Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஆகஸ்ட் 2006
விளையாட்டென்றால் விளையாட்டா?

உதை(க்கும்) பந்தாட்டம்

சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்

உலகையே ஒருவித மயக்கத்தில் கட்டிப் போட்டிருந்த உலகக் கோப்பை கோலாகலங்கள் நிறைவு பெற்று விட்டன. “ஆகா... ஓகோ...’ என்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கூத்தாடியவர்கள் கோடி என்றால் “சீச்சீ” என்று முகம் சுழித்தவர்களும் இல்லாமல் இல்லை. அந்தப் பட்டியலில் இடம் பெறுவதில் எனக்கு எவ்விதத் தயக்கமும் இல்லை. இந்தக் கோலாகலங்கள் இரவெல்லாம் கண்விழித்து பகலெல்லாம் தூங்கி வழியும் ஒரு சோம்பேறிக் கூட்டத்தையே சிருஷ்டித்தது என்பது கண்கூடு. பல நாடுகளில் அது பகல் நேரம் தான் என்றாலும் போட்டி தொடர்பான கொண்டாட்டங்கள் கோலாகலங்கள் - அடிதடிகள் - ரவுடித்தனங்கள் எல்லாம் சேர்ந்து இரவுகளை நீளமாக்கி பகலை இரவாக்கிய புண்ணியத்தை செய்தன.

கிரிக்கெட்டில் ஆட்டத்தின் போது தேவை இல்லாமல் முறையீடு செய்தாலே அபராதம் விதித்து விடுவார்கள். ஒருமுறை எவ்வித குற்றமும் செய்யாத நிலையிலும் தன் அணியினர் அனாவசியமாக முறையீடு செய்ததை தடுக்கத் தவறினார் என்பதற்காகவே இந்திய அணியின் தலைவர் கங்குலிக்கு அபராதம் விதித்தார்கள்.

ஆனால் இங்கே முரட்டுத்தனமான முறை கேடான ஆட்டத்தில் பல ஆட்டங்காரர்கள் ஈடுபட்டனர். நடவடிக்கை எடுத்த நடுவரையே முறைத்தனர். எனினும் ஒன்றும் நடக்கவில்லை. முறைகேடான ஆட்டத்துக்காக மிக அதிகமான மஞ்சள் அட்டைகளும் மிக மிக அதிகமான சிவப்பு அட்டைகளும் வெளியில் எடுக்கப்பட்ட உலகக் கோப்பைப் பந்தயம் இதுவென்ற அபகீர்த்தியும் இதற்கு உண்டு. உடல் ஊனமோ அல்லது உயிருக்கு ஆபத்தோ ஏற்படக் கூடும் என்பதைப் பற்றி கவலைப்படாத மிருகத்தனமான ‘தடுத்தல்கள்’ இடம்பெறாத ஆட்டங்களும் இல்லை. ஈடுபடாத ஆட்டக்காரர்களும் இல்லை என்கிற நிலைதான் இருந்தது. களத்தில் ஆட்டக்காரர்கள் ரௌடித் தனங்களில் ஈடுபட்டார்கள் என்றால் வெளியில் அதை அவர்களது ரசிகர்கள் வெகு கச்சிதமாக செய்து அந்தக் கேவலத்தில் தங்கள் பங்கையும் உறுதி செய்து கொண்டார்கள்.

“கள்ளினும் கொடிது காமம்” என்பர். உதைப் பந்தாட்டம் ஏற்படுத்திய போதையின் மயக்கமும் அதைவிட மோசமாக இருந்தது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் இந்த போக்குக்கு எதிராக ஓர் இயக்கமே களமிறங்கியுள்ளது. தீவிரப் பிரச்சாரமும் மேற்கொண்டது.

எந்த புது நட்சத்திரங்களும் குறிப்பிட்டுச் சொல்கிறார் போல் தோன்றவும் இல்லை. இருந்த நட்சத்திரங்களும் எதிர்பார்த்த அளவு ஒளி விடவுமில்லை என்பது இந்தப் போட்டி ஆட்டங்களில் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம்.

இனவெறி, இந்தப் போட்டி ஆட்டங்களில் வெளிச்சத்துக்கு வராத இன்னொரு கருத்த முகம். இதன் விளைவான நடுவர்களின் பாரபட்சமான போக்குக்கு ஆசிய ஆப்பிரிக்க அணிகள் தான் அதிகம் பலியாகின என்பதை ஆட்டங்களை உன்னிப்பாக கவனித்தவர்கள் அவதானித் திருப்பார்கள். ஆப்பிரிக்க நாடான ‘கானா’வுக்கு எதிராக மட்டும் ஏழு மஞ்சள் அட்டைகள். தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்த விரும்பும் ஐரோப்பிய நாடுகள் தென் அமெரிக்க நாடுகளை மட்டுமல்ல இங்கிலாந்தையும் கூட ஓரளவுக்கு அந்நியமாகக் கருதுவதை நம்மால் உணர முடிந்தது.

இங்கிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரம் ‘வெய்ன் ரூனி’ சிவப்பு அட்டை காட்டப்பட்டு ஆட்டத்தை விட்டு வெளியேற்றப்பட இங்கிலாந்தின் ‘மான்ஜெஸ்டர் யுனைட்டட் அணி’யில் அவருடன் இணைந்து ஆடும் போர்ச்சுகலின் ‘ரொனால்டோ’காரணம் என்பதை ஓர் உதாரணமாகக் கொள்ளலாம். இந்த இனவெறியின் கோரமுகம் இன்னொரு ரூபத்திலும் வெளிப்பட்டது. வெள்ளையர் அல்லாதவர்களை வேறு வழியில்லாத சூழ்நிலைகளில் மட்டுமே சகித்துக் கொண்டார்கள். மற்றபடி சந்தர்ப்பம் கிடைக்கும் பட்சத்தில் தங்கள் ஈனபுத்தியை தயக்கமில்லாமல் காட்டினார்கள். ஈரான், சவுதி அரேபிய அணிகள் வேண்டாத விருந்தாளிகளாகவே கருதப்பட்டதாக தகவல் உண்டு. சிறந்த ஆட்டக்காரர்களைக் கொண்ட அந்த அணிகள் பூர்வாங்க போட்டி ஆட்டங்களில் மிக மோசமாக தோற்றதற்கு இது ஏற்படுத்திய மன உளைச்சலும் காரணம் என்று கருதப்படுகிறது.

இந்த ரௌடிகள் சாம்ராஜ்யத்தில் சில ஜென்டில்மேன்களும் இல்லாமல் இல்லை. அவர்களில் ஒருவர் ஃபிரன்ஞ் அணியின் தலைவர் ‘ஸிடேன் ஸினடேன்’. அல்ஜீரியா நாட்டின் அரேபிய வம்சாவழியில் பிறந்த முஸ்லிம்! ஃபிரான்சில் தான் அவர் பெயர் இவ்வாறு இருக்கிறது. தமிழிலோ அரபியிலோ அந்த பெயரை எழுதுவதென்றால் அது செய்யதன் ஜெய்னுத்தீன் என்றிருக்கும். கொலை கொம்பன்களான பிரேசிலை தோற்கடித்து 1998ல் பிரான்ஸ் உலகக் கோப்பையை கைப்பற்ற காரணமாக இருந்த மூலபுருசன். உலகிலேயே மிக அதிக சம்பளம் வாங்கும் கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவர். இவர் தங்கள் அணிக்காக ஆட வேண்டும் என்று விரும்பும் உலகப் புகழ்பெற்ற பலநாட்டு அணிகளின் பட்டியலும் நீளும்.

பிரன்ஞ் அணி ஆரம்ப கட்டத்தையே தாண்டாது என்கிற நிலை மாறி உச்சத்தை அடைய வேண்டிய சரியான தருணத்தில் அதனால் உச்சத்தை அடைய முடிந்தது. அதற்கு முக்கியக் காரணம் ஸிடேனின் ஆட்டம் - தலைமை. அணி கோப்பையை பெறுகிறதோ இல்லையோ ‘ஸிடேன்’ சிறந்த ஆட்டக்காரராக தேர்ந்தெடுக்கப்படுவார், தங்கக் கால்பந்தை பரிசாகப் பெற தகுதிபெறுவார் என்பது நாளுக்கு நாள் உறுதியாகி வந்தது. விடுவார்களா? அவரைச் சீண்டும் வேலைகள் தொடர்ந்தன. விரித்த வலையில் விழ அவர் தயாராக இல்லை. எனினும் வீழ்த்தி விட்டார்கள்.

இத்தாலி ஆட்டக்காரர் இவரது சட்டையை பிடித்து இழுத்த போது கோபம் வந்தது என்றாலும் “பொறு ஆட்டம் முடிந்ததும் தருகிறேன்” என்று குரலில் இளக்காரம் தொனிக்க சொல்லிப் பார்த்தார். அந்த ‘மட்ட’ரேசி விடவில்லை. ஸிடேனின் பிறப்பை இழித்தும் அவரது தாயையும், தந்தையையும் பழித்தும் பேசினார். தன் நாடு, தன் அணி, உலகக் கோப்பை இறுதி ஆட்டம் என்பவைகளை எல்லாம் எண்ணி ஸிடேன் அப்போதும் பொறுமை காத்தார். கடைசியில் மட்டரேசி அடிமடியிலேயே கை வைத்தார். “போடா இஸ்லாமியத் தீவிரவாதி” என்றார். பொறுக்கவில்லை ஸிடேனுக்கு, அந்த வார்த்தை அவரது அந்தரங்க சுத்தியையே சந்தேகத்துக்கு உள்ளாக்கியது. சீறியது ஐல்லிக்கட்டுக் காளை. மோதியது மட்டரேசியின் மார்பில். மண்ணில் சாய்ந்தார் மட்டரேசி. ஸிடேன் வெளியேற்றப்பட்டார். “பெனால்டி ஷுட் அவுட்”டில் ஸிடேனின் திறமை ஃபிரான்சுக்கு கிடைக்காமலே போய்விட்டது. இத்தாலிக்கு வெற்றி கிடைத்தது. புகழ் கிடைக்கவில்லை. இந்த கேவலமான வெற்றியைவிட இத்தாலி தோற்றிருந்தால் கௌரவமாக இருந்திருக்கும்.

பிரான்ஸ் தோல்வியுடன் தான் நாடு திரும்பியது. ஆனால் மாபெரும் வீரர்களுக்கான வரவேற்பு காந்திருந்தது. “வருங்கால அதிபர் ஸிஸுசே வருக!” என்ற பிரம்மாண்டமான அலங்கார வளைவுகள். வரவேற்ற ரசிகப் பெருமக்களில் முன்னணியில் நின்றவர் பிரன்ஞ் அதிபர். “ஜக்குவஸ் சிராக்” ஸிடேனை பிரன்ஞ் மக்கள் அபிமானத்துடன் அழைக்கும் செல்லப் பெயர் ‘ஸிஸு’. தங்கள் அணி தோற்றாலும் ‘ஸிடேன்’ சிறந்த ஆட்டக்காரராக தெரிவு செய்யப்பட்டு தங்கக் கால்பந்தும் வழங்கப்பட்டது குறித்து பிரன்சுக்காரர்களுக்கு ஏகப் பெருமை.

ஒரு சிறந்த விளையாட்டு வீரனை அவனொரு முஸ்லிம் என்பதற்காக கொச்சைப்படுத்தி பேசுவது பேசுபவர்களின் கீழ்மையைத்தான் வெளிச்சம் போட்டுக் காட்டும். அதன் மூலம் “ஸ்போட்ஸ்” எனப்படும் உன்னதமான சொல்லே, அசிங்கப்பட்டு அனர்த்தமாகிப் போய்விடும். சமாதானம், சகோதரத்துவம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் விளையாட்டுத் துறைக்கு இந்த கதி நேரக்கூடாது என்பதுதான் நல்லவர்களின் பிரார்த்தனையாக இருக்கிறது.

* மேற்கிந்தியத் தீவுகளுடனான ஒருநாள் போட்டி ஆட்டங்களில் “மூன்றுக்கு இரண்டு” என்று பெறவேண்டிய வெற்றி, “நாலுக்கு ஒன்று”என்று தோல்வியில் முடிய, டெஸ்ட் போட்டி ஆட்டங்களில் முதல் போட்டியில் தப்பி, அடுத்த இரண்டில் கோட்டை விட்டு, கடைசி போட்டியில் முதல் இன்னிங்ஸில் இருநூறு ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டம் க்ளோஸ், என்கிற முடிவுக்கு நம்மை விரட்டி, பிறகு மேற்கிந்தியத் தீவுகளை சொற்ப ரன்களுக்குள் சுருட்டி, இரண்டாவது இன்னிங்ஸில் சற்று சுதாரித்து நிர்ணயித்த இலக்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணி அடையவிடாமல் தடுத்து, கடைசியில், வெற்றி வாகை சூடிவிட்டது இந்திய கிரிக்கெட் அணி! தொடர் நாயகனாகவும், ஆட்ட நாயகனாகவும், ஒருசேர பெருமை பெற்றார் அணித்தலைவர் “ராகுல் டிராவிட்”!

* திரைத்துறையாகட்டும், அரசியலாகட்டும், விளையாட்டிலாகட்டும் ஒவ்வொரு காலகட்டத்திலும் குறிப்பாக இருவர் ஆதிக்கப் போட்டியில் முன்னணியில் நிற்பார்கள். டென்னிசும் விதிவிலக்கல்ல. இப்போதைய முன்னணி வீரர்கள் சுவிட்சர்லாந்தில் ‘ரோஜர் ஃபெடரர்’ மற்றும் ஸ்பெயினின் “ராபேல் நேடல்” பின்னவர் ஃபிரென்ச் ஓபனை வென்றார். முன்னவர் விம்பிள்டனை வென்று தான் முன்னணி வீரர் என்பதை மீண்டும் நிரூபித்தார். தொடர்ச்சியாக விம்பிள்டனில் மட்டும் நான்கு கிரீடங்கள். புல்தரைப் போட்டிகளில் தொடர்ச்சியாக நாற்பத்திஎட்டு வெற்றிகள். பல ஜாம்பவான்களின் சாதனைகளை முறியடித்து புதிய உச்சங்களைத் தொடுவார். சந்தேகமில்லை. ஆனால் ‘நேடல்’ தொடர்ந்து பெரிய சவாலாகத் திகழ்வார். நிச்சயம்!

இங்கே நமது கிரிக்கெட் வீரர்கள் ஆடவரும் போது அவர்களை அங்கும் இங்கும் சுமந்து செல்லும் பேருந்து அவர்கள் வருவதற்கு முதல் நாளே காவல் துறையின் பாதுகாப்பு வளையத்துக்குள் வந்துவிடும். பிறகு அவர்கள் திரும்பும் வரை அவர்கள் கட்டுப்பாடிலேயே இருக்கும்.

ஆனால் விம்பிள்டனில் எந்தப் பெரிய கொம்பனானாலும் சரி தங்கள் ஆட்டம் முடிந்ததும் ஆட்ட உபகரணங்கள் கொண்ட பொதியை அனாயாசமாக முதுகில் சுமந்து கொண்டு அருகில் உள்ள தங்கள் தற்காலிக வாடகை இல்லங்களுக்கு சாதாரணமாக நடந்து செல்வதைப் பார்க்கலாம். எந்த பந்தாவும் கிடையாது. சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டுமா ரெடி! ஆட்டோகிராஃப் தயார்!! விம்பிள்டனில் உள்ளே கூட்டம் நிரம்பி வழியும் ஆனால் வெளியே வெறிச்சோடிக் கிடக்கும். காரணம் எந்தப் பெரிய மனிதராயினும் சரி தங்கள் வாகனங்களை அருகில் உள்ள தோட்டங்களில் நிறுத்திவிட்டு அங்குள்ள வாடகைக் கார்களில் கட்டணம் செலுத்தி ஆட்டம் நடக்கும் இடத்துக்கு வரவேண்டும். கட்டணம் ஒன்றும் அதிகமில்லை! எட்டு பவுண்ட் தான். அதாவது சுமார் அறுநுற்று ஐம்பது ரூபாய்! உள்ளே போக ஆகக் குறைந்த கட்டணம் இருபத்தி நான்கு பவுண்ட். அதாவது சுமார் ஆயிரத்தி தொள்ளாயிரம் ரூபாய்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com