Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
ஆகஸ்ட் 2005
கட்டுரை

ஒரு நூற்றாண்டைத் தாண்டிச் செல்லும் எழுத்துக்கள்
கி. சாம் ஜெஃப்ரி சீனிவாசகம்


சமகால இலக்கியவாதிகள் பலரிடம் இருந்தும் முரண்பட்டுத் தனக்கெனத் தனி இலக்கியக் கொள்கையை வளர்த்துக் கொண்ட ஓர் அற்புதக் கலைஞன் புதுமைப்பித்தன்.

சமூக நிகழ்வுகளைத் தங்களது கலைப் படைப்புகளில் பிரதிபலிக்கிற எழுத்தாளர்கள், கடவுளர்களைக் குறித்துச் சமூகத்தினர் எவ்வாறு கேள்விப்படுகின்றனரோ அவ்வாறே எழுதிச் செல்கின்றார்கள். இவ்வகைப்பட்ட எழுத்தாளர்கள், கடவுளின் மீது அபரிமிதமான நம்பிக்கை கொண்டவர்கள்; கடவுளின் செயல்பாடுகளை, அவர்களது சித்து விளையாடல்களை, அவற்றின் வெற்றிகரமான விளைவுகளை எழுதுவதையே பிரதான பணியாகக் கருதுபவர்கள். இவர்களது கதை மாந்தர்களும் புதுமைப்பித்தனின் கதை மாந்தர்களிடமிருந்து வேறுபடுகிறார்கள். பிறரது கதைகளில் வருபவர்கள், கடவுளர்களைப் போற்றுகிறவர்கள். கடவுளர்களே எல்லா நிகழ்வுகளுக்கும் காரணர்கள் என எண்ணுகிறவர்கள்

புதுமைப்பித்தன் கதைகளில் படைக்கப் பட்டுள்ள கதை மாந்தர்களுக்குத் தெய்வ நம்பிக்கை இருந்தாலும் நெருக்கடியான கட்டங்களில், சோதனை சந்தர்ப்பங்களில், ‘கடவுளே, நீ இருக்கிறாயா? தெய்வமே நீ உண்மைதானா?’ என வாய்விட்டு அரற்றுகின்றனர்.

தங்களது இழிநிலைக்கும், சீர்குலைவுகளுக்கும் கடவுளர்களே காரணம் என்று புதுமைப்பித்தனின் கதைமாந்தர்கள் எண்ணுகின்றனர். பெரும்பான்மையும், அவரது கதைகளில் கதைமாந்தர்கள், இறைவனிடம் வாதாடுகின்றனர்; சில சமயங்களில் போராடவும் செய்கின்றனர். இப்‘போராட்டம்’ என்பது மனித வாழ்வில் சகஜமாகிவிட்ட ஒன்றுதான். இவற்றின் முடிவுகளில், கடவுளர்கள் மனிதனிடம் தோற்றுப் போய், பரிதாபகரமாக நிற்பது, புதுமைப்பித்தனின் கதைகளில் மட்டுமே காண முடிகிற ஒரு நிலை. இக்காட்சியைப், புதுமைப்பித்தன் தமது கதைகளில் உருவாக்குவதற்கு அடிப்படைக் காரணம், அவர் கொண்டிருந்த கடவுள் கோட்பாடே. கடவுள் பற்றிய புதுமைப்பித்தன் சிந்தனைகள் சுவராஸ்யமானவை. ‘ஒரு கூட்டத்தின் பாதுகாப்புக்கு அது அவசியமானால் - ஒரு பொய்யைச் சொல்லித்தான் கடவுள் என்ற பிரமையை படைத்தால் என்ன?’என்று புதுமைப்பித்தன் ஒரு கட்டுரையில் கூறுகிறார்.

மற்றவர்களின் மனதில் நம்பிக்கையில் ஆழமாய் வேரூன்றிவிட்ட கடவுள், புதுமைப்பித்தனைப் பொறுத்தவரையில், படைக்கப்பட்ட வெறும் ‘பிரமை’ யாகத்தான் தெரிகிறது. ‘கடவுள்’ என்ற கருத்தாக்கத்தைப் புதுமைப்பித்தன், சாதாரண மனிதனுடன் மோதித் தோற்கிற விஷயமாகவே தமது கதைகளிலும் படைத்திருக்கிறார். ‘கடவுள்’ ஆவியுலகைச் சார்ந்தவர்; மனித தன்மைக்கு அப்பாற்பட்டவர் என்றெல்லாம் நம்பப்படுகிற கடவுளை எளிய தோற்றத்துடன் கூடிய சாதாரணராகப் புதுமைப்பித்தன் தமது கதைகளில் படைக்க, அவரது மாறுபாடான கொள்கைகளே காரணமாகின்றன. ‘மனக்குகை ஓவியங்கள்’, ‘கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்’, ‘காலனும் கிழவியும்’, ‘ஞானக்குகை’ போன்ற அமானுஷ்ய விஷயம் கொண்ட கதைகளில் வரும் கதைமாந்தர்கள், கடவுளர்களை நோக்கி வினா எழுப்பி, வாதாடி வெற்றி கொள்கிறார்கள். இவர்களிடம் தோற்றுப்போன கடவுளர்கள், தங்களால் படைக்கப் பட்ட பூலோகத்திலேயே வாழ அருகதை அற்றுப் போய்ப் புறமுதுகிட்டு ஓடுகிற இழிநிலையைப் புதுமைப்பித்தனின் கதைகளில் மட்டுமே காணமுடியும்.

புதுமைப்பித்தன், அமானுஷ்ய விஷயங்களைக் கொண்டு எழுதிய கதைகள் பெரும்பாலும் விமர்சனங்களுக்கு உள்ளாகவில்லை. அவர் எழுதிய, ‘பிரம்மராக்ஷஸ்’ எனும் கதையைப் ‘புதுமைப்பித்தனின் விளையாட்டு’ என்கிறார் தருமு. வல்லிக் கண்ணனோ, ‘பயங்கரக் கதை’ என்று ஒரு கருத்தை முன் வைக்கிறார். இவர்கள் இருவரும் ‘பிரம்மராக்ஷஸ்’ கதையின் முக்கியத்தைக் கூறத் தவறிவிட்டனர். ஆனால் சு..ரா. அக்கதையைப் பற்றிக் கூறும் போது, ‘ஒரு விமர்சன மேதை தோன்றிச் சிக்கலெடுக்க வேண்டிய கதை அது’ எனும் கருத்தை முன் வைக்கிறார். மேலும், அக்கதைகளைப் புரிந்து கொள்வது கடினம் என்கிற விமர்சனமும் பரவலாகக் காணப்படுகிறது. ஆனால் புதுமைப்பித்தனின் ‘கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்’, ‘வேதாளம் சொன்ன கதை’, ‘காலனும் கிழவியும்’ போன்ற கதைகளுக்கெல்லாம், பொதுவான அடிச்சுவடு ஒன்றிருக்கிறது. மனிதன் தலைநிமிர்ந்து பார்க்கும் பீடங்களைப் பாமர மனிதனின் உலகாயத விமர்சனத்திற்கு உட்படுத்தும் மனோபாவமே இங்குத் தொழிற்பட்டிருக்கிறது. மனிதனுக்குப் புறம்பான விஷயங்களாக புதுமைப்பித்தன் அவற்றைச் சொல்லி லிடவில்லை. எனவே தான், மேற்சொன்ன விமர்சனப் போக்கு மறுக்கப்படுகிறது.

சாதாரண மனிதன், யதார்த்தத்திற்கு உட்பட்ட விஷயங்களினாலேயே அனுபவத்தைப் பெறக் கூடியவன். அவனது அனுபவங்கள், அவன் வாழுகிற உலகம் சம்பந்தப்பட்டவை. அவன் வாழுகிற உலகத்துள் ஆவியுலக விஷயங்கள் அடங்கா. அதனாலேயே, அமானுஷ்ய சக்திகளுக்கு முன் கூனிக்குறுகிப் போய் மனிதன் நிற்பது நமக்கு மிகவும் பரிச்சயமான காட்சியாகி விட்டது. அந்தப் பரிச்சயமான விஷயத்திற்கு நேர் எதிரிடையான வக்கணையுடன், சோதித்தறிய முடியாதவற்றையும் சோதனைக்குட்படுத்திப் புதுமைப்பித்தன் எழுதிய கதைகளைப் படிக்கிற பொழுது, அவற்றில் நம்பிக்கையற்ற மனித மனம் கூட, அக்கதைகளை நம்பத் தொடங்குகிறது. இதற்கு முக்கிய காரணமாக, அவர் பௌதீக உலக அனுபவ எல்லைக்குள் கொண்டு வந்து எழுதும் விதமே அமைகிறது.

புதுமைப்பித்தன் கதைகளில் வேதாளம், கடவுள், காலன், பிரம்மராக்ஷம் போன்ற அமானுஷ்ய சக்திகளின் பிரதிநிதிகள் உலகிற்கு அழைத்து வரப்படுகிறார்கள். அவர்கள், தங்களளவில் சக்தி படைத்தவர்களாக இருந்தாலும், இவ்வுலக வாழ்க்கையோடு ஒத்து வாழத் திறனின்றித் தோற்றுப் போகிறார்கள். அவர்களால் இவ்வுலகத்தில் வாழ முடியாது; இறைவனாக இருந்தாலும் எட்டி நின்று வரம் கொடுக்கவே முடியும் என்கிற கருத்துக்களை முன் வைத்து புதுமைப்பித்தன் இந்த சக்திகளைத் தோற்கடிக்கிறார்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com