Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஆகஸ்ட் 2006
அயல் மகரந்தச் சேர்க்கை

புனிதமா? மனிதமா?
பேரா. அப்துல் காதர்

ஆண்டாண்டு காலமாக ஊசிக் காதுக்குள் நூல்கள் நுழைந்து கொண்டே இருக்கின்றன. வண்ண வண்ணமான நூல்களை உள்வாங்கி இருந்தாலும், ஊசியின் கிழிசல் தைக்கப்படாமல் தான் இருக்கிறது. நெறிப்படுத்தும் வேதங்களாம் ஆதிநூல்கள், சரிப்படுத்தும் நீதி நூல்கள், முறைப்படுத்தும் போதி நூல்கள் என எத்தனையோ நூல்களைக் காலகாலமாகப் பெற்றாலும், சமூகம் தன் கிழிசலைத் தைத்துக் கொள்ளத் தயாராக இல்லை, ஓர் ஊசியைப் போல. பெண்ணியத்தின் கண்ணியமும், தாய்மையின் தூய்மையும் மீண்டும் கேள்விக்குள்ளாக்கப் பட்டுள்ளன. கருவறையைச் சுமப்பவளுக்கே கருவறைக்குள் அனுமதியில்லை. தமிழும் தாயாக இருப்பதனால் அதற்கும் அதே கதிதான்.

Meera Jasmine பெண்,

“ஆணே!
உன் கண்ணுக்கு ஊட்டியாய் இருப்பாள்
உனக்கான அன்பில் போட்டியாய் இருப்பாள்
உன் இடுப்புக்கு அவளே வேட்டியாய் இருப்பாள்
உன் குழந்தைக்கு என்றும் தோட்டியாய் இருப்பாள்”

என்று நெடுநாளைக்கு முன்பு நெஞ்சில் படர்ந்த என் பாடல் வரிகள் நினைவில் எழுகின்றன. துப்புரவுப் பணியாளராம் தாழ்த்தப்பட்டவர்கள் நுழைந்தால் கோவில் தீட்டுப்பட்டு விடும் எனத் தீண்டத்தகாதோராய் ஒதுக்கி வைக்கப் பட்டுள்ளதற்கும், பெண்களை கர்ப்பக் கிரகத்திற்குள் நுழையக் கூடாது என்று தன்ளி வைத்ததற்கும் ஒரே காரணம் தான் இருக்க முடியும்.

“The relationship between the untouchables
and the society is that of chappals and the foot:”

(தீண்டப்படாதோர்க்கும், சமூகத்திற்கும் உள்ள உறவு காலுக்கும் செருப்புக்கும் உள்ள உறவினை ஒத்ததாகும்)

என்றார் சட்டமேதை பாபாசாகிப் அம்பேத்கர்.

அடிகளில் சேறும், சகதியும், சாணியும், தூசியும் பட்டு, காலடிகள் அழுக்காகி விடாமல், தான் அந்த அழுக்குக்களையெல்லாம் தாங்கிக் கொண்டு, தேயத் தேய உழைப்பவை காலணிகள்தான். உழைக்கும் சமூகத்தை இழிவாகக் காணும் பிறழ்ந்த பார்வை தொன்மைக் காலம் முதல் தொடர் நிகழ்வாகிவிட்டது.

பெண்ணே சமைக்கிறாள், துவைக்கிறாள், வெளுக்கிறாள், துப்புரவு செய்கிறாள், கூட்டிப் பெருக்குகிறாள், தைக்கிறாள், சமைக்கிறவளைப் பெண்டிர்கழகு உண்டி சுருக்குதல் எனப் பட்டினி போடுகிறோம். துவைத்து, வெளுத்துத் துப்புரவு செய்பவளை அழுக்காக்குகிறோம். தைப்பவளைக் கிழி, கிழி எனக் கிழிக்கிறோம். நம் முதல் நிர்வாணத்தை மறைக்கக் கருப்பையையே ஆடையாகத் தந்தவளைத்தான் துச்சாதனம் செய்கிறோம். இரத்தத்தையே பாலாக்கித் தந்தவளின் இரத்தப் போக்கைத் தீட்டெனச் சிறுமைப்படுத்துகிறோம். வயிற்றையே வீடாகத் தந்தவளைத்தான் முதியோர் இல்லங்களில் தள்ளாத வயதில் தள்ளி வைக்கின்றோம். கருமுட்டைகளை அடைகாத்த வயிற்றின் மேல் ஆம்லேட் போடுகின்றோம். உள்ளுக்குள் தொப்புள் கொடியென்னும் தொட்டில் கயிறு கட்டுகிறவள் தொப்புளில் தான் பம்பரக் கயிறவிழ்க்கிறோம்.

நடிகையர் ஜெயமாலாவும், மீராஜாஸ்மினும், முறையே தெய்வத் திருமேனியைத் தீண்டுகைக்கும், கோயில் நுழைகைக்கும் தோஷபரிகாரம் செய்து கொண்டுள்ளார்கள். அரி மோகினியாகப் பெண் வடிவம் எடுத்து, அரனோடு கலந்ததால் அரிஹர புத்திரன் அவதரித்தான் என்பது நம்பிக்கை. அவதாரம் அவதரிக்கவே அன்னை தேவை. அவன் ஆலயத்திற்குள் அவள் தேவையில்லை. பெண்ணொருத்தி நுழைந்தால் ஆலயம் அழுக்காகி விட்டதெனப் பணிக்கர் சொல்கிறார். விரதக் கட்டுப்பாடு கருதி மனிதர்கள் வகுத்திருக்கும் விதியே அன்றி, எந்த மூல நூலிலும் இப்படித் தடைகள் சொல்லப்பட்டதில்லை.

ஆதி, இறையாலயமான மக்காவிலிருக்கும் கஃபத்துல்லாவைப் பார்த்து நாயகத் தோழர் ஹஜ்ரத் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

“கஃபத்துல்லாவே!
நீ எத்துணை அருளும்,
கண்ணியமும் பொருந்திய
இல்லமாக உள்ளாய்!
எனினும்
இறைவனிடம்
ஏகத்துவ
நம்பிக்கையுள்ள
ஒரு
மனிதனின்
கௌரவம்
உன்னைவிட மேலானது”

என்றார். ஆண்களும், பெண்களும் இடவலமாக இருபத்தி நான்கு மணி நேரமும் சுற்றி வழிபடும் இறையில்லம் கஃபத்துல்லாஹ், ஆயுளில் ஒரு தடவையாவது தரிசிக்க வேண்டும் என உலகில் ஐவரில் இருவரான இசுலாமியர் ஐந்தாங்கடமையைச் செலுத்துவதற்கு இறைவனே தெரிவு செய்த அந்த ஆலயத்தை விட மனிதம் உயர்ந்தது என்ற வார்த்தைகள் அசைபோடத் தக்கவை.

வைகறைத் தொழுகைக்காக இறைவனின் இறுதித் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) தொழுகை நடத்தி வைக்க இமாமாக முன்னிற்கிறார்கள். இறைமறை குர்ஆனின் இனிய வரிகள் போல நாயகத் தோழர்கள் வரிசை, வரிசையாகப் பின்னிற்கிறார்கள் பின் வரிசையில், பெண்கள் தொழுகைக்காக நின்றார்கள். 60 ஆயத்துக்கள் அடங்கிய ‘சூரத்துல் ரூம்’ என்ற குர்ஆனின் வசனத் தொகுப்பிலிருந்து பெருமானார் ஓதத் தொடங்கினார்கள். 3 ஆயத்துக்களை மட்டும் ஓதி, சூரத்துல் ஃபலக், சூரத்துன்னாஸ் திருவசனங்களைத் தொடர்ந்து ஓதி, தொழுகையை விரைவில் முடித்துக் கொண்டார்கள். தொழுகை முடித்தவுடனே, தோழர் நாயகம் (ஸல்) அவர்களிடம்

“நாயகமே! இளங்காலைத் தொழுகையில், ‘சூரத்துல் ரூம்’ அத்தியாயத்தைத் தொடக்கமாக ஓதினீர்கள். 60 ஆயத்துக்கள் அடங்கிய திருமுறை வசனங்களைத் தேனினும் இனிய குரலில் இன்று செவிகளாரக் கேட்கும் வாய்ப்புக் கிட்டியதே, என மகிழ்ந்து, இறைவனுக்கு நன்றி செலுத்தித் தொழுகையில் நின்றோம். ஆனால் திடீரென 3 ஆயத்துக்கள் மட்டும் ஓதித் தொழுகையை முடித்து விட்ட காரணத்தால், அமுதக் குவளையிலிருந்து சில திவலைகள் அருந்தியபோது, வெடுக்கெனக் குவளை விலகியது போல உணர்ந்தோம். வருந்தினோம். தொழுகையை விரைந்து முடித்ததன் காரணம் என்ன?” என்று வினாவினார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்)

“3 ஆயத்துக்கள் ஓதும் வேளையில், அருகிருக்கும் வீட்டில் கைக்குழந்தை ஒன்றின் அழுகுரல் கேட்டேன். பின்வரிசையில் நின்று தொழும் பெண்களில் அக்குழந்தையின் தாய் இருக்கலாம், குழந்தையின் துன்பம் உடனே நீங்க வேண்டும். குழந்தையின் அழுகுரல் கேட்ட தாயின் உள்ளம் புண்படல் ஆகாது. எனவே ஒரே வழி தொழுகையை விரைவாக நிறைவேற்றுவதுதான் எனக் கருதித் துரிதமாகத் தொழுகையை முடித்தேன்” என்றார்கள். மசூதியில் தொழுகைக்கு மகளிரும் வந்திருந்தார்கள் என்பதும், வழிபாட்டில் ஒரு பெண்ணின் - தாயின் உள்ளம் எவ்வகையாலும் காயப்படல் ஆகாது என்ற கவனத்தோடும், அக்கறையோடும், தொழுகை நிறைவேற்றப் பட்டது என்பதும் நினைவில் கொள்ள வேண்டியவை. புனிதம் பார்க்கப்படுவதை விட மனிதம் பார்க்கப்பட வேண்டும் என்பதே கடைப்பிடிக்க வேண்டிய கட்டாய நெறிமுறை. வழிபடும் இடத்தில் பால் அடிப்படையில் பேதங்காட்டல் ஆகாது என்பதும் மேற்படி நிகழ்ச்சி விளக்கும் உண்மை ஆகும்.

‘அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும்
ஆலய வழிபாடில்லை’

என்றார் கவியரசு கண்ணதாசன். ஆள்லயம் பார்க்குமிடமாக ஆலயம் மாறி விடலாகாது என்ற அடிப்படையில்தான் நாயகம் (ஸல்) ‘பெண்களுக்கு அவரவர் வீடுகளே வழிபடுவதற்குச் சிறந்த இடம்’ என்று அறிவித்தார்கள். பெண்கள் வழிபடும் பள்ளிகளுக்கு வரக்கூடாது என்ற தடையோ, மசூதியின் இந்தப் பகுதிக்குள் வரலாம், இந்தப் பகுதிக்கு வரலாகாது என்ற தகைப்போ, வழிபாட்டிடம் பெண் வந்தாலே, தீண்டினாலே தீட்டுப்பட்டுவிடும் என்ற நம்பிக்கையோ நபிகளாரின் நடைமுறையில் இல்லை.

ஒரு மசூதியின் வளாகத்திற்குள்ளே வந்த முஸ்லிம் அல்லாத சகோதரர் ஒருவர், அங்கேயே சிறுநீர் கழிக்கத் தொடங்குகிறார். அதனைக் கண்ட நபித்தோழர்கள் அவரைத் தாக்கத் துடிக்கிறார்கள். நபிகளார் அந்த மனிதன் சிறுநீர் கழித்து முடிக்கும் வரை காத்திருக்கிறார். தாக்கத் துணிந்தவர்களைத் தடுக்கிறார். வழிபாட்டிடத்தின் தூய்மை பேணப்பட வேண்டும் எனச் சிறுநீர் கழித்த மனிதர்க்கு இதமாக எடுத்துரைக்கின்றார். பின்னர் தன் கரங்களாலே, தண்ணீர் ஊற்றி அந்த இடத்தைத் தூய்மை செய்கின்றார். வழிபாட்டிடத்தையே யாரும் சிறுமை செய்து விட முடியாதென்றால், ஆண்டவனை அழுக்குப் படுத்த முடியுமா? மத்திய அமைச்சர் ஜெகஜீவன்ராம் திறந்து வைத்தார் என்பதற்காகவே சிலையையும், அது அமைக்கப்பட்ட வளாகத்தையும் தீட்டுப் பட்டதெனக் கருதி கங்கை தீர்த்தத்தால் கழுவிய நிகழ்ச்சி கண்ணில் நீரை வரவழைத்தது. அவர் தலித் இனத்தவர் என்ற ஒன்றுதான் அதற்குக் காரணம்.

இன இழிவுக்கு முன் பெண்ணும், தலித்தும் ஒன்றுதான்!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com