Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஆகஸ்ட் 2006

பாலைவனமாகப் போகும் பாலாறு பரிதவிக்கும் தமிழகம்
ராஜசேகரன்

“காவிரி தென்பெண்ணை பாலாறு தமிழ்
கண்டதோர் வையை பொருநை நதி - என
மேவிய ஆறு பல ஓடத் திரு
மேனி செழித்தத் தமிழ்நாடு”
-ஆனந்தத்தில் பாடப்பட்ட தமிழக வரலாறு தற்போது கேள்விக் குறியாகியுள்ளது.

Palaru சமீபத்திய உச்ச நீதிமன்ற உத்தரவு ஒன்று தமிழக மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘பாலாற்றுக்கு குறுக்கே அணை கட்டுவதை தடை செய்ய முடியாது’ என்பது தான் அது.

பருவகாலத்தில் தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரை கர்நாடக அரசு தர மறுத்து வருகிறது; கேரள அரசின் பிடிவாதத்தினால் முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை உயர்த்தாமல் தமிழகத்திற்கு உரிய நீர் இதுவரை கிடைக்காமலே உள்ளது; தாமிரபரணி ஆற்று நீரை கொள்ளையடிக்கிறது பன்னாட்டு நிறுவனம். இத்தகைய பழிவாங்குதல்களால் தென்தமிழ்நாடு வறண்டு கிடக்கிறது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் விதமாக தற்போது வட தமிழ்நாட்டையும் பாலைவனமாக்க ஆந்திர அரசு திட்டம் தீட்டுவது அதிர்ச்சி அளிப்பதாய் உள்ளது.

‘தன் ஊற்றிப் பெருக்கால் உலகூட்டும்’ என்று ஒரு சமயத்தில் புகழப்பட பாலாற்றினால் தமிழ்நாட்டில் 317 ஏரிகள் நிரம்பி, 2,45,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. வெள்ளம் வராத காலங்களில் 606 ஊற்றுக் கால்வாய்கள் பாலாற்றுப் படுகை மக்களின் தாகத்தை தீர்த்து வந்தன. பாலாற்றுப் படுகையில் உள்ள 11,000 கி.மீ. பரப்பில் உள்ள தமிழக விவசாயிகளும் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளுர், சென்னை மாவட்ட மக்களும் குடிநீர் தேவைக்காக பாலாற்றை நம்பியுள்ளனர். நீருக்கும் மணலுக்கும் பெயர் போன பாலாற்றை பாலைவனமாக்க ஆந்திர அரசு ரூ.150 கோடி செலவில் குப்பம் அருகே கணேசபுரத்தில் அணை கட்டத் திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே, கர்நாடக அரசு பாலாற்றின் குறுக்கே பேத்தமங்கலத்திலும், இராம்சாகரிலும் அணைகளைக் கட்டி பாலாற்றின் தண்ணீரை வெகுவாகக் குறைத்து விட்டது. 2002ல் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த காலத்தில் பாலாற்றின் துணை ஆறான பொன்னை ஆற்றின் குறுக்கே அணையைக் கட்டி, தமிழகத்திற்கு தண்ணீர் வருவதைத் தடுத்து நிறுத்தியது. மற்றொரு கிளை நதியான கைகல் ஆற்றின் (மலட்டாறு) குறுக்கே அணையைக் கட்ட ஏற்பாடு செய்து வருகிறது ஆந்திர அரசு.

1892ல் மைசூர் சமஸ்தானத்திற்கும், சென்னையை ஆண்ட ஆங்கில அரசுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி, பாலாறு உள்ளிட்ட 15 ஆறுகளின் தொடக்கப் பகுதிகளில் உள்ளவர்கள் அணை கட்ட விரும்பினால் கடைமடைப் பகுதியில் உள்ள தமிழக விவசாயிகளிடம் ஒப்புதல் பெற வேண்டும். ஆனால் இந்த ஒப்பந்தத்தை கூட மதிக்காமல் காலில் போட்டு மிதித்து விட்டு பாலாற்றில் அணையைக் கட்டத் துடிக்கிறது ஆந்திர அரசு.

‘பாரம்பரியமாக ஒரு ஆற்று நீரை எந்த நாடுஅதிகம் பயன்படுத்தி வந்ததோ அந்த நாட்டிற்குத் தான் அதிக உரிமை என்றும், ஒரு நதி உற்பத்தியாகும் இடத்தில் உள்ளவர்களைவிட அந்த ஆற்றின் கடைமடைப் பகுதியில் உள்ளவர்களுக்குத் தான் உரிமை’என்று கூறுகிறது சர்வதேச நதி நீர்ச்சட்டம். இவை எவற்றையும் மதிக்காமல் தான்தோன்றித் தனமாக காவிரியின் குறுக்கே 4க்கும் மேற்பட்ட அணைகளைக் கட்டியுள்ளது கர்நாடக அரசு. இத்தகைய சூழ்நிலையால் அதிகம் பறிபோவது தமிழ்நாட்டின், நீர்வளம் மட்டுமல்ல; தமிழகத்தின் கனிம வளமும் இயற்கை வளமும் தான்.

தமிழ்நாட்டில் நமக்கே பற்றாக்குறையான மின்சாரம் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் இங்கிருந்து ஆந்திராவின் ராம குண்டத்திற்கும், கர்நாடகாவிற்கும் மின்சாரம் அனுப்பப்படுவதால் வருடந்தோறும் மின்சார பற்றாக்குறை ஏற்படுகிறது. இதே போன்று தமிழகத் தொழிலாளர்களின் உழைப்பில் உருவான நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம், அனல் மின் நிலையங்கள், நரிமணம் பெட்ரோல் கிணறுகள் ஆகியவற்றின் மீது தமிழகத்திற்கு எந்த உரிமையும் இல்லை என்கிறது மத்திய அரசு. அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தைச் சுரண்டிய அந்நிறுவனத்தில் அப்பகுதி மக்கள் வேலை பெறுவது என்பது இன்றைக்கு குதிரைக் கொம்பாகிவிட்டது. தற்போது நெய்வேலி நிறுவனப் பங்குகள் விற்பனை எதிர்ப்பு போராட்டத்தின் போது கூட இதுகுறித்து பேசப்பட்டிருக்கிறது.

ஆந்திராவிலும், டில்லியிலும் ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சி இப்பிரச்சினைகளைத் தீர்க்க முயலாமல் ஆந்திராவில் அணையைக் கட்டுவது; தமிழ்நாட்டில் அதை எதிர்த்துப் போராடுவது என இரட்டை வேடம் போடுகிறது.

பா.ஜ.க.வோ பாலாற்றில் அணை கட்டுவதற்கு எதிராக ஆந்திராவில் போராடாமல், தமிழகத்தில் வெற்றுக் கூச்சல் போடுகிறது.

மத்திய அரசில் பங்கேற்றுள்ள தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் மைய அரசை நிர்பந்தப்படுத்தாமல் வாய்மூடி மௌனம் காக்கின்றன. காவிரி வழக்கு தேங்கிக் கிடக்கும் நிலையில் சென்ற ஜெயலலிதா ஆட்சியின் போது உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பாலாறு வழக்கு தமிழக அரசுக்கு எதிராக முடிந்திருக்கிறது. தற்போதைய தி.மு.க. அரசு இந்த விசயத்தில் எத்தகைய அடுத்த கட்ட முடிவை எடுக்கப் போகிறது என்பது தெரியவில்லை. அந்த முடிவு வடதமிழ்நாட்டு மக்களின் உயிர்நாடிப் பிரச்சனை என்பதை உணர்ந்ததாக இருந்தால் நலம்பயக்கும்.

பாலாறு வறண்டது ஏன்?: பழ.நெடுமாறன்

பாலாறு வறண்டதற்கு மைசூர் பகுதியில் ஏரிகள் வெட்டப்பட்டு தண்ணீர் தேக்கப்பட்டதே காரணமாகும். நந்திமலையில் பாலாறு உற்பத்தியாகும் இடத்தில் இருந்து சிறிது தொலைவில் நங்குலி ஏரி அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏரியில் இருந்து தமிழக எல்லை 17 1/2 மைல் தொலைவில் உள்ளது. இந்த ஏரிக்கு கீழே செட்டிக்கல் ஏரி அமைந்துள்ளது. இதன் துணை ஏரிகளாக மேலும் 5 ஏரிகள் அமைக்கப் பட்டுள்ளன.

செட்டிக்கல் ஏரிக்கும் தமிழக எல்லைக்கும் இடையே உள்ள தூரம் 10 மைல்கள் ஆகும். இதைத் தொடர்ந்து மல்லிநாயக்கன் அல்லி என்னும் உபநதி ஓடி வந்து பாலாற்றில் கலக்கிறது. இந்த உபநதி நீரைத் தேக்குவதற்கு 4 ஏரிகள் அமைக்கப்பட்டன. தமிழக எல்லையில் இருந்து 6 1/2 மைல் தொலைவில் இந்த ஏரிகள் அமைந்துள்ளன. மற்றொரு உபநதியான பெட்மடு என்பதின் நீரைத் தேக்குவதற்கு 4 ஏரிகள் அமைக்கப் பட்டுள்ளன. தமிழ்நாட்டின் எல்லையில் இருந்து 7மைல் தொலைவில் இந்த ஏரிகள் அமைந்துள்ளன. மற்றொரு உபநதியான ‘தைலு’ நதியின் நீரைத் தேக்க 10 ஏரிகள் அமைக்கப்பட்டன. இவை அத்தனையும் தமிழக எல்லையில் இருந்து 23 மைல் தொலைவுக்குள் உள்ளன. மேலே அமைக்கப்பட்ட அத்தனை ஏரிகளும் நிரம்பிய பிறகே வழியும் தண்ணீர் பாலாற்றில் விடப்படுகிறது.

1954ஆம் ஆண்டில் வடஆற்காடு செங்கற்பட்டு மாவட்ட விவசாயிகளின் மாநாட்டில் மீண்டும் இந்தப் பிரச்சனை எழுப்பப்பட்டது. கிட்டத்தட்ட 100 ஆண்டு காலத்திற்கு மேலாக தமிழக விவசாயிகள் இந்த அநீதியை எதிர்த்துப் போராடி வந்த போதிலும் அவர்களுக்குப் பரிகாரம் கிடைக்கவில்லை. கர்நாடக அரசு தமிழகத்தின் ஆட்சேபனையை கொஞ்சமும் சட்டை செய்யவில்லை.

தமிழகம்: நதிநீர்ப் பிரச்சனைகள் புத்தகத்திலிருந்து

“பாலாறு மற்றும் கிளை நதிகள், காஞ்சிபுரம் மாவட்டத்தின் லட்சக் கணக்கான ஏக்கர்களுக்கு பாசனம் அளிக்க வேண்டும். 100 ஆண்டுகளுக்கு முன்னர் வரை, பாலாறு வற்றாத ஜீவநதியாக இருந்தது. இப்போது மழைக் காலங்களில் மட்டும் வெள்ளம் பாய்கிறது. இதன் பால் போன்ற மென்மையான மணற்பரப்பு, மணற் கொள்ளையர்களை மயக்கியிழுக்கும் ஒன்றாக இருக்கிறது. சுரங்கம் போல மணல் வெட்டி யெடுக்கப்பட்டதால், மழைக் காலத்திலும் நீர் ஓடுவது பிரச்சனையாகிப் போய் நதி வறண்டு விட்டது” - எல்.அந்தோணிசாமி, தமிழ்நாடு சுற்றுச் சூழல் கழகம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com