Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஏப்ரல் 2006
நூல் விமர்சனம் - தீச்சிற்பம் (சிறுகதைத் தொகுப்பு)

தீ பரவ வைக்கும் கதைகள்
பொன். குமார்

சிறுகதை தொடக்க காலத்தில் ஒரு தொடக்கம், ஒரு முடிவு என நேர்க் கோட்டுத் தன்மையிலேயே இருந்தது. தற்போது கதை சொல்லும் கலை மாறிவிட்டது. சிறுகதையிலும் புதுப்புது வடிவங்கள். சிறுகதையாளர்கள் புதுப்புது வடிவங்களில் சிறுகதை எழுத முயன்று வருகின்றனர். சிலரே வெற்றிப் பெறுகின்றனர். அவ்வரிசையில் ஒருவர் அன்பாதவன். அவர் தந்திருக்கும் தொகுப்பு ‘தீச்சிற்பம்’.

Anbadhavan தொகுப்பின் முதல் சிறுகதை ‘பாம்பு’ மிக பரவலாகப் பேசப்பட்டது. ‘தீம்திரிகிட’இதழில் வெளியாகி ஆங்கிலத்தில் நாடகமாக்கப்பட்டது. இன்றும் மேடைகளில் எடுத்துக் காட்டப்படுகிறது. அரசு அலுவலகங்களின் நிலையை பாம்பு வைத்து படம் பிடித்துக் காட்டியுள்ளார். ஓர் அரசு அதிகாரிக்கு பாம்பு பிடிக்கவும் அதிகாரம் இல்லை எனவும் ஒரு முடிவு எடுக்கப்படுவதற்கு அரசு எவ்வாறெல்லாம் தாமதப்படுத்துகிறது எனவும் கதை ஒரு சேர உணர்த்துகிறது. இப்‘பாம்பு’அரசு அதிகாரிக்கும் அரசு அலுவலகங்களுக்கும் ஓர் எச்சரிக்கை. இக்கதையை பாம்பின் உருவ அடிப்படையிலேயே தலை, கண்டம், வால் என மூன்று அத்தியாயங்களாகப் பிரித்துள்ளார். தலைப்பகுதி மற்றும் வால் பகுதி ஆசிரியர் கூற்று, இடைப்பட்ட கண்டம் அரசுக் கடித வடிவம். இக்கதைப் போலேவே ‘சர்டிபிகேட் என்னும் கதையும் அரசு அதிகாரிகளின் மீதான கடும் விமர்சனமே. ஆயினும் இருளர் எனும் மலைவாழ் மக்களுக்காக வாதிடுகிறது. இருளர் சாதியைச் சார்ந்த மாணவனுக்கு சான்றிதழ் வழங்க மிக தாமதப்படுத்தும் கதை. அரசு அதிகாரி மீது அரசு ஊழியர்களின் கேலியும் கிண்டலும் வாசிப்பவரையே கோபமூட்டுகிறது.

இருளர் என்பதற்கு சான்றாக பாம்பு பிடித்துக்காட்டு’என்பதற்கு கோபமுற்ற அவன் அலுவலகத்திற்குள்ளேயே பாம்பை விட்டு அலற வைப்பது அதிகாரிகளுக்கு சவுக்கடி; ஓர் உண்மையான இருளருக்கு சான்றிதழ் மறுக்கும் அதிகாரி பொய்ச் சான்றிதழ் பொருளுக்காக வழங்குவது கதைக்கு அழுத்தம். கதையின் விறுவிறுப்பு கவனிப்பிற்குரியது. இவ்விரண்டு கதையிலும் பாம்பு பொதுவாயினும் பிரச்சனை வேறுவேறு. மூன்றாம் கதையான ‘விழிப்பு’ம் அரசு ஊழியருக்கு எதிரானது. லஞ்சம் வாங்குபவர்களை அடையாளப்படுத்துகிறது. உயிரோடு அதிகாரி முன்நின்று பென்ஷன் கேட்பவரிடமே ‘லைப் சர்டிபிகேட்’இன்றி பென்ஷன் தரமுடியாது என அதிகாரி சொல்வது வேடிக்கை. விதிகளின் மீதான விமர்சனமாகவும் உள்ளது. முடிவு அதிர்ச்சியூட்டுகிறது. ஓய்வூதியர் தன் இருப்பை அதிகாரியை அடித்து உணர்த்துகிறார். இங்கு ‘விழிப்பு’ என்பது மக்களுக்கா? அதிகாரிகளுக்கா? ‘மானிடம்’என்னும் கதையும் அரசு ஊழியர்கள் அநியாயம் குறித்ததே. கிணற்றில் விழுந்த மானை காப்பாற்ற நினைக்கும் மனிதர்களிடையே நயவஞ்சகமாய் நடித்து மானை மாமனார் வீட்டுக்கு ‘கறி’க்காக கொண்டு செல்லும் வனஅதிகாரியின் உண்மையான தோற்றத்தை தோலுரித்துக் காட்டுகிறது. ‘மானிடம்’நல்ல தலைப்பு. மானிடம் அன்பு காட்ட வேண்டும் என்றும் விளக்குகிறது. ‘மானுடம்’ போல ‘மானிடம்’ எனவும் பொருள் கொள்ள முடிகிறது.

‘ஒத்த அடி’ என்னும் இரண்டாம் கதை ஏமாற்றிப் பிழைக்கும் அரசியல்வாதிகளுக்கு எதிரானது. தாழ்த்தப்பட்டோர் சார்பாக தாழ்த்தப்பட்ட ஓர் இளைஞன் வாழும் கதை. ‘தொடர்ந்து ஒலித்த ஒத்த அடி காற்றில் கலந்து தொடர் அதிர்வுகளைப் பரப்பிக் கொண்டிருந்தது’ என்னும் இக்கதையின் இறுதி வரி தலித்தியரின் உரிமைக் குறியீடாகியுள்ளது. தலித்தியம் பேசும் இன்னொரு சிறுகதை ‘தீச்சிற்பம்’. வங்கியில் பணிபுரியும் தலித் பெண்ணை திருமணம் செய்ய முன் வருகிறான் ஒரு பிராமண இளைஞன். இந்த கலப்பு மாப்பிள்ளை அழைப்போடு நின்று போனதே சோகம். தடை பெற்றதற்கு காரணங்கள் இரண்டு. ஒன்று சாதியம்; இரண்டு வரதட்சிணை. எத்தகைய பதவியிலிருந்தாலும் சாதியினையும் வரதட்சனைiயும் விடாதிருப்பது வருத்தத்தை அளிக்கிறது. இக்கதையில் தலித்திய மொழியையும் பிராமண மொழியையும் மிக அழகாக கையாண்டுள்ளார். கதையையும் மிக சாமர்த்தியமாகக் கொண்டு செல்கிறார்.

‘பட்டாம்பூச்சிக் காலம்’ பட்டதாரிகளின் பரிதாப நிலையைக் காட்டியது. பிரச்சனை பழையதாயிருந்தாலும் கவித்துமாயுள்ளது. பட்டாம் பூச்சியோடு கனவை ஒப்பிட்டுள்ளார். இளைஞர்களை விரக்தியாய் சித்தரித்துள்ளார். இக்கதைக்கு மாறான, முரணான இளைஞர்களை கண்ட கதை ‘தீ பரவட்டும்’. நான்கு இளைஞர்கள் இணைந்து ஒரு நூலகம் தொடங்கிய கதை. ஆக்கப்பூர்வமானது. ஒவ்வொரு ஊரிலும் இவ்வாறான இளைஞர்கள் இருந்தால் நிச்சயம் ‘கல்வித் தீ”, ‘எழுத்தறிவுத் தீ’பரவும்.

தேவையில்லாமல் அடுத்தவர் பிரச்சனையில் தலையிடக் கூடாது என சுட்டிய கதை ‘நாலு கடிதங்கள்’. கடிதத்தின் வாயிலாகவே கதையை கோர்வையாக சொல்லியுள்ளார். கதையில் இருக்கும் உரைநடைத் தன்மை தலைப்பில் இல்லை. ‘நாலு’வழக்கு.

‘பன்றிக்காரன்’எனில் சமுதாயம் அவனை கேவலமாக பார்க்கும். அன்பாதவனின் ‘பூராசாமி’இக்கருத்தை உடைக்கிறது. “நவீன வசதிகளில் ஒன்று குறைந்தாலும் எதையோ இழந்தது போலிருக்குமெனக்கு. இந்தச் சூழலில் வாழும் மனிதர்கள் புதுசு. இந்த உலகம் புதுசு. இந்த வாழ்க்கை புதுசு” என ‘அவன்’மீது ஒரு பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளார். கதாபாத்திரம் பேசுவதாக கதை புனையப்பட்டுள்ளது.

“ஆறுமாதம் பெருங்கடன்கள் எனும் அட்வான்சாகப் பயிற்சி எடுத்தவனை எங்கோ ஒரு மூலைக்கு மாற்றுவார்கள். கம்ப்யூட்டர் துறையில் பட்டம் பெற்றவனை ஸ்டேஷனரி செல்லுக்குப் போடுவார்கள். அட பேங்கில் இதெல்லாம் சகஜமப்பா” என்னும் அலுப்பு வெளிப்பட்டுள்ள கதை ‘சக்தியின் வடிவங்கள்’. இங்கு சக்தியின் வடிவங்கள் என்பது பெண்களை குறிக்கிறது. பெண்களை வங்கியில் இட்டு வைக்கத் தூண்டும் வங்கி அலுவலரின் செயல் பாராட்டிற்குரியது.

‘நிறப்பிரிகை’ இத்தொகுப்பின் முக்கியமான கதை. குழந்தைத் தொழிலாளர் குறித்து விவாதிக்கிறது. மஞ்சள், வெண்மை, நீலம், ஊதா, சிவப்பு, பழுப்பு, கறுப்பு, சாம்பல், கருநீலம், ஆரஞ்சு, பச்சை என ஒவ்வொரு தலைப்பிலும் ஒவ்வொரு குழந்தைத் தொழிலாளியை அடையாளம் காட்டுகிறார். இறுதியாக ‘காவி’யில் அரசின் பொய் முகத்தை அம்பலப்படுத்துகிறார். ‘பெண்மை நிறமல்ல’என்பர். ஆனால் பழுப்பு, சாம்பல் ஆகியவற்றையும் நிறம் என்பது வினாவே. இக்கதையின் நோக்கம் குழந்தைத் தொழிலை ஒழிக்க வேண்டும் என்பதாகும். இதில் ‘சாம்பல்’லாட்டரி விற்கும் சிறுவனை சுட்டிக்காட்டியது. தொடர்ந்து ‘கோன் பனேகா குரோர்பதி’மூலம் லாட்டரி விற்கும் சிறுவனை படைத்திருந்தாலும் அவன் மூலம் உழைக்க வேண்டுமென உரைத்துள்ளார். வரவேற்பிற்குரியதே. ஆனால் குழந்தைத் தொழில் எதிர்ப்புக்கு முரணாக உள்ளது.

ஒவ்வொரு கதையையும் ஒவ்வொரு விதம் எழுதியவர் ‘கதை முடிவு’என்னும் கதையை புராணத்தை அடிப்படையாய் வைத்து எழுதியுள்ளார். உரைநடையும் கதைபோக்கும் சரித்திர கதைகளை நினைவூட்டுகிறது. மகாபாரதத்தை மறுபரிசீலனை செய்கிறார். வியாசரை விமர்சனத்துக்குள்ளாக்கிறார். பாஞ்சாலியை பொங்கியெழச் செய்கிறார். பீமனை சிந்திக்கச் செய்கிறார். சீதை அமைதி காத்ததைச் சுட்டிக்காட்டுகிறார். காலங்காலமாக பெண்ணிய பிரச்சனைக்கு முடிவு கட்ட முயலும் கதை. ‘கதை முடிவு’இரு பொருள்பட அமைத்துள்ளார். ஒன்று புனை கதை. இரண்டு பீமனிடமுள்ள கதை.

எழுத்தாளரின் சூழல் பற்றிய அக்கறையுடன் எழுதப்பட்ட கதை “நீர்வெளி’. வடிவம் சுபமாயுள்ளது. நீர் ஆதாரம் பெருக ஆழ்துளைக் குழாய் கிணறு ஏற்படுத்தப் போவதாக உள்ளது. இதிலுள்ள கதாபாத்திரங்கள் வீணா லீனா மணிமேகலையும், வைகை மகள் வைகைச் செல்வியையும் நினைவூட்டியது. பெயர் மாற்றப்பட்டுள்ளதே தவிர அவர் இயல்புகள் அப்படியே காட்டப்பட்டுள்ளன. ஆனால் மற்ற கதைகளில் கவிஞர் பழமலய், எழுத்தாளர் விழி.பா.இதயவேந்தன் என பலரின் பெயர்களை அப்படியே பயன்படுத்தி அவர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். அன்பாதவன் அடிப்படையில் ஒரு கவிஞர் என்பதால் தொகுப்பு நெடுக கவிதைகளை பரப்பியுள்ளார். கதையின் தொடக்கத்தில் கவிதையை மேற்கோள் காட்டி கவிதை குறித்த தன் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார். சில பாத்திரங்களை கவிஞர்களாகவும் எழுத்தாளர் களாகவும் படைத்துள்ளார்.

‘தீச்சிற்பம்’என்னும் இத்தொகுப்பில் 15 சிறுகதைகள் உள்ளன. பெரும்பாலான கதைகள் அரசையும் அரசு ஊழியர்களையும் எதிர்க்கிறது. பெண்ணியம், தலித்தியம் பேசுகிறது. சுற்றுச்சூழல் பற்றிய கருத்தை முன்வைக்கிறது. குழந்தைத் தொழிலை எதிர்க்கிறது. ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொருவர் முன்னேற்றம் குறித்தும் உரைக்கிறது. சிறுகதையாளர் அன்பாதவன் பலரின் பிரதிநிதியாய் செயல்பட்டுள்ளார். கதையை ஒரே நேர்க்கோட்டில் மட்டும் அமைக்காமல் வித்தியாசமான வடிவங்களில் எழுதி தொகுப்பின் மீது கவனத்தை ஈர்த்துள்ளார். பேசச் செய்துள்ளார். கவிதை, கட்டுரை, விமர்சனம், ஹைக்கூ, ஹைபுன் என பலதளங்களில் இயங்கி வரும் அன்பாதவன் ஒரு சிறுகதையாளராக தன்னை நிலை நிறுத்தும் முயற்சியில் வெற்றிப் பெற்றுள்ளார். கதையோடு வாசகனை சுட்டிச் செல்லும் கலை அன்பாதவனுக்கு இயல்பாகவே கைவரப் பெற்றுள்ளது. பொதுவாகவே அன்பாதவன் படைப்புலகில் தலித்தியம் மேலோங்கி நிற்கும். அந்த வகையில் அவர் ஒரு நல்ல படைப்பாளி என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டே இந்நூல்.

ஆசிரியர்: அன்பாதவன்
வெளியீடு : மருதா,
226,(188) பாரதி சாலை,
ராயப்பேட்டை,
சென்னை - 600014.
விலை: ரூ.45/-


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com