Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஆகஸ்ட் 2006
அதிசய கிராமம் அபூர்வ நம்பிக்கை

பெருங்கதைகள் நிரம்பிக் கிடக்கும் கிராமம்
பா. திருச்செந்தாழை

“ஒரு காலத்தில் பயிர்கள் செழித்து வளர்ந்தது அப்பூமி,
தற்போதைய சம்சாரிகளின் புறக்கணிப்பால் உடல் முழுவதும்
ரத்தம் கசிந்து மண்ணை சிவப்பாக்கி கிடக்கிறது” -கோணங்கி, எழுத்தாளர்.

அல்லியும், தாமரையும் தண்ணீரை மறைக்குமளவிற்கு பூத்துக் கிடக்கும் பிரம்மாண்ட சுனைகள் ஐந்து இருந்தும், சுனைகளின் கரைகளிலிருந்து விரிகின்ற செம்மண் பாலை. இயற்கையின் வினோதம் மனித சிந்தனைக்கு அப்பாற்பட்டது என்பதை மெய்ப்பித்துக் கிடக்கிறது திருச்செந்தூரிலிருந்து பத்து கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் அம்மன்புரம். திருநெல்வேலி செல்லும் மெயின் ரோட்டிலிருந்து இடதுபுறமாய் செல்லும் சிறுசாலையில் இரண்டு கிலோ மீட்டர் தூரம், வழியில் கிடக்கின்ற சுனைகளை ரசித்தபடி நடந்தால், வனத்தின் நடுவே தன்னந்தனியாய் ஆக்ரோஷத்தில் பிதுங்கும் கண்களும், முன்னங்கால்களை தூக்கியபடி விடுபட்டு பறக்கத் துடிக்கும் வெண்குதிரையில் வீற்றிருக்கும் அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் மௌனத்தில் கிடக்கிறது. அவ்வப்போது அலையெழுப்பி பேசும் சுனையொன்றை அருகில் வைத்தபடி. இன்ன மரமென குறிப்பிட முடியாதபடி சிந்தனைக்கு அப்பாற்பட்ட உயரத்துடனும், வினோத கிளையமைப்புகளுடனும் பிற மரங்கள் சூழ்ந்திருக்கின்ற வனம் அது.

பங்குனி உத்திரத் திருவிழாவின் கடைசி தினம்.. உச்சகட்ட திருவிழா நெரிசலில் கோவில் வளாகம் மூச்சுத் திணறிக் கிடக்கிறது. கை நரம்புகள் புடைக்க ஓங்கி அடிக்கப்படும் மேளத்தின் ஒலியும், கோவில்களுக்கேயுரிய வினோத வாசனையும் சூழல் நிறைந்து கிடக்கிறது. சுனையின் நீரில் வெளியூரிலிருந்து வந்த பயணிகள் நீந்திக் களிக்கின்றனர். இத்தனை மனிதர்களைக் கண்ட, ஆச்சர்ய சந்தோஷத்தில் சுனையின் நீர் வளையங்கள் பெருகி பெருகி கரை மோதிச் சிதறுகின்றன.

“ஹும்! எல்லாம் இந்த பத்து நாளுக்குத்தான். நாளக்கி இன்னநேரம் திருவிழாவுல தொலைத்த கொழந்தயா இந்த அய்யனார் மட்டும் முழிச்சுக்கிட்டு தனியா நிப்பாரு...”

இடுப்பில் சுற்றப்பட்ட பழைய வேட்டியும், தோளில் தொங்கும் தொரட்டியுடனும் கோவில்களைப் பார்த்தபடி தனக்குள் பேசிக் கொண்டிருக்கும் அந்த வயதானவரின் பெயர் மருதையன். பிறந்ததிலிருந்து அந்த செம்மண் பாலை வாசி. ஒவ்வொரு புதரும் அவருக்கு அத்துப்படி. சற்றுத்தள்ளி, வனத்தினுள் நீளும் சிதிலமான தார்ச்சாலையில் அவருடன் காலாற நடக்கத் துவங்கினோம். மெல்ல மெல்ல நம்மை தனது கருவுக்குள் அழைத்துச் செல்கிறது வனம். கண்ணுக்கெட்டிய தூரம் மனித நடமாட்டம் அற்ற அவ்விடத்தில் புதர் நடுவில் நிற்கிறது சாயம் போன சீலையை சுற்றியபடி ஒரு கற்சிலை. அதன் அருகில் தூங்கிக் கொண்டிருக்கிறார் மனநிலை சரியில்லாத மனிதரொருவர்.

“இவன் ஒருத்தந்தாய்யா ராவும் பகலும் இங்கே கிடக்கிறவன். அய்யனாருக்கு துணையா, காட்டுக்கு ஒத்தாசையா...”

ஆச்சர்யம் பரவும் விழிகளுடன் அவரைப் பார்க்கும் போது படபடத்து தலைக்கு மேல் விரைகின்றன கிளிக்கூட்டங்கள்.

“இந்த ரோடு எங்க போகுது”

“நாசரேத்துக்கு... எப்பவாச்சும் மனிச தலை தட்டுப்படும். மத்தபடி மயான அமைதிதான். பகல்லேயே இப்படித்தான்னா ஒரு தரம் கிடைக்குட்டி ஒண்ணு தவறிருச்சு. தேடித் தேடி வழிமாறிப் போயி திசை தெரியாத இடத்துல மாட்டிக்கிட்டேன். சுத்தியும் மரங்க நடுவுல மைதானத்தளவு தரை. பௌர்ணமிக்கு மறுநாள். பாலை கரைச்சு ஊத்துன மாதிரி வெளிச்சம். பகல்ல பாக்குற இடத்துக்கும், ராத்திரி பாக்குற இடத்துக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கு தெரியுமா தம்பி. அதுவும் வெள்ளிக் கிழமை ராத்திரி அய்யனாரு வெள்ளைக் குதிரைல காவலுக்கு கௌம்புற நடுச்சாமம். எதிர்க்க வந்தவங்களை அறைஞ்சு போட்டுடும்னு கேள்விப் பட்டிருக்கேன் எப்பிடியிருக்கும் யோசிச்சு பாருங்க தம்பி”

கிராமத்து மக்களின் நம்பிக்கையின் தொடர்தலில் ஒருமுகமான அதீத கற்பனை புனைவுகள் கேட்கவும், அடுத்தவர்களிடம் கூறவும் சுவாரஸ்யம் குன்றாத பெருங்கதைகள். கை மாறிக் கைமாறி வருகையில் அக்கதை சேர்த்துக் கொள்கிற அணிகலன்களினால் கற்சிலையான அது இறுதியில் அலங்கரிக்கப்பட்ட உற்சவராய் மாறி சுயம் தொலைத்து விடுகிறது. மருதையனுக்கு வர்ணம் பூசத் தெரியாத மனது. அவ்வார்த்தைகள் மறைக்கப்படாத நிஜ பயத்துடன் நம்முன் விழுகின்றன.

“சுத்தியும் மரங்க. இலை ஒவ்வொண்ணும் பாலாய் மின்னுது. இந்த பாலையின் செம்மண் அப்பிடி தகதகக்குது. ஏதோ பறவை அந்த நேரத்துல கேக்... கேக்குனு கத்திக்கிட்டு குறுக்க நெடுக்க ஓடுது. சொக்கவும் வைக்குது. பயத்துல குதிக்கவும் வைக்குது. தூரத்துல சலக்கு சலக்குனு சத்தம் கேட்கிற மாதிரி இருக்குது. அய்யனாரு தான் வர்றாருனு தோணுச்சு. வயித்தை பிடிச்சுக்கிட்டு ஒரு புதருக்குள்ளே பம்மி கிடக்கேன். எப்படா அறை விழுகப் போதுனு ஒரு பீதி. தடக்கு தடக்குனு ஓடுது. கால் மணி நேரம் சத்தங் கேட்டுச்சு. பின்னே அமைதி. மயான அமைதி. மெல்ல நகர்ந்து நகர்ந்து மணல் மேட்டுக்கு வந்திட்டேன். தூரத்துல நிலா. நெழல் நெழலா மரங்க. அடேயப்பா நம்ம ஊரா இதுனு அப்படியே மலைப்பு. செத்த நேரம் கால் போன பாங்குல சுத்திட்டு, பின்னே வேட்டிய விரிச்சு படுத்திட்டேன். உள்ளே ஒண்ணும் போடாததினால நிலா வெளிச்சம் என் உடம்பு முழுக்க படிஞ்சு கெடக்கு. அப்படியே ஆத்தா மடில படுத்துகிடந்த மாதிரி நெனப்பு.

கவிதையின் எவ்வகைகளுக்கும் பிடிபடாத ஒரு அற்புத இரவைக் கழித்த பெருமிதமும், பரவசங்களும் மாதையனின் முகத்தில். கதவு ஜன்னலில் துவங்கி நீரைத் தள்ளுகிற எலிப் பொந்தைக் கூட பாதுகாப்பாய் அடைத்துவிட்டு பத்தடி வீட்டை இஸ்திரிப் பொட்டியாக்கி அவிந்து போய் அலார கத்தலில் விழித்தெழும் நமது நகர வாழ்க்கையை எண்ணி பெருமூச்சு விட்டுக் கொண்டோம்.

“பின்ன எப்பவும் அப்பிடி வந்தீங்களா. . .”

“இல்லை. அந்த ஒரு வாட்டி தான் பின்ன எப்பவுமே ஆடு தொலையலை”

கனத்தபடி மருதையன் கூறிமுடித்தார். தூரத்தில் உச்சி கால பூஜையின் உறுமிச் சத்தம் கேட்டது. திரும்பி வருகையில் அந்த புதர் நடுவே கற்சிலை இருந்தது. அந்த மனநிலை சரியில்லாத மனிதரை காணவில்லை. கேள்விக்குறியுடன் மருதையனை பார்த்தால்,

“எங்கயாச்சும் காட்டுக்குள்ளரா போயிக் கிடப்பான். விஷேசம் முடிஞ்சு சனங்க காலியானா கோயில்ல கெடப்பான். அய்யனாரும், இவனும் மட்டும் நடுச்சாமத்துல ஒண்ணா மணல் மேட்டுப் பக்கம் திரியுவாங்கன்னு நெனைக்கிறேன்”.

சொல்லியபடி ஆட்டு மந்தையில் கவனமானார் மருதையன். பின் நடந்து வந்த ரொம்ப நேரத்திற்கு அந்த மனிதரைத் தேடித் தேடி திரும்பி பார்த்தபடி வந்தோம். அருகில் கோவிலின் உறுமிச் சத்தம் மட்டும் திசையெங்கும் கேட்டுக் கொண்டேயிருந்தது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com