Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
டிசம்பர் 2006
அயல் மகரந்தச் சேர்க்கை

காம்பஸ் கால்கள்
பேரா. அப்துல் காதர்

பாரதி தமிழின் பெண் வடிவம். பாரதிதாசன் ஆண்வடிவம். அவரின் தாசன் சுரதா (சுப்புரத்தின தாசன் என்பதன் சுருக்கம்) தமிழின் அர்த்தநாரி வடிவம். உவமைக்கு உவமை சொன்ன உவமையிலா உவமைக் கவிஞர். தளர்வறியாத் தன்மானக் கவிஞர். அவரின் அடையாளமே மனவுறுதிதான். தன் காலைச் சொரிவதற்கும் தலை குனியாச் சுயமரியாதைப் பாவலர். சுரணை ஏற்படுத்தும் சூடு அவர் பாட்டுக் குளத்தின் மத்தியக் கோடு. அவையடக்கம் பாடுவது அன்றைய புலவர்களின் ஆபரண மரபு. கருடன் பறந்த வானத்தில் ஈயொன்று பறப்பதைப் போல, வெடிக்கும் இடிக்கு முன்னே வெட்டுக்கிளி பெருமூச்சு விட்டதைப் போல எனத் தம்மைத் தாழ்த்தி, தமக்கு முன்னர் பாடிய பெரும்புலவர்களை வாழ்த்திப் பாடுவது பழந்தமிழ்ப் பாவலரின் பரம்பரைக் குணம். பயம் சுரக்கும் இந்தப் பான்மை விடுத்துச் சுயம்சுரக்கும் சொந்த முத்திரை சுரதாவிடம் நயம் சுரக்க வெளிப்படுகிறது. ஆசான் பாரதிதாசனுக்கே அழகிய சான்றிதழ் வழங்கியவர் அவர். பாவேந்தர் பற்றிச் சுரதா

“நிருத்தத்தில் வெற்றி பெற்றான் ஆட்டனத்தி
நிதியளித்து வெற்றி பெற்றான் குமண வள்ளல்
திருத்தத்தில் வெற்றி பெற்றான் ஒட்டக்கூத்தன்
தீர்ப்பளித்து வெற்றி பெற்றான் கரிகாற் சோழன்
வருத்தத்தில் வெற்றி பெற்றார் வடலூர் வள்ளல்
வாளேந்தி வெற்றி பெற்றான் சேர லாதன்
விருத்தத்தில் வெற்றி பெற்றார் கம்பர் அந்த
வெற்றியினை இவர்பெற்றார் என்னைப் போல’

எனக் குறிப்பிடுகின்றார். மாணாக்கர் சொல்கிறார்: விருத்தம் பாடுவதில் கம்பர் பெற்ற வெற்றியை என் ஆசிரியர் பாரதிதாசன் பெற்றார்; அதுவும் யாரைப் போல ‘என்னைப் போல’. சுரதா பாடிய இந்த விருத்தத்தின் கடைசி இரண்டு சீர் புலமை அடிமைத் ‘தளை’ விடுத்தது. அந்த உறுதிப்பாடு கவித்துவ கம்பீரம்.

மேற்கத்திய நாட்டு கவிமரபு பெண்மையை “WEAKER SEX” என்று விளிப்பதுதான். அதனை உடைத்து, பெண்மை திண்மை மிக்கது. அதனைவிட வலிமையுள்ளது உலகில் வேறெதும் இல்லை என்பதைப் புரட்சியாளர் வள்ளுவர்

“பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மை உண்டாகப் பெறின்”

என்கிறார். குட்டு வைக்கும் காற்றில் குலைந்து விடும் குமிழியல்ல பெண். புயலை உள்வாங்கிப் பூபாளமாய் வெளிப்படுத்தும் புல்லாங் குழல்.

‘மயூரி’ என்றொரு திரைப்படம். தன் பாதசதங்கைக்குப் பார்ப்போர் இதயங்களையே பரலாக்கி விடும் பரதக் கலைவாணி சுதாசந்திரன். அப்படத்தின் கதாநாயகி அவர்தான். ‘தொகை’ மயில்கள். குத்தாட்டம் போடும் திரையில் உள்ள படியே ஒரு தோகைமயில். கைவழி நயனம் செல்ல, கண்வழி மனமும் செல்ல, மெய்வழி பார்ப் போர் வழிகள் தொடர ஆடுவதால் அவர் மயில்தான். மெல்லத் திறந்து பார்க்கும் சதங்கை விழிகளில் கண்ணீர்துளிக்க ஆடுகிறார். காரணம் அவரின் ஒரு கால் முழுமையாகவும், மற்றகால் விபத்தில் வெட்டப்பட்ட பாதிக்கால் என்பதால் பாதியாகவும் இருப்பதே. வேகக் காற்றைப் போல் விசையாகச் சுற்றுகிறார்; சுழல்கிறார். வெட்டுண்டு, மரக்காலால் ஒட்டுண்டு ஆடுகிறார் என்பது கொஞ்சமும் தெரியாமல் ஆடுகிறார். என்ன நெஞ்சுறுதி! மரக்காலால் அட்சதை அரிசியை அளந்து கொண்டிருக்கிறார்.

மாணவர்களோடு படம் பார்த்துக் கொண்டிருந்தேன். மயூரி சுதாசந்திரன் விரக நாட்டியங்கள் மத்தியில் விரத நாட்டியமாய்ப் பரத நாட்டியத்தை ஆடுவது பற்றிக் கேட்டேன். ஒரு மாணவர் பம்பரம் போல் சுழன்றாடுகிறார் என்றார். ஒற்றைக் காலால் ஆடுவதால்அப்படிச் சொல்கிறாயே என்றேன். மற்றொரு மாணவர் கணிதம் பயில் பவர். அவர் சொன்னார் ஆடும் மயூரியின் கால்கள் ஜாமென்ட்ரி பாக்ஸிலிருக்கும் காம்பஸைப் போல என்றார். நான் துள்ளிக் குதித்தேன். காம்பஸின் ஒருகால் முழுமையாக இருக்கும். மற்றொரு கால் பாதிதான் இருக்கும். யோசிக்காமல் சட்டென வெளிப்பட்டாலும், அந்த உவமையின் பொருத்தம் உணர்ந்து சிலிர்த்தேன்.

மற்றொரு மாணவர் “மயூரியின் காம்பஸ் போல என்பது மிகவும் பொருத்தம். ஏன் என்று தெரியுமா? பாதிக்காலில் மரக்கட்டையைக் காலாக இணைத்திருக்கிறார்கள்; காம்பஸில், மரத்தாலான பென்சில் செருகியிருப்பதைப் போல” என்றவுடன் புளகப்பூரிப்பில் மாணவர்க்குப் பரிசொன்றை அளித்தேன். மயூரின் ஒருகாலை பூமி தாங்கியது. மறுகால் பூமியில் படாது. பூமி இரசிப்பின் லயிப்பில் உயர்ந்து, உயர்ந்து அந்த அரைக் காலையும் தாங்கியதோ என என் உள்ளம் இன்னும் வியக்கிறது. காம்பஸின் ஒருகால் உறுதியாக இருந்தால்தான், அதன் பணி சிறக்கும். மறுகாலாம் குறைக்கால் கூட இணைக் காலின் உறுதியால் தான் சரிவரப் பணியாற்ற முடியும் என்று தோன்றுகிறது.

மறுநாள் காலை JOHN DONNE கவிதைகளைப் பார்த்துக் கொண்டிருந்த போது, இதே காம்பஸை வைத்து, அவர்பாடிய பாடல் ஒன்றின் கருத்து என்னைக் கவர்ந்தது. கணவனும் மனைவியும் காம்பஸின் இருகால்களைப் போல என்ற JOHN DONNE

“நீ
என்னை விட்டு
விலகுகிறாய்
காம்பஸின்
ஒரு காலைப் போல
மீண்டும் சேர்வதற்காகத்தான்
ஒரு
கால்
உறுதியாக நின்றால்தான்
மறுகாலால்
வட்டத்தை ஒழுங்காக
வரைய முடியும்”

என்கிறார். அழகான படிமம். அதுவே இல்வாழ்வின் இயல்பான குறியீடாக ஆளப்பட்டுள்ளது.

உணர்வுப் பூர்வமாக இணைகிறவர், உணர்வின் எழுச்சி அடங்கியவுடன் விலகி விடுவார்கள். நிலவாகத் தெரிந்த முகம் அப்பளமாக நொறுங்கி விடும். இன்பத்துப்பால் சுரக்கும் திருக்குறளின் இரண்டு வரிகளைப் போலத் தென்பட்ட இதழ்கள் எச்சில் படிக்கமாக எடுபட்டு விடும். காதலர்கள் அறிவுப் பூர்வமாக இணைய வேண்டும். அதனால் தான் சங்க காலத்தில் காதலர்களைத் தலைவன், தலைவி என்றார்கள். தலை மூளையுள்ள இடமல்லவா. காம்பஸ் கூடத்தலையாய் இணைந்துள்ளது. அதன் ஒரு கால் பிரிந்தாலும் உறுதியாக நிற்கும் அந்த ஒற்றைக் காலைச் சுற்றித்தான் வட்டம் போட்டுக் கொண்டேயிருக்கும். பிரிவு கூடக் கூட அன்பு வட்டம் சுருங்காது பெரிதாகிக் கொண்டே தானிருக்கும். அதனால்தான் தாகூர்

“It is not Seperation
but
elongation of love”

(காதலில் பிரிவென்பது பிரிவல்ல; அன்பின் விரிவு)

என்கிறார். அருகில் இருக்கையில் நாம் விரும்பும் அந்த ஒரு முகம் தான் தென்படும். ஆனால் பிரிவில் எதனைப் பார்த்தாலும் அந்த முகம் தான் காண்பவையெல்லாம் அவையே போறல்.

காம்பஸின் ஒரு கால் உயரமாக இருக்கும். மறுமுனை உயரம் குறைந்திருக்கும். நுட்பமாகப் பார்த்தால் உயர்ந்த கால், தன் பணிவால் தாழ்ந்திருக்கும். மற்றொருகால் குறைக் கால் அல்ல. அது பணிக்காக உயர்ந் திருக்கும் (வட்டம் போட). இரண்டும் சமமான கால்களைப் பெற்றதை ஜாமெண்ட்ரி பாக்ஸில் டிவைடர் (Divider) என்பார்கள். ஆனால் ஜான்டன் பிரிக்கும் டிவைடரைக் குறியீடாகக் கொள்ளாமல், இணைந்தே இருக்கும் காம்பஸைக் காதலர்களின் குறியீடாக்கியது சாலப் பொருத்தம். சமமாய் இருக்கும் வாழ்வு சுகமாய் இராது. தண்டவாளங்கள் இணையாது. குறுக்கும், நெடுக்குமாய்ச் சென்றாலும் கோலக் கோடுகள் இணையும். புள்ளிகள் இணையும்.

காம்பஸின் முழுமையான கால் கூர்மையானது. அது பெண்ணைப் போல, மறுமுனை ஆணைப் போலக் கூர்மையற்றதுதான். உலக இயக்கத் தேவைக்காகத் தான் இந்த வேறுபாடு. பெண் உறுதியாக இருந்தால்தான் ஆணின் பணி முழுமையாக முடியும். காம்பஸின் ஒரு கால் உறுதியில் தான் மற்ற காலின் பணி நிறைவாக அமையும். கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் பத்திரமாகக் கரைதிரும்புவது, கரையில் இருக்கும் மீனவப் பெண்ணின் ஒழுக்க உறுதியில்தான் என்பது இன்றுவரை அவர்களிடம் நம்பிக்கையாக விளங்குகிறது. வேட்டைக்குச் செல்லும் முல்லை நிலத்து ஆயர்களின் அம்பு சரியாக இலக்கினை அடைவதற்குக் காரணம், அவர்களின் பெண்கள் நிறைவுறுதியோடு இருப்பதுதான் என்று கலித் தொகையின் முல்லைக்கலி

“தாம்பிழையார் தாம்தொடுத்த கோல்”

எனக் குறிப்பிடுகிறது.

“புகழ்புரிந்த இல்லினோர்க்கு இல்லை
இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை”

என்று வள்ளுவம் பேசுவதும் எண்ணத் தக்கது. ஆணின் பெருமிதம் பெண்ணைச் சார்ந்தே இருக்கிறது. ‘பத்துப் பிள்ளை பெத்தவள், கணவன் செத்தால், ஒத்தையாய் நின்று பத்தையும் தாங்குவாள்; பத்தும் சேர்ந்து ஒத்தைப் பெத்ததாயைத் தாங்குவதில்லை’ என நாட்டுப்புறத்தின் நாவுகளில் தொட்டில் கட்டிய சொலவடை உண்டு. இன்னொரு பார்வையில் காம்பஸின் குறைக்கால், தன்னோடு, இன்னொன்றை இணைத்துத்தான் பணியாற்ற முடியும் என்பதனையும் சுட்டி, தன் இணை இழந்தால் மற்றொன்றை இணைக்கும் ஆணுலகைப் படம் பிடித்துக் காட்டுகிறது. ஆனால் பெண் கணவனை இழக்கிறபோது குடும்பத்தின் எல்லாச் சுமைகளையும் தான் தாங்குவாளே தவிர தனக்கென ஓர் இணையைத் தேடுவது அபூர்வம். மனைவி இறந்தால் ஆண் புதுமாப்பிள்ளை. ஆனால் பெண் புதுப்பெண் ஆவதில்லை. இது உள்ளம் சுடும் உண்மை.

JOHN DONNE-ன் காம்பஸைச் சுற்றிக் கொண்டேயிருந்தால், கருத்துக்கள் புதுப்புதிதாய்ப் பற்றிக் கொண்டேயிருக்கின்றன. நீங்கள் சுற்றினால் இன்னும் கிடைக்கலாம். கவிஞன் பேனா காம்பஸின் முழுக்கால். இரசிகன் அடுத்தகால். காதலி காதலி போலத்தான்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com