Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
டிசம்பர் 2006
மன்னர்களும் கோவில் இடிப்பும்
ஆ. சிவசுப்பிரமணியன்

கோவில் என்பது வெறும் வழிபாட்டுத் தலமாக மட்டும் இந்தியாவில் விளங்கவில்லை. அதிகார மையமாகவும் பொருளியல் நிறுவனமாகவும் அது விளங்கியுள்ளது. மன்னர்கள் வழங்கிய வரிவிலக்குடன் கூடிய நிலக்கொடைகள், பொருட் கொடைகள் ஆகியன அவற்றின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரிதும் துணை நின்றன. கோவிலுக்கு உரிமையான நிலங்களில் பணிபுரியும் உழவர்கள், கோவிலுக்கு உரிமையான ஆநிரை களைப் பராமரிக்கும் ஆயர்கள், பூசாரிகள், பக்திப் பாடல்கள் பாடுவோர், இசைக் கருவிகளை இசைப்பவர், நடனமாதர் எனப் பலருக்கு வேலை வாய்ப்பு தரும் நிறுவனமாகக் கோவில் விளங்கியது. கோவிலில் நிகழும் திருவிழாக்களை ஒட்டி நிகழும் சந்தைகள், வாணிபத்திற்குத் துணை நின்றன.

ஏராளமான தானியங்களைச் சேகரித்து வைக்கும் தானியக் களஞ்சியங்கள் கோவிலில் இருந்தன. பஞ்சம் ஏற்படும்போதும், படையெடுப்புகளின் போதும் இவை மக்களுக்கு உதவின. கல்வி கற்றுக் கொடுக்கும் ‘கடிகை’ கோவிலினுள் இருந்தது. மிகப்பெரிய கோவிலாகவும் புகழ் வாய்ந்ததாகவும் இருந்தால் அங்கு புனித யாத்திரைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். இதனால் வாணிபம், கைவினைத் தொழில் ஆகியன செழித்ததுடன் வரிகளின் வாயிலாக மன்னனுக்கு வருவாய் கிட்டியது. மன்னர்களும் அவர்களைச் சார்ந்தோரும் கோவில்களுக்குக் கொடைகள் வழங்கினர்.

இவ்வாறு மன்னர்களின் ஆதரவு பெற்ற ஒரு கோவில், அவனது பகை மன்னனின் கவனத்தை ஈர்ப்பதில் ஆச்சர்யமில்லை. எனவே படையெடுப்பில் வெற்றியை வெளிப்படுத்தும் வழிமுறையாகவும் தோற்ற மன்னனை அவமானப்படுத்தும் வழி முறையாகவும் கோவிலைக் கைப்பற்றுவது அமைந்தது.

கோவில்களில் உள்ள தெய்வ படிமங்களைக் கொள்ளையடிக்கும் நிகழ்ச்சி ஏழாம் நூற்றாண்டிலேயே காணப்படுவதாக கூறும் ரொமிலா தாப்பர் (2004: 224) அதற்குச் சான்றாக சில நிகழ்வுகளைக் குறிப்பிடுகிறார்.

சாளுக்கியப் படைகள் தாம் வெற்றி பெற்ற பகுதிகளில் இருந்து வெற்றிச் சின்னங்களாக தெய்வச் சிலைகளைக் கொண்டு வந்தன.

வாதாபி படையெடுப்பின் போது அங்கிருந்த கணேசர் உருவச்சிலையை பல்லவ மன்னன் எடுத்து வந்தான்.

சண்டாளர் கல்வெட்டு ஒன்றில் வடக்கு மலைப்பகுதியில் ப்ரிதாரா மன்னனால் கைப்பற்றப்பட்ட விஷ்ணுவின் சிலை ஒன்று புண்டல் கண்ட் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டதை வர்ணிக்கிறது.

சோழ மன்னன் ஒருவன் தான் வெற்றி பெற்ற இடங்களில் இருந்து தெய்வச் சிலைகளைக் கொண்டு வந்தான். இவ்வாறு கொண்டு வரப்பட்ட தெய்வ உருவங்கள் பெரும்பாலும் வெற்றி பெற்ற மன்னனின் தலைநகரில் நிறுவப்பட்டன. இச் செய்திகள் பகை மன்னனின் அதிகாரத்தின் குறியீடாக மட்டுமின்றி கைப்பற்றப்பட வேண்டிய பொருளாகவும் விளங்கியதாக ரொமிலா தாப்பர் குறிப்பிடுகிறார் (மேலது).

கல்கனரின் “இராஜதரங்கினி” என்ற நூல் 12-ஆம் நூற்றாண்டுக் காஷ்மீரின் வரலாற்றை அறிய உதவும் ஆவணமாகும். இந்நூல் மிகிருகுல்லா என்ற காஷ்மீர் மன்னன் புத்த துறவிகளையும் புத்த மடலாயங்களையும் தாக்கியதைக் குறிப்பிடுகிறது. சஷாங்கா என்ற மன்னன் பௌத்தர்களைக் கொன்றழித்ததுடன் புத்தரது படிமங்களையும் மடாலயங்களையும் காஷ்மீரிலும் கிழக்கிந்தியாவிலும் அழித்தான். இவ்விரு மன்னர்களும் சைவர்கள் என்பதை ரொமிலா தாப்பர் (மேலது) சுட்டிக் காட்டுகிறார்.

இந்துக் கோவில்களின் மீது இந்து மன்னர்கள் நடத்திய தாக்குதல்களும் இந்திய வரலாற்றில் நிகழ்ந்துள்ளன. கி.பி.10-ஆம் நூற்றாண்டில் மூன்றாம் இராஷ்டிரகூட இந்திரா, பிரதிகவர்கள் மீது நிகழ்த்திய படையெடுப்பின் போது கல்பாவில் உள்ள கோவிலை அழித்தான். சாளுக்கியர்கள் மீதான படையெடுப்பின் போது பார்மிரா மன்னரான சப்தவர்மன் சாளுக்கிய மன்னன் கட்டிய சமண ஆலயத்தையும் அரேபிய வணிகர்களின் பள்ளிவாசலையும் இடித்தான்.

ஒன்பதாம் நூற்றாண்டில் கந்தவர்மன் தொடங்கி பல காஷ்மீர் மன்னர்கள் கோவில்களைக் கொள்ளையடிக்கும் செயலைச் செய்துள்ளனர். தமது இராஜதரங்கினி நூலில், கந்தவர்மன் என்ற மன்னன் அறுபத்து நான்கு கோவில்களைக் கொள்ளையடித்ததாகவும், கோவில்களுக்கு உரிமையான நிலங்களைக் கைப்பற்றியதாகவும் கல்கனர் குறிப்பிட்டுள்ளார்.

பதினோறாம் நூற்றாண்டைச் சார்ந்த ஹர்ஷதேவா என்ற காஷ்மீர் மன்னன் கோவிலின் வளங்களைக் கொள்ளையடித்ததுடன் தெய்வச் சிலைகளைப் பெயர்த்தெடுப்பதற்கு, ‘தேவ-உத்பதன-நாயகன்’ (தெய்வங்களுக்கு இடையூறு செய்பவன்) என்ற அதிகாரியை நியமித்தான். கோவில்களின் செல்வங்களைப் பலவந்தமாகக் கைப்பற்றுவதும் அதற்கு எதிர்ப்பிருந்தால் தெய்வச் சிலைகளை அவமதிப்பதும் அவனது கடமையாகும்.

சைவ சமயம் சார்ந்த அஜய தேவா என்ற சாளுக்கிய மன்னன் தன்னுடைய தந்தைகட்டிய சமணப் பள்ளிகளை அழித்தான். அஜயதேவாவின் மகன், தந்தை கட்டிய சைவக் கோவில்களை அழித்தான். (மேலது 226)

இச்செய்திகளைக் குறிப்பிட்டு விட்டு அரசியல் மேலாண்மையை நிலை நிறுத்தலும், பரம்பரை உரிமையை நியாயப்படுத்தலும், நிதி ஆதாரம் திரட்டலும், சமயக் காழ்ப்புணர்வும் இச்செயல்களுக்கான காரணங்கள் என்று குறிப்பிடும் ரொமிலா தாப்பர் (226) இஸ்லாமிய மன்னர்களின் கோவில் இடிப்பு நினைவில் கொள்ளப்படும் போது மேற்கூறிய இந்து மன்னர்களின் செயல்கள் மறக்கப்பட்டு விடுகின்றன என்றார்.

நாகப்பட்டினம் நாகநாதசுவாமி கோவில் கோபுரத்தின் மேல்விதானத்தில் கல்வெட்டு ஒன்று காணப்படுகின்றது. இக்கல்வெட்டு பதினைந்தாவது நூற்றாண்டைச் சார்ந்தது என்று கருதப்படுகிறது. இராஜராஜப் பெரும்பள்ளி என்ற ஸ்ரீமகேஷ்வரப் பெரும்பள்ளியின் திருப்பணிக்காகக் கோவிலைச் சுற்றியுள்ள திருமடை வளாகம். பெயர்க் குறிப்பிடப்படாத மன்னன் ஒருவனின் எட்டாவது ஆட்சி ஆண்டில் வழங்கப்பட்டதாக அக்கல்வெட்டு குறிப்பிடுகின்றது.

முதலாம் இராஜராஜனின் ஆட்சியில் ஸ்ரீவிசய மன்னன் மாற விஜயோத்துங்கவர்மன் என்பவன் இராஜராஜ பெரும்பள்ளி என்ற புத்த மடத்தை சூடாமணி விகாரில் காட்டியுள்ளான். இதுவே ஸ்ரீமகேஷ் வர பெரும்பள்ளி என்ற பெயரில் பதினைந்தாம் நூற்றாண்டில் சைவ நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளது. (A.R.E.1961 - 62 A 39)

பெரிய வடுகன் என்ற மன்னன் சோழ நாட்டின் மீது படையெடுத்த போது தெய்வ உருவங்களும் நாயன்மார் சிலைகளும் ஹொய்சாலர்களின் தலைநகரான துவார சமுத்திரத்திற்குக் கொள்ளையடித்துச் செல்லப்பட்டன. பெரம்பலூர் வட்டம் ஆடுதுறையிலுள்ள சில பள்ளிக் குடும்பங்கள் அவற்றை மீட்டு கோவிலில் மீண்டும் நிறுவின. அத்துடன் இத்தெய்வ உருக்களின் வழிபாட்டிற்காக நூறு கலம் அரிசியும் 5000 காசும் வழங்குவதாக ஒப்புக் கொண்டன.

இதை அவர்கள் தம் சொந்தப் பொறுப்பில் வழங்கவில்லை. இதன் பொருட்டு ஒவ்வொரு பள்ளிக் குடும்பத்தினரிடமிருந்து 50 காசும், ஒரு குறுணி நெல்லும் வாங்கினர். “வெண்கலம் எடுத்தும் மண்கலம் உடைத்தும்” வரி வாங்குவது போன்ற, ஏனைய பள்ளிகளிடமிருந்து இவற்றைப் பெற்றதாகக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

இச்செயலுக்காகப்பட்டு பரிவட்டம் கட்டியும் “தேவர்களுக் கெல்லாம் தேவரான பன்னாட்டான் தம்பிரான் வருகிறான்” என்ற அறிவிப்பை அவர்கள் வருகையின் போது அறிவித்தும் மரியாதை செய்தனர். இக்கல்வெட்டு குறிப்பிடும் பெரிய வடுகன் என்பவன் ஹொய்சாலி மன்னனான முதலாம் விஷ்ணுவர்தனாக இருக்கலாம் என்று 1913-ஆம் ஆண்டிற்கான கல்வெட்டு ஆண்டறிக்கை (பக்கம் 115 - 116) கருதுகிறது.

கல்வெட்டு ஆய்வாளர் கே.ஜி. கிருஷ்ணன் (1965 - 205) ஆறாம் விக்ர மாதித்தியன் என்பவனே இக்கல் வெட்டில் குறிப்பிடப்படும் பெரிய வடுகன் என்று குறிப்பிடுகிறார். மேலும் விக்ரமசோழன் மூன்றாம் ஆட்சி ஆண்டில் திருச்சி அருகிலுள்ள கரூரில், கலகம் ஒன்றில் கூத்தனார் சிலை காணாமல் போனதாகவும், மிகுதியான பணம் கொடுத்தே அதை மீட்டதாகவும் குறிப்பிடுகிறார். கலகத்திற்கான காரணத்தை இக்கல்வெட்டு குறிப்பிடாவிட்டாலும் ஆடுதுறையைப் போன்றே இங்கும் ஹொய்சாலா படைகள் வந்திருக்க வேண்டுமென்பது அவர் கருத்து (மேலது 205).

இவ்விரு கொள்ளை நிகழ்வுகளிலும் பாதிக்கப்பட்டவை சிவன் கோயில்கள் என்று தமது கட்டுரையில் கே.ஜி.கிருஷ்ணன் அடிக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். ஹொய்சாலர்கள் வைணவர்கள் என்பதால் சிவன் கோவிலைக் கொள்ளையடித்துள்ளனர் என்பதையே மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com