Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
பிப்ரவரி 2006

கால் சென்டர்கள் நவீனதகவல் கொத்தடிமைக் கூடங்கள்
- ஜே. பி. அர்ச்சனா

டினா : திஸ் ஈஸ் டினா. மே ஐ ஹெல்ப் யூ?
ஸ்டார் : ஹை. ஸ்டீனா, அப்படித்தானே?
டினா : யெஸ்.
ஸ்டார் : நான் அமெரிக்காவிலிருந்து பேசுகிறேன். எனது மகள் தலையில் அனியும் க்விக் பிட்ஸ் சம்பந்தமாக.
டினா : ஓ.கே. தங்கள் zip கோடு, பிளீஸ்
ஸ்டார் : 10274
டினா : 10274?
ஸ்டார் : ஆம், சரியாக எழுதிக்கொள்ளுங்கள். நீங்கள் இந்தியாவிலிருந்தா பேசுகிறீர்கள்?
டினா : நன்றி! நான் இந்தியாவிலிருந்து, மேடம்
ஸ்டார் : சரி, என்னுடைய அழைப்பு இந்தியாவுக்கா அனுப்பப்படுகிறது?
டினா : மிகவும் சரி.
ஸ்டார் : எனது ஆறு வயது மகள், செரினா மற்றும் வீனஸ் வில்லியம்ஸ் அணியும் குவிக் பிட்ஸ் வேண்டும் என்கிறாள்.
டினா : நான் அதை அனுப்ப ஏற்பாடு செய்கிறேன். அதாவது. . .
ஸ்டார் : என்ன?
டினா : விளம்பரத்தில் கோனெயர் நிறுவனத்தின் குவிக் பீட் குறிப்பிடப்பட்டிருந்தது. சரியாக கையாள. . .
ஸ்டார் : நீ என்ன சொல்ல வருகிறாய் என்பது புரியவில்லை. ஒரு நிமிடம் பொறுங்கள். வீனசும், செரினாவும் அணியும். . . வெள்ளைக் குழந்தைகள் டிவியில். . . எனது அழைப்பு இந்தியாவுக்கா அனுப்பப்படுகிறது?
டினா : மிகவும் சரி.
ஸ்டார் : உனக்கு அமெரிக்க வெள்ளைக் குழந்தையின் முடி, குவிக் பிட் பற்றி என்ன . . . . . (கெட்டவார்த்தை) தெரியும்?
டினா : மேடம், தங்கள் தகவலுக்காக நாங்கள் ஒரு தேசிய சங்கிலித் தொடர் நிறுவனம், தங்கள் நாட்டிலிருந்து அழைப்பை ஏற்கிறோம். . .
ஸ்டார் : கேள். நாயே, போனில் குழையாதே நாயே. . .
டினா : நீங்கள் இப்படி பேசுவதாக இருந்தால் நான் தொடர்பைத் துண்டிப்பேன்.
ஸ்டார் : கேள் எலி தின்னி. நான் இந்தியாவுக்கு வந்து உன்னை. . . (அச்சிடமுடியாத கெட்ட வார்த்தை) சிரிப்பு.
ஸ்டார் : எலி தின்னி (Filthy Rat eater). நான் என் ஆறு வயது அமெரிக்க வெள்ளைக் குழந்தைக்காக அழைக்கிறேன். என்ன தைரியம் இருந்தால் எனது அழைப்பை இந்தியாவில் ஏற்பாய்? லைனிலிருந்து போ பெட்டை நாயே.
டேப் முடிகிறது.

ஐ.டி.இ.எஸ் என அறியப்படும் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த சேவைகள் துறை நாளும் வளர்ந்து புதிய புதிய வழித்தடங்களை உருவாக்கி விரைந்து கொண்டிருக்கிறது. தொலைபேசி மூலம் பொருட்களை விற்பனை செய்யும் டெலிமார்க்கெட்டிங் முதல் அமெரிக்க ராக்கட்டுக்கு எஞ்சின் வடிவமைத்துக் கொடுக்கும் பணி வரை, ஐரோப்பிய நீதிமன்றங்களில் வாதிட உரைதயாரித்தல், மேல்நாட்டு நோயாளிகளின் இதயநோய் குறித்து அறிக்கை தயார்செய்வது உள்ளிட்ட வேலைகளை பி.பி.ஓ.எஸ் என அறியப்படும் நிறுவனங்களில் அப்பாவி இளைஞர்கள் தங்கள் ஆரோக்கியத்தை அடகு வைத்து செய்து வருகிறார்கள்.

இத்துறையில் பணியாற்றும் இளைஞர்களில் 81சதவிகிதம் கம்ப்யூட்டர் துறையில் பட்டம் அல்லது முதுகலைப் பட்டம் பெற்றவர்கள்; 13 சதவிகிதம் எம்.டெக்., எம்.பி.ஏ., சி.ஏ., ஐ.சி.டபுளுயு.ஏ. போன்ற பட்டதாரிகள். 67 சதவிகிதம் பி.டெக்., பி.ஈ., எம்.சி.ஏ. போன்ற படிப்பு உள்ளவர்கள்; 20 சதவிகிதம் பேர் டிப்ளமோ பட்டம் பெற்றவர்கள் என சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. ஊழியர்கள் பெரும்பாலும் 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுவோரின் மொத்த எண்ணிக்கை 10,45,000 என சமீபத்திய மக்கின்ஸி ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. 2010ல் இது 88 லட்சமாக உயரும் என்றும், தற்போது தேசத்தின் மொத்த உற்பத்தியில் 3ரூ பங்கு வகிக்கும் இத்துறை 2010ல் 7ரூ ஆக உயரும் என்றும் அவ்வறிக்கை தெரிவிக்கிறது.

இந்திய தகவல் தொழில் நுட்பத்துறையின் இந்த அசுர வளர்ச்சியைக் கண்டு குதூகலிக்கின்ற அதே வேளையில் இவ்வளர்ச்சிக்கு காலாட்படையாய் பணியாற்றும் இளைய தலைமுறையைக் குறித்து கவனத்தைத் திருப்ப வேண்டியுள்ளது.

கண்ணாடிக் கூண்டுக்குள் உல்லாசமான பணிகளை உற்சாகமாய் செய்து கொண்டு அதற்கு கைநிறைய சம்பளமும் வாங்கிக்கொண்டு மகிழ்ச்சி மட்டுமே உள்ள வாழ்க்கை நடத்துவதாக தொழில் நுட்பத் துறையினரால் தூக்கிப்பிடித்து காட்டப்படும் இவர்களின் உண்மையான பணிநிலை கவலையளிப்பதாக உள்ளது.

உலகத் தொழிலாளி ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் இரத்தம் சிந்திப் பெற்ற 8மணி நேர வேலை இவர்களுக்கு இன்றும் எட்டாக்கனி. குறைந்தபட்ச பணிநேரம் 10மணி. 12 மணி நேரம் வரைக்கூட நீளும். உலக வர்த்தகமையத் தாக்குதல், சமீபத்திய கத்ரீனா, ரீட்டா சூறாவளி போன்ற நிகழ்வுகளில் அலுவலக வளாகத்திலேயே ஊழியர்களுக்கு குட்டித் தூக்கத்திற்கு ஏற்படு செய்து நாள் முழுக்க வேலைவாங்கிய நிர்வாகங்கள் ஏராளம்.

மிகப் பெரும்பாலான நிறுவனங்களில் வரையறுக்கப்பட்ட ஊதியம் இல்லை. தொகுப்பூதியமாக வழங்கப்படும் சமூகப் பாதுகாப்பு அம்சங்களை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. தொழிலாளர் சட்டங்கள் எதுவும் பொருந்தாத இத்துறையில் பணி பாதுகாப்பு என்பது கானல் நீர். பிஸ்ஸா சாப்பிடுவதும், பைக்கிற்கு பெட்ரோல் போடுவதும், செல்போனுக்கு ரீச்சார்ஜ் அட்டை வாங்குவதும், நண்பர் / நண்பிகளுடன் ஹோட்டலில் சாப்பிட்ட சிற்றுண்டிக்கு பில்தொகை செலுத்துவது மட்டுமே பிரதான செலவுகளாக கருதப்படும் வயதில் இத்துறையின் ஊதியம் மிக அதிகமானதாக கருதப்பட்டாலும், சமூக பாதுகாப்பு என்ற அளவில் ஊதியம் மிகக் குறைவானதாகவே உள்ளது.

வேலையில் சேரும்போது மிகக்கடுமையான நிபந்தனைகளுக்கு ஊழியர்கள் கட்டுப்பட வேண்டியிருக்கிறது. வேலையில் நுழையும் போதுமட்டும் ஆறுவிதமான உறுதிமொழி பத்திரங்கள் கொடுக்க வேண்டியுள்ளது.

வேலைத் தளத்தில் செல்போன்களுக்கு, ஏன் பைகளுக்குக் கூட அனுமதியில்லை. அவை வெளியே பாதுகாக்கப்பட வேண்டும். ஊழியர்கள் பணிநேரத்தில் இயற்கை உபாதைகளுக்குக் கூட மேலதிகாரியிடம் அனுமதிபெற்றுத் தான் செல்ல வேண்டும். பல நேரங்களில் அனுமதி மறுக்கப்படும். ஊழியர்களுக்கு வரும் தொலைபேசி அழைப்புகள், இமெயில்கள் கண்காணிக்கப்படும். தொலைபேசி பேச்சுக்கள் பதிவு செய்யப்பட்டு 3மாதங்கள் வைத்திருக்கப்படும்.

பணித்தளத்தில் ‘குளோஸ்டு சர்க்கியூட்’ காமிராக்கள் வேலை செய்யும் ஊழியர்களை அனைத்து கோணத்திலும் படம் பிடிக்கும்.

சாதாரணமான ஒரு கால் சென்டரில் பணியாற்றும் ஒரு ஊழியர் ஒரு நாளைக்கு 350 தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டியுள்ளது. ஒரு அழைப்பு முடியுமுன்னரே அடுத்த அழைப்பாளர் லைனில் காத்திருப்பார். ஒரு அழைப்பு முடிந்து அடுத்த அழைப்பை ஏற்க 10 விநாடி தாமதித்தால் கூட அழைப்பவர் அழைப்பை முடித்துக் கொள்ளலாம். அவ்வாறு முடித்துக் கொண்டால், அது தானியங்கி எந்திரத்தில் பதிவு செய்யப்பட்டு, ஊழியரின் ஊதியத்தை பாதிக்கும்.

இடைவிடாத உழைப்பின் காரணமாக பல்வேறு உடல் நலக்கோளாறுகளுக்கு உள்ளாகின்றனர், பணியாளர்கள். நேரத்திற்கு சாப்பிட முடியாததால் பசியின்மையிலிருந்து தொடங்கி, மனஅழுத்தம் காரணமாக வரும் நோய்கள், நரம்பு சம்பந்தமான நோய்கள், கம்ப்யூட்டர் முன் அதிக நேரம் உட்கார்வதால், கண்கள், முதுகுத்தண்டில் ஏற்படும் நோய்கள், தொடர்ச்சியாக இரவு நேரங்களில் வேலை பார்ப்பதால் தூக்கமின்மை தொடங்கிய நோய்கள் தாக்குகின்றன. மேலை நாடுகளில் வெளிப்பணியாக்கம் காரணமாக வேலை இழப்பு ஏற்படுகிறது என்ற காரணத்தைக் கொண்டு வேண்டுமென்றே பலர் தொலைபேசியில் கால் சென்டர் ஊழியர்களைஏசுகின்றனர். இதுபோன்ற நிகழ்வுகளால் ஊழியர்களின் மன அழுத்தம் அதிகமாகிறது.

‘பல பி.பி.ஓ.க்களில் ஊழியர்கள் நிலை மிகவும் மோசம்; நட்டு, போல்டுகளைப் போன்று பயன்படுத்தப் படுகிறார்கள். அவர்கள் மனிதர்களைப் போன்று நடத்தப்பட வேண்டும்’ என்கிறார் ‘Work Agent Change’; ‘A whole New Mind’ போன்ற நூல்களை எழுதிய டானியல் பிங்க்.

வி.வி.கிரி தேசிய தொழிலாளர் ஆராய்ச்சி நிறுவனமும் இத்தொழிலாளர் பற்றிய தனது கவலையை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள அந்த நிறுவனத்தின் ஆய்வு முடிவுகள் அதிர்ச்சி அளிப்பனவாக உள்ளன. ‘வேலைக்கு சேர்க்கும் போது இனிப்பான வாக்குறுதிகளைக் கொடுக்கும் நிறுவனங்கள் அவற்றை நடைமுறையில் செயல்படுத்துவதில்லை என்றும், சீருடை அணிய வேண்டாம் என்ற சில்லரை மகிழ்ச்சிகள் மூலம் ஊழியர்களை நிறுவனங்கள் திருப்திபடுத்துவதாகவும் கூறுகிறது. வேலை சூழ்நிலைகள் பற்றி ஆய்வறிக்கை ‘அவை 19ம் நூற்றாண்டு சிறைக்கூடங்களைப் போலவும், ரோமானிய அடிமைக்கப்பல்களையும் போல் உள்ளது’ என தனது கவலையை ஆய்வறிக்கை வெளிப்படுத்துகிறது.

முறையான சமூக வாழ்க்கை இல்லாததினால் தான் இந்த இளவயது ஊழியர்கள் சரியான வழிகாட்டுதலின்றி மனம்போன போக்கில் வாழ்க்கை நடத்துகிறார்கள். மிக அதிகமாகத் தோன்றும் தங்கள் சம்பளத்தை அவர்கள் 12ரூ உடை, 6ரூ செருப்பு, 10ரூ செல்போன், 10ரூ பொழுதுபோக்கு, வாகனக்கடன் மற்றும் செலவுக்கு 20-50ரூ மாற்றுப்பால் நண்பர்களுக்கு 3ரூ, வீட்டு வாடகை7ரூ, வீட்டு உபயோக சாதனங்கள் 9ரூ செலவு செய்வதாக மற்றொரு அறிக்கை தெரிவிக்கிறது.

பணி நிரந்தரம் இல்லாததுடன், பணிச்சுமை, கடும் நெருக்கடிகள் காரணமாக வேலையை விடுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தற்போதைய விகிதப்படி 50ரூ பேர் வேலையை விட்டுவிடுகிறார்கள் அல்லது நீக்கப்படுகிறார்கள். இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாகிய விப்ரோ குழுமத்தைச் சேர்ந்த ‘ஸ்பெக்ட்ரா மைன்ட்’ என்ற பி.பி.ஓ.நிறுவனம் டிசம்பர் 2004 வருடத்தில் 90ரூ என ஊழியர்களை நீக்கியுள்ளது. இந்த ஆண்டு ஜுன் வரை 650 ஊழியர்களை நீக்கியுள்ளது.

‘பணிநிரந்தரம் இல்லாத வேலைகளில் கூட ஊழியர்களுக்கு ‘அதிகாரிகள்’ என்ற அடையாளத்துடன் பணிப் பெயர்களை அளிப்பதன் மூலம், அவர்களை ஒன்று சேர விடாமல் நிர்வாகங்கள் பார்த்துக் கொள்கின்றன. தங்கள் வேலை நிலை பற்றிய சிந்தனையிலிருந்து ஊழியர்களை திசை திருப்ப நிர்வாகங்கள் பல உத்திகளை கையாளுகின்றன. கேள்வி கேட்பவர்களை உடனடியாக வேலையிலிருந்து நீக்குவதன் மூலம் மற்ற ஊழியர்களை பயத்திற்குள்ளாக்குகின்றன’ என்கிறார் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத் தலைவர் டபிஸ்யூ. ஆர். வரதராஜன்.

தொழிலாளர் நலச் சட்டங்கள் ஏதும் செயல்படாத சூழ்நிலையில் அத்துறை ஊழியர்களுக்கு தங்கள் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகின்றது என்கிறார் ஏஐடியுசி சங்கத் தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா.

தொழில் தகராறு சட்டம் செயல்படுத்தப் படாமை, சங்கம் அமைக்கும் உரிமை பறிப்பு, அதிக வேலை நேரத்திற்கு ஊதியம் தராமல் இருப்பது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் சட்டங்களுக்கு விரோதமாக தொடர்ச்சியான இரவு ஷிப்டுகள் போன்ற கொடுமைகளிலிருந்து ஊழியர்களை விடுவிக்க தொழிற்சங்கம் தேவை என்கிறார் ஏஐடியுசி தலைவர் ஸ்வபன் முகர்ஜி.

இந்த உரையாடல் பவர் 99 என்ற எப்.எம். ரேடியோவில் அமெரிக்காவில் ஒலிபரப்பப்பட்ட உண்மை உரையாடல். இந்த உரையாடலில் பங்கெடுத்த ‘ஸ்டார்’, இந்த எப்.எம். ரேடியோ நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர். ஒலிபரப்பைத் தொடர்ந்து அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் எழுப்பிய எதிர்ப்பின் காரணமாய் இந்த ஒலிப்பதிவை செய்த ஸ்டார் ஐ ஒரு நாளைக்கு தற்காலிகமாக பணி நீக்கம் (!) செய்தது நிர்வாகம். ஆனால் இந்தியாவில் பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் பற்றி எந்த தகவலும் இல்லை. எந்த நிவாரணமும் இல்லை. இதுபோன்ற பல சம்பவங்கள் வெளியுலகுக்கு வராமல் நடந்து கொண்டே இருக்கின்றன.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com