Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஆகஸ்ட் 2006

கானல் நீராகும் வாக்குறுதிகள்
ராஜசேகரன்

“சொட்டு மருந்து கொடுத்தாலும்
Karunanidhi விரலில் மை வைக்கிறார்கள்.
தேர்தலில் வாக்களிக்கச் சென்றாலும்
விரலில் மை வைக்கிறார்கள்.
இரண்டும் ‘போலியோ’!”
-என்கிறது ஒரு புதுக்கவிதை

நடந்து முடிந்த 13வது சட்டமன்றத் தேர்தல் தமிழகம் முழுமைக்கும் இலவச எதிர்பார்ப்புகளை தூவிவிட்டுச் சென்று உள்ளது. தமிழகத்தில் முதன் முறையாக கூட்டணிக் கட்சிகளின் தயவோடு ஆட்சியைப் பிடிக்கும் ‘பெரும்பேற்றை’ தி.மு.க. பெற்றுள்ளது. எந்த தேர்தலிலும் இல்லாத வகையில் சமீபத்திய தேர்தலின்போது எல்லா அரசியல் கட்சிகளும் ஏதாவதொரு வகையில் ‘இலவச’ வாக்குறுதிகளை வழங்குவதாக அறிவித்திருந்தன.

கிலோ அரிசி 2 ரூபாய், கூட்டுறவு கடன் ரத்து, சத்துணவில் வாரம் 2 முட்டை வழங்குதல், எஸ்மா, டெஸ்மா சட்டங்கள் ரத்து, மதமாற்றத் தடைச் சட்டம் நீக்கம், அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாயப் பாடம் போன்ற சட்ட மசோதாக்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன.

எல்லா மக்களாலும் ‘பெரிதும் எதிர்பார்ப்பதாக’மீடியாக்களால் பூதாகரமாக்கப் பட்ட இலவச கலர்டிவி வரும் செப்டம்பர் மாதம் முதல் பெரியார் நினைவு சமத்துவ புரங்களிலிருந்து துவக்கப்பட இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. பெரியார் நினைவு சமத்துவ புரங்களில் இருப்பவர்களில் 98ரூ பேர் தி.மு.க.வினர் என்பதும் அவர்களின் பெரும்பாலானோர் சமத்துவபுர வீடுகளையே ஒத்திக்கு விற்றுவிட்டு தற்சமயம் நகரங்களில் நிரந்தரமாக தங்கிவிட்டனர் என்பதும் இங்கு கூடுதல் செய்தி.

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் சொல்லப் பட்ட வாக்குறுதிகள் மட்டுமே தற்சமயம் நிறை வேற்றப்பட்டு வருகின்றன. அதே சமயம் ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியில் பங்கு தர மறுப்பதால் வரவிருக்கும் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டும் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முழங்கி வருகிறார். இதை சமாளிக்கும் விதமாக காங்கிரசின் தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றப் படவேண்டிய இக்கட்டான சூழலுக்கு தி.மு.க. தள்ளப்பட்டிருக்கின்றது.

சமூகத்தில் அடுத்த கட்ட அரசியலை தீர்மானிக்கக் கூடிய கோடிக்கணக்கான இளைஞர்களின் பிரச்சினை அது. ‘வேலை கொடு (அ) வாழ்வூதியம் வழங்கு’என்பதுதான் அதன் அடிநாதம்.

எல்லாத் தேர்தலின் போதும் அரசியல் கட்சிகளால் எழுப்பப்படும் ‘லட்சக் கணக்கானோர்க்கு வேலை’எனும் கோஷம் கொஞ்ச நாட்களிலேயே கானல் நீராக மறைந்து போய்விடும். இந்த தேர்தலிலும் அது நிகழ்ந்து விடுமோ என்கிற அச்சம் இளைஞர்களிடமும் எழுந்திருக்கிறது.

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 3 வருடம் வரை வேலை கிடைக்காத 10ம் வகுப்பு வரை முடித்தவர்களுக்கு மாதம் ரூ.150, 12ம் வகுப்பு நிறைவு செய்தவர்களுக்கு மாதம் ரூ.200, பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.300 உதவித் தொகை யாக வழங்குவது மற்றும் காலியாக உள்ள அரசுப்பணி இடங்களில் 3 லட்சம் இளைஞர்களுக்கு உடனடி வேலை வாய்ப்பு என்று தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது.

இதே கோரிக்கையை காங்கிரஸ், பா.ம.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போன்றவையும் வாக்குறுதிகளாக அறிவித்து உள்ளன. இதையும் தாண்டி ஒருபடி மேலே போய் ம.தி.மு.க. உதவித் தொகை ரூ.500ஆக வழங்கப்படும் என அறிவித்தது.

இந்நிலையில் தற்போது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் தமிழக பட்ஜெட்டில் வேலை வாய்ப்பு அலுகலகங்களில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் வேலையில்லாமல் இருக்கும் படித்த இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட ‘3 வருடம் வேலை கிடைக்காதவர்கள்’ எனும் வாக்குறுதியில் இருந்து விலகி ‘5 வருடம் வரை வேலை கிடைக்காதவர்கள்’என மாற்றி சொல்லி ஏமாற்றும் வகையில் அமைந்திருக்கிறது.

வேலை கிடைக்கும் வரை உதவித் தொகை வழங்கப்படும் என இந்த அறிவிப்பில் உத்தரவாதம் எதுவும் அளிக்கப்படவில்லை. உதவித் தொகையும் 3 வருடங்களுக்கு மட்டும் தான். இந்த அறிவிப்பு வேலை இல்லாத இளைஞர்களுக்கு உதவி செய்வது போல் பாவலா காட்டும் ஒரு மோசடி செயலே. அதைவிடுத்து வேலை வாய்ப்பகங்கள் மூலம் வேலை வாய்ப்பளிக்கப் பட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

உணவு, கல்வி, வேலைவாய்ப்பு, போதுமான ஊதியம், பாதுகாப்பான வாழ்வு போன்றவை ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமைகள் ஆகும். அதை தேர்ந்தெடுத்த அரசாங்கம் செய்து தர வேண்டுமென்பது இங்கு கட்டாயம். ஆனால் நாடு சுதந்திர மடைந்து இவ்வளவு நாட்களாகியும் இளைஞர் களுக்கான வேலை வாய்ப்புகள் எட்டாக் கனியாகவே இருந்து வருகின்றன.இளைஞர்களுக்கான கல்வியில் அக்கறை காட்டுவதாக நடிக்கும் அரசுகள் வேலை வாய்ப்பில் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை.

கிராமப் பகுதியிலும், மாநகரின் புறநகர்ப் பகுதிகளிலும் வாழும் பெரும்பான்மையான ஏழை, எளிய மக்கள், தலித் இளைஞர்கள் பள்ளிப் படிப்பு படிப்பதே இயலாத சூழலில் பட்டப் படிப்பு வரை படித்து வருகின்றனர். அவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரவேண்டிய அரசுகள் அவர்களுக்கு விரக்தியை உண்டு பண்ணி வருகின்றன.

“என்னத்த படிச்சு என்ன செய்ய? கவர்ன்மெண்ட் வேலை இனிமே எப்பவும் கிடைக்காது” எனும் கிராமத்து நம்பிக்கைகள் இன்றைக்கு உண்மையாகி வருகின்றன.

உலகமயமாக்கலின் விளைவாக எழுந்துள்ள பட்டினி, வறுமை, கடன்தொல்லை, தற்கொலை, வேலையின்மைப் பிரச்சனைகள் சமூகத்தில் கவலையளிக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளன.

Jayalalitha கணிப்பொறி சார்ந்த படிப்பு படித்தால் வேலைக்குச் சென்று விடலாம் என்னும் தற்போதைய நம்பிக்கை உலகமயமாக்கல் சூழலால் பிபிஓ, கால்சென்டர்களாக உருவெடுத்து இளைஞர்களை கசக்கிப் பிழிந்து உமிழ்ந்து வெளித்தள்ளுகின்றன.

படித்து, பட்டம் பெற்று வேலை கிடைக்காமல் கிராமத்து இளைஞர்கள் பலவிதமான போதைப் பழக்கத்திற்கும் தவறான செய்கைகளுக்கும் ஆட்பட்டு வருகின்றனர். மெட்ரோ பாலிட்டன் மாநகர்களில் வாழும் இளைஞர்கள் ஐஐடி, ஐஐஎம் அகில இந்திய மருத்துவ கல்வி நிறுவனம் போன்றவற்றில் படித்து முடித்தவுடனேயே வேலைக்குச் செல்வதும், சென்னை தவிர்த்த தமிழகத்தின் கடைக்கோடி இளைஞர்கள் படித்து முடித்து விட்டு வேலை யின்றித் தற்கொலை செய்து கொள்வதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை மறைத்து விட்டு ஆளும் அரசுகள் வருடத்திற்கு இவ்வளவு பேருக்கு வேலை தந்திருக்கிறோம் என்று பட்டியலிட்டு பொறுப்பை தட்டிக்கழித்து வருகின்றன. தற்போதைய தேர்தல் அறிக்கையில் 5 லட்சம் பேருக்கு உடனடி வேலை நியமனம் என வாக்குறுதி அளித்த அதிமுக அரசு, தனது கடந்த கால ஆட்சியின் போது வேலை நியமனத் தடை ஆணையை பிறப்பித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய திமுக அரசும் 3 லட்சம் பேருக்கு உடனடி வேலை என அறிவித்துவிட்டு, இதுவரை மௌனம் சாதிப்பது இளைஞர்களை ஏமாற்றும் நாடகமே.

சமீபத்திய ஐ.நா.வின் அறிக்கையொன்று வளரும் நாடுகளில் தற்கொலை செய்து கொள்ளும் இளைஞர்களில் 80ரூ மேற்பட்டோர் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் என்று தெரிவிக்கிறது.

10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்வு முடிந்ததும் சான்றிதழ்களை எடுத்துக் கொண்டு மாணவர்கள் ஆர்வத்தோடும், கனவுகளோடும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்வதும், மூன்று வருடத்திற்கு ஒருமுறை புதுப்பித்துக் கொள்வதும் ஏதோ நம்பிக்கையில் நடந்து கொண்டே இருக்கிறது. ஆனால் அதிகாரத்துக்கு வரும் அரசுகள் இந்த நம்பிக்கை குறித்து சிந்திப்பதாகவே தெரியிவில்லை.

தர்மபுரி மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களிலும் கேரளா, ஆந்திரா, திரிபுரா, மேகாலயா, பீகார், மேற்கு வங்காளம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும், நக்சலைட்டுகள் பெருகி வருவதற்கு அவர்கள் சொல்லும் காரணம் மிகவும் முக்கியமானவை. பசி, பட்டினி, பஞ்சம், வேலையின்மை, கல்வியின்மை போன்றவைகள் தான் அவர்கள் இத்தகைய நிலைக்கு ஆளாக்குகின்றன என்கிறார்கள்.

இலவச வாக்குறுதிகளை மட்டுமே அளித்துவிட்டு வாக்காளர்களின் வாக்குகளைத் தட்டிப் பறித்துவிட்டு அடிப்படைப் பிரச்சனைகளை மறந்து எடுக்கப்படும் முடிவுகள் எத்தனை நாட்களுக்கு மக்களை சமாதானப்படுத்தி வைத்திருக்கும் என்று தெரியவில்லை.

இளைஞர்களுக்கு குறைந்த பட்சமாக இத்தகைய உதவித் தொகை உடனடியாக அளிக்கப்பட்டால் அவர்கள் தனியார், அரசு நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்கும் செலவுக்காவது உதவும். இந்த தொகை கூட இல்லாத / கிடைக்காத அடித்தட்டு இளைஞர்கள் இன்றைக்கு படித்துவிட்டு அலைந்து கொண்டிருக்கின்றனர். தற்போது உத்திரப் பிரதேசத்தில் வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் இளைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் உ.பி.யில் உதவித் தொகை வழங்கும் விழாவில் பேசிய முலாயம்சிங் யாதவ் உதவித்தொகை இன்னும் படிப்படியாக உயர்த்தி தரப்படும். விரைவில் அரசு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழக பட்டதாரி இளைஞர்களால் எழுப்பப்பட்டிருக்கும் ‘வேலைகொடு அல்லது வாழ்வூதியம் வழங்கு’எனும் கோரிக்கையை அரசு தனது கவனத்தில் கொள்ள வேண்டும். வாழ்வூதியம் வழங்கப் படாவிட்டாலும் பரவாயில்லை, குறைந்த பட்சம் வேலை வாய்ப்பையாவது அரசு ஏற்படுத்தி தர வேண்டும். அது உடனடியாக வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் அமலுக்கு வந்தால் பயனுள்ளதாக அமையும்.

‘சொன்னதைச் செய்வோம்! செய்வதைச் சொல்வோம்!’ எனத் தேர்தல் அறிக்கையிலே திமுக தெரிவித்தருந்தது. இந்நேரத்தில் முதல்வரிடம் இளைஞர்கள் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்! ‘சொன்னதை கட்டாயம் செய்யுங்கள்’என்பது தான் அது.

‘மீனைப் பிடித்துக் கொடுப்பதைவிட மீனைப் பிடிக்கக் கற்றுக் கொடுப்பதே சிறந்தது’என்பதை உணர்ந்து செயல்பட வேண்டியது தமிழக அரசின் தற்போதைய கட்டாயக் கடமை. அதை முதல்வர் உணர்ந்திருப்பார் என்று நம்புவோம்.

வேலை வாய்ப்பகங்கள் நிலை

1. தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் தமிழகம் முழுமைக்கும் 28 இடங்களில் உள்ளன.

2. தொழிற்படிப்புகள் மற்றும் முதுநிலைப் படிப்புகளை பதிவு செய்யும் அலுவலகம் சென்னை சாந்தோமில் இயங்கி வருகிறது.

3. மருத்துவம், துணை நிலை மருத்துவப் படிப்புகளை பதிவு செய்யவும் மருத்துவ கவுன்சில் சென்னையில் உள்ளது.

4. சிறுபான்மையின படித்த இளைஞர்கள் 60ரூக்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்யும் வழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர். குறிப்பாக இஸ்லாமியப் பெண்கள் மிகவும் பின்தங்கியுள்ளனர்.

5. கிராமப்புற தலித்துகளில் 80ரூ மேற்பட்டோர் வேலை வாய்ப்பகங்களின் முறை குறித்து தெரியாமல் உள்ளனர்.

6. கிராமப்புற தமிழகத்தில் அத்தக்கூலி வேலையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர் களின் எண்ணிக்கை, தேசிய சராசரியைவிட அதிகமானதாக இருக்கிறது. கிராமப்புறத் தமிழகத்தில் 50ரூக்கும் அதிகமானவர்கள் தற்காலிக வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இப்பிரிவுக்கான தேசிய சராசரி 37.4ரூ மட்டுமே.

7. 90களிலிருந்து தமிழகத்தின் கிராமப்புறங்களில் இளைஞர்களுக்கு வேலையின்மை அதிகரித்து வருவதை புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தமிழகத்தில் வேலையின்மை அதிகரித்து வருவது சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com