Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
டிசம்பர் 2006
அமுத சுரபிகளைத் துறந்தவர்
களந்தை பீர்முகம்மது

சரியாகத் தன்னுடைய 86 வயதினைப் பூர்த்தி செய்துவிட்டு வல்லிக்கண்ணன் நம்மிடையேயிருந்து மறைந்திருக்கிறார். நவ.12ம் நாள் அவருக்கான பிறந்த நாள் காத்திருந்தது; ஆனால் அவர் காத்திருக்கவில்லை. வல்லிக்கண்ணனின் உணவுப் பழக்கங்கள், சுறுசுறுப்பான பேச்சு, தளராத நடை, பழுதுபடாத ஞாபகசக்தி எனும் இவற்றுடன் கண்ணாடியில்லாமலே வாசிப்பது எழுதுவது போன்ற பல விசயங்களை முன்னிட்டும் அவருக்கான மரணம் இன்னும் பலகாலங்களுக்கு ஒத்திப் போடப்பட்டுள்ளது என்றே பலரும் கருதியிருக்க வேண்டும்! ஆனால் கொஞ்சம் கூட நியாயமற்ற முறையில் அவருடைய மரணம் சம்பவித்தது. (அநேகமாக நம்முடைய பல தமிழ் எழுத்தாளர்களும் இப்படித் தான் காலாமாயிருக்கிறார்கள்.)

அவருடைய வாழ்க்கையின் எளிமை ஒரு நேர்க்கோட்டினைப் போல அவர் சென்ற தடத்திற்கு இணையாக வந்து கொண்டேயிருந்தது. அவருக்கு நேர்ந்த வறுமை பலவகை களிலும் அவரைச் சோதித்துப் பார்த்துவிட்டது. ஓர் எழுத்தாளரின் குடும்பம் அல்லது அவரைப் புரவலராகக் கொண்டிருந்த ஒரு குடும்பம் அவருடைய திறமைகளைக் கொண்டோ, அவருடைய படைப்புகளைக் கொண்டோ நல்ல விதமாக வாழ முடிந்ததில்லை என்பதற்கு வ.க.வும் இலக்காகி விட்டார். தமிழுலகமும் அவருக்கு ஏற்றி வைத்த வறுமைக்காக மனம் வருந்தவில்லை.

உடைக்கப்பட முடியாத இறுக்கத்துடனும், அமைதியுடனும் அவருடைய வீடு எப்போதும் இருந்து விட்டது. காலவெள்ளத்தில், மீண்டும் அவரால் பெறமுடியாத இளமையின் கதாபாத்திரங்கள் குறித்து அனேகம் பேர் உள்ளுக்குள் வருந்தியிருப்பார்கள். அவர் தன்னுடைய அரசு வேலையைத் துறந்ததைவிட, இல்லற வாழ்வைத் துறந்தது குறித்து நான் எப்போதுமே மனம் வருந்தியுள்ளேன். ஆனால் அவர் தன் முடிவில் தளர்வுறாத நெஞ்சத்தோடு இருந்ததால், அவரிடம் ஒரு நாளும் இது பற்றிக் கேட்டதில்லை. அவருடைய தியாகங்களுக்கு ஏற்றதான மரியாதையைத் தமிழ்நாடும் தரவில்லை.

ஒவ்வொரு எழுத்தாளரையும் அவரவர் வீடு சென்று சந்திப்பதில் எனக்கு மகாபயங்கரமான கூச்ச உணர்வுகள் உண்டு. ஒவ்வொரு படைப்பாளியின் முன்பும் நான் என் வார்த்தைகளை இழந்து தவிக்கிறவன். இதனால் எழுத்தாளர்களின் வீடு தேடிச் செல்வதில்லை. ஆனால் ஒரு சிலரின் வீடு விதிவிலக்கானவை; அதில் வ.க.வின் வீடும் ஒன்று. அவர் சேமித்த புத்தகங்கள் பார்வையில் படாத வண்ணம் துணியால் மூடி வைக்கப்பட்டிருக்கும். ஆனால் ஒரு முறை கடிதம் எழுதி சில புத்தகங்களைப் பெற்றுச் செல்லும்படியாக வேண்டியிருந்தார். அதற்குமேல் அவரிடமிருந்து புத்தகங்களைக் கேட்டுப்பெற முடியவில்லை.

அவருடைய மரணத்துக்கும் சரியாக இரண்டு மாதங்களுக்கு முன்பு தமிழ்க்கலை இலக்கியப் பேரவை கல்லூரி மாணவர்களுக்கும் இளம் படைப்பாளிகளுக்குமான சிறுகதைப் போட்டியை நடத்தியது. அதற்கான நடுவர்களாக வல்லிக்கண்ணன், பேரா.சுப்பலட்சுமி ஆகியோருடன் நானும் இருந்தேன். முதல் பரிசுக்கு உரியவர்களின் பெயர்களை நான் தேர்ந்தெடுத்துக் கொடுத்தபோது அதனை அப்படியே அங்கீகரித்துக் கையெழுத்திட்டார். இது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தந்தது. அதற்காக நடந்த விழாவில்தான் அவரைக் கடைசியாகச் சந்தித்தது.

அந்த விழாவில் அவரைப் பார்த்த போது அவர் முகத்தில் ஒரு வெறுமை படர்ந்திருந்ததை நான் கண்டறிந்தேன். இதற்கு முன் காணாத ஒன்று அது. ஆனால் கூட்டத்திற்கு வந்த போது அந்தத் தளராத நடை அப்படியே தான் இருந்தது. அன்று அவர் ஆற்றிய உரையில் கூட மணியின் நாதம் இருந்தது.

வ.க.வின் கடிதங்களைப் பெறாத எழுத்தாளர்களோ பத்திரிகைகளோ இருக்க வாய்ப்பில்லை. முத்து முத்தான எழுத்துக்கள்! அவருடைய மேடைப் பேச்சு தனித்துவமானது. எழுதிக் கையோடு கொண்டு வந்த ஒரு கட்டுரையை, வாசிப்பது போல மடமடவென்று உருண்டோடிவிடும் அவரின் பேச்சு. அதில் மருந்துக்கும் கூட நகைச்சுவை இருக்காது; கூட்டத்தின் உணர்வுகளோடு சங்க மிக்காது. நேரம், காலத்திற்கேற்ற சிலேடைப் பேச்சுகளும் கிடையாது. ஒரு புள்ளி விவரக் குறிப்பு போல சொல்லிக் கொண்டே போவது அவரது பாணி. இந்தப் பேச்சுக்கு ஒரு முன்னோடியும் இல்லை; ஒரு தொடரோட்டமும் இல்லை. அதிக நேரம் எடுத்துக் கொள்வதில்லை; பிறருடன் வம்புதும்புகளுக்கும் இடமில்லை. மற்றவர்கள் மைக்கைப் பிடித்துக் கொண்டு மணிக்கணக்காக முழங்கினாலும் அதை அவர் விரும்புவதில்லை.

இளந்தளிர்களை அவர் தட்டி வளர்த்தவிதம் அருமையானது. ஆனாலும் அதில் அவர் தன் ஏக போகத்தைப் பெற்றுவிட முடியாதபடி தி.க.சி.யும் குறுக்கீடு செய்கிறார். வெளியூர் செல்லும் பயணங்களில் அவர் புத்தகங்கள் எடுத்துக் கொண்டு போவதில்லை. ஓய்வு நேரத்தைப் படித்துக் கழிக்காமல், ஊர் சுற்றித் திரிவதிலும் எங்காவது ஓரிடத்தில் அமைதியாக உட்கார்ந்து தன் பார்வையில் படுகிற மனிதர்களின் செயல்பாடுகள், பேச்சுக்களில் ரசனையைச் செலுத்துவதிலும் தன் கவனத்தைக் குவித்துவிடுவார். இவ்வாறாக, சிலவற்றை அவர் விட்டுச் சென்றுள்ளார். அவற்றை நாம் கைப்பற்றிக் கொள்ளலாம். அவருக்கென்று நிரந்தரமான ரசிகர்கள் உண்டு; நிரந்தரமான பதிப்பாளர்கள் இல்லை. அவருக்கு நேரிட்ட குறைபாடுகளைக் காலம் என்றாவது ஒருநாள் செப்பனிட்டுக் கொள்ளும்!

மரணம் சாசுவதமானது என்பதினால் நாம் வ.க.வை மரணத்தின் கைகளில் ஒப்படைத்திருக்கிறோம்! அதற்கு மாற்றுவழி இன்னதுதான் என்று நம்மிடையே யாரும் பரிந்துரை செய்யாதபோது நாமும் தான் வேறென்ன செய்ய முடியும்?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com