Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஆகஸ்ட் 2006

சுதந்திரத்தின் வழி பெளத்தம்
(அம்பேத்கர் பெளத்தம் தழுவிய 50வது ஆண்டை நினைவு கூறல்)
ஸ்டாலின் ராசாங்கம்

இந்து மதத்தைச் சீர்திருத்தம் செய்வது நமது நோக்கம் அல்ல. அது நமது செயற்பாட்டிற்கான களமும் அல்ல. நம் நோக்கமெல்லாம் சுதந்திரத்தைப் பெறுவது மட்டுமே. -அம்பேத்கர்

அம்பேத்கர் பௌத்தத்தை நோக்கி ஏன் சென்றார் என்னும் கேள்வியைப் பற்றி அவர் இப்படிச் சொன்னார்: “இந்தியாவில் தீண்டத்தகாதார் என அறியப்படும் சமூகத்தில் பிறந்த காரணத்தினால் தான்” என்று. மதம் என்னும் வழமையான அர்த்தத்தில் அவர் மதம் ஒன்றை சிபாரிசு செய்யவில்லை. மதம் குறித்த வரையறையை விட மதத்தினால் ஆளப்படும் நடத்தை விதிமுறைகள் குறித்து விளக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்தார். சமுதாய அமைப்பைக் கட்டிக் காக்கும் இந்த நடத்தை முறைகளை வைத்தே அவர் இந்து மதத்தை நிராகரித்ததும் பௌத்தத்தை மறுஉயிர்ப்பு செய்ததும் நடந்தது. மதம் தொடர்பான எல்லாவித அறிதல்களுடன் விவாதங்களைத் தம் எழுத்துக்களில், பேச்சுக்களில் அவர் மேற்கொள்கிறார்.

சமூகக் குழுவினர் மதமாயிருக்கும் போதுதான் மற்ற சமூகத்துடன் நெருங்கிய தொடர்பை உண்டாக்கவும், பலத்தினைப் பெறவும் முடியும் என்று கருதிய அம்பேத்கர் இந்து மதத்தின் அடிப்படையும், நடத்தை விதிமுறைகளும் அதற்கு எதிராய் இருப்பதோடு பாகுபாட்டையே அதுதன் உயிராகக் கொண்டிருப்பதையும் தேர்ந்த படிப்பறிவின் துணைகொண்டு கண்டு கொண்டார். அம்பேத்கரின் மதமாற்றம் பற்றி பேசும் பலரும் பூனா ஒப்பந்தம், 1927 சௌதார் குளம் விவகாரம், உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு அளவுக்கதிகமான முக்கியத்துவம் தந்து மதமாற்றம் என்பதற்கு ‘விரக்தி’என்பதான தோற்றத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். நேரடியாக எதிர்கொண்ட அரசியல் பிரச்சினையெனும் அளவில் அவைகளுக்கான முக்கியத்துவத்தை மறுக்க முடியாது, என்றாலும் “தீண்டாமை என்பது ஏதோ குறுகிய கால சுருக்கமான ஒன்று அன்று. அது நிலையானது. இன்னும் சுருக்கமாக தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் இந்துக்களுக்கும் தீண்டப் படாதோருக்கும் இடையே நடைபெறும் நிலையான போராட்டம் இது” என்று கூறுவதன் மூலம் சாதியமைப்பின் மரபுரீதியான தாக்கத்தினை எதிர் கொள்ளவே நீண்டகால அனுபவத்தின் அடிப்படையிலே மதமாற்றத்தினை அவர் சிபாரிசு செய்தார்.

சாதி ஒழிப்பு, மதமாற்றம், சனநாயகம் ஆகியவை குறித்து அவர் கொண்டிருந்த கருத்துக்கள் முற்றிலும் புதியவை. மதமாற்றம் பற்றிய அவரது அணுகுமுறையை அவருக்கான பல்வேறுபட்ட அறிவுத்துறை புலமையிலிருந்து விளங்கிக் கொள்வது இங்கு குறைவே, மதம் மாறப் போவதான அறிவிப்பை வெளியிட்ட 1936ம் ஆண்டுக்கு முன்பிருந்தே மதம் தொடர்பான படிப்புகளில் ஆர்வங் கொண்டிருந்த அவர் மதம் மாறுவது என்று முடிவெடுத்தபின் 1940களின் தொடக்கத்திலேயே மதங்கள் குறித்த ஒப்பியல் ஆய்வினை செய்து முடித்திருந்தார். இதற்கிடையே பல்வேறு மதத் தலைவர்களும் அவரைச் சந்தித்தனர்.

அம்பேத்கர் “அறிவியலை நன்கறிந்த நவீன மனிதரொருவர் மதம் ஒன்றை ஏற்க விரும்பினால் அவருக்கேற்ற மதம் புத்தரின் மதம் மட்டுந்தான்” என்றார். இறுதியாக 1956ம் ஆண்டு அக்டோபர் 14ம் நாள் நாக்பூரில் ஏராளமான மக்களோடு பௌத்தம் தழுவினார் பௌத்தத்தை அறிவியல் ரீதியாக விளக்கியதாலேயே மகாபோதி சொசைட்டி கூட கடுமையாக விமர்சித்ததோடு பௌத்தம் தழுவியவர்களை நியோ - புத்தீஸ்டு என்றும் சொன்னது. (இதனை முன்னுணர்ந்த அயோத்திதாசர் கோட்பாட்டு ரீதியாகவே பூர்வ பௌத்தர் என்று அழைத்தார்) இந்திய தொல்குடி மக்களின் வழிபாடு, கிறித்துவ - இசுலாமிய மதங்களுக்கு மாறுவதாய் கிட்டும் சமத்துவம் பற்றயெல்லாம் அம்பேத்கர் அறிந்திருக்கிறார்.

இங்கு அம்பேத்கருக்கு பௌத்தம் மீதான ஆர்வம் ஈடுபாடு எங்கிருந்து உருவானது என்று ஆராய வேண்டிய அவசியமும் எழுகிறது. அவர் சிறுவனாக இருந்த காலத்திலேயே தமிழகத்தில் தீண்டப்படாதாரிடையே பௌத்த மறுமலர்ச்சி உருவாகியிருந்தது. இப்பௌத்த முன்னெடுப்புகள் அவருள் தாக்கம் ஏற்படுத்தின என்பதற்கு வெளிப்படையான ஆதாரங்கள் ஏதுமில்லை. என்றாலும் அயோத்திதாசரின் பௌத்த மையமாக விளங்கிய கோலார் தங்கவயலோடு அவர் அதிகமும் தொடர்பு கொண்டிருந்தார். வட ஆற்காட்டு மாவட்ட தலித்துகளே தங்கவயலில் சாக்கைய பௌத்த சங்கங்களை நடத்தினர். அதன் தொடர்ச்சியாகவே அம்பேத்கரின் அரசியலை அவர்கள் ஏற்றிருந்தனர். அம்பேத்கர் உருவாக்கிய சுதந்திரா தொழிலாளர் கட்சி, அகில இந்திய ஷெட்யுல்டு பெடரேஷன் (SCF) இயக்கமும் செல்வாக்கோடு திகழ்ந்த பகுதியாகும். இங்கு 2 முறை வருகை தந்த அம்பேத்கர் தலித்துகளின் கடந்த கால செயற்பாடுகளை அறியாதிருக்க முடியாது. இங்கு அப்பாதுரையார் போன்றோரை யெல்லாம் சந்தித்து திரும்பிய அம்பேத்கரின் நூலகத்தில் இருந்த ஒரே நூலாக அயோத்திதாசரின் பௌத்த மார்க்க வினா-விடை நூல் இருந்தது என்று சொல்லப்படுகிறது. இவையெல்லாம் மறைமுகமான ஆதாரங்கள் மட்டுமே.

அம்பேத்கர், அயோத்திதாசரின் சமகாலத்தில் செயற்பட்ட பேராசிரியர் லட்சுமி நரசுவின் Essence of Buddhism நூலை 1948ல் பதிப்பிக்கிறார். லட்சுமி நரசுவின் Religion of the modern Buddihist நூலும் கையெழுத்துப் பிரதியாகவே அம்பேத்கரிடம் இருந்தது. Essence of Buddhism நூலின் பதிப்புரையில் லட்சுமிநரசுவை சிறப்பாக பேசியிருப்பினும் அவர் தன்னுள் செலுத்திய பாதிப்பு குறித்து அவர் வெளிப்படையாக ஏதும் பேசவில்லை. எனினும் தமிழகத்தின் குறிப்பிடத்தக்க தாக்கம் அவரிடமிருந்தது என்று துணிந்து கூறலாம்.

உண்மையில் மிகச்சிறிய வயதிலேயே புத்தரால் அவர் கவரப்பட்டிருந்தார். அம்பேத்கர் நான்காம் வகுப்பில் தேர்வு பெற்றதற்காக மகர் சமூக மக்கள் அம்பேத்கருக்கு பாராட்டு கூட்டம் நடத்தினர். அக்கூட்டத்தில் அவர் தந்தையின் நெருங்கிய நண்பர் தாதா கெலூஸ்கர் என்பவர் “பரோடா சாயாஜிராவ் கீழைத்தேய நூல் வரிசை”க்காக தானெழுதிய புத்தரின் வாழ்க்கைக் குறித்த நூலை அம்பேத்கருக்கு பரிசாக வழங்கினார். தன்னை அந்நூல் தன்னை அதிகம் பாதித்ததாகவும் அது போன்ற நூல்களை அறிமுகப்படுத்தாமல் ராமாயணம் போன்ற நூல்களையே அறிமுகப்படுத்திய தன் தந்தையின் மீதான விமர்சனத்தையும் அவர் எழுதிச் செல்லுகிறார். அதே போல பௌத்தமே தான் மாறவிருக்கும் மதம் என்று அறிவிக்காத முன்பே அவருடைய நூல் நிலையத்தில் புத்தமதத்திற்கு முதன்மை அளித்திருந்தார் என்று டி.சி.அஹிர் என்பவர் கூறுகிறார். அதோடு அம்பேத்கர் கற்றிருந்த மானுட சமூகவியல் போன்ற துறைகளும் மதம் பற்றிய அவரது கருத்தை உருவாக்கியிருந்தன. மீராநந்தா போன்ற ஆய்வாளர்கள் ஜான்டூயி போன்ற மேலைநாட்டு மனிதாய சிந்தனையாளர்களின் தாக்கத்தினையும் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதோடு சுதந்திரமான சமூக அமைப்பு என்பதற்கேற்பவே தன்னுடைய தேசியம், சனநாயகம், மதச்சார்பின்மை என்பவைகளையும் மறுவரையறை செய்திருந்தார். பிறர் கூறும் சனநாயகம் எது? எவை? என்பதிலிருந்து அடிப்படையிலேயே அம்பேத்கர் மாறுபட்டிருந்தார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்னும் சனநாயக அம்சங்களை ஐரோப்பிய மரபிலிருந்து மட்டுமல்ல தொன்மையான பௌத்த கருத்து களிலிருந்தும் அவர் முன்னெடுக்கிறார். மதமொன்றின் கோட்பாடு அடிப்படை பற்றி பேசும்போது “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கொள்கை சனநாயகத்துக்கு இணக்கமான தாயிருக்க வேண்டும்” என்று கூறுவதின் மூலம் சனநாகய அம்சத்தையும் மத அடிப்படையையும் அவர் இணைக்கும் புள்ளியை நாம் புரிந்து கொள்ளலாம்.

இறுதியாக பௌத்தத்தை அவர் மார்க்சியத்தோடு ஒப்பிட்டு விவாதித்திருப்பது சுவைமிகுந்த பகுதியாகும். அதோடு மார்க்சியர்களின் மீது கொண்டிருந்த நெருக்கத்தையும் அது காட்டுகிறது. “.. இவர்கள் இருவரையும் கற்று இவ்விருவருடைய கொள்கைகளிலும் ஈடுபாடு கொண்டுள்ளவன்” என்ற முறையில் இரண்டு தத்துவங்களின் குறிக்கோள்களும் ஒன்றாக இருப்பதை சுட்டிக் காட்டுகிறார். ஆனால் மார்க்சியத்தின் வழிமுறை களை விமர்சிக்கிறார். “குறிக்கோளை அறிந்து கொள்வதை விட அதன் வழிமுறைகளை அறிந்து கொள்வது அதிக முக்கியம்” என்னும் கருத்தையும் அவர் மார்க்சியத்தின் புறவயமான மாற்றம் என்பதை மறுக்கிறார். சாதி ஒழிப்பு என்பது புற அளவில் நடைபெறக் கூடிய ஒன்று மட்டுமல்ல. சாதி ஒழிப்பு மனமாற்றம் சார்ந்ததாக இருக்கும் என்பது அவர் கணிப்பு. மன அமைப்பை வழி நடத்தக் கூடிய பண்பாட்டு நடத்தை மாற்றத்துக்கு முன்னுரிமை தருகிறார். பௌத்தம் மனம் மற்றும் உடல் என்பதின் வழியாக சமூக மனிதனை அணுகுகிறது.

இந்நிலையில் மனித வாழ்வை எந்திரத் தனமாக மார்க்சியம் கருதுவதாக பேசும் அம்பேத்கர் அதன் வழிமுறைகளை விமர்சிக்கிறார். கம்யூனிச நாடுகளின் சிதைவுக்கு காரணமாக அதன் வழிமுறைகளையே காரணமாக இன்னும் பேசுகிறோம். அம்பேத்கரின் விமர்சனமும் அதைப் பற்றியதுதான். இந்த இடத்தில் அவரின் முடிவு சரியா? தவறா? என்று விவாதிப்பது நோக்கமல்ல மாறாக அவர் இதனை எவ்வாறு புரிந்து கொண்டார் என்பதே இங்கு முக்கியம். குறிப்பாக அவர் எட்டும் முடிவுகளின் அடிப்படையாக சாதி ஒழிப்பு என்பதும் சமூகத்தின் கூட்டு நினைவை உருவாக்குவது என்பதும் அமைந்து நிற்கிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com