Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஏப்ரல் 2006
சிறுகதை

சிதைவு
சிவகுமார் முத்தய்யா

உக்கிரமான வெய்யிலில் பொழுது உருகிக் கிடந்தது. தெருக்களில் மக்கள் உள்ளே பதுங்கிக் கிடந்தனர். வெய்யிலின் தீவிரம் மனிதர்களை உள்ளடங்கி கிடக்க வைத்துவிடுகிறது. அதீதமான வெப்பம் வெளியெங்கும் மிதந்து கொண்டிருந்தது. வயல்வெளிகளில் அறுவடை செய்யப்பட்ட தாள்கள் பொசுங்கி விட்டிருந்தன. மழை காணாது வெளுத்து வெகு காலம் ஆகியிருந்தது வானம்.

எலும்பு வேகமாக சைக்கிளில் வந்து கொண்டிருந்தான்... நீண்ட ஒல்லியான உடல்வாகை கொண்ட அவன் உடல், பார்ப்பவர்களுக்கு சற்று பார்வையை குலையச் செய்துவிடும் தன்மை கொண்டது. இப்பிராந்தியமெங்கும் மாட்டு எலும்பு எடுத்துக் கொண்டிருந்தான். இவனை சிறுவர்கள், “எலும்பு” என்று குரலிட்டு ஓடினார்கள்.

“பய புள்ளக கட்டி தலை கீழா தொங்கவிட்டுர்வேன்” என்றபடி அவர்களை பயமுறுத்தினான். இதுபோன்று எப்பொழுதாவது தான் பேசுவான். மற்ற நேரங்களில் கண்டுக் கொள்ளாமல் இருந்து விடுவான்.

ஆறு குடிசையை கொண்டிருந்த வெட்டிய ர சந்துக்குள் நுழைந்தான். உள்ளே நுழையும் பொழுது இறைச்சியின் வெண்ணெய் வாசம் மூக்கைத் துழைத்தது. ஆறு குடிசையின் முதலாவது அடுப்பில் இருந்து தான் கொழம்பின் கொதிவாசம் வெளிவந்துக் கொண்டிருந்தது. எலும்புக்கு வயிறு லேசாகப் பசிப்பது போலிருந்து.

கடைசி வீட்டின் வாசலுக்குச் சென்றான். சிறுவர்களும், சிறுமிகளும்... நொண்டிக்கோடு விளையாடிக் கொண்டிருந்தார்கள். இவனைப் பார்த்ததும், ஏதோ சொல்ல வாயெடுத்து மூடிக் கொண்டார்கள். இவனைக் கண்டதும் அந்த சிறுமி பார்த்தாள்...

“அட ஆச்சி, நீயா, கொஞ்சம் எழுப்பி விடுத்தா.”

உக்கிரமாக வெய்யில் அலையாய் எரித்துக் கொண்டிருந்தது. தரை அதிர உள்நிறைத்தது... “யாப்பா எழுந்திரி எழும்பு கூப்பிடுது”; என்றாள் மகள். தங்கவேலு திண்னையில் படுத்துக் கொண்டிருந்தான். வெற்று உடம்பு எங்கும் மண் படிந்து கிடந்தது. வியர்வையை லேசான ஈரம் துவங்கியது. உடலில் லேசான கந்தக மணம் எழும்பிக் கொண்டிருந்தது.

“எப்பா எழுந்திரி”,

“அட ஒன்கிட்டேயும் ஒம்மாகிட்டேயும், மனுசன் செத்த கண் அயர முடியாதே”.

“எலும்பு கூப்படுது எழுந்திரி”,

“சட்டென்று விட்டத்தைப் பார்த்தான். . குழவியொன்று பறந்து கொண்டிருந்தது. எட்டுக்கால் பூச்சியொன்று. . தன் வலையை மெல்ல பின்னத் தொடங்கியிருந்தது. வீட்டருகில் சைக்கிளை நிறுத்திவிட்டு “அண்ணே நாந்தான்” என்று வேகமாக குரலிட்டான். அவனுடைய வெண்கலக் குரல்... கேட்டதும், எழுந்து உட்கார்ந்து சுற்றுப்புறத்தை பார்த்து, இப்படி வாயேன், என்று சற்று வேகமாகக் குரல் கொடுத்தான் தங்கவேலு... இருமிக் கொண்டே நுழைந்தான் எலும்பு. தோளில் கிடந்த துண்டை எடுத்து முகத்தை துடைத்துக் கொண்டு உட்கார்ந்தான். வெய்யிலில் அனல் அலையின் ஊடாக வெப்பம் உள்ளிறங்கிக் கொண்டிருந்தது. வெளியெங்கும் இறுக்கமான ஒரு நிசப்தம் துவங்கியது. மரங்கள் எல்லாம் எந்த அசைதல்களும் இல்லாமல் உறைந்து கிடந்தன. கருவை பூச்சிகள் மட்டும் “குய்ங், குய்ங்” என்று பாடிக் கொண்டே இருந்தன. அது பாசமா? துயரமா? என்பதை யூகிக்க முடியவில்லை.

“என்ணெண்ணே”, தூக்கமா என்றபடி பெருமூச்சுவிட்டான், வெய்யில் நெருப்பா கொளுத்துதுப்பாரு.

“ஆமாம். . கொஞ்சமாவா வெய்யிலு எரிக்கிது”, “மயக்கமே வந்திடும் போலிருக்கு”.

“மகள் செம்பில் நீர் கொண்டு வந்து நீட்டினாள். படக்கென்று வேகமாக வாங்கி ஒரு கணப் பொழுதுக்குள் நீரை பார்த்துகிட்டு குடிக்கத் தொடங்கினான். செம்மை அண்ணாத்தி தூக்கி நிறுத்திய படி ஒவ்வொரு மிடறுக்கும் தொண்டைக் குழியிலிருந்து ‘மடக் மடக்’ என்ற சிறு சப்தம் எழுந்தது. எலும்பு நீர் குடிக்கும் லாவகத்தைப் பார்த்தபடி உதட்டை நாவால் ஈரப்படுத்திக் கொண்டான் தங்கவேலு. வெறும் செம்பைக் கீழே வைத்து,

“ஆச்சி அப்பாவுக்கு கொஞ்சம் தண்ணிகொடு”.

மகள் செம்போடு உள் நுழைந்தாள்.

சட்டென்று ஒரு பீடியை எடுத்து பற்ற வைத்துக் கொண்டான் அவன் கண்கள் சிவந்திருந்தன.

இந்த வருசம் மாட்டு எலும்புக்கு பத்து நாளுக்கு மேல. . இந்த சுத்து பத்து கிராமம் முச்சூடும் அலைஞ்சி பார்த்து விட்டேன் உருப்பிடியா, “ஒரு அரை சாக்கு கூட தேரல”,

“அப்படியாங்குறேன்”. . என்றபடி செம்பை வாங்கி தண்ணீரை குடித்துவிட்டு சுருட்டை எடுத்து பற்ற வைத்துக் கொண்டே.

“சரி வா” கௌம்புவோம் என்று உசுப்பினான். வானில் வெகு தொலைவுக்கு அப்பால் கழுகுகள் பறந்துக் கொண்டிருந்தன. கழுகுகளை பார்ப்பதே இப்பொழுது அரிதாகிவிட்டது. தங்கவேலு சிறு வயதில் இந்த பிராந்தியம் முழுமையும் நிரம்பி வழியும் கழுகுகள்.. செத்த மாடுகளை தோல் உரிக்கும் பொழுது அதன் தொல்லைகள் சொல்லித் தீராது. . இவன் கண் எதிரே வந்து உட்கார்ந்துக் கொண்டிருக்கும் வயிற்று பாகத்தில் உரிக்கும் பொழுது தோலை கொத்திவிட தயாராக இருக்கும் கொஞ்சம் அலட்சியமாக விட்டோம் என்றால் தோல் தேறாமல் போய்விடும் என்பதால் தங்கவேலுவின் அப்பா சிங்காரு... கழுகுகளை விரட்டச் சொல்லிவிடுவார். முடிந்தவரை குச்சியை காட்டியும், கற்களால் வீசியும் அதை விரட்டுவான். தோலை உரித்துவிட்டு கொஞ்சம் தூரம் தான் நடக்கத் தொடங்குவார்கள். . சரம் சரமாக வந்து கறியை கொத்தி தின்க இறங்கும். இதோடு, காகமும், நாய்களும் சேர்ந்துவிடும். ஒரே ரகளையாகத் தான் இருக்கும். ஊர் ஆட்கள் இந்த சப்தத்தை கேட்டுக் கொண்டு. . “எவன் வூட்டு மாடுடா” என்று பேசி சிரித்துக் கொண்டே போவார்கள்.

“என்னண்ணே உம்முன்னு வர்றே”.

“அட ஒண்ணுமில்ல. . அந்த காலத்துல. . இது மாதிரி எலும்பு எடுக்குறதே இல்ல. . தோலை உரிச்சுட்டு அப்படியே போட்டுர்வோம். . காக்கா கழுகு. . நாய்கள்னு ஆளுக்கொரு எலும்ப தூக்கிட்டு போயிருக்கும்”.

‘அப்படியாண்ணே”,

தங்கவேலுக்கு. . மனம் ஒரு வித சோர்வில் இருந்தது. . ஊரில் தை மாதத்திலிருந்து உருப்படியான வேலையில்லை. எதாவது மராமத்து வேலைகள் கிடைத்திருந்தால் இவ்வளவு சிக்கல் இருக்காது என்று தோன்றியது. ஊரில். . மயானத்தைப் போல.. மாடுகளைப் புதைக்கவும்.. தனியாக ஒரு இடத்தை ஒதுக்கியிருந்தார்கள்.

சைக்கிளை நிறுத்திவிட்டு. எல்லையோரமாக இருந்த பெரும் திடலுக்கு செல்லும் ஒற்றையடி பாதையில் நடக்கத் தொடங்கினார்கள் இருவரும், நடப்பாதையின் இரு புறங்களிலும் நீண்டு கிடக்கும் வயல்களிலிருந்து. . வெப்பம் உறைந்து கிடந்தது. சற்று தூரத்தில் தெரிந்த பனை மரங்களைப் பார்த்தார்கள். வயல்களில். வரப்போரங்களில் கருவேல மரங்கள் அங்கங்கே நின்று கொண்டிருந்தன. சில இடங்களில் வேம்பு நின்று கொண்டிருந்தது. கருவேல மரங்களிலிருந்து இழைகள் உதிர்ந்து போயிருந்தன. ஒரு காலத்தில் முப்போகம் கண்ட இந்த வயல்கள், ஒரு போகத்திற்கே லாயக்கற்று எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன.

தங்கவேலு தலைமுறையினர் இந்த ஊரின் பரம்பரையாக வசித்து வந்தார்கள். அப்பா ஊரில் காணியாச்சி பார்த்து வந்தார். அவர் இறந்த பின் இவன் அந்த வேலையை செய்யத் தொடங்கினான். ஒரே மகள் இன்னும் ஓரிரு வருடங்களில் பெரிய பெண்ணாகி விடுவதற்கான பருவத்தின் வனப்போடு மலர்ந்திருந்தாள். அவளுக்கொரு வாழ்க்கை அளிக்க வேண்டும். ஆனால் போகிற போக்கைப் பார்த்தால்.. வேதனை நெஞ்சை அடைத்தது. இருவரும் நடந்துக் கொண்டிருந்தார்கள். இந்த வெளி உருகிவிடுமோ என்றளவுக்கு வெப்பத்தில் பாலையின் அனத்தல்கள் பீறிட்டன.

“ஒரு வருடமாகிவிட்டது... திடலின் மறுபுறத்தில் ஒரு மாட்டை புதைத்து இந்நேரம் சதை சிதைந்து நல்ல எலும்பாக இருக்கும் என்று நினைத்தான்”தங்கவேலு. எலும்புகள் நல்ல விலை என்று தெரிந்த பிறகு.. சிறு எலும்புத் துண்டைக் கூட வீணாக்காமல் பத்திரப்படுத்த வேண்டும் என்று முனைப்பு கொண்டிருந்தான். சென்ற ஆண்டுக்கு முந்திய வருடம் ஊரில்.. இருபதுக்கு மேற்பட்ட மாடுகள் கோமாரி வந்து இறந்துவிட்டன. நல்ல காசுப் பார்த்தான் எலும்பில். ஆனால்., தோலுக்கு அந்த வருசம் மதிப்பில்லாமல் போய்விட்டது.

எலும்பு என்று எல்லாராலும் அழைக்கப்படும் சீத்தாராமன் இந்த பிராந்தியம் முழுமையும் பல ஊருக்கு சென்று மாட்டு எலும்புகளை சேகரித்து விற்றுக் கொண்டிருந்தான். இவன் ஊரு.. வடக்கே கொள்ளிடம் ஆற்றை ஒட்டி இருந்தது. திருமணம் முடிந்த சில மாதங்களிலே இவன் மனைவி இவனைவிட்டு ஓடிப் போய்விட்டாள். அதனால் கொஞ்சமும் கவலைப் படவில்லை. இவ.. போனா இன்னொருத்தி என்றபடி தஞ்சாவூருக்கு அந்த பக்கத்திலிருந்து ஒருத்தியை அழைத்துக் கொண்டு வந்திருந்தான். அவளும் இவனோடு சில நாட்கள் மட்டும் இருந்தாள். பிறகு எங்கோ ஓடிப்போனாள். பிறகு தூரத்து சொந்தத்தில் இருந்த முப்பது வயது தக்க பெண்ணை கோவிலில் வைத்து திருமணம் செய்து அழைத்து வந்தான். அவள் தான் இவனைப் பற்றிய ரகசியத்தை ஊருக்குள் பரப்பினாள். நாலு கழுதைக்கு இருக்கிறதை ஒன்னா சேத்தா கூட அவ்வளவு பெரிசு வராது என்று பக்கத்து வீட்டுக்காரர்களிடம் சொல்லி சிரித்தாள். ஆனால் இப்படிப்பட்டவளும் ஒரு நாள் ஊரில் ஒரு இளவட்ட பையனோடு ஓடிப்போனாள்.

“பொம்பள ராசி இல்லாதவன்”, என்று இவனை கிண்டல் செய்தார்கள். அதன் பிறகு கொஞ்ச வருடங்கள் பெண் பற்றிய உணர்வு இன்றி தான் உண்டு தான் வேலை உண்டு என்று இருந்தான். தன் சொந்த ஊரின் மீது வெறுப்புக் கொண்டவனாக ஒவ்வொரு ஊராக தங்கிக் கொண்டான். எந்த பெண்ணையும் வஞ்சத்தோடு பார்க்கமாட்டான். கும்பகோணத்தில் தான் அதிக நாட்கள் தங்கியிருந்தான். அங்கேயிருந்த நரிக்குறத்தி இவனை விரும்புவதாக தங்கவேலுவிடம் சொல்லியிருக்கிறான். இந்த விஷயங்கள் எல்லாம் இவன் செல்லுகின்ற ஊர் மக்களுக்கு தெரியும். எதையும் மறைத்துப் பேசமாட்டான். யாரு இவனை “எலும்பு” என்று கூப்பிட்டாலும் கோபித்துக் கொள்வதோ, சண்டை பிடிப்பது கூட கிடையாது. தான் உண்டு.. தன் வேலை உண்டு என்று இருப்பான்.

மீண்டும் ஒரு பீடியை பற்ற வைத்துக் கொண்டான். வெய்யிலில் இருவரும் தொப்பலாக நனைந்து விட்டார்கள். வியர்வையில், வெய்யிலுக்கு ஒதுங்க கூட மரமில்லை என்று முணுமுணுத்துக் கொண்டான் எலும்பு. இத்தனை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயில் அதிகரித்து விட்டதாக நினைத்தான். தங்கவேலு எதிரே கலியமூர்த்தி நாயுடு குடையை பிடித்தபடி வந்துக் கொண்டிருந்தார். அவரோடு இரண்டு ஆட்கள் வந்துக் கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்து.. அண்ணே என்று குரல் எழுப்பியபடி பாதையிலிருந்து விலகினார்கள் இருவரும்.

“இந்த வெய்யிலுல. எங்க போயிட்டு வர்றீங்க”. .

“நம்ம பனமரத்த விலை கேட்குறாங்க அதான் போயிட்டு வர்றேன்டா”.

“சரிங்கண்ணே”

“எங்க நீ. . போறடா”,

அட ஒனக்கு இன்னைக்கி வேட்டை தான்”,

அவர் முகத்தில் சிரிப்பு உள்ளார்த்தமாக உறைந்து வெளியேறியது. .

“ஒரு காலத்தில் இந்த பகுதி முழுமையூடே.. நாயுடுகள் தான் ராஜாக்களாக இருந்தார்கள். எல்லா பண்ணைகளுமே அவர்களின் கட்டுப்பாட்டுக்குள்ளும்.கண்காணிப்புக்குள்ளுமாக இருந்தன. இங்கே பண்ணையார்களாக இருந்த ஐய்யர்கள், ஐயங்கார்கள், முதலியார்கள்.. இன்ன பிற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நாயுடுகளை அணுசரித்தே வந்தார்கள். ஆனால் காலத்தின் தீவிரமான நீட்சியில் மெல்ல மெல்ல.. பண்ணைகள் வீழ்ந்து போயின.

இந்த நாயுடுக்கு.. ஒரு காலத்தில் இந்த ஊரில் பனிரெண்டு வெளி சொந்த நிலமிருந்தது. இப்பொழுது மிஞ்சியிருப்பது ஒரே “வெளி” தான். வெண்மணியில் நாற்பத்து நான்கு பேரை உயிரோடு கொளுத்தியதில் இவரின் தொடர்பும் உண்டு என்று ஊரில் பேசிக் கொண்டார்கள். அப்பொழுதெல்லாம் இரிஞ்சூர் கோபாலகிருஷ்ணன் நாயுடு இவர் வீட்டுக்கு அடிக்கடி வந்துச் செல்வான். அதனை எல்லாம் இவன் அறிவான். இவருக்கு கொஞ்ச நாட்கள் அவ்வளவு பொறுப்பாக ஆட்கள் கூலிக்கு போக மாட்டார்கள். ஊரில் ஏனைய சாகுப்படிக் காரர்களுக்கு காட்டும் அக்கறை இவரை பொறுத்த வரைக்கு இல்லாமல் போயிற்று, இவரின் மிரட்டலை கண்டு அஞ்ச தேவையில்லை என்று இந்த பகுதியில் இயக்கம் நடத்திய தோழர் சீனிவாசராவ் பகிரங்கமாக பேசி இருந்தது மக்கள் மத்தியில் சற்று கூடுதலான தைரியத்தையும், எதிர் சொற்களை வீசும் மனோபாவத்தையும் உருவாக்கியிருந்தது. அதன் பிறகு இவரின் நடவடிக்கையில் சற்று மாற்றம் இருக்கவே செய்தது. அதிலிருந்து தன்னுடைய மகன்களை இந்த மண்ணில் விவசாயம் செய்ய அனுமதிக்கவில்லை. நிலங்களை மெல்ல விற்கத் தொடங்கினார்.

இருவரும் வேகமாக நடந்தார்கள். ஒரு மைல் தூரம் நடப்பது என்னமோ பத்துமைல் தூரம் நடந்தது போல அயர்ச்சியையும், அலுப்பையும் ஏற்படுத்தியது. பெருத்திடலாக நின்ற மாடு புதைக்குமிடம் எல்லாம் பழுப்பு நிறமாக தாவரங்கள் கருகிக் கொண்டிருந்தன. சப்பாத்தி சிவந்த பழங்களை கொண்டு கும்பலாக நின்றுக் கொண்டிருந்தது. சப்பாத்தியின் மீது வெண்மையாக “மாவு” பதிந்திருந்தது. பழங்கள் சிவந்து முட்களை கொண்டு சாப்பிடு என்று வலியுறுத்தியது போலிருந்தது. இந்த எலும்பிலிருந்து ஏதோ உரங்கள் தயாரிக்கிறார்கள் என்று சொல்லியிருப்பதை அறிந்திருக்கிறான் தங்கவேலு.

தங்கவேலு திடலை கூர்மையாகப் பார்த்தான். தவரை, கீரை முழுவதுமாக நிரம்பி வழியும் திடல் இது. ஆனால் அதன் சுவடே இல்லாமல் வெறிச்சோடி இருந்தது. அங்கங்கே.. சிறு நெரிஞ்சி மட்டும் படர்ந்திருந்தது.

தங்கவேலு திடலை பார்த்து பெருமூச்சு விட்டான். எலும்புத் துண்டை எடுத்து நெஞ்சில் வழிந்த வியர்வையை துடைத்து விட்டுக் கொண்டான்.

சூரியன் நேராக உச்சியில் இருந்தது. எந்த இடத்தில் போன வருடம் சுப்பையா நாடாரின் மாட்டை புதைத்தோம் என்று யூகித்துக் கொண்டிருந்தான். அந்த மாட்டின் வயிற்றில் கன்று இருந்திருக்க வேண்டும் என்று நினைத்தான். அந்த இடத்தை கூர்ந்து கவனித்து இதுவாக இருக்கலாம் என்று எலும்புவிடம் சுட்டினான்.

தோளிலிருந்து மண்வெட்டியை எடுத்து எலும்பிடம் கொடுத்து... இந்த இடத்தில போடு என்றான்... நெற்றியை துடைத்துக் கொண்டே...

எலும்பு வேகமாக மண்வெட்டியை மண்ணில் செலுத்தினான். ஒரு காலத்தில் மிக சிறந்த விளைச்சல்களை கொண்டிருக்க இந்த பகுதிகள் முழுமையாக ஒரு வேட்டியிலிருந்து வெண்மையாக வெளுத்து போய் கந்தலாகி போவது போல் போய்விட்டது. வெட்டிக் கொண்டே இருந்தான். இரண்டடி அகலத்துக்கும், மூன்றடி அகலத்திற்கும் வெட்டிப்பார்த்த பிறகும் கூட... மாடு.. புதைத்தற்கான எந்த தடயமும் இல்லை. மனதில் ஒரு வெறுமையுணர்வு துலங்கியது.

சட்டென்று எலும்பிடம் இருந்த மண்வெட்டியை தங்கவேலு வாங்கினான். இரண்டு இடங்கள் யோசித்து வெட்டிக் கொண்டே இருந்தான்.

“எலும்பு”... நான் வெட்டுறேண்ணே, என்று சொல்லியபடி வெய்யிலை பொருட்படுத்தாது நின்றுக் கொண்டிருந்தான். வெய்யில் குறைவது போலிருந்தது. வெய்யில் குறைந்திருப்பது போலிருந்தாலும்... வெக்கை மட்டும் கூடிவிட்டிருந்தது. லேசான கோடைக்காற்றுக்கு மனம் தகித்தது இருவருக்கும். உடலிலிருந்து வியர்வைகள் ஆறாக வடிந்துக் கொண்டிருந்தது. சற்று உட்காரலாம் என்று நினைத்தாலும் ஒதுங்கவென்று இடமில்லை. சற்று தூரம் போனால் பனை நிழலில் உட்காரலாம்... இடம் மாற்றி... வெட்டிக் கொண்டே இருந்தான்.

பத்து இடங்களுக்கு மேலாக... யூகித்து வெட்டிப் பார்த்தாயிற்று, பொழுது மெல்ல ஏறிவிட்டது. அந்தி மெல்ல பரவத் தொடங்கியிருந்தது. இதமான காற்று வீசத் தொடங்கியது... வெட்டுவதை நிறுத்தி யோசித்தபடி நின்றான், தங்கவேலு. போன வருடம் மழைக் காலங்களில் தான்... தோலை உரித்துவிட்டு அந்த மாட்டை புதைத்து இருந்தான். மழைக்காலம் என்பதால் அடையாளம் மறந்து போயிற்று. ஞாபகத்தில் இருந்து மெல்ல அந்த இடம் தொலைந்து விட்டிருந்தது.

யோசித்துப் பார்த்தான்... நன்றாக எந்த இடத்தில் போட்டு மாட்டை உரித்தோம். என்று ஞாபகப்படுத்தினான், எலும்பிடம் இருந்த பீடியை வாங்கி பற்றவைத்துக் கொண்டான். எங்கோ பால்காரன் மணியடித்துக் கொண்டு போய் கொண்டிருந்தார்கள். சூரியன் மேற்கே நகர்ந்து கொண்டிருந்தது. அந்தி தாறுமாறாக ஓடிவிடாது இருக்க சத்தமிட்டு ஒழுங்குப்படுத்திக் கொண்டிருந்தார்கள் என்று நினைத்தான் தங்கவேலு. பீடியை பலமாக உறிஞ்சு உள்ளே இழுத்தான். புகை உள்ளுக்குள் நிரம்பி... மூக்கின் வழியாக வெளியேறியது. பளிச்சென்று யோசனை வந்தது... மண் வெட்டியோடு வேகமாகப் பாய்ந்துச் சென்று வெட்டத் தொடங்கினான். வெட்டத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே குபுக்கென்று இறைச்சியின் அழுகல் வாசனை வெளியேறியது.

“இந்தால இருக்கிறது தெரியாம தான், அங்க வெட்டிகிட்டு இருக்கோம்” என்றபடி வெட்டினான்.

உரித்துப் போட்டிருந்த மாட்டின் சதை அழுகாமல் அப்படியே இருந்தது. நான்கு பக்கமும் மண்ணைத் தோண்டிப் பார்த்தான். பூச்சி புழுக்கள் கூட இப்பொழுது தான் மெல்ல உயிர்பிடித்திருந்தது.

“நாத்தம் தாங்க முடியல”... ஒரு வருடம் ஆச்சுங்குறே... அழுகாம கெடக்கே, என்று பெருமூச்சு விட்டபடி... கவலையாக பார்த்தான் எலும்பு.

என் அனுபவத்தில... இப்படி பார்த்தது இல்ல... என்ன காரணமுன்னு தெரியல, என்று தேய்ந்த குரலில் பேசினான் தங்கவேலு.

பொழுது... அந்தியாகிவிட்டது... மாடுகள்... வயல்களில் மேய்ந்து கொண்டிருந்தன. மண்ணைப் போட்டு மூடியிட்டு இருவரும் நடக்கத் தொடங்கினார்கள்.

ஞானசுந்தர வள்ளுவர் வந்து கொண்டிருந்தார். எங்கோ சென்றுக் கொண்டிருக்கிறார் என்பது போலிருந்தது. அவர் நடை... கையிலிருந்த தோல் பையில்... ஜாதகப் புத்தகம் இருந்தது. எங்கோ ஜோதிடம் பார்க்க கிளம்பியிருந்தார். வயது அதிகமாக இருந்தாலும், முதுமையிலும் கூட சுறுசுறுப்பாக இருந்தார். இந்த சுத்துப்பட்ட ஊரின் அத்தனை காரியங்களிலும் இவரின் வாக்கு கேட்டுத்தான் ஈடுபடுவார்கள். இதன் மூலமாக நல்ல வருமானத்தை சேர்த்து இருந்தார். நிலபுலம், வீடு, நல்ல வசதியான வாழ்க்கை என்று வந்தாலும், எளிமையாக நடந்து கொண்டிருந்தார்.

இருவரும் சோர்வாக நடந்து கொண்டிருந்தார்கள்... இவரைப் பார்த்ததும்... தங்களுக்கு ஏற்பட்ட இந்த மோசமான வேதனையான அனுபவத்தை சொல்ல வேண்டும் என்று தங்கவேலு நினைத்தான்.

“ஜோஸ்யக்காரய்யா” ஒரு வருசத்துக்கு முன்னாடி புதைச்ச மாடு இன்னும் அழுகாம கெடக்குங்க.

அப்படியா,

ஆமாங்க,

அப்படியே கிழக்குப் பார்த்து நின்று யோசித்தவர்... ஒண்ணுமில்ல ஏதோ... மூலிகையை திண்ணு இருக்கும் என்று முணுமுணுத்தபடி நடக்கத் தொடங்கினார்.

தெருவின் முக்கிலேயே தங்கவேலுவை விட்டுவிட்டு, எலும்பு சைக்கிளில் போய்விட்டிருந்தான். இனி மேல் எலும்பு பொறுக்க வருவான் என்று தெரியவில்லை.

மகள் தெருபயல்களோடு விளையாடிக் கொண்டிருந்தாள். இவனைப் பார்த்ததும் ஓடி மறைந்தாள்.

பொழுதுக்கும்... கொத்து வேலைக்குப் போயிருந்த வீட்டுக்காரி இவனைப் பார்த்துக் கேட்டாள்,

“எலும்பு எடுத்துக் கொடுத்தியா...”

“எலும்பும் இல்ல... ஒரு மசிறும் இல்ல...” என்றபடி திண்ணையில் துண்டை விரித்துப் போட்டு உட்கார்ந்தான். காக்கா, குருவிகள்... சத்தமிட்டபடி பறந்தன.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com