Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஆகஸ்ட் 2006
தென்னிந்திய புரட்சி

தொடர வேண்டிய மரபு - வேலூர் 1806
குருசாமி மயில்வாகனன்

ஒரு அந்நிய அரசைத் தூக்கியெறிய, மதம், இனம் பாராமல் அதனுடைய ராணுவப் படையே நடத்திய தாக்குதல்தான் வேலூர்க் கிளர்ச்சி 1806 ஆகும். இன்று அந்நிய பன்னாட்டுக் கம்பெனிகளின் கைக்கூலிகளாக விளங்குகின்ற அரசின் அடியாட்களாக, படையாட்களாக இருக்கின்ற போலீசும், ராணுவமும் கூட வேலூர்க் கிளர்ச்சியிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

1799 மே மாதம் 4ம் தேதி. கர்நாடகாவிலுள்ள ஸ்ரீரங்கப்பட்டிணத்தில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் படைக்கும், மைசூரை ஆண்டு கொண்டிருந்த ஹைதர் அலியின் மகன் திப்புசுல்தானின் படைக்கும் நடைபெற்ற போரில் படுகொலை செய்யப்பட்ட 12000 படைவீரர்களின் உடல்களுக்கிடையே, மாவீரன் திப்பு சுல்தானின் உடலும் கிடந்தது.

திப்புவின் 12 மகன்கள், 8 மகள்கள், நூற்றுக்கணக்கான உறவினர்கள் அனைவரும் தமிழகத்திலிருந்து வேலூர்க் கோட்டைக்குள்ளே உள்ளே கர்நாடாக நவாபின் பழைய அரண்மனையில் சிறை வைக்கப்பட்டனர்.

அதற்குப் பிறகு சுமார் 3000த்திற்கும் அதிகமான திப்புவின் ஆதரவாளர்கள் கன்னட தேசத்திலிருந்து வந்து வேலூரிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் குடியேறினார்கள்., அதோடு பிரிட்டிஷ் கம்பெனிப் படையிலும் சிப்பாய்களாகச் சேர்ந்தார்கள்.

அதேசமயம் 1801ல் திருநெல்வேலியில் நடந்த கட்டபொம்மனுக்கு எதிரான போரில் உயிரிழந்தவர்களின் உறவினர்களும், பாதிக்கப்பட்டவர்களும், கட்டபொம்மனின் படையில் இருந்தவர்களும் தங்களை மறைத்துக் கொண்டு கம்பெனியின் ராணுவப் படையில் சேர்ந்தனர்.

ஆக, வெள்ளையரின் படையில், ஆங்கிலேயே அதிகாரிகள், சிப்பாய்களோடு, தமிழக, கர்நாடகச் சிப்பாய்களும் இருந்தனர். இவர்களில் இந்துக்களும், முஸ்லிம்களும் இருந்தனர்.

ஆறு ஆண்டுகள் கழிகின்றன. 1806 ஜுலை மாதம் 10ம் தேதி அதிகாலை 2 மணிக்கு வேலூர்க் கோட்டைக் குள்ளிருந்த பீரங்கிகள் வெடித்தன. சிப்பாய்களின் முழக்கங்கள் கேட்கின்றன. ‘என்ன சத்தம்’ என்று வெளியே வந்த கோட்டையின் தளபதி கர்னல் ஃபான் கோர்ட் உடனேயே சுட்டுக் கொல்லப்பட்டான். வெள்ளை ராணுவ அதிகாரிகளின் குடியிருப்புகளில் இந்தியச் சிப்பாய்கள் புகுந்தனர். படுக்கையிலேயே பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலர் ஓடி ஒளிந்தனர். இத்தாக்குதலில் 14 வெள்ளை அதிகாரிகள் உட்பட 113 பேர் கொல்லப்பட்டனர்.

அதே சமயம் வேலூர்ப் பிரச்சனை 16கி.மீ. தெலைவிலிருந்த ஆற்காட்டிலுள்ள ராணுவப் படைப் பிரிவிற்கும் போய்ச் சேர்ந்தது. படை உடனேயே புறப்பட்டு காலை 9 மணிக்கு வேலூர்க் கோட்டையினுள்ளே எவ்வித எதிர்ப்பையும் சந்திக்காமல் சர்வ சாதாரணமாக, கண்ணில் தென்படுபவர்களையெல்லாம் சுட்டுத் தள்ளிக் கொண்டே உள்ளே நுழைந்தது.

அதிகாலை 2 மணிக்குத் துவங்கிய இக்கிளர்ச்சி காலை 10 மணிக்கெல்லாம் ஒடுக்கப்பட்டுவிட்டது. சுமார் 1000 வீரர்கள் கொல்லப்பட்டனர். கிளர்ச்சிக்கான காரண கர்த்தாக்களான, மரண தண்டனை விதிக்கப்பட்ட சுமார் 600 பேர் மறுநாள் காலை பீரங்கிகளின் குழாய்கள் முன் கட்டப்பட்டு வெடித்துச் சிதற வைக்கப்பட்டனர். இதனைக் காண்பிக்க வேண்டும் என்பதற்காக சுற்றுப் பகுதியிலிருந்த மக்களை நிர்பந்தப்படுத்தி இழுத்து வந்து கூட்டியிருந்தது வெள்ளைப் படை.

இது வேலூர்க் கிளர்ச்சி பற்றிய மிக மிகச் சுருக்கமான தகவலாகும். இக்கிளர்ச்சி பற்றி ஆராய வெள்ளைக் கம்பெனி ஒரு ராணுவக் கமிஷனை ஏற்பாடு செய்தது. அக்கமிஷன் இக்கிளர்ச்சிக்கான காரணங்களாகத் தெரிவித்த காரணங்கள் இரண்டு,

1. சிப்பாய்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள்.

2. திப்புவின் மகன்கள் செய்த அரசியல்சதி.

விரிவஞ்சி இரண்டாவது காரணத்தை மட்டுமே எடுத்துக் கொள்வோம்.

இக்கிளர்ச்சியைத் திட்டமிட்டு நடத்தியதில் திப்புவின் ஆதரவாளர்களுக்குப் பெரும் பங்கு உண்டு. திப்பு கொல்லப்பட்டதும், வேலூரில் குடியேறிய கன்னடச் சிப்பாய்களின் செயல்பாடுகளிலிருந்து இது தொடங்குகிறது.

1800ம் ஆண்டு பிரிட்டிஷ் படையில் இருந்த சிப்பாய்களின் எண்ணிக்கை 70,000. இதில் வெள்ளையர்கள் 13,500 பேர் தவிர மீதம் 56,500 பேர் ஹைதராபாத், வேலூர், வாலாஜாபாத், சித்தூர், சென்னை, பெல்லாரி, நந்திதுர்க்கம், பங்களூர், பாளையங்கோட்டை, திருவனந்தபுரம், திருச்சிராப்பள்ளி, வெங்கடகிரி காளஹஸ்தி ஆகிய முகாமிடங்களில் இருந்தனர். முகாம் பகுதியிலிருந்தவர்கள் அனைவருமே இந்த 56,500 பேரும் இந்தியர்கள் தான். இவர்கள் அனைவரையும் சந்தித்து வெள்ளைக் கம்பெனிக்கு எதிராகப் போரிடத் தூண்டிய முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

ஃபக்கீர்கள் மற்றும் சந்நியாசி வேடங்களில் கிளர்ச்சியாளர்கள் முகாம்களில் ரகசியக் கூட்டங்களை நடத்தினர். பிரெஞ்சுக் கம்பெனிப் படை ஒற்றர்களும், பிரிட்டிஷாருக்கு எதிராக இதுபோன்று வேலை செய்து வந்தனர்.

திப்புவின் மூத்த மகன் ஃபத்தே ஹைதர் பிரிட்டிஷ் எதிர்ப்புப் புரட்சி இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருந்தது; தம்பி மொய்ஜிதினுடன் சேர்ந்து திட்டங்கள் தீட்டி மராத்தியர்களுக்குக் கடிதம் எழுதியிருந்தது; குர்ரம் கொண்டா பாளையக்காரரிடமிருந்து 10,000 வீரர்களை வரவழைத்து விடலாம் என்கிற நம்பிக்கை கொண்டிருந்தது;

இதுமட்டுமில்லாமல், வேலூரைத் தொடர்ந்து நாடெங்கிலும் உள்ள ராணுவ முகாம்களில் இருந்த பிரிட்டிஷ் கம்பெனி ராணுவத்தினரை வெட்டிச் சாய்க்கவும், திட்டமிடப் பட்டிருந்தன. வேலூர்க் கிளர்ச்சியின் முக்கியத்துவத்தில் ஒன்று, வேலூரைத் தொடர்ந்து நாடெங்கும் நிறைவேற்றத் திட்டமிருந்த ஆயுதப் போர் தான். மிகச் சிறப்பாகத் திட்டமிடப்பட்டு, பிரெஞ்சுப் புரட்சி நடந்த ஜுலை 14லிலேயே இதையும் நடத்திவிடத் தீர்மானித்திருந்த போதுதான், சில குழப்பங்களினால் ஒடுக்கப்படுவதில் போய் முடிந்தது.

ஜுலை 9 அன்று நடைபெற்ற திப்புவின் 5வது மகள் நூருன்னிபொவின் திருமண விருந்தில் ஒரு குடிகார இந்திய அதிகாரி, போதையில் ஜுலை 14 விசயத்தை உளறிவிட்டான் என்றும் இதனால் அன்றிரவே தாக்குதலைத் துவங்கத் தீர்மானித்து அதுவும் அதிகாலை (ஜுலை 10) 2 மணிக்குத் துவக்கியதாகவும் ஒரு செய்தி உள்ளது.

வேலூர்க் கிளர்ச்சி ஒரு புரட்சியாகப் பரிணமிக்காமல் தோல்வியடைந்ததற்கு போர்த் தந்திர நடவடிக்கைகள் ஒழுங்காகத் திட்டமிடப் படாததோ அல்லது அவசரமாக நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் வந்ததோதான் காரணமாக இருக்க முடியும். ஆனாலும் வேலூர்க் கிளர்ச்சியின் மிகச் சிறப்பம்சமாக நாம் இன்னொன்றையும் காணலாம். இந்து, முஸ்லிம் என்கிற மத பேதம் மட்டுமின்றி தமிழன், கன்னடன் என்கிற இன பேதமும் இதற்குத் தடையாக இருக்கவில்லை. தமிழகக் கன்னடச் சிப்பாய்கள் ஒன்றிணைந்து கிளர்ச்சி செய்தது. இதுதவிர, ஹைதராபாத், திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு முகாமினரோடு இணைந்து தாக்குதல் நடத்தத் திட்டமிருந்தது. முதன் முறையாக ஒரு ஆயுதந்தாங்கிய சிப்பாய்கள் குழு வெள்ளைக் கம்பெனிப் படையைத் தாக்கியது.

இவ்வாறு, அந்நிய எதிர்ப்பிற்காக ஒன்றிணைந்து போராடிய வரலாற்று மரபு நமக்கு இருப்பதை வேலூர்க் கிளர்ச்சி நமக்கு நினைவூட்டுகிறது. மேலை வரலாறுகளில், ராணுவக் கலகங்கள், ஆட்சிக் கவிழ்ப்புகளை நிறையப் பார்க்கிறோம். ஆனால் அது பெரும்பாலும் அதிகாரத்திலிருப் பவர்களிடையே உள்ள போட்டியாகவே இருக்கும். ஆனால் வேலூர்க் கிளர்ச்சி அப்படிப்பட்டதல்ல.

பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக வீரமாகப் போராடிய திப்புவின் மக்களை தமது அரசராக தமிழகச் சிப்பாய்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராயிருந்த மனநிலையும் கூட இதில் வெளிப்படுகிறது.

திப்புவின் செல்வாக்கு தொடர்ந்து இருந்து வந்திருப்பதையும் அதற்குக் காரணங்கள் உள்ளன என்பதையும் கவனிக்க வேண்டும். பிரிட்டிஷ் கம்பெனியின் வியாபாரத்திற்குத் தடைவிதித்தது; வியாபாரத் துறையை முழுக்க அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது; (இன்று தாராளமயம், தனியார் மயமாக்க ஆளும் அரசுகள் நாலுகால் பாய்ச்சலில் பாய்கின்றன.) சொந்தமாக தொழிற்சாலைகள் அமைத்து ஆயுதங்கள் தயாரித்தது; சொந்தமாகவே கப்பல்களைக் கட்டி பயன்படுத்தி வந்தது. (இன்று அமெரிக்காவிடம் கையேந்துகிறது அரசு) 1794ம் ஆண்டு சிறைப் பிடிக்கப்பட்ட பொது மக்களை பணம் கொடுத்து மீட்டு வந்தது (இன்று கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டு பிணத்தை மட்டும் வாங்கி வந்தது இந்திய அரசு). புதிய தொழில்களை நிர்மாணித்தது. மத சகிப்புத் தன்மையுடன் இருந்தது. இதுபோன்ற பல அம்சங்கள் திப்புவை மக்களின் மனங் கவர்ந்தவராக ஆக்கியிருந்தது.

ஒரு அந்நிய அரசைத் தூக்கியெறிய, மதம், இனம் பாராமல் அதனுடைய ராணுவப் படையே நடத்திய தாக்குதல்தான் வேலூர்க் கிளர்ச்சி 1806 ஆகும். இன்று அந்நிய பன்னாட்டுக் கம்பெனிகளின் கைக்கூலிகளாக விளங்குகின்ற அரசின் அடியாட்களாக, படையாட்களாக இருக்கின்ற போலீசும், ராணுவமும் கூட வேலூர்க் கிளர்ச்சியிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். நாடு குறித்த கவலை அன்றைய சிப்பாய்களிடம் இருந்தது. இன்றைய சிப்பாய்களிடமும் அது இருக்க வேண்டும். வேலூர்க் கிளர்ச்சி மீண்டும் இம்மண்ணில் நடைபெற வேண்டும், அது புரட்சியாகப் பரிணமிக்கும் வரை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com