Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
ஆகஸ்ட் 2005
நேர்காணல்

தமிழீழப் பகுதிகளில் சைவ வெள்ளாள அடையாளம் ஆதிக்க அடையாளமாக இன்றைக்கு இல்லை - கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன்


வ.ஐ.ச. ஜெயபாலன். இலங்கை வாழ் தமிழ் கவிஞர். இலங்கை வாழ் சூழலில் பல்வேறு கவிதை தொகுப்புகள் எழுதியிருக்கிறார். ஆய்வு கட்டுரைகள் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். குறிப்பாக முஸ்லிம் மக்கள் தொடர்பாகவும், சாதி அமைப்பு, சாதி போராட்டங்கள் தொடர்பாக ஆய்வு செய்து வருகிறார். தற்பொழுது சமாதான பேச்சு வார்த்தை தொடர்பாகவும், ஈழப் பகுதிகளில் வாழக் கூடிய தமிழ் முஸ்லிம் மக்களின் அபிவிருத்தி தொடர்பாகவும் வேலை செய்கிறார்.

உத்தியோகப் பூர்வமாக நார்வே அரசின் சமாதான முயற்சிகளுக்கு ஆலோசகராக வேலை செய்து இருக்கிறார். ஆனால் அதிகாரபூர்வமற்ற முறையில் போராட்டத்தில் எல்லாத் தரப்புகளோடும் சமாதான முயற்சிகளுக்கு ஆதரவாக பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் தமிழகம் வந்திருந்த அவரோடு உரையாடியதிலிருந்து. . .

கேள்வி : இலங்கையின் தற்போதைய சூழல் எப்படி இருப்பதாக நினைக்கிறீர்கள்?

இரண்டு மட்டப்பிரச்சனை இலங்கையில் இருக்கிறது. ஒன்று சிங்கள பௌத்த மேலாதிக்கத்திற்கும் தமிழ்பேசும் மக்களுக்கும் இடையிலான போராட்டம் தொடர்பான பிரச்சனை. இரண்டாவது தமிழ் மக்களுக்கு இடையில் உள்ளார்ந்து இருக்கிற ஏற்றத் தாழ்வுகள், ஒடுக்குதல்களுக்கு எதிரான போரட்டங்களை தேசிய இன விடுதலைப் போராட்டத்துடன் இணைக்கிறது தொடர் பானது. இரண்டும் தமிழ் மக்களுடைய சுபிட்சத்தேரின் இரு சக்கரங்கள்.

இன்றைய நிலையில் விடுதலைப்புலிகளின் முதன்மையான தலைவராக இருக்கிற தமிழ்ச் செல்வன் உட்பட பலர் தலித்துகளாய் இருக்கிறார்கள். முக்கியமான நிலைகளில் குறிப்பாக தமிழ் ஈழத்தின் போலீஸ் துறையில் தலித்துகளின் பங்கு நிறைய இருக்கிறது. வசதியான குறிப்பாக யாழ்பாணத்தைச் சேர்ந்த மேட்டுக்குடியினரில் பலர் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து போனதால் வறிய தலித் மக்களும், ஏனை வறிய மக்களும் தான் இந்தப் போராட்டத்தில் முன்னணி பாத்திரம் வகிக்கிறார்கள். இதை வரலாற்றில் மறைக்க இயலாது.

பெண்கள் பொறுத்து போராட்டத்தில் அவர்கள் முன்னணி பங்கு வகிக்கிறார்கள். முக்கியமான துறைகளில் அவர்கள் இருந்தாலும் அவர்கள் இன்னும் முன்னணி பாத்திரங்கள் வகிக்க வேண்டும். குறிப்பாக விடுதலைப்புலிகளுடன் தொடர்பு கொள்கிற, விடுதலைப் புலிகளுடன் பணியாற்றுகிற சர்வதேச ராஜதந்திரிகள், சர்வதேச தொண்டு அமைப்புகளில் பணிபுரிகிற பெண்களோட நான் பேசிய போது தாங்கள் தொடர்பு கொள்கிற மட்டங்களில் பெண்களின் பங்களிப்பு போதியதாக இல்லை என்ற குறைபாடு இருக்கிறது. இந்த விஷயங்களை விடுதலைப்புலிகளின் கவனத்திற்கு நானும் கொண்டுவந்திருக்கிறேன்.

இன்று தலித் மக்கள் ஒடுக்கப்படுவார்கள் என்ற பயம் விடுதலைப்புலிகள் ஏரியாவில் இல்லை. ஆனால் இன்றுள்ள பயம் சமாதானத்துக்குப் பிறகு புலம் பெயர்ந்து சென்றவர்கள் பெரும் பணபலத்துடன் இருக்கிற நிலையில் அவர்களுடைய மூலதனம் எங்களுக்கு அவசியமாக இருக்கின்ற நிலையில் தலித்துகளும், வறியவர்களும், பெண்களும் போராட்டத்தை முன்னிலைப் பட்டு நின்றதால் ஏற்பட்டிருக்கிற விரும்பத்தக்க சமன்பாடு பின்தள்ளப்பட்டு விடுமா என்கிற ஒரு கேள்வி இருக்கு. அது தொடர்பாக இருக்கக்கூடிய எல்லா சமூக, பொருளாதார, கலாச்சார ஓட்டைகளும் அடையாளங்கண்டு அடைக்கப்பட வேண்டும்.

கேள்வி : விடுதலைப் புலிகளின் தமிழ் இன அடையாத்தை சைவ வெள்ளாள சாதி அடையாளமாக பார்க்கின்ற பார்வை இருக்கிறதே, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

சைவ வெள்ளாள அடையாளம் என்பதை இன்றைக்கு பாரீசில், லண்டனில், கனடாவிலும் பார்க்கலாம். அதிக எண்ணிக்கையில் புலம் பெயர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் சொந்த மண்ணோடு தொடர்பற்ற நாடுகளில் வாழ்வதனால் அவர்கள் அதனை முக்கியமான பிரச்சனையாகக் கருதுகிறார்கள். அவர்கள் இலங்கைக்குத் திரும்பி வரும்போது இத்தகைய அடையாளங்கள் மீளத் தங்களுக்குள் கட்டிக் கொள்ளுமோ என்ற அச்சம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் தமிழீழப் பகுதிகளில் சைவ வெள்ளாள அடையாளம் ஆதிக்க அடையாளமாக இன்றைக்கு இல்லை. வெளிநாடுகளில் இருந்து போராட்டத்தோடும் மண்ணோடும் தொடர்புகளை அறுத்துக் கொண்டிருப்பவர்கள் தங்களுடைய குற்ற உணர்வில் இங்க உள்ள தலித்துகளின் போராட்டத்தில் குறுக்கு வழியில் தங்களைப் பிணைத்துக் கொள்ள அல்லது இங்குள்ள தலித்துகளின் போராட்டத்தில் தாங்களும் பங்காளிகள் என்று உரிமை கோர முன்வைக்கிற கோசம்தான் இந்த சைவ வெள்ளாள அடையாளம்.

கேள்வி : தலித்துகளை உள்ளடக்கிய இந்து தமிழ் பேரடையாளம் ஒரு பக்கம் உருவாகிறது. மற்றொரு பக்கம் சிங்களப் பேரடையாளம் சுனாமி நிவாரணம் தொடர்பான செயல்பாடுகள் இந்த இரு பேரடையாளமும் சந்திக்கின்ற புள்ளியாக இருந்தன. இங்கு இசுலாமியர்கள் வெளியே வருகின்றனர். இதை எப்படி எடுத்துக் கொள்வது?

முஸ்லிம்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் உள்ள பிரச்சனை மத அடிப்படையிலான பிரச்சனை அல்ல. அது ஒரு கோட்பாட்டு ரீதியான பிரச்சனை. விடுதலைப் புலிகள் முஸ்லிம்களும் தமிழர்கள் தான் என்ற கோட்பாட்டை உடையவர்கள். முஸ்லிம் தலைவர்கள் முன்வைக்கிற கோட்பாடு நாங்கள் தமிழர்கள் அல்ல. நாங்கள் தமிழ் பேசுகிறவர்கள். நாங்கள் தனி இனம் என்கிற கோட்பாடு.

இலங்கையைப் பொறுத்து முஸ்லிம் மக்களிடம் உள்ள சிக்கல் அவர்கள் சிங்களப் பகுதியில் 60ரூ தமிழ்ப் பகுதிகளில் 40ரூ மாகச் சிதறிக் இருக்கிறார்கள். சிங்களப் பகுதியில் இருக்கிற 60ரூ மக்கள் தங்களை ஒரு சிறுபான்மை இனமாக பாவித்திருக் கிறார்கள். தமிழ்பகுதியில் உள்ள முஸ்லிம்கள் தங்களை தனியான தேசிய அடையாளமாக பார்க்கிறார்கள். இந்த இரட்டைநிலை அடையாளம் சாத்தியமானதல்ல. தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே வேலை செய்கிறவர்களுக்கு முஸ்லிம்களின் இந்த இரட்டைநிலை ஒரு சிக்கலாக இருக்கிறது. தமிழர்களின் மேலாதிக்க உணர்வு மற்றொரு சிக்கலாக இருக்கிறது.

கேள்வி : இந்தப் பிரச்சனைக்கான மாற்று என்ன?

தமிழர்கள் தங்களுடைய மேலாதிக்க உணர்வுகளை விட்டுக் கொடுக்க வேண்டும் அதே சமயத்தில் முஸ்லிம்கள் ஏதாவது ஒரு நிலைப் பாட்டை எடுக்க வேண்டும். தங்களை தேசிய இனம் என்றால் சிங்களருடன் அவர்கள் தேசிய இனமாக நிமிர்ந்து நிற்க வேண்டும். சிங்களருடன் சிறுபான்மை நிலைப்பாட்டை எடுத்தால் தமிழர்களுடனும் அதே நிலைப் பாட்டை எடுக்க வேண்டும். அதே சமயத்தில் கூடுதல் விட்டுக் கொடுப்பை தமிழர்கள்தான் செய்ய வேண்டும் ஏனென்றால் தமிழர்கள் பெரும்பான்மை இனமாக இருக்கிற படியாலும்., தமிழர்கள் ஒரு ஆதிக்கம் செலுத்துகிற ஒரு அரசமைப்பாக இருப்பதாலும் கடந்த கால வரலாற்றில் முஸ்லிம் தொடர்பான தவறுகளை தமிழ் அமைப்புகள் இளைத்திருப் பதாலும் தமிழ் அமைப்புகள் நிறைந்த விட்டுக் கொடுப்போடும் சமரசங்க ளோடும் முஸ்லிம்களை திரும்ப அழைத்துக் கொள்ள முன்வர வேண்டும். முஸ்லிம்களை தங்களுடன் இணைத்துக் கொள்வதற்கு தமிழர்கள், தமிழ் அமைப்புகள், விடுதலைப் புலிகள் கடந்த காலத்தில் எடுத்த நடவடிக் கைகள் போதியதல்ல. முஸ்லிம்களின் தலைவர்களை முஸ்லிம்கள் தான் தெரிவு செய்யய வேண்டும். முஸ்லிம்கள் தெரிவு செய்கிற தலைவர் களுடன் தான் விடுதலைப்புலிகள் பேச வேண்டும் என்ற கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். முஸ்லிம்கள் தெரிவு செய்கிற தலைவர்களைத் தவிர்த்து ஏனையவர்களுடன் பேசி தீர்க்கிற பிரச்சனைகளை நான் ஆதரிக்கவில்லை, துரதிஷ்டவாமாக முஸ்லிம்களின் தலைமை பல்வேறு காரணமாக பிளவுபட்டுக் கிடக்கிறது.

கேள்வி : விடுதலைப்புலிகள் சார்பு தோற்றம் ஒன்று சமீபத்தில் உங்களிடம் இருக்கிறது. ஒரு Sifting உங்களிடம் நடந்திருக்கிறது. இந்த மாற்றத்திற்கான காரணமாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?

இது பரவலாக இன்று கேட்கப் படுகிற கேள்வி. நான் இலங்கைக்கு அதிகம் போகாமல் இலங்கை குறித்த ஆய்வுகளை வைத்துக் கொண்டு ஐரோப்பாவில் இருந்த பொழுது இந்தக் கேள்வி எழவில்லை. இலங்கையில் அதிகம் தொடர்பு கொண்டு இலங்கையில் உள்ள முஸ்லிம்களோடும் இலங்கையில் உள்ள தமிழர்களோடும் நான் பணிபுரிகிற காலங்களில் நான் ஒரு நிலை எடுக்கணும்.

விடுதலைப் புலிகளுடைய தலைவர்களுடனான எனக்கு இன்றைக்குள்ள பெரிய முரண்பாடு அவர்களுடைய முஸ்லிம் கொள் உறவு மேம்படும் போது நீங்கள் சொல்கிற பெரிய ளுகைவ நிலை ஏற்படும். ஏன்னா விடுதலைப் போராட்டத்தை நான் ஆதரிக்கிறேன். என்னுடைய மக்களை நான் நேசிக்கிறேன். நான் ஒரு சபிக்கிற தீர்க்கதரிசியாக நார்வேயில வாழ்வதென்றால் எல்லோரையும் விட அதிக செல்வாக்கோடு என்னால் வாழமுடியும். எல்லோரையும் விட அதிகமான ஆளுமையோடு என்னால் எழுத முடியும். நான் என்னுடைய எழுத்தை விட்டுவிட்டு, என்னுடைய வாழ்க்கையை விட்டுவிட்டு சென்ற வருடம் 9 மாதங்கள் நான் இலங்கையில் இருந்திருக்கிறேன். ஒரு தடவை இலங்கைக்கு உள்ளும், வெளியும் பிரயாணம் செய்திருக்கிறேன்.

அடிக்கடி பிராயணம் செய்ய வேண்டியது வந்து என்னுடைய உயிர் பாதுகாப்பு தொடர்பான ஒரு காப்பு ஓட்டம்தான். குறிப்பா சிவராமனின் கொலைக்குப் பிறகு என்னுடைய முஸ்லிம் நண்பர்களும் சரி, என்னுடைய தமிழ் நண்பர்கள், சிங்கள நண்பர்களும் சரி வராதே, என்று தான் சொன்னார்கள். நான் நார்வேயில் ஒரு தீர்க்கதரிசியாக இருப்பதைவிட என்னுடைய மண்ணில் என்னுடைய மக்களுக்கு நடுவில் குறிப்பாக என்னுடைய தலையாய வரலாற்றுப் பணியாக கருதுகிற தமிழ்-முஸ்லிம் மக்களுக்கு இடையிலான நல்லுறவும், அவர்களுடைய விடுதலைப் போராட்டங்களை இணைப்பதான பணியில் கொல்லப்படுவதைத் தான் நான் விரும்புகிறேன். இதற்கான சமரசங்கள் மேன்மையானதென்றுதான் கருதுகிறேன்.

கேள்வி : நீங்கள் இலங்கையில் போராட்டம் தொடர்கிறது என்கிறீர்கள், இன்னொரு படைப்பாளியான புஷ்பராஜ் போராட்டம் முடிந்துவிட்டது என்கிறார். நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

புஸ்பராஜ் என்னுடைய நண்பர்தான். அவருடைய நூலில் அவர் சொல்கின்ற விசயம் நேர்மையான விவாதத்திற்குரிய விஷயம். அவர் ஈழத்தமிழர் போராட்டத்தின் வரலாற்றை முதலில் எழுதியவர் என்ற முன்னிலை இருக்கிறது. போராட்ட காலகட்டத்தில் அவரின் பாத்திரத்தை நிராகரிக்க முடியாது. இன்றைக்குரிய போராட்டத்தில் தொடர்ந்து செல்ல முடியவில்லை, நான் வெளிநாட்டில் வாழ்கிறேன் என அவர் சொல்வது நியாயம்தான். ஆனால் அவர் சொல்வதைப் போல் இன்றைய போராட்டத்தை தொடர்ந்து நடத்தும் ஒரு ஜனநாயகச் சூழல் இலங்கையில் இல்லை என்று நான் சொல்ல மாட்டேன்.

விடுதலை இயக்கம் தொடர்பாக உங்களுக்கு விமர்சனம் இருந்தால் விடுதலை இயக்கம் இன்ன இன்ன விசயங்களில் தவறுசெய்கிறது என்ற கருத்தை வையுங்கள். ஆனால் தமிழ் மக்களின் போராட்டம் முடிந்துவிட்டது என்று சொல்லும் உரிமை உங்களுக்கு இல்லை. ஏனெனில் தமிழ் மக்களுக்கு பிரச்சனை இருக்கிறது. தமிழ் மக்களிடத்தில் ஒடுக்குதல் இருக்கிறது. தமிழ் மக்களின் பிரச்சனை, தமிழ் மக்களின் பிரச்சனை தொடர்பான அரசியல் தீர்வு ஒன்றும் எட்டப்பட வில்லை. சாதாரண தீர்வைக் கூட இன்றைக்கு சிங்கள ஆதிக்கவாதிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழ் மக்களின் பிரச்சனைக்கு நியாயப் பூர்வமான தீர்வு ஒன்றும் எட்டப்படவில்லை.

கேள்வி : இலங்கைத் தமிழ் படைப்பாளிகள் விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தலால் இலங்கைப் படைப்பாளிகள் நூல்களை இலங்கைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. அவர்கள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளதே?

தங்களுடைய படைப்பு தடை செய்யயப் பட்டிருப்பதாக சொல்லுகிற படைப்பாளிகளின் படைப்பை நான் வன்னியில் கண்டிருக்கிறேன். வேறு சிலரும் இதுபற்றி குறிப்பிட்டிருக்கிறார்கள். சமாதானப் பேச்சு வார்த்தை ஆரம்பித்த பிறகு ஒரு அரசியல் ரீதியான இடம் மெதுவாக அதிகரித்து வருவதை நான் பார்த்திருக்கிறேன்.

உண்மையாகவே இந்தப் படைப்புகளை விடுதலைப் புலிகளிடம் கொண்டு வர முடியாது எனச் சொல்வது அபத்தம். ஏன்னா விடுதலைப் சோதனைகளைத் தாண்டி இவன் ரேவதி என்பவரைத் தெரியும். கம்யூனிஸ்ட் பார்ட்டியில் இருந்தவர். திரைப்படத் தயாரிப்பாளர். அவர் விடுதலைப் புலிகளைப் பற்றி படம் எடுக்க வந்த போது புஸ்பராஜாவினுடைய புத்தகத்தை கொண்டு வந்தார். புஸ்பராஜாவின் புத்தகத்தை அவரிடம் வாங்கி வன்னியல் வைத்து நான் வாசித்தேன். நிலமைகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கு. ஆனா முழுமையான ஜனநாயகச் சூழல் இருக்கென்று நான் சொல்லவில்லை. அத்தகைய ஒரு சூழல் உருவாக வேண்டும் என குரல் கொடுப்பவர்களில் ஒருவனாக நான் இருக்கிறேன். எதிரி தொடர்பான அச்சம் இலங்கை இராணுவம், இலங்கை உளவுப் படைகள் வந்து விடுதலைப் புலிகளை அழிப்பது தொடர்பாக, போராட்டத்தை அழிப்பது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருப்பது என்ற நிலையில் ஒரு சிறிய தேசிய இனத்தின் ஆயுதம் தாங்கிய போராளிகள் பதட்டம் அடைந்திருக்கிறதும் ஜனநாயகத்திற்கான ஞடடிவைiஉயட ளுயீயஉநன்னு அதிகரிக்கிறதுக்கு தயங்கும் சூழல் புரிந்து கொள்ளக் கூடியதுதான். ஆனா அந்தச் சூழலை நான் ஆதரிக்கவோ, மறுதலிக்கவோ இல்லை.

கேள்வி : இன்றுள்ள இலங்கைச் சூழலில் அங்கு இடதுசாரிகளின் நிலைப்பாடு என்ன?

இடதுசாரிகளின் பெரிய பங்கு 1960-70களில் அவர்கள் நடத்திய சாதி ஒழிப்பு போராட்டம். அதனில் நிறைய தியாகிகள் இருக்கின்றனர். அவர்களும் எங்களுடைய மாவீரர்கள் தாம். தேசிய இனப் போராட்டம் மட்டுமல்ல, சாதி ஒழிப்பிற்கான இடது சாரிகளின் போராட்டம் எங்களுடைய போராட்டம் தான். அதுவும் எங்களது தேசிய இனப் போராட்டத்தின் தவிர்க்க முடியாத பிரச்சனை.

இடதுசாரிகளின் சாதி ஒழிப்பு போராட்டத்தின் வெற்றி தேசிய இனப் போராட்டத்தை பல மடங்கு முன்னெடுத்து சென்றது. தலித்துகள் தேசிய இன போராட்டத்திற்கு வரக்கூடிய ஒரு சூழலை உருவாக்கியது இடதுசாரிகள் தான். பிறகு சிங்கள இடதுசாரிகள் தமிழர்களின் நலன்களுக்கு எதிராக சிங்கள இன வெறியர்களுடனான சமரசத்தை கொண்டு சென்றதன் அடிப்படையில் தமிழ் பகுதியில் இடதுசாரி இயக்கம் தங்களுடைய வீரம் செரிந்த பங்களிப்பு உச்சக் கட்டத்தில் இருந்தது தகர்ந்து போயிற்று இது ஒரு துரதிஷ்டவசமான ஒரு சூழல்.

இதன் பிறகு இடது சாரிகளின் ஒரு பகுதிய தேசிய இனத்துடன் போனது. குறிப்பாக ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எஃப், போன்ற அமைப்புகளிலும் விடுதலைப் புலிகளுக்குள்ளும் இடதுசாரிகள் சென்றார்கள். இன்றைய நிலையில் ஈரோஸ் அமைப்பின் ஒரு பகுதியும் ஈ.பி.ஆர்.எல்.எப்.-ன் ஒரு பகுதிகள் விடுதலைப் புலிகளோடு பணிபுரிகிறார்கள். இந்த விடுதலைப் போராட்டத்தின் வெற்றியின் போது இடதுசாரிகளின் கருத்துகளும் அவை ஏற்படுத்துகிற முரண்பாடும் வளர்ச்சியும் ஏதோ ஒரு மட்டத்தில் இன்று தமிழ் பகுதியில் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கு. ஒரு சமஸ்டி அமைப்பாகவோ அல்லது தனி நாடாகவோ ஏற்படப் போகிற என்னோட தாய் மண்ணில் இடது சாரி கருத்துக்கள் தொடர்ந்து இருக்கும்.

நான் வன்னியிலும் வேற இடங்களிலும் தமிழாக்கத்தில் இடதுசாரி நூல்கள் பல வெளியிடப்பட்டிருப்பதையும் பார்த்திருக்கிறேன். அண்மையில் எங்களுக்கு எதிரான பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பாக இடதுசாரி அணி தன்னுடைய எதிர் கருத்தை வெளியிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. எங்களுக்கு மகிழ்ச்சி. இடதுசாரி அணி ஒரு மூன்றாவது அணியாகவும், இந்தியாவின் வரலாற்றை அடுத்த பத்தாண்டுகளில் நிர்ணயிக்கிற மூன்றாவது அணியாகவும் அவர்கள் பலம் பெற்று வருகிற சூழலில் அவர்கள் எங்கள் தொடர்பாக ஒரு புரிந்துணர்வையும் ஒரு மனிதாபிமானத்தோடும் இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி தருகிறது.

நேர்காணல் -ஹாமீம் முஸ்தபா


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com