சியின் எதிர்ப்பாளர்களுக்கு உற்சாகமும் ஊக்கமும் அளித்தன. அவர்களது கருத்துக்களுக்கு ஊடகங்களில் தாராளமான இடம் கொடுக்கப்பட்டது. ஊடகங்கள் கொடுத்த சர்வதேச வெளிச்சத்தைப் பயன்படுத்திக் கொண்டு சதாம் உசேன் அரசாங்கத்தின் ‘தவறுகளை அம்பலப்படுத்தினர்’. ராசாயன ஆயுதங்கள் மற்றும் அணு ஆயுதங்கள் போன்றவை பெருமளவில் தயாரிக்கப்படுவதாகக் கூறினர்”. (கே.எஸ்.தட்சிணாமூர்த்தி, தி ஹிந்து, ஜனவரி 9, 2007).

அதாவது சதாமிற்கு எதிரான பொய்ப் பிரச்சாரம் செய்தனர். ஈராக், ஈரான் போரின்போது இரு நாடுகளும் ரசாயன மற்றும் உயிரி ஆயுதங்களைப் பயன்படுத்தியதும், ஈராக் அணு ஆயுதங்களைத் தயாரிக்க முயற்சித்ததும் உண்மைதான்.

“1970களின் மத்தியில் ஈராக் ராணுவம் பலமான சக்தியாக உருவெடுத்துவிட்டது. ஈராக் பிரதானமான அரபு நாடாக வேண்டும் என்று சதாம் விரும்பினார். அதை மனதில் கொண்டு தன்னுடைய விஞ்ஞானிகளை ரசாயன. உயிரி மற்றும் அணு ஆயுதங்களைத் தயாரிக்குமாறு உத்தரவிட்டார். மூன்று வகை ஆயுதங்களும் இஸ்ரேலிடம் நிறைய இருந்தன. இஸ்ரேல் சதாமின் ஆணு ஆயுதத் திட்டத்தை முளையிலேயே கிள்ள நினைத்தது. 1988ல் ஓசிராக் அணு உலையைத் தாக்கியது. பெரும் நாசம் விளைவித்த 1991 வளைகுடா யுத்தத்திற்குப் பின் பேரழிவு ஆயுதங்கள் தயாரிக்கும் எல்லா நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும் என்று ஐநா உத்தரவிட்டபடி ஈராக் அரசாங்கம் தன்னுடைய அத்தகைய திட்டங்களைக் கைவிட்டது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்”. (ஜான் செரியன், பிரண்ட் லைன், ஜனவரி 12.2007)

சதாம் அத்திட்டங்களைக் கைவிட்டது உண்மைதான். இன்று வரை ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. 1991லிருந்து அமெரிக்கா ஈராக்கிற்கு உள்ளேயும் வெளியேயும் சதாம் ஆட்சிக்கு எதிராக, அதைக் கவிழ்த்து, அதனிடத்தில் தனக்கு வேண்டிய ஒருவரது ஆட்சியை அமைக்க எடுத்த எல்லா முயற்சிகளும், சதிகளும் உடனடிப் பலனைத் தரவில்லை. ஐநா சபையின் ஒத்துழைப்போடு விதிக்கப்பட்ட மிகக்கடுமையான பொருளாதாரத் தடைகள் கூட பலிக்கவில்லை. (சுமார் எட்டு லட்சம் குழந்தைகளையும், பெண்களையும் அவசிய மருந்துகளின்றி கொன்றதுதான் அந்த தடைகளின் ஒரே சாதனை) சதாம் அந்த அளவிற்கு பலமான தடுப்பரண் போட்டிருந்தார்.

சதாம் பயங்கரமானவர், கொடூரர் என்கிற சித்திரத்தை வரைந்துவிட்டு, பேரழிவு ஆயுதங்கள் வைத்திருக்கிறார் என்ற பெயரில் 2003ல் ஈராக்கை ஆக்கிரமித்ததும், சதாம் ஆட்சியை அகற்றியதும் தெரிந்தது தான். இன்றுவரை இந்த யுத்தத்தினால் சுமார் ஏழு லட்சம் ஈராக்கியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தங்கள் இயல்பிற்கேற்ப அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளும், அவர்களது எடுபிடிகளும் சதாமைக் காட்டுமிராண்டித்தனமாகத் தூக்கில் போட்டதும் தெரிந்ததுதான்.

தூக்குமேடைக் காட்சிகள் நேரடியாக இல்லையெனினும் உடனடியாக ஒளிபரப்பப்பட்டன. சதாமின் உடலைக் காட்டிவிட்டு அவரது கதை முடிந்தது என்று அறிவிப்பதற்காக அப்படிச் செய்தோம் என்றிருக்கலாம். ஆனால் தூக்குமேடைக் காட்சிகளையும், அவரது கழுத்தில் கயிறு இறுக்கப்படுவதையும், அங்கு நடந்த உரையாடல்களையும் ஒளிபரப்ப வேண்டிய நோக்கம் என்ன?

மேற்காசியப் பகுதியில் உள்ள மற்ற ஆட்சியாளர்களுக்கு ஒரு மிரட்டலாக இருக்கலாம் என்பது ஒன்று. ஆனால் ஒளிபரப்பினால் தான் அந்த பயம் வரும் என்றில்லை. ஆக வேறு நோக்கம் இருக்கிறது. தண்டனை வழங்கிய அல்லது வாயசைத்த (வசனம் எழுதியது மற்றும் டப்பிங் பேசியது புஷ்) நீதிபதி ஒரு குர்து, “தண்டனையை நிறைவேற்றிய” அனைவரும் ஷியாக்கள். அவர்கள் அந்த இறுதி தருணத்தில் சதாமோடு நடத்திய உரையாடல்கள் உள்நோக்கம் கொண்டவை. ஏனெனில் சதாம் சன்னி பிரிவைச் சேர்ந்தவர். (ஆனாலும் அவர் மதச்சார்பற்றவர் என்பதில் எந்த சந்தேகமும் தேவையில்லை.)

“சதாமிற்கும் அவரைத் தூக்கில் போட்டவர்களுக்கும் இடையே நடந்த உரையாடல் மற்றும் அவர் தூக்கில் தொங்கும் காட்சிகள் இனப்பிளவுகளை மேலும் ஆழப்படுத்தக் கூடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தூக்குமேடை அறையில் ஒரு நபர் பிரதமர் நூரி அல் மாலிகி சார்ந்திருக்கும் ஷியா தாவாக் கட்சியின் ஸ்தாபகரைப் புகழ்வதை அல்ஜசீரா தொலைக்காட்சி ஒளி பரப்பியது.

“ஷியா மதகுரு முக்தாதா அல் சதாரைக் குறிக்கும் வகையில் ஒருவர் “முக்தாதா, முக்தாதா, முக்தாதா” என்று கூவினார். அவருடைய தந்தை சதாம் அரசாங்கத்தால் கொல்லப்பட்டார் என்பது தெரிந்ததே, “முக்தாதா..? இதுதான் நம்மால் எதிர்பார்க்க முடியுமா” என்று சதாம் அலட்சியமாக பதில் கூறினார்.

Saddam “பின்னர் இஸ்லாம் மதக் கோட்பாடுகளை சதாம் ஓதுவது காட்டப்பட்டது”. “அல்லாவைத் தவிர வேறு கடவுளில்லை. முகம்மதுவே கடவுளின் தூதர் என நான் உறுதி அளிக்கிறேன். அல்லாவைத் தவிர வேறு கடவுளில்லை. முகம்மதுவே....” என்றவர் சொல்லச் சொல்ல தரைக் கதவு திறக்கிறது அவர் தொங்குகிறார். சில கணங்களில் “கொடுங்கோலன் வீழ்ந்தான், தொலையட்டும் சனியன்” என்று ஒரு குரல் கத்துகிறது.

“விழிகள் விரிந்திருக்க, தலை மேல் நோக்கித் திருகியிருக்க சதாமின் உடல் தூக்குக் கயிற்றில் ஆடிக்கொண்டிருக்கும் காட்சியில் கேமரா உறைகிறது”. (அடுல் அனேஜா, தி ஹிந்து, ஜனவரி 1.2007) அத்தகைய காட்சிகளும், சதாம் கடைசி நேரத்திலும் வார்த்தைகளால் வாட்டியெடுக்கப்பட்டதும் சன்னி பிரிவினர் மத்தியில் கடும் கோபத்தைத் தூண்டியிருக்கிறது. உடனடி எதிர்வினையாக ஷியா பகுதிகள் சிலவற்றில் குண்டுகள் வெடித்திருக்கின்றன. இதனால் ஷியா-சன்னி பிரிவினரிடையே பிளவும் பகைமையும் மேலும் அதிகரிக்கும். புஷ் எதிர்பார்த்தது அதுதான்.

இந்த இரு பிரிவினரிடையே பரஸ்பர பகைமையை வளர்க்க அமெரிக்கா பாசிஸ்டு தந்திரங்களில் பலவற்றை பயன்படுத்தியிருக்கிறது. ஈராக் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல்களை இனப்பிரிவுகள் அடிப்படையில் நடத்தியது. சன்னிக்கள் மீது கடும் தாக்குதல்களைத் தொடுத்ததன் மூலம் அவர்கள் தேர்தலைப் புறக்கணிக்கும் நிலையை உருவாக்கியது. ஷியாக்களிலும் இரண்டு குழுக்கள் இருக்கின்றன. ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடும் முக்தாதா அல்சதார் குழு மற்றும் புதிய அரசாங்கத்தில் தனக்கு முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் அயத்துல்லா அலி அல் சிஸ்டானி எனும் மதகுருவின் தலைமையிலான குழு, முதலாவது குழுவினர் மீது கடும் தாக்குதல் நடத்தியும், சிஸ்டானியின் ஆதரவோடும் முக்தாதா குழுவினரைப் பலகீனப்படுத்தியது. அவர்களும் நேரடியாக தேர்தலில் பங்கேற்கவில்லை. அவர்களில் சிலர் மறைமுகமாக தேர்தலில் பங்கேற்றனர். சிஸ்டானியின் பழமைவாத ஷியாக்களுக்கு அதிகாரத்தில்(?) கூடுதல் பங்கு அளிப்பதன் மூலம் இரு குழுக்களிடையே பிளவை உண்டாக்கியது.

2003ல் ஆக்கிரமிப்பிற்கு முன் சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக குர்து பகுதி ஆங்கிலோ - அமெரிக்கப் படைகளின் ஆக்கிரமிப்பில் இருந்து வருகிறது. அங்குள்ள தனது எடுபிடிகளுக்கு அரசாங்கத்தில் முக்கியப் பங்கு அளிப்பதாக வாக்குறுதி கொடுத்தது. இதன் மூலம் அப்பிரிவினர் பெருமளவில் தேர்தலில் பங்கேற்கும் சாத்தியத்தை உருவாக்கியது.

மேலும் தனிப்பட்ட வேட்பாளர்களை ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கிற மாதிரியான தேர்தல் முறை இல்லை. வாக்காளர்கள் பல வேட்பாளர்களைக் கொண்ட பட்டியலுக்கு வாக்களிக்க வேண்டும். அதனால் என்ன நடந்தது? அந்த பட்டியல்கள் இன அடிப்படையில் சம்பந்தப்பட்ட கட்சிகளால் தயாரிக்கப்பட்டன. எனவே ஷியாக்கள் சிஸ்டானியின் பட்டியலுக்கும், குர்துகள் குர்து பட்டியலுக்கும் ஓட்டளித்தனர். சன்னிகள் தேர்தலில் போட்டியிடவில்லை.

“இத்தோடு கூட சிஸ்டானியின் மூத்த சகாக்கள் திட்டமிட்ட முறையில் படுகொலை செய்யப்பட்டனர். இனமோதல்களைத் தூண்டும் நோக்கத்தோடு அமெரிக்கர்கள் சன்னிகள் இதைச் செய்வதாகக் குற்றம் சாட்டினர். ஆனால் விவரம் அறிந்த ஈராக்கியர்கள் பலர் இது இன்றைய குழப்பமான நிலையிலுள்ள ஈராக்கில் ஊடுருவியுள்ள இஸ்ரேலியர்களின் வேலை என்கின்றனர். ஈராக்கை மதவெறிமயமாக்கும் சதி பல வடிவங்களில் நிறைவேற்றப்படுகிறது. பலூஜாவின் மீது அமெரிக்கக் கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் 700 பேர் கொல்லப்பட்டனர். 3 லட்சம் பேர் வீடிழந்தனர். நிராதரவான சன்னிகளுக்கு 7ஆயிரம் பேர் வேண்டுமென்றே ஷியா தேசிய பாதுகாப்புப் படையினரை நிறுத்தினர்.

குர்துகள், அரபுகள் கலந்திருக்கும் பகுதிகளில் சன்னி மக்களை கட்டுப்படுத்த, வேண்டுமென்றே குர்து படைகளை நிறுத்தினர். மேலும் மேலும் ஷியாக்கள் கூட்டமாக வாழும் பகுதிகளில் மர்மமான குண்டு வீச்சுகள் நடந்தன. ஷியா மதத்தலைவர்கள் மர்மமான முறையில் கொல்லப்பட்டனர். சன்னிகளுக்கு எதிராக ஷியாக்களைத் தூண்டிவிடும் தெளிவான திட்டத்துடன் அவை நடத்தப்பட்டன. இவற்றைச் செய்பவர்கள் யார் என்றே தெரியாத நிலையில் பழி வாங்கும் செயல்களில் ஈடுபடுவதிலிருந்து தங்கள் ஆதரவாளர்களைத் தடுக்க ஷியா மற்றும் சன்னி மத குருமார்கள் பொது நோக்கத்திற்காக ஒன்று சேரவேண்டியிருந்தது” (அய் ஜாஸ் அகமது, பிரண்ட்லைன், மார்ச் 11.2006). அதையும் மீறி மோதல்கள் நடக்கின்றன என்பது நிதர்சனம்.

“புஷ் நிர்வாகம் ஈராக்கை இன அடிப்படையில் மூன்று நாடுகளாகப் பிரிக்க வேண்டும் என்று கூறி வருகின்றது. அவர்களைப் பொறுத்தவரை ஈராக் இயற்கையாகவே ஒரே நாடல்ல. எனவே முன்னாள் யுகோஸ்லாவியா போன்ற நாடுகள் போன பாதையிலேயே போக வேண்டும் என்கிறார்கள்”. (ஜான் செரியன், பிரண்ட் லைன், ஜனவரி 2. 2004).

ஒரு நாட்டைத் துண்டாட இவர்கள் நினைப்பதே காட்டுமிராண்டித்தனம். யுகோஸ்லாவியாவில் என்ன நடந்தது என்பது இன்று சோக வரலாறு. ஒன்றல்ல, இரண்டல்ல சுமார் 10 லட்சம் பேரைக் கொன்று அல்லது தங்களுக்குள் அடித்துக் கொண்டு சாகச்செய்து கூறு போட்டார்கள். ஈராக்கில் ஏற்கனவே 7 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஈராக் இயற்கையாகவே ஒரு நாடல்ல என்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். ஒரு வாதத்திற்காக அப்படிப் பார்க்கப் போனால் முதலில் அமெரிக்காவைத்தான் சொல்ல வேண்டும். குடியேறிகளின் நாடு. மண்ணின் மைந்தர்களைத் துடைத்தெறிந்து விட்டார்கள். எனவே அங்கே இப்போது இருப்பவர்களின் பூர்வநாடுகள், மதங்கள், இனங்கள் என்ற அடிப்படையில் அமெரிக்காவை எத்தனை ஆயிரம் கூறுகள் வேண்டுமானாலும் போடலாம்.

ஈராக்கைக் கூறு போடத் துடிப்பதற்கான இரண்டு முக்கியக் காரணங்கள் நாம் ஏற்கனவே சொன்னதுதான். அவற்றில் பிரதானமானது எண்ணெய்தான். அமெரிக்கா தன்னுடைய எண்ணெய்த் தேவைகளுக்காக ஈராக் எண்ணையை பெரிதும் சார்ந்திருக்கிறது.

“சதாமை உலகிலிருந்தே அகற்றுவதில் வெற்றி பெற்றுவிட்ட அமெரிக்காவின் அடுத்த கவனம் அதன் நிகழ்ச்சி நிரலில் மற்றொரு முக்கியமான வேலையை நோக்கித் திரும்பும். அது ஈராக்கின் எண்ணெய் வளத்தின் மீது அசைக்க முடியாத கட்டுப்பாட்டைக் கொண்டு வருவது. அமெரிக்கா சதி செய்து உருவாக்கியுள்ள ஈராக் அரசியல் சட்டம் அமல்படுத்தப்பட்டால் அது உத்தரவாதமாகும். ஒப்பீட்டளவில் ஈராக்கில் ஷியாக்கள் மற்றும் குர்துகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலேயே எண்ணெய் வளம் அபரிமிதமாக இருக்கிறது. சன்னி பகுதிகளில் அவ்வளவு இல்லை.

“முதலில் கொண்டு வரப்பட்ட நகல் அரசியல் சட்டத்தில் ஈராக்கின் எண்ணெய் வர்த்தகம் கூட்டாட்சி அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படும் என்ற ஷரத்துகள் இருந்தன. அதாவது சன்னி, ஷியா மற்றும் குர்துகளால் ஆளப்படும் பிரதேசங்களின் எண்ணெய் விநியோகம், விற்பனை குறித்த அதிகாரம் அந்தந்த மாநில அரசாங்கங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. எண்ணை விற்பனையின் மூலம் வரும் வருமானம் நேராக அந்தந்த மாநிலங்களுக்குப் போகும் ஒரு பகுதி மத்திய அரசாங்கத்திற்குப் போகும். ஆனால் இதை சன்னிகளும், இதர அமெரிக்க எதிர்ப்பாளர்களுமான ஈராக் தேசியவாதிகளும் எதிர்த்தனர். மைய அரசாங்கத்தின் பிடியை இது பலவீனப்படுத்தும். அதன் மூலம் நாடு உடைந்து போவதற்கு வழி வகுக்கும் என்று கூறினர்.

“அமெரிக்காவும் அதன் விசுவாசிகளும் அந்த நேரத்தில் இந்த எதிர்ப்புக்கு செவிமடுத்தனர். ஏனெனில் அரசியல் சட்டத்திற்கு அங்கீகாரம் பெறுவதும், சுதந்திரமான அரசாங்கம் நிறுவப்பட்டுவிட்டது போன்ற தோற்றத்தை உருவாக்குவதும் அப்போது அவர்களுக்கு அவசியமாக இருந்தது. 2005 அக்டோபரில் அமலுக்கு வந்த அரசியல் சட்டத்தில் சர்ச்சைக்குரிய அந்தப் பகுதிகள் திருத்தப்பட்டன. ஆனால் நீக்கப்படவில்லை என்பது முக்கியமானது. எடுத்துக்காட்டாக, எண்ணெய் வருமானங்கள் மாகாணங்களுக்கு விநியோகிக்கப்படும் என்று 110வது பிரிவு கூறுகிறது. ஆனால் குறிப்பிட்ட மாதிரியான விவரங்கள் இல்லை. அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் ஈராக் தொடர்ந்து இருக்குமானால் (இருக்கும்). அரசியல் சட்டம் அதற்கு அனுகூலமான வகையில், தனக்கு பொருத்தமானது என்று அது கருதுகிற நேரத்தில் திருத்தப்படும்.

“இப்படி அதிகாரத்தை பரவலாக்குவது என்பது அமெரிக்காவைப் பொருத்தவரை மிக முக்கியம். ஏனெனில் எண்ணெய் விநியோகத்திற்கான ஏற்பாட்டை, ஷியாக்கள் மற்றும் குர்துகளிடம் தனித்தனியே செய்து கொள்ளமுடியும். சன்னிகள் அமெரிக்க எதிர்ப்பாளர்களாக இருந்தாலும் அவர்களால் எண்ணெய் விநியோகத்தைத் தடுத்துவிட முடியாது. சன்னிகளின் இடைவிடாத எதிர்ப்பு எண்ணை விநியோகத்திற்கு ஆபத்தாகுமானால் அரசியல் சட்டத்தில் விடப்பட்டுள்ள ஓட்டையின் மூலம் ஈராக் மூன்று தனித்தனி நாடுகளாக பிரிக்கப்படும்”. (கே.எஸ்.தட்சிணா மூர்த்தி, தி ஹிந்து, ஜனவரி 9.2007).

ஒரு பக்கம் இஸ்லாமியர்கள் அனைவரையும் பயங்கரவாதிகள் என்பது போல் சித்தரித்து அவர்களுக்கு எதிரானதொரு மனநிலையை இதர உலக மக்களின் மத்தியில் உருவாக்குகிறது. இன்னொரு பக்கம் அதே இஸ்லாமியர்களை மதப்பழமைவாதிகளின் பிடியில் தள்ளுகிறது. மதவாத சக்திகளோடு கொஞ்சி குலாவுகிறது. அவர்களுக்குள் இனவாதத்தைத் தூண்டிவிடுகிறது. இத்தனையும் ஜனநாயகத்தின் பெயரால் செய்கிறது. ஜனநாயகமும் மதவாதமும், இனவாதமும் ஒன்றாக வாழ முடியாது. ஏனெனில் அவை ஜன்மப் பகையாளிகள்.

“அமெரிக்க ஏகாதிபத்தியம் எப்போதுமே மூன்றாம் உலக நாடுகளுக்கு இடையே சண்டைகளையும் சச்சரவுகளையும் உருவாக்க முயற்சித்து வருகிறது. நாடுகளுக்கிடையே மட்டுமின்றி மக்களுக்கிடையேயும் இருக்கும் வேறுபாடுகளைக் (இன, மத, பிரதேச அடிப்படையிலான) கிளறிவிடுவதன் மூலம் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்களை தடம் புரளச் செய்யும்... அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கோட்பாடு பழைய பிரித்தாளும் சூழச்சியின் புதிய வடிவமே அன்றி வேறில்லை. அது மட்டுமின்றி அது அதிதீவிர இனவெறித் தன்மை கொண்டதும் ஆகும்”. (மைதுல் இஸ்லாம், பீப்பிள்ஸ் டெமாக்ரசி, ஜனவரி 7.2007).

ஈராக்கிலிருந்து படைகளைத் திரும்பப் பெற வேண்டுமென்று அமெரிக்க மக்கள் இடைத்தேர்தல்களில் தீர்ப்பளித்தனர். ஆனால் மேலும் இருபதாயிரம் துருப்புகளை புஷ் அனுப்பப் போகிறாராம். (தற்போது அங்கு 1,32,000 அமெரிக்க துருப்புகள் இருக்கின்றன.) புஷ் ஜனநாயகத்திற்கு கொடுக்கும் மரியாதை அவ்வளவுதான். கேட்டால் ஈராக்கில் இனவாத வன்முறையைக் கட்டுப்படுத்த போதுமான படைகள் அங்கு இல்லை என்கிறார். இப்போது படைகளை வாபஸ் வாங்கினால் ஈராக் அரசாங்கம் வீழ்ந்து விடும் என்கிறார்.

ஒரு வகையில் இரு காரணங்களுமே உண்மைதான். இப்போதுள்ள பொம்மை அரசாங்கத்தின் அதிகாரம் பாக்தாத் நகரத்திற்கு வெளியே செல்லுபடியாவதில்லை. இந்நிலையில் உடைபடும் துண்டுகளில் யார் யார் எங்கே அதிகாரத்தைக் கைப்பற்றுவார்கள் என்பதே நிச்சயமற்றதாக உள்ளது. யாரேனும் அமெரிக்க எதிர்ப்பாளர்கள், உதாரணமாக, ஈரான் ஆதரவாளர்கள் ஏதேனும் ஒரு துண்டில் அதிகாரத்தைக் கைப்பற்றி விட்டால் புஷ்சின் எல்லா திட்டமும் பாழாகிவிடும். மூன்று துண்டாக உடைப்பது மட்டுமல்ல. அந்த மூன்றிலும் தன்னுடைய ஆட்களை ஆட்சியில் அமர்த்துவதற்காகவே மேலும் படைகளை அனுப்புகிறார்கள். ஈராக்கை ஒரு நாடாக வைத்திருப்பதற்கு அல்ல.

இன்னும் ஏராளமான ஆதராங்களைக் கொடுக்க முடியும். நாமொன்றும் அறியாததல்ல. ஏகாதிபத்தியங்களின் தன்மையே அதுதான். இந்தியாவை அடக்கி ஆண்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் எப்படி இங்கே பிரித்தாளும் சூழ்ச்சியைக் கடைப்பிடித்தது என்பதையும், நாட்டைத் துண்டாடி விட்டுச் சென்றது என்பதையும் நாம் அறிவோம். மத அடிப்படையில் மட்டுமின்றி இன அடிப்படையிலும் அது பற்ற வைத்து விட்டுப் போன நெருப்பு இன்றும் கொழுந்து விட்டு எரிவதையும் அனுபவித்துக் கொண்டுதானே இருக்கிறோம். சதாம் பற்றிய பிம்பங்கள் ஏகாதிபத்திய பெரு ஊடங்களால் உருவாக்கப்பட்டவை. பகுதி உண்மைகளும், பகுதி பொய்களும், மற்றொரு பகுதியை மறைத்தும் கட்டமைப்பட்டவை. முழுப் பொய்களை விட பாதி உண்மைகள் மிக மிக ஆபத்தானவை.

1. சதாம் மதச்சார்பற்றவர், அவரது அரசும் ஆட்சியும் மதச்சார்பின்மையை கறாராக அமல்படுத்தியது. மதகுருமார்கள் அரசியலில் தலையிடுவதை அவர் அனுமதித்ததே கிடையாது. உண்மையில் சொல்லப் போனால் பல மதத்தலைவர்கள் ஈராக்கை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். சதாம் மதச்சார்பற்றவர் என்பதாலேயே அரபு உலகில் அவரது கை ஓங்கினால் மதச்சார்பற்ற அரபு தேசியம் வலுப்பெற்று விடும் என்று ஒசாமா பின்லேடன் சவுதியை விட்டு வெளியேறி மதவாத அல்கொய்தாவைத் துவங்கினார். 1991 குவைத் யுத்தத்தின் போது இது நடந்தது. பின்லேடன் போன்றவர்கள் மத அடிப்படையில் அராபியர்களை ஒன்று திரட்ட விரும்பினார்கள். சதாம் மதச்சார்பற்ற மேற்கத்திய எதிர்ப்பு அரபு தேசிய அடிப்படையில் ஒன்று திரட்ட முனைந்தார்.

2. சதாம் குவைத்தின் மீது படையெடுத்ததற்குக் காரணம் இல்லாமல் இல்லை. ஈரான்-ஈராக் யுத்தத்தின் போது ஈராக்கின் கவனம் முழுவதும் அதில் இருந்த நேரத்தில் குவைத் எண்ணெய் நிறுவனங்கள் பக்கவாட்டில் துளை போட்டு ஈராக் எண்ணெயைத் திருடிக் கொண்டிருந்தன. இந்தத் தகராறு விஷயத்தில் நாங்கள் தலையிடமாட்டோம் என்று அமெரிக்கா கூறியது. அதாவது மறைமுகமாக ஈராக்கை குவைத்தின் மீது போர் தொடுக்கத் தூண்டியது. பின்னர் அதையே சாக்காக வைத்து ஈராக்கின் மீது படையெடுத்தது. ஏகாதிபத்தியம் தோளில் கை போடுவது தன் பிடியில் வைத்திருக்கவே அன்றி நட்பினால் அல்ல, திமிறினால் கழுத்தை நெரித்து விடும்.

3. அவரது ஆட்சியில் எண்ணெய் வளங்கள் தேசியமயமாக்கப்பட்டன. எண்ணெய் வருமானம் நாட்டின் வளர்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டன. ஆண், பெண் பேதம், மத பேதம் இன்றி அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி வழங்கப் பட்டது. அதற்காக யுனெஸ்கோவின் உயர்ந்த விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. அவசியப் பொருள்கள் ரேஷன் நிலையங்கள் மூலம் விநியோகிக்கப்பட்டன. பொருளாதாரத் தடைகள் மற்றும் யுத்த காலங்களிலும் இதில் எந்தக் குறையோ அல்லது பாகுபாடோ இருக்கவில்லை.

4. வளர்ச்சியடைந்த மேற்கத்திய நாடுகளின் ஏகாதிபத்தியத்திற்கும், அரபு தேசியத்திற்கும் இதர மூன்றாம் உலக நாடுகளுக்கும் இடையே அடிப்படையான முரண்பாடுகள் இருப்பது பற்றி சதாமின் பாத் கட்சி தன்னுடைய தேர்தல் அறிக்கை ஒன்றில் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

5. அமெரிக்க மற்றும் ஈரானின் மதவாத ஆட்சியின் தனித்தனி முயற்சிகளையும் தாண்டி அரபு தேசிய அடிப்படையில் ஷியாக்களையும் சன்னிகளையும் ஒற்றுமையாக வைத்திருப்பதில் அவர் பெற்றி பெற்றிருந்தார். பாத் கட்சிக் கூட்டங்களில் கலந்து கொள்பவர்களில் யார் யார் எந்த மதத்தை அல்லது எந்த மதப் பிரிவைச் சேர்ந்தவர் என்பது கூடத் தெரியாது என்று பாத் கட்சியின் முன்னாள் தலைவர் ஒருவர் கூறியிருந்தார்.

6. மத அடிப்படையில் தன்னை எதிர்த்தவர்கள் மீது சதாம் ஒடுக்குமுறை நிகழ்த்தியிருக்கிறார் என்பதும் உண்மைதான். அது எந்த அளவு என்பது பற்றி மேற்கத்திய நாடுகளும் ஊடகங்களும் கூறுவதை அப்படியே நம்பிவிட முடியாது.

7. 1970களின் பிற்பகுதியில் ஆட்சிக்கு வந்த பாத் கட்சியும், சதாமும் சிஐஏ கொடுத்த பட்டியலின் அடிப்படையில் கம்யூனிஸ்டுகளை (அவர்களில் டாக்டர்கள், வக்கீல்கள், விஞ்ஞானிகள் உள்ளிட்ட பலர் அடங்குவர்) வேட்டையாடியது உண்மைதான். இந்த ஒடுக்குமுறையெல்லாம் அவர் அமெரிக்க ஆதரவாளராக இருந்தபோது நடந்தவை. கடந்த பதினைந்து ஆண்டுகளில் அரபுலகில் ஏகாதிபத்தியத்தை மிகத் துணிச்சலாக எதிர்த்து நின்று ஒரே தேசத் தலைவர் (பாலஸ்தீனர்கள் தவிர்த்து), தொடை நடுங்கிகளின் மத்தியில் ஒரு மாவீரன். உலகெங்கும் உள்ள இடதுசாரிகள் இதையே கவனத்தில் கொள்கிறார்கள். சதாம் கம்யூனிஸ்டுகளுக்கு இழைத்த கொடுமையை விட பல்லாயிரம் மடங்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் செய்திருக்கிறது. அதை விட பல மடங்கு மனித குலத்திற்கு எதிராக இழைத்திருக்கிறது. கம்யூனிஸ்டுகள் தங்கள் உயிர்களைவிட மனிதகுல நலனையே பெரிதாகக் கருதுகிறார்கள்.

மேலே உள்ள மார்டின் லூதர் கிங்கின் மேற்கோளை சற்றே மாற்றிப் பாருங்கள். “எங்கெங்கெல்லாம் அநீதிக்கு எதிரான போராட்டம் நடக்கிறதோ அது எங்கெங்கும் நீதிக்கு சாதகமானதாகும்”. மனிதகுல நாகரீகத்தின் தொட்டிலுக்கு நேரப்போகும் கதியை நினைத்தால் மனம் பதைபதைக்கிறது. ஏற்கனவே ஈராக்கின் எண்ணெய் வளத்தை விட அதிகமான ரத்தம் அம்மண்ணில் சிந்தப்பட்டு விட்டது. புஷ் போன்ற நரபட்சிணிகளின் பேயாட்டம் நசுக்கப்படும் வரை இந்த துயரத்திற்கும் வேதனைக்கும் முடிவு கிடையாது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com