Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஆகஸ்ட் 2006
சபரிமலை - ஐயப்பன் கோவில் சர்ச்சை

மறை ஓதும் மலைகளின் மறுபக்கம்
ஆர்.பிரேம் குமார்

“... வாயில் இட்டுத் தொப்பை வளர்க்கும் சதிக்கிடங்கைக் கோயிலென்று காசு தரும் கொள்கை தவிர்ப்பவளே...” தொட்டிலில் கிடந்த குழந்தை தாத்தா பாடுவதைக் கேட்டு பொக்கென்று சிரித்தது.

“என்ன பார்த்தசாரதி, காலையிலேயே பேத்திக்குத் தாலாட்டு பாடுறது மாதிரி இருக்கு?” கேட்டவாறே வீட்டுக்குள் நுழைந்தார் குருசாமி.

“நமக்குத் தெரிஞ்சதை வச்சுத்தான் பாட வேண்டி இருக்கு... பாரதிதாசன் எழுதின தாலாட்டுப் பாட்டு இது... தமிழ் வாத்தியாரா இருந்து ஓய்வு பெற்றதாலே ஏதோ நாக்கில நாலு வரி தங்கி இருக்கு. மகனும் மருமகளும் வேலைக்குன்னு காலையிலேயே போயிடறாங்க. பேத்தியைப் பார்க்கிறதுக்குன்னு கூலி இல்லா வேலைக்காரனா நான் இருக்க வேண்டி இருக்கு...” அலுத்துக் கொண்டார் பார்த்தசாரதி.

“அப்படிச் சொல்லாதீங்க பார்த்தன்... ஒரு குழந்தை கிடைக்கலியேன்னு அவனவன் மனசு வெறுத்து அலையிறான்... இங்கே இருந்து புறப்பட்டுப் போய் காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து 141 கிலோ மீட்டர் தூரத்திலே, கடல் மட்டத்தில் இருந்த 3952 மீட்டர் உயரத்தில் இருக்கிற அமர்நாத் குகையில போய் பனிலிங்கத்தை வழிபடக் கூட தயாரா இருக்காங்க... ஏன்னா தலைமுறை இல்லேன்னா வாழ்ந்து என்ன பிரயோஜனம்? நம்ம நாட்டு புராண இதிகாசங்களும் புத்திர பாக்கியத்தைத் தானே பெரிய விஷயமாப் பேசுது... நீங்க பாக்கியம் செய்த ஆளு பார்த்தன். அதான் பேத்தியை வச்சுக் கொஞ்சிக்கிட்டு இருக்க முடியுது...!”

“குருசாமி... நின்னுக்கிட்டே பேசுறீங்களே... உட்காருங்க... நீங்க அமர்நாத் குகையில பனிலிங்கம் என்று சொன்ன உடனே எனக்கு ஞாபகம் வர்றது சமீபத்தில் இறந்து போன ஜோசப் இடமருகுதான்!”

பேத்தியை மடியில் எடுத்து வைத்துக் கொண்டு குருசாமியின் பக்கத்தில் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்தார் பார்த்தசாரதி.

“யாருன்னு சொன்னீங்க...? ஜோசப் இடமருகு?”

“ஆமா... உம்ம மாதிரி ஆன்மீகப் பழங்களுக்கு அவரு சிம்ம சொப்பனம் ஆச்சே...! அவரு கடைசியா எழுதின கட்டுரை அமர்நாத் பனி லிங்கத்தைப் பற்றித்தான். மனுசன் நேரில போய் பார்த்திருக்காரு. ரொம்ப துணிச்சலான பகுத்தறிவு வாதி! தமிழ் நாட்டுல அப்படி ஒரு ஆள் இல்லியேன்னு வருத்தமாயிருக்கு... உம்ம மாதிரிதான் நீளமா தாடி வளர்த்திருப்பாரு... தெரியாதா உமக்கு?”

“‘அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே வைகுண்டம்’ என்கிற மாதிரி ஆகிப் போச்சு வாழ்க்கை. எப்ப பார்த்தாலும் விரதம், மண்டல பூஜை, நடைதிறப்பு, யாத்திரைன்னு ஆகிப் போனதாலே நிறைய விஷயங்கள் தெரியல... சரி; அமர்நாத் பனி லிங்கத்தைப் பற்றி சமீபத்தில் பேச்சு அடிபட்டுதே... என்ன விஷயம்...?”

“‘ஈ என்றாலும் இல்லையே அது கொசு’என்கிற உம்மகிட்ட போய் அது பற்றிப் பேசிப் புண்ணியம் இல்லை என்றாலும் கேட்டதற்காகக் சொல்கிறேன்.

வருடத்தில் கிட்டத்தட்ட 12 மாதங்களும் பனி மூழ்கிக் கிடக்கின்ற இமயத் தாழ்வரையில் மே-ஜுன் மாதங்களில் பனி உருகத் துவங்கும். இந்த நேரத்தில் அமர்நாத் குகையின் மேலிருக்கும் ஓட்டை வழியே குகைக்குள் இறங்குகின்ற பனி நீர்தான் ஆறுமுதல் எட்டடி உயரத்தில் குகைக்குள் பனி லிங்கம் போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது... கிட்டத்தட்ட ஒரு மாத காலம் மட்டுமே பனி லிங்கம் காணப்படும். பிறகு எங்கும் பனி நீக்கமற நிறைந்து விடும்... ‘இந்தப் பனி லிங்கம் என்பது ஓர் இயற்கை விளையாட்டு மட்டுந்தான். இதற்குப் போய் ஆராதனை நடத்துவதில் அர்த்தம் இல்லை’என்று 19ம் நூற்றாண்டிலேயே ஆரிய சமாஜத்தைத் தோற்றுவித்த தயானந்த சரஸ்வதி கூறி இருக்கிறார்...” பார்த்தசாரதியின் பேச்சை இடைமறித்தார் குருசாமி.

“பார்த்தா... நீங்க சொல்ற மாதிரி எல்லா கோயில் வரலாறும் சில கதைகளால் தான் கட்டமைக்கப் பட்டிருக்கு; அதுக்கு விஞ்ஞான விளக்கம் வேற மாதிரி இருக்கு; நாட்டுப்புறவியல் விளக்கம் வேற மாதிரி இருக்கு... என்னை மாதிரி தெய்வ நம்பிக்கை உள்ளவங்களுக்கு இதெல்லாம் முக்கியம் இல்லை. ‘சிவனே...!’ என்று மனதாரப் பிரார்த்தித்துக் கொண்டு புண்ணியம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் யாத்திரை போகிறோம்... இந்த யாத்திரையில் போய் துப்பாக்கிச் சூடு நடத்தி பலபேரை முஸ்லிம்கள் கொன்னுடறாங்களே...!”

“குருசாமி... முஸ்லிம்கள் என்று பொதுப்படையா எல்லோரையும் சேர்த்துச் சொல்லாதீங்க. அமர்நாத் பனி லிங்கம் பற்றி உலகுக்கு வெளிப் படுத்தினதே ஒரு முஸ்லிம்தான்னு சொல்றாங்க... அந்தக் கதை தெரியுமா?”

“தெரியலியே...!” அப்பாவியாகச் சொன்னார் குருசாமி.

“குழந்தை தூங்கிடுச்சு... ஒரு நிமிஷம் இருங்க. படுக்க வச்சிட்டு வாரேன்...!” குழந்தையை ஒரு பூச்செண்டு போலத் தூக்கிச் சென்று மெத்தைக் கட்டிலில் படுக்க வைத்துவிட்டு வந்தார் பார்த்தசாரதி. குருசாமியின் அருகில் உட்கார்ந்து பேச்சைத் தொடர்ந்தார்.

“... கிட்டத்தட்ட 300 வருடங்களுக்கு முன்புதான் அமர்நாத் குகை கண்டு பிடிக்கப் பட்டது. ஆடுகள் மேய்த்து வாழுகின்ற, காஷ்மீரின் ‘போட்டியா’இனத்தில் பட்ட முஸ்லிம் இளைஞரான மாலிக் என்பவர்தான் இந்தக் குகையைக் கண்டு பிடித்தவர் என்று சொல்லப்படுகிறது. கோடை காலத்தில் பனி உருகும் போது ஆட்டிடையர்கள் அவ்வழியே கடந்து செல்வார்கள். அப்படி ஒரு நாள் இரவில் குளிரில் விறைத்தபடி மாலிக் நடந்து செல்லும் போது ஒரு முனிவர் அவருக்கு சிறிது நிலக்கரி அளித்தாராம். அதை வீட்டில் கொண்டு வந்து பார்த்தபோது எல்லாம் தங்கக் கட்டிகளாக இருந்ததாம். அதற்காக நன்றி சொல்ல மாலிக் குகை இருந்த பகுதியில் முனிவரைத் தேடிச் சென்றார். அங்கு முனிவர் தென்படவில்லை. மாறாக ஒரு குகையில் தானாக உருவான ‘சுயம்பு’ பனி லிங்கத்தைக் கண்டார். அதற்குப் பின் துவங்கியதுதான் அமர்நாத் தீர்த்த யாத்திரை...!”

“அட...!” வியப்பை வெளியிட்டார் குருசாமி.

“காலப் போக்கில் அமர்நாத் யாத்திரை அமர்க்களப்பட்டுவிட்டது. இந்தியா முழுவதிலிமிருந்து சுற்றுலா நிறுவனங்கள் அமர்நாத் யாத்திரைக்கு ஆள் பிடிக்க ஆரம்பித்து விட்டன. சமீப காலங்களில், ஜம்மு - காஷ்மீரில் இரண்டு புண்ணியத் தலங்களுக்கு பெருவாரியான இந்து பக்தர்கள் தீர்த்த யாத்திரை போவது அதிகரித்து வருகிறது. ஒன்று அமர்நாத்; மற்றது, வைஷ்ணவ தேவி கோயில். இதன் மூலம், பெருகி வரும் சுற்றுலா பயணிகளின் வரவால் அதிக இலாபம் சம்பாதிப்பவர்கள் சுற்று வட்டாரங்களில் உள்ள முஸ்லிம் வணிகர்கள்தான். ஆனால் சில தீவிரவாதக் குழுக்களின் திடீர் தாக்குதல் காரணமாக கோயில் வளாகத்துக்குள் முஸ்லிம்கள் வணிக நோக்கில் நுழைவது தடை செய்யப்பட்டுள்ளது. சுற்று வட்டாரத்தில் முஸ்லிம்களின் கடைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. காலங்காலமாக, அமர்நாத்தில் வசூலாகும் காணிக்கையில் ஒரு பகுதி ‘போட்டியா’மாலிக் குடும்பத்தினருக்கு அளிப்பது மரபு. இந்தக் குடும்பத்தினர்தான் அமர்நாத் செல்லும் பாதையில் மருத்துவ முகாம்கள் அமைத்து உள்ளனர். தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்த பிறகு, அமர்நாத் குகை எல்லைக்குள் ‘போட்டியா’ மாலிக் குடும்பத்தினர் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில் புண்ணியம் தேடி வரும் பக்தர்களின் எண்ணிக்கை கூடி உள்ளது.

பனி லிங்கத்தைக் காண வேண்டி பல்லாயிரம் மைல்கள் பயணம் செய்து வந்து இறங்குகின்ற பக்தர்களை ஏமாற்றக் கூடாது என்ற எண்ணத்தினாலோ, அல்லது பனி லிங்கம் நீண்ட நாட்கள் தரிசனம் அளித்தால்தான் வருமானம் அதிகம் கிடைக்கும் என்ற எண்ணத்தினாலோ, இந்த வருடம் ‘செயற்கையாக’ பனி லிங்கம் அமைக்கும் முயற்சி நடந்தது பற்றி செய்தி வெளியிட்டுள்ளன பத்திரிகைகள்.

எல்லா வருடமும் மே இரண்டாம் வாரத்தில் பனி லிங்கம் ‘தோற்றம்’ கொள்ளும். அதற்கு முன் அமர்நாத் குகையை சுத்தம் செய்வது வழக்கம். இந்த வருடம் குகையைச் சுத்தம் செய்யச் சென்ற போது அங்கே பனி லிங்கம் இல்லை. தட்பவெப்பநிலை பனி லிங்கம் உருவாகத் தோதுவாக இருக்கவில்லை. எனவே அமர்நாத் குகைக் கோயில் நிர்வாகக் குழு, பக்தர்களை ஏமாற்றக் கூடாது என்ற நோக்கத்தில், இந்திய இராணுவத்தின் ‘மிகை உயர யுத்தப் பள்ளி’(High Altitue Warfare) நிபுணர்களின் உதவியுடன், பனிக் கட்டிகளோடு இரசாயனக் கலவை சேர்த்து செயற்கையாகப் பனி லிங்கத்தை நிறுவினார்கள் என்று குற்றம் சாட்டப்படுகிறது. மகந்த் கிரி என்ற கோயில் நிர்வாகக் குழு உறுப்பினரே நீதி விசாரணை வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளார். எனவே அவ்வளவு எளிதாக இந்தக் குற்றச்சாட்டை ‘பொய்’ என ஒதுக்கித் தள்ளிவிட முடியாது!”

பார்த்தசாரதி பேசுவதை அமைதியாகக் கேட்டுக் கொண்டு இருந்தார் குருசாமி. அப்போது “குருசாமி இருக்காரா?” என்று கேட்ட படியே உள்ளே நுழைந்தார் சிவகுமார். பார்த்தசாரதியின் உறவுக்காரப் பையன்தான் சிவகுமார்.

சிவகுமார் காவல்துறை பணியாளர். பார்த்தசாரதி அவரை ஏறிட்டுப் பார்த்து விட்டுக் கேட்டார்.

“என்ன சிவகுமார்... புயல் மாதிரி உள்ளே நுழையறே! வேலைக்குப் போறது இல்லையா? ஷேவ் செய்து 10 நாள்கள் ஆகி இருக்கும் போலிருக்கே... உங்க டிபார்ட்மெண்டில முடி வளர்த்துறதுக்கு அனுமதி இல்லையே...”

“அப்படித்தான் பெரியப்பா. ஆனால் சபரிமலைக்கு மாலை போட்டிருந்தா அதெல்லாம் கண்டுக்க மாட்டாங்க...”

“என்ன, நீ மலைக்குப் போறியா...?” பார்த்தசாரதி வியப்புடன் கேட்டார்.

“ஆமா... ஆவணி மாச நடைதிறப்புக்குப் போறேன். இது நாலாவது தடவை...”

“நாலாவது தடவையா? டே... நீ 41 நாட்கள் விரதம் இருந்ததையே நான் பார்த்தது இல்லையே. அதில் வேற, என்னோட உட்கார்ந்து பகுத்தறிவு இருக்கிற மாதிரி இல்ல பேசிக்கிட்டு இருப்பே... இப்ப வேலை கிடைச்ச பிறகு ரொம்ப மாறிட்டே போலிருக்கே... எனக்கென்னவோ உன் பக்தி மேல நம்பிக்கை இல்லை. நீ ஏதோ சௌகரியத்துக் காகத்தான் பக்திமான் வேஷம் போடறேன்னு நினைக்கிறேன்...!”

பார்த்தசாரதி சொல்வதைக் கேட்டு குருசாமி வாய்விட்டுச் சிரித்தார். பிறகு சொன்னார்:

“பார்த்தான், சிவகுமார் ஷாட் கோர்சில (Short Course) விரதத்தை முடிச்சிடறான். ஒருவாரம் விரதம். பிறகு மாலை போட்டு சந்நிதானப் பயணம்...!

பார்த்தசாரதி ரசிப்போடு சிரித்தார். சிவகுமாரைப் பார்த்துச் சொன்னார்.

“டே... சிவா, உங்கிட்ட சபரிமலை பற்றி பல தடவை பேசி இருக்கேன்னு நினைக்கிறேன். சமீபத்தில் மறைந்து போன ஜோசப் இடமருகின் தலைமையில் ஒரு குழு பொன்னம்பல மேட்டில தெரிகிறதாகச் சொல்லப்படும் ‘மகரஜோதி’ ஒரு செயற்கையான ஏற்பாடு என்று நிரூபித்ததாகச் சொன்னதாக ஞாபகம். சரிதானா?”

“ஆமா பெரியப்பா; ‘பொன்னம்பல மேடு’என்று அழைக்கப்படும் மலைப் பகுதியில் ஒரு சிதைந்து போன பௌத்த ஆலயத்தின் மிச்ச சொச்சங்கள் இருக்கின்றன. ஆரியங்காவு, அச்சன் காவு என்ற இடங்களில் இருந்த பௌத்த ஆலயங்களுக்கு நிகரான பழமை இதற்கும் இருக்கும். இங்கே வைத்து கேரளா மின்சாரத் துறை, வனத்துறை மற்றும் சில பக்திமான்கள் சேர்ந்து வாண வேடிக்கைக்குப் பயன்படுத்தும் வெடிமருந்துகளைப் பயன்படுத்தி தீபம் ஏற்றுவதாகவும், அது சபரிமலையில் கூடி இருக்கும் பக்தர்களுக்குத் தெரிவதாகவும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற திரு.எம்.ஆர்.எஸ்.நாதன் என்பவர் ஆவணப்படுத்தி இருக்கிறார். பிறகு 1983 வாக்கில் தேவசம் போர்டு ‘மகரஜோதி தெரியும் நாள்’அறிவித்த பிறகு, அதற்கு முந்தைய நாளில் பொன்னம்பல மேட்டில் தீபம் கொளுத்தி ‘இரண்டு மகரஜோதி’காண வைத்துப் பெயர் பெற்றவர் ஜோசப் இடமருகு.

அதோடு முடியவில்லை. 1989 டிசம்பரில் ஜோசப் இடமருகின் மகன் சனல் இடமருகு தலைமையில் ஒரு குழு, ‘மகரஜோதி, தேவசம் போர்டுக்கு வேண்டி அரசாங்கத்தின் ஒத்தாசையுடன்’ நடக்கிற கற்பூரம் கொளுத்தும் நிகழ்ச்சிதான் எனக் கேரள அரசாங்கம் அறிவிக்க வேண்டும்’என்ற வேண்டுகோளுடன் ஒரு‘சத்தியப் பிரச்சாரப் பயணம்’மேற்கொள்ளப்பட்டது. அப்போது கேரள முதல்வராக மார்க்சிஸ்டு கட்சியின் ஈ.கே.நாயனார் இருந்தார்.

அவர் சட்டம் ஒழுங்கு பிரச்சினையைக் காரணம் காட்டி, பயணக் குழுவினர் பொன்னம்பல மேட்டில் ஏறக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்தார். அவர் ஜோசப் இடமருகினோடு டெல்லியில் வைத்து பேட்டி அளித்தார்.

‘விசுவாசிகள் கோயிலிலோ, அவர்கள் புனிதமானது எனக் கருதும் இடத்திலோ விளக்கு கொளுத்திடவோ, ஆராதனை நடத்திடவோ செய்வதற்கு அரசாங்கம் தடையிடாது. விசுவாசம் இல்லாதவர்களுக்கு விசுவாசிக்காமல் இருக்க சுதந்திரம் உள்ளது போலவே, விசுவாசம் உள்ளவருக்கு விசுவாசிக்க உரிமை உண்டு... அரசாங்கம் விசுவாசிகளுக்கோ, விசுவாசம் இல்லாதவர்களுக்கோ எதிரானது அல்ல... ஒரு செக்யூலர் அரசாங்கம் மதம் சம்பந்தப்பட்ட காரியங்களில், அது ஜனங்களுக்கும் நாட்டுக்கும் எதிராக இல்லாதபோது அதில் தலையிடக் கூடாது...’ என்று நாயனாரின் புகழ்பெற்ற பேட்டி ‘தேராளி’இதழில் வெளிவந்ததை படித்துக் காட்டினார் உங்க நண்பர் பணிக்கர். அதுவும் நன்றாக ஞாபகம் இருக்கிறது.

“பரவாயில்லையே... நல்ல ஞாபக சக்தி இருக்கே...!” சிவக்குமாரை தோளில் தட்டிப் பாராட்டினார். குருசாமி.

“‘குடுமிக்குத் தக்க கொண்டை’ என்கிறது சரிதான். இப்ப கூட ஒரு கேரளா அமைச்சர் பட்டும் படாமலும் தான் பேசி இருக்கிறார்...!”

பார்த்தசாரதி சொன்னதை ஆமோதித்துப் பேசினான் சிவக்குமார்.

“ஆமா... ஆம; கேரளா சட்டப் பேரவையில் இந்தியக் கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. அனிருத்தன், ‘சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க மறுப்பது பால் அடிப்படையிலான ஒதுக்கல் இல்லையா?’ என்று கேட்டதற்கு சம்பந்தப்பட்ட அறநிலையத்துறை அமைச்சர் ஜி.சுதாகரன் ‘...பாரம்பரிய பழக்க வழக்கங்களில் அரசு ஒரு போதும் தலையிடாது’என்று பதில் அளித்துள்ளார்.

ஆனா கர்நாடகா சட்டப் பேரவையில், பெண்களை சபரிமலையில் அனுமதிக்க மறுப்பது தவறு என்கிற மாதிரி எம்.எல்.ஏக்கள் பேசி இருக்கிறார்கள். சபரிமலையில் நுழைந்ததாகச் சர்ச்சை கிளப்பி உள்ள நடிகை ஜெயமாலா ஒரு கன்னடர் என்பதால் அவருக்கு கர்நாடகா முழுவதும் பரவலாக ஆதரவு இருக்கிறது. பல கூட்டங்கள் நடத்தப்பட்டிருக்கு. அமைச்சர் சுதாகரனும், வேறு சிலரும் ‘சபரி மலைக்கு எதிராக மற்ற மாநிலங்கள் கூட்டுச்சதி செய்கின்றன’என்று சொல்கிறார்கள். வளம் கொழிக்கும் சபரி மலை கேரள அரசுக்கு இன்னொரு ‘டாஸ்மாக்’...! அதனுடைய வருவாய் குறைவதை பெரும் நிதி நெருக்கடியில் உள்ள கேரள அரசால் கனவு காணக் கூட முடியாது... சபரிமலையின் வருமானத்தைக் குறைக்கவே ஜெயமாலா விவகாரத்தை பெரிசு படுத்துகிறார்கள்... இதன் மூலம், சபரிமலையின் கன்னித் தன்மைக்கு களங்கம் ஏற்பட்டு, பக்தர்கள் மனசு மாறி, மூகாம்பிகை, பழனி போன்ற கோவில்களுக்கு அதிக அளவில் வருகை புரிய வைக்கும் இரகசியத் திட்டம் இதன் பின்னணியில் மறைந்திருக்கிறது என்பது ஒரு வாதம்...!

“என் கிட்டயும் நிறைய பேர் ஏன் பெண்களை சபரி மலையில் அனுமதித்தால் என்ன என்று கேட்கிறார்கள். நான் சினிமா கினிமா பார்ப்பதில்லை. ஆனா நெறய நடிகர்கள் சபரிமலைக்கு வர்றதைப் பார்த்திருக்கேன். முந்தின நாள் வரை நடிகைகளுடன் கட்டிப் புரண்டு ஷுட்டிங் நடத்தி விட்டு அவசரம் அவசரமா மலைக்கு வந்துட்டுப் போறாங்க... இந்த ஜெயமாலா விவகாரம் என்னன்னு எனக்குத் தெரியலிலேய...!”

குருசாமியின் பேச்சைக் கேட்டு பார்த்தசாரதியும் சிவக்குமாரும் புன்முறுவல் செய்தனர். பார்த்தசாரதி சொன்னார்:

‘குருபரன் பட்டணத்திலும் விறகுத் தலையன் உண்டு’என்கிறது போல ஆச்சு... குருசாமி, ஜெயமாலா அந்தக் காலத்தில் ஒரு பிரபலமான நடிகை. 19 ஆண்டுகளுக்கு முன் 1987ம் ஆண்டு அவரு தன்னுடைய கணவர் பிரபாகருக்கு இருந்த நோய் குணம் அடைய வேண்டி, கணவருடன் ஐயப்பன் கோவிலுக்குப் போய் இருக்கார். வி.ஐ.பி. மரியாதையோட அவரை சந்நிதானத்தில் போக அனுமதிச்சிருக்குது நிர்வாகம்... சந்நிதானத்தில் கூட்ட நெரிசலில் தள்ளி விடப்பட்டதால் ஐயப்பன் சிலையின் காலடியில் போய் விழுந்திருக்கார். விழுந்தது பாக்கியம் என்று ஐயப்பன் காலைத் தொட்டு வணங்கி இருக்கிறார்... ‘இந்த ஜெயமாலா சொல்வது பொய். எந்தக் கணவர் உடல் நலம் பெற வேண்டி கோவிலுக்குள் நுழைந்தாரோ அந்தக் கணவரை விவாகரத்து செய்து விட்டு ஒரு கிறிஸ்தவரை மறுமணம் புரிந்திருக்கிறார்’ என்று குற்றம் சாட்டுகிறார்கள் சிலர். .!”

“சே... அதென்னப் பேச்சு? உடல் நலம் ஆனதா இல்லையா என்பதை வைத்துத்தான் ஐயப்பனின் சக்தியை அளவிட முடியுமே தவிர மறுமணம் ஆனது வைத்து அல்ல... சரி; ஒரு பெண் ஐயப்பன் கோவிலில் கற்ப கிரகத்துக்குள் நுழைந்ததை இத்தனை வருடம் கழிச்சு எப்படிக் கண்டுபிடிச்சாங்க?”

“என்ன குருசாமி, நீங்களே இப்படிப் பேசினா எப்படி? அதுதான் தேவப் பிரசன்னம் பார்த்தாங்களே... மாடப்பள்ளி மகாதேவி கோவிலில் தேவப்பிரசன்னம் பார்த்து, ஒரு நாய் கோவிலுக்கு உள்ள வந்து போனது கண்டு பிடித்துச் சொல்லி இருக்காங்க... தெரியுமில்ல...?” சிவக்குமார் கேட்டான்.

“ஆமா... ஆம; அதைக் கண்டுபிடிச்சு சொன்னது செருவள்ளி நாராயணன் நம்பூதரி ஆச்சே... அவருடைய டீம் தானா சபரி மலையிலும் தேவப்பிரசன்னம் பார்த்தது?” குருசாமி ஆவலுடன் கேட்டார்.

“ஆமா; 10 பேர் கொண்ட குழுவில் அவரும் ஒருவர். சபரிமலை கோவில் நிர்வாகத்தின் தலைவர் ராமன் நாயர் தட்சணை கொடுத்து, பார்க்க அழைத்ததின் பேரில் ஜுன் 16 முதல் 19ம் தேதி வரை, உண்ணிக் கிருஷ்ணப் பணிக்கர் தலைமையில் அமைந்த குழு தேவப் பிரசன்னம் பார்த்தது...!”

பார்த்தசாரதி குறுக்கிட்டார். “என்ன உங்க பாட்டுக்கு கால்மாடு தலைமாடு தெரியால் பேசிக்கிட்டு இருக்கீங்க? முதல்ல தேவப்பிரசன்னம் என்றால் என்னன்னு சொல்லுங்க!”

குருசாமி சொன்னார்: “கோவில் சம்பந்தப்பட்ட விஷயங்களில், குடியிருக்கும் தெய்வீக சக்திக்கு மனக்குறைவு ஏதாவது உண்டா என்று அறிய ‘அஷ்ட மங்கல தேவபிரஸ்னம்’ என்கிற ஜோதிட சாஸ்திரம் பயன்படுகிறது. கிட்டத்தட்ட ஊர்க்கோவில்களில் பூசாரி ‘காவு எடுப்பது’ பற்றித் துள்ளிச் சொல்வது மாதிரிதான்... சரி; சிவகுமாரி, பிரசன்னம் பார்த்தப்ப என்ன நடந்தது?”

“12 ராசிகளுக்கும் கட்டம் போட்டு, அதில் பூ, அரிசி, சந்தனம், தங்கக்காசு ஆகியவற்றை வைத்து தேவப்பிரசன்னம் பார்த்த போது, கும்ப ராசிக் கட்டத்தில் தங்கக்காசு கவிழ்ந்து விழுந்ததாம். இதனால் இங்கு பெண் தோஷம் உள்ளது என்று உலகுக்கு அறிவிப்பு செய்தார் உண்ணிக் கிருஷ்ணப் பணிக்கர். எப்போது இப்படி ஓர் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்துக் கொண்டு இருந்தது போல உடனே நடிகை ஜெயமாலா விடமிருந்து திடுக்கிடும் தகவல் ஃபேக்ஸ் வழி வந்தது...”

சிவக்குமார் சொல்லி முடிப்பதற்குள் பார்த்தசாரதி திடீர் என ஞாபகம் வந்தது போல் சொன்னார்: “... ஓஹோ ... பேஷ்... பேஷ்..! பணிக்கரின் வெளிப்படுத்தலுக்கு உடனே உடந்தையாகப் பதில் அனுப்பினதாலதான் பணிக்கருக்கும் ஜெயமாலாவுக்கும் ஏற்கனவே பழக்கம் உண்டு என்று சபரிமலை தலைமை தந்திரி கண்டராரு மோகனரு கண்டனம் தெரிவித்திருக்கிறார்...”

சிவக்குமார் ஆவேசத்தோடு குறுக்கிட்டுச் சொன்னான்: “கன்னி ஐயப்பனை பெண்கள் நெருங்கக்கூடாது என்று சொன்ன கண்டராரு, தான் மட்டும் பெண்களை அணுகலாம் என்று கொள்கை வைத்திருக்காரு... அதுதான் கையும் களவுமா மாட்டி போலீஸ் விசாரணை நடக்குது... பெரியப்பா, எனக்கு வேதனை என்னண்ணா தலைமைத் தந்திரியை பதவியிலேருந்து நீக்கி விட்டுப் பதிலுக்கு அவரது அப்பாவையே தலைமை தந்திரியாக நியமித்து இருப்பதுதான்...!”

“என்ன, சிவக்குமார், திடீர்னு ஸேம் ஸைடு கோல் போடறே...? எனக்கு இது உண்ணிக் கிருஷ்ணப் பணிக்கருக்கும் தந்திரிகளுக்கும் நடக்கும் ‘தெய்வீகப் பிரச்சினையாகத்’ தோன்றவில்லை.

காலம் காலமாக ‘ஐயப்பனின் தந்தை’என்ற மரபில் பந்தள ராஜாவை பாதம் கழுவி வரவேற்கிற ஒரு சடங்கு நிலவி வருகிறது. பிராமணர்கள் ஒரு க்ஷத்திரியனுக்கு கால் தொட்டு கழுவக் கூடாது என்று தேவப் பிரசன்னத்தில் சொல்லப்பட்டதாக அறிந்து, பந்தளம் அரண்மனை நிர்வாகிகள் கோபாவேசத்தில் உள்ளனர். அதே வேளையில் சாதி அடிப்படையில் ‘கணியன்’ஆன உண்ணிக் கிருஷ்ணப் பணிக்கரை உயர்சாதி தந்திரி நம்பூதிரிகள் இழிவு படுத்துவதாக ஒரு குண்டைத் தூக்கி வீசி இருக்கிறார் பணிக்கர். உடனே நம்பூதிரி பிராமணர்களின் நலச்சங்கம் கூடி பணிக்கருக்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ளது. ‘ஆலய ஆச்சாரங்களைக் கடைப் பிடிப்பதில் பகுத்தறிவுக்கு இடம் இல்லை’ என்று முத்தாக மொழிந்திருக்கிறார் நம்பூதிரி சங்கத் தலைவர். என்ன குருசாமி, என்ன சொல்லப் போறீங்க? ‘கண்ணில் புண் வந்தால் கண்ணாடி பார்க்கக் கூடாது’ என்கிறீரா?...

குருசாமி அமைதியாகப் பதில் சொன்னார்: “நான் ‘கண்டறிந்த நாயும் அல்ல; களம் அறிந்த பேயும் அல்ல”. ஆனாலும் தேவப் பிரசன்னத்தை ஆணாதிக்க மரபு, சாதி ஆதிக்கத் திமிர், யார் பண்டிதன் என்கிற ஈகோ என்று பார்ப்பதோடு நிறுத்தி விடக்கூடாது. அதுக்கு மேலயும் நிறைய விஷயங்கள் இருக்கு. தேவசம் போர்டுக்கு சில உள்நோக்கங்கள் இருக்கு. பந்தளம் ராஜ குடும்பத்திடம் இருக்கும் சுவாமி ஐயப்பனின் நகைகளைக் கைப்பற்ற வேண்டும் என்பது ஒன்று. சபரிமலையை, உலகின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்து வருகிற இந்து மத அபிமானிகளுக்கு எளிதில் வந்தடையும் விதத்தில் போக்குவரத்து சௌகரியங்கள் ஏற்படுத்திக் கொடுத்தால் பல்லாயிரம் கோடி பணம் புரளும். கயிற்றுப் பாதை (Rope way) ஒன்று பம்மை முதல் சந்நிதானம் வரை அமைக்க விரும்புவது தேவனோ அல்லது காண்டிராக்டர்களோ என்று தெரியவில்லை... மொத்தத்தில் தேவசம் போர்டு சுத்திகரிப்பு மற்றும் மராமத்துப் பணிகள் என்ற பெயரில் ஒரு வணிக சூதாட்டம் நடத்த விரும்புகிறது... அதற்கு தேவப் பிரசன்னத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்து கிறார்கள் என்பதுதான் என் போன்ற பக்தர்களின் அபிப்ராயம்...!”

“இந்த தந்திரங்களுக்குப் பின்னால் முஸ்லிம் தீவிரவாதிகளும், கிறிஸ்தவ வணிகர்களும் செயல்படுகிறார்கள் என்று சொல்வதில் உண்மை உண்டா குருசாமி?” சிவக்குமார் கேட்டார்.

“தீவிரவாதிகளைத் தீவிரவாதிகளாகப் பார்க்க வேண்டும். வணிகர்களை வணிகர்களாகப் பார்க்க வேண்டும்! சொல்லப் போனால் சபரிமலையின் அடிவாரத்தில் ‘வாவர் சுவாமிகள்’ என்ற ஒரு முஸ்லிம் சாதுவுக்கு வழிபாடு நடத்துகிற ஆயிரக்கணக்கான பக்தர்கள் உண்டு. ஐயப்பனின் தோற்றம் பற்றி வழங்கப்படுகிற பல்வேறு கதைகளில் சாத்தான், அய்யன், சாஸ்தா என்று பல்வேறு பெயர்கள் கூறப்படுகின்றன. ‘ஐயூப்’ என்ற ஸுஃபி ஞானி சபரிமலையில் வாழ்ந்து வந்தார். அவரை “ஐயூப்பா... ஐயூப்பா...” என்று அழைத்து வந்தார்கள். அதுவே நாளடைவில் ‘ஐயப்பா’ ஆகி இருக்கலாம் என்ற மொழியியல் ஆய்வு ரீதியான தகவலை நண்பர் ரசூல் எங்கிட்ட சொல்லியிருக்காரு... மொத்தத்தில் முஸ்லிம்களிடையே நல்லுறவைக் கட்டி காப்பதாகத்தான் இதுவரைக்கும் சபரிமலை வழிபாடை என்னைப் போன்றவங்க நடத்திக்கிட்டு இருக்காங்க... உங்களை மாதிரி ஓட்டை வாயாலே பேசி சமூக நல்லிணக் கத்தைக் கெடுத்துடாதீங்க தம்பி...!

அப்படித்தான், சபரிமலையோடு வியாபார ரீதியாக தொடர்பு வச்சிருக்கிறவங்க கிறிஸ்தவர்கள்... அதனால குழப்பங்களுக்கு அவங்க காரணம் என்பதும் வதந்திதான்! 1821ல் ‘பந்தளம் நாடு’திருவிதாங்கூர் மன்னரின் ஆளுகையின் கீழ் வந்தது. 1901ல் நடந்த தீ விபத்தில் அப்போதைய சபரிமலை கோவில் சாம்பலாகிப் போனது. திருவிதாங்கூர் மன்னரின் ஆணைப்படி தீக்கிரையான கோயிலைப் புதுக்கிப் பணிய முடிவெடுக்கப்பட்டது. கொற்றவை கோவிலின் எச்சங்கள், பௌத்த ஆலயத்தின் எச்சங்கள், இசுலாமியச் சின்னங்கள் எல்லாம் அழிந்து பட வேண்டி ‘தீ பற்றியது’என்ற சொல்லும் கேட்டிருக்கிறேன். ஏதாக இருந்தாலும், சபரிமலையில் புதிய கோவில் கட்டியெழுப்பும் பணியை ஏற்றுக் கொண்டவர் ‘போளச் சிறக்கல்’கொச்சு உம்மன் முதலாளி என்ற கிறிஸ்தவர்.

ராநி என்கிற இடத்திலிருந்து 450 பேர் அடங்கிய குழு சபரிமலையின் உச்சியில் கட்டடத் தளவாடங் களையும், மரச்சாமான்களையும், பித்தளை வார்ப்பு களையும் சுமந்து சென்று சேர்த்தது. அந்தக் குழுவுக்கு தலைமை ஏற்று வழி நடத்தியவர்களில் ‘பட்டாணி சாகிப்’என்ற முஸ்லிம் ஒருவர். திருப்பணிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கும் போது கொச்சும்மன் முதலாளி இறந்து போனார். அவருடைய அதே அர்ப்பண போதத்துடன்‘சக்கரியா கத்தனார்’என்ற அவருடைய மருமகன் அழகு மிளிரக் கட்டி உயர்த்தியதுதான் இன்றைய சபரிமலைக் கோவில். அது மீண்டும் 1950களில் தீப்பிடித்து எரிந்தது. ‘கடவுளுடைய கோபம்’என்று பக்திமான்களும், ‘தெய்வத்தின் இயலாமை’என்ற பகுத்தறிவு வாதிகளும் பேசினது இப்பவும் ஞாபகம் இருக்கிறது...!”

குருசாமியின் உணர்ச்சி வசப்பட்ட பேச்சைக் கேட்டு மெய் சிலிர்த்து நின்றார் பார்த்தசாரதி. என்றாலும் சுதாகரித்துக் கொண்டு பேசினார்:

“இன்றைக்கு ஜோதிடர்கள், மடாதிபதிகள், அறநிலையத் துறை அதிகாரிகள் என்று யாரை வேண்டுமானாலும் விலைக்கு வாங்கி விட முடியும். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கேற்பத்தான் மடாதிபதிகள் செயல்படுகிறார்கள். எல்லா காலங்களிலும் அப்படித்தான். இப்போது கூட, “ஜெயமாலா சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் நுழைந்தது தவறு இல்லை; பெண்களை அனைத்து இந்துக் கோவில்களின் உள்ளேயும் அனுமதிக்க வேண்டும்” என்று பேசியுள்ள பெஜாவர் மடாதிபதி ஸ்ரீவிஸ்வேஸ் தீர்த்தர் திருப்பதி - திருமலை பகுதியில் ஏழுமலையானுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய கிறிஸ்தவ மதப் பிரச்சாரங்களைக் கண்டு பிடிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் 5பேர் அடங்கிய உண்மை அறியும் குழுவை அமைத்துள்ளார்.

இந்தக் குழு கண்டறிந்த உண்மைகளில் ஒன்று, திருமலையில் 40 கிறிஸ்தவக் குடும்பங்கள் இருக்கின்றன என்பது. இந்தியாவின் ஒரு பகுதியில் ஒரு குறிப்பிட்ட மதத்தில் விசுவாசம் உள்ள 40 இந்தியக் குடும்பங்கள் இருக்கக் கூடாதா? இன்னொரு கண்டு பிடிப்பு: ‘கிறிஸ்தவர்களான 50 நேபாள கடைக்காரர்களும், 40 முஸ்லிம்களும் திருமலையில் வியாபாரம் செய்து வருகின்றனர்’ என்பது. சபரிமலையில் ‘ரோப்-வே’ அமைக்க தெய்வம் ‘தேவப் பிரசன்னம்’ வழி கூறுகிறது. திருமலைக்கு ‘ரோப்-வே’ அமைக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் கூறுகிறது. ‘காணிக்கு ஒரு கருவேலும்; வேலிக்கு ஒரு மூங்கிலும்’ கதையாகத்தான் இருக்கு.

பார்த்தசாரதி பேசி முடித்ததும் குருசாமி எழுந்து நின்றார். வேட்டியை சரியாக்கிக் கட்டிக் கொண்டார். பிறகு சொன்னார்:

“... எனக்கு சாயங்கால பூஜைக்கு நேரமாகுது... சாமி சிவக்குமார் வேற கூப்பிட வந்திருக்காரு. போறதுக்கு முன்னாடி எனக்குப் பட்டதை தெளிவாச் சொல்லிட்டுப் போறேன்.

உலக மயமாக்கத்தின் சூறாவளி சேவகத் துறையில் (Service Industry) கண்ணுக்குப் புலனாகாத லாபவழிகளை வடிவமைத்துச் செயல்படுகிறது. இன்றைக்கு உலகில் முக்கியத் தொழில் தயாரிப்புத் துறை (Manufacturing) அல்ல. அதிக பட்ச நபர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் சேவகத் துறையில்தான் பணி புரிகிறார்கள். சேவகத் துறையில் முதலிடம் வகிப்பது சுற்றுலா. இது விமானப் போக்குவரத்து, ஐந்து நட்சத்திர ஓட்டல்கள், பல்பொருள் அங்காடி போன்றவற்றோடு சங்கிலி பிணைத்துள்ள துறை. சுற்றுலாத் துறை பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு (Market Segmentation) சந்தைப் படுத்தப்படுகிறது. அவற்றுள் ஒன்றுதான் ‘புண்ணியத்தல சுற்றுலா’(Pilgrimage Tourisim) இந்தியாவில் தடுக்கி விழுந்தால் புண்ணியத் தலம்தான். பின்னே என்ன? எல்லா மதத்தில் பட்ட சேவகத் துறை முதலாளிகளும் தெய்வீக முகமூடி அணிந்து கொண்டு புறப்பட்டு விட்டார்கள்...

தற்போது சபரிமலையில் ஒரு வருடத்தில் 127 நாட்கள் ஆராதனை நடக்கிறது. அதில் 21 நாட்கள் 6 மணி நேரமும், மற்றுள்ள நாட்களில் 14 மணி நேரமும் ‘நடை’ திறந்து வைக்கப்படுகிறது. அதாவது ஒரு வருடத்தில் 1610 மணி நேரம் சபரிமலை திருக்கோவில் வாயில் தெய்வீக தரிசனத்துக்காக திறந்து வைக்கப்படுகிறது. இந்த மணித்துளிகளில் ‘ஐயப்ப தரிசனம்’ பெற்றுச் செல்பவர்கள் ஒரு வருடத்துக்கு 5 கோடிப் பேர் தேறுவார்கள் என்கிறது தேவசம் போர்டு. ‘வேத கணிதம்’ எப்போதுமே வித்தியாசமாகத்தான் கணக்கிடுகிறது. ஒரு பக்தர் ஒரு வினாடி நேரம் மட்டும் தரிசனம் செய்து திரும்பினால் கூட ஒரு வருடத்தில் 57,96,000 பேருக்கு மட்டுமே தரிசனம் செய்ய இயலும்.

நாடெங்கிலும் இருந்து வருகின்ற பல்லாயிரக் கணக்கான பக்தர்களை ‘புண்ணியத்தல சுற்றுலாப் பயணிகளாகவே’தேவசம் போர்டு கருதுகிறது. அவர்களுக்கு நுகர் பொருட்கள் விற்று கோடிக் கணக்கில் சம்பாதிப்பது எப்படி என்பது பற்றியே வணிக வட்டம் சிந்திக்கிறது...

சிறிது காலத்துக்கு முன்பு வரை கல்வாரி மலையைப் பற்றி மட்டும்தான் இந்தியக் கிறிஸ்தவர்கள் பேசி வந்தார்கள். தற்போது தமிழ்நாடு - கேரளா எல்லையில் உள்ள வெள்ளறட பகுதியில் பட்ட மலைக்கு ‘குருசுமலை’ என நாமகரணமிட்டு புனிதப் பயணம் மேற்கொள்ளும் நிகழ்ச்சி விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அதே மலைக்கு ‘காளி மலை’ என்று பெயரிட்டு 1008 பொங்காலை இட்டு புண்ணிய யாத்திரை நடத்துகின்றன சில இந்துமத இயக்கங்கள். கேரளாவில் உள்ள கிறிஸ்தவர்கள் நடத்தி வரும் ‘மலையாற்றூர் தீர்த்தாடனம்’ உலகமயமாக வேண்டும் என சிலர் முயற்சித்து வருகின்றனர். காடு வழி புனிதப் பயணம் மேற்கொண்டு மத வழிபாடு நடத்தும் வழக்கம் இல்லாத இஸ்லாமியர்களில் சிலர் கூட, கேரளாவில் ‘இளங்காடு தங்ஙள் பாறை’ மேம்பாடு பற்றி பேசுகின்றனர். ‘மேம்பாடு’ என்றாலே லாப வேட்கையின் வெளிப்பாடு என்று சொல்லுகின்ற காலம் இது... ‘சுவரோடாவது சொல்லி அழு’ கதைதான் நம்ம கதை... என்று சொல்லி விட்டு வெளியே போனார் குருசாமி. சிவக்குமாரும் பின்னால் சென்றான்.

குழந்தை ‘ஓ’வென அழுதது.

குழந்தையை தூக்க விரைந்தார் பார்த்தசாரதி.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com