Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
டிசம்பர் 2006
நூல் மதிப்புரை: இஸ்லாமியப் பெண்ணியம்
ஆர். அருணா

இன்றைய சூழலில் இஸ்லாமியப் பெண்ணியம் குறித்து கேள்வி எழுப்புவது இயலாதநிலை. காரணம் மதக்கட்டுப்பாடுகள் என்பதை தவிர. அது சிறுபான்மையினருக்கு எதிராக போய்விடுமோ அல்லது இந்துத்துவாவிற்கு ஆதரவாகி விடுமோ என்ற அரசியல் பின்னணியில் ஏற்படும் ஒரு வித அச்சம், தயக்கம் இவை இத்தகைய கேள்விகளை ஒத்திப்போட வைக்கின்றன.

ஆனால் ஹெச்.ஜி.ரசூலின் ‘இஸ்லாமியப் பெண்ணியம்’ மிக நுட்பமாக பெண்ணிய பார்வையில் இஸ்லாத்தை மறுவாசிப்பு செய்ய முயற்சி செய்கிறது. பொதுவாக பெண்ணியம், உலகமயமாக்கல் போன்ற விஷயங்கள் சம்பந்தப்பட்ட புத்தகமாகயிருப்பின் அது மிக அதிகமான பக்கங்களாக இருப்பது வழக்கம். ஆனால் இவர் சிறிய புத்தகமாக எழுதியிருப்பது சிறப்பானதாகும்.

இஸ்லாத்தில் திருக்குர்ஆனிலும், ஹதீசுகளிலுமுள்ள விளக்கங்களை ஆணியப் பார்வை அர்த்தம் கொண்டு, அதன் மூலம் பெண்களுக்கெதிராக முத்தலாக், பலதாரமணம், ஜீவனாம்சம் மறுப்பு, சாட்சி, சொத்து பாகுபாடு, பர்தா முறை என நடைமுறைப் படுத்துவதும், ஆணாதிக்க அதிகாரத்தை நிலைநாட்ட இஸ்லாமிய சட்டங்களை திரிப்பதும், நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இதனால் ஆண் நினைத்த நேரத்தில் செல்போனிலோ, தந்தியிலோ கூட தலாக் சொல்லலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இஸ்லாத்தில் குடும்ப அமைப்பு, உறவுமுறை அனைத்தும் கேள்விக்குறியாக ஆக்கியுள்ளது. இதை ரசூல் அவர்கள் 15 தலைப்புகளில் விவாதித்துள்ளார்.

ஆதிக்க சிந்தனையை சமூகத்தில் நிலைநாட்ட ஆண்கள், தங்களுக்கு தேவையான பகுதிகளை மட்டும் திருக்குர்ஆனிலிருந்து எடுத்துக் கொள்வது மட்டுமல்லாது. அதிலுள்ள தங்களை பாதிக்கும் வசனங்களை வசதியாக விட்டுவிடுகிறார்கள் என்கிறார். இதை குறிப்பாக பலதாரமணம், மற்றும் ஒழுக்கவிதிகள் சார்ந்த கருத்தாக்கங்களில் வெளிப்படையாக தெரிகிறது.

திருக்குர்ஆனின் அத்தியாயம் 4 வசனம் 3 (4:3)ன், முதல் பகுதி ஒரே சமயத்தில் 4 மனைவிகள் வரை வைத்துக் கொள்ளலாம் என்று பலதாரமணத்திற்கு ஆதரவாக உள்ளது. இதை மட்டும் எடுத்துக் கொண்டு அதை ஆண்கள் நடைமுறை படுத்துகின்றனர். ஆனால் மறைமுகமாக ஒருதாரமணத்தை வலியுறுத்துகிற அவ்வசனத்தின் இறுதிபகுதி, “அப்பெண்களிடம் நீதமாக நடக்க வேண்டும். இல்லையெனில், ஒரு பெண்ணை மட்டுமே மணக்க வேண்டியது இதுவே சுலபமானது” என்று வருகிறது. இதன் மூலம் இவர் மறுவாசிப்பு அதாவது பெண்ணிய வாசிப்பிற்கு ரசூல் முயற்சிக்கிறார். இந்த வசனங்களை சமகால சூழல்களில் அர்த்தப்படுத்திக் கொள்வதன் மூலம் ஆண்களின் பாலாதிக்க மேலாண்மைக்கு முடிவு கட்ட முடியும் என்கிறார்.

இதைபோன்றே, ஒழுக்க விதியிலும் ஆண்கள் தங்களுக்கு சாதகமாக 24ம் அதிகாரத்தின் 30வது வசனத்தை விட்டுவிட்டு, அடுத்த வசனம் 24:31ஐக் கொண்டு பெண்கள் மீது ஒழுக்க விதி என்று வன்முறையை நடைமுறைப் படுத்துகின்றனர். இதற்கு ஆசிரியர் பர்தா முறை அரேபிய சூழலில் ஆண், பெண் இருவருக்கும் உடலை பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. இதை இந்திய சூழலின் பெண்கள் மீது மட்டும் சுமத்தப்படுகிறது என்கிறார்.

மேலும் ஷப்னா ஆஸ்மி சொன்னது போல் இந்த பர்தா மற்றும் முகத்திரையிடுதல் முறை குறித்து திருக்குர்ஆனில் காண முடிவதில்லை என்று கூறுகிறார். இது ஒழுக்க விதியாகவும், உரிமை சம்பந்தப்பட்ட பிரச்சனையாகவும் உருவானது என்கிறார். ஆனால் இன்று இது உரிமை பறிக்கும் விதமாக உள்ளது. பெண்கள் எவ்வாறு ஆடை அணிய வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்புகள் முடிவு செய்ய முயல்கின்றன. இது ஒரு தனிப்பட்ட விஷயமாகும், இதில் தலையிடுவது அத்துமீறி அதிகாரம் செலுத்துவதாகும் என்கிறார்.

மேலும் பர்தா மட்டும் பெண்களின் கற்பை பாதுகாத்தலுக்கு ஒரு கேடயமாக இருக்க வாய்ப்பில்லை என்கிறார். அஸ்கர்அலி இன்ஜினியரும், பெண்கள் பர்தா இல்லாமலும் ஒழுக்கமாக இருக்க முடியும் என்கிறார். உண்மையில், பெண்களின் ஆடையை பற்றி விமர்சிப்பது அவர்களின் தவறான பார்வையைத் தான் காட்டுகிறது (எ.கா.சானியா மிர்சா) என்பது மறுக்க முடியாத ஒன்று. உயிரியல் அடையாளங்களின் அடிப்படையில் பெண்ணிய உடலை போகப் பொருளாக மட்டுமே பார்க்கும் மனோபாவமும், பர்தா போடாதவர்களை ஒழுக்கங் கெட்டவர்களாக பார்க்கும் போக்கும் மாற வேண்டும் என்கிறார் ரசூல். இன்றைய நவீன சுழலுக்கேற்ப பர்தாவிற்கு மாற்றாக சுடிதார், சல்வார் கமீஸ் உள்ளிட்ட ஆடைமுறைகளை பின்பற்றுவது யதார்த்தமாகும் என்று மறுவாசிப்பு செய்வது பாராட்டுதலுக்குரிய விஷயமாகும்.

* * *
தலாக் முறை அதன் சட்ட திட்டங்கள் அனைத்தும் ஆணுக்கு ஆதரவாகவே இருக்கிறது. அதாவது, தலாக்கில், ஆண் மனைவியின் விருப்பமின்றி அவளை மணவிலக்கு செய்ய முடியும். குலாவில் கணவனின் ஒப்புதலுடன் தான் மனைவி கணவனை மணவிலக்கு செய்ய முடியும் என்பதும், மாறு செய்யும் மனைவிக்கு மட்டுமே தண்டனை, மாறு செய்த கணவனுக்கு தண்டனை இல்லை என்று திருக்குரானில் உள்ளது என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.

தவிர மணவிலக்கு மட்டுமின்றி, திருமண முறைகளும் ஆண் பார்வையில்தான் உருவாக்கப் பட்டுள்ளது. நிக்காஹ் மேடைகளில் பெண்ணுக்கு ஆதாரப் பூர்வமாக எந்தப்பங்களிப்பும் இல்லை. இதற்காக ஜமாஅத்துகளில் பெண்கள் பங்கேற்பது, பெண்களுக் கென்று தனியாக ஜமாஅத் என பெண்களின் பங்கேற்பு குறித்து தீவிரமாக விவாதிக்க வேண்டியுள்ளது என்கிறார்.

விவாகரத்து பெற்ற பெண்களுக்கு மறுமணம் மற்றும் எதிர் காலம் இரண்டும் கேள்விக்குரியதாக இருக்கும் பட்சத்தில் இப்பெண்களுக்கு ஜீவனாம்சம் மிக அவசியம் என்கிறார். இதற்கு எதிர்ப்புகள் சமூகத்தில் உள்ளன. சிறந்த உதாரணம் 1973ல் நடந்த ஷபானா வழக்காகும். இதற்கு திருக்குர்ஆனும் இது குறித்து பேச வில்லை. ஆனால் ஆசிரியர் பெண்ணிய வாசிப்பின் அடிப்படையில் திருமறையிலுள்ள 2:241 மற்றும் 65:1,6,7 வசனங்களை கொண்டு திருக்குர்ஆன் வாழ்வாதாரம் மற்றும் வசிப்பிட பாதுகாப்பு என்பதை வலியுறுத்துவதாக கூறுகிறார். ஆனால் உண்மையில் இந்த வசனங்கள் சொல்பவை நம் இந்திய Constitution சொல்லப்படும் ஜீவனாம்சம் அல்ல. (காலம், அளவு)

இஸ்லாமியப் பெண்கள் ஆண்களைவிட தாழ்ந்தவர்கள் என்று திருக்குர்ஆனில் உள்ள வசனங்களைக் கொண்டு சமூகம் நியாயப்படுத்துவது மட்டுமல்லாது நடைமுறையும் படுத்துகிறது. உதாரணம் ஒரு ஆணுக்கு இரண்டு பெண்கள் என்ற ‘சாட்சி’ சம்பந்தமான வசனம் (2:282) மூலமாக என்கிறார். ஆனால் இவ்வசனம் சொல்லப்படாத அர்த்தங்களின் பின்னணியில் இதை புரிந்து கொள்ளாமல் வேறு மாதிரி எடுத்துக் கொள்ளப்பட்டது என்கிறார். சொல்லாமல் விடப்பட்ட விஷயத்தை பெண்ணிய வாசிப்பில் கண்டுபிடிக்க வேண்டும் என்கிறார். அது எவ்வாறு சாத்தியம். இந்த வசனம் நேரடியாக ஆண், பெண் பேதம் காட்டுகிறது. மேலும் இல்லாத ஒன்றை வைத்து எப்படி மறுவாசிப்பு செய்ய முடியும் என்று தெரியவில்லை.

* * *
அகீகா, குழந்தைகள் பிறக்கும் பொழுது ஆடுகள் பலிகொடுக்கும் முறை. ஆண் குழந்தை பிறந்தால் 2 ஆடு, பெண்ணிற்கு 1 ஆடு. (இம்முறை அரேபிய பெண் குழந்தைகள் உயிருடன் புதைக்கப்பட்ட காலத்தில் ஒரு ஆடு கொடுப்பது ஒரு சலுகையாகவும் கருதப்படுகிறது என்கிறார். இந்த முறை குறித்து திருக்குர்ஆனில் எதையும் முன்னு தாரணமாக கருதவில்லை என்றும், ஹதீஸ்கள் மட்டுமே இதை விவாதிக்கின்றன. ஆனால் இதை நபிகள் பின்பற்றினார் என்று ஹதீஸ்கள் கூறுகின்றன). இதனால் நபிகள் ஆண், பெண் பேதம் பார்த்தார் என்பதில்லை, அதை தடுத்து இருக்கிறார் என்று ஆசிரியர் கூறுகிறார். இருந்த பொழுதிலும் இன்றைய சமூக பண்பாட்டுத் தளத்தில் இந்த இரண்டு, ஒன்று வெறும் எண்ணிக்கையாக மட்டுமல்லாமல் சொத்துப் பங்கீடு உள்ளவற்றிலுள்ள ஆணதிகாரம் என்பதன் துவக்கப் புள்ளியாகவும் கருதப்படுகிறது என்று அடுத்தவர் பார்வையிலிருந்து கருத்து தெரிவிக்க முயல்கிறார்.

(அல்பகறா, அதிகாரம் 2 வசனம் 222) 2:222 மூலம் தீட்டு என்று பெண்களை சமூகத்திலிருந்து ஒதுக்கி வைத்ததை விளக்குகிறார். திருக்குர் ஆனில் அசுத்தம் என்று சொல்வதை, பெண்களை மாதவிடாய் காலத்தில் ஆண் உடல்ரீதியாக பெண்ணை அணுகாமல் இருக்க வேண்டும் என்பதாக எடுத்துக் கொள்ளலாம் என்று ஒரு தயக்கத்துடன் சொல்வது போல் தெரிகிறது. மேலும் திருக்குர் ஆனுக்கு மாறாக நடை முறையில் பெண் தீட்டாக விலக்கப்படுகிறாள் என்கிறார். ஆனால் அதற்காக “அசுத்தம்” என்று சொல்ல வேண்டுமா என்பதுதான் கேள்வி, காரணம் இது இன்று உரிமை மீறலாக மாறியுள்ளது என்பதை கவனிக்க வேண்டும். மேலும் இங்கு வெறும் நிகழ்வுகளை மட்டுமே பதிவு செய்துள்ளார்.

* * *
இஸ்லாமியப் பெண்களுக்கெதிரான மற்றொரு உரிமை மீறல் தர்கா செல்ல தடையாகும். இஸ்லாமியர்களுக்கு மதம், மதவழிபாடுகள் மிக முக்கியமான வாழ்வியலாகும். ஆனால் அதுவே பெண்களுக்கு மறுக்கப்படுகிறது என்றால் அவர்கள் எந்த நிலையில் உள்ளனர் என்பது புரிந்து கொள்ள முடியும். இதுகுறித்து ரசூல் அவர்கள் தர்காவிற்கு செல்லுதல் என்பது இஸ்லாமிய பெண்ணின் விடுதலைக்கான கேந்திரமாக அமையும்.

இது மூச்சுவிடுகிற, சுயமாய் சிந்திக்கும் தன்மையை ஏற்படுத்துகிற ஒரு தளமாகவும், வாய்ப்பாகவும் அமையும் என்கிறார். மேலும் இந்தியாவில் இம்முறையை வரலாறு மற்றும் சமூகவியல் நோக்கில் அலசிப்பார்க்க வேண்டும் என்கிறார். இப்படியிருக்கும் சூழலில் இஸ்லாமிய கலாச்சாரம், மத வழிபாடுகளில் அந்நிய மதக்கலப்பு ஏற்பட்டு விட்டது என்றும் அதனை தூய்மை படுத்த வேண்டும் என்றும், தர்கா கலாச்சாரத்திற்கும், ஒவ்வொரு நாட்டின் பண்பாட்டு அடையாளங்களுக்கு எதிராகவும் “இனத்தூய்மை” (எ.கா. தர்பார் - சூடான் நிகழ்வு) என்ற பெயரில் அதை நடைமுறைப்படுத்த வகாபிச கோட்பாடு தாக்கு தலை உருவாக்கியுள்ளனர்.

இது பெண்களுக்கெதிரான ஒரு கோட்பாடாகும். இதற்காக வரலாற்று ஆதாரங்களை தூசி தட்டி எழுப்ப ஆரம்பித்து விட்டனர். இது இஸ்லாமிய பெண்களின் சுதந்திரத்தை மீண்டும் தடை செய்கிறது என்கிறார். (அல்லது பின்னடைவு அடைய செய்யும்). இதிலேயே அவர் திருமண முறைகள், மஹர் போன்றவை பெண்களை ஒரு சொத்துரிமையற்ற, பணம் கொடுத்து வாங்கும் பண்டம் போல ஆக்கப்படுகிறார்கள். இந்த முறையால் பெண்களை பொருளாதார ரீதியில் ஆண்களை சார்ந்தேயிருக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளியுள்ளது. இது குடும்ப அமைப்பில் தந்தை. கணவன், மகன் என்ற நிலைகளில் பெண்கள் மீது ஒடுக்குதல் நிகழ்த்த உதவுகிறது என்கிறார். இது பாதுகாப்பு என்ற பெயரில் ஒரு ஓடுக்குமுறைக்கு வழிவகுத்து விட்டது.

* * *
ரஜ்ம் - அஸ்கர் அலி கூறுவது போல், எந்த ஒரு சட்டத்தையும் அப்படியே கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ளாமல் அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும். அப்படியில்லாமல் கண் மூடித்தனமாக பின்பற்றினால் அது அநீதியாகி விடும் என்கிறார். ரசூல் அவர்களும் கரங்களை துண்டித்தல் (5:38) மற்றும் சாட்டையடி (24:2) இரண்டும் ஜனநாயகத்திற்கு விரோதமான வடிவமாகவே அமைந்துள்ளது அல்லது ஜனநாயகத்தில் மறுக்கப்பட்ட ஒன்றாக அமைந்துள்ளது. இவ்வாறு ஜனநாயகத்திற்கு எதிராக இருப்பதால் இந்தியாவில் இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டத்தை பின்பற்றுமாறு இஸ்லாமியர்களை வலியுறுத்தப்படுகிறது என்கிறார்.

இஸ்லாமிய குற்றவியல் சட்ட நடைமுறைப்படுத்துதல் கி.பி.7ம் நூற்றாண்டுகால பழமைத் தன்மை மிக்க வழிமுறைகளாகவேப்படுகிறது என்கிறார். இது மனித உரிமைக்கு எதிரானதாகும் (கல்லெறிதல், கண்களை எடுத்தல்) மேலும் குர்ஆனில் எது திருட்டு, எது விபச்சாரம் என்று குற்றம் குறித்து தெளிவாக கூறப்படவில்லை. காரணம் இதன் மூலம் அதிகமாக தேவையில்லாமல் தண்டனைக்குள்ளாகிறார்கள் என்கிறார். இவரே சொல்கிறார் பெண்கள் தான் அதிகமாக தண்டனைக்குள்ளாகிறார்கள் என்று. உண்மைதான் எது விபச்சாரம் என்று சரியாக சொல்லப்படாததால், சாட்சியில்லாத சமயங்களில் ஆண்கள் தண்டனைகளிலிருந்து தப்பித்து விடுகிறார்கள். ஆனால் கர்ப்பம் போன்ற இயற்கையான சாட்சியால் பெண்கள் தண்டிக்கப்படுகிறார்கள். அந்த சமயத்தில் எவரும் இது அவளாக விருப்பப்பட்டு செய்தாளா, அல்லது ஆணின் வக்ரபுத்தியால் பாலியல் பலாத்காரத்திற்குட்பட்டாளா என்று விசாரணை செய்வதில்லை.

இதற்கு நைஜீரியாவின் ஹாஜர் எப்ராஜிமிலிருந்து, நம் இம்ரானா வரை சாட்சி. மேலும் அதே 24-ம் அதிகாரத்தில் ஒழுக்கங் கெட்டவர்கள் ஒழுக்கங் கெட்டவர்களைத் தான் திருமணம் செய்ய வேண்டும் என்பதும் பெண்களுக்கெதிரான மிகப்பெரிய ஒடுக்குதலாகும். இதை இவர் இங்கு குறிப்பிடவில்லை என்று வருகிறது. மேலும் இந்த கல்லெறிதல் தண்டனையை புனிதத்தின் பெயரில் சாத்தானின் மீது எறிதல் என்று நியாயப்படுத்துவது மனித உரிமைக்கெதிரானது என்கிறார். இது இஸ்லாமிய பெண் சிந்தனையாளர்களின் கடும் எதிர்ப்புக்குள்ளாகி இருக்கிறது, இந்த எதிர்ப்பு வெகுஜன கருத்தியலாக உருமாற வேண்டியது அவசியம் என்று ரசூல் கூறுகிறார்.

தீவிரப் பெண்ணியம், பெண்ணிய சிந்தனை தமிழ்நாட்டில் 90களிலேயே ஆரம்பமாகிவிட்டது. ஆனால் மற்ற பெண்ணியத்தை போல இஸ்லாமியப் பெண்ணியம் குறித்து அவ்வளவாக பதிவுகளில்லை. எ.கா. தலித் பெண்ணியம் குறித்து குறிப்பிடும்படியான பதிவுகள் உள்ளன (கருக்கு), இஸ்லாமிய பெண்ணியம் குறித்த அப்படியே பதிவுகள் இருந்தாலும் அவை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குட்பட்டதாகவே இருக்கிறது. இதற்கு மதம் மற்றும் பழமைவாத கோட்பாடுகள் காரணமாக இருக்கலாம்.

தீவிரப் பெண்ணியம் குறித்து விளக்குகையில், இஸ்லாமும், இஸ்லாமிய நவீனத்துவ அறிஞர்களும் எவ்வளவு தான் நவீனத்துவம் நோக்கிப் போயிருந்தாலும், அவர்களிடம் பெண்ணியம் குறித்த கருத்தியல் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்தனர் என்று கூறுகிறார். (இப்போதும் அப்படித்தான் இருக்கிறார்கள் என்று கூற ஏன் தயக்கம் ஆசிரியரிடம் என்று தெரியவில்லை) ஆனால் பெண்ணியம் ஆணாதிக்க சிந்தனைக்கெதிரான கேள்விகளை எழுப்புவதும், குடும்பம், சமூக கலாச்சார, பண்பாடு, பொருளாதாரத்தில் சம உரிமைகளை அடைவதே ஆகும். இதை நோக்கி செல்வதுதான் இஸ்லாமியப் பெண்ணியத்தின் முதல் தேவை என்கிறார்.

இதற்காக திருமறையிலுள்ள சில வசனங்களைக் கொண்டு சமத்துவத்தை தொடங்கலாம் என்கிறார். அதே சமயத்தில் தீவிரப் பெண்ணியம் மிக எளிதில் இஸ்லாத்தில் இருக்கிற ஆணாதிக்க சிந்தனைக்கெதிரான கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருக்கின்றது. அதற்கும் எதிர்ப்புகள் வந்து கொண்டேதான் இருக்கிறது என்கிறார். உண்மையில் இஸ்லாமிய பெண்ணின் நிலை குறித்து இஸ்லாமியர்களுக்கு தெரியாது அது இஸ்லாமிய பெண்ணிற்கும், மற்ற சமூக பெண்ணிற்கும் மட்டும் தான் புரியும் / தெரியும்.

* * *

சொத்து பங்கீடு விவாதத்தில் ஒருவிதமான குழப்பமான தயக்கம் தெரிகிறது. இங்கு இந்த சொத்துப் பங்கீட்டு முறையில், பெண்கள் சம்பாதிக்கும் செல்வம் அவர்கட்கு மட்டுமே சொந்தம். அதே சமயம் தந்தை வழி சொத்துரிமை பங்கிடு செய்வதில் தான் 2:1 என்ற பங்கு கேட்பாடு முன் வைக்கப்படுகிறது என்கிறார் ரசூல். இதுதான் / இதில் தான் சொத்துரிமை வேண்டும் என்று பெண்கள் போராடுகிறார்கள். இந்த தந்தை வழி மூலம் தான் அதன் வாரிசுகளுக்கு சொத்துரிமை கிடைக்கும். மேலும் இதில் மட்டு மல்ல மஹர் குறித்த விஷயத்திலும் ரசூல் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்துவதற்கு பதிலாக நடைமுறையிலுள்ள நிகழ்வுகளை மட்டும் பதிவு செய்கிறார்.

மஹர் பெண்களுக்கு கிடைப்பதால், ஆண்களுக்கு சொத்தில் அதிகம் வழங்கப்படுகிறது என்ற கருத்தை வெளியிடுகின்றனர். அதை விட மட்டும் மஹர் ஏன் கொடுக்கப்படுகிறது என்பதற்கு விளக்கம் கொடுக்கும் திருமறை வசனம் (4: 24325) இது கணவன், மனைவி உறவு அல்லது திருமணம் என்ற ஒரு உயர்வான விஷயத்தை சிக்கல் படுத்துகிறது. இதற்கு ஆசிரியர் எந்த விளக்கமும் கொடுக்காதது வருத்தத்திற்குரியதாகும். மேலும் சொத்துப் பங்கீடு குறித்து ஆசிரியர் குறிப்பிடுகையில், இந்த பாகுபாடு சுழலுக்கேற்ப மாறுபடுகிறது என்கிறார். இதன் அடிப்படையில் இமாம் அபூஹனிபாவின் சிந்தனையின் அடிப்படையில் இவரும் ஒரு முடிவைத் தருகிறார்.

அதாவது இந்த 2:1 சொத்துப் பங்கீட்டின் மறைமுகமான கோட்பாடு “பலவீனமானவர்களுக்கு அதிகபங்கு” அதனால் இந்தியா போன்ற சூழலில் பெண்கள் தான் பலவீனமானவர்கள் அதன் அடிப்படையில் அவர்களுக்குத்தான் அதிகம் கொடுக்க வேண்டும் என்று திருக்குர்ஆன் மறைமுகமாக சொல்கிறது என்று ரசூலும் மற்றவர்கள் போல் பெண்களை பலவீனமானவர்கள் என்று தமது கருத்தை வெளிப்படுத்துகிறார்.

* * *

இஸ்லாமியப் பெண்களுக்கு எந்தக் காரியத்திலும் (குடும்பம், சமூக, சமயம்) தலைமைத்துவ தகுதி கிடையாது என்ற கருத்தியல் மிக அதிகமாக பரப்பப்பட்டு வருகின்றது. அதே சமயம், இது போன்ற விஷயங்களை தகர்க்கும் முயற்சியில் இஸ்லாமிய பெண்ணியவாதிகள் ஈடுபட்டு வருகின்றனர் என்றும், இந்த தலைமைப் பண்பு நபிகள் காலத்திலே இருந்துள்ளது என்கிறார். தற்போது அநேக எதிர்ப்புகளை சுமந்து கொண்டு பெண்கள் தலைமைத்துவத்திற்காகப் போராடுகின்றனர். (எ.கா. ஜமாஅத்தில் தொழுகை நடத்து போன்றவை) மேலும் இந்த இஸ்லாமிய பெண்ணியத்தில் வரையறுக்கப்பட்ட மத நீக்கம் செய்யப்படாத எல்லைக்குள் ஜனநாயகமும் சமத்துவ நோக்கமும் தீவிரத் தன்மையோடு வினைபுரிகிறதை உணரலாம் என்கிறார். ஆனால் இப்படிப்பட்ட எல்லைக் குட்பட்டு எப்படி ஜனநாயகமும், சமத்துவமும் பெற முடியும் இது சாத்தியமா?

ரசூல் அவர்கள் இஸ்லாமிய பெண்கள், பெண்ணியம் புறவெளியில் நடக்கும் விஷயத்தை அவ்வளவாக எதிர்ப்பதில்லை என்கிறார். அதற்காக இஸ்லாத்திற்கும் சிறுபான்மை முஸ்லிம் பெண்களுக்கும் எதிராக நிகழ்த்தப்படுகிற வன்கொடுமையை புறவெளியில் முறியடிக்க வேண்டும். அதே சமயம் உள்கட்டுமானத்தில் விடுதலைக்கான சாத்தியப் பாடுகளையும் உரத்துப் பேச வேண்டும் என்கிறார். இதற்காக களத்திலுள்ள ஜனநாயக சக்திகளோடு இணைவதும் உரையாடலை நடத்துவதும் மிக அவசியமாக உள்ளது என்கிறார். இவரும் புறவெளிக்கே அதிக வீரியத்தை காட்டுவதுபோல் தெரிகிறது.

ஒட்டுமொத்தமாக, இஸ்லாமிய மதக்கோட்பாடுகளை, விதிகளை “பெண்ணிய வாசிப்பு” என்ற அடிப்படையில் மறுவாசிப்பு செய்ய முயற்சி செய்துள்ளது மிகவும் பாராட்டுதலுக்குரிய விஷயமாகும். மேலும் இஸ்லாத்தில் பல இடங்களில் மறுவாசிப்பு செய்ய முடியாததையும் சுட்டிக் காட்டியுள்ளார். இருந்தாலும் அவற்றையும் இங்கு நடக்கும் பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளையும் தமது கருத்தாக கூறாமல் இஸ்லாமிய பெண்ணிய சிந்தனையாளர்கள் / எதிர்ப்பாளர்களின் கருத்தாக கூறியதன் மூலம் அவரிடம் ஒருவித தயக்கம் தெரிகிறது. அநேக இடங் களில் தீவிரம் குறைவாக உள்ளது.

காரணம், மதக்கோட்பாடுகளும், பழமைவாதமும் அடர்த்தியாக இருக்கிற சூழ்நிலையின் பின்னணியாக இருக்கலாம். இறுதியாக இந்தப் புத்தகம் இஸ்லாமியப் பெண்கள் மீதான மதம் குறித்த பாகுபாடு, சுரண்டல்கள், புறக்கணிப்பு, அவலம், அவமானம், ஒடுக்குதல் போன்றவற்றை வெளிக்கொணர முயற்சி செய்திருக்கிறது. அந்த முயற்சியில் சாத்தியப்பட்டிருக்கிறது, இதுகுறித்து வாசகர்களை ஆதங்கப்பட வைக்கவும், செயல் பாட்டுத் தளங்களுக்கு அழைத்துச் செல்வதற்கான அடிப்படைக் களத்தினை அறிமுகப்படுத்தி இருக்கிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com