Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஆகஸ்ட் 2006

‘மருதிருவர்’ ஆவணப்பட விமர்சனம் மீதான எதிர்வினை
கதிர் நிலவன்

‘தமிழர் கண்ணோட்டம்’இதழில் நான் மதிப்புரை எழுதியதாக குறிப்பிடுவது தவறு. ‘மருதிருவர்’படம் குறித்து முன்னோட்டமாக செய்தி மட்டுமே வெளியிட்டுள்ளேன். அப்படம் குறித்து எங்கும் என் கருத்தை பதிவு செய்யவில்லை. ஆவணப்படத்தில் இயக்குநர் தினகரன் ஜெய்யின் கருத்தையும் நாளேடு ஒன்றில் அடுத்து எடுக்கப்படவுள்ள படம் குறித்து சொன்னவற்றை மட்டுமே எழுதியுள்ளேன்.

பொதுவாக தமிழக வரலாறு என்பது வடநாட்டு ஆதிக்க சக்திகளால் மாற்றி எழுதப்படுவதாக மட்டுமே குறிப்பிட்டுள்ளேன். மேலும், முதல் விடுதலைப் போரை மறுத்து ‘மருதிருவர்’ஆவணப்படம் வெளி வந்திருப்பதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டுமென்று தான் கூறியுள்ளேன்.

உண்மையில், அசல் மனுதர்ம சட்டமாக இந்திய அரசும், இந்தியதேசியமும் இருக்கிற படியால் தான் மருதுபாண்டியர்களின் வரலாறு மட்டுமல்ல; தென்னிந்தியாவில் போராடிய திப்புசுல்தான், கட்டபொம்மன், தீரன் சின்னமலை ஆகியோர்களின் வரலாறு இருட்டடிப்பு செய்யப்படுகிறது. வட இந்தியாவில் போராடிய மன்னர்களுக்கு முன்னதாகவே தென்னிந்தியாவில் போராடிய ஏகாதிபத்திய எதிர்ப்பு மன்னர்களின் வரலாறு எப்போதும் இணையாக வைத்து பேசப்படுவதில்லை. 1857ல் நடைபெற்ற முதல் விடுதலைப் போருக்கு சற்றும் குறைவில்லாத வேலூர் புரட்சி 1806ல் நடைபெற்றதை ‘தென்னிந்தியப் புரட்சி’ என்று தான் வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார் களேயொழிய ‘முதல் விடுதலைப்போர்’ என்று ஒத்துக் கொள்வதில்லை.

இத்தகையதொரு சூழலில் தான் மருதிருவர் ஆவணப்படம் 1801ல் மருதுபாண்டியர்கள் நடத்திய போராட்டத்தை முதல் தென்னிந்தியப் புரட்சியென்று வர்ணிக்கிறது. எது முதல் விடுதலைப் போர் என்பதில் கருத்து வேறுபாடுகள் இருந்தால் கட்டுரையாளர் அதை விவாதத்திற்கு உட்படுத்தியிருக்கலாம். விமர்சனத்தில் எந்த இடத்திலும் சுதந்திரப் போர் குறித்து விவாதத்தை அவர் பதிவு செய்யாதது கவனிக்கத் தக்கதாகும். இந்தப் பண்புதான் இந்த விமர்சனத்தை நேர்மையான பதிவாக எடுத்துக் கொள்ள இடையூறு செய்கிறது. அதற்கு மாறாக ‘மருதிருவர்’ விமர்சனம் என்ற பெயரில் கோ.கேசவனின் பொதுவான கருதுகோள் மூலமாக மருதுபாண்டியர்களின் ஆட்சியை கட்டுரையாளர் தெளிவற்று விமர்சித்து இருக்கிறார்.

கோ.கேசவனின் ‘பள்ளு இலக்கியம்’நூலிலிருந்து மேற்கோள் காட்டுவதெல்லாம் 72 பாளையங்களை பற்றி கூறுகின்றனவேயன்றி, அப்பாளையங்களின் கட்டுப்பாட்டுக்குள் வராத மருதுபாண்டியர்களின் சீமை குறித்தான எதுவும் கூறப்படவில்லை. மேலும் மருதிருவர் தலைமை ஏற்று நடத்திய விவசாயப் போராட்டம் குறித்து கோ.கேசவனின் கூற்றை கட்டுரையாளர் அறிந்திராததற்கு நானோ இயக்குநர் தினகரன் ஜெய்யோ பொறுப்பேற்க முடியாது. அதே போல் 72 பாளையங்களில் சிவகங்கை ஒன்று என கட்டுரையாளர் குறிப்பிட்டதிலிருந்து அவரின் அறியாமை வெளிப்படுவதை வாசகர் கவனிக்கவும்.

பாளையக்கார ஆட்சிமுறை பற்றி எனக்கு எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை. அதே சமயம் இவர்களில் மருதிருவர் வேறுபட்டவர்கள் என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் ஏராளம். இதை மறுக்கிற விமர்சன மனோபாவத்தை சந்தேகத்தோடு அணுக வேண்டும். இந்த விமர்சனமும் அந்த வகையைச் சார்ந்ததுதான். ஏனெனில் பாளையக்காரர்கள் மக்களை சுரண்டினார்கள் என கேசவனின் கருத்தை தன் கருத்தாக கட்டுரையில் எடுத்துக்காட்டியவர் மருதிருவர், ‘மக்களை சுரண்டினார்’என்பதற்கு ஆதாரப்பூர்வமாக எதுவும் எடுத்துக் காட்டவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

ஐரோப்பியர்கள் இந்தியத் துணைக் கண்டத்தில் அடியெடுத்து வைத்தபோது, நிலவுடைமை உற்பத்தி முறையும், மன்னர்களின் கொடுங்கோலாட்சி நிர்வாக முறையும் நடைபெற்று வந்ததை நாம் மறுக்கவில்லை. முடிமன்னர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக போராடிய அதே மக்கள் ஐரோப்பியர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக முடிமன்னர்களோடு இணைந்து தங்களது ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை வெளிக்காட்டினார்கள். அதனால் தான் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்திய துணைக் கண்டத்தை முழுவதும் கைப்பற்ற ஒரு நூற்றாண்டுக்கு மேலாக போராட வேண்டியதாகிவிட்டது. அதே நேரத்தில் முடி மன்னர்களின் தலைமையில் காணப்பட்ட சமரசப் போக்குகள், ஊசலாட்டம், வஞ்சகத்தன்மை ஆகியவையும் பிரிட்டிஷார் ஆட்சிக்கு விரைவுபடுத்தின. இந்த விரைவுபடுத்திய காலகட்டத்தில் தான் மருதிருவரின் போராட்டம் பின்னணி வகித்தது. இந்த வரலாற்றுப் புரிதல் இன்றி மருதிருவர் ஆவணப்படத்தை விமர்சிக்கக் கூடாது.

முடிமன்னர்களின் நிலவுடைமை ஆட்சிமுறை சமூக வளர்ச்சியில் பிற்போக்குத் தனமானவை. பிரிட்டிஷ் காலணி யாதிக்க எதிர்ப்பில் பகை முரண்பாடு கொண்ட மக்களும் முடியாட்சி மன்னர்களும் ஒன்றிணைந்தனர். அன்றைக்கு இருந்த நிலவுடைமை சமூக அமைப்பில் உருவான தேசங்களின் வரையறுப்பில் நின்று போராடினர். இதனை பிரிட்டிஷ் தொழில் முதலாளியத்தின் மூலம் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்திய தேசக் கட்டமைப்பில் நின்று தேச விடுதலைப் போராட்டமல்ல என்று கூறுவதும், மக்களால் தலைமை தாங்கப்பட்ட ஜனநாயகப் போராட்டமல்ல என்று கூறுவதும் தவறானவை. ஏனெனில், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தேசவிடுதலைப் போராட்டம் என்பது வேறு; நிலவுடைமை ஆதிக்கத்திற்கு எதிரானதும் பிற்போக்குத் தனமான பழைமை வாதத்திற்கும் எதிரானதுமான ஜனநாயகப் போராட்டம் என்பது வேறு. முதலாளித்துவம் வழங்கிய நன்கொடைகளில் ஒன்று ஜனநாயகமாகும். நிலவுடைமை ஒழிப்பிற்கான ஜனநாயகப் போராட்டத்தில் முடியாட்சி மன்னர்களுக்கு இடமில்லை.

சீன தேசத்தில் நிலவுடைமைக்கு எதிரான புதிய ஜனநாயகப் புரட்சி காலகட்டத்தில் ஜப்பான் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடுவதற்கு மாவோ சீன போர்ப்படை தளபதிகளுடன் சமரசம் கொண்டதும்; பிற்போக்குத்தனமான முதலாளிகளின் பிரதிநிதியுமான சியாங்கை சேக்குடன் கை கோர்த்துப் போராடினார். இப்போராட்டம் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டமென்று தான் அழைக்கப்படுகிறதேயொழிய ஜனநாயகப் போராட்டமென்று அழைக்கப்படுவதில்லை.

தேசவிடுதலைப் போராட்டம் என்பது எந்தவொரு தேசத்திலும் அனைத்து வர்க்க சக்திகளும் ஒன்றிணைந்து நடத்தப்படும் போராட்டமாகும். இப்போராட்டம் ஏகாதிபத்திய எதிர்ப்பை அடிப்படையாகவே கொண்டிருக்கும். எனவே, இந்திய மக்கள் காலனியாதிக்கத்தை எதிர்த்து முடியாட்சி மன்னர்களோடு இணைந்து நடத்திய போராட்டமானாலும் சரி; முதலாளிகள் மற்றும் முதலாளிய இயக்கங்களோடு இணைந்து நடத்திய போராட்டமானாலும் சரி. இவை இரண்டுமே சாராம்சத்தில் தேசவிடுதலைப் போராட்டங்களே ஆகும்.

‘இந்திய மக்கள் ஒரே நேரத்தில் பசுமாட்டை வணங்குபவர்களாகவும் கட்டை விரலுக்குள் மஸ்லின் மணியை மடித்து வைக்கும் தொழில் நுட்ப கணிதவியலாளர்களாகவும் உள்ளனர்’ என்று காரல்மார்க்ஸ் கூறினார். சமூக வளர்ச்சியில் இந்திய மக்களின் இரட்டைத் தன்மையை அவர் குறிப்பிட்ட போதிலும், 1857ல் இந்திய மக்களோடு இணைந்து இறுதிக்கால முடியாட்சி மன்னர்கள் நடத்திய போராட்டத்தை ‘முதல் விடுதலைப் போர்’ என்று தான் குறிப்பிடுகிறார்.

எனவே, மக்கள் ஒரு தேசமாக இணைந்து போராடுவதற்கு முன்னர் முடி மன்னர்கள் நடத்திய ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டம் என்பது சாராம்சத்தில் அது தேச விடுதலைப் போராட்டம் தான். மேலும், பிராமண - நால்வருணமுறை என்பது மன்னர்களின் சொந்த கண்டுபிடிப்பல்ல;. பழைய சமூக அமைப்பின் தொடர்ச்சியாகவே நிலவுடைமை சமூக அமைப்பிலும், இன்றைய முதலாளித்துவ சமூக அமைப்பிலும் பிராமணியம் நீடித்து வருகின்ற ஒன்றாகும். பிராமணியத்தின் பெயரால் உழைக்கும் மக்களை கொடுமைப்படுத்திய மன்னர்கள் வரலாற்றில் நிறையவே உண்டு. தமிழ் மன்னர்கள் என்பதற்காக நாம் ஒருபோதும் மன்னர்களின் சாதிய ஒடுக்குமுறைகளை ஆதரித்தது கிடையாது. அதே சமயம் ஏகாதிபத்திய எதிர்ப்பு வரலாற்றின் நாயகர்களான மருது பாண்டியர்களை சொல்வதில் தவறொன்றுமில்லை.

மருதிருவரின் அரசு மக்கள் அரசாக - குறிப்பாக விவசாயிகள் விரும்பிய அரசாக விளங்கியது. அதற்குக் காரணம் அவர்கள் விவசாயிகளுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தனர். விவசாயிகளுக்கு பல அரசு உதவிகளை (சலுகைகளாகவோ, மானியமாகவோ) வழங்கிடும் நிர்வாக சீர்திருத்தங்களை செய்தனர். விவசாயிகளின், அடித்தள மக்களின் ஆதரவாளர்களாக மருதிருவர் விளங்கியதை வெளிப்படுத்தும் சான்றாக பேரா.கதிர்வேலின் ‘ஹிஸ்டரி ஆப் மரவாஸ்’எனும் நூலில் நரிக்குடி சத்திரப் செப்பேட்டில் காணப்படும் செய்தியை தந்துள்ளார். விவசாயிகளின் நல்லெண்ணத்தை அவர்கள் ஈட்டியிருந்ததால் தான் புரட்சி இயக்கம் மூலம் அவர்கள் விடுதலைப் போரை நடத்திய பொழுது சிவகங்கைச் சீமைக்கு வெளியிலும் விவசாயிகளின் ஆதரவு பெருகியது. மருதிருவர் படை தஞ்சை நோக்கி சென்றபோது அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் அவர்களுடன் இணைந்து கொண்டனர் என கோ.கேசவன் “சமூகமும் கதைப்பாடலும்” என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். இதை வரலாற்று வாசிப்பு மூலம் தெரிந்து கொள்ளாததால் தான் மருதிருவர் ஆவணப்படத்தின் உட்பொருளை கட்டுரையாளரால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.

இன்றைக்கு அமெரிக்காவின் குற்றவாளிக் கூண்டில், தூக்கில் போடுவதற்காக நிலை நிறுத்தப் பட்டிருக்கும் ஈராக் அதிபர் சதாம் உசேன் மீது தீவிர குர்தீஷ் இன ஒடுக்குமுறையாளர் என்ற குற்றச்சாட்டு உண்டு. அதற்காக, அவரது ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை குறைத்து மதிப்பிட முடியுமா? ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பு பழைய சமூக அமைப்பை நிறுவுவதற்காகவே பேராடி வருகிறது. அதற்காக தலிபான்களின் அமெரிக்க எதிர்ப்பு போராட்டத்தை ஆதரிக்காமல் கைவிடலாமா? ஒவ்வொரு சமூகத்திலும் அதன் உள் முரண்பாடுகளுக்குகிடையே வெளி முரண்பாடுகள் கூர்மை பெறுவதுண்டு. வெளி முரண்பாடுகள் தீர்க்கப்படாமல் உள் முரண்பாடுகளை காரணம் காட்டி, ஒதுங்கி நிற்பது அதன் சமூக வளர்ச்சியை தடுத்து நிறுத்துகின்ற செயலன்றி வேறல்ல.

அக்காலத்திய சமூகத்தின் புற, அக நிலைமைகளை மையமாகக் கொண்டு மக்களின் வாழ்நிலை மற்றும் உணர்வுகளை இணைத்து ஆய்வு செய்வது தான் சரியான அணுகு முறையாகும். நாம் வாழும் சமூக காலத்திய அறிவியல் வளர்ச்சி புதிதாக வளர்ந்து நிற்கும் சிந்தனைப் போக்குகள், விழிப்புணர்வு இவை யெல்லாம் சமூக ஆய்வுக்கு அவசியம் என்பதை மறுப்பதற்கில்லை. அதே வேளையில் ஜம்புத்தீவு புரட்சி அறிக்கை வெளியான அக்காலத்திய சூழலையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மாறாக இன்றைய நவீன சிந்தனா வளர்ச்சியைக் கொண்டு முந்தைய சமூக வாழ்வினை ஆய்வு செய்வது வறட்டுத்தனமாகும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com