Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஏப்ரல் 2006

சி. மகேந்திரனுடன் நேர்காணல்
சந்திப்பு: ஹாமீம் முஸ்தபா

அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம், அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றம் என தன் இடதுசாரி அரசியல் பணியை செயல்படுத்த தொடங்கிய திரு.சி. மகேந்திரன் அவர்கள் தற்பொழுது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலக் குழுவின் துணைச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். தமிழக அரசியல் சட்டமன்ற தேர்தலை நோக்கி குவிமையம் கொண்டிருக்கக் கூடிய சூழலில் புதியகாற்றுக்காக அவர் தந்த நேர்காணல். .

C.Mahendran கேள்வி: ஏழுகட்சி கூட்டணி என்கிற வலுவான தன்மை உடைந்து வை.கோ., திருமாவளவன் போன்றவர்கள் அ.தி.மு.க.வோடும், விஜயகாந்த், கார்த்திக் போன்றவர்கள் தனித் தனியாகவும் களம் கண்டிருக்கிற சூழலில் இந்த சட்டமன்ற தேர்தல் முடிவு ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு என்ன விளைச்சலைத் தரும்?

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தேவை என்பது தமிழ் நாட்டின் ஜனநாயக இயக்கங்களை ஒருங்கிணைப்பதை மய்யமாகக் கொண்டது. கூட்டணியில் இருக்கின்ற கட்சிகளின் அணுகுமுறைகளில் வேறுபாடுகள் இருந்தாலும் கூட அதனுடைய மைய இழை ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதுதான். ஜனநாயக அடிப்படையிலான இயக்கங்களை வலு சேர்க்க வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டது. இந்த அணி உருவாவதற்கு மிக முக்கியமான காரணம், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சென்றமுறை ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு தமிழ்நாட்டு மக்களுக்கு சட்ட விரோதமாகவும், ஜனநாயக விரோதமாகவும் செயற்பட்டது. அவரின் செயல்பாட்டின் அடிப்படையில் உருவானது. தமிழ்நாட்டின் வளர்ச்சி, தமிழ் நாட்டின் ஜனநாயகம், தமிழ்நாட்டினுடைய எதிர்காலத் திசைவழி ஆகியவற்றைப் பற்றிய ஒரு பார்வையை தரவேண்டுமென்றால் அதனை இந்த தேர்தல் கூட்டணி கண்ணோட்டத்தில் இருந்துதான் தரமுடியும்.

கேள்வி: இந்த சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை கூட்டணி ஆட்சி என்ற தோற்றம் உருவாகி இருக்கிறது. இடதுசாரி கட்சிகள் தமிழகத்தில் கூட்டணி ஆட்சியைப் பற்றி என்ன நினைக்கின்றன?

இடதுசாரி கட்சிகள் கூட்டணியில் பங்கேற்குமா என்பது பற்றி இப்பொழுது கருத்து சொல்ல முடியலை. ஆனால் பொதுவான அரசியல் சூழலில் கூட்டணி ஆட்சிக்கான தன்மைகள் கூடுதலாக இருப்பதாகத்தான் தெரிகிறது. திராவிட முன்னேற்றக் கழகமே 129 இடங்களில்தான் போட்டியிடுகிறது. அதே போல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனிப் பெரும்பான்மை பெறுவதற்கான வாய்ப்பே கிடையாது. ரொம்ப குறைந்த இடங்களில்தான் அது வெற்றி பெறும் கூட்டணி ஆட்சிக்கான வாய்ப்புக்கள் தான் அதிகம்.

கேள்வி: கூட்டணி கட்சியை நோக்கிய நகர்தல் என்பது மக்களிடம் ஏற்பட்ட மாற்றத்தின் வெளிப்பாடா? அரசியல் கட்சிகளின் செயல்பாட்டின் வெளிப்பாடா?

அரசியல் கட்சிகள் இடையில் ஏற்பட்ட மாற்றமாகத்தான் நான் பார்க்கிறேன். முன்பெல்லாம் ஒரு அரசியல் கட்சி வேணுமா? வேண்டாமா? ஒரு அரசியல் கட்சியைத் தேர்தலில் வெற்றிபெற வைக்க வேண்டுமா? வேண்டாமா? என்பது மிகப் பெரிய பிரச்சனையாக வரும். ஜெயலலிதாவை தேர்ந்தெடுப்பதா? கலைஞரை தேர்ந்தெடுப்பதா? கலைஞரா? எம்.ஜி.ஆரா? என்பது மய்யமாகவும் மற்ற பிரச்சனைகள் எல்லாம் அதையொட்டியதாகவும் வரும். ஆனால் இப்பொழுதுள்ள சூழலில் வட்டாரத் தன்மைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இதனால் இந்த பகுதி வாரிய வட்டாரங்களில் இருக்கக்கூடிய அரசியல் சக்திகள், என்ன விசயங்களை முன்வைக்கிறார்கள். அவர்களின் அடித்தளம் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்து தேர்தல் முடிவுகள் வித்தியாசப்படும். இந்த தேர்தல் முடிவுகள் மாநிலம் முழுவதும் ஒரேபோல் இருக்காது. அடித்தள மட்டத்தில் தமிழகத்தில் பன்முக அரசியல் தன்மை வளர்ந்திருப்பதை இது காட்டுகிறது.

கேள்வி: பன்முக அரசியல் தன்மை என்பது சாதிக் கட்சிகளின் அரசியல் திரட்சியாகவும், நடிகர்களை மய்யப்படுத்திய அரசியல் திரட்சியாகவும் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது? இது மாதிரியான அணிகளை இடது சாரி என்ற முறையில் எப்படி பார்க்குறீர்கள்?

இதை ஜாதி, அரசியல் என்ற இரண்டு நிலைகளை வைத்துப் பார்க்கும் போது சில சாதிகள் தங்கள் கையில் வைத்திருக்கும் ஆதிக்கத்தை மீண்டும் நிலை நிறுத்திக் கொள்வதற்கு அரசியலை ஓர் ஆயுதமாக பயன்படுத்துகின்றன. இன்னும் பல அமைப்புகள் குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகங்கள் தங்களுடைய சமத்துவத்தை நிலை நிறுத்துவதற்கு சாதிரீதியாக கிளர்ந்தெழுந்து வருவதன் மூலம் தங்களின் சக்தியைக் காட்டி, தங்கள் சமத்துவத்தை தொடர வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டம் தவிர்க்க முடியாமல் இடதுசாரி கொள்கைகளையும், பெரியாரியத்தையும், அம்பேத்காரியத்தையும் உள்வாங்கியதாக அமைந்திருக்கின்றது. அதனால் இந்தியச் சூழலில் இந்த மக்களின் போராட்டத்தை ஜாதிப் போராட்டமாக நாம் பார்க்க முடியாது. ஆரம்பத்தில் அவர்கள் சாதியாக திரண்டாலும் ஒரு கட்டத்திற்கு மேல் அரசியல் போராட்டமாக மாற்றுகிறார்கள். அந்த மாற்றம் இந்தத் தேர்தலில் பிரதிபலிக்கும் அல்லது புதிய நிலைகளுக்கு ஏற்பதன்னை தகவமைத்துக் கொள்ளும். எனவே இந்த இயக்கங்களை ஆரோக்கியமாகத் தான் பார்க்க வேண்டும். அரசியல் கருத்துக்களை தவறாக பயன்படுத்தக்கூடிய சாதி சார்ந்த கட்சிகள் மக்கள் மத்தியில் எக்ஸ்போஸ் ஆகும்.

கேள்வி: அகில இந்திய அரசியலில் காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு ஆதரவு என்ற நிலையில் இருந்து கொண்டே பீகாரில் பாஸ்வானோடு சேர்ந்து கூட்டணி அமைத்து இடதுசாரிகளால் தேர்தலை சந்திக்க முடிந்தது. ஆனால் தமிழ் சூழலில் ஏன் அதை சாத்தியப்படுத்த முடியவில்லை?

பீகாரில் கூட எங்களின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாஸ்வானோடு சேர்ந்ததே ஒழிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேரவில்லை. அதேபோல் பீகாரில் இருக்கக் கூடிய சி.பி.எம்.எல். கட்சி தனியாகவே தேர்தலில் நின்றது. இடதுசாரி ஒற்றுமை / கம்யூனிஸ்ட் ஒற்றுமை என்ற அடிப்டையில் ஒருங்கிணைய முடியாத நிலை பீகாரில் தெரிந்தது. எதிர் காலத்தில் இதை சரிசெய்ய முடியும் என்று நினைக்கிறோம். தேர்தலுக்குப் பிறகு இடதுசாரி ஒற்றுமை அவசியம் என்பதை அவர்கள் உணர்கிறார்கள். அதே மாதிரி தமிழ்நாட்டில் மூன்றாவது அணி உருவாவதற்கான சாத்தியங்கள் ரொம்பக் குறைவாக இருக்கிறது. அதனை வளர்த்தெடுக்க வில்லை என்பதே இதற்குக் காரணம். ஆனால் அந்தக் கண்ணோட்டம் இருக்கு. ஒரு இடதுசாரி அணியோ மாற்று அணியோ இங்கு எப்படி உருவாகும் என்று சொன்னால் தொடர்ந்த போராட்டங்கள் வழிதான் அது உருவாக முடியும். மக்கள் போராட்டங்களில் பங்கேற்று அது தந்த அனுபவங்களின் மூலமாக, அது தரக்கூடிய தன்னம்பிக்கையின் மூலமாகத்தான் ஒரு அணி என்பது சாத்தியமாகும். தேர்தல் காலத்தில் வரக்கூடிய சின்னஞ்சிறு கோபங்கள், அல்லது நான் புறக்கணிக்கப் பட்டேன், நீ புறக்கணித்தாய் என்பதற்காக உருவாகக்கூடிய மாற்று அணி என்பது ஒரு பலம் பொருந்திய அணியாகவோ, அல்லது நன்கு மதிப்பிடப்பட்ட அணியாகவோ இருக்காது. தமிழ்நாட்டில் இதுமாதிரியான போராட்டங்கள் கொஞ்சம் முந்தியே தொடங்கி இருக்க வேண்டும். இப்படி தொடங்கி இருந்து அதற்கான முயற்சிகள் எடுக்கப் பட்டிருந்தால் இதுபோன்ற தேர்தல் நேரங்களில் மூன்றாவது அணி சாத்தியமாகி இருக்கும். இப்ப வந்து அவங்களுக்கு தொகுதி குறைந்து போச்சு, இவங்களுக்கு தொகுதி குறைஞ்சு போச்சு என்கிற கோபத்தின் அடிப்படையில் எடுக்கப்படுகிற முடிவுகள் சரியான அரசியலை அடிப்படையாகக் கொண்டதாக இருக்காது.

கேள்வி: இன்றைய அரசியல் சூழலில் தலித் இயக்கங்கள் இடதுசாரி அணிகளோடு இணைந்து பண்பாட்டு / அரசியல் போராட்டங்களை முன்னெடுத்து செல்லாமல் வேறு வகையில், குறிப்பாக திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு டாக்டர் ராமதாசின் பாட்டாளி மக்கள் கட்சியுடன் இணைந்து தமிழ் இயக்கத்தினை நடத்துகிறது. தலித் இயக்கங்களும் இடதுசாரி கட்சிகளும் ஏன் இணைந்து செயல்பட முடியவில்லை?

தலித் அமைப்புகளும் இடதுசாரி அமைப்புகளும் பல பிரச்சனைகளில் ஒன்றாக இணைந்து போராடுகிறோம். தலித் மக்களுக்கு ஏற்படுகிற கொடுமைகள் பிரச்சனைகள் என்று வருகிறபோது தலித் மக்களுக்காக முதல் ஆதரவு கொடுக்கிறவர்கள் இடதுசாரிகளாகத்தான் இருக்கிறார்கள். பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார் மங்கலமாக இருந்தாலும் சரி அல்லது திண்ணியத்தில் ஏற்பட்ட கொடுமையாக இருந்தாலும் சரி, வீரப்பன் தேடுதல் என்ற பெயரில் மலைவாழ் மக்களைத் துன்புறுத்தியதாக இருந்தாலும் மசரி தலித் மக்கள் / பழங்குடி மக்கள் இவர்கள் போராட்டங்களுக்கு முதலில் ஆதரவு தருவது கம்யூனிஸ்ட் இயக்கம். ஆனால் தேர்தலில் போட்டியிடுகிற தலித் இயக்கங்களுக்கு ஒரு பிரச்சனை வருது. அவர்களுக்கு தேர்தலில் நிற்க தொகுதி வேண்டும். அந்தத் தொகுதிகளை கொடுக்கிற இடத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இல்லை. அ.தி.மு.க. அல்லது தி.மு.க. இருக்கிறது. அதனால் அதனுடைய முக்கியத்துவம் கருதி சில மாற்றங்கள் வருது. இதனால் இடதுசாரி இயக்கங்களுடன் தலித் அமைப்புகள் இல்லாதது போன்ற ஒரு தோற்றம் ஏற்படுது.

C.Mahendran கேள்வி: முஸ்லிம்கள் கல்வி, வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு கேட்டு இயக்கங்களை நடத்தி வருகிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சி அதை எப்படி பார்க்கிறது?

சிறுபான்மையினருக்கு குறிப்பாக இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு இடஒதுக்கீடு என்பது கட்டாயம் தரப்படணும். இன்றைய கால கட்டத்தில் நாம் பின்பற்றுகிற ஜனநாயகம் என்பது பங்கெடுப்பு ஜனநாயகம். இந்த பங்கெடுப்பு ஜனநாயத்தில் அதிகாரத்தின் பல மட்டங்களில் பல்வேறு கலாச்சாரத்தைக் கொண்ட மக்கள் பங்கெடுக்க வேண்டும். ஆனால் காலப் போக்கில் பல்வேறு காரணங்களினால் இஸ்லாமிய மக்களின் பங்கெடுப்பு மிகவும் குறைவாக இருக்கிறது. இஸ்லாமிய மக்களில் கல்வி பெற்றவர்கள் எண்ணிக்கை, வேலையில் இருப்பவர்கள் எண்ணிக்கை, அரசு அலுவலங்களில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. தலித் மக்களுக்கு அரசியல் இடஒதுக்கீடு இருக்கிறதுஆனால் முஸ்லிம்களுக்கு மற்ற கட்சிகள் விரும்பினால்தான் இவர்களின் பிரதிநிதிகள் சட்டமன்றத்திற்கோ, நாடாளு மன்றத்திற்கோ செல்ல முடிகிறது. அப்ப பங்கெடுப்பின் அளவானது என்னதான் முயற்சி பண்ணி வாக்குறுதி பண்ணினாலும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அதைக் கொண்டுபோக முடியலை. இடஒதுக்கீடு என்கின்ற வழி முறையின் வழியாகத்தான் இதை அடைய முடியும். எனவே இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்பது எங்கள் கட்சியின் நிலைபாடு. சென்ற நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலேயே அதனைக் குறிப்பிட்டுள்ளோம்.

கேள்வி: பொதுவாக தேர்தலில் அரசியலில் இடதுசாரி கட்சிகளான சி.பி.ஐ. / சி.பி.எம். இவற்றிற்கான தொகுதி ஒதுக்கீடு என்று பார்க்கும் போது உங்கள் கட்சிக்கு குறைவாகவும், சி.பி.எம். கட்சிக்கு அதிகமாகவும் ஒதுக்கப்படுகிறது. வரவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் கூட உங்கள் கட்சி க்கு பத்து தொகுதிகளும், சி.பி.எம். கட்சிக்கு பதிமூன்று தொகுதிகளும் ஒதுக்கப் பட்டுள்ளன. சில மாதங்களுக்கு முன்னால் இந்தியா டுடே இதழ் கூட சி.பி.ஐ. கட்சி வளரவில்லை என்பதுடன் குறைந்து வருகிறது என்ற கட்டுரையை வெளியிட்டது. நீங்கள் எப்படி கருதுகிறீர்கள்?

ஊடகங்கள் தான் அப்படிப்பட்ட கருத்துக்களை உருவாக்குகின்றன. ஊடகங்கள் எப்பொழுதுமே வாழ்ந்தார்க்கு மாரடிக்கும் பணிகளையே செய்கின்றன. கஷ்டப்படுகிறவனின் பிரச்சனையை அது பார்க்காது. ரொம்ப பெருசா இருக்கிறவனை இன்னும் பெருசாக்கணும் என்று பார்க்கும். சி.பி.எம். கட்சி நாடாளுமன்றத்தில் 41 இடங்களை வைத்திருப்பதால் அது பெரிய கட்சி என்றும், சி.பி.ஐ. போன்ற கட்சி சின்ன கட்சி என்றும் ஒரு மனநிலையை உருவாக்கப் பார்க்கிறார்கள். இந்தப் பிரச்சனையில் இந்த இரண்டு கட்சிகளுக்கும் இடையில் ஒரு விதமான மோதலை உருவாக்கும் தந்திரமும் இருக்கு. இந்தியாவில் சமூக மாற்றம் என்று வருகிற பொழுது சி.பி.எம். கட்சியால் மட்டுமோ, சி.பி.ஐ. கட்சியால் மட்டுமோ அதனைக் கொண்டு வர முடியாது. எல்லாரும் சேர்ந்துதான் அதைக் கொண்டு வர முடியும். இந்த போராட்டம் ஒட்டு மொத்தமாக எல்லாரும் சேர்ந்து போராடக்கூடிய ஒரு அமைப்பாக இருந்தால் தான் பெரும் பகுதியாக இருக்கின்ற ஜனநாயக சக்திகளுக்கு புதிய நம்பிக்கையைக் கொடுத்து மாற்றங்களைக் கொண்டு வர முடியும். இடதுசாரி உணர்வுகளுக்கு எதிராக இருப்பவர்கள் என்ன பண்ணுகிறார்கள் என்றால் இதனுள்ளே ஏதாவது ஒரு பிரச்சனையை உருவாக்கப் பார்க்கிறார்கள். அதனால் இது அழிஞ்சு போச்சு அல்லது இதுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்ற பிரச்சனையை எழுப்பி சிதைக்க நினைக்கிறார்கள். இன்னொரு விஷயம் என்னவென்றால் இடதுசாரி கட்சிகளும் ஒன்றுபட்டு ஒற்றுமைக்கான உணர்வை மேலும் பலப்படுத்த வேண்டியதும் அவசியமாக இருக்கிறது. தமிழக சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீட்டு நெருக்கடி காரணமாக சி.பி.ஐ. கட்சிக்கு பத்து இடங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன. இதனை சமன் செய்ய ராஜ்ய சபாவின் இடம் ஒன்று ஒருவதாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கேள்வி: இடதுசாரி ஒற்றுமை என்கின்ற ஒன்றை நீங்கள் பேசினாலும் கூட சி.பி.ஐ., சி.பி.எம். என்ற கட்சிகளின் கொள்கைகளில், செயல்பாடுகளில் அடிப்படையான வேறுபாடுகள் இருக்கின்றன. சமீபத்தில் அமெரிக்காவின் புஷ் இந்தியா வந்தபோது அவருக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் முஸ்லிம்கள் உள்ளிட்ட ஜனநாயக சக்கிகளுடன் இணைந்து சி.பி.ஐ. போராடியது. ஆனால் சி.பி.எம். அதனை தனியாக நடத்தியது. இடதுசாரி ஒற்றுமை என்பதை நீங்கள் எப்படி யோசிக்கிறீர்கள்?

இந்திய சமூகம் சார்ந்த பல விஷயங்களை சி.பி.ஐ. நுட்பமாக பார்க்கிறது. சமூக நீதி என்ற விஷயத்தைக் கூட சி.பி.ஐ. கொஞ்சம் முன்பே கையிலெடுத்தது. ஒரு கட்டத்துக்கு மேல்தான் சி.பி.எம். கட்சிக்கு அதனை ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் வந்தது. அதைப்போல இந்தியாவில் காங்கிரஸ் எதிர்ப்பு என்ற கொள்கை வருகிற பொழுது கூட காங்சிரசுடன் ஒன்றுபடுதல் / போராடுதல் என்ற நிலையை நாங்கள் எடுத்தோம். சி.பி.எம். கட்சி ஒரு காலத்தில் காங்கிரசை பாசிஸ்ட் என்று மதிப்பீடு செய்தது. சி.பி.ஐ.யின் கருத்து நிலைகள் இந்தியத் தன்மைக்கு ஒத்து வருவது மாதிரி இருக்கிறது. சி.பி.எம். கொஞ்சம் உணர்ந்து, உணர்ந்து, மாறுதலைக் கொண்டு வருகிறார்கள்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com