Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஏப்ரல் 2006

தலித் கலைவிழா: உணர்வுகளின் சங்கமம்
தீபர்

Dalit cultural festival

இந்தியா சாதியாக பிரிந்துள்ளது. சாதிக்கொரு சமயம்; சாதிக்கொரு பண்பாடு என்பவை இருப்பது போல், சாதிகளுக்கு என்று கலைகளும் இருக்கின்றன. இக்கலைகள் தான் சாதியப் பண்பாட்டை உயிருள்ளவையாக இயங்க வைத்து வருகின்றன. கலைகளின் உயிர்ப்புத் தன்மை புனிதப் படுத்துவதில் இருந்து தொடங்குகிறது. பிராமணக் கலைவடிவம் சமஸ்கிருதத்தையும், தெலுங்கு கீர்த்தனைகளையும் புனிதப்படுத்தும். இப்புனிதப் படுத்துதலில் அமைதியான, தாளம் தப்பாத, தரம் குறையாத இசை வடிவத்தை வெளிப்படுத்தும். “தமிழ் இசை” என்பதாக சொல்லப்பட்ட கலைவடிவம் சமஸ்கிருதம் தவிர்த்த மொழியை மட்டும் கவனத்தில் கொள்ளும். ஆனால் இவ்விரு கலை வடிவங்களும் சாதியத்தை உயர்த்திப் பிடிக்க தவறுவது கிடையாது.

இவை இரண்டுக்கும் அப்பாற்பட்ட ஒரு கலை வடிவம் நாட்டுப்புற மக்களிடம் பொதிந்து கிடக்கிறது. பறை; தவில்; உறுமி; நாயனம்; கரகம்; தேவராட்டம்; ஜிக்காட்டம்; ஒப்பாரி; தாலாட்டு; கும்மி; ஒயில்; இன்னபிற என்பதான பல்வேறு கலை வடிவங்கள் தலித் மக்களிடம் விரவிக் கிடக்கின்றன. இக்கலை வடிவங்கள் சாதிய நலனையோ அல்லது சாதிய மேலாண்மையையோ வெளிப்படுத்தாது. இக்கலை வடிவங்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்ச்சிக் குவியல். தன்மேல் திணிக்கப்பட்ட தீண்டாமை; பொருளியல் சுரண்டல்; ஆதிக்கம் இவைகளை இம்மக்கள் இக்கலை வழியாக நையாண்டி செய்து தங்களை நிலை நிறுத்திக் கொள்கின்றனர்.

அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் வெகுசன உணர்வுக் குவியலாக தலித் கலைகள் இருக்கின்றன. இக்கலை வடிவங்கள் தீண்டாக் கலையாக; தீட்டுக்கலையாக பிராமண; சூத்திர வருணத்தவரால் பாவிக்கப் பட்டு வந்தது. அதனாலேயே சங்கீத சபாக்கள்; தமிழிசை மன்றங்கள் முதலியவற்றிற்குக் கிடைத்திருக்கும் ஊடக; அரசியல் செல்வாக்கு இக்கலை வடிவத்திற்கு கிடைக்காமல் போனது. தமிழக அரசு நடத்திவரும் இசைக் கல்லூரியில் பறை இசை ஒரு பாடமாக இல்லை என்ற உண்மையை இங்கு நினைத்துப் பார்த்தால் தலித் கலைகளை பிராமண; ஊடக; அரசுகள் எவ்வளவு தூரம் ஒதுக்குகிறது என்ற விசயத்தை நம்மால் உணர முடியும்.

கலைகளுக்குள் கிடக்கின்ற இச்சாதிய ஒடுக்குமுறையை மதுரை தலித் ஆதார மய்யம் இனங்கண்டது. ஒடுக்குமுறைக்குள்ளான கலை வடிவத்தை கிராமத்தில் இருந்து உள்வாங்கி நகரத்தின் மையத்திற்கு கொணர்ந்தது. குறிப்பாகச் சொல்வதென்றால் ஒடுக்கப்பட்ட மக்களின் இசை, பாடல், நாடகம், தீட்டாய் மாற்றப்பட்டு தெரு ஓரத்தில் நிறுத்தப்பட்ட தடையை உடைத்து, பறை இசைத்து, உறுமி இசை விண்ணை அடைய அடைய விடிய, விடிய இம்மக்களின் வாழ்வியல் பிரச்சனைகள், அடக்கு முறைகள், ஆதிக்கச் சாதிகளின் அடாவடித் தனங்கள், நாடகங்களாக, பறை இசையாக, அசைவுகளின் வழியாக எடுத்துக் காட்டும் தலித் கலை விழாவை தலித் ஆதார மய்யம் தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தியது. அறிமுகப் படுத்தியதோடு நிற்காமல் 12 ஆண்டுகளாக 13 கலைவிழாவை இம்மையம் சிறப்பாக நடத்தியும் வருகிறது.

Dalit பதிமூன்றாவது கலைவிழா மார்ச் 18 அன்று மதுரை யூ.சி. பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. கொம்பிசையோடு ஜிக்காட்டம், பறையாட்டம், தொடர மைதானத்திற்கு வெளிப்பக்கத்தில் இருந்து ஊர்வலமாக கலைஞர்கள் மேடை நோக்கி அணிவகுத்தனர். கொம்பிசையின் அதிர்வு ஓசை அடங்கும் தருவாயில் மக்கள் கூட்டம் வரத் தொடங்கியது. தோழர்.கே.ஏ.ஜியின் தலித் அஞ்சலி பாடலான “தியாகிகளே, தியாகிகளே” என்ற பாடலை கே.எஸ்.முத்து பாட்டாஞ்சலியாகப் பாடி முடித்தபின் விழா துவங்கியது.

தெரு ஓரத்தில் வீசப்பட்ட கலை வடிவங்கள் ஒவ்வொன்றாக மேடை ஏறின. இரவு 9 மணிக்கு மேல் 25,000 மக்கள் மைதானத்தை நிரப்பி இருந்தனர். உட்சாதி பிரிவுகள் அங்கு இல்லை; மத பேதம் அங்கு இல்லை; உணர்ச்சிகள் மட்டுமே அங்கு நிரம்பி வழிந்தது. தீண்டத்தகாதவர்களின் வெப்பம் உணர்ச்சித் தழுவலில் தன்னை அசுவாசப்படுத்திக் கொண்டது என்று சொன்னால் அது மிகையல்ல.

மக்கள் கூட்டங்களின் நலவிசாரிப்புகளின் இடையே மேடையில் கலைகள் ஒவ்வொன்றாக நிகழ்ந்து கொண்டிருந்தன. கலைஞர்களுக்கு ஓய்வு கொடுக்கும் வண்ணம் கவிஞர்.என்.டி.ராஜ்குமார், கே.எஸ்.முத்து, மதுரைச் சந்திரன், சின்னப் பொண்ணு ஆகியோரின் குரலிசை அரங்கை நிரப்பி வழிந்தது. இந்த ஆண்டின் சிறப்பு நிகழ்வான 100 பறை இசைக் கலைஞர்களின் பறை முழக்கம் அரங்கை அப்படியே ஸ்தம்பிக்க வைத்தது.

பறை என்ற கருவி தீட்டாகி அதை இசைப் பயனையும் தீண்டாக்கியது. ஐந்துக்கும் பத்துக்கும் நச்சரிக்கப்படும் பறை இசைக்கலைஞர்கள் ஆறுமுகம், வேலு தலைமையில் மதுரை மாவட்டத்தில் இருக்கும் நூறு பறை இசைக் கலைஞர்கள் ஒரு சேர மேடையேறினர். என்னதான் பறை ஒழிப்பின் கருத்தாக்கம் பேசப்பட்டாலும் ஒடுக்கப்பட்ட கலைஞர்களின் ஒருங்கிணைப்பு நெகிழவைத்தது. உணர்ச்சி கொந்தளிப்பில் இருந்த பறை இசைக் கலைஞர்கள் உணர்ச்சியின் உச்சத்தில் தாளத்தையோ, அடவையோ தவறவிடவில்லை. ஒரு மணி நேரம் நிகழ்ந்த சேர்ந்திசைப் பறை விழா நடத்துபவர்களின் உத்தரவிற்கு கட்டுப்பட சிறிது நேரம் பிடித்தது. சேர்ந்திசைப் பறை முடிய மீண்டும் சேர்ந்திசைப் பறை முழங்கியது. இதுதான் தலித் மக்களின் வாழ்வியல் அம்சமாகும். பார்வையாளர்களின் கரகோசமும் உணர்வு வயமாக மாறியது. பறைக் கலைஞர்களின் முகத்தில் அவ்வளவு பெரிய பூரிப்பு இருந்தது.

சாவுக்கும், வாழ்வுக்கும் சாராயம் என்ற ஒன்றிற்காக மட்டும் பறையடிக்க நிர்பந்திக்கப்பட்ட பறைக் கலைஞர்கள் இவ்வொடுக்கு முறையை மீறி நகரத்தின் மையத்தில் துணிச்சலாக சுயமரியாதையுடன் பறை இசைத்தனர். கே.எஸ்.முத்து அப்பறை கலைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கும் போது உணர்வு பீறிட்ட சுயமரியாதை கலைஞர்களை கண்டபோது வந்த ஆனந்தக் கண்ணீரை அடக்க முடியவில்லை. அக்கலைஞர்களும் இச்சந்தோஷத்தை மறக்க சில மாதம் கூட ஆகலாம்.

தொடர்ச்சியாக நாடகங்களும், பிற கலை வடிங்களும் காலை ஆறுமணி வரை நிகழ்த்தப்பட்டன. ஜிக்காட்டமும், ஒயிலாட்டமும் இவ்வாண்டு நேர்த்தியாக நடத்தப் பட்டது. சக்தி கலைக் குழுவினரின் பறை ஆட்டம் பார்வையாளர்களை மீண்டும் மீண்டும் கவர்ந்தது. நாடகங்கள் தான் இவ்வாண்டு சொல்லும்படி இல்லை. பரட்டை குழுவினரின் நாடகம் ஏனோதானோ வென்று நிகழ்த்தப் பட்டது. உழவுக் கலைக்குழுவினரின் “இந்த மண் யாரு மண்” நாடகம் இரசிக்கும் படியாக இல்லை. தேர்ந்த நாடகக் குழு பார்வையாளர்களை ஏமாற்றி விட்டது.

தலித் கலைவிழா வெறும் கலை உணர்வோடு மட்டும் நிகழ்த்தப் படவில்லை. கலையின் வழியாக தலித் அரசியலையும், சாதி ஒழிப்பையும் இவ்விழா முன்வைத்தது. அதுதான் தலித் கலைவிழாவின் சிறப்பம்சமாகும். விருதுகள் சனநாயகப் படுத்தப்பட வேண்டும் என்ற குரலும் விழா அரங்கில் கேட்காமல் இல்லை. அதைப்போன்று பேச்சாளர்கள் தேர்விலும் விழாக் குழுவினர் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.

விழாவின் சிறப்பம்சங்கள்

1. தலித் கலைவிழா வெறும் கலைநிகழ்வாக மட்டும் முடிந்து விடவில்லை. புத்தக வெளியீடும், ஆவணப்பட வெளியீடும் விழாவின் பிரிதொரு சிறப்பம்சமாக நிகழ்ந்தது. தமிழகத் தலித் தலைவர்களின் நேர்காணல் தொகுக்கப்பட்டு “விடுதலையின் வேர்காணல்” எனும் புத்தகம் வெளியிடப்பட்டது. அதைப்போன்று “தளபதியார்” எனும் ஆவணப்படமும் வெளியிடப்பட்டது.

2. விருதுகள் மனிதனுக்கு உந்துதலைக் கொடுக்கும். இதற்காகவே விருதுகள் உருவாக்கப்பட்டன. தமிழ் சூழலோ விருதுகளை சாதிமயப்படுத்தி விட்டன. இதனாலேயே மையம் விருதுகளை வழங்கி தலித் கலைஞர்கள், செயல்பாட்டாளர்கள், ஆய்வாளர்கள் ஆகியோரை ஊக்குவித்து வருகின்றது. இந்த ஆண்டின் கலைஞாயிறு அய்யா அழகர் சாமியின் விருது காராட்டக் கலைஞரான அலங்காநல்லூர் பழனியம்மாளுக்கும், வீரியக்காரி விருது எழுத்தாளர் சிவகாமிக்கும், ஆய்வாளருக்கான விருது ஏ.பி.வள்ளி நாயகத்திற்கும் வழங்கப்பட்டது.

3. கலைவிழாவின் பார்வையாளர்களாக பெரும்பாலும் தலித் மக்களும் மிகச் சிறுபான்மையாக சனநாயக சக்திகளும், இடதுசாரிகளும் இருப்பர். இந்த ஆண்டில் இசுலாமியர்கள் கணிசமாக விழாவிற்கு வந்தது புதிய பரிமாணத்தை தந்தது.

4. கலைவிழாவில் தற்போது தலித் மாணவர்களின் பங்கேற்பும், கிராமப்புற தலித் மக்களின் பங்கேற்பும் சற்று கூடியிருப்பதும் வரவேற்கக் கூடியதாக இருந்தன.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com