Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
டிசம்பர் 2006
ஓடை வெள்ளம்
அழகிய பெரியவன்

சிறுமல்லியின் வாசம் அங்கு பரவியிருந்தது. இரண்டு மூன்று துண்டுகளுக்கு மல்லிச் செடிகள் புதர்களாக நிறைந்திருந்தன. கண்ணுக்கெட்டிய தொலைவுக்கும் நிலம்தான். கூப்பிடு தெலைவில் தெரியும் மலை பச்சையணிந்து தெரிந்தது.

வேல்முருகன் தோட்டத்திலே பூவெடுத்துக் கொண்டிருக்கும் பெண்களையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். கைகளில் பாத்திரங்களை வைத்துக் கொண்டு குனிந்து அரும்புகளை பிய்த்தெடுக்கும் அழகு! மாறாத காயரும்புகள். நீண்டக் காம்புகளுடன் முன்வந்து கண்சிமிட்டுகின்றன. தோட்டம் முழுக்க நட்சத்திரங்களை வாரி இரைத்துவிட்டது போன்று ஒளிர்கின்றன வெண்ணிற முளைகள்.

மழை விழுந்த இரண்டு நாட்களுக்குப் பிறகான வானம் தீட்டித் துலக்கி வைத்தது போல தூரத்து மலையின் மீது தெரிந்தது. அடிவாரம் வரைக்கும் நீண்டுப் பரவியிருந்த நிலத்தினிலே ஆங்காங்கே சிலத்துண்டுகளை உழுது போட்டிருந்தார்கள். வேல் முருகனும், சென்றாய நாயுடுவும் நடந்த வரப்பின் எதிர்காணியில் சிறுமல்லி எடுத்துக் கொண்டிருந்தனர். குட்டைப் புதராய் கிளைத்து அடர்ந்திருந்த செடிகளிடத்தில் பெண்கள் குனிந்து பேசிக் கொண்டிருப்பது போல பூவெடுத்துக் கொண்டிருந்தார்கள். இவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்து விட்டு, அவ்வப்போது சிரிக்கும் போது, அச்சிரிப்பை வெடுக்கென பறித்து பாத்திரத்தில் போட்டுக் கொள்வது போலிருந்தது அவள் பூப்பறிப்பது. வேல்முருகன் வரப்பின் மேலே நின்றபடியே பெண்களை பார்த்துக் கொண்டிருந்தான். அங்கு சிறுமல்லியின் மணம் எங்கும் பரவியிருந்தது.

“என்னடா வேலு பூவுக்குக் சொக்கி நின்னுட்டியா. பூவெடுக்கிற குட்டிங்களுக்குச் சொக்கிட்டியா?”

சென்றாயன் வேலைப் பார்த்துக் கண்ணடித்துக் கொண்டு சத்தமாகச் சிரித்தார்.

வேலுவுக்கு எதிரிலிருக்கும் துண்டிலே ஒருத்தி பூவெடுத்துக் கொண்டிருந்தாள். அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் வேலு. குட்டிப் பெண்கள் சிலர் செடிகளில் மறைந்திருந்தனர். செடி அசைவதை வைத்துத் தான் ஆள் இருப்பதை கண்டு கொள்ள முடிந்தது. வளர்ந்த பெண்களின் நெஞ்சு வரைக்கும் வந்தன செடிகள்.

வேலு பார்த்துக் கொண்டிருந்தவள் பூவெடுப்பதை நிறுத்தி விட்டு எதையோ நினைத்துக் கொண்டவளாக கிணற்று மேட்டுக்காய் போனாள். அங்கே அவளின் வீடிருந்தது. வேலுவின் கண்கள் செழித்த அவளின் பின்னுருவம் பார்த்தபடி ஒரு நாய்க்குட்டியைப் போல வாலாட்டிக் கொண்டே உடன்போனது.

“வேலே அந்தா போறால்ல. அவப் பின்னாடியே போயி குடிக்க தண்ணி வாங்கியாடா”.

தழை தாம்புகள் சரசரக்கப் போனான் அவன். சென்றாயன் மடை திருப்பும் மட்டும் பாய்வதற்கு தேங்கித் தளும்பியிருந்தான் போல! வீட்டினுள்ளே போய்விட்டு வெளியே வந்து அவள் வாசலில் நின்றிருந்தாள். வேலுவைப் பார்த்ததும் முகத்தைச் சுருக்கினாள் அவள். வெள்ளரிப்பழம் போலிருந்தாள். நல்ல வளத்தி. கூர்மையான நாசியின் கீழே நெருக்கமாய்க் கோலிய துணிபோல பிளவுற்றிருந்த உதடுகள். கண்கள் அடங்காத விளையாட்டுப் பிள்ளைகள் போல ஆடிக் கொண்டிருந்தன.

வேலு சிரித்துக் கொண்டான். உள்ளிருந்து குதூகலமொன்று அவளைப் பார்க்கப் பார்க்கப் பீறிட்டது.

“தண்ணீ ஓணும்”

“ஊட்டுலர்ந்து இங்கக் குடிக்கினுமின்னே வந்தியா என்னா?”

“எனுக்கு இல்ல. சென்றாய மாமாவுக்கு” அவள் அவனை எகத்தாளத்துடன் பார்த்துவிட்டு “அந்தா துண்ண மேல களுவி கவுத்திருக்குது பாரு சொம்பு. அத்த எடுத்துக்க” சொல்லிக் கொண்டே உள்ளே போனாள்.

வேலு திண்ணையிலிருந்த பித்தளை செம்புடன் நின்றான். வீட்டுக் குள்ளிருந்து தண்ணீரோடு வந்தவள் அவனிடம் கேட்டாள்.

“என்னத்துக்கு கையில வெச்சினு நிக்கிற. துண்ண மேல வெய்யி. ஊத்தறேன்”.

வேலுவுக்கு சுருக்கென்றது. அவளை மெல்ல கோபத்துடன் பார்த்தான்.

“ஏன். நான் கையில வெச்சினு இருந்தா என்னா?”

“தண்ணி ஊத்தும்போது நீ புடிச்சிக்கிறதுலேர்ந்து செதறி எம் மேல உளும்.”

“உளுந்தா என்ன அழுகிருவியா?”

“தீட்டாச்சே!”

வேலுவுக்கு அவளை அப்படியே பிடித்திழுத்து வாசலில் தள்ளி படர வேண்டும் போலிருந்து.

“உந்தண்ணீய தீட்டுத் தொடக்கு ஆகாதமாதிரி நீயே வெச்சுக்க. எனுக்கு வாணாம். அந்த மாமங் கேட்டாரேன்னு தான் வந்தேன்” வேலுவுக்கு அவள தூக்கி வாசலில் போட்டு மிதிக்க வேண்டும் போல வெறிவந்தது. நாக்கை கடித்துக் கொண்டு கைகளை ஓங்கினான்.

“உனுக்கு இருக்குது இரு.”

அவள் “ஆ”... என்று கழுத்தை வெட்டி இழுத்தபடி அவனைப் பார்த்தாள். மிரண்டு போன கண்கள் தவித்தன.

வேல்முருகனுக்கு அன்றெல்லாம் நெஞ்சில் மரமரவென்றிருந்தது. அவளை இதற்கு முன் பார்த்ததாக நினைவில்லை. பெயர் கூட கேட்கவில்லை. ஊரை விட்டு கொஞ்சதூரம் தள்ளிதான் அந்த நிலம் இருக்கிறது. எப்போதாவது தான் அந்தப் பக்கமாய் வருவது.

அடக்க முடியாத அளவுக்கு அவள்மீது கோபம் வந்தது. கோபம் வரும் போதெல்லாம் காய்ச்சல் கண்டது போல் உடம்பு சூடேறி விடுகிறது. நேரே வீட்டுக்குப் போனான். மனம் ஒன்றவில்லை. மனம் போன மாதிரி நடந்து வெகுதூரத்திலிருந்த மலையடிவாரத்துக்குப் போய் ஒரு பாறை மீது ஏறி உட்கார்ந்து கொண்டான். அந்த இடம் மனித நடமாட்டம் அற்று இருந்தது. வகை வகையான பறவைகளின் கூச்சல் மட்டும் அறுபடாமல் கேட்டது. வெகு அருகிலேயே ஏதோ ஒரு பறவை மனதுக்குப் பிடித்தது போல பாடியது. அவள் முகம் குளத்தின் அலைகளில் தவழும் தக்கையென மேலெழுந்தும் இறங்கியும் ஆடிக் கொண்டிருந்தது.

நாயக்கமார் பெண்களின் அழகு பற்றி அவனுக்குத் தெரியும். அத்தனை சிவப்பாய் இருப்பார்கள் அவர்கள். ரொம்ப அபூர்வ மாகத்தான் அவன் அவர்களில் கருத்த மேனிகளை பார்த்திருக்கிறான். கண்களை மூடிக் கொண்டதும் கண்கள் கூசும் பிரகாசமுடன் அவள் தோற்றம் மனதில் நிறைகிறது. அதனைப் பார்த்து அவள் சிரித்துக் கொண்டே தான் இருக்கிறாள். வீட்டுக்கு வந்து இதோ இத்தனை நேரமாகிவிட்டது. இன்னும் கூட சிரித்துக் கொண்டே இருப்பாளோ. எத்தனை அலட்சியமும், திமிரும் அதிலே இழையோடுகிறது. இவன் என்ன சாதாரண பறையன்! எனக்கு முன் நிற்கக் கூடத் தகுதியில்லாதவன்! மீண்டும் சிரிக்கிறாள் அவள். உதடுகளைக் கோணிக் கொண்டு கழுத்தை ஒடித்து தாழ்த்தி எகத்தாளமாய் ‘ஆ...’ என்கிறாள்.

அவளுக்கு நாம் இன்ன சாதியென்று எப்படித் தெரிந்திருக்கும்?! தோற்றமே காட்டிக் கொடுத்துவிட்டதோ. அனிச்சையாய் கன்னங்களைத் தடவி மீசையை இலேசாய் முறுக்கிக் கொண்டான். இருக்காது. இந்த உடற்கட்டுக்கு மயங்கிச் சிரிக்கிற பெண்கள் சேரியிலேயே பலர் உண்டு. நண்பர்கள் கூட ஏங்காரிப்பார்கள் அவன் உடம்பைப் பார்த்து. வேறு எது அவளுக்கு இளக்காரத்தை தந்திருக்கும்? கோபமும், தவிப்புமாக இரவு வெகு நேரத்துக்கு அவனை அலைக்கழித்துக் கொண்டிருந்தாள் அவள். காலையில் காட்டுக்குப் போக கத்தியோடு நடந்து கொண்டிருந்த போது ஊர் எல்லையில் சீதாலட்சுமியைப் பார்த்தான் வேல் முருகன்.

“என்ன வேலு. நேத்து கோதாவரிய அடிக்கப் போயிட்டியாமே! பயந்துப் போயிட்டுகீறா. எங்கிட்ட சொல்லி பொலம்பலுன்னா பொலம்பலு. பாவம் ஒன்னும் தெரியாதவ. நா உன்னப்பத்தி வெலாவரியா சொல்லிக்கிறேன். பாத்தியினா என்னா ஏதுன்னு வெசாரி”

வேல்முருகன் தலையாட்டினான். கத்தியை பிடித்துக் கொண்டு பெருவிரலால் அதன் கருக்கை வருடியபடியே அவளிடம் சிரித்துக் கொண்டு கேட்டுக் கொண்டிருந்து விட்டு தலையாட்டினான் அவன்.

கோதாவரி நிலத்தை ஒட்டிய கொடி வழியிலே அவன் நடந்து போய்க் கொண்டிருந்தபோது யாரோ, கூப்பிடுவது போல இருந்தது. மூச்சிறைக்க ஓடிவந்து வேலியருகில் நின்றிருந்தாள் கோதாவரி. அவளைப் பார்த்ததும் வெறுப்பு சுரந்து நிறைந்தது. அவள் அவனிடம் இயல்பாகச் சிரித்தாள். வேலியில் படர்ந்திருந்த சங்குப் பூக்களின் நடுவே அவள் முகம் மிக அழகாகத் தெரிந்தது.

“ஒன்னு சொன்னா எடுத்து வருவியா?”

“மொதல்ல என்னான்னு சொல்லு கெடச்சா எடுத்து வர்றேன்”

“ஊசி மல பக்கமா தாமர பூத்திருக்காம். கொஞ்சம் மொக்குவோனும்.”

அவளிடம் எதையோ பேச வேண்டும் போலிருந்தது. கோபப் படவேண்டும் என்றும் கூட நினைத்தான். எதுவுமே அவனால் அப்போது முடியவில்லை. கொஞ்சதூரம் வந்து விட்டப்புறமும் அவள் வேலியருகிலேயே நின்றிருப்பதை பார்த்தான். மனதின் மூலையிலே ஒரு ஊற்றின் கண் திறந்துக் கொண்டு எதுவோ மெல்ல வெதுவெதுவென நிறைவது போல உணர்ந்தான். நடுப்பொழுதுக்கு கொஞ்சம் தள்ளி திரும்பி விட்டான்.

வேல்முருகன் சுமக்க முடியாத பளுவோடு தின்று தின்றாய் ஒரு விறகுச் சுமை அவன் தோளில் இருந்தது. தலையை இலேசாய் சாய்த்து தோளின் மீது துண்டை போட்டு சுமையை வைத்திருந்தான் அவன். வியர்வையில் மேலெல்லாம் நனைந்து மினுமினுத்தது. மலையை தூக்குபவன் போல தோன்றினான் வேல்முருகன். சுமையின் ஒரு பக்கத்தில் ஒரு கற்றைத் தாமரை மொட்டுகள் நீள நீள காம்புகளுடன் சொருகப்பட்டிருந்தன.

வெயிலுக்கு வதங்கி கோதாவரி காலையில் நின்றதைப் போல கழுத்தை அழகாய் கவிழ்ந்திருந்தன. கோதாவரியின் நிலத்துப் படப்பருகே நின்று கத்தினான் அவன். ஓட்டமும் நடையுமாக அவனிடம் வந்தாள் அவள். மொட்டுகள் சொருகியிருக்கும் பக்கமாக அவளுக்கு வாகாய்த் திரும்பி நின்றான். “இந்தா நீ கேட்டது. எடுத்துக்க”

தாமரை மொட்டுகள முகத்தில் உரசியபடி “அய்யோ” என்றாள் அவள் ஆச்சர்யத்தில்.

“அதெ போட்டுட்டு கொஞ்சம் வந்துப் போயேன்”

கொஞ்சம் தயங்கி பிறகு விறகுக் கட்டை தின்னென போட்டான் வேல். வேலியோரமாக ஒடுக்கமாய் விழுந்தது அது. கைகளை வீசியும், உடம்பை இப்படியும் அப்படியுமா நெளித்தும் உடைத்தான். படபடவென மூட்டுகள் நெறிப்பட்டன. ஆச்சர்யமுடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு ஓடிப்போய் செம்பில் நிறைய தண்ணீருடன் அவனை எதிர் கொண்டுவந்தாள் கோதாவரி. அவனுக்கு எதையும் நம்ப முடியாது. இவள் கோதாவரி இல்லை. தாமரை மொட்டுகள பறித்த குளக்கரையிலிருந்து கிளம்பி வந்துவிட்ட ஏழுகன்னிகைகளில் ஒருத்தி என்று நினைத்தான். அவளை கூர்ந்து பார்த்தான் வேல்முருகன். அவள் அவன் பார்வையை தவிர்த்தாள். முகத்தில் வெட்கம் கொப்பளித்தது. மேலெல்லாம் வழிய தண்ணீரைக் குடித்துவிட்டு செம்பைத் தந்தான். அவள் வாங்கி முன்புறமாக இருகைகளிலும் பிடித்து தாழ்த்தித் தலையை இப்படியும் அப்படியுமாக ஒரு செடிபோல் அசைந்தபடி சொன்னாள்.

“கொஞ்சம் சாப்பிட்டு போவ வா”

உள் மனம் எதையோ கிளற நினைத்தாலும் அவன் அதற்குத் தயாராய் இல்லை. வாய் பேசாமல் அவள் பின்னாலேயே போய், கை கழுவிக் கொண்டு வாசலில் நின்றான். வீட்டுக்குள் கூப்பிட்டாள் அவள். பெரிய இலையை விரித்திருந்தாள் கோதாவரி. அவன் உட்காந்ததும் அவளும் எதிரே உட்கார்ந்து கொண்டாள். இருவருக்குமாக வேண்டியளவு இலையிலே எடுத்து வைத்துக் கொண்டு சாப்பிடத் தொடங்கினார்கள்.

“வீட்லே யாரும் இல்லையா?”

“இல்லை. சயாங்காலமா வருவாங்க”

குழம்பு, ரசம், மோரென்று அவன் எப்போதாவதுதான் சாப்பிட்டது உண்டு. அவன் பிசைந்ததிலிருந்து ரசமும், மோரும் வழிந்து இலையில் எதிர்புறத்துக்கு ஓடின. அவள் அடிக்கடி அவனை பார்த்துக் கொண்டே சாப்பிட்டபடி இருந்தாள்.

அவன் புறப்பட எத்தனித்த போது தயக்கத்துடன் சொன்னாள் கோதாவரி

“நேத்து என்னாவோ நெனப்புல அப்படி நடந்துக்கிட்டேன்”

வேல்முருகன் திரும்பி அந்த கன்னியை ஆழமாகப் பார்த்தான். அவளிடமிருந்து குளுங்காற்று அடித்தது. இமைகள் தாழ்த்திக் கொண்டு நின்றிருந்த அவள் முகம் அவன் எங்கோ பார்த்த ஒரு சிலையுடையது போலிருந்தது... வேலி வரைக்கும் வந்து நின்றாள் அவள். அவளைப் பார்த்துக் கொண்டே கட்டுகளை உறுதியாகப் பிடித்து விறகுச் சுமையை தூக்கி தோள்மீது வைத்துக் கொண்டு நடந்தான். தின்தின்னென அவன் நடந்து போவதில் கோதாவரியின் இருதயம் அதிர்ந்தது.

கோதாவரியின் நிலத்துக்கு எதிரிலும், மேற்குப் பார்த்த பக்கமுமாக இரண்டு காட்டோடைகள் போய்க் கொண்டிருந்தன. மழைக் காலங்களில் மட்டும் அதில் புது வெள்ளம் புரளும். எஞ்சிய நாட்களிலெல்லாம் வெண்மணல் பரப்பில் மனிதர்களை ஆடவிட்டிருக்கும். வேல்முருகனும், கோதாவரியும் இப்போது அவர்களுடன் சேர்ந்துக் கொண்டார்கள். வேல்முருகன் வழியை மாற்றிக் கொண்டான். காலையில் கொல்லைக்குப் போவதிலிருந்து குளிக்கப் போவது வரை கோதாவரியின் நிலம் பக்கமாக மாற்றிக் கொண்டு விட்டான்.

கொருக்கை பயிர்களும், புதர்களும் செழித்திருக்கும் இடமாய்ப் பர்த்து அவர்கள் ஓடையில் நின்று நெடுநேரம் பேசுவான். கூப்பிடு தொலைவில் இருக்கும் காட்டுக்கு இருவரும் போய் ஒரு பாறையின் மேல் உட்கார்ந்திருப்பார்கள். வேல் முருகன் முரட்டுக் கைகளால் கோதாவரியை இழுத்து எலும்புகள் நொருங்கி விடுவது போல அணைத்துக் கொள்வதையும், தோல் பிய்ந்து புண்ணாகி விடும் அளவுக்கு அவள் உதட்டை சப்பிப்போடுவதையும் செடி கொடிகளும், பறவைகளும், வண்ணத்துப் பூச்சிகளும் பார்த்துக் கொண்டுதான் இருந்தன. அவர்கள் உட்கார்ந்திருக்கும் பாறை அவர்களின் பாரத்தை உணர்ந்திருந்தது.

கோதாவரியின் நிலத்துக்கு முன்னும், வலப்பக்கமுமாக இரண்டு கட்ட ஓடைகள் இருக்கின்றன. அவைகள் இவர்களுக்காக காத்திருக்கும். ஓடைக்குப் போனால் நீண்ட நேரத்துக்கு அங்கேயே இருப்பார்கள் கோதாவரியும், வேலும். பொறுமையின்றி அவ்வப்போது காட்டு மரங்களும், பறையும் சொல்லியனுப்பும். உடனே போய் விடுவார்கள். சிலநேரங்களில் வண்ணத்துப் பூச்சி சில வந்து வட்டமடிக்கும். வேல் முருகனை நினைக்கத் தொடங்கியதிலிருந்து ஒரு முரட்டு வண்ணத்துப் பூச்சி கோதாவரியின் வீட்டுக்கு வந்து போகத் தொடங்கியது.

வீட்டைச் சுற்றியிருக்கும் பழ மரங்களிலும், பூச்செடிகளிலும் அது இறக்கையடித்தபடி நெடு நேரம் இருக்கும். கருத்த இறக்கைகளின் மேலே சிவப்புத் தட்டுக்களாக அதன் வண்ணம் இருந்தது.

யாருமில்லாத சமயங்களில் கோதாவரியின் கன்னத்தை உரசிப் பறக்கிறது அது. அதன் சிறகடிப்புகளும், மெல்லிய வருடலும் அவளை கிளர்த்துகின்றன. உதடுகளை இலேசாய் பிளந்து கொண்டு முன் வரிசைப் பற்கள் கொஞ்சமாய் தெரியும்படி, கண்களை மூடிக் கொண்டு லயிக்கிறாள்.

புழக்கடையில் அம்மணக் கட்டையாய் தொடைகளை குறுக்கிக் கொண்டு மஞ்சள் உரசிக் கொண்டிருக்கும் போது கூட சில நேரங்களில் அது வந்து விடுகிறது.

கோதாவரியின் கனவுகளில் வேல்முருகன் அடிக்கடி வருகின்றான். ஒருநாள் வந்த கனவிலே இருவரும் நடுக்காடுவரைக்கும் விறகுக்கென போகிறார்கள். ஊசி மலையைத் தாண்டியதுமே கண்ணுக் கெட்டியத்தூரம் வரை/தாமரை மொக்குகளும், பூத்த தாமரைகளுமாக / குளமே தெரிகிறது. அங்கு சுற்றிக் கொண்டிருந்த வண்ணத்துப் பூச்சியில் ஒன்றுதான் கோதாவரியைத் துரத்திக் கொண்டு அவர்களுடனே வந்து விடுகிறது. அவள் கனவில் ஊர்ந்து கண்களுக்கு மேலே மேய்கிறது. உடல் முழுவதும் சில நேரங்களில் ஊர்வதால் இறக்கையின் சிவப்பு வண்ணம் ஒட்டிக் கொண்டு அவன் கடித்தும் தழுவியும் பிரியும்போது ஆவது போல சிவந்து கிடக்கிறாள் கோதாவரி.

வேல்முருகன் வீட்டுக்குப் போனவுடன் படுத்துவிட வேண்டுமென்று தான் காட்டிலிருந்து கிளம்பும் போது நினைத்திருந்தான். கோதாவரியைப் பார்த்து விட்ட பிறகு அந்த எண்ணம் போய் விட்டது. போதையைப் போல மெல்ல அவள் அவனுள் நிறைந்து இருந்தாள். எப்படி அவ்வளவு சுளுவாய் வீடு வந்து சேர்ந்து விட்டான் என்று அவனுக்கே பிடிபடவில்லை. விறகை போட்டு விட்டு நேரே வீட்டுள் போய் படுத்துக் கொண்டான். அவனின் அம்மா சாப்பிடக் கூப்பிட்டுக் கொண்டிருந்தாள். பதில் சொல்லத் தோன்றவில்லை.

முழங்கையை மடித்து தலைக்குக் கொடுத்து படுத்துக் கொண்டதும் உள்ளங்கையிலிருந்து சாப்பாட்டின் வாசம் அடித்தது. கோதாவரி தலை மாட்டில் நெருங்கி வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறதாய் தோன்றியது.

அவளை நினைக்கிற போது ஒரு இதமான உணர்வுடன் குழப்பமும் அவநம்பிக்கையும் கூட சேர்ந்தே தோன்றுகிறது. ஊரில் இருக்கும் கட்டுமானங்கள் மனதில் ஓடுகின்றன. நேற்று கூட இரண்டு வீடுகளுக்குத் தள்ளி இருக்கும் முருகேசனை ஊர் நாயுடுவின் ஆட்கள் வந்து இழுத்துக் கொண்டுப் போய் நடுத்தெரு விளக்குக் கம்பத்தில் கட்டிவைத்து அடித்தார்கள். சேரியிலிருக்கும் ஒரு ஆம்பிளையும் கேட்கவில்லை. பெண்கள் மட்டுமே புலம்பிக் கொண்டிருந்தார்கள். அவன் மட்டுமே தனியாளாய் நின்று கருவிக் கொண்டு திரிந்தான். யாரும் அவன் கோபத்துக்கு அஞ்சி நெருங்கவில்லை. கிருஷ்ணசாமி தலைவரை ஊருக்குக் கூட்டி வந்து கூட்டம் போட்டு அதிலே இவன்களையெல்லாம் திட்ட வேண்டும் என்று ரொம்ப நாட்களாய் அவன் நினைத்துக் கொண்டிருந்தான்.

சேரியிலிருந்து ஆட்கள் யாரும் செருப்புப் போட்டுக் கொண்டு ஊருக்குப் போவதில்லை. போனால் அவர்களுக்கு சவுக்கடி காத்திருக்கும். ஊர் நாயுடுவோ, பெருந்தனக்காரர்களோ தெருவழியே போகிறபோது சேரியாட்கள் எழவில்லையென்றால் அடிப்பதற் கென்றே சிறீராமுலு குஞ்சம் வைத்த தோல் சவுக்கொன்றை வைத்திருக்கிறான். சேரியே ஊர்க்காரர்களின் நிலங்களில்தான் காலத்துக்கும் மாரடிக்கிறது.

பெடரேஷனில் இருந்து கொண்டு அந்த வேலைகளுக்காக சுற்றித் திரிவதால் ஊரில் எப்போதுமே அவன் மேல் மட்டும் கொஞ்சம் அச்சம். இது மட்டுமே கோதாவரியை சினோகம் கொள்ளப் போதாதே! இதைப் பற்றியெல்லாம் எனக்குக் கவலையில்லை என்று அவள் சிரிக்கிறாள்! அவளோ கையில் தண்ணீர் ஊற்ற வந்தவள் தான். ஒரே நாளில் எப்படி மாறியிருப்பாள்? அவள் ஏழு கன்னிகளில் ஒருத்திதான். மயக்கிப் பிடித்து நீரில் அழுத்தப் பார்க்கிறாள். மனம் அலைபாயும் போது அவளின் சிரிப்பு மட்டும் வந்து அவனை நினைவற்றவனாக மாற்றி விடுகிறது.

கிணற்றில் குளிக்கப் போகும் போதும், துணி துவைக்கப் போகும் போதும் என அந்த வாரத்திலேயே பல முறை கோதாவரியைப் பார்த்தான் வேல்முருகன். ஒரு முறை அவளே அவனின் உடுப்புகள் சிலதைப் வலியப் பிடுங்கி துவைத்துத் தந்தாள். நீச்சல் கற்றுத் தரச் சொல்லி அவன் கிணற்றில் இருக்கும் போது கேட்டு தார்ப் பாய்ச்சிக் கொண்டு குதித்தாள். ஒரு குழந்தையைப் போல அவளை கவிழ்த்துப் போட்டு உள்ளங்கைகளில் ஏந்திப் பிடித்துக் கொண்டதும் கால் கைகளை அடித்து நீச்சல் பழகினாள்.

கெண்டைக்கால்கள், முழங்கால் மடிப்புவரை நீரொட்டாமல் இருக்கும் அல்லி முலைகள் எனத் தெரிந்தன. கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அவனிடமிருந்து நழுவி பெருஞ்சிரிப்புடன் நீந்தினாள். இவள் நீர்க்கன்னியேதான் என்று நடுங்கினான் வேல்முருகன்.

கோதாவரியின் வீட்டுக்குப் பின்புறம் நிலத்தின் நடுவாக ஒரு மாமரம் உண்டு. அதன் கீழே உட்காருவதற்கென அவளின் தகப்பன் கல்செதுக்கிப் போட்டிருந்தான். இரவுகளில் அங்கே அவர்கள் சந்தித்துக் கொண்டனர். மா தனது முரட்டிலை வாய்களை மூடி மௌனம் காத்தது. பிரிந்திருக்க ஆகாது என்றானதும் அவளைக் கூட்டிக் கொண்டு பெங்களூருக்கு ஓடினான் வேல் முருகன். இரவில் ஒன்றுக்கிருப்பதாக சொல்லிவிட்டு புழக்கடைக்கு வந்தவள். முன்பே அங்கு மறைத்து வைத்திருந்த தனது உடுப்புகளை எடுத்துக் கொண்டு அவனுடன் போனாள்.

பல நாட்களுக்குப் பிறகு கோர்ட் வளாகத்தில் போலீஸ் காரர்களோடு நின்றிருந்தபோது தான் கோதாவரியைப் பார்த்தான் வேல்முருகன். முகம் தெரியாத தொலைவிலே வேம்படியில் பெற்றவர்களுடன் நின்றிருந்தாள். தாவணி கட்டியிருந்தாள். அவள் அவனையே திரும்பித் திரும்பிப் பார்ப்பதும், தலைக் கவிழ்வதுமாக இருப்பது நன்றாகத் தெரிந்தது. அவளின் பெற்றோர் குரலை உயர்த்தி அவளிடம் எதையோ சொல்லிக் கொண்டே இருந்தனர்.

போலீஸ் தேடி வருவதற்கு முன்னாலேயே கோதாவரியின் தகப்பன் சில ஆட்களோடு பெங்களூருக்கே தேடிக் கொண்டு வந்து விட்டான். அவனால் அவர்களைப் பார்த்ததும் பேச முடியவில்லை. துண்iடைப் பொத்திக் கொண்டு அழுதான். அவனுக்கே தருவதாக சமாதானம் பேசி கோதாவரியை கூட்டிக் கொண்டு ஊருக்குத் திரும்பியபோது கோதாவரி வேல் முருகனிடம் அழுதாள். அவன் அவளிடம் பேச முகம் கொடுப்பதற்குள், அந்தப் பெருவிழிகள் நிறைந்து பொல பொலவென நீர்த்துளிகள் கன்னங்களில் உருண்டன.

இரண்டொரு நாட்களில் ஊர்த்திரும்பியவனை ஆள்கடத்தல் புகாரில் பிடித்துப் போக கச்சேரியிலிருந்து போலீஸ்காரர்கள் இரண்டு பேர் வந்திருந்தார்கள். ஊரே வேடிக்கைப் பார்த்தது. மார்பில் அடித்து ஓலமிட்ட அம்மாவை அதட்டினான் வேல்முருகன்.

“என்னாத்துக்கு அலற? போயி நம்ம தலைவர்கிட்ட சொல்லச் சொல்லி வீராசாமிகிட்ட சொல்லு. நா வந்துருவேன் வந்தபின்ட்டு நானா அவனுங்களான்னு பாத்துக்கிறேன்”

பக்க அக்க ஊர்களிலிருந்து பெடரேஷன் தோழர்களும், வீராசாமியும் தினமும் வந்து பார்த்துக் கொண்டார்கள். கிருஷ்ணசாமி தலைவரும், தாஸ் தலைவரும் வந்திருந்தார்கள். வேல்முருகன் நடப்பவைகளையெல்லாம் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். எதையோ ஆழமாய் யோசிப்பவனைப் போலத் தெரிந்தான். அவனுக்கு எதுவும் புரியவில்லை. ஒரு பையனும், ஒரு பெண்ணும் விரும்பி காதல் செய்வது போய் குற்றமா? இதில் என்ன தப்பிருக்கிறது என்று தோன்றியது.

கோதாவரியை நினைத்துக் கொண்டாலே மனதுக்குள் நிரம்பும் ரம்மியமான நினைவுகள், எப்போதும் அவன் மனக்கண்முன் பட்டாம் பூச்சியென சிறகடிக்கும் அவளின் பெரிய விழிகள், சாப்பிடவோ, உறங்கவோ, தாவில் தங்காதபடி இன்பமான வேதனை, மனசில் நெறிகட்டிக் கொண்டது போல எப்போதுமே இருக்கும் ஒரு வலி எல்லாமே இப்போது நினைத்துப் பார்க்கையிலே வேடிக்கையாகவும், குற்றமாகவும் தோன்றுகிறது. அதிர்ச்சி பரவி ஒருவிதமான பயத்துடனே அவைகளை நினைக்கத் தோன்றுகிறது. எதுவுமே தான் நினைத்த மாதிரி நடக்காதென இப்போது அவனுக்குத் தோன்றியது.

மாஜிஸ்டிரேட் முன்பு கொண்டு போய் நிறுத்தியபோது உள்ளூர நடுக்கமாக இருந்தது. கோதாவரியின் அப்பனையும், சொந்தக்காரர் களையும் பார்க்கும் போதெல்லாம் இயல்பாகவே ஒரு விறைப்பு கூடியது. அவர்கள் ஊரின் மணியக்காரனையும், கச்சேரியிலிருக்கும் இன்ஸ்பெக்டரையும் விசாரித்தார்கள். அதிர்ச்சியுடன் எல்லார் சொல்வதையும் கேட்டுக் கொண்டிருந்தான் வேல் முருகன். டாக்டர் ஒருவரை விசாரித்தார்கள். அவர் பெண்ணுக்கு பதினாறு வயதுதான் ஆகிறது என்றார். தாவணியுடன் கோர்டுக்கு வெளியே நின்றிருந்த கோதாவரியின் தோற்றம் நினைவில் வந்து போனது. கோதாவரியை விசாரித்த வக்கீல் “எந்த மாதிரி நேரத்தில் உன்னை வேல்முருகன் கூப்புட்டுனு போனாரு?” என்று கேட்டார்.

“எங்க அப்பம்மா இல்லாத நேரத்துல” என்று மெதுவாய்ச் சொன்னாள் கோதாவரி.

மாஜிஸ்டிரேட் ஆள் கடத்தல் என்று, கூறி நாலு வருச தண்டனை விதித்து விட்டார்.

போலீஸ்காரர்கள் சிறைக்கு அழைத்துக் கொண்டு போகும் வழியில் எங்காவது கோதாவரி நின்றிருக்கிறாளா என்று பார்த்தான் வேல் முருகன். அவனுக்குத் தெரிந்தவர்கள் யாரும் இல்லை. எல்லாரும் போய்விட்டிருந்தார்கள்.

வேல்முருகன் தன் மகளை கற்பழித்து விட்டதாக கோதாவரியின் அப்பன் பெங்களூரிலே ஒரு வழக்குப் போட்டிருந்தான். ஆள் கடத்தல் வழக்கில் வேல் முருகன் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருந்தபோது. கற்பழிப்பு வழக்குக்கான விசாரணைக்கு சம்மன் வந்தது. தொரப்பாடி பெரிய ஜெயிலுக்கு வந்து ஒரு மாசத்துக்கும் மேல் ஓடி விட்டது. நடுவிலே ஒரு தடவை மட்டும் அம்மாவும், சொந்தக்காரர்கள் சிலபேரும் வந்து போயிருந்தார்கள். அம்மா கம்பிகளுக்கு அந்தப் பக்கமாக நின்றிருக்கும் தன் மகனை பார்த்ததும் பெருங் குரலெடுத்து ஒப்பாரி வைத்தாள்.

“உன்னை புடுச்சி குடுத்துட்டு மில்லாமெ என்னாமா மினுக்கினு திரியிறாடா அவ”

“நாக்கினுங்குளுக்கு உன்னும் எடுத்தக்கையாயிடுச்சி. ஒரே உருட்டலு தெரட்டலுதான். நம்ம ஜாதி ஜனங்க ஒண்னும் வாயத்தொறக்க முடியிலடா வேலூ”

அவர்கள் போன பிற்பாடு வந்த நாட்கள் வேதனை மிக்கதாய் இருந்தன அவனுக்கு. கோதாவரியை மறந்து விடுவதற்கான முயற்சியில் தீவிரமாய் இருந்தான் அவன்; ஆனால் முடியவில்லை. தனிமையின் கொட்டடியில், புழுங்கும் அறை களில் அமர்ந்து மணிக்கணக்கில் யோசித்துக் கொண்டிருந்தான். கோதாவரி அவனுக்கு ஒரு வுடுகதை போலத் தெரிந்தாள். திடீரென்று தான் எல்லாமே நடந்துவிட்டன. சினேகமான நாள் முதல், ஒரு நாள் அவன் அவளைப் பார்க்கவில்லை என்றாலும் அடுத்த நாள் பார்க்கிற போது ஒரு பாட்டம் அழுது தீர்த்து விட்டுதான் சகஜமாவாள் அவனிடம்.

வீட்டை ஏமாற்றி விட்டு ஒருநாள் அவனோடு கோதாவரி காட்டுக்குப் போயிருந்தாள். ஊரைப் பார்த்தமாதிரி இருக்கும் காட்டின் வழியாய் போனால் யாராவது பார்த்து விடுவார்கள் என்று அவர்கள் பெரிய பாட்டை வழியாகவே நெடுந்தூரம் நடந்தார்கள். தலை யரிஞ்சான் குளத்தைத் தாண்டியதும் வரும் வழியில் காட்டுக்குள் நுழைந்தார்கள். மழைக்குச் செழித்திருந்தது காடு. சீக்கைப் புதர்கள் காடெங்கும் நிறைந்து பூவெடுத்திருந்தன.

கோதாவரிக்கு எல்லாம் அதிசயமாய் இருந்தது. எதிர்கெட்டைத் தாண்டக் கூட இல்லை. அதற்குள் நடுக்காட்டுக்கு வந்து விட்டோமா என்றாள் கோதாவரி. கால்கள் சலிக்கிறதென்று மூச்செறிய பாறைகளின் மேல் உட்கார்ந்து கொண்டாள். வேல்முருகன் சிரித்துக் கொண்டான். அவனுக்கு அவளின் தவிப்பும், அங்கலாய்ப்பும் பிடித்திருந்தது. போய்விடலாம் அவ்வள வுதான் என்று சமாதானம் சொன்ன படியே பெரும்பாறை பக்கமாக கூட்டிக் கொண்டு நடந்தான்.

பெரும்பாறையின் பரந்த உருவம் கோதாவரியை ஆச்சரியப்படுத்தியது. அவளால் அவ்வளவு பெரிய பாறையை நம்ப முடியவில்லை. அது காட்டை அடைத்துக் கொண்டு விழுந்து கிடக்கும் ஒரு பெரிய மிருகம் போலிருந்தது. அதன் மீது ஏறுவதற்கு தாழ்ந்திருந்த பக்கமாக கோதாவரியைக் கூட்டிக் கெண்டுப் போனான் வேல்முருகன். சரிந்து இருந்த பாறையின் பாதை மனிதர்கள் ஏறி வழுவழுப்பாக இருந்தது. பளிங்கு போலிருந்த அதன் சில பகுதிகளில் வெண்ணிறமாக கொடி யோடியிருந்தது. கோதாவரி பின் தங்கி உட்கார்ந்து கொண்டாள்.

வார்த்தைகள் எழும்பாமல் அவளுக்கு மூச்செடுத்தது. அவளை நிற்கச் சொல்லி ஒரு ஆட்டுக்குட்டியைப் போல தோள்மேல் ஏற்றிக் கொண்டு விடுவிடுவென தாவி ஏறி உச்சிக்குப் போனான் வேல்முருகன். வியர்வையால் கசகசத்த அவன் தோளிலிருந்து ஈரம் பரவி அவள் வயிற்றை நனைத்து கூசச் செய்தது. பாறையின் மேல் போய் நின்று அவளை இறக்கி விட்டதும் கோதாவரிக்கு மேகங்களின் மேல் வந்து நிற்பது போல் இருந்தது.

ரகசியம் பேசுவது போல அவர்களைச் சுற்றி வீசிய காற்றுக்கு கிறங்கினாள். காடு முழுதும் காலடியில் வந்து விட்டது போலச் சுறுங்கிச் சிறுத்து தெரிந்தது. கண்ணுக் கெட்டிய தூரம் வரைக்கும் வீடுகளோ, ஊரோ தென்பட வில்லை. காற்று வருடிப் போவதில் வயிற்றின் ஈரம் மெல்லக் காய்ந்து குளுமைப் பரவியது. அவள் அப்படியே வயிற்றைத் தடவியபடி உட்கார்ந்து கொண்டாள்.

வேல்முருகன் அவள் அருகில் வந்து உட்கார்ந்து, அவளை இறுக்கமாய்த் தழுவிக் கொண்டான். நெடுநேரமாய் இருவரும் அப்படியே அந்தப்பாறை மேல் படுத்துக் கிடந்தனர்.

கோதாவரியை நினைக்குந் தோறும் அம்மா சொல்லிவிட்டுப் போனதே நினைவில் வந்தது. திடுமென கோதாவரி கொடூர மானவளாகத் தோன்றினாள். அவள் மனம் இறுகிப் போயிருப்பதாய் அவனுக்குத் தோன்றியது. ஊருக்குப் போனதும் அவளை கழுத்தை நெறித்துப் போட வேண்டும் என்று வெறி தகித்தது.

விசாரணைக்காக பெங்களூருக்குப் போவதற்கு இரண்டு வாரங்கள் இருந்தபோது வீராசாமி பார்க்க வந்திருந்தான். வீராசாமியிடம் சத்தம் போட்டான் வேல்முருகன்.

“என்னடா பண்ணினுகீறிங்க? சாதாரணம் இந்தக் கேசுலயே என்ன வெளிலியே கொண்டுவர முடியில. உன்னும் பெரி பெரி வேலன்னா என்னா செய்வீங்க? தலைவருக் கிட்ட சொல்லி நல்ல வக்கீலா ஏற்பாடு பண்ணச் சொல்லு. பெங்களூர்லயும், கோலார்லயும் நம்ம பெடரேஷன் ஆளுங்க ரொம்பப் பேருகீறாங்களாம். அதுல யாரானா ஒருத்தர பார்க்கச் சொல்லு. அம்மாக்கிட்ட, இருக்கிற மாடுங்களெயெல்லாம் விக்கச் செல்லிட்டேன். பணத்துக்கு பயமில்ல. பாத்துக்கலாம்.”

பெங்களூர் கோர்ட்டில் பெடரேஷன் வழக்குகளுக்கு ஆஜராகும் சின்னசாமியே அவன் வழக்குக்கும் ஆஜராவதாக வீராசாமி வந்து சொல்லிட்டுப் போனான் அவனிடம்.

குடியாத்தம் சப்மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் நின்ற மாதிரி அவனுக்கு இருக்கவில்லை. பெங்களூர் கோர்டிலே அவன் வழக்கை விசாரிக்க அமர்ந்திருந்த நீதிபதி தன்மையானவராகத் தெரிந்தார். பெடரேஷன் வழக்கறிஞர் எல்லா சாட்சிகளையும் திறமையுடன் குறுக்கு விசாரணை செய்வதை ஆச்சரியமுடன் பார்த்தக் கொண்டிருந்தான் வேல்முருகன். ஊர் மணியமும், இன்ஸ்பெக்டரும் வேல்முருகன் மீது எந்த புகாரும் இதற்கு முன் இல்லை. ஊரைப் பொறுத்தவரை வேல்முருகன் அமைதியான பையன் என்றார்கள்.

கோதாவரியை பரிசோதனை செய்த டாக்டர்கள், கோதாவரிக்கு உடல் அமைப்பு மற்றும் வளர்ச்சியின் படி பார்த்தால் இருபது வயதுக்கும் மேல் இருக்கும் என்றார்கள்.

கோதாவரி சாட்சி சொல்ல வந்த போது, வேல்முருகன் இருக்கும் பக்கமாகவே அடிக்கடி பார்த்துக் கொண்டு இருந்தாள். அவள் கண்கள் கலங்கி இருப்பது போலத் தெரிந்தன. குரல் பிசிறியது. நான் விரும்பித்தான் அவரோடு வீட்டை விட்டு வந்தேன். பிரியப் பட்டுத்தான் சேர்ந்திருந்தேன். அவள் பேசுவதைக் கேட்க கேட்க வேல் முருகனின் நெஞ்சு அடித்துக் கொண்டது.

நீதிபதி கோதாவரியின் அப்பா விடம் சில கேள்விகளைக் கேட்டார்.

“உன் மகளும், வேல்முருகனும் காதலித்துதான் ஓடி வந்திருக்கிறார்கள். ஏன் நீ அவர்களுக்கு கல்யாணம் செய்து வைக்கக் கூடாது.”

கோதாவரியின் அப்பா தலையை கவிழ்த்துக் கொண்டிருந்தார். நீண்ட தயக்கத்துக்குப் பிறகு அவரின் வாயிலிருந்து சொற்கள் வந்தன.

“அந்தப் பையன் நல்ல பையன்தான். ஆனா... மாலோடு. அவனுக்குப் பொண்ணக் குடுத்தா எங்க சாதியில சும்மாயிருக்க மாட்டாங்க.”

நீதிபதிக்கு கோபம் மூண்டிருந்தது. அவர் சத்தமாக பேசினார். “ஏன்யா சாதிய பார்க்கறதே தப்பு. இதுல பொண்ண கெடுத்துட்டான்னு வேற பொய் கேசு போட்டிருக்க. கோர்ட்ட அவமதிச்சதுக்காக உனுக்குத்தான் இப்ப தண்டன தரனும்.”

கோதாவரியின் அப்பா நின்றிருந்த இடத்திலிருந்து ஓடிப்போய் நீதிபதி முன்னால் தரையோடு விழுந்தார். பையித்தியம் பிடித்த வரைப் போல எழுந்து வேல்முருகனின் காலைப் பிடிக்க ஓடினார்.

“சாமீ நீ சொல்ற மாதிரி செய்யறேன். எனுக்கு புத்தி கெட்டு போச்சி.”

வேல்முருகன் மீது இருந்த வழக்கை தள்ளுபடி செய்து விட்டார். நீதிபதி குடியாத்தம் சப் மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் நடந்த வழக்கையும் பொய்வழக்கு எனச் சொல்லி செல்லாது என அறிவித்தார். வழக்குச் செலவு அனைத்தையும் வேல்முருகனுக்குத் தரும்படியும் சொல்லிவிட்டார் நீதிபதி.

இரண்டொரு நாளில் ஊருக்கு வந்துவிட்டான் வேல்முருகன். ஊரில் இருப்பவர்கள் அவனிடம் பேச பயந்துக் கொண்டிருந்தார்கள். கோதாவரி ஆள் மூலம் சொல்லி அனுப்பியபடியே இருந்தாள். சொல்படி கேக்கலன்னா, ரெண்டு பேரும் செத்துப் போவதாகச் சொல்லி அவளை அவளின் அப்பாவும் அம்மாவும் மிரட்டி வைத்திருப்பதாகச் சொன்னார்கள் தூது வந்தவர்கள் அவனிடம்.

ஒருநாள் கோதாவரியைப் பெற்றவர்கள் வேல்முருகனின் வீடு தேடி வந்திருந்தார்கள்.

“ஊரெல்லாம் எம்பொண்ணப் பத்தி உன்னோட சேத்து பேராயிடுச்சி. அதெ நீயே கட்டிக்க. எங்க நாலு ஏக்கரா நெலமும் அதுக்குத்தான். அத்தெயும் ஒம்பேருக்கே எழுதி வெச்சிடறோம்.” வேல்முருகன் பதில் சொல்லாமல் மௌனம் காத்துக் கொண்டிருந்தான்.

“நான் பறையன்ற ஒரே காரணத்துக்காக, ஒங்கப் பொண்ண கெடுத்துப்புட்டதாகவும், கடத்தினு போயிட்டதாகவும் பொய் கேசு கோட்டீங்க. அப்பவே எம்மனசு கெட்டியாயிடுச்சி.”

“அதெல்லாத்தியும் உட்டுரு. பளைய கத அது. அத்தையெல்லாம் மறந்துட்டுதான் நாங்களே வந்திருக்கிறோம்.”

“யோசிச்சி சொல்றேன்”.

வேல்முருகன் பிற்பாடு எதையுமே யோசித்து சொல்லாமல் விட்டுவிட்டான். அவசர அவசரமாக நாலுஊர் தள்ளி இருக்கிற கிராமத்தில் கோதாவரியை கட்டிக் கொடுத்து விட்டார்கள் பெற்றவர்கள். கல்யாணத்தில் அழுது அழுது தக்காளிப் பழங்களைப் போல அவளின் கண்கள் சிவந்து இருந்ததாக போய் பார்த்தவர்கள் அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

கல்யாணம் ஆன ரெண்டு வராத்துக்குள்ளாகவே, கோதாவரி பாம்பு கடித்து செத்ததாக செய்தி வந்தது. வேல்முருகனின் சினேகிதர்கள் அதைச் சொல்ல வந்தபோது, ஊர் ஓரத்து நிலமொன்றிலே வேலை செய்து கொண்டிருந்தான் அவன். சேதி கேட்டதும், இல்லை இல்லை என்று தலையையாட்டிக் கொண்டே மார்பில் அறைந்தபடி உயிர்போவது போல அழுதான் வேல்முருகன்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com