Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
டிசம்பர் 2006
முல்லைப் பெரியாறு:

தேக்கமுடியாத நீரலைகள்
ராஜசேகரன்

1956ஆம் ஆண்டு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பொழுது தொக்கிக் கொண்டிருந்த எத்தனையோ பிரச்சனைகளில் முல்லைப் பெரியாறும் ஒன்று. 999 ஆம் ஆண்டு கால ஒப்பந்தம் ஒன்று அவ்வப்போது நாகம் போல படமெடுத்து ஆடுவதும் பின்னர் பொசுக்கென்று படுத்துத் தூங்குவது போல் நடிப்பதும் மீடியாக்களுக்கு வேண்டுமானால் தேவையான ஒன்றாக இருக்கலாம். ஆனால் மண்ணையும் விவசாயத்தையும் நம்பி வாழும் மக்களுக்கு?

சில மாதங்களுக்குப் பிறகு ஏதோ வட மேற்குப் பருவமழையின் புண்ணியத்தால் மீண்டுமொருமுறை விக்கிரமாதித்யன் எழுந்து வந்தது போல் பெரியாறு குறித்த பேச்சுகளும் அரசுத் தரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கேரள அமைச்சர் குழு அணைப் பகுதியை வந்து பார்வையிடுவதும், அதே போன்று தமிழக அமைச்சர் குழு சம்பிரதாயமாக (அவர்கள் பார்த்துவிட்டுச் சென்றிருக்கிறார்களே என்பதற்காக) பார்க்கச் செல்வதும் 24மணி நேரச் செய்திகளை அற்புதமாய் அலங்கரிக்கின்றன.

1978லிருந்து நீடித்து வரும் இப்பிரச்சனை பேசித் தீர்க்கக் கூடியதா? தீர்க்க முடியாததா? மத்திய நீர்வளத்தறை அமைச்சகம் ஏன் தொடர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது? நமக்குள் (குறிப்பாக மாநிலங்களுக்குள்) போடப்பட்ட ஒப்பந்தங்களையே நாம் மீறும் போது உலக வல்லரசாக தன்னை காட்டிக் கொள்ளும் அடாவடி அமெரிக்கா எப்படி நம்மிடம் ஒப்பந்தப்படி (அணுசக்தி) நடக்கும்? என்பது போன்ற சாதாரணக் கேள்விகள் எழவே செய்கின்றன.

மாநிலங்களுக்குள் குறிப்பாக திராவிட மொழி பேசும் மாநிலங்களுக்குள் அவ்வப்போது எழும் இது போன்ற தண்ணீர்ப் பிரச்சனைகள் (கர்நாடகாவுடன் காவிரி, ஆந்திராவுடன் பாலாறு) உண்மையில் தண்ணீர் சார்ந்த பிரச்சினை மட்டுந்தானா? அதையும் தாண்டி வேறு ஏதாவது காரணங்கள் இருக்கிறதா என்று கூர்ந்து பார்த்தால் மொழி, இன, எல்லை உணர்வு என்பவையும் அடங்கியிருப்பதை நாம் உணர முடியும். மொழி, இன, எல்லை உணர்வுகளை மக்களிடையே ஊதிப் பெரிதாக்கியதில் அந்தந்தப் பகுதி பிராந்திய கட்சிகளுக்கும் ஊடகங்களுக்கும் மிக முக்கியப் பங்கு உண்டு. 1978ல் மலையாள மனோராமா இதழ் ‘அணை உடையும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக’ கதை விட்டதும் தேசியம் பேசும் நாளிதழ்கள் அவ்வப்போது பேச்சு நடத்தும் இடதுசாரிகளை கொச்சைப்படுத்தி செய்தி வெளியிடுவதும் இதன் ஒரு பகுதிதான். தேசியக் கட்சிகள் இப்பிரச்சனையை பெரும்பாலும் தடாலடியாக பிரச்சனை செய்யாமல் பேச்சு வார்த்தை என்ற போர்வையில் நாட்களை கடத்திச் செல்வதில் கவனம் செலுத்தியிருக்கின்றன.

உண்மையில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டிருக்கிறதா? இல்லை அணை உடைந்து கேரள மக்கள் பாதிக்கப்பட்டு விடுவார்களா? என்ற இரண்டு கேள்விகளில் முதல் கேள்விக்கு ‘ஆம்’ என்ற சொல்லே பதிலாக வரும். கேரள மக்களின் பயமும் நியாயமானது தான். ஆனால் அதே நேரம் அபத்தமானதும் கூட. ஏனெனில் அணை உடைந்து விடும் என அச்சப்படுவது அவர்களுக்கு நியாயமானதாகப் படலாம். ஆனால் அது உண்மையல்ல. ஒன்று இரண்டல்ல. மூன்று வைத்தியர்கள் நோயாளியை பார்த்து ‘தைரியம்’ சொன்ன பிறகு, ‘இல்லை நான் செத்து விடுவேன்’ என நோயாளி நம்பிக்கை இழப்பதைப் போலத் தான் கேரள அரசின் நிலைப்பாடும். மத்திய மாநில அரசுகளின் பிரதிநிதிகள் நேரடியாகப் பார்வையிட்டு ‘உறுதி’ சொன்ன பிறகும் நம்ப மறுப்பது உண்மையில் கொடுக்க மறுப்பதன் அடையாளந்தான்.

கொடுக்க மறுக்கும் மனோபாவம் 19.10.1886 அன்று மதராஸ் ராஜ்ய நிர்வாகத்திற்கும் திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கும் இடையே ஏற்பட்ட 999 ஆண்டு கால ஒப்பந்தத்தையே கேலி செய்வதற்கு ஒப்பானதாகும். இதே நிலை நீடிக்குமானால் இந்தியா முழுமைக்கும் பல்வேறு மாநிலங்களுக்கிடையில் பல்வேறு கால கட்டங்களில் ஏற்படுத்தப் பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மறுபரிசீலனைக்கு உள்ளாக்க வேண்டி வரலாம்.

ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு பிரச்சனையை முன்னெழுப்பி மற்ற மாநிலங்களின் முன்னேற்றத்திற்கு தடை விதிக்கலாம். இது வெறும் எல்லை சார்ந்த பிரச்சனையோ பொருள் சார்ந்த பிரச்சனையோ மட்டுமல்ல. மறாக உணர்வு சார்ந்த -உயிரோடு சம்பந்தமுடைய பிரச்சனையுமாக இருப்பதால் அந்தந்தப் பகுதி மக்கள் அண்டை மாநில மக்களின் உணர்வுகளை மதித்து நடக்க வேண்டி யது மிகமிக முக்கியமானது.

தமிழக மக்கள் கேரள மக்களிடம் கேரள மக்களுக்குரிய நீரை கேட்கவில்லை; மாறாக அவர்கள் பயன்படுத்தியது போக, அவர்களால் பயன்படுத்தப்படாமல் வீணாக அரபிக் கடலில் கலக்கும் நீரைத்தான் தேக்கி வைக்க அனுமதி கேட்கிறார்கள். இது தட்டிக் கேட்பதல்ல. மாறாக தாகமாய் கேட்பது. இந்த உணர்வுகளை கேரள மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 1979ஆம் ஆண்டிலிருந்த நீர் தேக்க அளவான 152 அடி 136 அடியாகக் குறைக்கப் பட்டதால் அணையின் கொள்ளளவில் வருடந்தோறும் 5 டி.எம்.சி. அளவு குறைகிறது. இதனால் தமிழகத்திற்கு விவசாய உற்பத்தி, மின் உற்பத்தி என்கிற வகையில் வருடந்தோறும் சுமார் 150 கோடி நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

இங்கு நான் மீண்டும் மீண்டும் ‘கேரள மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்’ என்று கூறுவதற்குக் காரணம் உண்மையில் கேரளாவைப் பொறுத்தவரை தொடர்ந்து மாறி மாறி ஆட்சி செய்து வரும் இடது சாரி, காங்கிரஸ் இயக்கங்கள் மக்களது வாக்கு வங்கியை இழந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் இவ்வளவு பிரயத்தனம் எடுத்துக் கொள்கிறார்கள். மக்களே தன்னெழுச்சியாக கிளர்ந்தெழுந்து தமிழக மக்களுக்கு ஒப்பந்தப்படி தண்ணீரை பகிர்ந்தளிக்காதவரை இப்பிரச்சனையில் முன்னேற்றம் ஏற்படாது என்றே சொல்லத் தோன்றுகிறது. உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என நீதிமன்றப் படிக்கட்டுகளில் இருமாநில அரசுகள் ஏறி இறங்குவதன் அவசியமே தேவையில்லை. உச்ச நீதிமன்றம் கருத்துச் சொல்லியிருப்பதைப் போல ‘தமிழக கேரள அரசுகள் இப்பிரச்சனையை பேசித் தீர்த்துக் கொள்ளலாம்’ என்பதே அதன் அடிநாதம்.

அதை விடுத்து நீ பெரியவனா? நான் பெரியவனா? என்பதான போட்டிகள் மேலும் சிக்கலுக்குத் தான் வழிவகுக்குமே தவிர பிரச்சனையை தீர்த்து வைக்காது. அணைக்குத் தேவையான நீர் உற்பத்தியாகும் தேவிகுளம் வட்டாரப் பகுதி விவசாயி களையும் அணை அமைந்திருக்கும் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளையும் தமிழக விவசாயிகளோடு கலந்து பேசுவதற்கான வாய்ப்புகளை ஒருமுறை ஏற்படுத்தலாம். குடிநீருக்கே கஷ்டப்படும் மதுரை, திண்டுக்கல், இராமநாதபுரம் பகுதி மக்களின் சூழலையும் அவர்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் ஒரு வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். அத்தகைய நிலையில் இதற்கான இறுதி சட்ட முடிவை நோக்கி நாம் நகர்ந்து செல்ல முடியும் என்று நாம் தீவிரமாகப் பேசிக்கொண்டு வருகிறோம். அதில் தென்னிந்திய நதிகளையாவது முதலில் இணைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அத்தகைய ஆசைகளுக்கு குறைந்தபட்சம் அந்தந்த மாநில மக்களின் விட்டுக் கொடுக்கும் மனோபாவமும் பக்கத்து மாநில மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவதும் மிக முக்கியமானதாகும். இல்லையெனில் காவிரி நதிநீர் ஆணையத்திற்கு ஏற்பட்டிருக்கும் நிலைதான் தற்போதைய பேச்சு வார்த்தைக்கும் ஏற்படும்.


முல்லைப் பெரியாறு
1. ஆசியாக் கண்டத்தில் முதன் முதலாக ஒரு ஆற்றுப் படுகையில் ஓடும் நீரை மற்றொரு ஆற்றுப் படுகைக்குத் திருப்பு வதற்காக கட்டப்பட்டது - பெரியாறு அணை.
2. 100 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயப் பொறியாளர் பென்னிகுயிக் அவர்களால் 1895ல் இந்த அணை கட்டப்பட்டது.

3. 1850ல் தமிழ்நாட்டில் கடும் பஞ்சம் நிலவியதை அடுத்து இந்த அணை கட்ட முடிவு செய்யப்பட்டது.

4. முல்லை ஆற்றையும் பெரியாற்றையும் இணைத்து அணை கட்டப்பட்டுள்ளது.

5. இது தொடர்பாக 29.10.1886 ஆம் ஆண்டு மதராஸ் ராஜ்ய நிர்வாகத்துக்கும் திருவாங்கூர் சமஸ்தானத்துக்கும் இடையே 999 ஆண்டு கால ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

6. அணையின் உயரம் 155 அடி, கொள்ளளவு 15.5 டி.எம்.சி.

7. சுற்றுச் சூழல் மற்றும் வன விலங்குகள் பாதுகாப்பு கருதி அணையில் 104 அடிக்கு கீழ் உள்ள தண்ணீரை எடுக்கக் கூடாது என்ற உடன்பாடு உள்ளது.

8. இந்த அணையால் 2.5லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது.

9. அணை பலவினமடைந்துள்ளதால் அணையின் நீர் தேக்க மட்டமான 152 அடி நீர்மட்டத்தை 136 அடியாகக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று 1979ல் கேரள அரசு யோசனை கூறியது. (23.11.1979)

10. இதையடுத்து தமிழக அரசால் அணை பலப்படுத்தப் பட்டது.

11. அணையைப் (29.4.1980) பார்வையிட்ட மத்திய நீர்வள ஆணைய நிபுணர்கள் இதற்காக சான்றளித்துள்ளனர்.

12. கேரள அரசு அணையின் பாதுகாப்பு கருதி என்று கூறி நீர்தேக்க அளவை உயர்த்த எதிர்ப்பு தெரிவித்தது.
13. 142 அடிவரை நீரைத் தேக்கி வைக்கலாம் என பிப்.27 2006ல் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை கேரளா மதிக்கவில்லை.

14. 1979லிருந்து 136 அடியாகக் குறைக்கப் பட்டதால் அணையின் கொள்ளளவான 5 டி.எம்.சி குறைந்துள்ளது. இதனால் தமிழகத்திற்கு வருடந்தோறும் சுமார் 150 கோடி நஷ்டம்.

15. தில்லியில் நவ.29ல் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் முன்னிலையில் இருமாநில முதல்வர்களும் பேச்சு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.





நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com