Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஆகஸ்ட் 2006

லெபனானில் மீண்டும் போர்
ந.முத்து மோகன்

சூலை 12 தேதியிலிருந்து இஸ்ரேல் விமானங்கள் லெபனான் மக்களின் மீது குண்டுகளைப் பொழிய ஆரம்பித்தன. சூலை 20ம் தேதியிலிருந்து இஸ்ரேலிய டாங்குகளும் தரைப்படையும் லெபனான் நாட்டுக்குள் நுழைந்து தாக்கத் தொடங்கியுள்ளன. பாரபட்சமில்லாமல் லெபனானில் மக்கள் வாழும் பகுதிகளில் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. சாதாரண மக்களின் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப் படுகிறது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 700ஐ எட்டிக் கொண்டிருக்கிறது. 30 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட லெபனானில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து இருக்கிறார்கள். நகரங்களுக்குள் வாழும் மக்கள் காடுகளையும் மலைகளையும் நோக்கி ஓடுகிறார்கள். கிறித்தவக் கிராமங்களின் மீது தாக்குதல் நடத்தப்படாது என நம்பி அக் கிராமங்களில் சென்று குவிகிறார்கள். வெளிநாட்டவர் லட்சக்கணக்கில் கப்பல்களில் ஏறித் தப்பிக்கின்றனர். ஒரு பகுதி மக்கள் சிரியாவுக்குள் அகதிகளாக நுழைந்துள்ளனர்.

பத்து நாட்களுக்குப் பிறகுதான் ஜநா பொதுச் செயலாளர் வாயைத் திறந்து இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று அறிக்கை விடுத்தார். ஜநா அதிகாரிகள் நால்வர் இஸ்ரேலின் தாக்குதலில் பலியானார்கள். அது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதல் என்று கோபி அன்னன் அறிக்கை வெளியிடுகிறார். அதற்குப் பிறகுதான் பிரான்ஸ், சீனா போன்ற சில நாடுகள் கண்டன அறிக்கைகளை வெளியிட்டன.

ஒருதலைப்பட்ச தாக்குதல் (Unilateralism) என்ற போர் முறைக்கு உலக வரலாற்றில் இஸ்ரேல்தான் எடுத்துக்காட்டு. ஒருதலைப்பட்ச தாக்குதல் என்றால் என்ன? ஏதாவது ஒரு நாட்டில் தமது எதிரிகள் தங்கி இருககிறார்கள் என்று சந்தேகம் தோன்றி விட்டால், அந்த நாட்டின் மீது முழு ராணுவத் தாக்குதலை நடத்துவதே ஒருதலைப் பட்ச தாக்குதல். கடந்த ஐம்பது வருடங்களில் இஸ்ரேல் தனித்தனியாக லெபனான் மீது, பாலஸ்தீனத்தின் மீது, சிரியாவின் மீது, எகிப்தின் மீது, ஈராக்கின் மீது, தனது அண்டை நாடுகள் அத்தனை மீதும் ஒருதலைப்பட்ச தாக்குதல்களை நடத்தி வருகிறது. பாலஸ்தீன மண்ணை இஸ்ரேல் அடாவடித்தனமாக ஆக்கிரமித்து வைத்துள்ள தால் இஸ்ரேலின் அண்டை நாடுகள் பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவாக உள்ளன என்பதில் ரகசியம் ஏதும் கிடையாது.

பாலஸ்தீனத்திலிருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என்றுதான் ஐநா தீர்மானமும் உள்ளது. ஆனால் இஸ்ரேலைப் பொறுத்தமட்டில் அது ஜநா தீர்மானங்களை அலட்சியப் படுத்துவதோடு, பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவான சக்திகள் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இப்படித்தான் அதன் ஒருதலைப்பட்ச தாக்குதல் என்ற போர்முறை நடப்புக்கு வந்தது. இஸ்ரேலின் ஒருதலைப்பட்ச தாக்குதல்கள் பாலஸ்தீன ஆதரவாளர்களைத் தாக்குவது என்பதாக மட்டுமில்லாமல், அதன் அண்டை நாடுகள் பொருளாதார ரீதியாக ஸ்திரப்பட்டுவிடாமல், அவ்வப்போது அந்த நாடுகளுக்குள் படை யெடுத்து அந்த நாடுகளின் மக்களையும் பொருளாதாரத்தையும் அழிப்பதாகவும் உள்ளது.

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா போராளிகளை அழிப்பதற்காகவே லெபனானுக்குள் நுழைந்திருப்பதாக இஸ்ரேல் கூறுகிறது. யார் இந்த ஹிஸ்புல்லாக்கள்? லெபனானை இஸ்ரேல் 1982லிருந்து ஆக்கிரமித்து வைத்திருந்தது. 1982ல் ஹிஸ்புல்லாக்கள் என்ற அணி கிடையாது. இஸ்ரேல் ஆக்கிரமிப்பை எதிர்த்து உருவான ஷியா முஸ்லிம் போராளிகளே ஹிஸ்புல்லாக்கள். லெபனானின் விடுதலைக்காகத் தொடர்ந்து போராடி 2000வது வருடத்தில் இஸ்ரேலை லெபனானை விட்டு வெளியேற வைத்தார்கள் ஹிஸ்புல்லாக்கள். இஸ்ரேலுக்கு தோல்வியை வழங்கிய ஒரே அணி என்று ஹிஸ்புல்லா போராளிகளுக்கு மரியாதை உண்டு. லெபனான் மக்களிடையில் ஹிஸ்புல்லாக்களுக்கு அமோகமான ஆதரவு உண்டு.

உண்மையில் கடந்த ஐந்து வருடங்களாக ஹிஸ்புல்லாக்கள் லெபனானை நீண்டகாலப் போரின் அழிவுகளிலிருந்து புனரமைக்கும் பணியில்தான் முனைப்பாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பெய்ரூட்டின் குடிசைகளில் வாழும் ஷியா முஸ்லிம்கள் இடையிலும் லெபனானின் கிராமப்புறங்களை மீட்டமைக்கும் வேலைகளிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 2000ல் நடந்த தேர்தல்களில் ஹிஸ்புல்லா கூட்டணிக் கட்சிகள் அதிக வாக்குகள் பெற்றுள்ளன. இப்போதைய லெபனான் தேசியக் கூட்டணி அரசில் இரண்டு ஹிஸ்புல்லா அமைச்சர்கள் உண்டு. லெபனானில் பொருளாதாரமும் அரசியல் சனநாயகமும் உறுதிப்படுவதைக் கண்டு பொறுக்காத இஸ்ரேல் லெபனானுக்குள் மீண்டும் அழிவை விதைத்து வருகிறது. லெபனானை மீண்டும் தனது ஆக்கிரமிப்புக்குள் கொண்டு வரத் திட்டமிடுகிறது.

சென்ற வருடம் வரை லெபனானுக்குள் சிரியப் படைகளின் ஒருபகுதி தங்கியிருந்தது. சிரியப் படைகள் லெபனானை விட்டு வெளியேற வேண்டும் என அமெரிக்க உதவியுடன் இஸ்ரேல் ஜநா சபையை வலியுறுத்தியது. ஜநா சபையும் அப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, அதன்படி 2005ல் சிரியப்படைகள் வெளியேறின. லெபனானுக்கு ஓரளவு பாதுகாப்பாக இருந்த சிரியப் படைகளைத் தந்திரமாக வெளியேற்றிய பிறகு, இப்போது இஸ்ரேல் லெபனானின் மீது படையெடுத் துள்ளது.

லெபனான் மீது மட்டுமல்ல, பாலஸ்தீனத்தின் காஸா பகுதியிலும் இஸ்ரேல் போரைத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த பாலஸ்தீன பொதுத் தேர்தல்களில் ஹமாஸ் எனப்படும் அணியினர் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளனர். ஹமாஸ் அணியினரை இஸ்ரேலுக்குப் பிடிக்காது. எனவே ஹமாஸ் அணியினரின் பாலஸ்தீன அரசை வீழ்த்துவதற்காக காஸா பகுதியினுள் இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இப்படியாக ஹிஸ்புல்லாவை பிடிக்காதெனில் அவர்களது ஆட்சியைக் கவிழ்க்க லெபனானில் படையெடுப்பது, ஹமாஸைப் பிடிக்காதெனில் பாலஸ்தீன் மீது படையெடுப்பு என இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது.

ஹிஸ்புல்லாவையும் ஹமாஸையும் பலவீனப் படுத்த இஸ்ரேலியப் படைகள் அந்த நாடுகளில் சாதாரண மக்களின் மீது குண்டுகளை வீசி அழிபாடுகளை ஏற்படுத்தி வருகிறது.

இதுவரை எத்தனை ஹிஸ்புல்லா போராளிகளை இஸ்ரேல் ராணுவம் அழித்திருக்கிறது? நேற்று வரை (சூலை 30) இஸ்ரேலியர்கள் கொன்றுள்ள ஹிஸ்புல்லாக்களின் எண்ணிக்கை இருபதைத் தாண்டவில்லை. ஆனால் 700க்கும் மேற்பட்ட சாதாரண மக்கள் இஸ்ரேலிய குண்டு வீச்சால் கொல்லப்பட்டுள்ளனர். கட்டிடம் ஒன்றில் அடித் தளத்தில் தஞ்சம் புகுந் திருந்த 56பேர் இஸ்ரேல் குண்டு வீச்சில் செத்து மடிந்துள்ளனர். இவர்களில் 34 பேர் குழந்தைகள். 8 லட்சம் மக்கள் தமது வீடுகளைக் காலி செய்து விட்டு அகதிகளாக வெளியேறியுள்ளனர். பாலங்களும், பாதைகளும் தொழிற் சாலைகளும் மருத்துவமனைகளும் பலமாடிக் குடியிருப்புகளும் குண்டு வீச்சால் உடைத்தெறியப் பட்டுள்ளன. ஹிஸ்புல்லாக்களைத் தாக்குவதும், அழிப்பதும் அவ்வளவு எளிதல்ல.

இஸ்ரேலின் நோக்கம் வெகுசனப் பாதிப்புகளை ஏற்படுத்து வதும் லெபனானின் பொருளாதாரத்தை அழிப்பதும் தான். 18 வருட இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அழிவுகளை, கடந்த ஐந்து வருடங்களில் வெகுவாகத் தாண்டி, அழகான பெய்ரூட் நகரை மீண்டும் லெபனானியர்களும் ஹிஸ்புல்லாக்களும் கட்டி எழுப்பியுள்ளனர். அதனை மீண்டும் அழிப்பதே இஸ்ரேலின் திட்டம். லெபனானிலும் பாலஸ்தீனத்திலும் பொருளாதாரமோ சனநாயகமோ நின்று நிலைபெற்று விடக்கூடாது என்பதே இஸ்ரேலின் திட்டம்.

இஸ்ரேலின் ஒருதலைப்பட்ச தாக்குதல் என்ற போர்முறையும் அமெரிக்காவின் பயங்கவாதத்திற்கு எதிரான போர் எனும் திட்டமும் இப்போது ஒன்றுபடுகின்றன.

இன்னொரு வகையில் சொல்வதானால் இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சனையும் அமெரிக்க சர்வதேச அரசியலும் சில வருடங்களுக்கு முன்னால் வரை சில தனித் தன்மைகளைக் கொண்டிருந்தன. இப்போது அவை இரண்டுமே ஒன்று சேர்ந்துவிட்டன. இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிலும் இப்போது ஒரே திட்டம்தான்; அரபு நாடுகளை சூறையாடுவது தான் அந்த ஒற்றைத் திட்டம்.

சர்வதேச அரசியலின் ஒரு பிரச்சனையாக இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சனை இருந்த காலம் போய் இப்போது உலகப் பிரச்சனைகள் அத்தனைக்கும் இஸ்ரேலிய அணுகுமுறையே முன்மொழியப் படுகிறது. அமெரிக்க ஆப்கானிஸ் தானில் ஈராக்கில் ஒருதலைபட்ச தாக்குதலில் ஈடுபட்டது. அமெரிக்கா சொல்லும் நாகரீகங்களின் மோதல் என்பது இஸ்ரேல் முன்பே நடத்திக் கொண்டிருக்கும் யூத-இஸ்லாமிய மதங்களுக்கு இடையிலான யுத்தத்தின் தொடர்ச்சிதான். பயங்கரவாதத்திற்கு எதிராக ஜார்ஜ் புஷ் நடத்தும் யுத்தம் இஸ்ரேல் பாலஸ்தீன விடுதலைப் போராளிகளுக்கும் அவர்களது ஆதரவாளர்களுக்கும் எதிராக நீண்டகாலமாக நடத்திக் கொண்டிருக்கும் அதேவகை யுத்தம் தான்.

அமெரிக்காவின் அடியாள் இஸ்ரேல் என்னும் சித்திரம் மறைந்து இஸ்ரேலின் அடியாள் அமெரிக்கா என்னும் சித்திரம் தோன்றுகிறது.

இதற்கிடையில் ஜனநாயகம் என்றும், ஜநா தீர்மானங்கள் என்றும், சமரச ஏற்பாடுகள் என்றும் அமெரிக்கா நடத்தும் சொல்லாடல்கள் எல்லாம் வெறும் பம்மாத்து என்பது தெளிவாகிறது.

உலக அளவில் அமெரிக்க இஸ்ரேலிய அரசியல் அடிப்படையிலேயே ஜனநாயகத்திற்கு விரோதமானது என்பதை நாம் கவனித்துக் கொள்ள வேண்டிய தருணம் இது. அமெரிக்க, இஸ்ரேலிய நலன்களை பாதுகாத்துக் கொள்வதற்காக அமெரிக்காவும் இஸ்ரேலும் லெபனான் மக்களின் மீது மட்டுமல்ல வியட்நாம், கொரியா, கியூப மக்களின் மீதும், ஆப்கானியர், ஈராக்கியர் மீதும் இன்னும் உலகின் பல பகுதி மக்களின் மீதும் கொடூரமான இராணுவ பயங்கவாதத்தை கட்டவிழ்த்து விட எப்போதுமே தயங்கியது கிடையாது என்பதையே கண்கூடாக கண்டு வருகிறோம்.

உலகின் ஜனநாயக சக்திகள் விழித்துக் கொள்ள வேண்டிய தருணம் இது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com