Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
பிப்ரவரி 2007
செ.ஆடலரசனின் நறுக்குகள்
பேரா.இரா.மோகன்

இயற்கைச் சித்தரிப்பால், சொற்சிக்கனத்தால், சுண்டக் காய்ச்சிய மொழி நடையால், படிமப்பாங்கால் தத்துவ வெளிப்பாட்டால், வாமன வடிவால், வெளியீட்டுத் திறத்தால் கவிதை ஆர்வலர்களின் நெஞ்சங்களை சிக்கெனப் பிடித்திருக்கும் வடிவம் ஹைக்கூ. அமுத பாரதி, அறிவுமதி தொடங்கி வாழையடி வாழை என வரும் ஹைக்கூ வரிசையில் 1996-ஆம் ஆண்டில் சேர்ந்தவர் செ.ஆடலரசன். இவரது ‘சேரிக்குள் தேர்’ என்னும் ஹைக்கூ தொகுப்பு 1996 செப்டம்பர் மாதத்தில் வெளிவந்துள்ளது. குடந்தையைச் சார்ந்த ‘ஆடல்’ வெளியீட்டகம் இத்தொகுப்பை வெளியிட்டுள்ளது. உதய் மற்றும் தோழனின் ஓவியங்கள் நூலை அணி செய்கின்றன. ஈன்று புறந்ததந்த அம்மாவுக்கும், சான்றோன் ஆக்கிய அப்பாவுக்கும் நூலை காணிக்கையாக்கியுள்ளார் கவிஞர்.

“அணில் முதுகு
அழகிய
ஹைகூ” (ப.35)

என்பது ஹைக்கூ குறித்துக் கவிஞர் தீட்டியிருக்கும் ஒரு ஹைக்கூ. அணிலாடு முன்றிலை அழகுறப் படம்பிடித்துக் காட்டியதால் சங்க காலத்துச் சான்றோர் ஒருவர் ‘அணிலாடு முன்றியார்’ எனறே அழைக்கப் பெற்றார் என்பது இங்கே நினைவு கூறத்தக்க செய்தி ஆகும்.

‘சிந்தனைச் சிற்பி’ அம்பேத்கரில் இருந்து ‘பகுத்தறிவுப் பகலவன்’ பெரியார் வரை எத்தனையோ சான்றோர்கள் காலங்காலமாக அழுத்தமாகவும் ஆவேசமாகவும் அறிவுறுத்தியும் இன்றும் சேரிக்குள் வெளிச்சம் முழுமையாக வரவில்லை. ‘இருள் மூடிக்கிடந்த மனமும் வெளுத்தது, சேரிக்கும் இன்பம் திரும்புமடி’ என என்னதான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடி இருந்தாலும், சேரிக்குள் இன்பம் இன்னும் முழுமையாகத் திரும்பிய பாடில்லை. இதனை,

“எத்தனைபேர் கூடி இழுத்துமென்ன
இன்னும் வரவில்லை
சேரிக்குள் தேர்” (ப.36)

என்னும் ஹைக்கூ கவிதை திட்பமாகவும் நுட்பமாகவும் பதிவு செய்துள்ளது.

ஆண்டுகள் எத்தனை கழிந்தாலும், திட்டங்கள் எத்தனை தீட்டப் பெற்றாலும், தேர்தல்கள் எத்தனை நடந்து முடிந்தாலும், மாற்றங்கள் எத்தனை நேர்ந்தாலும், இந்த நாட்டில் செல்வர்களிடமே மேலும் மேலும் செல்வங்கள் சென்றடைகின்றன; ஏழைகள் மட்டும் என்றும் ஏழைகளாகவே இருந்து வருகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் இதுவரை எந்த ஒரு மாற்றமும் நேரவில்லை. இதனை உணர்த்தும் ஆடலரசனின் ஹைக்கூ,

“வயல்கள் நகர்கள்
நடவாள் சித்தாள்
மாற்றமில்லை வாழ்க்கை” (ப.37)

‘விளைநிலங்கள்’ எல்லாம் இன்று ‘விலை நிலங்கள்’ ஆகி விடுகின்றன. புதிது புதிதாய்ப் புறநகர்கள் முளைத்து வருகின்றன; கட்டிடங்களும் வீடுகளும் பெருகி வருகின்றன. ‘வயல்கள்’, ‘நகர்க’ளாக மாறிவிட்டன; ‘நடவாள்’ ‘சித்தா’ளாக மாறிவிட்டாள். ஆனாலும், ஏழை எளியவர்களின் வாழ்க்கையில் மட்டும் எந்தவித மாற்றமும் நிகழவே இல்லை. ஆழமான இந்த சோகத்தை - அழகாகப் பதிவு செய்துள்ளது இக்கவிதை.

கட்சி வேறுபாடு இல்லாமல் இன்று அரசியல்வாதிகள் செய்யும் அட்டூழியங்களுக்குக் கணக்கு வழக்கே இல்லை. எரிபொருள் சிக்கன விழாவில் கலந்து கொள்ள வரும் அமைச்சர் எப்படி வருகின்றார் தெரியுமா?

“ஆயிரம் மகிழ்வுந்தில்
அமைச்சர் பயணம்
எரிபொருள் சிக்கனவிழா” (ப.48)

கலந்து கொள்ளப்போவது எரிபொருள் சிக்கன விழாவில்; பயணம் மேற்கொள்வதோ ஆயிரம் மகிழ்வுந்துகள் அணிவகுத்து வர. நல்ல முரண்!
பொதுவாகக் கவிஞர்கள் ஆணை கதிரவனுக்கும் பெண்ணை நிலவுக்கும் ஒப்பிடுவார்கள் இது காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் ஓர் இலக்கிய மரபு, கவிஞர் ஆடலரசனும் ‘நிலவுதான் பெண்’ என ஒப்புக் கொள்கின்றார்; தம் கருத்திற்கு அவர் கூறும் விளக்கம் தான் - காட்டும் காரணம் தான் நம்மை ஒரு கணம் நிறுத்திச் சிந்திக்க வைக்கின்றது:

“தாய் வீட்டில் வளர்ந்தாள்
புகுந்த வீட்டில் தேய்ந்தாள்
நிலவு தான் பெண்” (ப.46)

இக்கவிதை வெளிப்படுத்தும் பெண்ணியச் சிந்தனை உருக்கமானது; உயிரோட்டமானது. ‘வளர்ந்தாள்’, ‘தேய்ந்தாள்’ என்னும் இரு சொற்களே இன்றைய சூழலில் ஒரு பெண் தன் தாய் வீட்டிலும் புகுந்த வீட்டிலும் எதிர்கொள்ளும் அனுபவங்களைப் புலப்படுத்தி விடுகின்றன!

‘வாலைக் குழைத்து வரும் நாய் தான் - அது, மனிதர்க்குத் தோழனடி பாப்பா’ எனப் ‘பாப்பாப் பாட்டி’ல் பாடுவார் கவியரசன் பாரதியார், பாரதியாரின் இவ்வரிகளுக்கு ஹைக்கூ வடிவம் தந்தால் எப்படி இருக்கும்? இதோ இப்படித்தான் இருக்கும்:

“தங்கிப் படித்த விடுதி
எல்லாரும் அந்நியமாய்
ஓடிவரும் நாய்” (ப.38)

கால மாற்றத்தில் விடுதியில் தங்கிப் படிக்கும் அத்தனை மாணவர்களும் அந்நியமாய்த் தோன்றுகிறார்கள்; ஆனால் எத்தனை ஆண்டுகள் இடையே உருண்டு ஓடினாலும், நாய் மட்டும் மறவாமல் ஓடி வருகின்றது;

‘திருப்பதிக்கே லட்டா?’, ‘திருநெல்வேலிக்கே அல்வாவா?’, ‘பழனிக்கே பஞ்சாமிர்தமா?’ என்பார்கள். அது போல் திருஷ்டிப் பொம்மைகளுக்கே திருஷ்டி பட்டு விட்டதாம்! அதனால் விற்கவே இல்லையாம்! கதை எப்படிப் போகிறது பார்த்தீர்களா?

“எவன் கண்பட்டது
விற்கவே இல்லை
திருஷ்டிப் பொம்மைகள்” (ப.12)

“தலைவரின் பிறந்தநாள்
ஊரே கூடியிருந்தது
அன்னதானம்” (ப.26)

என முரண் சுவையுடன் நாட்டு நடப்பைப் படம்பிடித்துக் காட்டும் போதும்,

“கணையாழியைக் கொடு
பத்திரமாய் வைத்திருப்பேன்
அடகுக் கடையில்” (ப.21)

என முன்னைப் பழமையைக் கட்டுடைத்துப் பாடும் போதும்,

“சரியான பொருத்தம்
அவள் குடியேறிய ஊர்
மயிலாடுதுறை” (ப.26)

என மலரினும் மெல்லிய காதல் உணர்வைச் சித்தரிக்கும் போதும்,

“கோவிலில் கூட்டம்
தேவி தரிசனம்
நடிகை” (ப.19)

என மக்களின் சினிமா மோகத்தை மென்மையாகக் சாடும் போதும்,

“குரோட்டன்சு இலைமேல்
வண்ணத்துப் பூச்சி
வாழ்க்கை”

என இன்றைய வாழ்க்கையை விமர்சனம் செய்யும் போதும் ஆடலரசனின் கவிப் பார்வையில் கலை நயமும் தனித்தன்மையும் சுடர் விட்டு நிற்கக் காண்கின்றோம்.

ஆறறிவு படைத்த மனிதன்; எதிரில் நாய். எங்கே என்கிறீர்களா? தெரு ஓரத்தில் எதற்காக என்று கேட்கிறீர்களா, இதோ கவிஞர் தரும் விடை:

“இலையை எங்கே போட
எதிர்எதிராய்
மனிதன். . . நாய்” (ப.7)

இறையன்பு குறிப்பிடுவது போல், “ஹைகூ என்பது விடுகதையல்ல - சிலேடையுமில்லை, ஹைகூ என்பது புனைவு இலக்கியமல்ல - அது உணர்வு இலக்கியம்” (முகத்தில் தெளித்த சாரல், ப.42) ஆடலரசன் ஹைக்கூவை வெறும் புனைவு இலக்கியமாகப் படைக்காமல், நுண்ணிய உணர்வு இலக்கியமாகப் படைத்துக் காட்டுவதில், குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளார். அதற்குக் கட்டியம் கூறும் விதத்தில் ‘சேரிக்குள் தேர்’ தொகுப்பில் பல கவிதைகள் விளங்குகின்றன.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com