Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஆகஸ்ட் 2006
எஸ்.ஐ.எஸ்.ஐ. - போலிச் சான்றிதழ் மோசடி

மோசடிக் கல்வி நிறுவனங்களும் பாதிக்கப்படும் மாணவர்களும்
மு.கா.வையவன்

தமிழகம் முழுவதும் ‘எஸ்.ஐ.எஸ்.ஐ.’ என்ற பெயரில் நடத்தி வரும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க ஒரு குழுவும் இந்திய அரசின் முத்திரையை அனுமதியின்றி தவறாகப் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க ஒரு துணைக்குழுவையும் தமிழக தொழில் நுட்பக் கல்வி இயக்குனரகம் அமைத்துள்ளதாக நாளிதழ்களில் செய்தி வெளிவந்துள்ளது.

ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம், அகில இந்திய மருத்துவக் கல்வி நிறுவனங்கள் போன்ற உயர் கல்வி நிறுவனங்ளை உயர் சாதிக்காரர்கள் ஆக்கிரமித்து வருகின்றனர். மருத்துவம், பொறியியல் மற்றும் நவீன தொழிற்படிப்புகள் லட்சக் கணக்கில் செலவழிப்பவர்களுக்கு சொந்தமாக்கப்பட்டு விட்டது. கலை மற்றும் அறிவியல் படிப்புகளான பி.ஏ., பி.காம், பி.எஸ்.சி படிப்புகள் பெயருக்குப் பின்னால் பெருமைக்கு போட்டுக் கொள்ளும் பட்டமாகிவிட்டது. இந்நிலையில் அடித்தள, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை சில ஆயிரங்கள் மட்டுமே செலவாகக் கூடிய ஓரளவு வேலை வாய்ப்பைத் தரக்கூடிய ஓராண்டு, ஈராண்டுப் படிப்புகளை தேடி அலைகின்றனர்.

இப்படிப்பட்ட பெற்றோர்களின் கனவை, எண்ணத்தை நிறைவேற்றக்கூடிய படிப்புகளில் முதன்மையானதாக கருதப்படுவது ஹோட்டல் மேனேஜ்மெண்ட், கேட்டரிங் டெக்னாலஜி, ஃபேசன் டிசைனிங் போன்ற சில தொழிற் படிப்புகளே. இப்படிப்புகளை நடத்தக் கூடிய கல்வி நிறுவனங்கள், ‘மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்றது - 100ரூ வேலை வாய்ப்பு உத்திரவாதம் - குறைந்த கட்டணத்தில் ஓராண்டு மற்றும் ஈராண்டு பயிற்சியுடன் கூடிய படிப்பு - நட்சத்திர ஹோட்டல்களில் நேரடிப் பயிற்சி - வெளிநாட்டு வேலை வாய்ப்பை பெற்றுத் தருவது’ உள்ளிட்ட பல வாக்குறுதிகளை அரசியல் கட்சிகளை மிஞ்சும் அளவிற்கு விளம்பரப்படுத்தி வருகின்றன. விளம்பர வாக்குறுதிகளைத் தரும் கல்வி நிறுவனங்கள் உண்மையில் அதை நடைமுறைப் படுத்துகிறார்களா? அரசியல் கட்சிகளைப் போலவே ஏமாற்றுகிறார்களா? என்பது புதிராகவே உள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள கோட்டப் பட்டியைச் சேர்ந்த அருள் என்ற மாணவர், ஒரு தனியார் தொலைக்காட்சியில் ‘எஸ்.ஐ.எஸ்.ஐ.யில் 100ரூ வேலை வாய்ப்புடன் கூடிய பயிற்சி அளிக்கப்படுகிறது’ என்ற விளம்பரத்தைப் பார்த்துவிட்டு, அதன் சேலம் கிளையில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பில் சேர்ந்திருக்கிறார். இரண்டு மாதங்கள் கடந்த பிறகும் வகுப்புகள் முறையாக நடத்தப்பட வில்லை. எவ்வித பயிற்சியும் இல்லாமல் கலைக் கல்லூரியைப் போன்று நடத்தியிருக்கிறார்கள். விளம்பரத்தில் கொடுத்த வாக்குறுதிக்கு எதிரானதாகவே நடைமுறை இருந்திருக்கிறது.

நிர்வாகத்திடம் முறையிட்ட அருளை, சென்னைக்கு மாற்றம் செய்திருக்கிறார்கள். வகுப்பு தொடங்கிய ஒரே வாரத்தில் இரண்டாவது ஆண்டுக்கான கட்டணத்தையும், விடுதிக் கட்டணத்தையும் கேட்டிருக்கிறது எஸ்.ஐ.எஸ்.ஐ.ன் சென்னை நிர்வாகம். ‘முதலாமாண்டு கட்டணம் ரூ.46,300ஐ வங்கியில் கடன் வாங்கித்தான் கட்டியிருக்கிறேன். முதலாமாண்டு மதிப்பெண் சான்றிதழை வங்கியிடம் கொடுத்தால் தான், இரண்டாம் ஆண்டுக்கான கட்டணத்தைத் தருவார்கள்’ என்று சொல்லியிருக்கிறார் அருள்.

முதலாம் ஆண்டுக்கான தேர்வு எழுதவே இல்லை. ஆனால் ஒரு மதிப்பெண் சீட்டை (கிரேடு சீட்) கொடுத்து வங்கியில் கடன் வாங்கி வரச் சொல்லியிருக்கிறது நிர்வாகம். அருளும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். பணத்தைப் பெற்றுக் கொண்ட நிர்வாகம் “சேலத்துல நீ என்ன பெரிய ரௌடியா, ஒன்னோட ரௌடித்தனத்தை எங்ககிட்ட காட்டினா ஒட்ட நறுக்கிடுவோம்” என மிரட்டி, விடுதியிலிருந்து வெளியேற்றி இருக்கிறார்கள்.

எஸ்.ஐ.எஸ்.ஐ. நிறுவனத்தால் தனக்கு ஏற்பட்ட நிலையை விளக்கி, பணத்தை மீட்டுத் தரவும், அந்நிறுவத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், சென்னை வடபழனி சரக உதவி ஆணையாளரிடம் மனு ஒன்றைக் கொடுத்து நடவடிக்கைக் காக காத்திருக்கிறார் அருள். பள்ளி ஒன்றில் ஆயா வேலை பார்த்துவரும் அருளின் தாய் (கணவரை இழந்தவர்) தன் மகனுக்கு ஏற்பட்ட நிலையை நினைத்து மனமுடைந்து போயிருக்கிறார்.

இதே போன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகிலுள்ள சாவடியர் கிராமத்தைச் சேர்ந்த குமரன் என்பவர் சேலம் மாநகர் காவல் நிலையத்தில் (குற்றப்பிரிவு) புகார் மனு ஒன்றை கொடுத்திருக்கிறார். அதில் ‘எஸ்.ஐ.எஸ்.ஐ. இந்திய அரசு’ என்ற பெயரில் போலியான ஆவணங்களை உருவாக்கி அப்பல்லோ ஏஜென்சி நிறுவனம் 250 மாணவர்களை ஏமாற்றி விட்டதாகவும், அகில இந்திய தொழில் நுட்பக் கவுன்சிலின் (ஏஐசிடிஇ) அங்கீகாரமின்றி, இந்திய அரசின் பெயரால் இந்திய அரசின் முத்திரையைப் பயன்படுத்தி, மோசடி செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.

சேலம் எஸ்.ஐ.எஸ்.ஐ. (அப்பல்லோ ஏஜென்சி) கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களின் தொடர்ச்சியான போராட்டத்திற்குப் பிறகு, சேலம் உட்கோட்ட நிர்வாக நடுவர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அமைதிக்குழுக் கூட்டத்தில், எஸ்.ஐ.எஸ்.ஐ.யின் சென்னை இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர் முறையான ஆவணங்களை அளிக்கத் தவறியதால் அந்நிறுவனம் மூடப்பட்டுள்ளது.

அப்பல்லோ ஏஜென்சி நிறுவனம் தமிழ்நாட்டில், சென்னை, பெரம்பூர், திருச்சி, சேலம், கோயம்புத்தூர், மதுரை, செங்கல்பட்டு, விழுப்புரம், சிவகாசி, திருவில்லிப்புத்தூர், கூடலூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தனது கிளைகளை வைத்துள்ளது. சுமார் 50,000 மாணவர்கள் இதில் படித்து வருவதாகக் கூறப்படுகிறது. அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் கழகம் (ஏஐசிடிஇ) மற்றும் தமிழக அரசின் அங்கீகாரமின்றி தமிழகம் முழுவதும் ‘எஸ்.ஐ.எஸ்.ஐ.’ என்ற பெயரில் நடத்தி வரும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க ஒரு குழுவும் இந்திய அரசின் முத்திரையை அனுமதியின்றி தவறாகப் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க ஒரு துணைக்குழுவும் தமிழகதொழில் நுட்பக் கல்வி இயக்குனரகம் அமைத்துள்ளதாக நாளிதழ்களில் செய்தி வெளிவந்துள்ளது. ஆனால் இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. அடுத்த பருவத்திற்கான சேர்க்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ஹோட்டல் மேனேஜ்மெண்ட், கேட்டரிங் டெக்னாலஜி, ஃபேசன் டிசைனிங் போன்ற படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் சிறுநகரம் முதல் பெரு நகரங்கள் வரை 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் புற்றீசல் போல் பெருகி வருகிறது. இந்நிறுவனங்கள் ஒவ்வொன்றும் மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்றது என்றும் நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தால் சான்றிதழ் வழங்கப்படுகிறது என்றும் விளம்பரப்படுத்தி வருகிறது. ஆனால் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களுக்கு இதுபோன்ற சான்றிதழ்களை வழங்கவோ, நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கவோ உரிமை இல்லை என்று பல்கலைக் கழக மானியக் குழுவின் சுற்றறிக்கை கூறுகிறது.

தமிழக அரசு உயர் கல்விக்கென்று தனி அமைச்சகம் ஒன்றை உருவாக்கி இருப்பது பாராட்டிற்குரியது. அதே நேரத்தில் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஓரளவு நம்பிக்கையூட்டும் படிப்பாக இருந்து வரும் தொழில் நுட்பப்படிப்புகள் மீது கவனம் செலுத்த வேண்டும். அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களின் பட்டியலை மக்களைச் சென்றடையும் ஊடகங்களின் வாயிலாக அறிவிக்க வேண்டும். அனுமதி பெறாமல் நடத்தி வரும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கையை விரைவில் எடுக்க வேண்டும். போலியான நிறுவனங்களால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மாற்று ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்.

தொழில் நுட்பப் படிப்புகளை பயிற்றுவிக்கும் நிறுவனங்களுக்கென்று தனி விதிகள் உருவாக்கப்பட வேண்டும். உள் கட்டமைப்பு வசதிகளோடு நிறுவனம் இயங்குகிறதா எனக் கண்காணிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் கல்வித் தரத்தை மதிப்பிட வேண்டும் என்பதே தற்போது மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com