Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
பிப்ரவரி 2006
கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம்

ஊர்க்காசை உலையில் போடும் அரசியல்வாதிகள்!
- ராஜசேகரன்

வறுமையை ஒழிக்கச் செலவழிக்கப்படும் ஒவ்வொரு ரூபாயிலும் 85ரூ ஊழல் பேர்வழிகளால் உறிஞ்சப்பட்டு, 15ரூ மட்டுமே உரிய மக்களுக்கு நிவாரணமாய்ப் போய்ச் சேருகிறது. இந்தியாவில் ஓராண்டு காலத்தில் கைமாறும் லஞ்சம் மட்டும் சுமார் ரூ.25,000 கோடியைத் தாண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறையே கூறியுள்ளது.

SC and ST ஜனநாயக முற்போக்குக் கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று கொண்டு வந்த திட்டங்களில் உருப்படியான ஒன்று தற்போது சட்டமாக இயற்றப்பட்டுள்ளது. இடதுசாரிக் கட்சிகளின் தொடர்ந்த வற்புறுத்தல்களினாலும், ஏற்கனவே இருந்த பாரத் நிர்மாண் திட்டத்தில் திருத்தங்கள் செய்தும் தற்போது கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தை மத்திய அரசு இயற்றியுள்ளது.

கிராம வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதியைக் குறைத்து கிராமப்புற வேலை உத்தரவாதத் திட்டத்தை துவங்கி, அதற்கான சட்டமொன்றையும் அரசு இயற்றியுள்ளது. அதன்படி, நாட்டிலுள்ள சுமார் 200 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு ரூ.40,000 கோடி (1 ஆண்டுக்கு) ஒதுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ரூ.328.08 கோடி ரூபாயை சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு கொடுக்கப் பட்டு ஆரம்பப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

தேசிய அளவில் ஏற்கனவே 150 பின்தங்கிய மாவட்டங்களில் இத்திட்டம் ‘வேலைக்கு உணவுத் திட்டம்’ எனும் பெயரில் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. தற்போது வறட்சியால் கொடூரமாகப் பாதிக்கப்பட்ட மேலும் 50 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில் தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன. மற்ற மாவட்டங்கள் எல்லாம் செல்வச் செழிப்போடு இயங்குவதாக தமிழகத்தின் 12 மத்திய அமைச்சர்களுக்குத் தெரிந்திருக்கும் போலும்; கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார்கள். திடீரென நிதியமைச்சர் ப.சிதம்பரம் இவ்விசயத்தில் தலையிட்டு திண்டுக்கல்லையும், சிவகங்கையையும் இணைக்கச் சொல்லி வற்புறுத்தி வெற்றியும் பெற்றுவிட்டார். சிவகங்கை தொகுதி மத்திய நிதி அமைச்சர் தொகுதி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

குறைந்த பட்ச பொதுச் செயல் திட்டத்தில் அறிவித்த ஒவ்வொன்றையும் நிறைவேற்றி வருவதாகவும் இந்தியா மேலும் மேலும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருவதாகவும் பிரதமர் மன்மோகன்சிங் சமீபத்தில் நடைபெற்ற நிதிக்குழு சார்ந்த கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார்.
உண்மையில் இங்கு நடப்பது என்ன? அந்தியோதாவும், வேலைக்கு உணவும், கிராமப்புற வேலை உத்தரவாத திட்டமும் எழை மக்களின் வறுமையை ஒழிக்கப் போகிறதா? அல்லது ஒதுக்கப்படும் நிதி ஒழுங்காக செயல்படுத்தப் படுகிறதா என்றால், ‘ இல்லவே இல்லை’ என்கின்றனர் விவசாயக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள்.

அரசு ஒதுக்கும் பணத்தை முறையாக நிறைவேற்றிய காலம் போய் அதைக் கண்காணிக்கவும், வளர்ச்சி நடவடிக்கைகளை முறைப்படுத்தவுமே நமது அரசுகளுக்கு காலம் போய் விடுகிறது.

2020ல் இந்தியா வளர்ந்த நாடாக வேண்டுமென்ற குறிக்கோள் இருந்த போதிலும் இங்கு வறுமை தொடர்ந்தபடியே இருக்கிறது. மதிய உணவுத் திட்டம் எல்லா அரசாங்கப் பள்ளிகளிலும் அமல்படுத்தப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற ஆணை இருந்த போதிலும் இன்று வரை உத்திரப்பிரதேசம், ஜார்க்கண்ட், பீகார் ஆகிய மாநிலங்களில் அமல்செய்யப்படவில்லை. தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களில் சில மாவட்டங்களில் மட்டுமே செயல்படுத்தப் படுகின்றன. ராஜஸ்தான் மாநிலம் 50ரூ செலவை மத்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிறது.

ஊரகப் பள்ளிகளிலும் மாநகராட்சிப் பள்ளிகளிலும் பெரும்பாலான மாணவ மாணவிகள் உண்பது இருவேளைச் சாப்பாடு மட்டுமே (மதிய உணவையும் சேர்த்து).

ஸ்வர்ண ஜெயந்தி சாஹாரி வேலைத்திட்டம், நேரு வேலை வாய்ப்புத்திட்டம், பிரதமரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற வறுமை ஒழிப்புத் திட்டம், தேசிய குடும்பநலத் திட்டம், முழுமையான கிராம வேலைவாய்ப்புத் திட்டம், பிரதமர் கிராமோதயத் திட்டம், இந்திரா ஆவாஸ் திட்டம், பொன் விழா ஆண்டு கிராம சுய வேலைவாய்ப்புத் திட்டம், கிராமப்புற வேலை உத்தரவாதத் திட்டம் என பல திட்டங்கள் உண்டு. இவற்றின் வழி ஒதுக்கப்படும் திட்டங்கள் பலவும் மத்திய அமைச்சர், மாநில அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ., மாவட்டக் கவுன்சிலர் ஒன்றியக் கவுன்சிலர், பஞ்சாயத்துத் தலைவர், காண்டிராக்டர் என பல வழிப்பட்ட ‘கைமாறி’ வருவதற்குள் ஒதுக்கப்பட்ட பணம் மலையிலிருந்து மடுவாகத் தேய்ந்து சில இடங்களில் ‘மடுவும்’ கணக்கில் இல்லாமல் காணாமல் ஆகி விடுவதும் கடந்த காலங்களில் நடந்திருக்கிறது.

அகில இந்திய அளவில் உத்தரவாதச் சட்டம் தற்போது தான் கொண்டுவரப்படுகிறது. எனினும் இதற்கு முன்பே ‘ரோஸ்கார் ஹமியோஜனா’ எனும் பெயரில் மகராஷ்டிராவில் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது. தற்போது தகவல் பெறும் உரிமைச் சட்டம் கொண்டு வந்திருப்பதால் அதைப் பயன்படுத்தி, தொண்டு நிறுவனம் ஒன்று இத்திட்டத்தின் வழியே பலன் பெறும் பயனாளிகள் பட்டியலைப் பெற்று விசாரித்தது. விசாரிப்பின் முடிவில் பல்வேறு அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவந்திருக்கின்றன. பயனாளிகளின் முகவரிகளைப் பெற்றுக் கொண்டு நேரில் சென்று பார்த்தால் பணம் வாங்கியதாக பதிவு செய்யப்பட்டிருக்கும் பல பயனாளிகள் உயிரோடு இல்லை. சிலர் குறிப்பிட்ட அந்த கிராமத்திலேயே இல்லை. போலிப் பெயர்கள், காண்ட்ராக்டர்களின் உறவினர்கள் என பல்வேறு பெயர்களில் முறைகேடு நடைபெற்றுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இப்பிரச்சனை அங்கு விசுவரூபம் எடுத்துள்ளது. எனினும் கிராமப்புற வேலை உத்தரவாதத் திட்டத்திற்கு ஒதுக்கப்படும் பணம் விவசாயத்துறை, பொதுப்பணித்துறை, வனத்துறை போன்ற 12 துறைகளால் பயன்படுத்தப்படுவதால் குறிப்பாக பொறுப்பேற்க எவரும் தயாராக இல்லை என்பதால் இந்த ஊழல் மூடி மறைக்கப் பட்டிருக்கிறது.

ஏற்கனவே ‘உணவுக்கு வேலை’ எனும் திட்டத்தில் மனித உழைப்பைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக ‘பொக்லைன்’ இயந்திரங்களைப் பயன்படுத்திக் கொள்ளை அடிப்பதைப் பொருட்படுத்தாது வேலை உத்தரவாதத் திட்டம் நடைமுறைபடுத்தப் பட்டால், அத்திட்டம் நிறைவேற்றப்பட்டதற்கான குறிக்கோளே வீணாகிப்போகும் என்பதைத்தான் மகாராஷ்டிராவில் அமுல்படுத்தப்பட்ட ‘ரோஸ்கார் ஹமியோஜனா திட்டம்’ உணர்த்தியிருக்கிறது.

இது மட்டுமல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படும் மாநிலங்களில் 6 - 25ரூ மட்டுமே பயனாளிகளுக்குச் சென்றடைகிறது. மீதி அரசியல்வாதிகள் வாயில் விழுந்து விடுகிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி குறிப்பிட்டதைப் போல வறுமையை ஒழிக்கச் செலவழிக்கப்படும் ஒவ்வொரு ரூபாயிலும் 85ரூ ஊழல் பேர்வழிகளால் உறிஞ்சப்பட்டு, 15ரூ மட்டுமே உரிய மக்களுக்கு நிவாரணமாய்ப் போய்ச் சேருகிறது. இந்தியாவில் ஓராண்டு காலத்தில் கைமாறும் லஞ்சம் மட்டும் சுமார் ரூ.25,000 கோடியைத் தாண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறையே கூறியுள்ளது. இது தற்போது உத்தரவாத சட்டத்திற்கு ஒதுக்கப்படும் தொகையில் பாதி.

இது ஒருபுறம் இருக்க நடப்பு 10வது ஐந்தாண்டுத் திட்டத்தின் முதலாமாண்டில் மட்டுமே வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு போதிய நிதிஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அடுத்து வந்த ஆண்டுகளில் மதிப்பீட்டை விட நிதி ஒதுக்கீடு குறைந்தது. நடப்பு நிதி ஆண்டு (2005-06) மதிப்பீடான ரூ.1,91,041 கோடிக்குப் பதிலாக ரூ.1,72,500 கோடி மட்டும் நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

‘நாட்டின் பின்தங்கிய 150 மாவட்டங்களுக்கு வேலைக்கு உணவுத் திட்டம் செயல்படுத்தப் படுவதால் வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறைக்கப்படுகிறது என அரசு தெரிவித்திருப்பது வேடிக்கையாக உள்ளது’ என்கிறார் வறுமை ஒழிப்புப் போராளியும் சமூகவியலாளருமான ஜெ.விசுவதாஸ் ஜெயசிங்.
வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளில் முழுமையாக அரசு ஈடுபடுவது நிறுத்தப்பட்டு ராணுவ நடவடிக்கைகளுக்கும் பாதுகாப்பு விஷயத்திற்கும் ‘ஒன்றுமில்லாத’ காஷ்மீர் விஷயத்திற்கும் அமெரிக்காவைப் போல காசு செலவழித்துக் கொண்டிருக்கிறது இந்திய அரசு.

Farmers உலக அளவில் ஒரு நாளைக்கு 1 டாலருக்கு (ரூ.45) குறைந்த வருமானத்தில் வாழ்பவரை வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வதாக ஜ.நா.வின் உணவுக் கழகம் அறிவித்துள்ளது. அப்படிப் பார்க்கும் போது இந்தியாவில் 26ரூ மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இத்தகைய இக்கட்டான சூழலில் சமீபத்தில் கூடிய மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகாரக் கமிட்டி, உணவு மானியச் செலவை சுமார் ரூ.4,500 கோடி அளவுக்குக் குறைப்பதென அறிவித்துள்ளன. அதன்படி, மாநிலங்களுக்கு வழங்கப்படும் அரிசியின் விலை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ளவர்களுக்கு வழங்கப்படுகிற ரேஷன் அரிசியின் விலை உயரும் எனத் தெரிகிறது.

அதே நேரம் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்காகவும் அந்தியோதயாத் திட்டத்தின் கீழ் வருபவர்களுக்கும் வழங்கப்படும் அரிசியின் விலை உயர்த்தப்படவில்லை என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும் இம்மூன்று பிரிவினருக்கும் வழங்கப்படும் மொத்த கிலோவின் அளவு கணிசமாகக் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (இதிலும் குறிப்பிடத்தக்க விஷயம் சில கிராமங்களின் உள்ளாட்சித் தேர்தலில் தமக்கு சாதகமாக ஓட்டுப் போடாதவர்களை வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவர்களாக ஆக்கிய பெருமையும் இங்கு நடைபெற்றுள்ளது. அதனால் பெரும்பாலான ஏழைகள் பாதிக்கப் பட்டுள்ளனர்) பார்த்துக் கொள்ளுங்கள் நமது அரசியல்வாதிகளின் ஏழைகளைக் காப்பாற்றும் லட்சணங்களை!
தற்போது தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதால் தமிழகக் கூட்டணிக் கட்சிகள் இதற்காக கூக்குரல் எழுப்பி நிறுத்தி வைத்திருக்கின்றன. இல்லையெனில் ‘பெட்ரோல் விலை’ உயர்த்தும் போது பாடிய பல்லவியைப் போன்று இவர்களும் ‘சிக்கன நடவடிக்கை’ என்று வாய்ஜாலம் காட்டியிருப்பார்கள்.
இந்நிலையில் தொகுதி மேம்பாடு நிதியை குறிப்பிட்ட திட்டங்களுக்கு ஒதுக்குவதற்காக எம்.பிக்கள் லஞ்சம் கேட்ட விஷயம் பெரும் பரபரப்பை எழுப்பியிருக்கிறது. எம்.பி.க்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியை வழங்குவதை நிறுத்தி விட்டு, நேரடியாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை எழுப்பப்பட்டிருக்கிறது. இது எந்தளவிற்கு சாத்தியம் என்பதை நமது ஆட்சியாளர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

கிராமப்புற வேலை உத்தரவாத சட்டத்தையும் இதன் வழி கொண்டுவந்தால் உருப்படியாக அமையும் என்பதே எல்லோருடைய விரும்பமும். அதுமட்டுல்லாது கடந்த காலங்களில் வேலைக்கு உணவுத் திட்டத்தின் வழியே கூலியாக வழங்கப்பட்ட அரிசியை காண்ட்ராக்டர்கள் சரியாக விநியோகிக்காமல் தனியாரிடம் விற்று லாபம் சம்பாதித்திருக்கிறார்கள். தற்போது இதுபோன்ற தவறுகள் நிகழா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம். மேலும் புதிய திட்டத்தின் கீழ் ஊதியத்தை முழுக்க முழுக்க பணமாகத் தந்தால் ஏழைகளுக்கு உதவிகரமாக அமையும். நாள் ஒன்றுக்கு நபருக்கு ரூ.54 ஆக முன்பு நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை ரூ.80 ஆக உயர்த்த வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதை கவனத்தில் கொள்ள வேண்டியது மிக அவசியம். அதை மத்திய அரசு செய்யும் பட்சத்தில் இது உருப்படியான திட்டமாக அமையும். இல்லையெனில் இதுவும் ஒரு ஏனோதானோவாகத்தான் அமையும்.

கிராமப்புற வேலை உத்தரவாதத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

புதிய திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு பெற்று உழைக்க முன் வருபவர்கள் அந்தந்த ஊராட்சிகளில் உள்ள ஊராட்சி அலுவலகங்களில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அப்படிப் பதிவு செய்பவர்களுக்கு ‘வேலை அட்டை’கள் வழங்கப்படும் என வேலைக்கு உத்தரவாதம் தரும் புதிய திட்டத்துக்கான சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த வேலை அட்டைகளைப் பெற்ற தேதியில் இருந்து 15 நாள்களுக்குள் அவர்களுக்கு வேலை வாய்ப்புத் தரப்படும்.

15 நாள்களில் வேலை வாய்ப்புத் தரப்படாவிட்டால், வேலை இல்லாதோருக்கான படியை ஊராட்சி நிர்வாகம் தரும்.

இத்திட்டப் பயனாளிகளில் மூன்றில் ஒரு பங்கினர் பெண்களாக இருக்க வேண்டும் எனவும் சட்டம் தெரிவிக்கிறது.

வேலை நடைபெறும் இடங்களில் குடிநீர், தங்கும் வசதிகள், 5 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் குழந்தைகள் காப்பகம் ஆகிய வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். காப்பகத்தில் குழந்தைகளைப் பார்த்துக் கொள்பவர்களுக்குத் தனி ஊதியம் தர வேண்டும்.

வேலை பார்க்கும் போது விபத்து ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், சிகிச்சை பெறும் நாள்களில் 50ரூ கூலியைத் திட்டப் பயனாளிகளான தொழிலாளர்களுக்குத் தரவேண்டும். இறந்து போனால் ரூ.25,000 கருணைத் தொகை தரவேண்டும்.

பயனாளிகள் வசிக்கும் பகுதிகளில் இருந்து 5.கி.மீ. சுற்றளவுக்குள் வேலைவாய்ப்புத் தரப்பட வேண்டும். அதற்கு மேல் தூரம் அதிகரித்தால் போக்குவரத்துச் செலவுக்காக ஊதியத்தில் 10ரூ தர வேண்டும்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com