Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஏப்ரல் 2006

ஜாகிரா ஷேக்குக்கு ஓராண்டு தண்டனை... மேலும்... ஓராண்டு?
எஸ். அர்ஷயா

பெஸ்ட் பேக்கரி படுகொலை சம்பவ வழக்கின் முக்கிய சாட்சியான ஜாகிரா ஷேக்குக்கு, ஓராண்டு கால சிறைத் தண்டனையும் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

மார்ச் 8ம் தேதி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரிஜித் பசாயத், எச்.கே.சீமா ஆகியோரைக் கொண்ட குழு வழங்கிய அந்தத் தீர்ப்பில், அபராதத் தொகையான ரூ.50 ஆயிரத்தை ஜாகிராஷேக் இரண்டு மாதக் காலத்துக்குள் செலுத்தாவிட்டால் மேலும் ஓராண்டு கால சிறைத் தண்டனையை கூடுதலாக அவர் அனுபவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. தேசத்தை உலுக்கி எடுத்த சம்பவம் தொடர்புடைய ஒரு முக்கிய வழக்கில், பாதிக்கப்பட்ட ஒருவர் நீதித்துறையால் அதுவும் உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் தடவையாகும்!

Zahira Shaik நீதிமன்ற நடவடிக்கைகளை அவமதிக்கும் வகையில் பொய் சாட்சி அளித்ததால், ஜாகிராஷேக் தண்டனைக்கு ஆளாகியிருக்கிறார். சட்டத்தின் பார்வையில், பொய் சாட்சி அளித்ததற்காக இந்தத் தண்டனை என்பது தெளிவு! ஆனால் இந்த வழக்கைப் பொறுத்தவரை ஜாகிராஷேக் அச்சம்பவத்தை நேரடியாகக் கண்ட ஒரு சாட்சி மட்டுமல்ல; தனது குடும்ப உறுப்பினர்கள், தங்கள் நிறுவனப் பணியாளர்கள் தீயில் எரிந்து கருகுவதைக் கண்ணால் கண்டவர். முஸ்லிம்களுக்கு எதிராக அரசு துணையுடன் மதவெறி அமைப்புகள் நடத்திய கலவரத்தில் அதிர்ஷ்டவசமாக உயித் தப்பியவர். குஜராத் கலவரம் குறித்துப் பேச முன்வந்தவர்களில் முக்கியமானவர்.

இத்தனை அம்சங்களைக் கொண்டிருக்கும் அவர், எதற்காக பொய் சாட்சி அளித்தார் என்பதையும் பரிசீலிக்க வேண்டும். பெஸ்ட் பேக்கரி படுகொலை சம்பவம் தொடர்பாக முதலில் புகார் கூறியதே ஜாகிரா ஷேக் தான்! இந்தப் புகாரைத் தொடர்ந்தே பெஸ்ட் பேக்கரி படுகொலை சம்பவ வழக்கு, வதோதரா விரைவு நீதி மன்றத்தில் நடத்தப்பட்டது.

விசாரணை நடத்தப்பட்ட நாட்களில், வதோதரா தொகுதியின் பா.ஜ.க. எம்.எல்.ஏ. மது ஸ்ரீவத்சவா விரைவு நீதி மன்றத்துக்கு வந்திருந்தார் என்பதையும் அவரும், அவர் சகோதரர் பட்டு ஸ்ரீவத்சவா மற்றும் பரத் தாக்கர் ஆயியோரும் ஜாகிரா ஷேக்கின் சகோதரருடன் தொடர்ந்து செல்போனில் பேசி வந்தார்கள் என்பதையும் அவர்கள் நீதிமன்றத்தில் நடந்து கொண்ட விதத்தையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

வேகவேகமாக நடத்தப்பட்ட வழக்கின் விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியபோது, ‘போதுமான ஆதாரங்கள் இல்லை... குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை...’ என்று குற்றம் சாட்டப்பட்ட 21 பேரும் விடுவிக்கப்பட்டனர். இது, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை கிளப்பியது.

இந்நிலையில் ஜாகிராஷேக்கும் மற்ற சாட்சிகளும் குஜராத் மாநில உயர்நீதிமன்றத்தின் கதவைத் தட்டினர். தாங்கள் மிரட்டப்பட்டதாகவும், தாங்கள் குழப்பிவிடப் பட்டதாகவும் முறையிட்டனர். மேலும் வழக்கை மறு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்த நேரத்தில் தான் டீஸ்ட்டா செதல்வாத்தும் நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் அமைப்பும் ஜாகிராஷேக்குக்கு பாதுகாப்பும் ஆதரவும் வழங்க முன்வந்தனர்.

இதனிடையே குஜராத் மாநில உயர்நீதிமன்றம், சாட்சிகளின் மேல் முறையீட்டை புறக்கணித்து விட்டது. மேலும் விரைவு நீதிமன்றத்தின் தீர்ப்பை அது உறுதியும் செய்தது. அதே வேளையில் உச்ச நீதிமன்றம், ஜாகிராஷேக்கின் முறையீட்டை பதிவு செய்ததுடன் குஜராத் மாநில அரசின் செயல்பாடுகளையும் அம்மாநில உயர்நீதிமன்றத்தின் செயல்பாட்டையும் மதிப்பீடு செய்து கண்டனம் தெரிவித்தது. அத்துடன் பெஸ்ட் பேக்கரி படுகொலை சம்பவ வழக்கை மறுவிசாரணை நடத்த உத்தர விட்டதுடன் மகராஷ்டிரா மாநிலத்துக்கும் மாற்றியது.

வழக்கு வேறு மாநிலத்துக்கு மாற்றப்பட்டு விட்ட பின்பு தான் ஜாகிரஷேக், சமூக சேவகர் டீஸ்ட்டா தெல்வாத், நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் அமைப்பின் மீது ஒளிவட்டம் விழ ஆரம்பித்தது. அவர்கள் வெளியுலக வெளிச்சத்துக்கு வந்தனர். உயர்நீதிமன்றம் தீர்ப்பை உறுதி செய்த பின்பு, வேறு மாநிலத்துக்கு வழக்கு மாற்றப்பட்டு விட்டதையும் மறுவிசாரணை துவங்கவிருப்பதையும் ‘நரித்தந்திரத்துடன் செயல்பட்ட நரேந்திரமோடி அரசு’ பார்த்துக் கொண்டு சும்மா இருக்கவில்லை என்பதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.

மறுவிசாரணை நடத்த மாஜ்காவோனில் நீதிமன்றம் அமைக்கப்பட்டு மறுவிசாரணை நடத்த கூடுதல் செசன்ஸ் நீதிபதி அபஸ்திப்ஸே நியமிக்கப்பட்டு மறுவிசாரணை நடக்கவிருந்த நாளில் தான் முக்கிய சாட்சியான ஜாகிராஷேக் ‘காணாமல்’போனார். வதோரா மாவட்ட ஆட்சித் தலைவர் முன்பு தோன்றிய ஜாகிராஷேக், சமூக சேவகர் டீஸ்ட்டா செதல்வாத் மீதும் அவரது சகாமீதும் குற்றம் சாட்டினார், திடீரென்று! இந்தப் ‘பல்டி’யை அடுத்தே உச்ச நீதிமன்றம், அதன் பதிவாளர் குப்தா தலைமையில் விசாரணைக்குழு ஒன்றை அமைத்தது. குழுவின் பரிந்துரைப்படியே ஜாகிரஷேக்குக்கு சிறைத்தண்டனை அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜாகிராஷேக்கின் வங்கிக் கணக்கை 3 மாதங்களுக்கு முடக்கி வைத்திருப்பதாக கூறியுள்ள உச்சநீதிமன்றம், இரண்டு மாதங்களுக்குள் அபராதத் தொகையை செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதன் பின்பு வருமானவரித் துறையினர் 2002ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் நான்கு தேதி வரையிலான வரவு செலவுகளை ஆராய வேண்டும் என்பதாகவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. வங்கிக் கணக்குகள் முதல்கட்டமாக மூன்றுமாத காலத்துக்கு முடக்கப்பட்ட இந்த நிலையில் ஜாகிரஷேக், அபராதத் தொகையான ரூ.50 ஆயிரத்தை எப்படிச் செலுத்த முடியும்? ஜாகிராஷேக்கின் மீது அக்கரை கொண்ட யாரோ செலுத்தினால்தான் இரண்டாவது ஓராண்டு கால தண்டனையிலிருந்து அவர் தப்ப முடியும்.

தற்போது ஜாகிராஷேக்குக்கு உதவுவார் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை!

நீதிமன்றப் பதிவாளர் தலைமையிலான விசாரணைக் குழுவின் பரிந்துரைப்படி உச்சநீதிமன்றம் ஜாகிராஷேக்கை மூடிய கதவுகளுக்குப் பின்னால் நிறுத்தியுள்ளது. இந்தத் தீர்ப்பு வாக்குமூலங்களின் அடிப்படையிலேயே உள்ளது. விசாரணைக் குழுவின் நடவடிக்கைகள், உண்மை கண்டறிதல் குறித்த செயல்பாடுகள் மட்டுமாகத் தான் இருக்க முடியும். அது ஒன்றும் விசாரணை நீதிமன்றம் அல்ல. ஜாகிராஷேக்குக்கு ஆதரவாக தற்காப்பு விவாதங்கள் எதுவும் நடத்தப்படவில்லை.

இந்த நிலையில் விசாரணைக்குழுவின் அறிக்கையை நீதிமன்றம் ஜாகிராஷேக் ‘பல்டி’ அடித்ததற்கு நியாயமான காரணங்கள் ஏதும் இருக்கின்றதா என்பதைக் கண்டறிய பயன் படுத்தியிருக்கலாம். ஆனால் நீதிமன்றம் இந்த அறிக்கையின் அடிப்படையில் தண்டனை வழங்கியுள்ளது. குஜராத் மாநிலத்தில் பெருவாரியாக கலவரம் நடந்தபோது, அதைக் கட்டுப்படுத்த முன்வராமல் செயல்பாடற்று தேக்க நிலையில் முடங்கிக்கிடந்த முதல்வர் நரேந்திர மோடியையும், அரசையும் அதிகாரிகளையும் கண்டித்த உச்சநீதிமன்றம், ஜாகிராஷேக்குக்கு வழங்கியுள்ள தண்டனை நெருடலைத் தருவதாகவே உள்ளது.

பணம் வாங்கிக் கொண்டு ஜாகிரஷேக் பொய்சாட்சியமும் பல்டியும் அடித்துள்ளார் என்பது தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு காரண கர்த்தாக்களாக இருக்கும் மது ஸ்ரீவத்சவாவும் அவர் சகோதரர் பட்டு ஸ்ரீவத்சவாவும் விசாரணைக் குழுவுக்கு முழு ஒத்துழைப்பு தரவில்லை. வன்முறையின் போது முக்கிய பாங்காற்றிய அவர்கள் சுதந்திரமாகவே உலவுகின்றனர்.

தெகல்கா குழு வெளியிட்ட உரையாடல் கேசட்டில் இடம் பெற்றுள்ள குரல்கள் தங்களுடையது அல்ல என்று மறுத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜாகிராஷேக்குக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை வன்முறையாளர்களுக்கு ஊக்கத்தையும் சட்டத்தின் மீது பயமின்மையும் தந்துவிடும். பாதிக்கப்பட்ட மக்களின் கடைசிப் புகலிடமாக நீதித்துறை இருக்கிறது எனும் நம்பிக்கை இன்றும் உயிரோடுதான் உள்ளது. இதை முன்வைத்து, ஜாகிராஷேக்குக்காக ஆஜரான இரண்டாவது வழக்கறிஞர் டி.கே.கூங்க், ஜாகிரா ஷேக்குக்கு வழங்கப்பட்ட தண்டனையை மறுபரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்வேன் என்று கூறியுள்ளார்.

கையறு நிலையில்...

உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து 6 மாதங்களாக வெளியில் தலைகாட்டாமல் இருந்த ஜாகிராஷேக், மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இதனால் மும்பை சிறப்பு நீதிமன்றம் பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகியிருப்பதாக நீதிபதி அபய்திப்ஸே கூறியுள்ளார்.

ஜாகிராஷேக்கின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக உணர்கிறேன் என்று கூறியிருக்கும் அவர், உச்ச நீதிமனறத்தின் வழிகாட்டுதல் படியே அவருக்கு எந்த விதமான தண்டனை என்பதை உறுதி செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார்.

போய்வடா போலீஸ் நிலைய லாக்-அப்பில் வைக்கப்பட்டிருந்த ஜாகிராஷேக், பிஸ்கட் போன்ற பொருட்களை மட்டுமே உணவாகக் கொள்கிறார். வேறு எந்த வசதியும் அவருக்கு செய்து கொடுக்கப்படவில்லை. பரிதவித்துப் போய்க்கிடக்கும் அவருக்கு உதவ யாருமே இல்லை!

21 பேர் மீது குற்றச்சாட்டு... 9 பேருக்கு ஆயுள் தண்டனை...

பெஸ்ட் பேக்கரி படுகொலை சம்பவ வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 21 பேரில் தலைமறைவாக உள்ள 4 பேரைத் தவிர 17பேரில் 8பேருக்கு விடுதலையும் 9பேருக்கு ஆயுள் தண்டனையும் மறுவிசாரணை சிறப்பு நீதிமன்றம் வழங்கியுள்ளது.

வழக்கை விசாரித்த கூடுதல் செசன்ஸ் நீதிபதி அபஸ்திப்ஸே, ‘இன்ன குற்றத்தை இவர் செய்தார் என்று முறையாக நிரூபிக்கப்படாததால் தூக்குத் தண்டனை வழங்க முடியவில்லை’என்று வருத்தம் தெரிவித்துள்ளார். மார்ச் 4ம்தேதி இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com