Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
டிசம்பர் 2006
உயிர் எழுத்துகளின் உரையாடல்
ஜேம்ஸ் பெட்ராஸ்

உரையாடும் முன்: ஜேம்ஸ் பெட்ராஸ் (JAMES PETRAS) அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் சமூகவியல் பேராசிரியர். பாராளுமன்ற இடதுசாரிப் பாதையிலிருந்து இடது பக்கம் விலகி நடக்கும் இடதுசாரி. பிரேசில், அர்ஜென்டீனா முதலிய லத்தீன் அமெரிக்க நாடுகளின் தொழிலாளிகளோடு இணைந்து களப்பணி செய்தவர் என்பதனால் லத்தீன் - அமெரிக்க நாடுகளில் ஏற்பட்டு வரும் இடதுசாரிச் சார்பு அரசியல் பற்றி விரிவாகப் பேச இலாயக்கானவர். பேராசிரியர் நோம் சோம்ஸ்கியோடு இணைந்து தொகுப்புக் கட்டுரைகள் வெளியிட்டுள்ளார். தற்போது ‘கனடியன் டைமன்சன்’ (CANADIAN DIMENSION) என்ற இதழில் சிறப்பாசிரியராகவும் உள்ளார். அரசு சாரா தன்னார்வக் குழுக்களின் செயல்பாடுகள் எப்படி ஏகாதிபத்தியத்தின் ஆசி பெற்ற சேவைகளாக மாறுகின்றன என்பதை வெளிச்சமடித்துக் காட்டியவர். அவருடன் திரு. எஸ்.முகம்மது இர்ஷாத் மின்-அஞ்சல் மூலம் நிகழ்த்திய உரையாடல் ‘மாத்யமம்’ மலையாள வார இதழில் வெளியாகி உள்ளது. உளமார்ந்த நன்றி தெரிவித்து அந்த உரையாடல் தமிழ்ப் படுத்தப்பட்டுள்ளது,

குறிப்பு உதவி: கே.பிரசாத்
தமிழில்: ஜே.ஜி.ஜோணி ஜெபமலர்


கேள்வி: “‘முதலாளித்துவத்தின் நெருக்கடி’ என்பது பற்றி இன்று உலகம் முழுவதும் பரவலாகப் பேசப்படுகிறது. பலவேளைகளில் இதுதான். ஆக்கிரமிப்புக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. எடுத்துக்காட்டாக யூரோ நாணயத்திற்கு எதிராக டாலரின் மதிப்பு தகர்ந்தது தான் இராக் ஆக்கிரமிப்புக்குக் காரணம் என்று சுட்டிக் காட்டப்படுகிறது. ஆனால், ஒருமுறை நீங்கள் எழுதினீர்கள், “இந்த நெருக்கடிகளில் இருந்து இப்படிப்பட்ட ஆக்கிரமிப்புகளுக்குப் பதில் கண்டுபிடிக்க முடியாது” என்று. இங்கே ஆக்கிரமிப்புகளின் உண்மையான காரணங்கள் என்ன? இதற்கெதிராக உருக்கொண்டு எழும் எதிர்ப்புகளின் பண்பை எப்படி மதிப்பீடு செய்கிறீர்கள்?”

இந்த யுத்தத்தின் பின்னணியில் சக்தி வாய்ந்த அமெரிக்க - ஜியோனிஸத் திட்டங்கள் உண்டு என்பது ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்டு விட்டது. பெண்டகன், தேசிய பாதுகாப்புக் குழு சிறப்புத் திட்டச் செயலகம் உள்ளடங்கும் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையை இயக்குவது இந்தச் சக்திகள்தான். இராக்குக்கு எதிராகப் போலித் தடயங்கள் உருவாக்குவதில் தலைமைப் பாத்திரம் வகித்த வுல்ஃபோவிஸ்ட், டக்மஸ் ஃபெயித், பிறகு தீமையின் அச்சாணி என்று பெயர் பெற்ற டேவிட் ஃபோம் ஆகிய மூன்று பேர்களின் அதிகார மையங்கள்தான் யுத்தத்துக்கும், ஆக்கிரமிப்புக்கும் முதல் துடுப்பு வலித்தவர்கள் என்பதைக் காண முடியும்.

இது மட்டுமல்லாது ஆக்கிரமிப்புக்கு அனுகூலமான சூழலை உருவாக்க இஸ்ரேல் ஆதரவுக் கூட்டணி, பத்திரிகைகள் வாயிலாகவும், அமெரிக்க காங்கிரஸ் வழியாகவும் நடத்திய முயற்சிகள் சாதாரணமானது அல்ல. பகாசுர எண்ணெய் நிறுவனங்கள் ஆரம்பத்தில் யுத்தத்துக்கு எதிராகத்தான் இருந்தன. காரணம், யுத்தம் நீண்ட காலத்துக்கு நீள்வது அவர்களுடைய விருப்பங்களுக்கு சுருக்கமளிக்கும் என்ற பயம்தான். ஆக்கிரமிப்பு யுத்தத்தில் ஜியோனிஸ ஆதரவாளர்களைக் களத்தில் இறக்கியதன் பின்னணியில், இஸ்ரேலின் காலனி ஆதிக்கத்துக்கு எதிராக பாலஸ்தீனம் உட்பட அரபு நாடுகள் எங்கும் உருவாகி வரும் எதிர்ப்புகளை அடக்கி ஒடுக்குவது என்ற இலட்சியமும் உண்டு.

கேள்வி: ஏகாதிபத்தியத்துக்கு எதிரானப் போராட்டங்களைத் தீர்மானிப்பதில் பாராளுமன்றக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பங்கையும், பாராளுமன்றச் சார்பற்றக் கம்யூனிஸ்ட் இயக்கங்களின் பங்கையும் வேறுபடுத்திச் சொல்ல முடியுமா? யார் ஆக்கப்பூர்வமாகச் செயலாற்றி உள்ளார்கள் என்று தாங்கள் கருதுகிறீர்கள்?

மேற்கு ஆசிய நாடுகளில் ஏகாதிபத்திய எதிர்ப்புச் சமர்களை ஆக்கப் பூர்வமாக நடத்த முடிந்தது பாராளுமன்றம் சாராத இடதுசாரி சக்திகளால். காரணம், பல பாராளுமன்ற இடதுசாரிக் கட்சிகளும் (மேற்கு ஆசியாவில்) ஏகாதிபத்தியத்தின் ரப்பர் முத்திரைகள்தான். ஐரோப்பிய நாடுகளில் பாராளுமன்ற இடது சாரிகளுக்கும் பல்வேறு தளங்களில் செல்வாக்கு உண்டு. என்றாலும் யுத்தத்துக்கு எதிரான நிலைபற்றி அவர்கள் கொள்கை ரீதியான முடிவுகள்தான் எடுத்தனர். அத்தகைய நிலைப்பாடுகள் முற்றிலும் செயலிழந்ததாகவும், கிட்டத்தட்ட அமெரிக்காவுக்கு ஆதரவாகவும் அமைந்தன.

அமெரிக்கத் தலைமையின் நர வேட்டைக்கு எதிராகக் கருத்து தெரிவித்த சுமார் 3 லட்சம் மதச்சார்பற்ற நம்பிக்கையாளர்களான இராணுவ / காவல்துறைப் பணியாளர்கள் (மேற்கு ஆசியாவில்) பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு காரணமாக, இவர்கள் தனிச்சுதந்திர முஸ்லிம் தேசத்தை உருவாக்கப் பின்குரல் கொடுக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்கள். இத்தகைய அனுபவம் தான் மேற்கு ஆசியாவுக்கு வெளியே உள்ள பல நாடுகளிலும் சுதந்திரச் சிந்தனையாளர்களின் அனுபவம் (ஐரோப்பா உட்பட).

கேள்வி: இன்று ஏகாதிபத்தியத்துக்கு எதிராக நிறைய அரசியல் சார்பற்ற அமைப்புகள் உலகமெங்கணும் செயல்படுகின்றன. என்றாலும் இவற்றின் செயல்பாடுகள் எதுவும் அமெரிக்கக் கூட்டணி ஆக்கிரமிப்புகளையும், அதைத் தொடர்ந்து நடக்கிற மோதல்களையும் தடுத்து நிறுத்த முடியவில்லை. இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இதற்குப் பின்னால் ஏதேனும் இலட்சியங்கள் புதைந்து கிடக்கின்றன என்று கருதுகிறீர்களா?

இத்தகைய அமைப்புகளின் சக்தி இராக்கின் உள்நாட்டு எதிர்ப்புகளின் அடிப்படையில் மாறிமறிந்து கொண்டிருக்கிறது. காரணம், ஒரு டஜனுக்கு மேல் கூட்டணி நாடுகள் இராக்கிலிருந்து தங்களது படையைத் திரும்ப அழைத்து விட்டன. இதற்கு தூண்டுகோலாய் அமைந்தது, ‘இது தோல்வியடைந்த ஓர் யுத்தம்’ என்பது மட்டுமல்ல; உள்நாட்டில் இது சம்பந்தமாக அலையடிப்புகள் தொடர்வதாலும் கூடத்தான்.

அமெரிக்கப்படை மட்டுமே 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட (காயம் / மரணம் அடைந்த) படைவீரர்களை திரும்பப் பெற்றுக் கொண்டது. யுத்தத்தின் ஆரம்ப நாட்களில் 15 சதவீதமாக இருந்த மக்கள் எதிர்ப்பு கடந்த ஜுனில் 65 சதவீதமாக உயர்ந்து விட்டது. அரசியல் சாராத குழுக்களும் இயக்கங்களும் இந்த நிலைப்பாட்டுடன் ஒத்திசைந்து நீண்ட காலம் நிற்க முடியாது. திடீர்ப் பிரச்சினைகள் மூலமே இத்தகைய அமைப்புகள் வளர்ச்சி அடைய முடியும்.

எடுத்துக்காட்டாக, பெரும் பாலும் இத்தகைய அமைப்புகள் குறிவைப்பது ஏகாதிபத்தியத் தன்மை உள்ள ஆட்சி பீடங்களைத்தான். அது வேளாண் நவீனமயமாக்கல் சம்பந்தமாகவோ, தொழில் நெருக்கடி பற்றியோ, தனியார் மயமாக்கப்பட்ட இயற்கை வளங்களை தேச உடைமை ஆக்குவது குறித்தோ இருக்கும். இப்படி தடாலடியாய் முன்னேறுவதன் மூலம் அதிகாரத்தை நிர்ணயிக்கவும், இத்தகைய தேவைகளை/பிரச்சினைகளைச் சரிக்கட்டவும் வாய்ப்பு கிடைக்கலாம். யதார்த்தத்தில் இத்தகைய முன்னேற்றம் தான் இவற்றின் பலவீனமும் ஆகும்.

கேள்வி: அமெரிக்காவின் பின்துணையோடு செயல்படும் மேற்கத்திய மயமாக்கத்தைத் தடை செய்யும் பொருட்டு, சுதந்திரச் சிந்தனைப் போக்கிலிருந்து அதிதீவிர மதவாதத்தை நோக்கி இராக் மக்கள் நீங்குகிறார்கள் என்று தாங்கள் கருதுகிறீர்களா? இந்த யுத்தம் அரபு சமூகம் முழுமைக்கும் இத்தகைய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்ற வாதம் எவ்வளவு தூரம் சரியானது?

இத்தகைய சிந்தனைச் சுதந்திரம் பற்றிப் பேசும் பிரமுகர்களில் பலர் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வசிக்க நேர்ந்த வணிக சமூகத்தில் பட்டவர்களும், அறிவுஜீவிகளும் ஆவர். அவர்களில் பலரும் இராக் ஆக்கிரமிக்கப்பட்டபின் உள்ளே நுழைந்தவர்கள். ஆனால் அவர்களுடைய செயல்பாடுகள் பலவேளைகளில், ஆக்கிரமிப்புக்கு எதிராகத் திரளும் தேசிய உணர்வில் ஊறிய முன்னேற்றங்களை ஒன்றுபடுத்துவதற்குத் தடையாகவே உள்ளன. அமெரிக்கப் படைகள் பெரும் நாசம் விளைவித்த பஸ்ராவில் கூட இதனைப் பார்க்க முடியும். பல வேளைகளில் இத்தகைய அமைப்புகளை, குறிப்பாக ஆக்கிரமிப்போடு சேர்ந்து இராக்கில் நுழைந்த அமைப்புகளைக் கண்காணித்து நிலைநிறுத்தி வருவது அமெரிக்கப் படைத் தளபதிகள்தான்.

மற்றொரு காரியம், மேற்கு ஆசிய நாடுகள் எல்லாமே அரபு தேசியவாத / மதவாத உணர்வுகளில் ஊறிய சமூகம் அல்ல. அவர்களில் மதச்சார்பற்றவர்களும், சோஷலிஸ்டுகளும், சுதந்திரச் சிந்தனையாளர்களும், மதவாதிகளும் உண்டு. இதைப் பல தருணங்களில் இராக்கில் கூடக் காண நேரிடலாம். ஆனால். மதவாதிகளால் நிர்வகிக்கப்படும் நிறுவனங்களும், பெரும் சொத்தும் பலவேளைகளில் தமது லட்சியங்களை நிறை வேற்றும் பொருட்டு, மதச் சார்பற்றவர்களைக் கவர்ந்திழுப்பது உண்டு. குறிப்பாக யுத்தக் கால கட்டத்தில். அதனால்தான் இன்று இவை இரண்டையும் வேறுபடுத்திக் காட்டும் அளவீடுகள் இல்லை என்றே கூற முடியும்.

கேள்வி: முஸ்லிம் சமூகமும் மேற்கத்திய சமூகமும் தம்மிடையே உள்ள வித்தியாசங்களை ‘நாகரிகங்களின் மோதல்’ என்று சில வேளைகளில் சொல்வது உண்டு. குறிப்பாக, நவநாகரிக மேற்கத்திய சமூகமும் காட்டு மிராண்டித்தன முஸ்லிம் சமூகமும் என்ற ரீதியில். இதன் அடிப்படையில் பல வேளைகளில், அமெரிக்கா உட்பட்ட சக்திகள் மேற்கு ஆசியச் சமூகங்களை நவீனத்துவ மதிப்பீடுகளிலிருந்துப் புறம் காட்டி நிற்கின்ற சமூக அமைப்பு என்ற மட்டில்தான் கணக்கிலெடுக்கிறார்கள். எடுத்துக் காட்டாக, இந்த யுத்தத்தைக் கூட ‘ஜனநாயகப் பாதுகாப்பு போர்’ என்று சொல்கிறார்கள். இதைத் தாங்கள் எப்படி மதிப்பிடுகிறீர்கள்? அவர்கள் சொல்வதுதான் சரியென்றால், வரலாறு இந்த யுத்தத்தை எப்படிச் சித்தரிக்கும்?

முன்னர் குறிப்பிட்டது போல, இந்த ஆக்கிரமிப்பை தூண்டிய காரணிகளில் முதன்மையானதாகும். என்றாலும் இஸ்ரேலும் அமெரிக்காவும் தங்கள் விருப்பத்தை நிறைவேற்ற வடிவமைத்துக் கொண்டதாகும். குறிப்பாக புவியியல் ரீதியாக மேற்கு ஆசியாவின் முக்கியத்துவம் ஆக்கிரமிப்பை இந்த யுத்தம், முதலாளித்துவம் தேசிய முன்னேற்றத்தின் தலைக்கு மேல் அநீதியாக நடத்திய யுத்தம் என்பதையும் காணலாம். ஜனநாயகப் பாதுகாப்பு என்பது யுத்தத்துக்கு ஒரு காரணம் கற்பித்தல் மட்டும்தான்.

இனி ‘நாகரிகங்களின் மோதல்’ பற்றிச் சொன்னால் பண்பாட்டு வேறுபாடுகள் நூற்றாண்டுகளாக நிலவி வருகின்றன. யுத்தத்துக்கு முன்பும், பின்பும் பண்பாட்டு இயங்கியல் தொடரத்தான் செய்யும். பண்பாட்டு மோதல்கள், அவை மதரீதியாக அமைந்து போனால் கூட, தானாக ஓர் யுத்தத்துக்கு வழி வகுக்காது. அத்தகைய வரலாற்றுச் சூழல்கள் இன்று நிலவில் இல்லை. ஆனால், பொருளாதாரம் / அரசியல் / தத்துவம் சார்ந்த காரணங்கள் மோதல்களுக்கும், யுத்தத்துக்கும் வழி வகுக்கும். நிகழ்காலத்தில் இத்தகைய மோதல்களுக்கு வாய்ப்பு அதிகம்.

கேள்வி: இந்த யுத்தம் பாலஸ்தீனத்துக்குப் பிறகு மேற்கு ஆசியாவில் நிரந்தரக் கலவர மையம் ஏற்படுத்தப் பயன்பட்டுள்ளது என்பதாகத் தாங்கள் கருதுகிறீர்களா?

சுருங்கிய காலத்தில் இந்தப் பிரச்சினைக்குப் பரிகாரம் காணப் படலாம் என்று கருத இடமில்லை. இங்கே இரண்டு விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அமெரிக்க - ஐரோப்பியக் காலூன்றலுக்கு எதிராக வீரியமிக்க எதிர்ப்பு உயர்ந்து வருகிறது. இதோடு கூட, ஆரம்பத்தில் சொன்ன காரணங்களுக்கு உபரியாக புதிய காரணங்களும் இருப்பதால்தான் தாங்கள் இராக்கில் தொடர்ந்து இருக்க வேண்டி இருக்கிறது என்று அமெரிக்கா சொல்லி விட்டது.

இப்போது இதனை ‘முன்கருதல் யுத்த தந்திரம்’ என்று குறிப்பிடுகிறார்கள். இது மேற்கு ஆசிய நாடுகளில் நிரந்தரமாய் காலூன்றி நிற்க அமெரிக்க ஏகாதிபத்தியம் முயற்சிக்கிறது என்பதையே காட்டுகிறது. மட்டுமல்ல; உலக மெங்கும் பயங்கரவாத எதிர்ப்பு முன்னேற்றங்கள் அமெரிக்க ஏகாதி பத்தியத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில்தான் முன் னேறுகின்றன. அதனால் இந்த சந்தேகத்தை முற்றிலுமாக நிராகரித்து விட முடியாது.

கேள்வி; பயங்கரவாதம் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் நிறைய சர்ச்சைகளை உருவாக்கி விட்டது. இதனுடைய பொருளாதாரத் தத்துவத்தை எப்படி மதிப்பீடு செய்ய முடியும்? கடைசியில் இது யாருக்கு இலாபம் தருவதாக அமையும்? இதன் பின்னணியில் உள்ள முக்கிய சக்திகளை (அரசியல் மற்றும் பொருளியல்) எப்படி மதிப்பீடு செய்கிறீர்கள்?

இந்தப் ‘பயங்கரவாத எதிர்ப்பு யுத்தம்’ என்பதற்கு மூன்று முக்கியப் பயனாளிகள் உள்ளனர். முதன்மையான ஆதாயம் பெறுவது இஸ்ரேல் ஆட்சி பீடம்தான். காரணம், இதன் மறைவில் குடியேற்றத்தை அதிகரிக்க முடியும். மட்டுமல்ல; அதன் பெயரில் நடக்கும் ஆக்கிரமிப்பு முயற்சிகளை நியாயப்படுத்த முடியும். இரண்டாவதாக, பேரழிவு ஆயுத வியாபாரிகள் வருகின்றனர். திரை மறைவில் இவர்களுக்கு கொள்ளை லாபம் ஈட்ட முடியும்.

இதன் மூலம் பெருமளவில் இயற்கை வளச் சுரண்டல் (பெட்ரோல் உட்பட) நடத்த முடியும். இத்தகைய ஆக்கிரமிப்புகள் அமெரிக்க ஆட்சி பீடத்தின் கொள்கைகளை உலகம் முழுவதும் பரப்ப உதவி செய்கின்றன. அதோடு கூட, இதிலிருந்து ஆதாயம் பெறுகின்ற ஒரு கூட்டம் புதிய முதலாளித்துவச் சக்திகள் உயர்ந்து வந்துள்ளனர். அவர்களுக்கு இந்த யுத்தம் அமுதசுரபியாக உள்ளது.

கேள்வி: இன்றைக்கு அரபு சமூகங்களில் நிலவில் உள்ள அரசியல் நிலவரம் ஏதேனும் வகையில் பயங்கரவாதத்துக்கு துணை போகின்றது என்று கருதுகிறீர்களா?

ஆட்சி அதிகாரத்தின் பயங்கர வாதம் என்றால், நிகழ்காலத்தில் அது அதிகம் வெளிப்படுவது அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளின் நடவடிக்கைகளில்தான். இந்த நாடுகளின் பணமும், அதிகாரமும் பயன்படுத்தி பயங்கரவாதம் படர்த்துகிற பல தற்கொலைப் படைகளும், காலனிய இராணுவத்தினரும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுகின்றனர். உள் நாட்டில் இவர் கள் தீவினைகள் புரிவது குறைவு என்பது கவனிக்கத்தக்கது ஜோர்டான், எகிப்து, மொராக்கோ, சௌதி அரேபியா முதலான அரபு நாடுகளிலும் இப்படிப்பட்ட ஆட்சி பீட பயங்கரவாதம் நிலை நிற்கிறது. இது அதிக அளவில் செயல்படுவது அந்தந்த நாடுகளில் கிளம்பி வரும் விடுதலைச் சிந்தனைகளுக்கு எதிராகத்தான்.

இராக்கிலும் மற்று பல இடங்களிலும் நடக்கிற பயங்கரவாதத் தாக்குதல்களில் அல்-காய்தா போன்ற அமைப்புகளின் கைவரிசை 5 சதவீ தத்துக்கும் குறைவாகவே உள்ளது. பெருமளவில் அப்பாவிப் பொதுமக்கள் ஆக்கிரமணங்களுக்கு உள்ளாவது இஸ்லாமியத் தீவிரவாதிகளால் அல்ல. பயங்கரவாதத்தை ஒரு பக்கத்தில் மட்டும் குவிமையமாக்கிப் பேசுகின்ற சித்தாந்தங்கள் பரப்பும் கருத்து இது.

கேள்வி: 9/11 எப்படி அரபு சமூகத்தில் தாக்கம் செலுத்தி உள்ளது? இது ஏதேனும் விதத்தில் ஏகாதிபத்தியம் மூன்றாம் உலக நாடுகளில் அத்துமீறி நுழைவதை தீர்மானிக்கிறதா?

உலகில் உள்ள எல்லோரையும் ஒரே மாதிரி சிந்திக்க வைத்த சம்பவம் அல்ல 9/11. பெரும்பான்மை மூன்றாம் உலக நாடுகளின் சமூகங்களிலிருந்து இது குறித்து வித்தியாசப்பட்ட எதிர்வினைகள் வந்துள்ளன. அரபு சமூகமும் அப்படித்தான். நீண்ட காலமாக அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கும், பொருளாதாரத் தடைகளுக்கும் பலிகடாவான பல மூன்றாம் உலக நாடுகள், 9/11 என்பது வாஷிங்டன் தலைமை தாங்கி ஏவிவிட்ட அக்கிரமங்கள் அமெரிக்காவையே திரும்ப வந்துப் பிடித்து விட்ட நிகழ்வாகவே கருதினார்கள். மட்டுமல்ல; புவியியல் ரீதியாக, மோதல்கள் மையம் கொண்டிருந்த இடங்களின் எல்லை தாண்டிப் பரவத்துவங்கி இருப்பதாக 9/11-யை மதிப்பீடு செய்தவர்களும் உண்டு. இது மட்டு மல்லாது அமெரிக்கப் பொருளாதாரச் சந்தையோடு உறவு வைத்துள்ள வணிக மையங்கள் அஞ்சி நடுங்கிய நிகழ்வாகவும் இதனைக் காணலாம்.

கேள்வி: இராக் யுத்தத்துக்கு காரணம் என்று மேற்கத்திய நாடுகள் கூறியது: ‘இராக் நாசகர ஆயுதங்களை சேகரித்து வைக்கிறது / பெருக்குகிறது’ என்பதாகும். அதே காரணம்தான் இன்று ஈரானுக்கு எதிராகவும் கூறப்படுகிறது. இராக்கில் நடந்தது போன்று ஆக்கிரமிப்பு ஈரானிலும் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. இதற்கான சாத்தியக் கூறுகள் தென்படுகிறதா?

ஈரான் பிரச்சினையில் மேற்கத்திய உலகுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் தோன்றிவிட்டன. அமெரிக்க இராணுவ மையங்களும், பொது சமூகத்தில் பல்வேறுத் தரப்புகளை பிரதிநிதித்துவம் செய்கிறவர்களும், ஈரான் விஷயத்தில் யூதச் சதுராடலுக்குப் புலன் இழக்கவில்லை. ஐரோப்பாவில், இங்கிலாந்துப் பிரதமர் உட்பட எல்லோரும் ஈரான் பிரச்சினையில் மௌனம் பாலிக்கிறார்கள். பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண்பதே உசிதம் என்று கூறுகின்ற ரஷ்யாவுக்கும், சீனாவுக்கும் ஆதரவு அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் உள்ள யுத்தக் காதல் மிக்க ஆளும் வர்க்கம் இன்று ஈரான் பிரச்சினையில் சர்வதேச அளவில் ஒற்றைப்பட்டு நிற்கிறது.

இராக்கில் ஏகாதிபத்திய முதலாளி மனோ பாவத்தில் அக்கிரமங்களை அவிழ்த்துவிட்ட வலதுசாரிகள் தனிமைப் பட்டிருக்கிறார்கள். ஒருவேளை 2006 நவம்பர் தேர்தலை (அமெரிக்காவில் முடிந்து விட்டது) முன்னிட்டு ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படலாம். அப்படியானால் அது இதுவரை மேற்கு ஆசியா கண்டிராத வகையில் கூட்டக் கொலைகளுக்கும், கலவரங்களுக்கும் வழி வகுக்கும். இதுவரை இராக்கில் கொல்லப்பட்ட 25,000 மனிதர்களை விட அதிகம் பேர் இந்த யுத்தத்தில் கொல்லப்படலாம்.

இதோடு தொற்றி நடக்கக் கூடிய மற்ற துயரங்களையும் கணக்கி லெடுத்துக் கொள்ள வேண்டும். ஈரான் புரட்சிகர காவல் படையின் எதிரடி, எண்ணெய்க் கிணறுகள் எரியும் கொடுமை, அதனால் பெட்ரோல் விலை உயர்வு போன்றவற்றைக் கணக்கெடுத்தால், உலகம் முழுவதும் உருவாக வாய்ப்புள்ள பொருளாதார நெரிதல் பூதாகரமாய் இருக்கும்.

கேள்வி: இரண்டு வகை சமூக வாழ்நிலைகளின் வரலாறு ஈரானுக்கு உண்டு. ஷா ஆட்சிக் காலத்தில் அமெரிக்காவின் பின்துணையுடன் நிலவியிருந்த சமூகச் சூழலில் இருந்து வித்தியாசப்பட்ட, மத அடிப்படையிலான சமூகச் சூழல்தான் இன்று ஈரானில் நிலவுகிறது. கொமெய்னி சிந்தனையின் பிரதிநிதிதான் இன்றைய ஈரான். மேற்கத்திய ஆக்கிரமிப்புக்கு எதிராகச் சுவர்கள் வனையப் பயன்படுத்துவதும் இந்த மத உணர்வுகளைத்தான். இந்த நிகழ்வுப் போக்கை எப்படி மதிப்பீடு செய்கிறீர்கள்? இந்தக் காலகட்டத்தில் இத்தகைய எதிர்ப்புச் சக்திகளின் வாய்ப்பு எப்படி அமையும்? இது ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பை ஏதேனும் விதத்தில் தடையிடும் என்று கருதுகிறீர்களா?

ஆட்சிபீடம் அமெரிக்காவுக்கு ஆதரவாகத் திகழ்ந்தபோது, குடி மக்களுக்கு எதிராக ஒடுக்குதல்கள் நடந்தன. அந்த ஆட்சியின் போது மக்கள் நாடு கடத்தப்பட்டனர். நிறைய பேர் கொலை செய்யப்படவும், சித்திரவதைகளுக்கு உள்ளாகவும் செய்தனர். அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் நடந்த எண்ணெய்க் கொள்ளை குடிமக்களுக்கு நல்கியது பட்டினியும் தரித்திரமும்தான். ஆட்சி பீடத்துக்கு இஸ்ரேலுடன் இருந்த இராணுவக் கள்ளத் தொடர்பு அதிகாரத்தைப் பாதுகாக்கப் பயன்பட்டது.

இத்தகையச் சுரண்டலுக்கு முடிவு கட்டுவதுதான் இஸ்லாமியப் புரட்சி செய்த முதல் காரியம். முன்பு அன்னியர் ஆளுகையின் கீழிருந்த எண்ணெய்க் கிணறுகள் தேச உடைமை ஆக்கப்பட்டன. இதோடு கூடவே இஸ்லாமியச் சட்டங்களின் அருஞ்சொற்பொருள் மாற்றி, தேர்தல் சட்ட விதிகளையும் இயற்றிக் கொண்டார்கள். இஸ்லாமியப் புரட்சி, முன்னர் இருந்த ஏகாதிபத்திய ஆதிக்கத்தை இல்லாதாக்கினாலும், தனியுடைமை மூலதனத்தின் மீள்வரவையும் வளர்ச்சியையும் கட்டுப்படுத்தவோ, ஆட்சி பீடத்தின் ஊழல்களை ஒழிக்கவோ முடியவில்லை.

இடதுசாரி தொழிற் சங்கங்களுக்கு எதிராக நடந்த ஒடுக்குதல்கள் புரட்சிக்கு வித்திட்ட பல சமூக காரணங்களையும் புறந்தள்ளி விட்டதையே காட்டுகிறது. இந்த சமூக யதார்த்தத்தைப் புரிந்து கொண்டது போல, புதிய அதிபர் சமூக நலத்திட்டங்களுக்கு முக்கியத்துவம் நல்கப்படும் என்று அறிவித்து, பொருளாதார வளர்ச்சிக்கான முயற்சிகளையும், ஆக்கிரமிப்புக்கு எதிரான அரசியல் நிலைபாட்டையும் மேற்கொள்ளப் போவதாகக் கூறி உள்ளார். வாஷிங்டன் ஈரான் அணுப் பரிசோதனைப் பிரச்சனையை தலைக்கு உயரப் பிடித்துக் கொண்டு வரக் காரணம், மீண்டும் குறைந்த செலவில் ஈரானை அமெரிக்காவின் எண்ணெய் தாதாவாக மாற்றி அனுபவிக்கலாம் என்ற நப்பாசையின் சப்புக் கொட்டல்தான்.

இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக ஆக்கிரமிப்பு யத்தனங்கள் நடத்தக் காரணம், பாலஸ்தீனப் பிரச்சனையில் ஈரானின் நிலைப்பாடு மற்ற அரபு நாடுகளிலிருந்து வித்தியாசப்பட்டு இருக்கிறது என்பதினால் தான்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com