Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஆகஸ்ட் 2006

உயிர்ச்சுனை
சு.வேணுகோபால்

நாயக்கர் தோப்பிற்குப் பின் ஓடும் சாலையில் ஹாரன் சப்தம் வந்தது. திருகாணி வளையத்தில் குழைத்துக் கொண்டிருந்த ஓர் கயிற்றைப் போட்டுவிட்டு எழுந்து மேற்கால் குனிந்து பார்த்தார் கண்ணப்பர். கண்ணாடிப் பச்சான் வேலை தூக்குக்கைநுனி உயரத்திற்கும் மேல் வளர்ந்திருந்ததால் ஒன்றும் தெரியவில்லை. இற்று அறுந்து தொங்கும் கட்டில் கயிற்றைப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்த நிதின், தாத்தா பார்க்கும் தினசரியைக் குத்துக்காலிட்டு கண்களை அகலத்திறந்து பார்த்தான். குத்திட்ட வாக்கில் தாத்தா காலடியில் நகர்ந்து பார்த்தான். ஒன்றும் தெரியவில்லை. கண்ணாடிப் பாச்சானின் பச்சைத் தண்டுகள் அடர்ந்து மறைத்தன. தாத்தா போல முதுகில் புறங்கையைப் போட்டு முன் குனிந்து எழுந்து பார்த்தான். கருத்த நிழல் நகர்வது போல தெரிந்தது.

“தாத்தா வண்டி வருது தாத்தா இந்தா இங்க பாரு”

“எங்கடா”

“அந்தா ஆ”

கோக்க கோல வண்டி பாடி தெரிந்தது.

“அது கம்பேனி வண்டி. இன்னும் போர் லாரி வரல”

“எப்ப வரும் தாத்தா”

“மதியத்துக்குள்ள வந்திடும்’

“லாரியில எப்படித் தாத்தா போர் வரும்”

“போர் லாரிய நீ பாத்ததில்லையா”

“ஊஹும்”

“அன்னக்கி சின்னத் தாத்தா தோட்டத்தில வந்திச்சில்ல”

“நீதான் என்னைய கூட்டிட்டு போகலையே”

நிதின் குத்திட்டவாக்கில் கொழுவும் தாத்தாவின் கைகளைப் பார்த்தபடி சொன்னான்.

“தாத்தா இதில மணிய கட்டிவச்சாத்தான் பக்கத்துத் தோட்டத்துக்குப் போகாது”

“ஆமாடா கண்ணு”

“இக்கூம். ஏ! மணி இன்னு கண்டகண்ட தோட்டத்துக்கு ஓடுவியா ம்ம்?”

விரலால் ஜாக்கிரதைக் காட்டி ஓங்கினான். நாய் தரையோடு கழுத்துத் தோய தலைநீட்டி வாலாட்டியது.

“டேய் பெரிய மனுசா! இன்னும் பாலைக் குடிக்காம... இங்க வந்து கதை பாடிக் கிட்டிருக்க. எந்திரி” மீனாசித்தி மிரட்டினாள்.

“வேணாம்”

“அடிச் செறுப்பால. பாலக் குடிச்சிட்டு வந்து தாத்தாவோட கொழுவு”

“வேணாம்”

“குச்சிய எடு”

“தாத்தா இவ..”

“அடி. மொளச்சு மூணு எல வைக்கல, இவளாம்...”

“தாத்தா’

“நீ பால குடிச்சாத்தான் நான் நல்லா கொழுவுவேனாம்”

“நான் குடிச்சா எப்பிடித் தாத்தா நீ நல்ல கொழுவ முடியும்?”

“வந்து நீ என் தோளுள எடக்கைய வச்சுக்கிட்டு குடிப்பியாம். அந்த கைவழியா எனக்குப் போகுமாம்”

“தோளுள வேணாம் தாத்தா. உன் வாயில வெரல வச்சிக்கிடுறேன்”

“சரி கண்ணு அறிவுன்னா அறிவு”

வயது நான்காறது. இன்னும் ரப்பர் பாட்டில்தான் ஐயாவுக்கு. இந்த சனி, ஞாயிறு என்றாலே ரோதனைதான். ஏன் தான் லீவு விடுகிறார்களோ என்பாள் மீனா. சின்னத் தாத்தா தோட்டத்தில் போர் போடுவதைத் தூக்கிக் கொண்டு போய் காட்டுவதாகச் சொன்ன கண்ணப்பர் போக்குக் காட்டிவிட்டு எப்படியோ தப்பித்துப் போய்விட்டார். ஸ்கூல் விட்டு வந்த போது கண்டு பிடித்து விட்டான். “நூத்தம்பதடியில் சுமாராத் தண்ணி அதுக்கடியில பாறையாய்ப் போச்சு” மனைவியிடம் ரகசியத்தை மறந்து சொன்னதைக் கேட்டதும் நிதின் கடகடவென உருண்டு கத்த ஆரம்பித்தான். தன்னை ஏமாற்றியதைச் சொல்லி வீம்பு பிடித்தான். சமாதானம் செய்வதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.

“அப்பா எந்திரிங்க” மீனா குடத்தோடு வந்து நின்றாள்.

தாத்தாவின் வாயிலிருந்து விரலை எடுத்த நிதின் “நானு” என்று கையை உதறினான். பாட்டிலின் அடியில் இன்னும் கால்பங்கு இருந்தது பால்.

“மொத்த முழுசா குடி”

“தூக்கு”

“ஒன்னத் தூக்கிக்கிட்டு எப்டிர்றா கொடத்த வச்சிக்கிட்டு வர்றது”

“தூக்கு”

“ஐயோ சனியனே! இன்னக்கிக் கூட இவன வச்சிருக்க மாட்டயா?”

மீனா வசலில் நின்று பிருந்தாவிற்கு சத்தம் கொடுத்தாள்.

“ஏஞ் செல்லம் வாடா. தாத்தா தண்ணி எடுத்துட்டு வரட்டும்”

பிருந்தா தலையைத் தூக்கிப் பார்க்காமல் டெஸ்ட் பேப்பரைத் திருத்திக் கொண்டே ஒப்புக்குச் சொன்னாள்.
குறைந்த சப்தத்தில் தொலைக்காட்சி ஓடிக் கொண்டிருந்தது.

“தாத்தா தூக்கு”

ஜங்கு ஜங்குவென குதித்து ஆர்ப்பாட்டம் செய்தான்.

“ஐயோ, அக்கா வந்து தூக்கு. வையாபுரி அண்ணன் தோட்டத்துத் தொட்டிக்குப் போகணும்.

“செல்லம்... செல்லகுட்டி. அம்மா சொல்றேனில்ல ஓடிவா. டேய் செல்லம். டி.வி.யில பாரு ரோபோ பந்தாடுது. ஓடிவா”

பேப்பரைப் புரட்டியபடி டிக் அடித்தாள். வாராவாரம் தாள் திருத்துவதே இவளுக்கு மாளாது. மெட்ரிக்குலேசன் பள்ளியிலேயே ‘நல்ல டீச்சர்’ என்ற பெயர் இவளுக்கு.

நிதின் பாட்டிலை மாட்டுக் கொட்டிலில் எறிந்துவிட்டு வண்டி தடத்தில் ஓட்டம் பிடித்தான்.

“ஐயோ இவ பெத்துப் போட்டிட்டு எங்கள இம்ச வாங்குறா”

“ஏய் வாய் நீளுது” - பிருந்தா

“அங்கப்பாரு கருவேப்பில மரத்துப் பக்கம் போயிட்டான்”

“தூக்கிட்டுப் போயிட்டு வாடி”

“டேய் இங்க வா. அதான் டவுனுக்குப் போயி துப்பாக்கி வாங்கிட்டு வருவேன்”

“ஊஹும். உங்கூடத்தான் வருவேன்”

கருவேப்பிலை கொப்பைப் பிடித்தபடி சிணுங்கினான். தாத்தா அவனைத் தூக்கிவர நகர்ந்தார். கொட்டத்தில் படுத்திருந்த செவலை நாய் எழுந்து முறுக்கு விட்டு கண்ணப்பர் பின் நடந்தது.

மீனா கல்லில் ஏறி சிமிண்ட் தொட்டி விளிம்பில் அமர்ந்தாள். தொட்டிக்குள் பாசம் காய்ந்து பச்சை அப்பளங்களாக வெடித்துக் கிடந்தது. ஒச்சமான இரு செங்கல் கற்களின் இடையில் சிலந்திக் கூடு. சிலந்தியைக் காணவில்லை. தொட்டியின் அக்கினி மூலையில் மொண்டு விலக்குமாறு கிடந்தது. பாலித்தின் பைகள் லேசான காற்றுக்கு ஒடுங்கிக் கொண்டிருந்தன. ஆட்டுப் புழுக்கை கோழி எச்சம், கோல்கேட் பெட்டி... அது இப்பொழுது ஒரு குப்பைத் தொட்டி.

கிணற்றுக்கு மேல் தலையை நீட்டிக் கொண்டிருக்கும் இரும்புக் குழாயைத் தொட்டாள் மீனா. குழாய் சுட்டது. எவ்வளவு தண்ணீரை வாரி இரைத்திருக்கும் இந்த குழாய்? இந்தத் தொட்டியில் தான் அப்பா நீச்சல் பழக்கினார். திமுதிமுவென தண்ணீர் தொட்டியில் கொட்டும்போது வெண்நுரைகள் பொங்கியபடி இருக்கும். காலை ஊன்றி நிற்க முடியாது. பாசத்தின் வழவழப்பு பாதங்களை வழுக்கும்.

ஓராண்டுக்கு முன் ஒரு மாத இடைவெளியில் டக்டக்கென்று தண்ணீர் கீழிறிங்கி வறண்டு விட்டது. திரிவேணி ஓடைக்கு வடக்கால் கோக்க கோலா கம்பெனி வந்த பின்தான் சுத்து வட்டார கிணறுகள் எல்லாம் காய்ந்து போய்விட்டன. ஒராண்டுக்கு முன்பு சம்சாரிகளைத் திரட்டி கம்யூனிஸ்டுகள் கோசம் போட்டார்கள். மூன்று முறையும் அப்பா போயிருந்தார். வேறொன்றும் நடக்கவில்லை. கிணற்றின் பின் உள்ள ஏழு தென்னை மரங்களில் இரண்டு மொட்டையாக நிற்கின்றன. நடு மரத்து குருத்து முறிந்து தொங்கிக் கொண்டிருக்கிறது. வரப்போரம் இருக்கும் தென்னை மரகுருத்து வதங்கி லேசாகப் சாயத் தொடங்கிவிட்டது. மரங்கள் ஒரு நொடியில் காணாமல் போனால் கூட பரவாயில்லை. கண்ணெதிரே சிறுகச் சிறுக சாவதற்காகத் துடிப்பதை தினம் தினம் பார்த்துத் தொலைவது தான் வேதனை. இதென்ன ஜென்ம பாவமோ?

விவசாயம் கிடக்கட்டும். புழக்கத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் இல்லாமல் அலைய வைத்து விட்டது காலம். எவ்வளவு பெரிய சம்சாரி வாழ்க்கையை வாழ்ந்து, குடிக்க வேறொரு சம்சாரி தோட்டத்திற்கும் குடத்தைத் தூக்கி அலையவிட்டதே இந்த கூகானி அம்மன் தெய்வம்! ‘கூகானி உனக்குக் கண் இல்லையா’ உதடுகள் நெளிந்தன. வார்த்தைகள் வரவில்லை. சொந்தக் கிணறு இப்படி வறண்டு வரப்பு வரப்பாக நடக்க அவமானமாக இருக்கிறது. தண்ணீருக்காக இப்படித் தொன்னாந்த வெக்கமாகவும் இருக்கிறது. பல்லிளித்து இரண்டு குடம் தண்ணீரைத் தூக்குவதற்குள் எத்தனை முறை சாவது? உயிரைத் தின்னும் அவமானம். கிராமத்தில் குடியேறினால் குடிநீருக்காவது அலைய வேண்டியிருக்காது. அப்பா சொன்னால் கேட்டால்தானே தினமுமா கிராமத்தில் சண்டை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்?

“ஏய் மீனா தொட்டியில ஒக்காந்திட்டு என்னத்த வெறிச்சுப் பாக்குற. கொடத்தத் தூக்கிட்டு வா”
அவள் தொட்டியை விட்டு இறங்கியதும் நிதின் தூக்கச் சொல்லி மறித்தான்.

“அக்கா”

பிருந்தாவின் கண்கள் தாளை உற்று நோக்கிக் கொண்டே

“ஒரு நாள் தாண்டி. போர்வெல் வண்டி இன்னிக்கி வந்திடுமில்ல. ரொம்பத்தான் அலுத்துக்கிர்ற”

“நீதான் அலட்டிக்கிர்ற. ஒலகத்தில யாரும் படிக்கல பாரு? வேலை பாக்கல பாரு? நீ ரெண்டு காசு கொடுத்தா உனக்கு எல்லாரும் அடிமையா வேலை பாக்கணுமுன்னு நெனப்பு”

“அம்மா அவ வாய மூடச் சொல்லு மரியாதை கெட்டுப் போகும். ஆமா!”

“ஐயோ மீனா வாய வச்சுக்கிட்டுப போ” தென்னங்கீற்றில் ஈர்க்குச்சி உருவி எடுத்துக் கொண்டிருந்த அம்மா விரட்டினாள். இந்த போர்போடுவதற்கு கண்ணப்பர் பதினைந்து நாட்காளாக கெஞ்சி அவள் சேமிப்பிலிருந்து பணம் வாங்குவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.

கைக்கு இரண்டாக நான்கு பிளாஸ்டிக் குடங்களை எடுத்து விடைத்துக் கொண்டு கிளம்பினாள் மீனா.
இருபதாயிரம் கொடுக்க என்ன ஆட்டம் ஆடினாள். தண்ணீர் விழுந்து விட்டால் ஒரு வெள்ளாமையில் கொடுக்க மாட்டாரா அப்பா. மாமாவைக் கேக்கணும்; மாமியைக் கேக்கணும்; ஆட்டுக் குட்டியைக் கேக்கணும்... இவளுக்கு எங்கிருந்து வந்தது முப்பது பவுன் நகை? இந்த நிலத்தில விளைந்த மஞ்சள்தானே! ஒரு வெள்ளாமைக்குக் கைகொடுக்க என்ன முணங்கு முணங்குகிறாள்? பெருவிரலில் சிக்கிய சீலை நுனியை எடுத்து விட்டுக் கொண்டு நடந்தாள்.

தாத்தாவின் நரைத்த முடியைப் பிடித்துக் கொண்டு இடத்தோளில் அமர்ந்தபடி பார்த்தான் நிதின் குட்டி. இடக்கால் மார்பிலும் வலக்கால் முதுகிலும் உரசின.

“சின்ன பாப்பா? எறங்கி நடக்க மாட்டியோ”

குடத்தை தூக்கி தொடையில் வலிக்காதபடி அடித்தாள்.

“தாத்தா”

“சும்மாரு மீனா”

“பண்ணி”

“அடிய்ய்...”

“அட அழ வைக்காத”

குறுக்குச் சாலையில் ட்ராக்டர் யாருக்கோ உழுகப் போய்க் கொண்டிருந்தது. செவலை இரண்டு பேரையும் தாண்டி முன்னுக்கு ஓடியது. “ஏய் மணி மெதுவா போ. தாத்தாவால வேகமா நடக்க முடியாதில்ல. என்னத் தாத்தா”

“ஆமாட கண்ணு”

“ஆமா கல்லு மாதிரி ஏறி ஒக்காந்துக்க. தாத்தா வேகமா நடக்கலாம்?” தொடையை லேசாக கிள்ள கை நீட்டினாள்.

“தாத்தா...”

“சும்மாரு மீனா”

மேலவலசு நாயக்கர் தோட்டத்து வரப்பில் ஏறியதும் ட்ரான்ஸ் பார்ம் தெரிந்தது. இந்த வரப்பு நேராக ட்ரான்ஸ்பார்மைத் தொட்டு தீ திரிவேணி ஓடையில் கொண்டு போய் இறக்கும். முப்பத்தேழு கிணறுகளுக்கு இந்த ட்ரான்ஸ்பாமிலிருந்து தான் கரண்ட் போகிறது. நிதினை வலத்தோளுக்கு மாற்றினார். வெயில் உறைக்கத் தொடங்கியது. மூன்று நான்கு வருடங்களாக உழாமல் காடுதட்டிப்போன நிலங்கள் இருபுறமும் காய்ந்து கொண்டிருந்தன. நாயக்கர் தோட்டத்தில் போஸ்ட் மரம் நிற்கிறது. கரண்டு பெட்டி இல்லை. எம்.ஜி.ஆர் காலத்தில் கரண்ட் துண்டிக்கப்பட்ட மின்கிணறு பாழடைந்து விட்டது. கிணற்றுக்குக் காவலாக வெறும் போஸ்ட் மரம் மட்டும் இப்போது நிற்கிறது.

ட்ரான்ஸ்பார்மிலிருந்து கிளைத்துச் செல்லும் வயர்களில் உயிர் துடிக்கும் மின்சாரத்தின் ஓசை கேட்டது. கிங்ங்ங் ‘இந்த கரண்ட் வராமல் இருந்திருந்தால் பூமி இப்படிக் காய்ந்திருக்காது. பூமிக்குள்ளும் ஈரப்பசை போயிருக்காது. பூமிக்கடியில் ஒரு சொட்டு தண்ணீரில்லாமல் உறிஞ்சி குடித்துவிட்டுப் போகப் போகிறது இந்த கரண்ட்’ என்றொரு யோசனைத் தோன்றியது கண்ணப்பருக்கு. நாயக்கர் ஒரு அவலாரி மனுசன். மழை பெய்த ஈரம் கொதகொதவென புழிந்தால் கூட மோட்டரை எடுத்துவிட்டுத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருப்பார். கரண்ட் வந்த பின் கிணற்று நீரை அள்ளி இரைத்துத் தானா பதவலாக்காத வர்கள் யார்? ஏழாண்டுகளுக்கு முன்வரை என்ன தாளம் போட்டார்கள். டூ பீசில் கண்டன்சரைப் போட்டு கிணறுகளை ஒரு ஆட்டு ஆட்டி எடுத்தார்கள். இப்போது? ஆவிதான் வருகிறது. கூகாளியம்மன் கோயிலுக்கு மேற்கால் பயங்கரமான வனாந்தரம் இருந்தது. ஒத்தையில் யாரும் புகுந்து திரும்ப முடியாது. திகை தப்பிப் போகும். நல்லம நாயுடு, ஜின்னிங் பேக்டரியை முதன் முதல் காமராஜர் காலத்தில் கொண்டு வந்தார். அப்புறம்? வனாந்தரம் பின்னகர்ந்து பின்னகர்ந்து குறவன் கரடை தொட்டது. எங்கு பார்த்தாலும் ஜின்னிங் பேக்டரி. மேலே மொட்டையடித்து முடியவும் இப்போது கீழே மொட்டையடிக்க மேற்கால் கோக்க கோலா கம்பெனி நங்கூரமிட்டிருக்கிறது.

மீனா வரப்பைவிட்டு இறங்கி நடந்தாள். தரை கிண்ணென்று இறுகிக் கிடந்தது. “அப்பா மூணு வருசம் சும்மாதான கெடக்கு. நாமக்கூட வாரத்துக்குக் கேட்டு உழுது போடலாமில்லப்பா”

“உள்ளூரில விவசாயம் பண்ணி அள்ளி கட்டியாச்சு இது வேறயா? உழுது போட்ட காசுக்கு வராது சோளம்”

“நெலம் இப்பிடியே போட்டா கெட்டுப் போகும்பா. வெள்ளச்சாமி கவுண்டர் நெலத்தக்கூட எட்டிப் பார்க்கிறதில்லை”

“அந்தாளு டவுனுக்குப் போயி நாலு வருசமாச்சு. மகன் இரும்புக் கடையில காத்தாடி போட்டு மனுசன் காலாட்டிக்கிட்டிருக்காரு”

நிதின், தாத்தாவின் தலையில் முகம் வைத்தான்.

“ஏய் நிதினு தூங்காத. இதுக்குத்தான் ஒன்ன தூக்கிட்டு வர்றதில்ல. நழுவுனா என்னாகும்”.

“தூங்கல சித்தி. சும்மா மூஞ்சிய வச்சேன்”

“வெரிகுட் தூங்கக்கூடாது”

வெயில் முகத்தில் உறைக்கத் தொடங்கியது. நிலச்சூடு ஏறுபொழுதிலேயே கிளம்பிவிட்டது. ஏகமாக காய்ந்து கிடக்கும் நிலம். தூரத்தில் எருமை மாட்டை யாரோ வெயிலில் ஓட்டிக் கொண்டு போகிறார். திரிவேணி ஒடை பயங்கர பள்ளத்தில் கிடந்தது. மணலே கிடையாது. வெள்ளைச் சட்டுப்பாறைதான் தெரிந்தது. அகன்று போகும் கிணறுபோல ஓடை. ஏழெட்டு வயதில் பிருந்தாவும் மீனாவும் ஓடையில் புதுவெள்ளம் போனால் துணிகளை அலச வந்ததுண்டு. ஓடையில் பத்துநாள் வெள்ளம் போனால் பதினோராவது நாள் கிணற்றில் கெத்துக்கெத்தென நீர் தளும்பும். இப்போது ஐந்து நாள் வெள்ளம் போனால் கூட கிணற்றுச் சுவரிலிருந்து ஒரு சொட்டு சொட்டுவதில்லை. டவுனுக்கு லாரிலாரியாக மணலை அள்ளிக் கொண்டு இங்கிருந்துதான் போனார்கள்.
இப்போது ஓடை இருபதடி பள்ளத்தில் கிடக்கிறது. ஊழிக்குச்சியைப் பிடித்து ஏசலான இறக்கத்தில் இறங்கினார். கண்ணப்பர் நாய் இறைக்கத் தொடங்கியது. நாக்கு நுனியில் எச்சிலின் மினுமினுப்பு தெரிந்தது.

“பயமா இருக்கு தாத்தா”

“ஓடையில் என்ன பயம்?”

“ம்ம் மேல போகலாம் தாத்தா”

“அந்தா கரயேறுனா வையாபுரி தோட்டம்”

பாதாள குகைபோல நிலமட்டத்திற்குக் கீழே ஓடை வளைந்து போகிறது. குகை வானத்தைப் பார்த்து மல்லாந்து படுத்திருப்பது போல் கிடக்கிறது. மணலே இல்லை. வெள்ளைச் சட்டுப்பாறைச் சூடு பாதங்களைப் பொசுக்கியது. மீண்டும் இருபதடி உயரம் மணல் குபுக்கென ஓடை முழுக்க நிரவி நிற்கும் கற்பனையை கண்ணிற்குள் கண்ணப்பரால் கொண்டு வர முடியவில்லை. வறண்ட பாறைப் பாதாள நேர்முகம் தான் கண்களில் மிதக்கிறது. மழை விழுந்தால் எப்படி நீர் சுவரும்? தண்ணீர் சரட்டென ஓடிவிடுகிறது.

* * * * *

மீனா குறுக்குச் சாலையில் ஏறியதும் திரும்பிப் பார்த்தாள். அப்பா நிதினை மார்பில் அணைத்தபடி வலக்கையில் குடத்தைத் தூக்கி வருவது தெரிந்தது. வெயிலில் கண்கள் சிவந்துவிட்டன. உடம்பிலிருந்து வேர்வை பெருக்கெடுத்து வழிந்தபடி இருந்தது. நிதின் தூங்கிவிட்டான்.

“அப்பா போர் லாரி வந்திடுச்சு”

கண்களைத் தூக்கிப் பார்த்தார். கிணற்றடியில் வண்டி நிற்பது தெரிந்தது. சாலையில் வைத்தக் குடத்தை உடம்பு அலுங்காமல் குனிந்து எடுத்தாள். தலை, இடுப்பு, கை மூன்றிடத்திலும் குடம். மீனாவின் சட்டை உடம்போடு ஒட்டிக் கொண்டது.

“அப்பா டீச்சரம்மாப் பாரு”

பிருந்தா வாரியில் நின்று கயிற்றை இழுப்பது தெரிந்தது. பெரிய மகள் ராடுகளை இறக்கும் போர்வெல்காரர்களுக்கு உதவிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் சிரிப்புக் கலை! முகமெங்கும் பரவியது. “மீனா ஏங்கக்கா ஆம்பளையாட்டமா சேலைய சுருட்டி இடுப்புல சொருகிக்கிட்டு கயித்தப் பிடிக்கிறத பாரு. அடேயப்பா நிக்கிற சைசப்பாத்தா லாரியவே உள்ள எறக்கிடுவாபோல”

“அந்த சிடுமூஞ்சிய நீதான் மெச்சிக்கப்பா”.

உடல் அலுங்காமல் முக்குடத்தை அணைத்து நகர்ந்தபடி மீனா உள்ளூர மகிழ்ந்தாள்.

“டேய் ராஜா. போர்லாரி வந்திடுச்சு எந்திரி”

“நிதினு”

“ஏலேய் நிதினு”

“ராஜா நிதினு”

“ம்ம்”

“போர் வண்டி வந்திடுச்சு”

“எங்கத் தாத்தா”

“அந்தா. உங்க அம்மா வரிஞ்சுகட்டி வேலை செய்யிறத பாரு”

நிதின் உடம்பிலிருந்து நழுவினான். இறக்கி விட்டதும் வண்டித் தடத்தில் நாய்க்கு முன்னாக ஓடினான்.
தென்னை மர உயரத்திற்கு லாரி நின்றிருந்தது. எண்ணெய் பிசுக்குப் பிடித்த கருப்பு மனிதர்கள் ராடுகளைக் கிணற்றுக்குள் இறக்கிக் கொண்டிருந்தனர். லாரியின் நிழலடியில், இருவர் படுத்திருந்தனர். குழாய் டங் டிங் கென மோதும் ஓசை எழுந்தது. பழைய இரும்பு நாற்காலியில் அமர்ந்திருந்த ஆள் எழுந்து நிற்கவும் நிதின் திடுதிடுவென வீட்டு முற்றத்திற்கு ஓடி வந்து திரும்பிப் பார்த்தான். அவரின் சிரிப்பு விகாரமாக இருந்தது. மேல் வரிசையில் முன்பற்கள் இரண்டு இல்லை. நரை கலந்த முடி தோளைத் தொட்டது.

குடத்தை வைத்துவிட்டு கண்ணப்பர் கிணற்றை எட்டிப் பார்த்தார். போர்வெல் உரிமையாளர் இரும்பு நாற்காலியை விட்டு கிணற்றுக்கு வந்தார்.

“அண்ணாச்சி பழைய போர்ல போட முடியாது. மண்ணு செம்மியிருக்கு ராடு பிடிக்கும்”.

“என்ன தம்பி அன்னைக்கி ஒரு பேச்சு, இன்னக்கி ஒரு பேச்சு பேசுறீங்க. குழாயெல்லாம் மூணு மாசத்துக்கு முன்னதான குழியிலிருந்து தூக்கினோம். அதெப்படி மண்ணு செம்மும். ஊத்தே வரண்டு போயிருக்கு.
பின்னெப்படி மண்ணு வரும்”.

கொஞ்சம் நலும்பலாக பேசினான்.

“இதுவே அம்பதடி இருக்கும் போல. 200 அடிக்கிக் கொறையாம போட்டாத்தான எனக்குக் கட்டும்”.

“பாத்தீங்களா”

“பாத்திட்டுத்தான் மேல ஏறி வந்து உக்கார்ந்தேன். நீங்க வந்திட்டீங்க”.

“தம்பி, புது குழிபோட்டா எனக்குத் தாங்காது. அம்பதடிக்கி எனக்கு வீணான செலவு. ரொம்ப நொடிச்சுக் கிடக்கோம். எம் பிள்ளைகிட்ட இந்த ஒரு வாட்டின்னு கையகால பிடிச்சு வாங்கியிருக்கேன். ஒரு மூணு மணி நேரம் நாலு மணி நேரம் தண்ணி ஓடுனா போதும் நெலத்த வெளைய வச்சிடுவேன். இந்தப் பிள்ளைய எப்பிடியாவது கடத்தணும் வயது 28 ஆகுது. இந்த பிள்ளைக்காகத்தான். ஏதாவது நெலத்தில ரெண்டு போட்டு நால எடுத்தாகணும்.

போர்வெல்காரர் வேறொன்றும் சொல்லவில்லை. கண்ணப்பர் கிணற்றின் தெற்கால் இருக்கும் படிக்கட்டுக்குப் போனர்.

“தாத்தா நானு”

“இங்கெல்லாம் வரக்கூடாது. ஒனக்கு செல்லங்கொடுத்தா ஒரேமானிக்கு ஆடுவ. அதுக்குத்தான். . .”

“தாத்தா நான்தான தண்ணி பாச்சுவேன்”

“ஆமா”

“மம்பிட்டி எடுத்துக் கொடு தாத்தா”

“மொதல்ல போர் போடட்டும்”

“எடுத்துக் கொடுத்திட்டுப் போ”

கண்ணப்பர் காதில் விழாதது போல கிணற்றுக்குள் இறங்கினார். உடம்பு சிறுகச் சிறுக கிணற்றுக்குள் இறங்கி தலை மறைந்தது. நிதி வாசல் படியில் தன் தலையை மோதி “ஐயோ என்ன விட்டுப் போகாத” கத்தினான். “ஏய் அப்பிடிச் சொல்லாத வாய மூடு” பிருந்தா உதட்டோடு ஒரு சாத்து சாத்தா குரல் விய்யென்று உச்சிக்குக் கிளம்பியது.

“பிருந்தா நீபோயி பேப்பர திருத்து” - அம்மா

“வாடா ராசா நீ”

“மம்மி இ இ”

“மம்மி அடிச்சாளா? டூ விட்டுடு”

“மம்மீ”

“எத்தன உதை கொடுத்தாலும் மம்மி. பெரிய மம்மி”

தாடையில் இடிப்பது போல கையைக் காட்டினாள். பிருந்தா பரணில் சொருகியிருந்த மண்வெட்டியை எடுத்து
“சாமீ காலுல பட்டிடும். சரியா? அம்மா வச்சிருக்கேன். தண்ணி வந்ததும் நீ திருப்பு. சரியா?”

புறங்கையால் கண்களைத் துடைத்துக் கொண்டு வந்து பிருந்தா மடியில் அமர்ந்தான்.

லாரிக்குள் இருந்த ட்ரைவர் சுவிட்சைப் போடவும் கிர்ர்ரென ராடுகள் சுழலத் தொடங்கின. அந்த ஏரியாவையே போர்வெல் ஓசை தூக்கியது. படியில் அமர்ந்திருந்த பிருந்தா காதைப் பொத்தினாள். அமுங்கிய குரலில் ஓசை வந்தது. நிதின் அம்மாவைப் பார்த்து அதே போல் செய்தான்.

“மம்மி வெரல காதுல வச்சா குர்ர்ரங்கிது மம்மி. வெரல எடுத்தா கிர்ர்ரங்கிது மம்மி”

“ஆமாடா. ஏஞ் செல்லம். தாத்தா கிணத்தில நல்ல தண்ணி கிடைக்கணும் சாமீ! கூகாளியம்மா. கும்பிடு”

“ம்ம்... கிணத்துக்குள்ள தாத்தா தண்ணி...”

“அப்படியில்ல செல்லம். தாத்தாவுக்கு, கிணத்தில நல்லவிதமா, தண்ணி காட்டணும். கூகாளியம்மா”

“கூகாளியம்மா தண்ணிய காட்டணும்” “ம்ம். ஏங் குஞ்சு. எஞ்சாமி” கன்னத்தில் முத்தமிட்டாள்.

மணி மூன்றைத் தாண்டிவிட்டது. போர்வெல் ஓசை நிற்கவில்லை. கண்ணப்பர் இடையில் தண்ணீர் குடித்துவிட்டுப் போகும்போது மனைவி ‘தண்ணி கண்டிருச்சா’என்று கேட்டதற்கு பதிலேதும் சொல்லாமல் போய்விட்டார் ‘80 அடிக்குக் கீழே பாறைதான்’என்றான் ராடுகளை இறக்கிக் கொண்டிருந்தவன்.

ஒருவரும் சாப்பிடவில்லை. பிருந்தா கிணற்றை எட்டிப் பார்த்தாள். சுழலும் ராடைச் சுற்றி ஆறுபேர் நின்றிருந்தனர். போர் குழியிலிருந்து சிமெண்ட் நிறத்தில் தூசி பறந்தது. “அப்பா வந்து சாப்பிட்டுப் போங்கப்பா” கரகர துளையிடும் ஓசையை மீறி கத்தினாள். அது அவர் காதுக்குக் கேட்டிருக்க முடியாது.

நிதின் மண்வெட்டியைத் தூக்கி தரையை லேசாக கொத்தினான்.

“அம்மா ஏஞ் செல்லத்தப் பாரும்மா இவ்வளவு பெரிய மம்பிட்டிய தூக்கி வெட்டுறத”

“அவன் ரெண்டரை வயசிலேயே தாத்தாவோட பாத்தி திருப்புனவன். தூக்க மாட்டானா? இது என்ன அதிசயம்”
இடைவிடாது உறுமிக் கொண்டிருந்த லாரி நின்றது. கரபுரவென பாறையைத் துளைத்த ராடு நின்றாலும் இன்னும் காதுக்குள் கொய்ய்ங் என்றொரு ஓசை எல்லோர் காதிலும் ரீங்கரித்தது.

உடம்பெல்லாம் தூசி படிய மேலேறி வந்தார் கண்ணப்பர். ஆளும் பேருமாக குழாய்களைக் குழிக்குள் இறக்கினர். பிட்டர் கிணற்றுக்குள் இருந்து சத்தம் கொடுக்க மறுபடி கீழே இறங்க தெற்கால் நடந்தார்.

“அப்பா கொஞ்சம் சாப்பிட்டுப் போங்கப்பா. ரொம்ப அலட்டாம” என்றாள் மீனா.

அவர் காதில் வாங்காமல் கிணற்றுக்குள் இறங்கினார்.

மோட்டாரை பெட்டில் லேசாக முன்கவிழ அமரவைத்து மாட்டினார்கள். அப்படி மாட்டினால்தான் சாப்ட்டுபுஸ் தேயாது. கண்ணப்பருக்கு மூச்ச வாங்கியது. ஒவ்வொரு படியும் எட்டு வைக்க மலைப்பாக இருந்தது.

மேலேறி வந்தவர் தொட்டி மேல் ஏறி நின்று வளவு பெண்டை மேல் நோக்கித் திருப்பினார். முடியவில்லை. ஆறுமாதம் ஓடாது துருவேறி இறுகிவிட்டது. கல்லை எடுத்துத்தட்ட லூசு விழுந்தது. பெண்டு வானத்தை நோக்கியது. வையாபுரி தோட்டத்திலிருந்து கொண்டு வந்த குடத்துநீரை பிருந்தா தூக்கி ஊற்றினாள்.

நிதின் மண்வெட்டியைத் தூக்கி வாய்க்காலுக்கு ஓடினான். சாகாமல் நிற்கும் தென்னை மரத்திற்குச் செல்லும் வாய்க்காலுக்குத் திருப்ப கொத்தினான். மண் கிண்ணென்று இறுகி இருந்தது. உள்ளங்கை வலித்தது.

“மம்மீ. இஞ்சா வா கொத்த முடியல மம்மி”

“இரு வர்றேன்”

கண்ணப்பர் ஸ்டாட்டரை கும்பிட்டு அமுக்கித் தூக்கிப் போட்டார். வர்ர்ரு வர்ர்ரு என்று மோட்டார் இழுத்தது. கிணற்றை எட்டிப் பார்த்து பிட்டரிடம் “ ‘ஏர்’ திறந்து விடுங்க’ என்றார். சிஸ்ஸ்சென காற்று வெளியேறும் ஓசை கிணற்றுக்குள்ளிருந்து கேட்டது.

மறுபடி ஸ்டாட்டரை அமுக்கிக் தூக்கிப் போட புளுச்சென தண்ணீர் குழாயிலிருந்து தூக்கியடித்தது. கலங்கலான தண்ணீர் தொட்டியில் விழந்தது. தலைவாசலில் நின்றிருந்த மீனா ஓடிவந்து குழாய் நீரை அள்ளி அள்ளி குடித்தாள். பிருந்தா குடித்தாள். கண்ணப்பர் தன் இரு மகளின் துள்ளாட்டத்தைப் பார்த்தபோது கண்களில் நீர் கோர்த்தது.

தொட்டி பெருகி வழிந்து வாய்க்காலுக்கு வந்தது.

“தாத்தா ஓடவா தாத்தா. தண்ணி வந்திடுச்சு திருப்ப முடியல, தென்னைக்குப் பாய்க்கணுமில்ல?” மண்வெட்டியை எடுத்துக் கொத்தினான். கணீரென எகிறியது.

“மம்மி வா மம்மி திருப்ப முடியல. தண்ணி... போகுது.. மம்மி”

ஆள் மிதித்து மிதித்து பதுங்கிப் போன மடைக்கு மேல் ததும்பி நாலா பக்கமும் கலங்கலான நீர் வழிந்தது.
மோட்டார் பத்து நிமிடம் ஓடியிருக்கும். வர்ர்ரு வர்ர்ரு என இழுத்தது. குழாயில் தண்ணீர் வரவில்லை. கண்ணப்பர் ஸ்டாட்டரைத் தட்டிவிட மோட்டர் நின்றது. சிறிது நேரம் கழித்து எடுத்து விட்டார். தண்ணீர் புளுச்சென தூக்கியடித்த ஒரு நிமிடத்திலேயே நின்றது. மோட்டார் அனத்த நிறுத்தினார். பாதி பத்திக்கூட பாயவில்லை. வாய்க்காலில் நீர் அப்படியே படுத்தது.

“தாத்தா வாய்க்காலில தண்ணி வரல தாத்தா. மம்மி, ஏம் மம்மி வரல?”

பிருந்தா தொட்டிலை விட்டிறங்கி வேகமாக வீட்டிற்குள் போனாள். மகள் போவதையே பார்த்தபடி ஸ்டாட்டர் பெட்டியிலிருந்து பார்த்தார்.

“தாத்தா மோட்டார எடுத்துவிடு தாத்தா. தென்ன மரம் பாவம்”

வாய்க்காலில் நிதின் நின்றபடி சொல்லிக் கொண்டிருந்தான். கண்ணப்பரின் கைகள் நடுங்கின. பிருந்தா முதலில் இருபதாயிரம் தர மறுத்தாள். மெட்ரிக்குலேசன் பள்ளியில் இரண்டாயிரம் சம்பளத்தில் இந்த நான்காண்டுகள் மிச்சம் பிடித்த பணம் வெறும் தூசியாகப் போய்விட்டது. புருசனுக்குத் தெரியாமல் எடுத்துத் தந்தாள். மீனா, அப்பாவையும் வாசலையும் பார்த்தாள். அம்மா பரண்கவுரை பிடித்து ஏதோ யோசனையில், நிலைகுத்தி நிற்கிறாள்.

180 அடி. இருபதாயிரம் ரூபாய். லாரிக்காரன் பணத்தை வாங்கிக் கொண்டு போய்விட்டான். பிருந்தா பாயில் குப்பரப்படுத்திருந்தாள். கண்ணப்பரின் கை அவள் முதுகில் பட்டது.

“பிருந்தா கண்ணு”

பிருந்தாவிடம் பதில் இல்லை.

‘எப்பிள்ள கல்யாணம் நின்னாலும் பரவாயில்ல. எம் பேரன்... கூகாளியம்மா இது நியாயமா? வாய்க்கால் தண்ணி வல்ல தாத்தான்னு சொன்னப்பயே என் நெஞ்சு வெடிச்சிருக்கணும். மாப்பிள்ளை வந்தா பணத்துக்கு என்ன பதில் சொல்றது. எம் பேரனுக்காக எந்த சாமியும் கண்ணத் தொறக்கலயே?’ வார்த்தைகள் தெளிவில்லாமல் குழறின. அவருக்கு குப்பென வேர்க்கத் தொடங்கியது. மூலைக்கு ஒருவராக சுருண்டு படுத்துக் கிடந்தனர்.

மண்வெட்டியைத் தூக்கி வண்டித் தடத்தில் ஏற முடியாமல் முழித்தான் நிதின். மண்வெட்டியை வண்டித் தடத்தில் போட்டுவிட்டு அப்புக்கல்லில் கால் வைத்து ஏறினான். பொடுக்கென பொக்குக்கல் உதிர கீழே விழந்தான். கல்வரிசை கையைப் பதம் பார்த்து விட்டது. வலக்கை ரோய்ந்து விட்டது. வெள்ளைத் தொலி தெரிந்த இடத்தில் மினுமினுவென எண்ணெய் ஊற்றெடுத்தது. புறங்கை எரிய ஆரம்பித்தது. சற்றுத் தள்ளி பதுங்கிய வண்டித் தடத்தில் மண்டியிட்டு ஏறி வந்தான்.

“மம்மி கீழ விழுந்திட்டேன் மம்மி”

வாசல் ஏறும்போது ஒருவரும் பேசவில்லை. பிருந்தா அப்படியே கிடந்தாள்.

“மம்மி விழுந்திட்டேன் மம்மி கையி எரியுது மம்மி”

பிருந்தா திரும்பியே பார்க்கவில்லை.

“தாத்தா கையி எரியுது தாத்தா”

அவர் யேதோ யோசனையில் தரையைப் பார்த்துக் கொண்டிருந்தார். “சித்தீ..“மூடிக்கிட்டுப் போடா பெண்ண” சுவரைப் பார்த்துப் படுத்திருந்த மீனா கத்தினாள். யாரும் யாரோடும் பேசாமல் வெறித்தபடி இருந்தனர். நிதின் வாசலை விட்டு இறங்கினான். மண்வெடி தூரத்தில் கிடந்தது. காலடியில் படுத்திருந்த நாய் நிதினைப் பார்த்து வாலாட்டியது. நாயிடம் புறங்கையைக் காட்டினான்.

“மணி விழுந்திட்டேன் மணி வலிக்குது மணி” நாய் மூக்கால் உராய்ந்த இடத்தில் தடவியது. ரொம்ப காந்தத் தொடங்கியதும் நிதினுக்கு அழுகை பீறிட்டது. “மணி நாஞ் செத்துப் போறேன் மணி’கன்னத்தில் வழியும் நீரை துடைத்துக் கொண்டு நடந்தான். சாவது குறித்து என்னவென்று தெரியாமல் சொல்லிய சொல்லைக் கேட்டதும் முடங்கிக் கிடந்த பிருந்தா விழுந்தடித்து வெளியே ஓடிவந்தாள். வண்டித்தடத்தில் போய்க் கொண்டிருந்த நிதினை நாய் எக்காளமிட்டு மறித்து மறித்துப் பார்த்தது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com