Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
டிசம்பர் 2006
ஒரு பயணியின் கதை

இலங்கை நாடகவியல் துறை பேராசிரியர் மெளனகுரு சமீபத்தில் தமிழகம் வந்திருந்தார். மதுரையில் புதியகாற்று கூட்டரங்கில் அவரின் உரையாடல் அரங்கு ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அன்று அவர் நிகழ்த்திய உரையின் சுங்கிய வடிவம் இது. அரங்கை மாற்று பண்பாட்டு களம் அமைப்பின் சார்பில் பேராசிரியர்கள் இ.முத்தையா, சுந்தர்காளி ஆகியோர் ஒழுங்கு செய்திருந்தனர்.

என்னுடைய தமிழகப் பயணத்தின் நோக்கம் நண்பர்களைச் சந்திப்பது. ஏன் இந்த எண்ணம் வந்தது என்று சொன்னால்; வாழ்க்கையின் சாரம் இது தான். கடைசியாக என்னதான் கொள்கை, கோட்பாடு என்று நாங்கள் இயங்கினாலும் மிஞ்சுவது இந்த உறவுதான். அன்பு தான். நெருக்கம்தான். அதைத் தேடி புறப்பட்ட ஒரு பயணம் இது.

அறுபத்தி மூன்று வருட வாழ்க்கை, நாற்பது வருட நாடக ஈடுபாடு, நாற்பது வருடகால தொடர் உழைப்பு. இதற்கு ஊடாக நான் எப்படி ஆரம்பித்தேன்; எப்படி நடந்தேன்; இப்போது எப்படி இருக்கின்றேன் என்பதை உங்கள் முன் வைத்தால் உங்களுக்கு பிரயோசனப்படும் என்று நம்புகிறேன். பிரயோசனப்படாமல், உங்களுக்கு மாறுபாடு இருந்தால் பிழை என்று சொல்வீர்கள், இது எனக்கு ஒரு அனுபவமாக இருக்கும். ஒருவகையில் இது பேச்சல்ல. கருத்துப் பகிர்வு என்று சொல்லலாம்.

என்னுடைய உரையை மூன்று விசயங்களுக்குள் அடக்கவிருக்கிறேன். என்னுடைய பயணத்தையும் என்னுடைய வாழ்க்கையும் என்னுடைய செய்ல்பாடுகளையும் புரிந்து கொள்வதற்கு இந்தப் பின்னணி அவசியம். முதலாவதாக இலங்கையின் அரசியல் பொருளாதார சமூகப் பின்னணியின் வளர்ச்சியை புரிந்து கொண்டால்தான் என்னைப் புரிந்து கொள்ள முடியும். இரண்டாவதாக வாழ்க்கையில் நான் பெற்ற அனுபவங்கள். மூன்றாவதாக இந்த வாழ்க்கையின் ஊடாக நான் கலை இலக்கிய உலகில் முக்கியமாக இந்த நிகழ்த்துக் கலைத் (Performing arts) துறையில் செய்த முயற்சிகள். எதை நோக்கி நாங்கள் சென்றோம். இப்போது நான் என்ன யோசிக்கின்றேன். இவற்றையெல்லாம் சொன்னால் அந்தப் பகிர்தல் முழு மையாகுமென்று நான் நம்புகிறேன்.

முதலாவதாக ஈழத்தின் அரசியல் பொருளாதார சமூக வளர்ச்சி. நான் 43ம் ஆண்டு பிறந்தேன். 47ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தது. சுதந்திரத்திற்கு முற்பட்ட அடிமை இலங்கையில் பிறந்தவர்கள் நாங்கள். இப்போதும் சுதந்திரம் கிடைத்ததாக எங்களுக்குத் தெரியவில்லை. இப்போது எனக்கு ஞாபகம் தெரிகிறது. இந்திய தேசியக் கொடியை சுமந்து ‘மகாத்மா காந்திக்கு ஜே’ என்று சொல்லிக் கொண்டு போனது. சுதந்திரதின விழா கொண்டாடியதும் அப்படித்தான். மகாத்மா காந்திக்கு ஜே; மகாத்மா காந்திக்கு ஜே எனச் சொல்லிக் கொண்டு பள்ளிக் கூடத்துக்கு போனதுதான் எனக்கு ஞாபகம் வருகிறது. 47ம் ஆண்டு நான் படிக்க ஆரம்பிக்கிறேன். சின்ன வயதிலே நாடகத்தில் ஈடுபடத் துவங்கி விட்டேன். அப்போது தமிழரசுக் கட்சி - சமஸ்டி கட்சி எனக் கேள்விப்பட்டிருப்பீர்கள் - செயல்படத் துவங்கியது. செல்வ நாயகம் அக்கட்சியை ஆரம்பித்து இருந்தார். வடக்கு மாகாணம் யாழ்ப் பாணம், கிழக்கு மாகாணம் மட்டக் களப்பு. முதன் முதலாக வடக்கு மாகாணத்தில் இருந்து கிழக்கு மாகாணத்திற்கு செல்வநாயகம் வந்து அக்கட்சியை ஆரம்பித்து தமிழரசுக் கட்சி வாயிலாக வடகிழக்குத் தமிழர்களை ஒருங்கமைத்து வளர்த்தனர். சிறுவயதிலேயே அந்த ஈடுபாடு என்னுள் இருந்தது.

தமிழரசுக் கட்சி தமிழ் இன உணர்வு; சிங்களர்க்கு எதிரான கோசங்கள் வைத்து சமஸ்டியை ஆதரித்து பேசியது. அதன் பின்னால் 60, 70களிலே இடதுசாரிக் கட்சிகள் முக்கிய இடம் வகிக்கத் தொடங்கின. நாட்டின் பிரச்சனையை சுயாட்சியால் தீர்க்கலாம் என்று ஒரு கட்சி கூற; இல்லை சிங்கள தமிழ் ஒற்றுமையால் தீர்க்கலாம் என்று இடதுசாரிகள் கூறினார்கள்.

இடது சாரிக் கட்சிகள் 60, 70களில் மிக முக்கியப் பங்கை வகித்தனர். பின்னால் 73ல் வகுப்புக் கலவரம் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. தமிழர்கள் எல்லாம் அடித்து கலைக்கப்படுகிறார்கள். வடகிழக்கில் வந்து குடியேற ஆரம்பித்து விட்டார்கள்.அப்போது விடுதலை இயக்கங்கள் தோன்றத் துவங்கின. 90களிலேயே விடுதலை இயக்கங்கள் உச்சத்திற்கு சென்று அது ஒரு தலைமை இயக்கமாகி இப்போது 2006லே இனப்பிரச்சனை தேசிய இனப்பிரச்சனையாக மாறி இன்று சர்வதேச அளவில் கொண்டு செல்லப்பட்டு அங்கு பேச்சுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இது அரசியல் வரலாறு.

இதனுடைய பொருளாதார வரலாறு என்று சொன்னால்; நிலமானிய முறையில் சுதந்திரத்திற்கு முன்னர் இலங்கை இருந்தது. ஆங்கிலேயர் வருகை காரணமாக ஏற்றுமதி பொருளாதாரமாக- தேயிலை, ரப்பர் ஏற்றுமதி - மாறத் துவங்கியது. அதன் பின்னால் தேசிய முதலாளிகள் தோன்றி அது தேசிய பொருளாதாரத் தன்மை கொண்டதாக மாறியது. இன்று பன்னாட்டுக் கம்பெனி பொருளாதாரமாக எங்கள் பொருளாதாரம் மாறிவிட்டது.

சமூகம் எப்படி மாறியது என்று சொன்னால்; ஆரம்பத்திலேயே பழைய அமைப்பிலே சாதி அமைப்புகள் இருந்தன. பின்னால் ஆங்கிலேயக் கல்வி காரணமாக; தமிழ் மக்களிடையும் சிங்கள மக்களிடையும் மத்திய தர வகுப்பு உருவாகத் தொடங்கியது. பின்னர் மத்திய தர வர்க்கத்தினர் இந்த அரசியலை கையில் எடுத்துக் கொள்கின்றார்கள். கிராமப் புறங்களிலே சாதி வேறுபாடுகளும் பழமையும் இருக்க நகர்ப்புறங்களிலே மாற்றங்கள் நடந்து கொண்டு இருந்தன. இந்தப் பின்னணி எங்களையெல்லாம் புரிந்து கொள்வதற்கு உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன்.

இதுவரை நான் இலங்கையின் சமூக, பொருளாதார அரசியல் பற்றிச் சுருக்கமாகக் கூறினேன். இதில் நான் எங்கே வருகிறேன் என்பதை கூறுகிறேன். 47ம் ஆண்டில் கிராமச் சூழலிலே நான் வளர்ந்தேன். கிராமச் சூழலில் நான் கேட்டு வளர்ந்ததெல்லாம் உடுக்கடியும், சிலம் பொலியும், மத்தள ஒலியும் தான். சாதாரண கிராமிய மக்கள். இந்த கிராமிய மக்களின் வாழ்க்கை என் உடம்பிற்குள் ஓடியிருக்க வேண்டும். இயல்பாகவே அந்த சிலம்பினுடைய; மத்தளத்தினுடைய; சலங்கையினுடைய ஒலி என் இரத்தங்களுக்குள் ஓடியிருக்க வேண்டும். லயம் இயல்பாகவே அமைந்து விடுகிறது.

பத்து வயதிலே தமிழரசுக் கட்சிக்காக பேசும் பையனாக மாறி விட்டேன். கைகளைக் கீறி இரத்தங்களை வடித்து நாங்கள் அனுப்பினோம். அறுபதுகளில் எங்களை இராணுவம் தேடியது. அப்போது நான் 10, 11ம் வகுப்புகளில் படித்துக் கொண்டிருந்தேன். பயங்கரமாக இனவாதம் பேசிக்கொண்டு இருந்தேன். சிங்கள வர்களைப் பற்றி தாறுமாறாகப் பேசினேன். பிறகு பல்கலைக்கழகம் வருகின்றேன். பல்கலைக்கழகம் வந்தபோது எனக்கு சிங்கள மாணவர்களின் அன்பு கிடைக்கிறது. இடதுசாரிக் கொள்கைத் தொடர்பு கிடைக்கிறது. கைலாசபதி முதலானோரின் வழிகாட்டுதல் கிடைக்கின்றது. நான் ஒரு மார்க்சிய வாதியாக மாறத் துவங்கினேன். வியட்நாமிற்காக போராட்டம் நடந்த காலமிது. அதிலே ஈடுபட்டு நாங்கள் கனகாரியங்கள் செய்திருக்கின்றோம். இதெல்லாம் ஒரு கால கட்டம்.

ஆனால் அப்போது எங்களுக்குள் ஒரு உறுத்தல் இருந்தது. இடது சாரிகள் இனம் பற்றி கதைக்கிறார்கள் இல்லையே என்ற ஒரு துக்கம் மனதிலே இருந்தது. தமிழினம் பற்றி தமிழர்கள் பற்றி கதைக்கிறார்கள் இல்லையே என்று கொதித்துக் கொண்டு இருந்தோம். மாறாக கைலாசபதி போன்றவர்கள் தமிழை வித்தியாசமாகப் பார்த்தார்கள். அது போதாது போல பிரமை எங்களுக்கு இருந்தது. ஆனால் காலப் போக்கில் அந்த இடதுசாரிகளும் தமிழர்களை கைவிட்டு விட்டார்கள் போலத் தெரிகிறது. அவர்களது கொள்கைக் கோட்பாடு அப்படி. நாங்களும் அங்கிருந்து வெளியேறி விட்டோம்.

பின்னால் 79களில் யாழ்ப்பாணம் வருகின்றோம். 79களில் இருந்து 83வரை யாழ்ப்பாணத்தில் இருந்தோம். அப்போது அங்கு இயக்கங்கள் தோன்ற ஆரம்பித்தன. இயக்கங்கள் இனத்தை அடிப்படையாகக் கொண்டு போராடிக் கொண்டிருந்தார்கள். ஆனால் இனப்பிரச்சனையையும் சுயாட்சியையும் முதன்மைப் படுத்திய அளவு அடித்தள மக்கள் பற்றியோ வர்க்கங்கள் பற்றியோ அவர்கள் பேசாதது ஒருவிதமான சோர்வு ஏற்பட்டது.

எதிர்பார்த்த உறவுகள் அங்கும் கிடைக்கவில்லை. இங்கும் கிடைக்கவில்லை என்ற நிலை ஏற்பட்டபோது நான் என்னைப் பொறுத்தவரையில் தனித்துவமாக; எனக்குத் தெரிந்த அந்தப் பாதையிலேயே இயங்கத் தொடங்கி விட்டேன். இதுதான் நான் இதுக்குள் வந்த விதம். ஒரு கிராமத்து பையன் பல்கலைக் கழகத்திற்குள் வந்தது. விரிவுரையாளராகியது; கைகளை கிழிக்கத் தொடங்கியது; யாழ்ப் பாணத்திற்குள் வந்தது; வித்தியாசமான காரியங்களைச் செய்யத் துவங்கியது.

மூன்றாவதாக இதற்குள்ளே எனது கலைப்பயணம் பற்றியது. இந்தப் பரந்த சமூகப் பின்னணியில் எப்போதுமே நான் தனியாக இயங்க முடியாது. சமூகம் எங்களை இயக்கும். இந்த இயக்கம் எங்களைத் தள்ளும். இந்தச் சூழலுக்கு நாங்கள் எதிர்வினை செய்தோம். எதிர்வினை செய்துதான் எங்களை நாங்கள் வளர்த்து வந்தோம். எதிர்வினை பண்ணுவது அவரவர் சுதந்திரம். தெரிவு ஒன்று இருக்கிறது. அதை நாம் தான் செய்ய வேண்டும். அப்படியாக வளர்ந்தோம். முதலாவதாக நான் கூறினேன் அந்த இலங்கைப் பின்னணி; இரண்டாவதாக நான் கூறினேன் எனது வாழ்க்கை அனுபவங்கள். மூன்றாவதாக நான் கூறப் போவது நாங்கள் செய்த வேலைகள்.

சிறுவயதிலே இந்தக் கூத்திலே எனக்கு மிகுந்த ஈடுபாடு கூடியது. என்னுடைய மாமனார் ஒரு அண்ணாவியார். கூத்துக்காரர். எங்கள் ஊரிலே கூத்துப் பழகும் போது நேரடியாகப் பார்த்து விட்டோம். மத்தளம் தூக்கி கொடுத்திருக்கிறேன். உடுப்புகள் தூக்கி கொடுத்திருக்கிறேன் கூத்தாடு பவர்கள்; இங்குள்ளது போன்று தெருக்கூத்து அல்ல. ஊரிலே பகுதி பேர் சேர்ந்து ஒரு அண்ணாவி யாரை கூப்பிட்டு கூத்து பழகுவது தான் அங்கே கூத்து. கூத்தை கிட்டத்தட்ட ஒருவருடம் பழகுவர். அது ஒரு Community Theater தான். கூத்துக் குள்ளால் அந்தக் கிராமத்தின் ஒற்றுமை வரும்; அழகியல் உணர்வு வரும்; உளவியல் தேவைகள் பூர்த்தி படும். கனவிசயங்கள் இந்தக் கூத்திலே இருந்தன. கூத்துக்குள் நான் வளர்ந்தேன். ஆனால் எங்களை கூத்தாட விடவில்லை. கூத்தாடியவர்கள் யாராக இருந்தார்கள் என்றால் நன்றாகத் தண்னி போட்டு கூத்தாடினார்கள். அவர்களோடு என்னை விடவில்லை, கடைசி வரைக்கும்.

ஆனால் இந்தக் கூத்தின் லாவகம் மனதிற்குள்ளே வந்து விட்டது. அப்ப இந்தக் கூத்துக்குள்ளே நான் இருக்கிறேன் என்று நினைத்தபோது நான் கல்லூரிக்குள் அல்ல Secandary School. அங்கே வருகிறேன். அங்கே கூத்தாட அனுமதி கிடைத்தது. சிவ வேடம் எனக்கு. அந்தக் கூத்து மிக நல்ல கூத்தாகப் பாவிக்கப்பட்டு; பிறகு வித்தியானந் தன் அதைப்பார்க்க வருகிறார். அந்தக் கூத்தைப் பார்க்கிறார். அதைப் பார்த்தப் பின்னர் கவரப்படுகிறார். சிவத்தம்பி சொல்லுவார்; பேராசிரியர் வித்தியானந்தன் சொன்னாராம் ‘போர வழியிலே அந்தப் பையனையும் பார்த்து விட்டுப் போகலாம்’ என்று. அப்போது நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். Univer-sityயை பத்தி தெரியாது. ஒரு ஆள் வந்தார். கூப்பிட்டார். தோளில் கைபோட்டு தட்டினார். நல்லா ஆடினீர்கள் என்றார். அந்த முகம் கண்ணுக்குள் இருக்கிறது. நான் வரவான்னு போய்ட்டார். போனவர் இந்தக் கூத்தை பேராதனைக்கு அழைக்கின்றார். வரச் சொல்லி. பேராதனைக்கு பள்ளிக் கூடத்தில் இருந்து கூத்து போகிறது. பேராதனைப் பல்கலைக் கழகம் Open Theater. நெருங்கியசனம். நான் ஆடுகின்றேன்.சிவவேடம் ஆடுகிறேன். பதினெட்டு வயது பொடியன். அப்பொழுது நான் வேகமாக ஆடுவேன். இப்போது அந்த வேகம் போய்விட்டது.

அந்தக் காலத்திலேதான் பேராசிரியர் சத்சந்திரா அவர்கள் நாடக மரபில் இருந்து சிங்கள நாடக மரபை உருவாக்கிக் கொண்டு இருக்கிறார். அவர் தயாரித்த அந்த நாடகங்கள்; கூத்துகள் தேசிய நாடக மரபாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அதற்கான கூறுகளை எங்கே இருந்து எடுத்துக் கொண்டார் என்றால் தமிழ் கூத்தில் இருந்து அப்பொழுது தான் வித்தியானந்தம் பார்த்தார். தமிழ் கூத்திலிருந்தே ஒரு தேசிய மரபை அவர் உருவாக்க முடியுமானால் எங்கள் கூத்திலிருந்து நாங்கள் ஒரு தமிழ் கூத்து மரபை உருவாக்க முடியாதா? என்று ஒரு மீள் கண்டுபிடிப்பு ஒன்றை அவர் செய்யத் துவங்கினார்.

அவருக்கு உறுதுணையாக இருந்தவர் பேரா. சிவத்தம்பி. அவருக்கு உறுதுணையாக இருந்தவர் பேரா.கைலாசபதி. பேரா.கைலா சபதியும் சிவத்தம்பியும் வித்தியானந்தாவின் மாணவர்கள். இப்போது ஞாபகம் வருகிறது அந்தக் கூத்தை நாங்கள் ஆடிவிட்டு நிற்கும் போது; ஐயாயிரம், ஆறாயிரம் மாணவர்கள் சிங்களவர், தமிழர் எல்லாம் கலந்து இருக்கிறார்கள். எல்லா பக்கமிருந்தும் தமிழ்க் கலை வாழ்க, தமிழ்க் கலை வாழ்க என்ற சப்தம் வருகிறது.

நான் நம்புகிறேன். அங்கிருந்த தமிழ் மாணவர்களுக்கு ஒரு போதா மை இருந்திருக்கிறது. இதைக் கண்டவுடன் அந்த வேகம் பீறிட்டுக் கிளம்பி இருக்கிறது போல் தெரிகிறது. அதன் பின்னால் பலபேர் வந்தார்கள். எங்களை கட்டி அணைத்தார்கள். கொஞ்சினார்கள். அப்படி நம்மை அணைத்தவர்களுள் முக்கிய மானவர்களை பிறகுதான் கண்டேன். பேரா.சதக்சந்திரா வந்திருக்கிறார்கள். அவரும் நானும் பிறகு தந்தை மகன் போல பழகிவிட்டோம்.

பேரா.சிறிகுலசிங்கா இருந்திருக்கிறார். பேரா.கணபதி பிள்ளை இருந்திருக்கிறார். இவர்களெல்லாம் எங்களை கட்டியிருக்கிறார்கள். அப்போதுதான் எனக்குத் தெரிய வந்தது. இதற்குள் ஏதோ இருக்கிற தென்று - ஊரிலே கதைக்கப்பட்ட கூத்துக்குள் ஏதோ இருக்கிறது என்ற உணர்வு அப்போது தான் வருகின்றது. பள்ளிக்கூடம் வந்தபோது, பேரா.வித்தியானந்தன் ஒரு கடிதம் கொடுத்திருந்தார். அதை ஒவ்வொரு வகுப்பாகக் கொண்டு சென்று காட்டினோம். காட்டிய போது எங்களுக்கு பெயர் கிடைத்தது. புகழ் கிடைத்தது. பாடசாலை அறிந்த வனாகி விட்டேன். அப்போதுதான் கூத்தில் மிகுந்த ஈடுபாடு கண்டது.

பேராதனைக்கு போன போது தான் வித்தியானந்தன் கண்டார் என்னை. ‘ஆ. வந்திட்டீர்களா?’ என்று கேட்டார். கூத்து போடு வோமா என்று கேட்டார். அடுத்த நாளே ஆரம்பித்து விட்டேன். பேரா. வித்தியானந்தன் முக்கியமான ஒரு ஆள். அவர் மட்டக்களப்பிற்கு வந்து, அண்ணாவிகளை செலக்ட் பண்ணி; எங்களை வைத்து பழைய கூத்துக்களை சுருக்கி எழுதி, அண்ணாவிமார்களைக் கொண்டு பழக்கி, பேராதனை பல்கலைக் கழகத்தில் முதலாவது நாடகம் கர்ணன் போடுகிறார். நான்தான் கர்ணன். பேராதனைப் பல்கலைக் கழகத்தில் காலடி எடுத்து வைத்த உடனே எனக்குப் பிரம்மாண்டமாக இருக்கிறது. சின்னக் கிராமத்திலே இருந்து போன எனக்கு, பேராதனை University is best university in south Asian. எட்டு, ஒன்பது மைல் நீளம். வெள்ளக்காரர்களால் உருவாக்கப்பட்டது. நடை உடை பாவனை அனைத்தும் மேற்கத்திய ஸ்டைல் தான். அதுக்குள்ளே போன உடனே எனக்கு நடுக்கம். இதுக்குள்ள நாம நாலு வருஷம் படித்துவிட்டு ஒழுங்கா போக முடியுமா? அடுத்த வருஷம் கர்ணன் போர். நான்தான் கதாநாயகன். உங்களுக்குத் தெரியாது. University Election நடக்கும் போது என்னைத்தான் ஓட்டு சேகரிக்க பிடிப்பார்கள். நானும் ஓட்டுச் சேகரிப்பேன். கூத்து தந்த மகத்துவம். அடுத்தது நொண்டி நாடகம் போட்டோம். அடுத்ததாக இராவ ணேஸ்வரம் போடணும்னு வந்தோம்.

வித்தியானந்தன், கூத்தை அப்படியே சுருக்கிப் போட்டார். மாற்றவே இல்லை. அப்படியே கூத்தாய் போட்டார். இராவணேஸ்வரம் போடும் போது நானும் அவர்களோடு ஒருவனாகி விட்டேன். முதலாவதாக கர்ணன் போடும் போது டைரக்டர் வித்தியானந்தன், உதவி டைரக்டர்கள் பேரா.சிவத்தம்பி, பேரா.கைலாசபதி. நொண்டி நாடகத்திற்கு டைரக்டர் வித்தியானந்தன். உதவி டைரக்டர் சிவத்தம்பி. இராவணேஸ்வரம் டைரக்டர் வித்தியானந்தன் உதவி டைரக்டர் சிவத்தம்பி.

அது ஒரு வித்தியாசமான காலம். அதை எப்படி மாத்தினோம் என்று சொல்வதே பெரிய கதை. இராவணேஸ்வரம் நாடகப் பொறுப்பு என்னிடம் தான் ஒப்படைக்கப்பட்டது. இராவணனை எழுத வேண்டும் என்றார்கள். குருவி தலையில் பனங்காயை வைத்து விட்டார்கள். சிவத்தம்பி எனக்கு இராமாயணத்தை படிப்பித்தார். எப்படி ஆரம்பமாகிறது, எப்படி வருகிறது என்றெல்லாம் படிப்பித்தார். எப்படி உருவாக்கினோம் என்று சொன்னால் இராவணனை ஒரு டிராஜிக் ஹீரோவாக உருவாக்க வேண்டும் என்றார்கள்.

துன்பியல் நாயகன். கிரேக்க நாடகங்களில் துன்பியல் நாயகன் யார் என்று சொன்னால்; எல்லா நல்ல குணங்களும் அவனுக்கு இருக்கும். ஒரு கூடா குணம் அவனில் சென்று துன்பியல் நாயகனானான். பல உதாரணங்களை உலக வரலாற்றில் காண்பிக்கலாம். நான்தான் இராவணனாக நடித்தேன். அந்த நாடகம் மிகுந்த வரவேற்பினையும் புகழினையும் பெற்றுத் தந்தது. நான் பல்கலைக் கழகத்தில் இருந்து வெளியே வந்துவிட்டேன்.

இந்தக் காலகட்டத்தில் தான் பல்கலைக் கழகத்தில் இடதுசாரி மாணவர்களுடன் சேரவும், இடது சாரி கருத்துக்களை அடையவும், கம்யூனிஸ்ட் பார்ட்டியில் work பண்ணவுமான சந்தர்ப்பம் கிடைத்தது. அந்த உணர்வோடு வெளியில் வருகின்றோம். இந்நேரம் தான் சீனா, ரஷ்யா பிளவு ஏற்பட்டு கைலாசபதி நாங்களெல்லாம் சீனச்சார்பு நிலை எடுக்கிறோம். சிவத்தம்பி போன்றோர்கள் மத்தலயனில் போய் விட்டார்கள். அது ஒரு தீவிரமான காலம். ஆனால் எங்களுக்குள் ஒரு உறவுநிலை இருந்தது. நாங்கள் சண்டை பிடித்ததே இல்லை. மிக ஒற்றுமையுடன் தான் work பண்ணினோம்.

ஆனால் அரசியல் வேறுபாடு இருந்தது. இந்தக் காலத்தில்தான் சீன கலாச்சார புரட்சியின் தாக்கங்கள் என்னைத் தாக்கின. மிட்லேண்டன், நாடகங்களால் நாங்கள் கவரப்பட்டோம். அந்தக் கால கட்டத்தில் யாழ்ப் பாணத்திலேயே வெகுசனப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது.

மாசுட்டர் கந்தசாமி கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்களை விடாமல், தமிழ்நாடு கோரிய தமிழ் தலைவர் சுந்தரலிங்கம் தடுத்துக் கொண்டிருந்தார். அந்தப் போராட்டம் நடந்த இடம் எஸ்.ஏ. செல்வநாயகத்தினுடைய தொகுதி. யாருமே அதைப் பற்றிக் கண்டு கொள்ளவில்லை. எல்லாரும் தமிழ் விடுதலை பேசு கிறார்கள். செல்வநாயகம், அமிர்த லிங்கம் போன்றவர்கள். ஆனால் அந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்கள் சீனச்சார்பு கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள். சண்முக தாஸ் ஆட்கள் நடத்திக் கொண்டிருந்தார்கள். இந்தக் கால கட்டத்தில் தான் கைலாசபதி என்னிடம் கேட்கிறார். இராவணேசன், கர்ணன் போட்டது போதும். மக்களை நோக்கி திருப்பு மனுசனை, இந்தத் கருத்தை வைத்து நாடகம் போடுங்கள் என்று சொன்னார்.

பெரிய உதராணங்களைக் காட்டினார். வங்காளம் பற்றிச் சொன்னார். கேரளாவை உதாரணம் காட்டினார். அதன் விளைவாக எடுத்த நாடகம் தான் சண்டாளன். ‘Form’மை அடிப் படையாகக் கொண்டு மனுக்குல விடுதலையை கூறிய நாடகம். மக்கள் சாதி, வர்க்க, இனத்திற்குள் அகப்பட்டு விடுகிறார்கள். இதை மீட்டெடுப்பதற்காக தொழிலாளர்களும் விவசாயிகளும் புறப்பட்டுச் செல்கிறார்கள்.

புறப்பட்டுச் சென்று மீட்டு வருகிறார்கள். ஒருவகையான கம்யூனிஸ்ட் கட்சி பிரகடனம்தான் அது. கம்யூனிஸ்ட் கட்சிப் பிரகடனமாகத்தான் அது இருக்கும். இப்போது நினைத்துப் பார்க்க அப்படித்தான் நாங்கள் நடத்தியிருக்கிறோம். சூழல்கள் அப்படித்தான் என்னைப் படைக்க வைத்தன. எனக்கு முன்னுதாரணமாக இருந்தவை சீனப்புரட்சி நாடகங்கள். அந்தப் பாணியிலே சண்டாளனைப் போட்டோம். மிகுந்த வரவேற்பைப் பெற்றது. கைலாசபதி பின்னுக்கு நின்று இத்தகைய நாடகங்களை எழுது வதற்கு என்னை ஊக்கு வித்தார்.

பின்னால் மட்டக்களப்புக்கு வந்து வேறு சில நாடகங்களை எல்லாம் செய்துவிட்டு கொழும்புக்கு போனபோது சிங்கள நாடகக் கலைஞர்களின் உறவுகள் ஏற்படுகின்றன. பிரிட்டிஷ் கவுன்சிலின் workshopல் பங்குகொள்ளக் கூடிய வாய்ப்பு கிடைத்த போது, மாடர்ன் (Modern) நாடகம் பற்றிய தெளிவு மெல்ல மெல்ல கிடைக்கிறது. ஐரோப்பிய நாடகங்களுக்கு அறிமுகம் ஆகின்றோம். ஐரோப்பிய நாடகங்களுக்கு அறிமுகம் ஆனப் பிறகுதான் மரபில் இருந்து புதுமையை உருவாக்க வேண்டும் என்ற ஆதங்கங்கள் வரத் துவங்குகின்றன.

அந்தக் காலகட்டத்தில்தான் மீண்டும் யாழ்ப் பாணத்திற்கு வரத்துவங்கினேன். யாழ்ப்பாணத்திற்கு வந்த போது இயக்கங்கள் உருவாகி விட்டன. தமிழ் தேசியப் போராட்டம் துவங்கிவிட்டது. தமிழ் அடையாளம் தேவைப்படுகிறது. எங்களுடைய வேலைகள் அடையாளம் நோக்கித் திரும்பின. அரசியல் ரீதியாக முடியாவிட்டாலும் அடையாளங்களைத் தேடுபவர்களாக மாறினோம். எது அடையாளம் என்று சொன்னால் கூத்து எங்கள் அடையாளம். சடங்கு எங்கள் அடையாளம். கிராமிய மக்களின் ஆடல்பாடல் எங்கள் அடையாளம். இந்த அடையாளங்களை அடிப்படையாகக் கொண்டு நவீன நாடகங்களை படைக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றோம். சக்தி பிறந்தது அப்டித்தான். கரு வந்து பெண் விடுதலை. வடிவம் வந்து மக்கள் சார்ந்த கலைகளாக இருந்தது.

யாழ்ப்பாணத்தின் வாழ்க்கையைச் சொன்னால் நீங்கள் திடுக்கிடுவீர்கள். பங்கருக்குள்ளே வாழ்கின்றோம். எங்கள் வீட்டுக்கு முன்னால் பங்கர் வெட்டப்பட்டிருக்கிறது. 80, 85வது காலகட்டம் இது. ஆர்மி வரமுடியாது. இயக்கங்களின் கட்டுப் பாட்டில் யாழ்ப்பாணம். ஆர்மி வந்து பிளேன்லதான் குண்டு போடும். தரையில் வரமுடியாது. அதற்காக என்ன செய்வோம் என்று சொன்னால் ஒவ்வொரு வீட்டிற்கு முன்பும் பங்கர் வெட்டி அதுக்குள்ளே புகுந்து கொள்வோம்.

பங்கர் என்பது ஒரு மடு. அதற்கு மேலே தென்னங் குச்சி, பனங்குச்சி, அதற்கு மேலே மண்மூடை, அதற்கு மேலே புல்களை வளர்த்து விடுவது. ஒரு ஆள் முழித்திருப்பார் மத்த ஆள்கள் நித்திரை கொள்வார்கள். பிளேன் வந்து அடித்துப் போடும். நாடகங்கள் நடத்தியிருக்கிறோம். நாடகங்களுக்கு நாள்குறித்து இருப்போம்.

மெயின் ஆக்டர் ரவுண்டப்பில் அகப்பட்டிருப்பார். அல்லது வராமல் போயிருப்பார். நாடகங்கள் இல்லை என்று கூறிவிட்டு போவோம். நாடகம் நடந்து கொண்டிருக்கும் போது பக்கத்திலேயே செல் விழும். நாடகம் இல்லை என்று விட்டுப் போவோம். இப்படி அதற்குள்ளே வாழுகின்ற, போடுகின்ற சூழல் இருந்தது. இந்தச் சூழல்களெல்லாம் முத்தியப் பிறகு நான் கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கு 92ல் வருகின்றேன். வந்த பிறகு அங்கே எங்கள் பணி வித்தியாசமாக மாறியது.

கிழக்கு மாகாணம் முக்கியமான மாகாணம். நான் சொல்ல வேண்டும். நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால் இலங்கைப் படத்தைப் போட்டுப் பார்த்தால் தெரியும். வடக்கில் யாழ்ப் பாணம், யாழ்ப்பாணத்திற்கு கொஞ்சம் கீழே வந்தால் முல்லைத் தீவு, வன்னி, அதற்குக் கீழே வந்தால் கரையோரமாக திரிகோணமலை. கீழே வந்தால் மட்டக்களப்பு. அதற்குக் கீழே போனால் கல்முனை. கீழே போனால் திருக்கோவில். அப்புறம் வடக்கு மாகாணம், கிழக்கு மாகாணம், திரிகோணமலை, வட கிழக்கு மாகாணம். ஆனால் மூலையிலே இருக்கு. மேற்கிலே மன்னார் வளைகுடா, இந்த மன்னாரில் உள்ள கூத்துக்கள் மிக முக்கியமானவை. இந்தக் கூத்துக்களை தமிழ் அடையாளமாக பின்னர் நாங்கள் மாற்றினோம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com