Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஏப்ரல் 2006
அயல் மகரந்தச் சேர்க்கை

அதிரும் தந்திகள்... அடிபடும் முழவுகள்
பேரா. அப்துல் காதர்

உயிர் இரக்கம் கவிஞனின் சுவாசம். அவன் எழுதுகோல் சொட்டு மருந்தும் போடும். குத்திக் கிழித்து அநீதியை இரத்தம் சொட்டவும் வைக்கும். அவன் பேனாவில் இருக்கும் அந்த ஒற்றைக் கண் நெற்றிக் கண்ணாகவும் திறக்கும். சமூகத்தின் எந்தப் பகுதி அடிப்பட்டாலும் அந்தக் கண்ணில் கண்ணீரும் சுரக்கும். வீரமும், ஈரமும் கவிஞனின் இதயத்தில் தமனியாகவும் சிரையாகவும் இருக்கும். எதிரெதிரான இரண்டு நினைவுகளுக்கும் காரணம் நேயவுணர்வு தான். ஜூலியஸ் சீசரின் நெருக்கமான நண்பனான புரூட்டஸ், சீசரைக் கொன்றதற்கான காரணத்தைச் சொல்லும் போது

Farmer “I Love not caeser the less but Rome more”

(நான் சீசர் மீது வைத்த அன்பு குறைந்ததல்ல. அதனை விட என் தாய்நாடான ரோமானிய நாட்டின் மீது நான் வைத்துள்ள அன்பு அதிகம்) அதனைப் போலவே கவிஞர்கள் மற்றவற்றின் கொண்ட பற்று குறைந்தது அல்ல. சமூகத்தின் மீது கொண்டுள்ள பற்று அதிகம் என்பதே இரண்டு நிலைப்பாடுகட்கும் அடிநாதம்.
ஒரு கொடிக்குக் கீழே காதலியின் காலடித் தடத்தைப் பார்க்கிறான் காதலன்.

“அந்தக் காலடித் தடங்கள்
ஆடும் கொடிக்கு
அணிசிலம்பாயிற்று.
சில்லென்ற காற்று
சிலம்பைக் கலைக்கையில்
என் கண்கள் அல்லவா
பரல்களை உதிர்க்கின்றன”

என்கிறான்.

காலடித் தடம் காற்றால் சிதைகையில் கலங்கும் பஞ்சுநெஞ்சு இந்த மெல்லுணர்வு படைப்பாளிகளின் சாமர்த்திய சமயோசித சதுரப் பாட்டையும் கூர்மைப்படுத்துகிறது. அவன் தன் துயரங்களையும் ரசனைக்குரியதாக மாற்ற அது உதவுகிறது.

கானல் நீரையும் ஆவியாக்கி விடும் வேனல் பூமி இராமநாதபுரம் சீமை. வறண்டு வெடித்த பூமியின் விரிசல் உதடுகளால் உச்சரிக்கப்பட்ட நாடோடிப் பாடல்களாக அந்தச் சீமை மக்கள் வெளியேறும் வறண்ட சூழல். ஓர் தட்டிலே பொன்னும், ஓர் தட்டிலே நெல்லும் ஒக்க விற்கும், கார் தட்டிய பஞ்ச காலம். எப்பக்கம் பார்த்தாலும் எரியாத அடுப்பும், எரிகின்ற வயிறும். புலவன் வறுமையோ இன்னும் மோசம். விழி தோண்டப்பட்ட பிறகே புல்லாங்குழல் துளை எச்சில் காற்றை இராகமாக்கி மகிழ்விப்பதைப் போலப் புலவன் தன் துன்பத்தையே கவிதை மகிழ்வாக்கி விடுகிறான். சேதுபதி வள்ளலிடம் பொருள் கேட்கச் செல்கிறான். இல்லை என்ற சொல்லை அவன் இதழ்கள் அவிழ்க்குமுன்னே சேதுபதி வள்ளல் பொற்கிழியை அவிழ்க்கிறான். வள்ளல் வழங்கிய செல்வத்தை வைத்துப் பட்ட கடன் அனைத்தையும் புலவன் அடைக்கிறான். வெறுங்கையனாய் அரசர் முன் மறுநாளே வந்து நிற்கிறான். அரசன் என்ன என்பதைப் போலப் புலவனைப் பர்க்கிறான்.

புலவன்

“அரசே
உன்
கொடையோ
குறைவு பட்டதன்று
நீ
வான் மழையாகத்தான்
வழங்கினாய்
என் வறுமை
குடையாக அல்லவா இருக்கிறது
ஒரு சொட்டும் உள்ளிறங்காமல் தடுக்கிறது”

துயர, நிகழ்வை, நெகிழ்வாக்கி, மகிழ்வாக்கி விட்டான் புலவன். வான் மழை கொடை; வறுமை குடை என்ற உவமையில் மயங்கி பரிசில்களைக் குவித்து வழங்கினான் வள்ளல். முன்னே விழுந்த நிழலைத் துரத்திப் பிடிக்க முயல்பவனைப் போல, வளமையைப் பிடிக்க, வறுமைப் புலவன் ஓடினான் முடியவில்லை. அடுத்த நாளும் அரசனிடம் செல்வது அவமானம் என அஞ்சினான். நினைப்பில் அலுப்பில் சலிப்பில் அலரும் அரசனை முகச் சுளிப்பில் கற்பனையாகக் கண்டு உள்ளம் சுண்டிப் போனான். பாலுக்கழும் பச்சிளம் குழந்தை, கூழுக்கழும் வளரும் பிள்ளை. அவலம் கழுத்தைப் பிடித்துத் தள்ள அரசன் முன் விழந்தான். அரசன் வாய்திறக்கும் முன்னே புலவன்

“அரசே!
பொருள் வேண்டி
வந்துள்ளேன்
என
எண்ணி விடாதே!
அரச விசுவாசத்தில்
அடியேன் வந்துள்ளேன்!
உன்
உளவுத்துறை கூடக்
கண்டுபிடிக்க முடியா
ஒரு குற்றவாளியைப்
பிடித்துக் கொடுக்க வந்துள்ளேன்
உன்னால்
நாடு கடத்தப்பட்ட
குற்றவாளி அவன்.
யாருக்கும் தெரியாமல்
இரசியமாக
என் வீட்டுக்குள் புகுந்திருக்கிறான்”

என்றான். அரசனோ வியந்து

“என்னால் நாடு கடத்தப் பட்ட
அந்த
இராஜ துரோகக் குற்றவாளி
யார்?”
என்றான். வறுமை வேட்டையாடிய புலவனோ
“அவன்
வேறு யாருமல்ல
வறுமை”

என்றான். அகமகிழ்வுற்ற அரசனோ மீண்டும் அள்ளி, அள்ளி வழங்கினான். வெட்டுப்பட்டு பிளவு பட்ட வேப்பமரப் பிளவில் இருந்து, ஒட்டும் கோந்துப் பிசின் சுரப்பது போல, வறுமைக் காயமும் அவன் கவிதை வண்மையைக் கூட்டி விட்டது.

“Ah, poverty, I mourn for your sad fate
so long ago, you claimed me as your friend
And ever since you have been my constant guest
Where will you find a home when I am dead

என்கிறான்

ஓ, வறுமையே
உன் வருத்தத்திற்குரிய
விதியை எண்ணி
ஆழ்ந்த இரங்கல்!
நெடுங்காலத்திற்கு முன்பே
நீ
என்னை
நேசத்திற்குரிய நண்பனாக்கிக் கொண்டாய்
அதிலிருந்து
நீ
என்
நிரந்தர விருந்தினன் ஆகி விட்டாய்!
நான்
இறந்துவிட்டால்
நீ
என் இல்லம் போன்றதொரு வீட்டை
எங்கே காண்பாய்?

என்பது அந்தக் கவிஞனின் அவலத்திவலை. புசிப்பதற்கு ஒன்றுமில்லையே என்று வறுமை கேட்டால் தன்னையே தரும் கவிஞன், வறுமை வசிப்பதற்கு ஓரிடமாகத் தன் இல்லத்தையே வழங்கும் வறுமை வள்ளல் ஆகி விட்டான். அவன் இறப்பதற்கு அஞ்சுகிறான். எதற்காக? வசிப்பதற்கு வேறிடமின்றி வறுமை துன்பப் படுமே என்ற கவலையே காரணம். இப்படிப் பட்ட கவிஞர்களின் வலி, பிரசவ வலிதான். விளைவு மகிழ்ச்சி மழலைதான். அதிரும் தந்திகள், அடிபடும் முழவுகள் தானே அமுத இசையை எழுப்புகின்றன!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com