Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
பிப்ரவரி 2006
நூல்விமர்சனம் - கவிதையின் திசைகள்

அனுபவ நிகழ்வுகளின் அழகிய பதிவுகள்
- பொன். குமார்

ஒரு படைப்பு என்பது படைப்பாளனோடு முடிந்து விடுகிறது. அப்படைப்பை வாசகனிடத்தில் எடுத்துச் செல்லும் பணி விமர்சகனுடையதாயுள்ளது. இன்று தமிழ் இலக்கிய உலகில் விமர்சகர்கள் இல்லை. படைப்பாளிகளே வாசகர்களை எடுத்துச் செல்லும் விமர்சகர்களாகவும் இயங்க வேண்டியுள்ளது. ஒரு படைப்பாளியான அன்பாதவன் எழுதிய விமர்சனங்களின் தொகுப்பே ‘கவிதையின் திசைகள்’ இது இவரின் ஏழாம் தொகுப்பு. இரண்டாம் விமர்சனத் தொகுப்பு.

Anbadhavan அன்பாதவன் விமர்சனம் என்னும் தளத்தில் மூத்த படைப்பாளிகளான கவிஞர் சிற்பி, எழுத்தாளர் பா.செயபிரகாசம், கலை இலக்கிய விமர்சகர் இந்திரன் ஆகிய படைப்பாளிகளையும் விமர்சித்துள்ளார். இலக்கிய உலகில் முதல் தொகுப்போடு பிரவேசித்த இளம் படைப்பாளிகளையும் விமர்சித்துள்ளார். மூத்த படைப்பாளிகளை விமர்சிப்பதற்கும் இளைய படைப்பாளிகளை விமர்சிப்பதற்கும் ஒரு வித்தியாசமுள்ளதை உணர முடிகிறது. மூத்தவர்களை வியக்கிறார். இளையவர்களை வரவேற்கிறார்.

ஒரு கட்டுரையாளர் ‘கவிதையின் திசைகள்’ என்னும் தொகுப்பில் கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல், ஹைக்கூ, நாடகம், நிகழ்வு என அனைத்து இலக்கிய வகைகளையும் விமர்சித்துள்ளார். ஒவ்வொன்றிலும் அவரின் தனித்தன்மை வெளிப்பட்டுள்ளது. இலக்கியத்தின் அனைத்து கூறுகளிலும் அன்பாதவன் ஆழ்ந்த புலமை கொண்டுள்ளதை உணர முடிகிறது. கட்டுரை 16ல், 26ல் ‘கவிதையெனும் மொழி’யில் இலக்கிய விமர்சகர் தி.சு.நடராசன் அவர்களின் மேற்கோளையே இரண்டு முறை காட்டியுள்ளார்.

ஒரு விமர்சகர் என்னும் முறையில் தொகுப்பை முழுமையாக வாசித்தவர் நிறைகளை நிறையவும் குறைகளை குறைவாகவும் எடுத்துக் காட்டியுள்ளார். குறைகளைச் சுட்டிக் காட்டும் போது அன்பாதவனின் எழுத்தில் வன்மை இல்லை. அன்பாகவே சுட்டிக் காட்டியுள்ளார். மென்மையான குரலிலேயே விமர்சித்துள்ளார். ஒரு விமர்சகர் எனினும் எல்லையைத் தாண்டி ஒரு சில இடங்களில் வழக்கறிஞராக வாதிட்டுள்ளார். குறிப்பாக ஹைக்கூ குறித்து எழுதும் போது ஆதரவு குரலே மேலோங்கி உள்ளது.

‘இலக்கிய விமர்சனம்’ தன்மை மிக்க ‘கவிதையின் திசைகள்’ என்னும் இத்தொகுப்பில் 39 கட்டுரைகள் உள்ளன. ‘உலகமயமாக்கல், ஆயுத எழுத்தாய் ஹைக்கூ கவிதைகள்’, ‘புதுச்சேரி துளிப்பாக்களில் பகுத்தறிவுப் பார்வை’, ‘வலிகளின் குரலாய் கவிதை’, ‘சாதிச் சான்று மோசடி, பறிபோகும் தலித் வாழ்க்கை’, ‘ஹைக்கூவில் அறிவியல்’, தமிழ் இலக்கியம் 2004 - ஒரு பறவைப் பார்வை’ ‘தலித் இலக்கியத்திற்கான இடஒதுக்கீடு அவசியம் தேவை’ ஆகியவை விமர்சனங்கள் அல்ல; சில கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள். இவைகளில் ‘வலிகளின் குரலாய் கவிதை’ ‘சாதிச் சான்று மோசடி பறிபோகும் தலித் வாழ்க்கை’ ஆகிய இரண்டும் தலித் குறித்த கட்டுரைகள். இவ்விரு கட்டுரைகளும் உண்மையை உரத்துப் பேசுகின்றன. சாதியின் பெயரால் நடக்கும் மோசடிகளை பட்டியலிட்டுக் காட்டியதுடன் தடுப்பதற்கான ஆலோசனைகளையும் தந்துள்ளது பாராட்டத்தக்கது.
‘தலித் இலக்கியத்திற்கான இடஒதுக்கீடு அவசியம் தேவை’ என்பது எழுத்தாளர் விழி.பா.இதயவேந்தனுடனான நேர்காணல். ‘தமிழ் இலக்கியத்தில் தலித் இலக்கியத்திற்கான இட ஒதுக்கீடு என்பது அவசியம் தேவை’என்பது குறிப்பிடத்தக்கது.

கவிஞர் அன்பாதவனின் விமர்சனப் போக்கு வேகமாகியுள்ளது. விமர்சனத்துக்கு வரும் எல்லாத் தொகுப்புகளையுமே ஆய்வுக்குட்படுத்தியுள்ளார். இவ்வாறு விமர்சிக்கும் போது தரமானவை, தரமற்றவை என இரண்டுமே இடம் பெற்று விடுகின்றன. இது ஒரு வகையில் பலம் எனினும் மறுபுறம் பலவீனம். ஆனால் அன்பாதவன் தன் விமர்சனத் திறத்தால் தொகுப்புக்கான பலத்தைக் கூட்டி விடுகிறார். கவிஞர்.அன்பாதவன் படைப்பாளனை பார்க்காமல் படைப்பை மட்டுமே பார்த்திருப்பது பாராட்டிற்குரியது.

அன்பாதவன் ஒரு கவிஞர் என்பதால் கட்டுரைகளுக்கான தலைப்பில் கவித்துவத்தை மிளிரச் செய்து விடுகிறார். ‘அனுபவ நிகழ்வுகளின் அழகிய பதிவுகள்’, ‘வண்ணம் பல காட்டும் சின்னமீன் தொட்டி’ ஆகியவை எடுத்துக் காட்டத்தக்கன.

‘கவிதையின் திசைகள்’ என்பது தலைப்பு எனினும் கவிதையல்லாத பிறவுமுள்ளது குறிப்பிடத்தக்கது.
இத்தொகுப்பின் வழி கீழ்க்கண்ட கருத்துக்களை அறிய முடிகின்றது.

கவிதை நேர்முகமாய் இருக்க வேண்டும்.

கவிதை வாசகனுக்கு அருகில் இருக்க வேண்டும்.

கவிதை வாசகனின் நேசிப்புக்குரியதாய் இருக்க வேண்டும்.

கவிதை நிகழ்கால வரலாறாக இருக்க வேண்டும்.

கவிதை சமகால வாழ்வின் அபத்தங்கள் குறித்து பேச வேண்டும்.

கவிதை சமூக விடுதலைக்கான ஆயுதமாய் இருக்க வேண்டும்.

கவிதை மொழிக்கும் மண்ணுக்கும் வளம் சேர்க்க வேண்டும்.

கவிதை உணர்வுத் தளத்தில் இயங்க வேண்டும்.

‘கவிதையின் திசைகள்’ என்னும் தொகுப்பில் அன்பாதவன் கையாண்ட மொழி சிக்கலின்றி வாசகனை அழைத்துச் செல்கிறது. அவரின் விமர்சனக் கருத்துக்கள் பல சுட்டிக் காட்டத் தக்கதாயுள்ளன. தற்காலத் தமிழ்க் கவிதைப் போக்கினை கண்டறிந்து சரியான திசையில் செல்ல அடையாளம் காட்டி உள்ளார்.
ஒரு படைப்பாளியாய் வெற்றிக் கண்டவர் ‘கவிதையின் திசைகள்’ மூலம் ஒரு விமர்சகனாய் வெற்றி பெற்றுள்ளார். ‘கவிதையின் திசைகள்’ காட்டிய அன்பாதவன் இலக்கியத்தின் அனைத்து வகைகளுக்கான திசைகளையும் காட்ட வேண்டும். காட்டுவார் என நம்பிக்கையுண்டு.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com