Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
பிப்ரவரி 2006
கனவு மெய்ப்பட வேண்டும்

தேவை இங்கு எல்லோருக்கும் மனநலம்
எண்ணம்:சாம்; எழுத்து: ராஜசேகரன்

Srushti மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான பாதுகாப்பும் தொடர்ச்சியான அரவணைப்புமே மிக முக்கியத் தேவை. அவர்கள் மீது அன்பு செலுத்தி அவர்கள் விரும்பும் ஏதாவது ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தும்படி சுதந்திரமாக இயங்க விட்டால் ஒரு மனப்பட்ட மனநிலைக்கு அவர்கள் வந்துவிடுவார்கள்.

நம்மில் பலரும் மனநோயாளிகள் தான். ஆம். எனக்கு இது பிடிக்கும் அது பிடிக்காது என்பதிலிருந்து துவங்கி, கோபம், விரக்தி, டென்ஷன், அழுகை, சிரிப்பு என ஒவ்வொருவரும் தினந்தோறும் பிடித்தோ பிடிக்காமலோ மற்றவர்கள் மீது வெறுப்பை உமிழ்ந்தபடி இயங்கி வருகிறோம்.

மலரிலும் மெல்லிய மனதில் ஏற்படுகின்ற துயரங்களும், காயங்களும் சிலருக்கு மாறாத வடுக்களாகி தேங்கி விடுகிறது. அப்படிப் பட்டவர்களை அரவணைத்து, ஆறுதல் சொல்லித் தேற்றுவது என்பது எல்லோராலும் இயலாத காரியம்.

இரண்டு மூன்று நாள் பார்த்து விட்டு ‘இந்த லூசு ரொம்ப இம்சை கொடுக்குது’ என்று கூறி, ஏற்கனவே வடுக்களாகிப் போன இதயங்களில் ஈட்டியை எறிபவர்கள் இங்கு ஏராளம். ஆனால் வந்தோரையெல்லாம் வரவேற்று, கொஞ்சமும் முகம்சுளிக்காது அரவணைத்துப் பாதுகாத்து எந்த வித பரபரப்பும் இல்லாமல் அமைதியாக இயங்கிக் கொண்டிருக்கிறது மதுரை சிருஷ்டி மனநல மையம்.

மனநல மையத்தின் வளாகத்திற்குள் நுழைந்ததும் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத ஒரு ஆழ்அமைதி சூழ்ந்து கிடக்கிறது. பூச்செடிகளுக்கு தண்ணீர் தெளித்துக் கொண்டும், மரங்களை வெறித்துப் பார்த்தபடியும், ரிஷப்சனில் கால்மேல் கால் தூக்கிப்போட்டபடி பழைய பேப்பரை வாசித்தபடியும், தரையில் உட்கார்ந்து கொண்டும் சமூகத்தால் ‘மனநலம் பாதிக்கப் பட்டவர்கள்’ என்று முத்திரை குத்தப்பட்டவர்கள் இயங்குகின்றனர்.

Rajakumari மனநலம் குன்றியவர்களைப் பார்க்க வருபவர்களையெல்லாம் ‘வணக்கம்’ என்ற வார்த்தைகளால் மனமிளக வைத்துவிடுகின்றனர். வடுக்களாகிப் போன மனங்களில் ஈரம் கசியத் தொடங்கியிருப்பதன் அறிகுறி இது. அவர்களும் சமூகத்தின் அங்கங்கள் தான், அவர்கள் புறக்கணிப்புக் குரியவர்கள் அல்ல; மறுவாழ்வு அவர்களுக்கு உண்டு என்பதை அவர்கள் நெஞ்சில் விளைவித்ததன் எதிரொலி இது.

இத்தகைய அருமையான பணியை திறம்படச் செய்து வருகிறது ‘சிருஷ்டி’. எம்.எஸ்.செல்லமுத்து டிரஸ்ட் அண்ட் ரிசர்ச் பவுண்டேசன் அமைப்பின் சார்பாக இந்த சமூக, உளவியல் மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது.

1992ல் எம்.எஸ்.செல்லமுத்து அவர்களின் பெயரால் (மனநோயால் பாதிக்கப்பட்டு ஒழுங்கான மருத்துவ வசதிகள் இன்மையால் இறந்து போனவர்) அவரது மகன் மனநல மருத்துவப் பேராசிரியர். டாக்டர். சி. இராமசுப்பிரமணியன் அவர்கள் இம்மனநல மையத்தைத் துவங்கினார். தற்போது ராஜகுமாரி இராமசுப்பிரமணியன் அவர்கள் செயல் இயக்குனராக இருந்து இதை நடத்தி வருகிறார்.

அன்றிலிருந்து இன்றுவரை சிருஷ்டி (மனநல காப்பகம்), ‘ரீ டிரீட்’ (நீண்ட கால நலவாழ்வு மையம்) எம்.எச்.டி.ஆர்.சி (மனநலப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்) ஆகாஷ் (சிறப்புப் பள்ளி), விரிக்ஷா (மறுவாழ்வு மையம்) திரிசூல் (மது, போதைக்கு அடிமையானோர் மறுவாழ்வு மையம்) ஆகிய பல்வேறு செயல்பாடுகளால் சமூகப்பணி ஆற்றி வருகிறது.

‘மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான பாதுகாப்பும் தொடர்ச்சியான அரவணைப்புமே மிக முக்கியத் தேவை. அவர்கள் மீது அன்பு செலுத்தி அவர்கள் விரும்பும் ஏதாவது ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தும் படி, சுதந்திரமாக இயங்க விட்டால் ஒரு மனப்பட்ட மனநிலைக்கு அவர்கள் வந்துவிடுவார்கள். அத்தகைய பயிற்சிகளை நாங்கள் அவர்களுக்கு வழங்கி வருகிறோம்” என்கிறார்கள் இம்மையத்தில் திட்ட அலுவலராகப் பணிபுரியும் பாபு மற்றும் கவிதா ஆகியோர்.

Srushti ‘மனநலம் மருத்துவத்தில் சிறந்த ஆராய்ச்சி மையமாக’ மத்திய அரசின் அங்கீகாரம், மத்திய சமூக நீதி அமைச்சகத்தின் ‘சிறந்த ஊழியர்’ விருது (2000), தமிழக அரசின் ‘சிறந்த தொண்டு நிறுவனம்’ (1997) விருது, தமிழக அரசின் ‘சிறந்த மருத்துவர்’ விருது (1998), மதுரை மாவட்ட ஆட்சி தலைவரிடமிருந்து ‘சிறந்த தொண்டு நிறுவன’ விருது (1996) என பல்வேறு விருதுகளை அள்ளிக் குவித்திருப்பது இந்நிறுவனத்தின் சேவைகளுக்கு மிகப்பெரிய சாட்சி.

இலவச மருத்துவம், பாதிக்கட்டணம், முழுக்கட்டணம் என குறைந்த கட்டணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை செய்யும் இந்நிறுவனத்தின் பணி கவனிக்கத்தக்கது. மனநலமையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களையும் இவர்கள் தொடர்ந்து கவனித்து அவர்களது நடத்தையில் மாறுதல் ஏற்படாதவாறு பாதுகாக்கின்றனர்.

“மனநலம் பாதிக்கப்பட்டவர்களை இந்த சமூகம் கேவலமாகவும், கீழ்த்தரமானவர்களாகவும் பாவிக்கிறது. அந்த மனநிலையை மாற்றி அவர்களையும் மனிதர்களாக்குவதற்கான தொடர் முயற்சிகளில் இந்நிறுவனத்தின் பங்கு இருக்கும். அதற்காக நீண்ட கால மனநல ஆராய்ச்சித் திட்டங்களை செய்து வருகிறோம். மனநலப் பாதிப்பற்ற சமூகத்தை உருவாக்குவதே எங்களின் கனவு” என்கிறது சிருஷ்டி அமைப்பு.

இதுவரை மருத்துவ உலகில் தெளிவற்ற புரிதலை அளிக்காத துறையாக ‘மனநல அறிவியல்’ இருந்து வருகிறது. தொடர்ச்சியான ஆய்வுகளும் விடாமுயற்சியுமே அத்துறையில் பல்வேறு அதிர்ச்சிகரமான உண்மைகளை அளித்து வருகின்றன. அத்தகைய கடினமான பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு ஆராய்ச்சிப் பணியும் சேவைப்பணியும் செய்து வரும் ‘சிருஷ்டி’ பாராட்டத்தக்கது. அவர்களது கனவு மெய்ப்பட வேண்டியது.




நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com