Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஏப்ரல் 2006
நுழைவுத் தேர்வு ரத்து - உயர்நீதிமன்றத் தடை

யாருக்கு லாபம்?
ராஜசேகரன்

நுழைவுத் தேர்வு ரத்தால் கிராமப்புற மாணவர்கள் பலனடைவார்கள் என்பது பொய். அது தவறான மதிப்பீடு. புள்ளி விபரங்கள் இதைத் தெளிவாகவே மெய்ப்பிக்கின்றன.

-இராசேந்திர சோழன் தமிழ்த் தேசிய மார்க்சிய கட்சி ஒருங்கிணைப்பாளர்


Tamilnadu Assembly 1984ல் அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரால் தமிழகத்தில் கொண்டு வரப்பட்ட நுழைவுத் தேர்வு முறையானது கடந்த 22 ஆண்டுகளாக பல்வேறுபட்ட குளறுபடிகளையும் மாணவர்களிடையே ஏற்றத் தாழ்வுகளையும் உண்டாக்கியிருக்கிறது. மீண்டும் ஒரு முறை நுழைவுத்தேர்வு எழுத வேண்டிய துர்பாக்கியமான சூழல் தமிழக மாணவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சிகளின் கண்டனக் குரல்களையும் போராட்டங்களையும் பொருட்படுத்தாமல் ஆணவ அதிகாரத்தால் ஆட்சி செய்யும் ஜெயலலிதா திடீரென நுழைவுத் தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தார். அதற்காக அவசரச் சட்டம் ஒன்றையும் சட்டமன்றத்தில் நிறைவேற்றினார். அதற்காக அவர் ஒப்புவித்த திருவாசகம் இதுதான்:

“கிராமப்புற மாணவர்கள் தொடர்ச்சியாக இரண்டு தேர்வுகளை ஒரே நேரத்தில் எழுத வேண்டியதிருக்கிறது. இதனால் அவர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். எனவே கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி நுழைவுத் தேர்வை ரத்து செய்கிறேன்”.

வாய் கூசாமல் இவர் சொன்னதை உயர்நீதிமன்றமும் அப்படியே நம்பும் என்று நினைத்திருப்பார் போலும். ‘கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி’என இவர் அடைப்புக் குறிக்குள் போட்டதை எந்தவித புள்ளி விபரங்களோடும், ஆதாரப் பூர்வமாகவும் இல்லை என்று கூறி, நுழைவுத் தேர்வு ரத்தை தடை செய்வதாக உயர்நீதிமன்றம் அறிவித்திருக்கிறது.

இந்த வருடமாவது நுழைவுத் தேர்வு எதுவும் இருக்காது என்று நம்பிக் கொண்டிருந்த மாணவர்களின் தலையில் இடி விழுந்திருக்கிறது. இது போதாதென்று நுழைவுத் தேர்வுக்கு முக்கிய பாடங்களான கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற பாடங்களில் பாடத் திட்டத்திற்கு வெளியே கேள்விகள் கேட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் தொடுக்கப்பட்டிருக்கிறது. ‘கருணை மதிப்பெண்கள் வழங்கப்படும்’ என்று பள்ளிக் கல்வித் துறையும் அறிவித்திருக்கிறது. இது போதாதென்று இதுகுறித்து விசாரிக்க நிபுணர் குழு ஒன்றை அமைக்குமாறு நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கூடம், வீடு என்று அமைதியோடு கழிந்து கொண்டிருந்த மாணவர் உலகம் இன்றைக்கு நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறது. ஓய்வு எடுக்க வேண்டிய கோடை விடுமுறையில் மீண்டும் நுழைவுத் தேர்வுக்கு படித்துக் கொண்டு இருக்கிறார்கள். இதில் ஒரு பக்கம் ஏற்கனவே நுழைவுத் தேர்வு எழுதி நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் சேர்ந்தவர்கள் ஏஐடியுசி பிரச்சனையில் சிக்கித் தவிக்கிறார்கள். ‘உரலுக்கு ஒரு பக்கம் இடி என்றால் மத்தளத்துக்கு ரெண்டு பக்கம் இடி’ என்ற சொல்வழக்குக்கு உதாரணமாக இன்றைக்கு மாணவர்கள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.

உண்மையில் ஜெயலலிதா கிராமப்புற மாணவர்களின் மேல் கொண்ட அக்கறையினால் தான் நுழைவுத் தேர்வை ரத்து செய்தாரா? அப்படியெனில் இத்தனை நாளாக கிராமப்புற மாணவர்கள் கஷ்டப்படுவதை வேடிக்கை பார்த்து ரசித்தாரா? என்பது போன்ற கேள்விகள் தற்போது எழுந்திருக்கின்றன. “நுழைவுத் தேர்வு ரத்தால் கிராமப்புற மாணவர்கள் பலனடைவார்கள் என்பது பொய். அது தவறான மதிப்பீடு. புள்ளி விபரங்கள் இதைத் தெளிவாகவே மெய்ப்பிக்கின்றன” என்கிறார் தமிழ்த் தேசிய மார்க்சிய கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான இராசேந்திர சோழன்.

தமிழகத்தில் சுமார் 5லட்சம் பேர் பிளஸ்டூ தேர்வு எழுதுகின்றனர். இதில் 4லட்சத்திற்கும் மேற்பட்டோர் தமிழ் வழிக்கல்வியில் பயில்பவர்கள் (சுமார் 80ரூ). பெரும்பாலும் ஏழை, எளிய மக்களின் குழந்தைகளான இவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். ஒரு லட்சத்திற்கும் (20ரூ) குறைவானவர்களே ஆங்கில வழியில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலும், சி.பி.எஸ்.இ. மற்றும் நாமக்கல், ராசிபுரம் பகுதிகளில் உள்ள உண்டு, உறை விட மேல்நிலைப் பள்ளிகளிலும் பயின்று வருகின்றனர். பெரும்பாலான பொறியியல், மருத்துவ இடங்களை இந்த 20ரூ மாணவர்களே கடந்த காலங்களில் கைப்பற்றியிருக்கின்றனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

‘தற்போது நுழைவுத் தேர்வு ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்ட நிலையிலும், கிராமப்புற பள்ளிகளிலோ, அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளிலோ, தமிழில் பயின்று வரும் பெரும்பான்மையான மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியிலோ அல்லது போட்டியில் முதலிடம் வகித்து வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளிலோ இடம் கிடைக்கப் போவதில்லை’என்கிறார் கல்வியாளர் பேரா.கல்யாணி.

1984ல் அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரால் தமிழகத்தில் கொண்டு வரப்பட்ட நுழைவுத் தேர்வு முறையானது கடந்த 22 ஆண்டுகளாக பல்வேறுபட்ட குளறுபடிகளையும் மாணவர்களிடையே ஏற்றத் தாழ்வுகளையும் உண்டாக்கியிருக்கிறது என்றால் அது மிகையல்ல. இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டப் பகுதிகளில் ஒரு மாணவர் நுழைவுத் தேர்வு எழுதுகிறார் என்றால் அவர் பணவசதி மிக்கவராகவும், டியூசன் சென்று படித்து வரக்கூடிய வாய்ப்பு உள்ளவராகவும் சக மாணவர்களால் மிக உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்க்கக்கூடிய சூழல் இன்றும் இருக்கிறது.

‘தனிப்பயிற்சி நிலையங்கள் பெரும்பாலும் நகர்ப்புறங்களில் இருப்பதும் அவை வசூலிக்கும் கட்டணத்தைச் செலுத்தக்கூடிய வருமானம் கொண்டவர்களில் பலரும் நகரங்களில் வசிப்பதும் தொழிற் கல்விப் படிப்புகளில் பெரும்பாலான இடங்களை நகர்ப்புற மாணவர்கள் கைப்பற்றக் காரணங்களாகி விட்டன. நகர்ப்புறங்களிலிருந்து ப்ளஸ்டூ தேர்வு எழுதும் மாணவர்களின் விகிதத்தையும் அவர்கள் பெறும் இடங்களின் விகிதத்தையும் பார்த்தால் இந்த வேறுபாடு தெரியும்’என்கிறார் எழுத்தாளரும் தலித் வரலாற்று ஆய்வாளருமான ரவிக்குமார் காலச்சுவடு இதழில்.

சட்டமன்றத் தேர்தலில் நுழைவுத் தேர்வு ரத்து விவகாரத்தை வைத்து ஓட்டுக்களை கைப்பற்றலாம் என்ற எண்ணத்தில் ஜெயலலிதா அரசால் அவசர கதியில் கொண்டு வரப்பட்ட ‘தொழிற்படிப்புகளின் சேர்க்கை ஒழுங்குபடுத்தும் தமிழ் நாட்டுச் சட்டம் 2006’ உண்மையில் அது சொல்வதிலிருந்து நேரெதிராகவே செயல்படுகிறது. இச்சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் இச்சட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

Arulmozhi ‘நுழைவுத் தேர்வு அடிப்படையிலேயே தொழிற்கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்று இந்திய மருத்துவக் கவுன்சிலும், அகில இந்தியத் தொழில் நுட்பக் கவுன்சிலும் விதிமுறைகளை வகுத்துள்ளன. அதற்கு முரணாக சட்டம் இயற்ற சட்டப் பேரவைக்கு அதிகாரம் இல்லை. இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் முடியாது என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் மனுதாரரின் வழக்கறிஞர் சமர்ப்பித்த புள்ளி விபரங்களைப் பார்க்கும் போது, சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.எஸ்.சி. பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களால் கிராம மாணவர்கள் எந்த விதத்திலும் பாதிக்கப் படவில்லை. தற்போதைய புதிய சட்டமானது நகரத்தில் படிக்கும் மெட்ரிகுலேஷன் மாணவர்களுக்குத் தான் பயன் அளிக்கும். இப்புதிய சட்டத்தால் கிராம மாணவர்கள் அதிகமாக பயன் அடைவர் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை’ என தனது தீர்ப்பில் தெளிவுபடத் தெரிவித்துள்ளது.

ஆக, ரத்து செய்வது போல் ரத்து செய்துவிட்டு மீண்டும் ஒரு குழப்பத்தை உண்டு பண்ணியிருக்கிறது அ.தி.மு.க. அரசு. கிராமப்புற மாணவர்கள் பயன் அடைவர் என்பதற்கு ஆதாரம் சமர்ப்பிக்கப் படவில்லை - கல்வித்துறை நிபுணர் குழு ஒன்றை நியமித்திருக்கலாம் - இதற்கென ஆணையம் ஒன்றை நிறுவி இச்சட்டத்தை எதிர்க் கட்சிகளின் ஒத்துழைப்போடு நிறைவேற்றியிருந்தால் நுழைவுத் தேர்வை ரத்து செய்திருக்கலாம் என்பது போன்ற வாதங்கள் தற்போது முன்வைக்கப் படுகின்றன. ஆனால் இதில் ஒன்றைக்கூட தமிழக அரசு பின்பற்றவில்லை என்பதுதான் இங்கு வேடிக்கையான விஷயம்.

கடந்த ஆண்டில் நுழைவுத் தேர்வு ரத்திற்காக பிறப்பிக்கப்பட்ட அவசர ஆணையை நீதிமன்றங்கள் தடுத்து நிறுத்திய போது, புதிதாக நுழைவுத் தேர்வு ரத்து சட்டமொன்றை தமிழக அரசு தாமாக இயற்றிக் கொள்ளலாமென கருத்து தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது சட்டமாக இயற்றியபின் அதை நீதிமன்றம் தடை செய்திருப்பது பல்வேறு தரப்பினரையும் முகஞ்சுளிக்க வைத்திருக்கிறது.

“நீதிமன்றங்களின் பார்வை மேல்தட்டு மக்களின் பார்வையோடு தான் இயங்குகிறது. பெரும்பான்மையான மக்களின் மனோபாவத்தைப் புரிந்து கொள்ளாமல் கடந்த காலங்களில் பல்வேறு தீர்ப்புகளை நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. அதில் ஒன்று தான் தற்போதைய நுழைவுத் தேர்வு தீர்ப்பும்” என்கிறார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள்மொழி (சன் நியூஸ் - நேருக்குநேர் - 11.03.06). “மேலும் எமர்ஜென்சி காலத்தில் கல்வித்துறை மாநில அரசின் அதிகாரத்திலிருந்து மத்திய அரசு அதிகாரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அத்தகைய ‘கன்கார்டினேட்’ முறையை ஒழித்துவிட்டு மாநில அரசு அதிகாரத்திற்கு உட்பட்டதாக கல்வித் துறையை மாற்ற வேண்டும். அப்போது தான் மாநில அரசு விரும்பும் கல்விச் சீர்திருத்தங்களை தாமாக இயற்றிக் கொள்ள வழிவகை செய்யும்” என்கிறார் இவர். மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் முகஞ்சுளிக்கும் வகையில் நுழைவுத் தேர்வு தேவை தானா? என்கிற கேள்வியும் இங்கு தற்போது எழுந்திருக்கிறது. இது ஒரு வகையில் தொடர்ந்து தேர்வு வைத்து மனனம் செய்து உமிழும் ‘மெக்காலே கல்வி’ முறையை உயிர்ப்பிக்கிறது என்பது கல்வியாளர்களின் கருத்தாக இன்றைக்கு உருப்பெற்று இருக்கிறது.

“நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்துவிட்டு மாணவர்களின் தகுதியைச் சமமாக மதிப்பிடும் புதிய வழியைக் கண்டறியலாம். அது வெளிப்படையாகவும் இருக்க வேண்டும். அதற்கு ரேங்க் அடிப்படையில் சமன்படுத்தும் முறை (ஆர்.இ.எம்.) என்ற வழியை உருவாக்கலாம். தேசிய அளவில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் பெற்ற மொத்த மதிப்பெண் அடிப்டையில் ரேங்க் தயாரித்துக் கொள்ளலாம். மேலும் தாழ்த்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோருக்காக தனி ரேங்க் பட்டியல்களையும் தயாரித்து சேர்த்துக் கொள்ளலாம்” என்கிறார் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மு.ஆனந்த கிருஷ்ணன்.

அதே போன்று ராஜஸ்தான் மாநிலம் பிலானியில் உள்ள ‘பிட்ஸ்’ கல்லூரியின் தரப்படுத்தல் முறையையும் இங்கு கையாளலாம். அங்கு மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு கிடையாது. அந்தந்த மாநிலக் கல்வித் திட்டத்தின் கீழ் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்களை 100க்குள் தரப்படுத்தி அதில் ஒரு தர வரிசையை உருவாக்குகின்றனர். அத்தகைய முறைகளையும் இங்கு பின்பற்றலாம். இது குறித்து கல்வித்துறை ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.

“11 மற்றும் 12ஆம் வகுப்புகள் இரண்டும் சேர்ந்ததுதான் மேல்நிலைக் கல்வி. எனவே, 11ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வை நடத்தி அதில் பெறும் தேர்ச்சி மதிப்பெண்களையும், 12ம் வகுப்பில் பெற்ற தேர்ச்சி மதிப்பெண்களையும் மொத்தமாகச் சேர்த்து தொழிற்படிப்புக்கான மாணவர்களின் தகுதிநிலை நிர்ணயிக்கப்பட வேண்டும். அண்டை மாநிலமான ஆந்திராவில் இப்படிப்பட்ட முறையே இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இப்படிச் செய்தால் 12-ஆம் வகுப்புப் பாடத்தை மட்டுமே நடத்தும் மோசடியும் இங்கு முறியடிக்கப்படும்” என்கிறார் இராசேந்திர சோழன்.

உயர்நீதிமன்றத் தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தற்போது தமிழக அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. அது தமிழக மாணவர்களுக்கு சாதகமாகவோ பாதகமாகவோ அமையலாம். இருப்பினும் இந்தாண்டு திட்டமிட்டபடி நுழைவுத் தேர்வு நடைபெறும் என அண்ணா பல்கலை அறிவித்திருக்கிறது. இதற்காக அண்ணா பல்கலையின் செமஸ்டர் தேர்வுகளையும் ரத்து செய்திருக்கிறது. இந்நிலையில் நுழைவுத் தேர்வை தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குனரகம் ஏற்று நடத்தலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது. ஏற்கனவே இருக்கின்ற குளறுபடிகள் போதவில்லை என்று இதுவேறு.

எது எப்படியிருப்பினும் இந்தாண்டு நுழைவுத் தேர்வில் விகிதாச்சார ஒதுக்கீட்டின்படி தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு 80ரூ இடங்களை ஒதுக்கீடு செய்து, அதில் 20ரூ கிராமப்புற மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்தால் தான் உயர்கல்வியில் உண்மையான சமூக நீதி கிடைக்கும். இல்லையெனில் ‘கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி’ என தமிழக அரசு தெரிவித்த உறுதிமொழி வெறும் பெற்று கோஷமாகவே தேர்தல் வரை நின்று போகும் என்பது மட்டும் உறுதி.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com