Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஏப்ரல் 2006

வைகோ: திராவிடத்தின் கெடுமதி

கிறித்தவர்களின் புனித நூலான பைபிளில் ஒரு கதை வரும். மோயீசன் எனும் ஒருவர் கொடுஞ் செயல் புரியும் ஏரோது என்ற அரசனிடம் இருந்து யூதமக்களை காப்பாற்ற செங்கடலை தனது கையில் இருந்த மந்திரக் கோலால் இரண்டாகப் பிளந்து யூதர்களை அழைத்துச் சென்றாராம். அழைத்துச் சென்ற யூதர்களுக்கு மேயீசன் செல்வம் கொழிக்கும் வாக்களிக்கப்பட்ட பூமியை கைப்பற்றி கொடுத்ததாக அக்கதை கூறும். தமிழ்நாட்டிலும் ஒரு “மோயீசன் உதித்தார்’. அவர் பெயர் வைகோ தி.மு.க.வில் இருந்த இளைஞர்களை தனது வாய்ப்பேச்சால் கவர்ந்தவர். 93ல் கருணாநிதியால் கொலை குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்ட இந்த மோயீசனுக்காக ஐந்து உயிர்கள் அற்பமாக இறந்தன. ஏழைத் தொண்டனின் சமாதியில் இருந்து புறப்பட்ட இந்த மோயிசன் ஏரோது மன்னனாக கருணாநிதியை சுட்டிக் காண்பித்தார். பின்னர் ஜெயலலிதாவை சுட்டினார். ஜெயலலிதா ஆட்சியை அகற்றும் வரை ஓய மாட்டேன் என்றார். 98 தேர்தலில் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்தார். ம.தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்றார். 99ல் இரட்டைக் குழலில் ஒரு குழல் ஒடிந்தது. கொலைப்பழி சுமத்திய ‘முதல் ஏரோதுடன்’இணைந்தார். 2001ல் அதுவும் முடிவுற்றது. தற்போது மீண்டும் அ.தி.மு.க. தலை சுற்றுகிறது. இப்போது கேட்க வேண்டிய கேள்வி இதுதான். யார் இந்த வைகோ?

Vaiko கலிங்கப்பட்டியில் வசதிமிகுந்த நாயுடு சாதியில் பிறந்த வை.கோபால்சாமி என்ற வைகோ தி.மு.க.வில் இணைந்து செயலாற்றினார். தனது நாவன்மையால் தமிழகத்தின் மிகச்சிறந்த பேச்சாளர்களில் ஒருவராக மாறினார். பதினெட்டு வயதில் இருந்தே அண்ணாவால் முன்மொழியப் பட்ட “தீப்பொறி” ஆறுமுகம், வெற்றி கொண்டான் முதலான பேச்சாளர்களுக்கு கிடைக்காத மதிப்பும்; பதவியும் வைகோவிற்கு கிடைத்தது. பதினெட்டாண்டுகள் தேர்தலில் நிற்காமல் மேல்சபை எம்.பி.யாக வைகோ நியமிக்கப்பட்டார். தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளராகப் பணியாற்றினார். கொள்கையை சிறிது சிறிதாக கைவிட்டு வந்த தி.மு.க.வின் நம்பிக்கைப் பிரதிநிதியாக வைகோ தி.மு.க. இளைஞர்களால் நோக்கப்பட்டார். சேது சமுத்திரத் திட்டம், கூடங்குளம் அணுஉலை முதலான நாசகார திட்டத்தை தி.மு.க. ஆதரித்தது. வைகோவும் இத்திட்டத்தை ஆதரித்து உணர்ச்சிப் பிளம்பாக பேசிவந்தார். தி.மு.க. செயல் திட்டத்தில் இல்லாத விடுதலைப் புலிகள் சார்பும்; கள்ளத்தோணி காதலும் தான் வைகோவை துணிச்சல் மிகுந்த அரசியல்வாதியாக முன்நிறுத்தியது.

80களில் தமிழ்ஈழ ஆதரவு அன்றைய இளைஞர்களை சுவீகரித்தது. பிரபாகரன் என்ற வசீகரத்தில் சிக்கிய இளைஞர்களை வைகோ லாவகமாக தன்திசை நோக்கித் திருப்பினார். கருணாநிதி, வைகோவால் தி.மு.க. நோக்கி இழுக்கப்பட்ட புதிய இளைஞர்களை வைத்து இழந்து போன மகுடத்தை கைப்பற்றி விடலாம் என கனா கண்டிருக்கலாம். வரலாறு வைகோ பக்கம் தீர்ப்பை எழுதியது. கள்ளத்தோணி மூலம் பிரபாகரனை சந்தித்ததின் வாயிலாக திரண்ட இளைஞர் கூட்டத்தை பின்னாளில் வைகோ தனது பக்கம் திருப்பினார். வெகுசனப் படுத்தப்பட்ட அனைத்து நிகழ்வுகளிலும் இன்று வைகோ தலையிடுவதற்கு அச்சாணியாக இருந்த நிகழ்வாக இதனைச் சுட்டலாம்.

ஈழத் தமிழர்களை படுகொலை செய்த இந்திய இராணுவத்தை அன்றைய முதல்வராக இருந்த கருணாநிதி வரவேற்கவில்லை. புலி ஆதரவால் கருணாநிதி இதனை மேற்கொள்ளவில்லை. தான் சுவீகரித்துக் கொண்ட தமிழ் பாசத்தின் நேர்மை எங்கோ இடித்ததின் வாயிலாகவே கருணாநிதி இதனை மேற்கொண்டார். இதனால் வெறுப்புற்ற ராஜீவ் காந்தி சந்திரசேகரை வைத்து கருணாநிதி ஆட்சியை கலைக்க வைத்தார். தேர்தல் சமயத்தில் படுகொலையான ராஜீவின் இரத்தம் தி.மு.க.வை அடியோடு பாதித்தது. கருணாநிதி தோல்வியுற்றார். தொடர்ந்து ஜெயின் கமிசன் வரை தொல்லையுற்றார். விடுதலைப் புலிகளை இன்று வரை ஆதரித்து வரும் வைகோவிற்கு பொடா தவிர்த்த வேறெந்த தொல்லையும் ஏற்பட்டதில்லை. ஒப்பிட்டுப் பார்த்தால் ஈழமக்களுக்காக கருணாநிதி இழந்தது அதிகம்.

இவை இப்படியிருக்க நரசிம்மராவின் ‘கொலைப்பழி’அச்சுறுத்தல் கருணாநிதியை கலவரப்படுத்தியது. பத்மனாபா படுகொலை; ராஜீவ் படுகொலை இவற்றால் மனரீதியாக பாதிக்கப்பட்ட கருணாநிதிக்கு விடுதலைப் புலிகளின் கொலைத் திட்டம் கலவரத்தை உருவாக்கியதில் வியப்பில்லை. இந்நேரத்தில் நரசிம்மராவின் ‘கொலைப்பழி’திட்டம் திமு.க. மீது பிரயோகிக்கப்பட்டது. கருணாநிதி தடுமாறினார். இவர் தடுமாறிய இடத்தை வைகோ சிக்கெனப் பிடித்துக் கொண்டார். “நானா கொலைகாரன், நானோ தொண்டன், நான் கொலை செய்ய துணிவேனா?” என்ற நாடகபாணி வசனத்தோடு வைகோ தி.மு.க.வில் இருந்து வெளியேறினார். நாடக வசனத்தோடே ‘குடும்ப அரசியல்’ என்ற கோசத்தை வைகோ முன் வைத்தார். தி.மு.க.வில் கருணாநிதிக்குப் பின்னர் வைகோ என்ற நிலை இருந்தது என்பதென்னவோ உண்மைதான். கருணாநிதி தனது மகனுக்கு முடி சூட்ட வேண்டும் என்பதற்காகவே தன்னை கட்சியை விட்டு வெளியேற்றினார் என்ற தேர்ந்த நாடகத்தை வைகோ வெகுசனப் படுத்தினார். உண்மையில் கருணாநிதி “கொலைப்பழி” எச்சரிக்கை வந்த அன்று மிகுந்த கலக்கத்தில் இருந்ததாக வாசந்தி பின்னாளில் எழுதினார்.

ஸ்டாலினை முடி சூட்டவே கொலைப்பழி சுமத்தப்பட்டது என்ற வசனம் வாசந்தியின் எழுத்துக்களால் இன்று பொய்யாக்கப் பட்டிருக்கிறது. உண்மையில் ஸ்டாலினை கருணாநிதி முன்னிலைப் படுத்தினாரா? என்ற கேள்வியை இப்போது கேட்க வேண்டியிருக்கிறது. இந்திராகாந்தி இறந்த போது விமான ஓட்டியாக இருந்த ராஜீவ்காந்தி பிரதமரானார். ஜி.கே.மூப்பனார் இறந்தபோது ஜி.கே.வாசன் த.மா.கா.வின் மாநிலத் தலைவரானார். தற்போது ராமதாஸ் தனது மகனுக்கு மத்திய அமைச்சர் பதவியை வாங்கித் தந்திருக்கிறார். இந்த உண்மையை உணர்பவருக்கு ஸ்டாலினின் வளர்ச்சி விகிதம் சொற்பமானது என்பதை அவதானிக்க முடியும். ராஜீவோ, வாசனோ, அன்புமணியோ அக்கட்சிகளின் அடிப்படையில் இருந்து வளர்த்தெடுக்கப் படவில்லை. தனது குடும்ப வளர்ச்சியால் தடால் என முன்னுக்கு வந்தவர்கள். ஸ்டாலின் அப்படியல்ல. மாணவர் இயக்கத்தில் இருந்து மிசாவில் கைதாகி இரண்டு முறை மட்டும் எம்.எல்.ஏ. ஆனவர். 1989, 1995ல் கருணாநிதி நினைத்திருந்தால் ஸ்டாலினை அமைச்சராக்கி இருக்கலாம்.

ஆனால் அதனைச் செய்யவில்லை. இன்று ஸ்டாலின் தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளராக மாறி இருக்கிறார். இதற்கு 25 ஆண்டுகள் தேவைப்பட்டன. ராஜீவ்விற்கோ, வாசனுக்கோ, அன்புமணிக்கோ 25 நிமிடங்களே ஆயின. கருணாநிதியின் மகன் என்ற அம்சம் ஸ்டாலினுக்கு எவ்வாறு பயன்பட வில்லையோ அதைப் போன்று பயன் பெற்றிருக்கவும் செய்யலாம். அது கூடக் குறைவாக இருக்கலாம். அதற்காக கருணாநிதி திட்டமிட்டு குடும்ப அரசியலை புகுத்தினார் என்று கூறுவது சிறு பிள்ளைத் தனமானது.

கருணாநிதியால் கைகழுவப்பட்ட சமூகநீதி, மாறனால் கொண்டு வரப்பட்ட ஏகாதிபத்திய ஆதரவு, விரைந்து முடிக்காமல் போன செம்மொழி குறித்தான மொழிக் கொள்கை, ராசிபலனில் விரும்பியோ விரும்பாமலோ கருணாநிதி விழுந்தமை முதலானவற்றில் ஏதாவது ஒன்றை முன் வைத்து வைகோ தி.மு.க.வில் இருந்து விலகியிருக்கலாம். ஆனால் வைகோ - தி.மு.க.வின் சித்தாந்த சரிவு குறித்து இன்று வரை பேசியதில்லை. அப்படி அவர் பேசியிருந்தால் அவருடன் இருக்கும் இரண்டாம் கட்ட தலைவர்கள் யாரும் இன்று இருந்திருக்க மாட்டார்கள். வைகோ வெளியேறும் போது ஏதோ ஒரு வகையில் தலைமையால் புறக்கணிக்கப்பட்ட செஞ்சியார், மு.கண்ணப்பன், எல்.கணேசன், பொன்.முத்து, (இவர் தற்போது தி.மு.க.வில் இருக்கிறார்.) கே.பி.கந்தசாமி, நாஞ்சில் சம்பத் முதலான கொள்கைப் பற்றே அறியாதவர்கள்தான் இன்றைய வைகோவின் தளபதிகளாக இருக்கின்றனர் என்ற உண்மையில் இருந்து வைகோவின் சித்தாந்தம் எத்தகையது என்பதை மிக எளிதாக அறியலாம்.

தி.மு.க.வின் 93 பிளவு சித்தாந்த பிளவல்ல. தனிநபர்களின் அரசில் ‘லப்பாசை’ பிளவு தான். தி.மு.க.வில் இருந்து கொண்டு வரப்பட்ட மக்கள் கூட்டத்தை வைத்து வைகோ தமிழகத்தில் மறு மலர்ச்சியை கொண்டு வந்துவிடுவார் என மார்க்சிஸ்டுகள் கூட எண்ணினார். (எழுபதுகளில் எம்.ஜி.ஆரை. முன் வைத்து தி.மு.க.வில் உடைவு ஏற்பட்ட பொழுது எம்.ஜி.ஆரை அந்த வழித்தடத்தில் கொண்டு சென்றதில் பாலதண்டாயுதம் போன்ற மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் பெரும் பங்காற்றினார்கள். வைகோவை முன் வைத்து மறுபடியும் பிரச்சனை எழுந்தபோது அதை அறுவடை செய்ய தங்கள் பங்காளிகளின் அஸ்த்திரத்தை மார்க்சிஸ்டுகள் பயன்படுத்தினார்கள். ஆனால் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. வைகோ எம்.ஜி.ஆரை விட தேர்ந்த நடிகர்.) ஏரோது அரசர்களாக கருணாநிதியையும், ஜெயலலிதாவையும் வைகோவின் பேச்சுக் கணைகள் அப்போது சுட்டிக் காண்பித்தன. “ஜெயலலிதாவின் நாசகார ஆட்சியை அப்புறப்படுத்த” வைகோ நடைபயணம் மேற்கொண்டார். உற்சாகத் துள்ளலோடு தேர்தல் போர் முனையில் தோளோடு தோள் கொடுத்து மார்க்சிஸ்டுகளுடன் இணைந்து படு தோல்வியுற்றார். வெறும் கூட்டம் வெற்றி தராது. சித்தாந்தமே வெல்லும் என்பதை இந்த “வசந்தத்தின் விடிவெள்ளி” காணத் தவறியது. விளைவு ஒரு மோசகரமான மூன்றாம் தர அரசியலை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தியது. யாரை நாசகார சக்தி என்றாரோ அவருடன் கூட்டணி சேர்ந்தார். ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்ததோடு, மத வெறி கட்சியான பா.ஜ.க.வை ஆதரித்த முதல் திராவிட இயக்க அரசியல்வாதியாக வைகோ தன்னைக் காட்டிக் கொண்டார். சிதைந்து கொண்டிருக்கும் தி.மு.க.வின் பலமே மதச் சார்பின்மைதான். அதை மறுமலர்ச்சி செய்ய வந்ததாக நம்பப்பட்ட “வைகறையின் வெளிச்சம்” காவியுடன் சங்கமித்தது.

Vaiko இந்தக் கூட்டணியாவது நிலைத்ததா என்றால் இல்லை. யர் தன்மீது கொலைப்பழி சுமத்தினாரோ அவருடன் வைகோ 1999ல் ‘அண்ணே’ எனப் பாசப்பெருக்குடன் இணைந்து கொண்டார். அதுவாவது நிலைத்ததா என்றால் இல்லை. ‘சங்கரன் கோவில்’தொகுதி கிடைக்காததால் கோபப்பட்டு வெளியேறிய வைகோ தானும் கெட்டதுமின்றி தனது அண்ணனையும் கெடவைத்தார். அத்தோடின்றி 2000த்தில் அறிமுகமாகவிருந்த கூட்டணி ஆட்சியையும் காவு கொடுத்தார். ஜெயலலிதாவின் வெற்றிக்கு மறைமுகமாகப் பணியாற்றிய வைகோவை ஜெயலலிதா பொடாவில் தள்ளினார். ம.தி.மு.க.வை தடை செய்ய தன்னால் முயன்ற அத்தனை முயற்சியையும் ஜெயலலிதா மேற்கொண்டார். வேலூர் சிறையில் இருந்த தம்பி வைகோவை கருணாநிதி இரண்டு முறை சென்று பார்த்தார். பொடா எதிர்ப்பு கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். வைகோவை விடுவிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட கையெழுத்து இயக்கத்தில் முதல் கையொப்பம் இட்டார். இன்னொருபுறம் விடுதலைச் சிறுத்தைகளின் பொதுச் செயலர் தொல்.திருமாவளவன் பொடா எதிர்ப்பு முன்னணியை கட்டி எழுப்பி பொடாவை ரத்து செய்ய இயக்கம் கட்டினார். தமிழகத்தில் இருந்த மனித உரிமை ஆர்வலர்கள் பொடாவுக்கு எதிராக உரக்க கத்தினார்கள். தமிழகத்திலும் சரி; அகில இந்திய அளவிலும் இடதுசாரிகள் பொடாவை அதன் துவக்கம் முதல இறுதிவரை சமரசமின்றி எதிர்த்தனர். பொடா இன்று ரத்தாகி இருக்கிறதென்றால் அது இடதுசாரிகளின் நெருக்கடியாலேயே நிகழ்ந்தது என கூசாமல் சொல்லலாம். வைகோவின் ஜாமின் நிகழ்வு மேற்குறித்த நான்கு சக்திகளாலேயே நிச்சயிக்கப் பட்டது என்று சொன்னால் அது மிகையல்ல. இக்காலத்தில் ம.தி.மு.க. தொண்டர்கள் அகிம்சா வழியில் தங்களது வீட்டு வேலையை மட்டும் கவனித்து வந்தனர் என்பது சுவையான நிகழ்வாகும்.

தன்மேல் தொடரப்பட்ட பொடாவை உறுதியுடன் எதிர்த்த நான்கு சக்திகளுள் கருணாநிதியை மட்டுமே வைகோ முன்னிலைப் படுத்தினார். “. . . இந்தக் காயங்கள் ஒரு புறம் என்றால், மறுபுறம் கலைஞரை நினைத்தாலே என் மனம் லேசாகி விடுகிறது. எண்பத்தோரு வயதில் கூட, என்மீதும் எட்டு சகாக்கள் மீதும் அவர் கொண்ட பாசமும் அக்கறையும் அளப்பரியது. “பொடா” வழக்குப் பிரச்சனையை மக்கள் மன்றத்திற்குக் கொண்டு சென்று, வெகுசன மக்களெல்லாம் நம்மைப் பற்றி பரிவுடன் பேசவைத்தவர் கலைஞர். இரண்டு முறை அவர் வேலூருக்கு வந்து பார்த்துவிட்டுப் போனார். துன்பத்தில் துணைநின்ற அவரை எப்படி மறக்க முடியும்” என்று வேலூர் சிறையில் இருந்து வைகோ கடிதம் எழுதினார். இன்றோ வைகோ பொடாவில் இருந்து நான் யாருடைய தயவில் இருந்தும் வெளிவரவில்லை. நீதிமன்றமே என்னை வெளியில் விட்டது என நாகூசாமல் பொய் சொல்கிறார். ஜாமினில் வெளிவந்த பின்னர் “கலைஞர் தான் அடுத்த முதல்வர். அவரை ஆட்சியில் அமர வைக்க சபதம் ஏற்போம்” என்ற சூளுரையை தமிழகம் எங்கும் முன் வைத்து பேசிவந்தார்.

நாடாளுமன்றத் தேர்தலின் போது ஜெயலலிதா ஆட்சியை பேய் ஆட்சி என்றார். பாசிச ஜெயலலிதா ஆட்சி முடிந்த பின் “நதிநீர் இணைப்பு பற்றியும் ஜெயலலிதா அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள் பற்றியும் விழிப்புணர்வை உருவாக்க” நடை பயணம் மேற்கொள்ளப் போவதாக அறிவிப்பு செய்தார். (“2004ல் ஆகஸ்டில் 47 நாள்கள் நதிகள் இணைப்பை வலியுறுத்தி” நடைபயணம் மேற்கொண்டதாக வைகோ மேலும் ஒரு பொய்யை இன்று கூறுகிறார்) அதைப் போன்று நடக்கவும் செய்தார். இந்த நடைபயணத்தில் தனது ஒவ்வொரு அசைவையும் விளம்பரமாக்கினார். தாமிரபரணியில் வைகோ குளித்தது கூட செய்தியானது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உடையுடன் வந்து அசத்தினார். நடிகர்கள் திரையில் நடிப்பதை வைகோ நடைபயணத்தில் வெளிப்படுத்தினார். நோக்கம் ஒன்றாக இருக்க வைகோ தனது இமேஜை மட்டும் முன்னிலைப்படுத்தியே நடந்தார். முடித்தார்.

இப்போது கிளைமாக்ஸ் மாறியது. தான் கேட்ட 35 தொகுதியில் குறைந்த பட்சம் 25 தொகுதியாவது வேண்டும் என்றாராம் வைகோ கருணாநிதி 21 தொகுதி தான் தருவேன் என்றாராம். இதனால் வைகோ 35 தொகுதி கொடுத்த அ.தி.மு.க.வுடன் இன்று இணைந்து கொண்டார். 95ல் அராஜக ஜெயலலிதா அரசை வெளியேற்ற நடந்த வைகோ 98ல் ஜெயலலிதாவுடன் இணைந்து கொண்டார். 2004ல் பாசிச ஜெயலலிதாவை ஆட்சியை விட்டு அகற்ற நடந்த வைகோ 2006ல் ஜெயலலிதாவுடன் இணைந்து கொண்டார். (இனிமேல் நடக்க ஆரம்பித்தால் நண்பர்கள் கவலை கொண்டு விடுவர். “நடந்துட்டான்யா வைகோ. யார் தலை உருளப் போகுதோ”என நண்பர்கள் கலங்கித்தான் நிற்பர்.) இணைந்ததோடின்றி பொய்யையும், சந்தர்ப்ப வாதத்தையும் நிலைநாட்ட கருணாநிதியின் சந்தர்ப்பவாதத்தை உதாரணமாகக் காட்டுகிறார். அபத்தத்தில் இருந்து பாடம் கற்க வேண்டும். வைகோ அபத்தத்தில் இருந்து மலத்திற்கு செல்கிறார். இப்போது வைகோ யார்? என இங்கு கேட்டுப் பார்ப்போம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com