Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
பிப்ரவரி 2006
நடைபாதைக் கடைகள்
- தீபர்

Food சென்னை தனது இருப்பில் பலரை உள்வாங்கிக் கொண்டு பெருத்து வருகிறது. சாதாரணமாக இருந்த சென்னைச் சேரிக்கு உயிரூட்டியவர்கள் ஆங்கிலேயர்கள். ஆங்கிலேயர்களுக்கு தானமாக கிடைத்த சென்னை இன்று இந்திய வணிக நகரங்களுள் ஒன்றாக மாறிவிட்டது. வானைத் தொட்டு நிற்கும் கம்பீர கட்டிடங்கள், சுத்தமான சாலைகள், பரபரப்பான அரசியல் தகிடுதித்தங்கள், பல கோடி புழங்கும் சினிமாத்துறை, சாப்ட்வேர் துறையில் மூன்றாவது இடம், தொழில் பூங்கா எளிய மனிதன் நுழைய முடியா உயர்தர ஹோட்டல்கள், மதுபார்கள், நடனங்கள், மூக்கைத் துளைக்கும் சென்ட் வாசனைகள், இத்யாதி, இத்யாதிகள். . . இவையனைத்தும் உயர்தர மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்துகொண்டு இருக்கிறது. சென்னையில் 4 சதவிகிமே உள்ள உயர்தர மக்கள் 40 சதவிகித கட்டிடங்களையும் இடங்களையும் கைப்பற்றிக் கொண்டனர்.

சென்னையில் பூர்வீகமாய் வாழ்ந்த மீனவர்களும், தலித்துகளும் சென்னை நகரத்து அழுக்கு மக்கள் என்று அடையாளப் படுத்தப்பட்டு சென்னையின் துயர வடிவமாக ஆக்கப்பட்டு விட்டனர். “சமூக விரோதக் கும்பல்கள்” வசிக்கும் இடங்கள் குப்பங்களே! என்பதான கருத்து அரசிடமும், நடுத்தர, உயர்தர வர்க்கத்திடமும் பதிவாகி விட்டது. காவல்துறையின் தனிக் கண்காணிப்பில் இக்குப்பங்கள் சிக்கி இன்று அல்லோலப்படுகிறது. இவைதாண்டி ஒவ்வொரு நாளும் நகருக்கு வேலை தேடிவரும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக உயரவும் செய்திருக்கின்றது. அடிமாட்டு விலைக்கு தமிழக கிராமங்களில் இருந்து கணிசமான மக்கள் செங்கல் சூளைக்கு இழுத்து வரப்படுகின்றனர். இதில் 10 வயது சிறுவனில் இருந்து 65 வயது மூதாட்டி வரை அடிமை வேலை செய்ய வேண்டியுள்ளது. இந்தியாவின் ‘வல்லரசு மோகத்தை’ காண விரும்புபவர்கள் இங்கு செல்லலாம். இவை தாண்டி ஒப்பந்தக் கூலிகளாக வரும் மக்கள் நடைபாதையில் முகம் புதைத்து வாழ்ந்து வருகின்றனர். வேலை தேடி வரும் பட்டதாரிகள் தெரிந்தவர், நண்பர், ஊர்க்காரர் அறைகளில் தஞ்சம் புகுகின்றனர்.

இவ்வாறாகப் பெருத்துக் கொண்டிருக்கும் சென்னையின் மக்களுக்கு உணவும், தண்ணீரும் பெரும் தலைவலியாக மாறி இருக்கிறது. 4 சதவீதமே உள்ள உயர்தர செல்வந்தர்களுக்கு ‘சொர்க்கபுரியான’ செல்வந்த ஹோட்டல்கள் இருக்கின்றன. இந்த ஹோட்டல்களில் விற்கப்படும் உணவு வகைகளின் விலைகளோ நம்ப முடியாத வகையில் இருக்கிறது. பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ஒரு மாலை வேளையில் நண்பர்களுடன் உணவருந்திய பில்: சிக்கன் பிரியானி 2x45=890, சிக்கன் மலாய் கவாப் 550, குருமா 575,NAAN 2X110=220 மொத்தமாக 2235. ஒரு வேளை உணவுக் கட்டணம் ஒரு சராசரி இளைஞனின் இரண்டு மாத உணவுக் கட்டணம். சென்னையில் திடீர் திடீரென முளைத்திருக்கும் 5ஸ்டார், 3ஸ்டார் ஹோட்டல்களின் உணவுக் கட்டணம் நினைக்கையில் தான் மனிதனின் மதிப்பு எவ்வளவு தூரம் கீழிறங்கி போயிருக்கிறது என எண்ண வைக்கிறது.

இவ்வகை ஹோட்டல்களின் கட்டணத்திற்கும் சாதிக்கும் சம்பந்தமில்லை என இங்கு யாரும் வாதிட வேண்டாம். ஏனெனில் இவ்வகை ஹோட்டல்களுக்குள் உழைக்கும் மக்களாகிய தலித்துகளோ அல்லது மிகவும் பிற்படுத்தப் பட்டவர்களோ உள்ளே நுழைய முடியாது. இன்றும் பல நட்சத்திர ஹோட்டல்களில் வேட்டி கட்டியவர்களுக்கு அனுமதி இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

சரி. இங்கு இருக்கும் தெருவோர, வேலைவாய்ப்புத் தேடும் மனிதர்களுக்கு எந்த உணவுச்சாலை அடைக்கலம் தருகிறது என இங்கு வினவத் தோன்றலாம். தெருவோரக் கடைகளே இம்மக்களின் பசிதீர்க்கும் உணவுச் சாலையாக இருக்கிறது. தெருவில் வெறும் சட்டியில் விற்கும் உணவுகளின் விலை சகாயமாக இருக்கிறது. எடுப்பு உணவின் விலை. ரூ5, மாட்டுக்கறி ரூ5, 10 ரூபாய் இருந்தால் போதும் மதிய உணவு தாராளமாக கிடைக்கும். தெருவோரத்தில் வசிப்பவர்கள், ரிக்ஷா ஓட்டுபவர்கள், மூடை தூக்குபவர்களின் உணவுப் பஞ்சத்தை இத்தெருக்கடையே நிவர்த்தி செய்கிறது.

Food சாலையின் ஓரத்தில் சற்று சுகாதாரத்துடன் உள்ள நடைபாதைக் கடைகளை சென்னைச் சாலையில் ஆங்காங்கே காணலாம். வேலைவாய்ப்பு தேடுவோர்க்கும், அடிமாட்டு விலைக்கு வேலை செய்யும் சிறு/பெரு தொழில் இளைஞர்களுக்கும் இவ்வுணவுச் சாலை அடைக்கலமாக இருக்கிறது. இரண்டு கூட்டு, சாம்பார், ரசத்துடன் கூடிய உணவின் விலை ரூ12. சில கடைகளில் ரூ15. மேலே கூறிய இவ்விரண்டு கடைகளில் தரமும், சுவையும் நன்றாகவே இருக்கிறது. விலையும் சட்டைப்பையை கடிக்கவில்லை. இதனால் நடுத்தர வர்க்க சேமிப்பாளர்கள் கூட இக்கடைகள் நோக்கி படை எடுக்கின்றனர். இக்கடைகளைத்தான் வெகுஜனப் பத்திரிகைகள் சுகாதாரமற்ற கடைகள், நோய்களை வரவழைக்கும் கடைகள் என பக்கம் பக்கமாக ‘புலனாய்வு(?)’ செய்து கட்டுரைகளை வெளியிடுகின்றன.

வெகுஜனப் பத்திரிகைகளின் அரட்டும் கட்டுரைகளைப் போன்றே காவல்துறையும் இக்கடைகளை வசூல் மூலம் அரட்டுகிறது. சிறுகடையில் ஒரு நாளைக்கு ரூ.500 கிடைக்கிறது. நடைபாதைக் கடைகளில் ஒரு நாளைக்கு ரூ.1000 கிடைக்கிறது. உணவுக்கான அரிசி, கறி, இன்னபிற சாமான்கள் வாங்குவதற்கு இதில் இருந்து கணிசமான பணம் சென்றுவிடுகிறது. இவைதாண்டி சிறுகடைக்காரருக்கு ரூ.200, நடைபாதைக் கடைகளுக்கு ரூ.400 கிடைக்கிறது. இதில் இவர்கள் ஒரு நாளைக்கு காவல்துறைக்கு ரூ.50, ரூ.100 என லஞ்சமாக அழவேண்டியுள்ளது. இவை தாண்டி வெகுஜனப் பத்திரிகைகளில் ‘புலனாய்வு’ வந்துவிட்டால் மாநகராட்சி இக்கடைகளை அப்புறப்படுத்திவிடும். சாமான்களை அள்ளிச் சென்று விடும். மீண்டும் இத்தொழிலை மேற்கொள்ள இம்மக்கள் வட்டிக்கடை நோக்கி நகர வேண்டி இருக்கிறது.

நட்சத்திர ஹோட்டல்கள் விலைப் பட்டியலுக்கும் தெருவோரக் கடைகளின் விலைப் பட்டியலுக்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமாக இருக்கிறது. மனிதம் புதைந்த உயர்தர ஹோட்டல் சமூகப் பாதுகாப்புடன் வானுயர்ந்து நிற்கிறது. உழைப்பு வழியும் தெருவோரக் கடைகள் தூற்றலுக்கும் அரட்டலுக்கும் உள்ளாகிறது. உழைப்பின் மதிப்பு உழைப்பவனுக்குத்தான் தெரியும். செருக்குற்ற அரசுக்கு எப்படித் தெரியும்?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com