Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஏப்ரல் 2006
சிரிப்பு தரும் சிந்தனைகள்

விடைகளில் விளையும் வினாக்கள்
நீலம் மதுமயன்

பொதுவாக வினாக்களில் தான் விடைகள் விளையும், மாறாக விடைகளும் வினாக்களை விளைவிப்பதைக் காணலாம். வினாக்களற்ற விடைகள் என்பது இன்னும் விளைவிக்கப் படாத ஒரு விந்தை. வினாக்களிலும் விடைகளிலும் வெளிப்படும் வினோதங்களை கண்டு உணர்ந்தவர்களால் மட்டுமே இந்த வார்த்தை ஜாலங்களை வைத்துச் சுவைக்க முடியும்.

பேருந்து போய்க் கொண்டிருக்கிறது. டிக்கட் எடுப்பது பற்றி இரண்டுபேர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். “டிக்கட் எடுக்காமல் பஸ்ஸில் பயணம் செய்ய வழி இருக்கிறதா?”- என்றார் ஒருவர். அடுத்தவர் நிதானமாக, “கண்டக்டர் தூங்கி விட்டால் யாருக்கும் டிக்கட் கிடைக்காது”- என்றார் கிண்டலாக. அவரோ சற்றும் யோசிக்காமல், “அது தெரியும், டிரைவர் தூங்கிவிட்டால் எல்லோருக்கும் டிக்கட் கிடைத்துவிடும்” என்று அவரை அதிர வைத்தார். இவ்வாறு வினாக்களில் விடைகள் வெளிப் படுவதைப் போலவே விடைகளிலும் வினாக்கள் வெளிப்படுவதைக் காணலாம். இது சிரிப்பதற்கும் சிந்திப்பதற்கும் உரியதாகவும் அமைவதைக் காணலாம்.

கோயிலுக்குப் போகும் இருவர் பேசிக் கொண்டே போகிறார்கள். ஒருவர், “பொதுவா நான் குளிச்சிட்டுத்தான் கோயிலுக்குப் போவேன்”- என்றார். அடுத்தவரோ, “எல்லாருந்தான்” என்றார். “நான் அதைச் சொல்லவில்லை, குளிச்சிக்கிட்டு நான் அப்படியே கோயிலுக்குப் போவேன்”-என்றார். அவரோ, “நான் வேட்டியக் கட்டிக்கிட்டுத்தான் போவேன்”- என்றதும் இருவரும் சத்தமாகவே சிரித்துக் கொண்டனர். அவர்கள் மட்டுமா? கவனித்தால் நாமுந்தான். இருவர் சந்தித்துக் கொண்டதும் பேச வேண்டும் என்பதற்காக யாராவது ஒருவர் உப்பு சப்பில்லாமல் உரையாடலைத் தொடங்குவதைக் கவனித்து இருக்கிறீர்களா? கவனித்தால் அதற்குள்ளும் நகைச்சுவை நடனமிடுவதைக் காணலாம்.

“உங்க மாமா கந்தசாமி ஆறு வருசமா சிங்கப்பூர்ல இருந்தாரே, இப்ப என்னவா இருக்கார்”- என்றார் வந்தவர். இவரோ, “இப்பவும் மாமாவாத்தான் இருக்கார்”- என்று தொடங்கிய பேச்சை அப்படியே முடித்து வைத்தார். இந்த விடைக்குள் வெளிப்படாமல் மறைந்து கிடக்கும் இரகசியங்கள் இன்னும் வினாக்களை பெற்றுத் தரும்.

மருத்துவமனைக்கு வெளியே இரண்டுபேர் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு டாக்டர் அந்த வளியே போய்க் கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் பேச்சு திசை மாறியது. ஒருவர், “இதோ போறாரே இந்த டாக்டராலதான் நான் பிழைத்தேன்”- என்றார். அடுத்தவரும் ‘ஒகோ இவர்தான் இவருக்கு ஏதும் மருத்துவம் பார்த்திருப்பாராக இருக்கும்’- என்று எண்ணியவாறே எப்படி?”- என்றார். வேற ஒண்ணுமில்ல, எனக்கு ஆப்ரேசன் பண்ண வேண்டியவர் இன்னொருத்தருக்கு ஆப்ரேசன் பண்ணிட்டார்”- என்று கூறிச் சிரித்தார். சற்று நேரத்துக்குப் பிறகுதான் இவரது பிழைப்பின் ரகசியம் அவரது பிழையால் என்று புரிய முடிந்தது.

வினாக்கள் விடைகளையும், விடைகள் வினாக்களையும் தொடரும் என்பதைப் புரிந்து கொண்டால் அது கவனமாகப் பேச கை கொடுக்கும். கவனித்தால் எல்லா சந்திப்பும் சிந்திப்பதற்கு உரியனவாகவே இருக்கும்.

வகுப்பறையில் ஆசிரியர் மாணவனிடம் கேள்வி கேட்பதும், மாணவன் ஆசிரியரிடம் கேள்வி கேட்பதும் சாதாரணமான ஒன்றுதான். ஆனால் அங்கும் வெளிப்படும் விடைகளுக் குள்ளும் வினாக்கள் அகப்படும். எளிதாக வினாக்களை புரிந்து விடை சொல்ல வேண்டும் என்பதற்காக ஆசிரியர்கள் விடை வெளிப்படும் வண்ணம் வினாக்களைக் கேட்பது வழக்கம். இதுவே அவருக்கு இடையூறை ஏற்படுத்தும் என்று அவர் எண்ணிப் பார்ப்பதில்லை.

மாணவனைப் பார்த்து ஆசிரியர், “கம்பராமாயணத்தை கம்பர் எழுதினார். மணிமேகலையை எழுதியது யார்?”- என்றார். மாணவன், “மணி”- என்றானே பார்க்கலாம். வகுப்பு சிரிப்பில் சிதறியிருக்கும். சிந்தித்துப் பார்த்தால் அவர் வைத்துச் சொன்ன விடையே அவரை வாரி விட்டதை உணரலாம். நாம் கவனிக்காமல் பேசினாலும் நம்மைக் கவனிப்பார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்.

வரலாற்று வகுப்பில் ஆசிரியர், “அக்பர் ஆட்சி செய்த காலம் எது?”- என்றார். மாணவன் பதில் சொல்லத் தயங்கினான். அவர், “புத்தகத்தைப் பார்த்தாவது சொல்”- என்று ஒரு போனஸை அறிவித்தார். அவனும் புத்தகத்தைப் பார்த்து, “ஒன்று எட்டு நாலு ஆறு ஒன்று எட்டு ஒன்பது மூன்று”- என்றான்.

ஆசிரியர் சற்று எரிச்சடைந்தவாறே, “அத அப்படியா சொல்றது மடையா, ஆயிரத்து எண்ணூற்று நாப்பத்தாறு முதல் ஆயிரத்து எண்ணூற்று தொன்ணூத்தி மூணு வரை என்று சொல்லணும்”- என்றார். அந்த மாணவனோ, “சார் நான் அது அக்பரோட செல் போன் நம்பர்ண்ணு நெனச்சேன்”- என்று வகுப்பை குலுங்க வைத்தான்.

வினாக்கள் விடைகளையும் விடைகள் வினாக்களையும் மாறி மாறி பரிமாறிக் கொள்ளும் போது புறப்படும் நகைச்சுவைகளுக்கு சிந்தனை மகுடம் சூட்டி சிங்காரிக்க வேண்டுமே தவிர, அவற்றை புறந்தள்ளக் கூடாது. இப்படிப் பிறக்கும் நகைச்சுவைகளை சிரித்துச் சுவைக்க பழகி விட்டவர்கள் கோபத்தைக் கொல்லும் வகையறிந்தவர்கள் ஆவார்கள். உடனாகச் சிரிப்பதற்கும் உள்வாங்கிச் சிரிப்பதற்கும் வேறுபாடுகள் இருந்தாலும் முதலில் சிரிக்க மறக்காதீர்கள், மறக்கவும் செய்யதாதீர்கள்.

பல் பற்றி பாடம் நடத்திய ஆசிரியர், பல்லின் நிறம் வெண்மையாக இருக்கும் என்பதை புரிய ‘வைக்க, “கருப்பா ஆப்பிரிக்க குழந்தை மாதிரி பிறந்தாலும் பிறந்த பிள்ளைக்கு பல் எந்த கலர்ல இருக்கும்?”- என்று கேட்டார். ஒரு மாணவன் புரிந்து கொண்டு வெள்ளையா இருக்கும்- என்றான்.

ஆனால் பக்கத்திலிருந்த ஒரு மாணவனோ, “பிறந்த குழந்தைக்கு எப்படி சார் பல் இருக்கும்?” என்று கேட்டு விடையை மீண்டும் வினாவாக்கினான். இந்த தொடர்தான் அறிவின் ஆரம்பம் என்பதை அறிந்து பாராட்ட வேண்டும். அதை விட்டு விட்டு புண்படுத்துவது பண்படுத்துவது ஆகாது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com