Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஆகஸ்ட் 2006

முல்லா கதைகள்

யாரை நம்புவது

முல்லாவிற்கு தீராத அறிவுத் தாகம் இருந்தது. ஆனால் எது அறிவு என்பது முல்லாவுக்கு புரிபடாத விஷயமாகவே இருந்து வந்தது. அதனால் மனதில் தோணும் எல்லா முட்டாள்த்தனமான கேள்விகளையும் ஒன்று விடாமல் உள்ளூரிலிருந்த விவேகி ஒருவரை கேட்டு நச்சரிப்பார் முல்லா.

ஒரு நாள் முல்லா தனது கழுதை காணமல் போய் விட்டதை கண்டார்.

அந்த விவேகியின் வீட்டுக்கு ஓடினார் முல்லா.

“முல்லா, என்ன இவ்வளவு அவசரமாக வந்துள்ளீர்கள்? என்றார் அந்த விவேகி.

“என் கழுதை போய் விட்டது! எங்கே அதை நான் காண முடியும்?” என்றார் முல்லா.

முல்லாவின் கேள்விகளால் சலிப்படைந்திருந்த அந்த விவேகி, “நஸ்ருத்தீன்! ஓடிப்போன உங்கள் கழுதை ஒரு மனிதனாக மாறி, பக்கத்து ஊரில் ஒரு நீதிபதியாக வேலையிலமர்ந்திருக்கிறது” என்றார்.

தகவல் தந்ததற்காக விவேகிக்கு நன்றி சொல்லி விட்டு நீதிமன்றத்திற்கு ஓடினார் முல்லா. அங்கிருந்த நீதிபதியைப் பார்த்து முல்லா கையைத் தட்டி, “வீட்டிற்கு உடனே வா. முட்டாள் பிராணியே!” என்றர் முல்லா. அதைக்கேட்டு கொதிப்படைந்த நீதிபதி, ‘யார் நீங்கள், என்ன தைரியமிருந்தால் அப்படிப் பேசுவீர்கள். சிறையில் அடைத்து விடுவேன்’, என்றார்.

“நான் தான் பிரபலமான முல்லா நஸ்ருத்தீன். நீங்கள் கழுதையென்று நிரூபிக்க எனது சார்பில் மிகச் சிறந்த சாட்சி இருக்கிறது” என்றார் முல்லா.

‘வேடிக்கையாக இருக்கிறது. சுவாதீனமுள்ளவர்கள் இப்படி நடந்து கொள்ள மாட்டார்கள்’. என்றார் நீதிபதி. முல்லா நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு, ‘நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள். நான் ஒரு கழுதை சொல்லுவதை விட, ஒரு விவேகி கூறுவதையே நம்புவேன்’ என்றார் முல்லா.

அதிசயம்

முல்லா சொந்த விஷயமாக ஒரு ஊருக்குப் போயிருந்தார். உறைய வைக்கும் கடுங்குளிர் காலமாயிருந்தது அவர் போயிருந்த சமயம்.

அவர் சத்திரத்துக்கு தங்குவதற்காக விரைந்து கொண்டிருந்த போது ஒரு வெறி நாய் பார்த்து பயங்கரமாக குலைக்க ஆரம்பித்தது.

முல்லா நாயை விரட்டுவதற்காக கீழே குனிந்து கல்லை எடுத்தார். கல்லோ குளிரில் உறைந்து போய் வராமல் தரையுடன் கப்பென்று இறுகிக் கிடந்தது.

‘என்ன அதிசயமான ஊர் இது! கல்லை கட்டிப் போட்டுவிட்டு, நாயை சுதந்திரமாக அலைய விட்டிருக்கிறார்கள்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டார் முல்லா.

பூனை எங்கே?

முல்லா நண்பர்களுக்கு விருந்து கொடுக்க எண்ணினார். அதற்காக இரண்டு கிலோ நல்ல மாமிசமாக பார்த்து வாங்கினார்.

தனது மனைவிக்கு சமைக்கத் தெரிந்த வவ்வாலை மட்டும் தயார் பண்ணி வைக்கும் படி சொல்லி விட்டு வெளியெ போய்விட்டார் முல்லா.

சமைத்ததை ருசி பார்க்கத் தொடங்கிய மனைவி அடக்க மாட்டாமல் எல்லா கறியையும் தானே தின்று தீர்த்து விட்டார்.

முல்லா இரவு வீட்டுக்கு திரும்பிய போது, பூனை கறியை தின்று விட்டதால், மேலும் கறி வாங்கி வருமாறு முல்லாவிடம் சொன்னார் மனைவி.

முல்லா உடனே தராசை எடுத்தார். பக்கத்தில் இருந்த பூனையை அதில் போட்டு நிறுத்தார்.

பூனை சரியாக இரண்டு கிலோ இருந்தது.

‘பூனை இதுவென்றால், மாமிசம் எங்கே?; இதுதான் மாமிசமென்றால், பூனை எங்கே?’ என்று மனைவியிடம் கேட்டார் முல்லா.

அழகுப் போட்டி

ஒரு தடவை முல்லா மேற்கு நாடுகளில் பயணம் மேற்க்கொண்டிருந்த போது ஒரு அழகுப் போட்டியில் விருந்தினராக கலந்து கொள்ள அழைக்கப்பட்டார்.

முல்லா அதற்கு போய்விட்டு வந்த பின்பு, போட்டியை விரும்பினாரா என்று அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

“பெரிய ஏமாத்து வித்தை அது’ என்றார் முல்லா.

‘என்ன அர்த்தத்தில் சொல்லுகிறீர்கள்?’

‘பெண்களைக் காட்டுகிறார்கள் - பின்பு உங்களிடம் துணிகளை விற்பதற்கு முயற்சிக்கிறார்கள்’ என்றார் முல்லா.

தமிழில் : ஷஃபி
விரைவில் வெளிவரவிருக்கும்
“என்றார் முல்லா” தொகுப்பிலிருந்து



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.